நவயுக கவிஞராக அறியப்படும் அய்யப்ப மாதவன் கதைகள் வாழ்வில் மிகச் சாதாரண மனிதர்களின் பாசாங்கற்ற முகத்தை வெளிப்படுத்துகிறது.
தொந்திக்கணபதியின் வாகனம் நகரும் செஸ்போர்டு
அய்யப்ப மாதவன்
இரு சிறிய சதுர அறைகளுள்ள வீட்டினுள் இரு நிலைப்படிகள். நுழைவாயில் நிலைப்படியின் நீள அகலங்களில் சிமெண்ட் பூச்சுக்கள் சிதைந்து நிலையோடு ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. உள் நுழைந்ததும் இரண்டாம் அறை துவங்குமிடத்திலும், நிலைப்படியின் மரக்கட்டைகளிலோ சிமெண்ட் பூச்சுகள் பலவாறாக சிதைந்து, ஒரு மூஞ்சுறு பதுங்கிக் கொள்ளுமளவுக்கு துளைகள் உருவாகியிருந்தன. வீட்டு உரிமையாளரிடம் சொல்லி அதை அடைத்தால்தான் நிம்மதி என்று அவள் சொல்லியதற்கேற்ப, வீட்டு உரிமையாளரிடம் அதை சரிசெய்ய ஒரு கொத்தாளை வரவழைத்து தாருங்கள் எனவும் முறையிட்டான்.
வீட்டிற்குள் குடியேறிய அதைப் பிடிக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லையென்றும், ஆண்பிள்ளையாய் ஒரு இரும்புக் கம்பியால் அதை அடித்து கொல்லத் தெரியவில்லையென்றும் அவள் அவமானப்படுத்தத் துவங்கியிருந்தாள். பல நாட்கள் ஆகியும் எந்தக் கொத்தாளும் வந்து சரி செய்யவில்லை.
அந்தச் சின்ன மூஞ்சுறுவை ஆத்திரத்துடன் மனதுக்குள் விரட்ட ஆரம்பித்தான். கடும் ரோஷம் வந்தவனாய் பக்கத்து வீடுகளில் எலிப்பொறி கேட்டுத் திரிந்தான். யாருமே இதற்கு எலிப்பொறிகளை பயன்படுத்துவதில்லையென்றும், முடிந்தவரை விரட்டுவதாகவும் பதிலளித்தார்கள். சில பேர் எலி மருந்து வாங்கி வைத்தால் எங்காவது செத்து விழுந்துவிடும் என்று சொன்னதையும் அவளிடம் சொன்னான்.
கடவுளின் வாகனத்தை கொல்லக்கூடாது, உயிருடன் பிடித்து எங்காவது விட்டுவிடுதுதான் நல்லது என்று பக்தையாய் பயத்துடன் சொன்னாள். ஒரு வழியாய் மூஞ்சுறுவின் புழுக்கைகளின் வீச்சத்திலிருந்து விடுபட சம்மதித்து விஷம் வைத்துக் கொல்வதென்றும் பெரும்பாலும் அது வெளியில் போய்த்தான் சாகும் என்பதால் தேடவேண்டியதில்லை என்றும் சொன்னான்.
சிறு சதுரமாக கறுப்பும் அரக்கும் சின்ன சின்ன பச்சை வண்ணங்களுடன் கேக் போல இருந்தது. அதை பிட்டு அல்லது உணவுடன் கலந்து, அது உலவும் இடங்களில் வைக்கலாமென்று கடைக்காரன் சொன்னதை சொன்னான். எப்படியாவது பிடித்துத் தொலையுங்கள் என்று அவள் சினந்து கொண்டாள்.
எலி கேக்கை ஒரு பேப்பரில் சுற்றி உடைத்து, அது திரியும் இடங்களில் வைத்தான். நாளையிலிருந்து இது மாதிரி ஜந்துக்களை கொல்லத் தெரியாத கோழை என்று அவள் கேவலப்படுத்தமாட்டாள் என்று கருதினான். அது செத்துப் போனதற்கு அப்புறம் அவன்தான் காலையில் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் சேர்க்க வேண்டுமென அறிவுறுத்திக் கொண்டிருந்தாள். மூஞ்சுறு உள்ளே எதையோ உருட்டும் சத்தங்களை கேட்டபடி தூங்கிப் போனான்.
காலையில் எழுந்ததும் வீடெங்கும் நாறுவதாகவும் பல இடங்களில் புழுக்கைகள் நிரம்பிக் கிடப்பதாகவும், ஆனால் மூஞ்சுறுவின் உடல் செத்துக் கிடப்பதாகத் தெரியவில்லையெனவும் கூறினாள். இனி வீட்டை முழுக்க டெட்டால் போட்டு கழுவும் வேலையும் அவளுக்கு கூடுதலாயிற்று. சாயங்காலம் கட்டாயமாக அவன் காசில் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துவிடுமாறு கூறினாள். மூஞ்சுறு தலைக்குள் சுற்றித் திரிய இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பிப் போயினர்.
இரவு வரத் தொடங்கியபோது ஞாபகத்தில் வர ஹார்ட்வேர் கடையில் எலிப்பொறி கேட்டான். இல்லையென்றவன், கோந்து அட்டை ஒன்றை விவரித்தான். ஒரு அட்டையில் குறைந்தது பத்து எலியாவது பிடிக்க முடியுமென்று சொன்னான். போனில் அவளிடம் விவரித்து அந்த அட்டையை வாங்கிக் கொண்டான்.
அட்டையை மூலையில் விரித்து வைத்தான். இருவரும் மௌனமாக சென்று மறைந்து கொண்டு அதன் வருகைக்காக காத்திருந்தனர். மெல்ல ஓடி வந்த மூஞ்சுறு கோந்து அட்டை மீது நகர்ந்த போது திடுக்கிட்டு அதிர்ந்து திமிறி கோந்தில்பட்ட கால்களை சாமர்த்தியமாய் விலக்கிக் கொண்டு ஓடியே விட்டது. அவர்களால் அது தப்பித்துப் போனதை நம்பவே முடியவில்லை. அவளோ அது பயங்கர புத்திசாலி என புகழ ஆரம்பித்து விட்டாள்.
மறுபடி ஒரு முறை முயற்சிக்கும் விதத்தில் வீட்டிற்கு வெளியில் வாயில் நிலைப்படியினை ஒட்டிய சுவரோரத்தில் வைத்தான். சற்று நேரத்தில் மூஞ்சுறுவின் குரல் பரிதாபமாய் ஒலித்தது. இன்னொரு முறை அந்த அட்டையை பயன்படுத்தமுடியாது என்று சொன்னாள்.தென்னமாறை எடுத்து அதன் தலை மீது அழுத்தியபடி அட்டையை கையில் எடுத்துக் கொண்டு ஓடினான். தென்னமாறின் நுனிகள் பிசுபிசுத்து அட்டையோடு ஒட்டிக் கொண்டன.
குப்பைத் தொட்டியில் தென்னமாறையும் சேர்ந்து போட்டுவிட்டு மகிழ்ச்சி நிரம்பியவனாக வீட்டிற்குள் வந்தான். அந்த கோந்து அட்டை பற்றி ஒரு சிலர் கேட்டதாக அவளிடம் சொல்லி சந்தோஷப்பட்டான்.
அவளோ வீட்டில் வேறு மூஞ்சுறுகள் இருக்குமோ என்று பயமிக்க குரலில் கேட்டாள். ஆறுதல் கூறிவிட்டு சமையற்கட்டின் உடைந்த நிலைப்படியின் துளைகளை நோட்டமிட்டான். அதற்குள் சத்தமின்றி இன்னொரு மூஞ்சுறுவின் வாலொன்று அசைந்து கொண்டிருந்தது.
@பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.