மஞ்சேரி எஸ். ஈச்வரன் ஆங்கிலத்தில் எழுதினாலும், தமிழகம்தான் குறிப்பாக சென்னைதான் பெரும்பாலான கதைகளின் களமாக இருந்திருக்கிறது. அன்றைய உயர்மத்திய தர வர்க்கத்தின் மனோநிலையை இவரது கதைகள் பிரதிபலிக்கிறது.
இரண்டு கொடிகள்
மஞ்சேரி எஸ்.ஈச்வரன்
இருள் மண்டிக் கிடந்த நூற்றாண்டுகளுக்குக் கடைசியாக ஒரு முடிவு ஏற்பட்டது. இந்திய வானத்தில் சுதந்திர சூரியன் ஒளிபரப்பி உதயஞ்செய்யத் தொடங்கி விட்டான். மூவர்ணக் கொடி அரசியல் நிர்ணய சபையில் ஒரு புனிதமான முகூர்த்தத்தில் பறக்கவிடப்பட்டது.
சுதந்திரத்தின் அடையாளமென பண்டித ஜவாஹர்லாலும், வேற்றுமை அற்றதென கவிக்குயிலும், உரை நிகழ்த்தினர். இந்நாட்டில் ஒரு சொர்க்கமே நிர்மாணிக்கப்படப் போகிறதென டாக்டர் ராதாகிருஷ்ணன் வியாக்யானம் செய்தார்.
பத்திரிக்கையில் இச்செய்திகளைப் படித்த ராவ்பகதூர் ஆர். கல்யாணராம சாஸ்திரிக்கு மனதில் வெறுப்பு ஏற்பட்டது. சுதந்திரம் என்பது அர்த்தமற்றதாக பதவி மோகம் பிடித்தவர்களின் வீண் வார்த்தைகளாக அவர் கருதினார். மூவர்ணக் கொடி அவர் நினைவுகளைத் தூண்டியது
1880ல் மேல்படிப்புக்காக சர்வகலாசாலையில் அடிஎடுத்து வைத்த முதல் கோஷ்டியில் பிராம்மண வாலிபன் ஆர். கல்யாணராமனும் ஒருவன். படிப்பு முடிந்ததும் ரெவின்யூ துறையில் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் குமாஸ்தாவாக சேர்ந்தார். 17 வயதிலேயே அவருக்கு திருமணமாகி விட்டது. பி.ஏ பட்டம் பெற்ற போது ஆண் குழந்தையும் பிறந்தது. ஆபீஸும் வீடும் தான் அவருக்குத் தெரிந்த இரு உலகங்கள்.
ஆர். கல்யாணராம சாஸ்திரி வேலைக்குப் போன சில வருஷங்களிலேயே பல்வேறு விதமான பரிக்ஷைகளை பாஸ் செய்து ரெவின்யூ இன்ஸ்பெக்டரானார். அரசுக்குத் தெரியாமல் ரகசியமாக சாகுபடி நடத்தப்பட்ட இடங்களை கண்டறிந்து ரெவின்யூ டிவிஷனல் ஆபீஸர் ஹென்றி மார்ட்டின் வின்டர் போதமின் பாராட்டுதல்களையும் பெற்றார்.
கல்யாணராம சாஸ்திரிகளின் வீட்டை தேவாதிகளின் படங்களுடன் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர். மேரி ராணி. வின்டர் போதிமின் படங்களும் அலங்கரித்தன. மாஜிஸ்திரேட் பதவி வகிக்கையில் வெர்சேல்ஸ் ஒப்பந்த வெற்றி விழாவை சாஸ்திரிகள் தாலுகாவெங்கிலும் கொண்டாடினார். தாசில்தாராக பதவி உயர்வு பெற்றபின் ராவ் சாஹிப் பட்டமும் கிடைத்தது.
