தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மௌனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார்.  மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தான் இவருடைய படைப்புகள்.

குடும்பத்தேர்

மௌனி

பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு கிருஷ்ணய்யர் தன் வீட்டு ரேழி உள்ளே உட்கார்ந்து கொண்டு நான்கைந்து தினம் எழுதப்படாது நின்று போன தினசரிக் கணக்கை எழுதிக்கொண்டிருந்தார்.  ஐம்பத்திரண்டு வயது இருக்கக்கூடிய அவர் திடசரீரி.  அந்தஸ்தும் கௌரவமும் உடையவர்.  கிராமத்தாருக்கு பின்பற்றக்கூடிய லட்சிய புருஷராகக் கருதப்பட்டவர்.  அவருடைய தாயார் இறந்துபோய் ஒரு மாதம் ஆகிறது.

கிழவிக்கு எண்பது வருட உலக வாழ்க்கை மலர் படுக்கையாக இருக்கவில்லை.  எத்தனையோ சஞ்சலங்களை, தொல்லைகளை அவள் அநுபவிக்காமல் இல்லை. சந்தோஷமே தவிர,  அவள் அதில் வருத்தம் கொள்ளவில்லை.  அவள் நடத்திய குடும்ப வாழ்க்கை வீடு நிறைந்த ஒரு சுடரொளி போன்றது.

செலவுகளை ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்தி எழுதலானார்.  தச்சன் கூலி, தர்ப்பண தக்ஷிணை எல்லாம் எழுதியாகிவிட்டது. அப்படியும் மூன்றே காலணாக் குறைந்தது.  பழக்கமாக எழுதிப் பழக்கப்பட்ட கை அம்மா பற்று 0-3-3  என்று எழுதி கணக்கை சரிக்கட்டிவிட்டது. அதன் அர்த்தம் சிறிது சென்று திடீரென்று புலப்பட்டது. இரு சொட்டுக் கண்ணீர் கணக்கு புத்தகத்தின் மீது விழுந்தது.  அது அவர் வழக்கம் சிறிது தொகை கணக்கிற்கு அகப்படாவிட்டால் அம்மா பற்று என்று குறைந்த தொகையை எழுதி முடித்துவிடுவது அவர் வழக்கம்,

கணக்கு வழக்கை முடித்து விட்டு ஊஞ்சலடியில் உட்காருவார்.  திருப்பத் தாழ்வாரத்தில் சந்தனக் கல்லடியில் குருட்டு யோசனைகள் செய்து கொண்டு அவர் தாயார் படுத்திருப்பாள்.  மனைவி காப்பியை வைத்துவிட்டுப் போனவுடன் காப்பியை அருந்தி வெற்றிலை போட்டுக் கொண்டு “அம்மா இன்னிக்கி  உன் பற்று  அணா” என்று சொல்லுவார்.  உள்ளே இருந்து அவர் மனைவியின் சிரிப்புச் சப்தம் கேட்கும்.  தாயாருக்கு காது கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் இவர் சொல்வது அவளுக்குக் கேட்கும்.  “ஆமாம் எனக்குத்தான் காக்கை புத்தி.  வைத்தது மறந்து விடும் உனக்கு?  நான் இருக்கேன் என் தலையை உருட்ட, என் தலையிலே போட. அப்புறம் வயது ஆகியும் குடும்பப் பொறுப்பு…”அவள் சொல்லி முடிப்பாள்.  இவர் பதில் சொல்வார்.  வலுக்கும்.  சிறிது சென்றபின் பழையபடி தாயாரும் பிள்ளையும் பேசிக் கொள்வதைப் பார்க்கும் போது  – இருவருடைய குதூகல குடும்பப் பேச்சுகள்.  



ஆம் அம்மா பற்று மூன்றே காலணாத்தான்.  எதிரிலே நோட்டு விரிக்கப்பட்டு வெறிக்கப் பார்க்கிறது.  அவர் உள் மனது உருகிக் கொண்டிருந்தது.  குடும்ப விவகாரங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிட்டுத் தன் தாயார் வகித்த ஸ்தானத்தை ஏற்றுக் கொள்ள சமயம் வரவில்லையே என்று எண்ணினார்.

ஆகாயத்தைப் பார்ப்பதுபோல உட்கார்ந்திருந்தார். சிம்னி இல்லாது தொங்கிக் கொண்டிருந்தது கூடத்தில் பவர்லைட். “மூன்று நாளாச்சு கிளாஸ் உடைந்து சொன்னால் மறந்து விடுகிறீர்களே?” மனைவி சொன்னாள்.

