தொடர் 4: சிறிது வெளிச்சம்– கு.ப.ராஜகோபாலன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

நாற்பதுகளிலேயே இன்றும் பிரவேசிக்கத் தயங்குகின்ற தளங்களில் கதையெழுதியர் கு.ப.ரா.  நாலைந்து பக்கங்களுக்குள் சம்பவக் கோர்வையையும் சீரான உரையாடலையும்  வெளிப்படுத்தி கதையை முழுமையாக்கும் சித்தர் இவர்

சிறிது வெளிச்சம்

கு.ப.ராஜகோபாலன்

சென்னை நகரில் உள்ள ஒரு வீட்டின் ரேழி உள்ளில் எழுத்தாளர் குடித்தனம் போகிறார்.  வீட்டின் உரிமையாளர் கோபாலய்யர் தன் மனைவி சாவித்திரியுடன் அதே வீட்டில் இருந்து வருகிறார்.  கோபாலய்யர் அலுவலகம் புறப்படுவதற்கு முன்னரே முற்றத்தில் தன் பணிகளை முடித்துக் கொண்ட எழுத்தாளர் பின்னர் அப்பக்கம் செல்வது கிடையாது.

தினந்தோறும் இரவு இரண்டு மணிக்கு கோபாலய்யர் வீடு திரும்புவதும், சாவித்திரி வாசற் கதவைத் திறந்த பின்னர் உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டு பேசுவதையும், அரைத் தூக்கத்தில் எழுத்தாளர் அறிந்து வைத்துள்ளார்.  ஒரு நாள் சாவித்திரி கதவைத் திறக்கவில்லை.  எழுத்தாளர் கதவைத் திறந்தார்.

உள்ளே சென்ற கோபாலய்யர் மனைவியை அடித்துத் துவைத்தார்.  புருசன் பெண்சாதி கலகத்தில் பிற மனிதன் தலையிடக்கூடாது என்பதால் இவர் சும்மா இருந்து விடுகிறார்.  மறுநாளும் இது தொடர்கிறது.  “கதவைத் திறங்கள்” என்கிறார்.

பல்லிளித்து பேசி வந்த கோபாலய்யர் மிருகம் போல் சீறுகிறார்.  இவர் போலீசுக்குப் போவதாக மிரட்டுகிறார்.  அவரோ வீட்டை காலிசெய்ய வேண்டும் என்று எச்சரிக்கிறார்.  தான் வெளியில் இருந்து கொள்வதாகவும் தன் அறைக்குச் சென்று தாழிட்டுக் கொள்ளும்படியும் எழுத்தாளர்  கேட்டுக் கொள்கிறார்.  கோபாலய்யர் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.  சாவித்திரி தன் அறைக்குச் சென்று தாளிட்டுக் கொள்கிறாள்.  சிறிது நேரத்தில் எழுத்தாளர் அறைக் கதவைத் தட்டுகிறாள்.

வேறு நினைப்பு

எழுத்தாளர் கதவைத் திறந்து விளக்கை போடுகிறார்.  “விளக்கு வேண்டாம்.  அணைத்து விடுங்கள்” என்று கூறி அவர் காலடியில் அமர்ந்து கொள்கிறாள்.  வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கோபாலய்யரை திருமணம் செய்து கொண்ட பின்னர், மாறிய நிலையை அவள் விவரிக்கிறாள்.

எழுத்தாளர் தன் மீது கொள்ளும் பச்சாதாபத்தை உணர்கின்ற அதே தருணத்தில், அவருடன்  சென்று புதிய வாழ்க்கையை துவக்கினாலும் மிருக இச்சை ஓய்ந்ததும் புது முகத்தை பார்ப்பீர்கள் என்று சாவித்திரி சொல்கிறாள்.

“நீ எப்படி பொதுப்படையாக பேசலாம்?” என்று எழுத்தாளர் கேட்கிறார்.

“எப்படியா? என் புருஷனைப் போல் என்னிடம் பல்லைக் காட்டின மனிதன் இருக்க மாட்டான்.  நான் குரூபியுமல்ல, கிழவியுமல்ல, நோய் கொண்டவள் அல்ல.  இதையும் சொல்கிறேன்.  மிருக இச்சைக்கு பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?”

அவள் மேலும் தொடர்கிறாள்.  “என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக்கிறான்.  நான் சுகம் என்பதைக் காணவில்லை”.

“பின் எதைத்தான் சுகம் என்கிறாய்?”

“உள் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும் கூட ஒரு எல்லை இல்லியா?  இதற்கும் மேலுமா என்னைச் சொல்லச் சொல்லுகிறீர்கள்?”

எழுத்தாளன் சாவித்திரியிடம் தன் விருப்பினை வெளிப்படுத்துகிறான்.

“வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.  என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கி விட்டீர்கள்.  உங்கள் இச்சை பூர்த்தியாவதற்காக என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.”

“எது சொன்னாலும். . .”

“ஒன்றுமே சொல்ல வேண்டாம்.  இனிமேல் விளக்கை போடுங்கள்” என்றவள் அவன் அருகில் வந்து படுக்கையில் அமர்கிறாள்.

மெள்ள அவளைப் படுக்கையில் படுக்க வைத்தேன்.  என் படுக்கையில். அப்பொழுதும் அவள் ஒன்றும் சொல்ல வில்லை.  அவ்வளவு ரகஸ்யங்கள் ஒரேயடியாக வெளியே கொட்டின. இதழ்கள் ஓய்ந்துபோனது போலப் பிரித்தபடியே கிடந்தன.

திடீரென்று  “அம்மா போதுமடி” என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.

“சாவித்திரி என்னம்மா?” என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக் கொண்டேன்,

“போதும்.”

“சாவித்திரி, விளக்கு.”

அவள் திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.

“ஆமாம், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரம் இருந்த வெளிச்சம் போதும்” என்று எழுந்து நின்றாள்.

தொடர் 1ஐ வாசிக்க 

https://bookday.in/pitchamma-sivasankari-short-story-written-by-ramachandra-vaidhyanath/

தொடர் 2ஐ வாசிக்க 

https://bookday.in/kandharvan-short-story-synopsis-by-ramachandra-vaidhyanath-by/

தொடர் 3ஐ வாசிக்க 

https://bookday.in/series-3-rat-ashokamitran-story-line-ramchandra-vaidyanath/