இந்த சந்தர்ப்பத்தில்தான் காந்தியின் இயக்கம் தேசம் பூராவிலும் மக்களால் வரிந்து கொள்ளப்பட்டது. பிரிட்டீஷ் சர்க்கார் ஊழியனுக்குத் தன் எஜமானனுடைய அரசியல் கொள்கையே தன்னுடைய கொள்கையாக இருக்கும் போது சாஸ்திரிகள் ஒன்றும் விதிவிலக்காக இருக்கப்போவதில்லை.
அவரது மகன் ராஜாராமன் ஆறாம் பாரம் படித்துக் கொண்டிருந்தான். பள்ளித் தலைமையாசிரியரை சாஸ்திரிகள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கெட்டிக்காரப் பையனாக இருந்தாலும் பள்ளியில் யூனியன் ஜாக் கொடியை வணங்குவதில்லை என்றும் அதனால் ஒழுங்கீனம் ஏற்படுவதாகவும் கூறினார்.
பொறுப்புள்ள சர்க்கார் உத்யோகஸ்தர். பிள்ளை இப்படி இருப்பின் வேலைக்கும் மதிப்புக்கும் ஆபத்து வந்துவிடும் என்ற ஆசிரியர் எச்சரித்தது நினைவிற்கு வந்தது. ஏற்கனவே கலாசாலையில் படித்துக் கொண்டிருந்த கடைசித் தம்பி ஹோம் ரூல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மரணமடைந்ததையும் அவர் ஞாபகப்படுத்திக் கொண்டார். சிற்றப்பனை பின்பற்றும் அவனை உடனேயே விடுவிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.
ராஜாராமனிடம் கேட்டார். நூறு தோத்திரப் பாடல்களை வேண்டுமானாலும் பாடத் தயார் ஆயின் யூனியன் ஜாக்கை போற்றிட முடியாது என்பதை உறுதிபட உரைத்தான். அவன் கன்னத்தில் மின்னலென சாஸ்திரிகள் அறை விட்டார். வெளியே ஓடினான். கல் கண்ணாடியில் எறிந்த ஒலி கேட்டது. அவர் வணங்கி வந்த ராணி மேரி, ஐந்தாம் ஜார்ஜ், போதமின் படங்கள் சுக்கு நூறாயின.
திடீரென கவலை நிரம்பிய மனிதரானார். கன்னங்களிலும் நெற்றியிலும் மனக் கசப்பைக் காட்டும் சுருக்கங்கள் விழுந்தன. அவருடைய கோவிலை களங்கப்படுத்திய தெய்வங்களை மிதித்துத் துவைத்த பிள்ளையை அவர் மன்னிக்கவே இல்லை.
புதிய இந்தியாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் நம்மைச் சுற்றி இருக்கும் புதிதான எதையும் பார்க்க அவர் மறுத்துவிட்டார். நசித்துப்போன பின்னும் அவர் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்த அவருடைய சிறிய உலகத்தை லட்சியம் செய்யாமலேயே இந்தியா முன்னேறியது. அவருடைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒளி குன்றத் துவங்கியது.
ராஜாராமன் உயிருடன் இருக்கிறானோ இல்லையோ. அது யாருக்குத் தெரியும்? இருந்தலும் இருக்கலாம் இல்லாவிட்டாலும் இல்லை. எக்களிப்புக் கீதம் பாடும் விடுதலை இயக்கத்துக்கு அவன் சாகாத ஓர் அறிகுறியாகத் திகழ்கிறான்.
சாஸ்திரிகளால் நம்பமுடியவில்லை. திகைக்கிறார். கோபப்படுகிறார். இரண்டு குரல்கள். ஒன்றைக்கொன்று ஓங்கிப் போட்டியிடுகின்றன.
”என் தாய் நாட்டின் இந்தக் கொடியையும் இந்தக் கொடி எதைக் குறிக்கிறதோ அந்த சாம்ராஜ்யத்தையும் நான் வணங்குகிறேன்”.
”இது சாம்ராஜ்யக் கொடியல்ல. ஏகாதிபத்திய்க் கொடியல்ல. பிறரை அடிமை கொண்டு ஆதிக்கம் செலுத்தும் கொடியல்ல.”
@பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

