தொடர் 39: பஞ்சு – பாவண்ணன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்எளிய மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வகைப்படுத்த முடியாத சுரண்டலுக்கு ஆட்படுகிறார்கள். அவற்றை மீறுவதற்கான வழிமுறைகளை அறியாமல் அந்த மாயச் சக்கரத்திற்குள்ளேயே சுழன்று வருகிறார்கள்

பஞ்சு

பாவண்ணன்

தரகுக்கார மாணிக்கம் இல்லை என்கிறதைக் கேட்டபோதே கொண்டு வந்திருந்த பஞ்சு மூட்டைகளை எப்போது போட்டு எப்படி பணம் வாங்கப் போகிறோமோ என்ற பயம் துரைசாமிக்கு கவ்விக் கொண்டது. இடிந்து போய் வண்டி ஓரத்திலேயே உட்கார்ந்து விட்டார்.

கோழி கூப்பிடகிற நேரத்துக்கு ஒரு வாய்க் கூழை குடித்துவிட்டு முதல் நாள் ராத்திரியே ஏற்றி அடுக்கி வாகாய் கட்டியிருந்த எட்டு மூட்டைப் பஞ்சோடு கொஞ்சம் தரகு முன்னே பின்னே போனாலும் பஞ்சு காசாகிவிடும் என்ற நம்பிக்கை மனசெல்லாம் அப்பிக் கிடந்தது.

மாணிக்கம் அவுங்கம்மா செத்துட்டாங்கன்னு ஊருக்கு போயிருப்பதாகவும், வர்றதுக்கு பத்து பாஞ்சி நாளாவும் என்றவுடன் உறிப்பானை நழுவி உடைந்த மாதிரி மனசு இருந்தது. மலைப்பாய் இருந்தது.

பஞ்சிலிருந்து மிளகாய் வரைக்கும் மண்டிக்கு எதைக் கொண்டு வந்தாலும், தரகுக்காரன் இல்லாமல் மண்டியில் ஒன்றும் செய்ய முடியாது. தரகு ஆள்களிலும் தகுதிக்கு தகுதி வித்தியாசம் உண்டு. ஆறேழு டிராக்டரில் சரக்கு எடுத்து வரவன், இருபது முப்பது மாட்டு வண்டிகளில் கொண்டு வருபவன், துரைசாமி மாதிரி ஒற்றை மாட்டு வண்டியில் கொண்டுவருபவன் இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு தரகுக்காரன்

சுவர் ஓரமாய் இருந்தவர் “இன்னாங்க பஞ்சிங்களா?” கேட்டார்

பதில் சொன்னார் “எட்டு மூட்டை”.

“வளவனூருங்களா?’

“தனசிங்கபாளையம், நீங்க?”

“கோலியனூருங்க. ஆறுமூட்ட கொண்டாந்தன். மாணிக்கம் இருந்தா பிரச்னையே இருக்காது. ஆபீஸ்ல ஒழுங்கா பதில் சொல்ல மாட்டறான். டோக்கன் தருவாங்களாம். எப்ப தருவாங்கனு கேட்டா பொருளுங்ககிட்ட நில்லுய்யானு தெருத்தறான்”.

“இன்னிக்கி சாயங்காலமே திரும்பிடலாம்னு ஆசையா வந்தேன்”.

“வெதைக்கும் போதும் இம்ச, அறுக்கும் போதும் இம்ச, விக்க வந்தாலும் இம்ச, நாலா பக்கத்துலயும் வெவசாயி வாழ்க்க இம்சயாதா இருக்குது”.

வேற தரகுக்காரனும் வரவில்லை. டோக்கன் கொடுப்பதற்காக காத்திருந்தார்கள். துரைசாமிக்கு பயமே அவரை அழுத்தியது. இந்தப் பஞ்சு மூலம் கிடைக்கப் போகிற பணத்துல பிள்ளைப் பேற்றுக்கு வந்த பெண்ணுக்கு சீர் செய்து ஊர்க்கு அனுப்ப வேண்டும். ஏழெட்டு மாசம் ஓடி விட்டது. புதுசா எதுவும் செய்யாம போனாலும் களையெடுப்புக்கு என்று அடகு வைத்த கம்மலையாவது மீட்டு போட்டு அனுப்ப வேண்டும்.மாடுகளுக்கு இன்னும் கொஞ்சம் வைக்கோலைப் பிடுங்கிப் போட்டார். வைக்கோலைத் தவிர்த்து மாடுகள் மணி குலுங்க அசைந்து கொண்டன. அசை போடும் வாயில் இருந்து சொள் ஒழுகியது. தீனி எடுக்கமாமல் உட்கார்ந்திருக்கிற மாடுகளைப் பார்க்க கஷ்டமாய் இருந்தது. எட்டு வருஷத்துக்கு முன்பு கண்டமங்கலம் சந்தையில் இருந்து பிடித்துக் கொண்டு வந்தபோது இருந்த பொலிவு இப்போது இல்லவேயில்லை. வறுமையோடு ஒட்டிய இளைப்புக்கு என்னதான் செய்ய முடியும்? கூடப்பிறந்தது பெற்றெடுத்தது நிற்பதுமான ஜனங்கள் கூட ஒரு வார்த்தைக்கு நாலு வார்த்தை முகதாட்சண்யமின்றி நெருப்பால் சுடுகிற மாதிரி பேசிவிட்டுப் போகிற இந்தக் காலத்தில், ஒரு கட்டு புல்லுக்கும் வைக்கோலுக்கும் இத்தனை விசுவாசத்தோடும் ஒட்டுதலோடும் உணர்கிற வாயற்ற ஜீவனின் உபகாரத்தை நினைக்கும் போது மனசு ஈரமானது.

டோக்கன் கொடுப்பவனைக் காணோம். எங்க சுத்தறானோ யாரு கண்டா அவனுங்க வச்சதுதான் சட்டம் இஷ்டமிருந்தால் கொடுப்பான் இல்லன்னா எந்த யேபாரி பின்னாலியாச்சும் அலைவானுங்க.

“கொஞ்சம் பாத்துக்கறிங்களா? ஒரு டீத் தண்ணியாச்சு குடிச்சிட்டு வரன்” துரைசாமி சொன்னார்.

மண்டிக்கு வெளியே வந்து மடியைத் தடவினார், பத்து ரூபாயும் சில்லறையும் இருந்தது. ரூபாய் நோட்டை செலவு செய்ய மனசில்லை. சில்லறைக்குத் தகுந்தபடி ஒரு ரொட்டித் துண்டும் டீயும் மாத்திரம் சாப்பிட்டுத் திரும்பினார்.

திரும்பியபோது கோலியனூர்க்காரர் பதற்றத்தோடு கேட்டார் “இவ்ளோ தாமசம் பண்ணிட்டிங்களே? இந்த நேரம் பாத்து டோக்கன் குடுத்துட்டு பூட்டான்”.

“எனக்கு குடுத்தானா?”

“எவ்ளோத்தரம் கெஞ்சிக் கேட்டேன் நானு. அவன் ஆளய மதிக்க மாட்டறான். இருக்கறவங்களுக்குத்ன் டோக்கன்னு தெனாவட்டா பேசிட்டு போய்ட்டான்”.

“எங்க அந்த ஆளு?” பதறி ஓடினார் துரைசாமி. குமாஸ்தாவுக்குப் பக்கத்தில் இருந்த ஆளைக் கண்டுபிடித்தார். இவர் டீ குடிக்கப் போனதைக் கூறி டோக்கன் கேட்டார்.

“காலைலேந்து ஒக்காந்துக்னிருக்கங்க” என்று துரைசாமி கெஞ்சினார்.

“வயசாய்டுச்சே தவிர புத்தி இருக்குதா ஒனக்கு? சும்மா தொண தொணன்னு நிக்காதய்ய, வேலை செய்ய உடு, போ நாளைக்கு வா தரேன்”.

இன்னொரு நாள் காத்திருக்க கஷ்டமாய் இருந்தது. இவனை சமாதானம் செய்து டோக்கன் வாங்க வேண்டுமே என்று துடித்தது. சட்டென்று மடியில் இருந்த பத்து ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினார்.

“ஒம் பத்து ரூபாய்க்கு ரோட்டோரத்துல இருக்கற தேவடியா கூட வரமாட்டா. பெரிசா தூக்கமாட்டாம பத்து ரூபாயை தூக்கியாந்து நீட்டற போய்யா மூஞ்சியும் மொகரையும்.”

ஒரே வார்த்தையில் அல்பமாக்கி விட்டவனை நெஞ்சு பதற பார்த்தார் துரைசாமி. வலித்தது. அதிர்ச்சியுடன் திரும்பி நடந்தார்.

புதிய பாசறை மே 1989

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.