கிருஷ்ணய்யருக்கு தன் தாயார் சொல்லியிருந்தால் ? தான் மறந்திருந்தால்?  மனது என்னவெல்லாமோ யோசித்தது.  கோவிலில் ஏகாதசி இரவு பஜன செய்ய எண்ணினார்கள்.  இவர் வீட்டு பவர்லைட் இரவல் போயிற்று.  அது அவர் தாயாருக்குத் தெரியாது.   அவளிடம் சொல்லவேண்டிய ஒரு விஷயம் வெளிப்பட்டது.  “அம்மா கோவிலுக்கு பவர்லைட்” என்று ஆரம்பித்தவர் சொல்லி முடிக்கவில்லை.   “எதையும் எரவல் கொடுத்துவிடு, ஏன் வாங்கணும்?” என்றாள்.

அவள் சொன்னதில் என்ன பிசகு இருக்கிறது?  அவருக்குத் தன் குடும்பத்தில் தாயார் வகிக்கும் பொறுப்புத் தெரியும்.  அவள் சொல்வதில் என்ன பிசகு என்பதைத்தான் உணர்ந்தார். மறுநாள் விளக்கு வந்தபோது கிளாஸ் உடைந்து இருந்தது.  அந்த விஷயமும் சொன்னார்.  “போகிறது அல்ப விஷயம், ஸ்வாமி காரியம், ஒன்று வாங்கி வந்துவிடு சாயங்காலம்” என்றாள்.  அந்தச் சிம்னிதான் இதுவரையிலும இருந்து வந்தது.  அந்த சிம்னியில்லா விளக்கும் தன் தாயார் நினைவை ஊட்டிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார்.

நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார் கிருஷ்ணய்யர்.  மாட்டுக்காரப் பையன் மாடுகளை வீட்டு வாயில் வழியாக உள்ளே அடித்து விட்டு “அம்மா மாட்டைக் கட்டுங்கோ” என்று கூவிவிட்டுப் போய்விட்டான்.

மேல்காற்று வாயிலில் புழுதியைத் தூற்றிக் கொண்டிருந்தது.  உள்ளே வைக்கப்பட்டிருந்த விரைக் கொட்டை அந்துகள் அவர் முகத்தில் மொய்த்தன. மேல்காற்று நாளில் தன் தாயார் சொல்வது ஞாபகம் வந்தது,  “உடம்பு வலி எடுக்கும் ரேழியிலேயே படுத்துக் கொள்”.  அவர் எங்கே படுத்துக் கொண்டாலும் அதைப்பற்றி அவளுக்குத் தெரியாது.  அவள் சொல்லித்தான் விடுவாள்.  இரவிலே அநேகமாக அவள் தூங்கமாட்டாள்.   மார்கழி மாதக் குளிரானாலும் அவளை வருத்தாது.  முணுமுணுத்துக்கொண்டு  கொல்லை மேட்டிலிருந்து வாயில் வரையிலும் சாணம் தெளித்து வீட்டையே  புனிதமாக்குவது போன்று வேலை செய்வாள்.



அவரால் தாயாரை இழந்ததின் வருத்தம் தாங்கமுடியவில்லை.  இழக்கப்பட்ட தாயார் தனக்குக் கவலைக்கு இடமின்றி குடும்பத்தை நடத்த எவ்வெவ்வகையில் உதவியாக இருந்தாள் என்பதை உணர்ந்தபோது அவள் இடத்திற்கு யார் இப்போது இருக்கிறாள் என்பதை அவரால் கண்டு கொள்ளமுடியவில்லை.   பாதி இருளில் ஜபம் செய்து கொண்டிருப்பது, குழந்தைகள் உபத்திரவம் செய்கையில் கூப்பிட்டு கதை சொல்வது,  அடிக்கடி குழந்தைகள் இளைத்து விட்டார்கள் என்று மாட்டுப் பெண்ணை கோபிப்பது  நினைவிற்கு வந்தது.  வீடே தன் தாயாரால் நிரப்பப்பட்டிருந்தது போன்ற தோற்றத்தைத் தான் உணர்ந்தார்.  அவள் இறந்ததை எண்ணும்போது தன் பலவீனத்தைக் கண்டார்.

கொட்டிலில் கட்டப்படாத மாடுகளில் ஒன்று கடந்த அரைமணி நேரமாகத் தவிட்டைத் தின்று கொண்டிருந்தது.  “மாடு வந்திருக்கு கட்டு” என்று முன் தன் தாயார் சொல்வதை அனாவசியமாக ஏன் சொல்லுகிறாள் கட்ட மாட்டார்களா என்று மிகுந்த அலக்ஷியமாக எண்ணியவர்  கண்கூடாக அவள் வார்த்தைகளின் மதிப்பைப் பார்த்தார்.

அவளைக் கர்நாடகம் என்று அடிக்கடி சொல்வது உண்டு.  ஆனால் அப்படியல்ல.  நாகரீகத்தையும் நாகரீகத்தில் ஜனங்கள் முன்னேற்றத்தையும் அவள் கண்டு கொள்ளாமல் இல்லை.  கண்டு கொண்ட அவைகளைப் பயன்படுத்தும் வகையில்தான் வித்தியாசம்.  வெற்று வெளியிலும் தாழ்ந்த இடத்திலும் பாய்வது போல்வன்றித் தணிவுபெற்று அழகுபட அமைதியுடன்தான் நாகரீகம் அவளிடம் இசைவு கொள்ளும். திடீரென்று  தோன்றும் பச்சை எண்ணங்களையும் பழக்கவழக்கங்களையும் பதனிடாமல் ஏற்று வழங்குவது முடியுமோ குடும்பங்களினால்.

சாயங்காலம் ஆகிவிட்டது.  கொல்லைக் கதவுகளை பூட்டிக் கொண்டு வாயிற்பக்கம் வந்தார்.  அப்போது அவருடைய தூர பந்து ஒருவர் வந்தார்.  அவரோடு பேசும்போதே கிருஷ்ணய்யருக்கு துக்கம் தொண்டையை அடைத்து விட்டது.  வந்தவருக்கு இது வியப்பாகத்தான் இருந்தது.  “என்னடா கிருஷ்ணா பச்சைக் குழந்தையைப்போல அம்மாவை நினைத்துக் கொண்டு உன்னுடைய திட சித்தம் எல்லாம் எங்கே?” என்றார் அவர்.



ஆனால் கிருஷ்ணய்யருக்கன்றோ தன்னுடைய அவ்வளவு வெளியுலகப் பெருமைகளுக்கும் காரணம் மறைமுகமாக வீட்டினுள் இருந்தது யார் என்று தெரியும்.  அவர் துக்கமெல்லாம் சிறு ஒரு குழந்தைபோன்று தன் தாயாரை இழந்ததற்கன்று.  குடும்பப் பொறுப்பைக் காப்பாற்றிப் பின்வருபவர்களிடம் ஒப்படைக்க தன்னிடம் கொடுக்கப்பட்ட ஓர் உன்னத லக்ஷியம். குடும்பம் என்பது சமூகத்தின் எவ்வளவு அடிப்படையான அஸ்திவாரம் என்பது அவருக்குத் தெரியும்.  உலகம் சீர்கெட்டுச் சிதைவுபடுவதின் காரணம் குடும்ப வாழ்க்கையில் சமாதானமற்று இருப்பதுதான் என்பதை ஸ்பஷ்டமாக அறிந்தார்.  

மாலைநேரம் சிறிது சிறிதாக இருட்டிவிட்டது.  வாய்க்கால் சென்று சந்தி ஜபம் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.  திண்ணையில் சாய்ந்து படுத்திருந்தாலும் வாய் ஏதோ மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தாலும், மனது என்னவெல்லாமோ புரியாத வகையில் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.   மனைவி விளக்கை எடுத்துச் சென்றதும் அவருக்குத் தெரியாது.  குழந்தை “அப்பா நாழிகையாச்சு சாப்பிட வா” என்று கூப்பிட்டதால் திடுக்கிட்டு எழுந்தார்.   

வீதியில் சென்று அங்கிருந்தே பெருமாளைத் தரிசித்துவிட்டு கதவைத் தாளிட்டுஉள்ளே சென்றார்.  மனத்தில் ஒரு பெரிய பளுத்தொல்லை நீங்கினதான ஒரு உணர்ச்சி.  பலங்கொண்டதான ஒரு எண்ணம்.  எதிர்கால வாழ்வு மிகவும் லேசாகத் தோன்றியது.  ஒரு அளவற்ற ஆனந்தம்….. புரியாத வகையில் அவர் மனது குடும்பம்  ஒரு விசித்திர யந்திரம் – பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை.  அதற்குப் பிரதி மறுபாகம்  தானாகவே உண்டாகிவிடும்   என்று என்னவெல்லாமோ எண்ணியது.

மணிக்கொடி 1936

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

 

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *