தொடர் 41: அப்பாவின் பள்ளிக்கூடம் – ந. முத்துசாமி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்பின் நவீனத்துவம்,  நேர்க்கோட்டை மீறிய உரைநடை போன்ற கருத்துக்கள் தமிழில் அறிமுகமாகாத காலத்திலேயே, வெறும் மோஸ்தராக இல்லாமல் அவற்றின் சாரத்தை அனுபவமாக வெளிப்படுத்திய தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையானவர் முத்துசாமி.

அப்பாவின் பள்ளிக்கூடம்

ந. முத்துசாமி

தோளில் புத்தக மூட்டையோடு பள்ளிக்கூடத்திலிருந்து வந்து தாழிட்டிருக்கும் கொல்லைக் கதவைத் தட்டும்போது, பெரியவனுக்கு மனத்தில் சிணுக்கம் கண்டது. கதவுக்குப் பின்னால் தாழை நீக்கிக் கதவைத் திறந்து வெளிப்படப் போகும் அம்மாவின் முகத்திற்காக, அவன் காத்துக் கொண்டிருந்தான்.  அவனுக்குப் பின்னால் அவன் தம்பி புத்தக மூட்டையை ஊஞ்சல் ஆட்டிக் கொண்டு நின்றான். கை சிவக்கக் தட்டினான்.  ஆத்திரத்தோடு கதவைக் குத்தினான்.

“இருடா கண்ணு வந்துட்டேன்” என்று அவள் தாழை நீக்கினாள்.  நீக்கின வேகத்தில் இருவரும் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.   பெரியவன் அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டு புடவையில் முகம் புதைத்துக் கேவிக்கேவி அழ ஆரம்பித்து விட்டான்.

“என்ன ஆச்சு?” என்று அவள் கேட்டதற்கு “வாத்தியார் அடிச்சுட்டாரு” என்று அவன் தொடர்ந்து அழுதான். “அடப்பாவி அவனுக்கு என்ன கேடு?”  அவனைத் தூக்கிக் கொண்டாள்.  அவள் கண்ணீர் கன்னத்தில் உருண்டது.  சின்னவனும்  “ஆமாம்மா அடிச்சுட்டாரு” என்று காலைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டான்.  

இவர்களைக் கண்டதும் கொட்டாக்காலில் குறுக்கிக் கட்டப்பட்டிருந்த பசுங்கன்று தலையைத் திருப்பிக் கொண்டு “அம்பே” என்றது.  பசுவும் வாயில் எடுத்த வைக்கோலுடன் வயிற்றை எக்கி “ம்” என்றது.  

இவர்கள் வருகையை எதிர்பார்த்து காப்பிக்காக மண் குமுட்டியை விசிறிக் கொண்டிருந்த பாட்டி மூவரையும் பார்த்து “என்னடி? என்ன ஆச்சு?” என்றாள்.  சின்னவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.  அவன் கண்ணைப் புடவைத் தலைப்பால் துடைத்து விட்டு, மீண்டும் குமுட்டியை விசிற ஆரம்பித்தாள்.  குமுட்டியை அவள் விசிற ஆரம்பித்ததும் கரி வெடித்து வெளியில் தெறிக்கும் தீப்பொறிகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

“அந்த படுபாவி வாத்தி அடிச்சுட்டானாம்”  முகத்தைப் புடவைத் தலைப்பில் மறைத்துக் கொண்டு சுவர் ஓரமாக அமர்ந்து சப்தமின்றி  உடல் குலுங்க அழுதாள்.  இறந்த தன் கணவனை நினைத்துக் கொண்டாள்.பாட்டி பெரியவனை அழைத்துக் கண்களைத் துடைத்து விட்டு “அழாதே காப்பியைக் குடி நாளைக்கு நான் வந்து சொல்றேன், அடிக்க மாட்டான்” என்று அடுப்பை விசிறுவதில் முனைந்தாள்.  

குழந்தைகளின் மீது விழும் அடி, அப்பனை இழந்ததை  பாட்டிக்கு சொல்வது போலிருந்தது.  தன் மகனின் மறைவுக்குப் பிறகு அப்பள்ளிக்கூடம் விலகி தூரப் போய்க் கொண்டிருந்தது.    அவன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவனோடு அவன் வேலை செய்த பள்ளியின்  மீது பாசத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள்.  பால் பொங்கி வழிந்து தீய்ந்து நாறிற்று.  அவசர அவசரமாக பாலை இறக்கிக் கீழே வைத்து விட்டு “எந்த தடியன் அடிச்சவன்? தோப்பன் இல்லாத குழந்தையே அடிக்கறமேன்னு இருக்க வேண்டாம்.  அப்பனோட சேர்ந்து ஒழைச்சமேங்கறது மறந்து போச்சா?” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு காப்பியைக் கலக்க ஆரம்பித்தாள்.

கொட்டாயில் கன்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தது.  “கன்னுக்குட்டியை ஊட்ட அவிழ்த்துவிட மறந்துட்டியா?” என்றாள் பாட்டி.  “ஒரு எழவும் ஞாபகம் இருக்க மாட்டேங்கறது” என்று அம்மா எழுந்து கொட்டாய்க்குப் போனாள்.  

காப்பி குடித்து விட்டு நுரை ஒட்டிய உதடுகளோடு சின்னவன் தெருவிற்கு விளையாட ஓடிவிட்டான்.  பெரியவன் கூடத்து ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் பள்ளிக்கூடம் கிளம்பும்போது அவன் சுரத்தாய் இல்லை.  முகம் கசந்திருந்தது.  “வயிற்றை வலிக்கிறது” என்று ஊஞ்சலில் போய்ப் படுத்துக் கொண்டான்.  சமீப காலமாக அவன் பள்ளிக்குச் செல்ல முடியாது என்று அடம்பிடிக்க ஆரம்பித்திருந்தான்.  பள்ளிக்கூடம் போவதைத் தவிர்க்க முடியாது எனத் தெரிந்ததும் “நீ வந்த, இன்னும் அடிப்பாரு பாட்டி” என்று அழ ஆரம்பித்து விட்டான்.  பாட்டி அவனைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.  

வாயிற்கதவு திறந்திருந்தது.  ரேழிக் கதவைத் யாரோ தட்டினார்கள்.  சின்னவன் ஓடிப் போய்க் கதவைத் திறந்தான்.  ரேழி வாயிற்படியைத் தாண்டி எதிர்த்த வீட்டுப் பாட்டி “இன்னிக்குத்தான் பட்டணத்திலேருந்து வந்தேன்.  இப்படி செஞ்சுட்டானேடி” என்று முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு தாழ்வாரத்துக் குறட்டில்  தூணில் சாய்ந்து கொண்டாள்.  அப்பா இறந்த பிறகு துக்கம் கேட்க  வந்தவர்கள் அம்மாவையும் இவனையும் அழ வைத்தார்கள்.  அவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தார்கள்.  இந்தப் பாட்டி எழுந்து தொலைந்தால் போதும் என்றிருந்தது.  

பாட்டி இவனைப் பள்ளிக்கு அழைத்தாள்.  அவனும் உடன்பட்டுக் கிளம்பினான்.  சாலையோடு வர அவன் மறுத்துவிட்டான்.  கிடாரங்கொண்டான் வாய்க்காலைக் கடந்து குறுக்கு வழியாகப் போவதையே விரும்பினான்.  ஒற்றையடிப்பாதை தனிமையாகக் கொல்லன் பட்டறைவரையில் போகிறது.

மூவரும் கொல்லன் பட்டறையை நெருங்கிக் கொண்டிருந்தனர்.  பட்டறையில் பாரவண்டி கட்டு விட்டுக் கொண்டிருந்தார்கள்.  வெளியில் கட்டைச் சுற்றி மூட்டியிருந்த வரட்டி எரிவதைப் பார்த்துச் சற்று நின்றனர் இருவரும்.   பாட்டி “நேரமாச்சு” என்றாள் இவன் “கொஞ்சம் வேடிக்கை பார்த்துவிட்டுப் போகலாம்” என்றான்.

“பாவம் வாத்தியாரு, இதுங்களே விட்டுவிட்டு இப்படிச் சின்ன வயிசிலே பூட்டாருங்களே” என்றான் கொல்லன் பாட்டியைப் பார்த்து.  

கிடாரங்கொண்டான் பெருமாள் கோயிலுக்குப் பின்னால் அக்ரகாரத்துப் பையன்கள் தோளில் புத்தக மூட்டையோடு பள்ளிக்கூடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள்.  பையன்களைப் பார்த்ததும் அவனுக்குப் பயம் தோன்ற ஆரம்பித்தது.  “வாத்தியார் அடிப்பாரு பாட்டி” என்றான். “நான் இருக்கேன்,  அடிக்கமாட்டான் வா” என்று கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள்.  

சின்னவன் தன் வகுப்பறைக்கப் போய்விட்டான்.  இவனைப் பாட்டியோடு கண்டதும் வாத்தியார் “என்னடா பாட்டியெ தொணக்கி அழைச்சிட்டு வந்தியா?” என்றார்.

“நீங்க அடிக்கறேன்ன்னு அழுதுண்டு வர மாட்டேனுட்டான்” என்றாள் பாட்டி. 

“ஏண்டா நான் உன்னை அடிக்கறேனா?” என்றார் அவர்.  பதில் சொல்லவில்லை.  வற்புறுத்திய பின்னர் அவன் பாட்டியைப் பார்த்து “இல்லே” என்றான்.  

“மனசு கேக்க மாட்டேங்கறதேன்னு வந்ததேன்” என்றாள் பாட்டி.  வரும்போது இருந்த மனநிலை மாறிவிட்டது.  அவளுக்கும் இந்தப் பள்ளிக்கும் இனி சம்பந்தமில்லை எனத் தோன்றிற்று.

“நான் பார்த்துக்கறேன்.  நீங்க போய்ட்டு வாங்க” என்றார் அவர்.

“தோப்பன் இல்லாத கொழந்தே” என்று சொல்லிக் கொண்டே திரும்பிவிட்டாள் பாட்டி.

வாத்தியார் கையில் பிரம்பை எடுத்துக்கொண்டார்.  அவர் விரல்களில் விழாமல் சுழற்றிக்கொண்டிருந்தார்.  அது இல்லாமல் அவரால் இருக்கமுடியாதுபோலத் தோன்றிற்று.  அவர் பையன்கள் பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.  இவனிடம் வந்ததும் “முழிக்காதே, முழி அப்படியே தங்கிவிடப்போறது” என்றார்.இரண்டாவது சுற்றுக்கு இவன் முன் வந்தவர் “எங்கே கவனிச்சுக்கிட்டிருக்கே?” என்று பிரம்பைக் கையில் பிடித்துக் கொண்டார்.  முகத்திற்கு நேரே ஆட்டிவிட்டுப்போய் மேஜை  மீது அமர்ந்து கொண்டார்.

அவர், சாயலில் இவன் அப்பாவைப் போலவே இருப்பதாகத் தோன்றிற்று.  ஆனால் அப்பாவின் முகம் அதற்குள் இவனுக்கு மறந்துவிட்டது.  அவன் அப்பாவோடேயே இருந்தான்.  இறந்துபோனபோதுகூட அவன் பக்கத்தில் இருந்தான்.  இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் அவர் வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும்போதே இறந்தார்.  

காலை வகுப்பு முடிந்து மணி அடித்தது.  வாயிற்படியைத் தாண்டி ஓடியவன் தடுக்கிக் கீழே விழுந்தான்.  வாத்தியார் ஓடிவந்து இவனைத் தூக்கிவிட்டார்.  இறந்துபோன  தன் அப்பாவே பின்னால் வந்து இவனைப் பிடித்துக் கொண்டது போலிருந்தது.  ஓ வெனக் கத்தி விட்டான்.

வீட்டில் கொல்லைக் கதவு திறந்தே இருந்தது.  “அம்மா, அம்மா” என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடினான்.  அம்மாவைக் கட்டிக் கொண்டான்.  கேவிக் கேவி அழுதான்.  அவன் அழுவதைக் கண்டு தம்பியும் அழுதான்.   இன்னும் ஒரு முறை தன் கணவனை நினைவுபடுத்திக்கொண்டு அவளும் அழுதாள்.  “அந்த நாசமாப்போற பள்ளிக்கூடத்தைத் தொலைச்சுத் தலைமுழுகு” என்று  அவனை அணைத்துக் கொண்டாள்.

“அவனுக்கு அப்பறம் நமக்கு அங்கே என்ன வேலைன்னு இருந்திருக்கணும்.  நாளைக்கு நான் புஞ்சைப் பள்ளிக்கூடத்திலே கொண்டு சேர்த்துட்டு வந்துடறேன்” என்று பாட்டி தன் கண்ணைத் துடைத்துக் கொண்டு அவன் கண்ணையும் துடைத்து விட்டாள்,

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.