அழுத்தமான சமுதாய முன்னேற்றக் கருத்துக்களும், கண்ணியமும், பரிவும், பலதரப்பட்ட தேர்ச்சியான பாத்திர வார்ப்பும், இயல்பான மனோதத்துவப் பின்னணியும் சூடாமணியின் தனிச் சிறப்புகள்

அந்நியர்கள்

ஆர். சூடாமணி

தன்னை  வரவேற்க ஸவிதா ஸ்டேஷனுக்கு வந்தது  ஸெளம்யாவிற்கு ஆச்சரியத்தை அளித்தது.  “எவ்வளவு வருஷம் ஆச்சிடி நாம சந்திச்சு?  என்னை எதிர்பார்க்கலேன்னா உன்னை மன்னிக்க முடியாது” என்றாள் ஸவி.   “அப்பாடா, நீ இப்படிப் பேசினால்தான் எனக்கு வீட்டுக்கு வந்தமாதிரி இருக்கு” ஸெளம்யா சிரித்தாள்.

சகோதரிகள் எதிரெதிரே நின்றார்கள்.  பேச்சுக்கு அவசியமற்ற அர்த்தமயமான இதயமான நிமிஷங்கள்.   சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து கஸ்தூரிபா நகர் வந்து சேரும்வரை பரஸ்பர விசாரிப்பிற்கு மேல் உரையாடவே இல்லை. 

ஸவிதாவின் கணவர் மைத்துனியை வரவேற்றார்.  “உன் அக்காவுக்கு கால் நிக்கலே” சிரித்தார்.  

ஸெளம்யாவின் பார்வை சகோதரியிடம் சென்றது.  மீண்டும் மௌனத்தில் ஒரு பாலம்.  புன்னகையில் மின்னும் ஆந்தரிகம்.  “இத்தனை வருஷம் ஆனாப்பலேயே தோணலே,  ஸவி தலை கொஞ்சம் நரைக்க ஆரம்பிச்சிருக்கு”.

நரை. ஸவிதா லேசாய்ச் சிரித்துக் கொண்டாள்.  காலம் செய்யக்கூடியதெல்லாம் அவ்வளவுதான்

விதவைத் தாய் இறந்தபோதுதான் அவர்கள் கடைசியாகச் சந்தித்தார்கள்.  அந்தச் சூழ்நிலையே வேறு.  அப்போது நிலவிய நெருக்கமும் ஒருமையும் அந்தத் துக்கத்தின் அம்சங்கள்.  காரியங்கள் முடிந்தபின் அவரவர்களின் இடத்துக்குத் திரும்பிவிட்டார்கள்.  இப்போதுதான் உண்மையான நெருக்கம்.

சிறிது காலமாக ரத்தச் சோகையால் பலவீனமுற்றிருந்த சௌம்யாவை, அவர் கணவர் ஸவிதா குடும்பத்தினரின் அழைப்பின்பேரில், தாமும் குழந்தைகளும் வீட்டைக் கவனித்துக் கொள்வதாகச் சொல்லி, ஒரு மாறுதலுக்காக பம்பாயிலிருந்து அக்காவிடம் அனுப்பிவைத்தார்.  

இப்போது சென்ற காலத்தைச் சகோதரியர் இருவருமாய் மீண்டும் பிடித்துக்கொண்டு வந்துவிட்டாற் போல் இருந்தது.  மேலே தெரியும் சிறு பகுதியை விடப் பன்மடங்கு பெரிய அளவு நீரின் கீழே மறைந்திருக்கும் பனிப்பாறையைப் போல் இருந்தது  உடன்பிறப்பின் பந்தம். 

காரமில்லாத  சாம்பார்,  ஒரே அளவு இனிப்புடனான காபி,  அகலக்கரை போட்ட புடவை,  விடியற்காலை உலா, இரவு இரண்டு மணிக்கு சிறிது கண் விழித்து நீர் அருந்துவது இப்படி எத்தனையோ ஒரே வேரில் பிறந்த சின்னச் சின்ன இணக்கங்கள்.  வைத்தியமும் நடந்தது ஒரு கடமை போல.

மாலை நாலரை.  ஸவிதாவின் மூத்த மகன் ராஜா எம்எஸ்ஸி முதல் ஆண்டு மாணவன்.  மறுநாள் கல்லூரியில் நடைபெறும் ப்ரேக் அப் பார்ட்டி முடிந்து அடுத்த நாள்தான் வருவேன் என்கிறான்.  சரி என்கிறாள் ஸவிதா.  அவன் சென்றபிறகு ஸெளம்யா “அத்திம்பேர் அனுமதிக்கிறாரா?” என்றாள்.   அவள் வேறு பழக்கங்களுக்கு இலக்காகிவிடக்கூடுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தினாள்.  “புரியறது ஸெளமி ஆனா காலம் மாறரதை நாம் தடுத்து நிறுத்திட முடியுமா?”

தங்கை “கன்ட்ரோல் அவசியம் இல்லையா?” என்ற கேள்விக்கு “கன்ட்ரோல் பண்ணினா பிச்சுண்டு கிளம்பும்” என்று அக்கா பதிலளிக்கிறாள்.  

தங்கை பல்வேறு கேள்விகளை எழுப்பினாள்.   ஸவிதாக கணநேரம் அமைதி இழந்தாள்.  பிறகு கையை நீட்டித் தங்கையின்  கையை மெல்லப் பற்றி அமுக்கினாள்.

“இதைப் பற்றிக் கவலைப்படாதே ஸெளமி.  அடி பட்டுக்காமல் யாரும் வளர முடியாது.  குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வைச்சுக்க முடியுமா?”

புதிய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த அன்று சகோதரிகள் வெகு நேரம் அதைப் பற்றி விவாதித்தார்கள். ஸெளம்யாவுக்கு படம் பிடிக்கவில்லை.  இப்பொதெல்லாம் சினிமா இலக்கியம் எல்லாத்திலேயும் பச்சைத்தனம் அதிகமாகி வருவதாக அவள் சொன்னாள்.  அதை விட்டு விட்டு கதை கலை முதலான நல்ல அம்சங்களை எடுத்துண்டு ரசிப்போம் என்றாள் ஸவிதா.  

அன்று இரவு ஸெளம்யா தன் பெட்டியிலிருந்து இரண்டு ஆங்கில சஞ்சிகைகளை எடுத்துக் குறிப்பிட்ட பக்கங்களில் திருப்பிச் சகோதரியிடம் கொடுத்தாள்.  தங்கை கதை எழுதியிருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது,  படித்ததும் ஸவிதாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை.   நல்ல கதைதான்.  ஆனா நவீன ஃபேரி டேல்ஸ் மாதிரி இருக்கு என்றாள்.   இருவரும் மௌனமானார்கள்.

மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு வழக்கம்போல் தங்கையுடன் அடையாறு பாலம் வரை நடந்து உலாவிவிட்டு வந்த பிறகுதான் அந்த உறுத்தல் மறைந்தது.  நூலகத்திலிருந்து புதிய வாரந்திரப் புத்தகங்களை கொடுத்து பழையவற்றை வாங்கிக் கொண்டு போனான்.  ஒரு புத்தகத்தை எடுத்து “ஸவி இதை அவசியம் படி, உனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று சொல்லிச் சிரித்தாள்.

அது மானிட ரீதியான வெளிச்சமோ இலக்கியத் தரமோ இல்லாத வெறும் மஞ்சள் குப்பை.  ஸெளம்யா புரிந்து கொண்டது அவ்வளவுதானா?

சிறுமிப் பருவத்தில் அவ்விருவரும் பெரியவர்களுக்குப் புரியாமல் தமக்குள் பேசிக் கொள்ள ஒரு ரகசிய மொழியை உருவாக்கியிருந்தார்கள்.  பேசிக் கொண்டே இருக்கையில் அதிலிருந்து ஆமாம் என்று பொருள்படக்கூடிய ஓரா என்பதை ஸெளம்யா பயன்படுத்தினாள். சிரிப்போடு ஒருவரையொருவர் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார்கள்.

மாலை லேடீஸ் கிளப்புக்குச் சென்றனர். தன் தங்கை கதை எழுதுவாள் என்று பெருமை ததும்ப அறிமுகப்படுத்தினாள்.  மன்றத் தலைவி கால்விளங்காத ஒரு பையன் உதவி கேட்டு வருவதைப் பற்றி சொன்னாள்.  ஸவிதா பத்து ரூபாயைக் கொடுத்தாள்.  சௌம்யா தன் பங்காக ஐந்து ரூபாய் கொடுத்தாள்.  வீடு திரும்பும் வழியில்  அதைப் பற்றி பேச்சு வந்தது.  இதெல்லாம்  பெரிய பெரிய நிறுவன அடிப்படையில் சமாளிக்க வேண்டிய பிரச்னை என்றும் வறுமை ஒரு அடியில்லாத பள்ளமென இருப்பதால்  எத்தனை போட்டாலும் நிரம்பாது என்று ஸெளம்யா அபிப்ராயப்பட்டாள்.  போட்டவரைக்கும் பிரயோசனம் என்றாள் ஸவிதா. சட்டென்று பேச்சு தொய்ந்தது.  இப்போதெல்லாம் மௌனம் பேச்சின் மகுடமாக இல்லை.

ஹாலுக்குள் நுழைந்தபோது ஒரே கூச்சலாக இருந்தது.  ஸவிதாவின் பிள்ளைகள் ஒரு பத்திரிக்கைக்காக  சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.  இருவரும் விடாமல் ஓடிக் கொண்டிருந்தனர்.  பையன் சுவர் அலமாரியில் மோத அதன் கண்ணாடிக் கதவு உடைந்து உள்ளே இருந்த உயரமான கட் கிளாஸ் ஜாடி சரிந்தது.  கீழே விழுமுன் ஸவிதான ஓடிப் போய் பிடித்துக் கொண்டாள்.   “இது உடைஞ்சிருந்தா என்ன ஆயிருக்கும்?” என்று  மூச்சிரைக்க கோபமாய்க் கத்தினாள்.  “பாரேன் ஸெளமி நம்ம அப்பா அம்மா கொடுத்ததுன்னு நான் இதை ஒரு பொக்கிஷம் மாதிரி வச்சுண்டிருக்கேன்.  ஆனா இந்தக் குழந்தைகளுக்கு எத்தனை அஜாக்கிரதை?”

ஸெளம்யா ஏதும் சொல்லவில்லை.  

“இது உடைஞ்சிருந்தால் எனக்கு உயிரே போனாப்பல இருக்கும்.  இதன் ஜோடியை நீயும் பத்திரமாத்தான் வச்சிருப்பே இல்லையா?”

“வச்சிருந்தேன்”.

“அப்படின்னா?”

“மேல் ஃப்ளாட் பொண்ணு அழகாயிருக்குன்னு பாராட்டினாள்.  அதனாலே அவள் கல்யாணத்துக்குப் பரிசாய்க் கொடுத்து விட்டேன்”.

ஸவிதா அதிர்ந்து நின்றாள். அப்பா அம்மா நினைவாய். 

“அப்பா அம்மாவை நினைவு வச்சுக்க நினைவுச் சின்னங்கள் வேணுமா என்ன?” ஸெளம்யா பதிலளித்தாள். மீண்டு கத்தி முனையில் விநாடி இடறியது.  

அதற்குள்ளாகவா இரு மாதங்கள் முடியப் போகின்றன?

ஸெளம்யாவின் கணவர் தபாலில் வந்த புகைப்படத்தின் பிரதியை பார்த்து விட்டு “அடையாளம் தெரியாமல் குண்டாகிவிட்டாயே? நான்தான் ஸெளம்யா என்று நெற்றியில் அச்சடித்துக்கொண்டு வா” என்று எழுதியிருந்தார்.  அங்கிருந்து வரும் கடிதங்கள் மேம்போக்கில் உல்லாசமாகவும் இயல்பாகவும் தொனித்தபோதிலும், இவளுடைய இல்லாமையை மிகவும் உணர்கிறார்களென்ற ஜாடை புரிந்தது.   இனி இப்படி வருஷக்கணக்காகப் பிரிந்திராமல் ஆண்டுக்கொரு தடவை ஒருவரையொருவர் முறைவைத்துப் போய்ப்பார்கக வேண்டுமென்று சகோதரிகள் தீர்மானித்துக் கொண்டார்கள்.

ஸவி அட்டைப்பெட்டியை நீட்டினாள்.   உள்ளே அடையாறு கைத்தறி நூல் சேலை,  சிவப்பு உடல், மஞ்சளில் அகலமான கோபுரக்கூரை.  “பேசப்படாது வைச்சுக்கோ!”

“உன் இஷ்டம் எனக்கு மட்டுந்தானா?” தன்னுடையைதையும் காட்டினாள்.  மயில் கழுத்து நிறம் ஆனால் அதே அகலக் கரை.  மீண்டும் புன்னகைகள் பேசின.

“எப்போ எந்த ஊருக்குக் கிளம்பறதுக்கு முந்தியும் சுவாமிக்கு நமஸ்காரம் பண்றது என் வழக்கம்”. ஸவிதா மௌனமாய் இருந்தாள்.  “ஆனா இங்கே பூஜை அறை இல்லையே?”  என்றாள் ஸெளம்யா.  தொடர்ந்து கேள்விகள்.  “ஊருக்குக் கிளம்பற சமயத்திலே எதுக்கு விவாதம்?” என்றாள் ஸவி. 

“இவ்வளவு பெரிய விஷயத்தைப் பத்தி உனக்கு ஏதும் தீர்மானமான அபிப்ராயம் இல்லையே?” 

“இதை ஒரு பெரிய விஷயம்னு நான் நினைக்கலே” ஸவி பதிலளித்தாள்.

சிறுமிப் பருவத்தில் இருவரும் இறையுணர்வுடன் இருந்த வந்திருக்கையில் இவளுக்கு என்ன ஆயிற்று? 

“ தெய்வ நம்பிக்கையை இழக்கறமாதிரி அப்படி என்ன அநுபவம் ஏற்பட்டுது ஸவி?”

“அந்த நம்பிக்கையை இழந்துவிட்டேனா இல்லையான்னு எனக்கே நிச்சயமாகத் தெரியாது.  ஆனா அநுபவம்னு நமக்கே ஏற்பட்டால்தானா?  கண்ணும் காதும் மனசும் திறந்துதானே இருக்கு?  உலகத்தின் பிரச்னைகளையெல்லாம் பார்க்கறபோது இந்த விஷயம் ஒரு தலை போகறதாக எனக்குத் தோண்லேன்னு வச்சுக்கோயேன்”.“தெய்வத்தை நம்பலேன்னா என்னாலே உயிரோடயே இருக்க முடியாது” என்றாள் ஸெளம்யா.

ஒரே மரபினாலும் ஒரே வகையான பாரமரிப்பாலும் உருவானவைதான் அவர்களுடடைய எண்ணங்களும் கண்ணோட்டங்களும் மதிப்புகளும்!  ஆனால் வளர வளர அவற்றில் எவ்வளவு மாறுபாடு?

எவ்வளவு நெருங்கிய உறவாயிருந்தாலும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய இருப்பாகத்தான் கண்டு அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.  காலம் கொண்டு வரும்  மாற்றம் வெறும் நரை மட்டுமல்ல.

அன்பு… அது அடியிழை, உள்ளுயிர்ப்பு, அது இருப்பதனாலேயே வேறுபாடுகளினால் அழிவு நேர்ந்துவிடாதிருக்கத்தான் அது இருக்கிறது.   வாழ்நாள் முழுவதும் அந்நியர்களைத்தான் அன்பு செய்துகொண்டிருக்கிறோம்.

சகோதரிகள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.  கைப்பிணைப்பு விலகவில்லை.  ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *