அடிநிலை மக்களிடையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும்  இதயவேந்தன் அவர்களிடமிருந்து அந்நியமாகி வெறும் போலியாகிப் போகாமல், தங்கள் இருப்பை மனசாட்சிக்குத் துரோகம் செய்யாமல் எண்ணி எண்ணிப் பார்க்கிறார்.

இழிவு

விழி.பா.இதயவேந்தன்

நாராயணன் கூட்ரோடிலிருந்து இறங்கித் தமது ஊருக்கு வழக்கம் போல நடந்து செல்ல ஆரம்பித்தார்.  பாளையம் ஏரிக்கரையின் மேல் ஏறிப்போனால் சீக்கிரம் வீடு வந்து விடும்.  சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர்கள் வணக்கம் செய்து விட்டுப் போனார்கள்.  அதை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டு அம்மாஅப்பாவைப் போய்ப் பார்ப்பதில் நாராயணன் குறியாக இருந்தார்.  ஏரிக்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஏழுமலை அடையாளம் கண்டு அருகே வந்து கும்பிட்டான்.

க்ஷேம லாபங்களை விசாரித்தான். “நீங்கதான் மாசா மாசம் வர்றீங்களாம்.  பாக்கவே முடியல”.  

நாராயணன் சிரித்தபடி இரண்டு ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

ஊர் முன்பு மாதிரி இல்லை.  சின்ன வயசில் பார்த்த பசுமையும் நீர் தளும்பும் காட்சிகளும் இல்லை.  ஏரியில் கூடப் புதிதாய் பெய்த மழையில் தண்ணீர் ஒரு ஓரம் திரண்டிருந்தது.  விழல்கள் காய்ந்தும் காயமலிருந்தது.  வழியில் வணக்கம் செய்த தமது நிலத்தில் வேலை செய்யும் பையன்களும் சரி ஏழுமலையும் சரி வாழ்நிலையில் இன்னும் மாறவில்லை.

அஞ்சலை தன் குழந்தைகளுடன் குளித்துவிட்டு எதிரில் வந்தாள்.  “நம்ப நெலத்துலே நாத்து நட்டாச்சா?”   அவள் பதிலளித்தாள். நாராயணன் கிளம்பினார்.

ஏரிக்கரையிலிருந்து சுற்று வட்டாரத்தைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட ஏழெட்டு கிராமங்கள் தெரியும்.  அங்கிருந்தே இது அய்யர் வீடு, இது நாயுடு வீடு, இது கவுண்டர் வீடு, இது காலனிப் பகுதி  என்று ஓரளவுக்கு கைகாட்டலாம்.  பார்வைகள் தொடர்ந்து வீடு வீடாய் துழாவிக் கொண்டிருந்தபோது, பாளயத்திலுள்ள ராஜகோபால் கவுண்டரின் டீக்கடை நினைவு வந்தது.  வாழ்விலே ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி என்றால் அந்த டீக்கடைதான் ஞாபகம் வரும்.

“டீ ஒண்ணு கொடுங்க!”

“அந்த கிளாசை எடுத்துக் கழுவு” என்று தனியாக கம்பியில் தொங்கியிருந்த கிளாசைக் காட்டினான்.

நாராயணன் திகைத்து நின்றான்.  “ஏங்க டீக்குடுங்க!”

“காதுல உழல, எடுத்துக் கழுவுப்பா கிளாச. ஊத்தறேன்” என்று ராஜகோபால கவுண்டர் சொல்லிவிட்டு உள்ளே சென்று வந்தான்.  

“ஏங்க நான் அது இல்ல, டீக்குடுங்க”.

“டேய் மூஞ்சும் மொகரக்கட்டயும் பாரு,  இஷ்டம் இருந்தா குடி, இல்ல எடத்தக் காலிப்பண்ணுடா”. 

பெஞ்சு மேல் உட்கார்ந்து டீக்குடித்தவர்கள் எல்லாம் கொல்லெனச் சிரித்தார்கள்.  குள்ளமாய்க் கன்னங்கரேலென்றிருந்த நாராயணின் உடல் வெட்கத்தால் வெடவெடத்தது.அப்பாவிடம் சொன்னான்.  

“எவண்டா குடுக்க மாட்டேன்னு சொன்னது?’

“பக்கத்துப் பாளயத்துல இருக்கிற ராஜகோபால் கவுண்டரு”.

இவன் கிளாஸ் விவகாரத்தைச் சொன்னான்.

“டேய், நீ இன்னாரு மவன்னு சொல்ல வேண்டியதுதானே?’

அவர் பாக்கத்தில் மட்டுமல்ல, சுத்து வட்டாரங்களிலும் பரவலாக அறியப்பட்ட மனிதர்தான்.  பேரும் புகழும் சாதிப் பெருமைகளும் நிறைய உண்டு. மறுநாள் ராஜகோபால கவுண்டர் தம் மகளின் திருமணப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு மொதல்லே  அவரைப் பார்க்க வந்தான். 

“இவருதாம்பா நேத்து எனக்கு டீக்குடுக்கல”.

“அட நீயா, ஏம்ப்பா இன்னாரு மவன்னு சொல்றதில்ல. பாத்து ரொம்ப நாளாச்சு,  கருப்பா கரிகட்டையாட்டும் இருக்கவே அடையாளம் தெரியல. கோயிச்சுக்காத,  நாளைக்கு வந்து ஒன்னுக்கு நாலு டீயா எனாமாவே குடி”.

நாராயணன் அப்போது சின்ன சந்தோசத்தோடு ஓடினான்.  ஆனால் மேனி தனது சாதியை உணர்த்தவில்லையே என்ற ஏக்கம் உள்ளுக்குள் வளர்ந்தது.  கருத்த தோல் வாழ்வில் ஒரு கனத்த அர்த்தத்தை உண்டு பண்ணியது.

துரத்தும் நினைவுகளுடன் நாராயணன் வீடு சென்றார். வாங்கி வந்த பொருள்களை கொடுத்துவிட்டு நிலத்தையெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அதே வழியில் மறுநாள் மாலை கிளம்பி வந்தார்.

மறுநாள் அலுவலகத்தில்,  வந்ததும் அவரவர்கள் விசாரிக்க ஆரம்பித்தார்கள். சொந்த ஊருக்கு போய் வந்ததை தெரிவித்தார்.  “இன்னா கவுண்டரே உம்னு இருக்கீங்க?” என்றார் ஒருவர் “ஊரெல்லாம் எப்டீ இருக்கு?’ என்றார் இன்னொருவர்.  

“என்ன கவுண்டரேன்னு ஏன்யா ஆபிசில கூப்பிடறே?” நாராயணன் கேட்டார்.

“ஏன்யா கவுண்டனத்தான கவுண்டன்னு கூப்டேன்.  வேற யாரக் கூப்டேன்?”

அதிகாரி வந்தார்.  “என்ன நாராயணன் காலைல கவுண்டன் கிவுண்டன்னு பேசிக்கிட்டு”.

“சார் நீங்களே சொல்லுங்க,  சார் என்னப் பாத்தா கவுண்டன் குடும்பம் மாதிரியா தெரியுது?”

“ஏன்ய வேலையிலே கவுண்டன்னு சொல்லித்தானே சேந்தே. உன்னைக் கவுண்டன்னு சொல்லாம பறையன்னு ஒதுக்கிடவாப் போறாங்க. காலைல ஒக்காந்து வேலையைப் பாருங்கய்யா”.

“சார் நீங்க சொன்னா மாதிரி என்ன ஒரு முறை அப்பிடி நெனச்சு அவமானப்படுத்திவிட்டாங்க எங்க ஊர்ல,  இதுக்கு இன்னா சொல்றீங்க?” நாராயணன் அந்தப் பழைய நிகழ்ச்சியை விவரித்தார்.அவர் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொஞ்ச நேரம் யோசித்தார்.  “சின்ன வயசுலே உன்ன ஒரு முறை அவமானப்படுத்திட்டாங்கற விசயத்த நாப்பத்தஞ்சி வயசு வர்லேயும் மறக்க முடியல.  அதுக்கு உன் கருப்பு வொடம்பும் ஒரு காரணமா இருந்திருக்கு.  இன்னொரு பக்கம் நெனச்சு பாருங்க.  காலம் பூராவும் அந்தக் கருத்த வொடம்புலிருந்த சனங்க எவ்வளவு  வேதனைப்பட்டிருப்பாங்க, அவுங்கள்ள செவப்பா இருந்தாகூட அவன் சாதி தெரிஞ்சா தனி கிளாசிலதான் டீக்கொடுத்திருப்பாங்க.  இங்கதான் நகர வாழ்க்கையில சாதி மனசில இருந்தாகூட, வெளியில தெரியாம எல்லாம் கலந்து கெடக்குறோம்.  ஆனா கிராமங்கள்ள படிச்சிருந்தாலும் சரி, படிக்காம இருந்தாலும் சரி வாள்நாளெல்லாம் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பான்?’ 

நாராயணன் மிகவும் குழம்பிப் போயிருந்தார். வீடு சென்ற பின்னரும் அதே சிந்தனை.  

மறுநாள் அலுவலகம் சென்றதும் பக்கத்து அதிகாரியைப் பார்த்தார். “சார் இதுவரை நான் என்னப் பத்தியும், என் சாதிப் பத்தி தெரியாம அவமானப்பட்டது பற்றியும் கவலைப்பட்டேன்.  தனிகிளாஸ் இழிவ என்னாலே இத்தனை வருடங்கள் ஆகியும் உணர முடியாதது வெக்கமாவும் வேதனையாவும் இருக்கு.  அவுங்க சாதி நெலமய நெனச்சு  எவ்வளவு மனங்கசந்திருப்பாங்க?” 

அவர் சிரித்தபடியே நாராயணனின் முதுகில் லேசாய்த் தட்டிவிட்டு  உயர் அதிகாரியின் அறையில் நுழைந்து விட்டார்.

@மன ஓசை, பிப்ரவரி 1990

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *