தொடர் 44: கிரஹணம் – லா.ச.ராமாமிருதம் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்லா.ச.ராவின் எழுத்துக்கள் மௌனங்களின் பெரும் விம்முதலைத் தருகின்றன.  ரகசியங்களின் பிரம்மாண்டமான விகாசத்தைக் கட்டி எழுப்புகின்றன.  ஒருபோதும் பெயிரிடமுடியாத வரையறுக்கவியலாத, உணர்ச்சிகளால் நம்மைத் ததும்பவைக்கின்றன.

கிரஹணம்

லா.ச.ராமாமிருதம்

அவளுக்கு வரவே பிடிக்கவில்லை.  “நான் இங்கேயே குழாயில் இரண்டு சொம்பு ஊற்றிக் கொண்டு விடுகிறேன்.  நீங்கள் போய் வாருங்கள்” என்றாள்.  

“சூரியகிரஹணம் சும்மா வருவதில்லை.  தம்பதி ஸ்னானம் ரொம்பப் புண்ணியமாக்கும்”. 

ஆம்.  அவளுக்குத் தெரியாது.  ஆனால் அவருக்குத் தெரிய நியாயமுண்டு.  இதுவரை இரண்டு மனைவியரை சமுத்திர ஸ்னானத்திற்கு அழைத்துப் போயிருக்கிறார்.  இவள் மூன்றாமவள். 

அவள் பட்டிக்காட்டுப் பெண்.  சமுத்திரம் சீறினால் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று அவளுக்குத் தெரியாது.  அவள் ஊரில் ஒரு குளம் உண்டு.  கடல் அக்குளத்தைப் போல் ஒரு ஆயிரம் குள அகலமிருக்கும் என்று நினைத்திருந்தாள்.

ஒவ்வொரு அலையும் அதன் முழு வீச்சுக்கு உயர்ந்தபின் நடுவில் பிளந்து அதினின்று  வெண்ணுரை சொரிந்தது.  அவை வாரி வாயில் போட்டுக் கொள்வதுபோல்தான் வந்தன.  அவை எழும்பிவரும் பயங்கரத்தைக் காணச் சகிக்காமல் அவள் பின்னடைந்தாள்.

“அடி அசடே என்ன பயம்?  இத்தனை பேர் குளிக்கல்லே?”

ஆம் எத்தனைபேர்.   பல நாளின் விரகத்தை ஒரே நாளில் தணித்துக் கொள்வதுபோல் அலைகள் குளிப்பவரைத் தூக்கி தரையில் வீசியெறிந்து, ஆடைகளை அலங்கோலமாக்கி அணைத்தன.  அவளைத் தவிர அத்தனைபேரும் கிரஹண ஸ்னானத்தை அனுபவித்த வண்ணமாய்த்தானிருந்தனர்.  குக் குக்குக்கூ கெக்கெக் கெக்கே எனும் அவர்களின் சிரிப்புதான் அவர்களின் குலைந்த மானத்தை மறைக்க முயன்றது.  “என்னை விட்டுடுங்கோ நான் கரையிலேயே வெறுமென தீர்த்தத்தை தெளித்துக் கொண்டு விடுகிறேன்.”

“பைத்தியம் நாட்டுப்புறம், இங்கே வந்து ரகளை பண்ணிமானத்தை வாங்கறது”.

“நான் மாட்…”  வார்த்தை முடியவில்லை.  அதற்குள் ஒரு அலை அவள்மேல் இடிந்து விழுந்து விட்டது.  வீல் என்று தொண்டையினின்று எழுந்த வீறல் அப்படியே அமுங்கிப் போயிற்று.  அலை வந்து விழுந்த வேகத்தில் அவள் கணவனின் பிடியினின்று அவளைப் பிடுங்கி தன் வழியே அவளை இழுத்துக் கொண்டு போயிற்று.  

அலை கடந்து கலங்கிய அடி வண்டல் வெள்ளத்தில் அவள்  கண்ணெதிரில் பல்லாயிரம் மணல்கள் பல்லாயிரம் உயிர் பெற்று நீந்தின.  ஒரு யுகத்தின் முடிவில் தவிக்கும் கையில் ஒரு பிடி தட்டியது.  தலையை முழுக்கிய அலை கழுத்தளவு வடிந்து சில்லென்று காற்று முகத்தில் மோதிற்று.  இதென்ன பிரயாணம் முடிந்து செத்தவர்களின் உலகத்திற்கு வந்துவிட்டோமா?  கண்ணைத் திறக்க முடிந்த பிறகுதான் தான் செத்துப் போய்விடவில்லை என்று அவளுக்குத் தெரிந்தது.  எந்த உலகத்தில் அவள் முழுகினாளோ அதே ஜனங்கள்தாம் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்தனர்.  அதே துணி கலைந்த மார்புகளும், ஆடை நெகிழ்ந்த இடைகளும், நாணமற்ற கொக்கரிப்பும் கூக்குரல்களும்.

ஆனால் அவள் கையை அவள் கணவன் பிடித்துக் கொண்டிருக்கவில்லை.  முன்பின் அறியாத எவனோ பிடித்துக் கொண்டிருந்தான்.  அவன் தலையில் குட்டையாய் வெட்டிய மயிர் சிலிர்த்து நின்றது.  புஜங்களும், மார்பும் அலையும் கடலில் குளிக்கும் பயிற்சியில் புடைத்துப் பூரித்திருந்தன.  அவன் பிடி உடும்புப் பிடியாயிருந்தது.

என்னை விடுடா பாபி கூவ வாயெடுத்தாள்.  அதற்குள் ஒரு அலை ஒரு வண்டி செங்கல் போல்  அவள் மேல் சரிந்தது.  அவள் பாட்டுக்கு அழுந்திக் கொண்டே போனாள்.  ஆனால் அவளைப் பிடித்த  கை மாத்திரம் பாதாளக் கொலுசு மாதிரி அவளை விடாது பிடித்துக் கொண்டிருந்தது.  இதென்ன மாயமா மந்திரமா? அந்தக்கை கடல் எவ்வளவு ஆழமாயினும் அவ்வளவு தூரம் நீளுமா? மீன் ஓட ஓட நீளும் தூண்டிற் கயிறுபோல் அத்தனை ஆழத்திற்கும் அந்தக் கை இடம் கொடுத்துக் கொண்டே போயிற்று.  அவளால் தப்பவே முடியவில்லை.  ஆனால் தப்பவேணும் எனும் எண்ணம் உண்டோ எனும் சங்கை அவளுள் அவளுக்கே  எழுந்தது.

சாவு, அவள் விரும்பவில்லை.  அவளுக்கு எதிலும் விருப்பமில்லை.   அவளுக்கு கலியாணமானதிலிருந்து எதைக் கண்டாலும் அவ்வளவு வெறுப்பேற்பட்டது. இத்தனைக்கும் அவள் கணவன் வெகு நல்லவர் என்று அவளுக்குத் தெரியும்.    ஊர்வாய்க்குப் பயந்து தன்னை இளையாளாய்க் கட்டிக் கொடுத்துவிட்ட தன் தந்தை தாயைத்தான் அதிகம் வெறுத்தாள்.    உலகில் பெண்ணாய்ப் பிறந்த ஒரு காரணத்தாலேயே  இத்தனைக்கும் அடிப்படையாயிருக்கும் தன்னையே அவள் வெறுக்கும் பயங்கரம்.  இப்பொழுது ஜலத்தடியில் மூச்சுத் திணறுகையில் பளிச்சென்று தெரிந்தது.அவள் மேல் விழுந்த அலை வடிந்து பின்வாங்க ஆரம்பித்து விட்டது.  அதுவும்தான் அவளைக் காட்டிக் கொடுக்கப் போகிறது என்று அவளுக்குத் தெரியும்.  தலைமயில் பிரிபிரியாய்த் தொங்க ஆடை உடலோடு ஒட்டிக் கொண்டு இறக்கையும் சிறகும் பிய்த்தெறிந்த கோழிக்குஞ்சுபோல் வெட்கத்திலும் வெறுப்பிலும் குன்றிப்போய் நின்றாள்.   அவன் கண்களில் குறும்பு கலந்த வியப்பும் ஒரு அடிப்படையான ஆண் குரூரமும் பொறுமையற்றுச்சுளித்த ஒரு சிறு கோபமும்தான் தெரிந்தன.   

கணவர் சுட்ட கத்திரிக்காய் போன்று வதங்கிய சிறு தொந்தி தெறிக்கப் பதறியோடி வந்தார். “என்னடீ எங்கே போயிட்டே?  உன்னை அலை வாரியடித்துக் கொண்டு போய்விட்டதோ  என்று பயந்து விட்டேன். அப்பாடி”.

“இது யார் உங்க பொண்ணா? இந்த அம்மா சாகவிருந்தாங்க,  நல்லவேளையாய் நான் பார்த்தேன்.  என்ன இந்த மாதிரி அஜாக்கிரதையாய் இருக்க”.

திடீரென்று அவளுக்குச் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.  அடிவயிற்றைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு இடிஇடியென்று சிரித்தாள்.  இருவரும் அவளை ஆச்சரியத்துடன் நோக்கினர்.  அழுகையும் வந்தது.  இதயமே வெடித்துக் கொட்டுவது போன்ற அழுகை.   காற்றின் வயப்பட்ட சருகு போல் கடலை உச்சந்தலையினின்று உள்ளங்கால்வரை உலுக்கும் அழுமை.

“நா-ஆ-ஆன்-சமுத்-திரஸ்நா-ஆ-ஆநம்-செய்தது-போ-ஓ-ஓ-தும்-என்னை-ஐ-ஐ-சீக்கிரம்-வீ-ஈ-ஈட்டுக்கு-அழை-ஐ-ஐச்சு-ண்டு-போய்-ய்-ய்-ய்ச்-சேருங்கோ-ஓ-ஓ-“

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)