தொடர் 37: ஆண்மையில்லாதவன் – செ.கணேசலிங்கன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்செ. கணேசலிங்கன் இலங்கையில் மட்டுமின்றி தமிழகத்திலும் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர்.  சமகால பிரச்னைகளே இவரது படைப்புக் களங்களாக இருக்கிறது.

ஆண்மையில்லாதவன்

செ.கணேசலிங்கன்

அன்று காலைதான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தில் என் கிராமத்து உறவினரின் திருமணத்திற்காக வந்திருந்தேன்.  கிணற்றடியில் கால் முகம் கழுவிக் கொண்டிருக்ககையில்தான் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.  எதிர் வீட்டுப் பெண் புஷ்பா “அண்ணா உங்களிடம் ஒரு உதவி கேட்க வந்தேன்.  நீங்க எனக்கு எப்படியும் இந்த உதவியைச் செய்ய வேண்டும்”.

“என்ன புஷ்பம்? அப்படி உதவி சொல்லு என்னால் முடிந்தால் செய்வேன்தானே”.

“அங்கே யாரும் உதவ முன் வரவில்லை” என்று ஆரம்பித்து “மகேந்திரனைப் பொலிஸில் பிடித்து” என்றவன் அதன் மேல் வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை.  அழத்தொடங்கி விட்டாள். விம்மல் சத்தம் கேட்டு எங்களைப் பார்க்கலாம் என்பதையே மறந்து அழுது கொண்டிருந்தாள்.  கிராமத்திற்கு வந்து விட்டால் கிணற்றடியில் அடுத்த வீட்டாரைப் பார்த்து சுகம் விசாரித்துக் கொள்வதும் வழக்கம்.  என்னை கிணற்றடியில் கண்டதும் மற்ற வீட்டுக்குப்  பெண் குலவதி வந்து விடுவாள். 

சென்ற தடவை வந்த போதே புஷ்பம் இயக்கம் சார்ந்த மகேந்திரனைக் காதலிக்கும் செய்தியை குலவதி சொல்லியிருந்தாள்.   மறுநாள் காலை புஷ்பம் வீட்டிற்குச் சென்று தாயாரிடம் சுகம் விசாரித்து காப்பி சாப்பிடும் போது புஷ்பம் முகமலர்ச்சியாகச் சிரித்துப் பேசினாள்.  நான் காதல் விஷயம் பற்றி எதுவும் பேசவில்லை.  “எப்படி கவனமாகப் படிக்கிறாயா?” என்று மட்டும் கேட்டேன்.  “ஒரே அரசியல் பேச்சுத்தான், இங்கே படிப்பிலே ஆருக்குக் கவனம்?” தாயார் குறைபட்டாள்.

கிணற்றடியில் விம்மலும் அழுகையும்  ஓய்ந்த பின்னே “மகேந்திரன் எங்கே?” என்று கேட்டேன்.  “கொழும்பில் நாலாவது மாடியில் விசாரணை முடித்து விட்டு பூஸா காம்புக்கு கொண்டு போய் விட்டதாகச் சொன்னார்கள்” என்றாள்.  வாராது கலைந்த முடியைப் பின்னி விட்டிருந்தாள்.  ஸ்கேர்ட்டும், கலர்விட்ட சர்ட்டும் முகத்தில் வடிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தாள்.

“வீட்டுக்குப் போ, நாளைக்கு மாலைதான் கொழும்புக்கு புறப்படுவேன்.  தெரிந்த விபரங்களை எல்லாம் எழுதி வை.  கொழும்புக்குச் சென்றதும் என்னால் முடிந்தவரை முயல்வேன்” ஆறுதல் கூறி அனுப்பினேன்.   குலவதி வந்தாள்.  அவள் என்னோடு வீட்டுள் நுழைந்து மகேந்திரன் கைது செய்யப்பட்ட விபரம் யாவும் கூறினாள்.  என் மச்சினியோடும் அவள் ஊர்வம்பு பேசிப் பொழுது போக்குவதில் நெருக்கம். “முன்னர் பொலிடோலைச் சொல்லி மிரட்டுவார்கள்.  இப்போது தானே இயக்கத்தில் சேர்ந்து விடுவேன் என்று வெருட்ட முடிகிறது” என்று சிரித்தாள்.  மகேந்திரனையும் நான் அறிவேன்.    கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான், தெருவிலே கண்டால் இடைநிறுத்தி சுகம் விசாரித்து அரசியல் பேசுவான்.  தர்க்க நியாயத்திலும் பார்க்க  உணர்ச்சியே அவன் பேச்சில் முன்னிற்கும். 

“கொழும்பிலே நீங்கள் பழகும் சிங்களவர் நல்லவர்களாகயிருக்கலாம்.  ஆனால் இங்கே நாங்கள் அறியாத சிங்களத்தில் பேசி உதைக்கும் பொலிஸாரையும், தமிழர் மேல் சுட்டுப் பழகும் சிங்கள ராணுவத்தாரையுமே எங்களுக்கு தெரியும் அடிக்கடி பார்க்கிறோம்.”

கடைசித் தடவை சந்தியில் கண்ட போது, உயர் கல்வியில் புறக்கணிப்பு வேலையில்லாத் திண்டாட்டம் சிங்கள மொழித் திணிப்பு பற்றியெல்லாம் அவன் போலவே மற்றைய இளைஞர்கள் மட்டுமல்ல கல்லூரிப் பெண்களும் பேசிக் கொண்டனர்.  தம்பியாரின் பெண்களுடன் கூட என்னால் விவாதிக்க முடியவில்லை.

கொழும்புக்குத் திரும்பிய வேளை ரெயிலில் மகேந்திரனின் பிரச்சினை பற்றியே என் மனமும் அலைந்தது.   கொழும்பில் சேர்ந்து வேலைகளில் ஈடுபட்டேன்.  புஷ்பத்திற்கு அன்று ஆறுதல் கூறிய போதும் செயலாற்றி வெற்றி பெறுவதிலுள்ள சிரமத்தை அறிவேன். விசாரணைக்காலமா?  வழக்குப் பதிவு செய்து விட்டார்களா?  எதையும் அறிய முடியாதிருந்தது. வக்கீல் நண்பர் ஒருவரிடம் உதவும்படி கூறினேன்.  “சட்டம் அவர்கள் கையில் உள்ளது, எப்படியும் விசாரித்துப் பார்க்கிறேன்” என்றார்.  

வாரங்கள் கழிந்தன.  கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு நண்பன் ஒருவரை அழைத்துவரச் சென்றிருந்தேன்.  முன் நன்கு பழகியிருந்த ஏஎஸ்பி  எக்கநாயக்காவைக் கண்டேன்.  சுகம் விசாரித்த பின்னர் விபரம் யாவையும் சுருங்கக் கூறினேன்.   அவனை விசாரணை செய்யுத் அதிகாரி  பொல்லாதவன் என்றும் சாடிஸ்ட் என்றும் கூறினான்.   எப்படியும் தவறாது முயன்று பார்க்கிறேன் என்று கூறிச் சென்றான்.  தம்பியாருக்கு கிராமத்திற்கு எழுதிய கடிதத்தில் அடுத்த வீட்டில் புஷ்பத்திடம் சொல்லும்படி சில வார்த்தைகளில் சுருக்கமாக செய்தி அனுப்பினேன்.

இரண்டு மாதம் வரை கழிந்திருக்கும்.  என் சித்தப்பா திடீரென இறந்ததாக செய்தி வந்தது.  நேரடியாக கிராமத்தில் மரண வீட்டுக்கே சென்றேன்.  இரவு வீட்டுக்கு வந்து தூங்கினேன்.    காலையில் கிணற்றடிக்குச் சென்றபோது புஷ்பம் சிரித்தபடி ஓடி வந்தாள்.  நன்றி கூறினாள்.  “அவனை ஒரு தடவை பார்க்க வேண்டும்  வரச் சொல்லு” என்றேன்.  “நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட நீங்க உதவி வெளியே வந்ததும் அவர் இந்தப் பக்கமே இன்னம்  வரவில்லை பாருங்கோ அண்ணா” விம்மி அழத் தொடங்கிவிட்டாள்.  

தலவாக்கொலையில் நிற்பதாக அங்கே கடை வைத்திருக்கும்  கந்தையர் வீட்டாருக்கு எழுதிய செய்தியை அறிய முடிந்ததாக சொன்னாள். அங்கே  தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் வேலை செய்வதையும் தெரிவித்தாள். மீண்டும் அழத் தொடங்கினாள்.  அவன் மேல் ஆத்திரமே வந்தது.  இப்படிப்பட்டவர்களா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவது?   ஆண்மையில்லாத அயோக்கியர்கள்.

“அண்ணா கடிதம் எழுதிப் பார்க்க விலாசமேயில்லை.  எனக்காக நீங்கள் அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல்லி ஒரு தடவை இங்கே அனுப்பிவிடுங்கோ.”  

என் மனம் பரவலாக எண்ணி நொந்தது.  இக்கவலைகளுடனே கொழும்புக்குத் திரும்பினேன்.  

தலவாக்கொல்லை கொழும்பிலிருந்து மலை நாட்டுப் பகுதியில் 200 கிலோ மீட்டர்வரை இருக்கும். சென்று அவனைத் தேடிப்பிடித்துப் பேசிவர ஒரு நாள் போதாது.  அதுவும் உறுதியில்லாத பயணம்.

பஸ்ஸால் இறங்கியதும் தொழிற்சங்க நண்பன் சந்திரனின் அலுவலகம் சென்றேன்.   மகேந்திரனை நண்பன் அறிந்திருந்தான்.  இரண்டு மாதத்திற்கும் மேலாக அங்கு தொழிற்சங்கம் என்ற போர்வையில் இயக்க வேலையில் ஈடுபட்டிருப்பதாக சந்திரன் இரகசியமாகச் சொன்னான். சந்திரனே அழைத்துச் சென்று மகேந்திரனைப் பார்க்க ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.ஒரு வீட்டு வாயிலில் வந்து சந்திரன் கதவைத் தட்டினான்.  சிறிய வீடு.  “தோழரே வாருங்கள்.  என்ன ஆச்சரியம் இந்தப் பக்கம்” வியப்போடு ஒரு தேயிலைத் தோட்டம் சார்ந்த இளைஞன் வரவேற்றான்.  சந்திரன் என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தி விபரம் சொன்னார்.

அரை மணி நேரம் கழிந்தது.  “அண்ணாவா வாங்க.  பார்க்கக் கிடைத்து பெரிய சந்தோஷம்”  கட்டம் போட்ட சாரத்துடனும் சேட்டுடனும் மகேந்திரன் உள்ளே நுழைந்தான்.  சிறிது மெலிந்திருந்தான்.  முகத்தில் எவ்வித சலனமுமில்லை. 

“நான் உங்களுக்கு எவ்வளவோ நன்றி கூற வேண்டும்.  நீங்கள் முயல்வதாக முதலில் செய்தி வந்தது.  ஏஎஸ்பி எக்கநாயக்கா சொன்னபடியாலே என்னை வெளியே விட்டான் அந்த மிருகம்” சிரித்துப் பேசியவனின் முகத்தில் கடுமை தொனித்தது.  

“கொழும்பில் என்னை ஒரு தடவை பார்த்துவிட்டு வந்திருக்கலாமே?”

“அப்படியும் நினைத்தேன்.  பின்னர் என்னோடு வெளியேறிய தேயிலைத் தோட்டத்  தோழரோடு இங்கு வந்துவிட்டேன்.  மன்னித்துக் கொள்ளுங்கள்.”

“நீ ஒரு தடவை  ஊருக்கு வந்து புஷ்பத்துக்கு ஆறுதல் சொல்லி விட்டாவது வந்திருக்கலாமே!  ஊரிலே அவள் தலை காட்ட முடியாது தவிக்கிறாள்.”

“புஷ்பத்தை நான் பார்க்க விரும்பவில்லை”  உதாரமான குரலில் கூறினான்.

எனக்கு அதிர்ச்சியை மட்டுமல்ல ஆத்திரத்தையும் ஊட்டியது.  பேச்சு வளர்ந்தது.

“காதல் பேசி பெண்களை ஏமாற்றி விட்டு விடுதலை இயக்கம் வேறு,  இப்படியான ஏமாற்றுப் பேர்வழிகளைக் கொண்டதா நீ சேர்ந்த இயக்கம்.”

“அண்ணே இயக்கத்தை ஏன் இழுக்கிறீர்கள்.  இது என் தனிப் பிரச்னை.”

“நீ ஒரு பேடி ஆண்மையில்லாதவன்.”

“சரியாகச் சொன்னீர்கள் அண்ணா.  ஆண்மையில்லாதவன்.  நான் ஏற்கிறேன்.  இதோ பாருங்கள் அந்த மிருகம் செய்த வேலையை. . . . . .”

அதன் மேல் அவன் வார்த்தைகள் ஓடவில்லை.  கட்டியிருந்த கைலியை அவிழ்த்துக் கீழே விட்டான்.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.