தொடர் 43: மலரின் காதல் – இமையம் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்பல எழுத்தாளர்களின் கதைகளில் பசி ஒரு சமூகத்தை வரையறுக்கிறது. அல்லது உருவமைக்கிறது. பண்பாட்டை அல்ல. இந்த வகையில் இமையத்தின் கதைகள் வேறுபடுகின்றன. பசி வரையறுக்கும் அல்லது உருவமைக்கும் பண்பாட்டை அவை புலப்படுத்துகின்றன.

மலரின் காதல்

இமையம்

மூன்றாவது நடைக்கு கட்டுத் தூக்கும்போதுதான் வேண்டுமென்றே தன்னுடைய கையைப் பெருமாள் தொட்டது மாதிரி மலர் உணர்ந்தாள். மறுநொடியே பயத்தில் அவளுடைய உடம்பு குளிர்ந்து போய் வெட வெடக்க ஆரம்பித்தது. மணிக்கட்டில் அழுத்திப் பிடித்த மாதிரி இருந்ததே என்று நினைத்த போது அந்த இடத்தில் கம்பளிப் பூச்சி ஊர்வது மாதிரி இருந்தது. காறித் துப்பினாள்.

அடுத்தடுத்த நடைகளுக்குப் பெருமாளிடமிருந்து கட்டு வாங்கும்போது மலர் எச்சரிக்கையாக இருந்ததோடு, அவனுடைய கைகளையும் கண்களையும் கவனிக்கத் தவறவில்லை.

காசியம்மள் “காலை ஓட்டி நடக்காம அன்ன நடெ போடுற” என்றதும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். கரும்புக் கட்டுகளை வாங்கிப் பட்டறையாக அடுக்கிக் கொண்டிந்த அருணாசலம் காசியம்மாளிடம் “ஒங்கப்பன் வீட்டு பெருமயெல்லாத்தயும் ஊட்டுக்குப் போவயிலெ பேசிக்கலாம்” என்று கத்தினான். “வேகமாக நடெக்குறாங்களா மொல்லனா நடெக்றாங்களான்னு கிட்ட வந்து பார்த்தால்லெ தெரியும்” என்று அவனுக்கு கேட்கிற மாதிரி காசியம்மாள் சொன்னாள்.

“பாக்குற மாதிரிதான் ஒங்கிட்ட ஒண்ணுமில்லியே?”

“இருக்கா இல்லியான்னு கிட்டெ வந்து பார்த்தால்ல தெரியும்!”

“இங்கேயிருந்து பாக்கும்போதேதான் மோடு பள்ளமின்னு ஒண்ணத்தையும் காணும். பூசி மொயிவுனாப்லே இருக்கே” என்றான்.

“அசலாம்பா அக்காகிட்டெ சொன்னன்னு வையி, ஒன்னோட மூணயும் அரங்கோடப் புடிச்சி அறுத்துப்புடுவா” என்று சொன்னவள் கெட்டு வார்த்தை சொல்லித் திட்டினாள். எவ்வளவு திட்டினாலும் தகும் என்று மலர் நினைத்தாள். முறைக்காரப் பெண்களிடம் அவன் பேசும் பேச்சைக் காது கொடுத்தும் கேட்க முடியாது. அதே மாதிரி அவனை எவ்வளவு திட்டினாலும் கோபித்துக் கொள்ள மாட்டான். பெரும்பாலும் மலருடன் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டான். கடைசி நாள் என்பதால் தன்னிடம் ஏதாவது வார்த்தை கொடுப்பானோ என்று பயந்து கொண்டே கரும்புப் பட்டறையின் மேல் நின்று கொண்டிருந்த அருணாசலத்திற்கு அருகில் நேராகப் போய் நின்று கொண்டாள். அவன் இவளுடைய தலையிலிருந்து கரும்புக் கட்டுகளைத் தூக்கிப் பட்டறையில் அடுக்கினான். மலர் நடக்க ஆரம்பித்தாள். கட்டுத் தூக்கிக் கொண்டு வந்த அசலாம்பாளிடம் கட்டு இறக்கிக் கொண்டிருந்த காசியம்மாள் அருணசாலம் சொன்னதை கூறினாள். “நீயாச்சு ஒன்னேடாட அத்தெ மவனாச்சு” என்று அசலாம்பாள் சொன்னாள்.கருப்பாயி பத்து தப்படி தூரம்கூடப் போயிருக்க மாட்டாள். அவளுடைய தலையிலிருந்து கட்டு ஒன்று தளர்ந்து போய் கீழே சாந்து விழு ஆரம்பித்ததும், மொத்தக் கட்டுகளையும் பொத்தென்று தரையில் போட்டு விட்டு கட்டுக் கட்டியவர்களைத் திட்ட ஆரம்பித்தாள். மறுகட்டுத் தூக்கப் பெருமாளிடம் திரும்பி வந்தாள். கருப்பாயியை அடுத்து மலர் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். கட்டு இறக்கிக் கொண்டிருந்த அருணாசலம் மலரின் வாயைக் கிண்டினான். “வாய மூடிக்கிட்டு கட்டெ இறக்கி அடுக்குற வேலயப் பாரு” என்று சொன்னாள்.

இந்த முறை கட்டு வாங்கும்போது பக்கத்தில் யாரும் இல்லாததால் பெருமாளின் கை, கண், முகம் என்று ஒவ்வொன்றையும் மலர் கவனமாகப் பார்த்தாள். மற்றவர்களுக்குக் கட்டுத் தூக்கிவிடும்போது அவன் எப்படியிருக்கிறான் என்பதையும் அவள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். இவள் அவனுக்குப் பக்கத்தில் போகும்போதே பெரு மூச்சு விடுகிறான். ஏதோ சொல்ல வருவதுபோல உதடுகள் துடிக்கின்றன. இதெல்லாம் எதனால் என்று யோசித்தவள் எதுவாக இருந்தாலும் அவனாக வாயைத் திறக்கும்வரை தானாகக் கேட்கக்கூடாது என்ற முடிவோடுதான் கட்டுகளை வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

மூன்றாவது நடையில் கையை அவன் தொட்டது மாதிரி உணர்ந்த பிறகு அவனிடம் பேச்சைக் குறைத்துக் கொண்டாள். முதல் கட்டுக் கரும்பைத் தூக்கி மலரின் தலையில் வைத்த பெருமாள் திக்கித் திணறி “ஒங்கிட்டெ ஒரு விசயம் சொல்லணும்” என்று சொன்னவனுக்கு அடுத்துப் பேசவரவில்லை.

“என்னா விசயம்?” என்று கேட்டாள்.

“அடுத்த நடக்கி வா சொல்றன்”

“இப்பியே சொல்லு.”

“போயிட்டு வா, சொல்றன்.”

“இப்பியே சொன்னா ஆவாதா?” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பூங்கோதை வருவது தெரிந்ததும் மலர் பேச்சை அப்படியே விட்டு விட்டு மடமடவென்று நடக்க ஆரம்பித்தாள்.

“என்னா கொயிந்தனார, எளம் குட்டிகளுக்கு ரெண்டு கத்தய மட்டும் வச்சி வுடற. மூணு நாலுன்னு பிதுக்கித் தள்ளுனவளுக்கு ஆறு ஏயி கட்டுன்னு தூக்கிவச்சி அனுப்பற, என்ன சங்கதி?” என்று பூங்கோதை கேட்ட பிறகுதான் பெருமாள் தலையைத் தூக்கிப் பார்த்தான். மலரின் தலையில் ஆறுக்குப் பதிலாக ஐந்து கட்டு இருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டு போனவன் “கட்டெ வாங்கு” என்று சொன்னான்.மலருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவளுடைய மனம் ஒரு நிலையில்லாமல் தவிக்க ஆரம்பித்தது. தப்ப தவறாக் கேட்டிருந்தா நாக்கப் புடுங்கிட்டு சாவுறாப்ல கேட்டிருப்பன் என்று முனகினாள். கொஞ்ச நேரம்தான் வெறுப்புடன் இருந்தாள். லேசாக அவளுடைய மனம் மாற ஆரம்பித்தது. என்ன சொல்வான் எப்படிச் சொல்வான் என்று அவளுடைய மனம் ஆராய ஆரம்பித்தது.

ஆறு கட்டுக் கரும்பைத் தூக்கிக் கொண்டு சாதாரணமாக நடந்து போகிற அவளுடைய உடம்பு பெருமாள் என்ன சொல்லப் போகிறான் என்பதற்காக, சொல்லாத வார்த்தைக்காக பதறுகிறது. அவளுக்கு உடம்பு லேசாக நடுங்குவது மாதிரி இருந்தது. அவன் சொல்லும்போது பக்கத்தில் யாராவது இருந்து விட்டால் ஊருக்கே தெரிந்துவிடுமே என்று பயந்து போனாள். அந்த பயத்தில் வரப்பிலிருந்து சறுக்கி விழுந்து விட்டாள். கரும்புக் கட்டுகள் அவள் மேலேயே தாறுமாறாக விழுந்தன.

பின்னால் வந்து ருக்மணி தலையிலிருந்து கட்டுகளை நின்ற நிலையிலேயே போட்டு விட்டு ஓடி வந்து மலரைத் தூக்கி உட்கார வைத்தாள். இரண்டு முட்டிகளிலும் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. காயத்தின் மீது தூள் மண்ணாக அள்ளித் தூவி விட்டாள். பெண்கள் ஏழெட்டு பேர் கூடி “என்னாச்சி, என்னாச்சி” என்று கேட்க ஆரம்பித்தனர். “காலு பிசகிகிச்சு” என்று சொல்லிவிட்டு வலியை பொருட்படுத்தாமல் கீழே கிடந்த கட்டுகளைத் தூக்க ஆரம்பித்தாள்.

மலர் யாருடனும் பேசவில்லை. முடிந்தவரை மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு நடப்பதைத் தவிர்த்தாள். பெருமாள் மீது ஆத்திரமாக வந்தது. இன்றுதான் என்றில்லை. கரும்பு கழிக்க வந்ததிலிருந்தே அப்படித்தான் பார்க்கிறான். அவன் மீது கோபப்பட்டாலும் எரிச்சல்பட்டாலும் அவளுடைய மனம் அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தது.

“அடுத்த நடெக்கி வா சொல்றன்” என்று சொன்னவன் மூன்று நான்கு நடைக்கும் வாயைத் திறக்கவில்லை. இவளும் அவனுடைய வாயைக் கிண்டவில்லை. “வயசுக்குட்டி வேகமா நடக்க வாணாமா? ஒரு மாதிரியா இருக்கிறே ஒடம்புக்கு என்னாடி?” என்று விருத்தாம்பாள் கேட்டதும்தான் சுயநினைவு வந்த மலர் எட்டி நடக்க ஆரம்பித்தாள்.

அவன் தன்னைப் பார்ப்பது யாருக்குத் தெரிந்தாலும், கருப்பாயிக்கு மட்டும் தெரியக்கூடாது என்று நினைத்தாள். ஒன்றை நூறாக்குவதில் அவளை யாரும் ஜெயிக்க முடியாது. அவள் கரும்பு கழிப்பதற்கு போயிருந்த இடத்தில் கரும்பு வெட்டுகிறவனோடு பழக்கம் உண்டாகி விட்டது. தன் மூன்று பிள்ளைகளையும் தூக்கிப் போட்டு தாண்டி சத்தியம் செய்த பிறகுதான் அவளுடைய புருஷன் வீட்டிற்குள் நுழையவே முடிந்தது.

கருப்பாயி மட்டுந்தானா அப்பிடி. ஊருல யாருதான் ஓக்கியம் என்று மலர் முணுமுணுத்தாள். ரெண்டு பிள்ளை பெற்ற பிறகும் கொழுந்தனாரோடு உள்ள உறவை ருக்குமணி கத்திரித்துக் கொள்ளவில்லை. புருசன்காரனே நேராகப் பார்த்துவிட்டான். தப்பிப்பதற்கு சாமி வந்தது மாதிரி ஆடி நடித்தாள், அவளுடைய புருசன் எப்போதெல்லாம் சந்தேகப்பட்டு சண்டை பிடிக்கறானோ அன்றைக்கெல்லாம் அவளுக்கு சாமி வந்துடும். ஆனா இவளுடைய அம்மா அப்படிப்பட்டவளல்ல.விஷயம் லேசாகத் தெரிந்தாலே போதும. “மருந்தெ வச்சி என்னெக் கொன்னுப்புடுடி” என்று ஆரம்பித்து “வயிசிக்கி வந்து ஏயி எட்டு வருசமா சீந்துவாரில்லாம கெடக்குறியே விசயம் வெளிய தெரிஞ்சா எவண்டி ஒன்னெ ஏறெடுத்துப் பார்ப்பான்” என்று ஒப்பாரி வைத்து அழுது ஊரையேகூட்டி விடுவாள். தேவையில்லாமல் போட்டுக் குழப்பிக் கொள்கிறோமோ என்ற சந்தேகம் மலருக்கு வந்தது. பெருமாள் தனக்கு அவ்வளவு முக்கியமானவனா என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். அவன் சொன்ன வார்த்தை குழப்பத்தை உண்டாக்கி விட்டது. நிச்சயம் சொல்வான் என்று நினைக்கும் போதே அவளுக்கு கூச்சமாக இருந்தது. இந்தக் கூச்சத்தை இதற்கு முன் அவள் அறிந்ததே இல்லை. பல ஆண்டு காலமாகத் தான் சேர்த்து வைத்திருந்த ரகசியங்களை எல்லாம் அவன் ஒருவனிடம்தான் சொல்ல முடியும் என்ற எண்ணம் உண்டாயிற்று,

மலருக்கு உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் பெண் கேட்டு வந்த போது கெரகம் சரியில்லெ பொருத்தம் சரியில்லெ என்று தட்டிக் கழித்த அம்மாவின் மீது கோபம் வந்தது. தனக்கு கல்யாணம் நடக்கவில்லை என்று யார் கவலைப்படப் போகிறார்கள் என்று சலித்துக் கொண்டாள்.

இவளுடைய அப்பன் பண்ணை வேலை செய்து கொண்டிருந்த கவுண்டர் வீட்டுப் பெண்ணுடன் சாணி தெளிக்கிற நேரத்திற்கு மாட்டுக் கொட்டகையில் கூடியிருந்தானாம். அப்போது எதுவும் பேசாமல் மறுநாள் கவுண்டர் கரும்புக் கொல்லைக்குள் வெட்டிப் போட்டுவிட்டார். கவுண்டருக்கு பயந்து இவளுடைய அம்மாவைப் பிறந்த ஊருக்கு அனுப்பி விட்டார்கள். புருசன் ஊர் என்று இவளுடைய அம்மாவும் அந்த ஊருக்குப் போனதில்லை, தன்னுடைய நிலையை நினைத்து மலர் நொறுங்கிப் போனாள்.

“நேரமாவுது இருட்டாவுது” என்று சொல்லி கணேசன் கத்திக் கொண்டேயிருந்தான். கடைசி நாளாவது நேரத்தில் வீட்டுக்குப் போகலாமே என்று எல்லாப் பெண்களுமே அக்குசுப்பட்டுத்தான் கட்டுத் தூக்கிக் கொண்டிருந்தார்கள். கடைசிநாள் என்பதால் எல்லாக் கட்டுகளையும் தூக்கிவிட்டுத்தான் போக முடியும். கடைசி நாள் என்பதால் எல்லாருமே சிரிப்பும் பேச்சுமாக இருந்தனர். மூன்று நடைக்குக் கட்டு இருக்கும்போதே படைக்கப் போகிறேன் என்று கருப்பாயியுடன் காசியம்மாளை அழைத்துக் கொண்டு மோட்டார் கொட்டகைப் பக்கம் போனான். தினந்தோறும் கரும்பு கழித்துவிட்டோ கட்டுத் தூக்கிவிட்டோ வீட்டுக்குப் போகும்போது ஒரு முழுக் கரும்பு எடுத்துக் கொண்டு போவார்கள். இன்று கடைசி நாள் என்பதால் தலைக்கு ஐந்து கரும்பு என்று எடுத்து வைத்திருந்ததை படைத்து விட்டு வந்த கணேசன் பிடுங்கிக் கொண்டு தகராறு செய்ய ஆரம்பித்தான்.

இன்னும் ஒரு நடைதான். தாமரையும் மலரும் கட்டுத் தூக்க வந்து நின்றனர். மலரை விட்டு விட்டுத் தாமரைக்கு முதலில் கட்டுகளைத் தூக்கி வைத்தான் பெருமாள். அவள் நடக்க ஆரம்பித்ததும் முதுல் கட்டைத்தூக்கி மலரின் தலையில் வைத்தான். அவள் இரண்டு கைகளையும் உயரே தூக்கிக் கரும்புக் கட்டைப் பிடித்துக் கொண்டிருந்தாள். கட்டைத் தூக்காமல் நிமிர்ந்து நின்று மலரையே பார்த்தான் பெருமாள். அவனுடைய முகத்திற்கு நேராக இருந்த அவளுடைய இரண்டு மார்பகங்களையும் பிடித்துக் கொண்டு வெறிகொண்டவன் போல் கசக்க ஆரம்பித்தான்.தலையிலிருந்த கட்டைக் கீழேப் போட்டுவிட்டு நின்ற நிலையிலேயே எட்டி அவனை ஒரு உதை உதைத்தாள். நிலை தடுமாறி விழுந்து கிடந்தவனை வெறிக்கப் பார்த்தாள். “த்தூ நீயும் ஒரு ஆம்பளயா? ஆம்பளத்தனத்தக் காட்டெ வர நேரத்தப் பாரு, பொட்டப் பய” அந்த இடத்தை விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)