தொடர் 49: காளிங்கராயன் கொடை – பெ. தூரன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்வாழ்க்கையின் ஓயாத சிக்கல்களையும், முடிவற்ற போராட்டங்களையும், அவற்றை எதிர்கொள்ளும் முறையினால் மனிதன் பெறும் வளம், வலிமை, பெருமை, சிறுமை ஆகியவற்றையும் கொங்குநாட்டு உழவர்களின் தேன் மணக்கும் மொழியில் படைத்துக் காட்டுகிறார் தூரன்,

காளிங்கராயன் கொடை

பெ. தூரன்

 “வாங்க தம்பீ, பட்டணத்துக்குப் போனதிலிருந்து கண்ணிலேகூடக் காண முடியரதில்லே, வாங்க, இப்படிப் பாயிலே உட்காருங்கோ” பெரியவர் அன்போடு வரவேற்றார்.  அவருடைய மருமகள் செம்பிலே தண்ணீரும், ஒரு தட்டத்திலே வெற்றிலைப் பாக்கும் கொண்டு வைத்துவிட்டு  உள்வீட்டுக் கதவருகிலே போய்ச் சற்று மறைவாக நின்று “வீட்டிலே எல்லோரும் சுகமா இருக்காங்களா?” என்று அடங்கிய குரலில் கேட்டாள். 

“நம்ம சின்னப்பையன் முத்து வீட்டுக்காரி உங்க வீட்டைப்பற்றி நினைக்காத நாளே கிடையாது தம்பீ.  நீங்க இந்த ஊரிலே இருந்தபோது அவர்கள்  ரண்டு பேரும் அப்படி உயிருக்குயிரா இருந்தாங்கோ” என்று பெரியவர் வியாக்கியானமாகப் பேசினார்.

“தனியாத்தானுங்க வந்தேன்.  அவளையும் கூட்டி வர வேணும்னா எங்கே முடியுது” என்றேன்.  செம்பிலிருந்த தண்ணீரைக் கொஞ்சம் பருகிவிட்டு,  பழக்கமில்லாவிட்டாலும்  வெற்றிலையைக் கூட தொடாமல் போய்விட்டார்கள் என்ன வருத்தமோ என்பதற்கு இடம் வைக்காமல்  வெற்றிலையை போட்டுக் கொண்டேன்.

“பட்டணத்திலே மழையெல்லாம் எப்படி?” மருமகள் கேட்டாள்.

“அவுங்களுக்கு என்ன கவலை? நம்மைப் போலே நிலத்தை நம்பியா அவுங்க பிழைக்கறாங்க” பெரியவர் இடைமறித்தார். 

“இல்லீங்க, மழை இல்லாது போனால் குடிக்கக் கூடத் தண்ணீர் கிடைக்காது” நான் சொன்னேன்.

“அது வாஸ்தவந்தான் தம்பி.  மழை இல்லாமல் போனால் எல்லோருக்கும் கஷ்டந்தான்.  இருந்தாலும் எங்க கஷ்டம் உங்களுக்கு வராது.  நாங்க மழையை நம்பித்தான் பிழைக்க வேணும்”. 

அந்த சமயத்திலே ஒரு தள்ளாத கிழவர் கைத்தடியை ஊன்றிக் கொண்டு தடுமாறித் தடுமாறி அங்கே வந்தார்.  பார்த்த உடனேயே அவர் குறைந்தது இரண்டு நாட்களாவது பட்டினியாக இருந்திருக்க வேண்டும் என்று உடனே கண்டு கொள்வார்கள்.

முன்பின் தெரியாத அவரை வழக்கப்படி அன்போடு வரவேற்றுப் பாயில் உட்காரும்படி சொன்னார். “வெற்றிலை போடுங்கோ, எங்கேயோ ரொம்பத் தூரம் போய் வந்திருக்கிறாப்பிலே தெரியுது” என்று அவரை இன்னாரென்று தெரிந்து கொள்ளுவதற்காகக் குறிப்பாகக் கேட்டார்.

“ஆமாங்கோ, திருச்செங்கோட்டுக்குப் போய் மலையேறி அர்த்தனாரீசுவரரைத் தெரிசிக்க வேணும்னு ரொம்ப நாளாத் தவணை.  அதுக்கு இப்பத்தான் வேலைவந்து கூடிச்சு” கிழவர் விளக்கினார்,

 போக ஒரு நாள், வர ஒரு நாள், சுவாமி தரிசனத்துக்கு ஒரு நாள் அது கஷ்டமில்லையென்று சொன்ன கிழவர்,  பெரியவர் பயண தூரம் பற்றிய கேட்ட கேள்விக்கும் பதில் சொன்னார். தன்னால் இருபத்தஞ்சு மைலை ஒரே மூச்சில் நடக்கமுடியுமென்றாலும் இன்றைக்கு முடியாத நிலையையும் கூறினார்.

“அதுக்கென்னங்க? இருந்து சாப்பிட்டு விட்டு இளைப்பாறி நாளைக்குப் போனப் போகுது” என்றார் பெரியவர்.

“நீங்கதான் ஊர் பண்ணாடின்னு கேள்விப்பட்டு ராத்திரிக்கு இங்கே தங்கியிருந்து போகலாம்னு வந்ததேன்.  இருட்டிலே கண் சரியாத் தெரியாதுங்கோ” என்றார் கிழவர்.

“இது உங்கவீடு மாதிரிதானுங்கோ எழுந்திருங்கோ சாப்பிடலாம்” என்று அவரிடம் கூறிவிட்டு என்னையும் அழைத்தார்.  நான் எழுந்தேன்.  ஆனால் கிழவர் பாயை விட்டு எழுந்திருக்கவில்லை.  அவர் இன்னைக்கு சாப்பிடறதில்லை என்று கூறினார்.

பண்ணாடி அவரை விடவில்லை கட்டாயப் படுத்தினார்.  “விரதம் ஒண்ணும் இல்லியே?” என்று கேட்டார்.  “கோயிலுக்கு போனதிலே விரதம் இல்லீங்கோ ஆனால் வேற ஒரு விரதம் இருக்கு.  நீங்க சாப்பிட்டு வந்தபிறகு சொல்லறேன்” என்றார்.  “விருந்தாளியை விட்டுப்போட்டு சாப்பிடற வழக்கம் எங்க வம்சத்திலேயே இல்லீங்கோ” என்றார் பெரியவர்.  பண்ணாடி ஒரே தீர்மானமாக உட்கார்ந்த பிறகும் தாம் சாப்பிட மறுப்பதற்கு விளக்கம் சொல்லவேண்டியிருந்தது.  “கொடுத்த தருமத்தை மறுபடியும் கையிலே தொடறது எங்க வம்சத்திலேயும் இல்லீங்கோ.  ஏழையாப் போய்ட்டாலும் காளிங்கராயன் வம்சமுங்கோ நாங்கோ” என்றார் கிழவர்.

“வீட்டுக்கு வந்தவங்கள் பட்டினியா இருக்கறபோது நானும் சாப்பிடப் போறதில்லை. நீங்க மாத்திரம் போய் சாப்பிட்டு வாங்கோ” என்றார் பெரியவர். சாப்பிட்டுக் கொண்டே “அவர் ஏன் சாப்பிட மாட்டேனென்று பிடிவாதமாக இருக்கிறார்?” என்று அவருடைய மருமகளிடம் கேட்டேன்.  “காளிங்கராயன் வம்சத்தார் நம்ம பக்கத்திலே தண்ணீர் கூடத் தொட மாட்டார்கள்” என்றாள் அவள்.

“ஏன்? அவர்களும் நம்மைப்போல வேளாளக் கவுண்டர்கள்தானே? நம்மை விட உயர்ந்தவர்களா?”

“அப்படி ஒண்ணும் இல்லே.  ஆனால் காளிங்கராயக் கவுண்டர்தான் அந்தக் காலத்திலே நூறு நூற்றம்பது வருசத்துக்கு முன்னாலே  நம்ம ஊருக்கு வாய்க்கால் வெட்டி வச்சார்.  அந்த வாய்க்காலிலிருந்து தண்ணீர் பாய்ஞ்சுதான் நம்ப ஊர்லே நெல் விளையுது”.

“அது எனக்கும் தெரியும்.  பவானி ஆறு காவிரியில் சங்கமமாகிற இடத்திலிருந்து வாய்க்கால் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று நான் மேலும் விளக்கம் கூறினேன்.

“ஆமாம்.  இந்த வாய்க்காலை வெட்டி வச்சதும் அந்த வம்சத்தார் எல்லோரும் மேற்கே குடி போய்விட்டார்களாம்.  தருமத்திற்காக அவர்கள் வெட்டிய வாய்க்காலிலிருந்து தண்ணீர் பாய்ஞ்சு விளைகிற அரிசியை அவங்க சாப்பிட்டால் தருமம் கெட்டுப் போகுமாம்.  அந்த வம்சத்திலே இப்போ ஏழையா இருக்கிறவங்க கூட நம்ம பக்கத்திலே தண்ணீர்கூடக் குடிக்க மாட்டாங்க”.

நான் ஆச்சரியத்தில் முழுகிவிட்டேன்.  அவர் தூங்குவதற்கு முன் நன்றாகப் பார்க்க வேண்டுமென்று வந்தேன்.

“ஏணுங்கோ இந்தப் பக்கம் வர்றபோது கட்டு சோறாவது கொண்டு வரலாமே!” பண்ணாடி கேட்டுக் கொண்டிருந்தார்.  அதே கேள்வியை நானும் எண்ணிக் கொண்டிருந்தேன்.

“கொண்டுகிட்டுத்தான் வந்தனுங்கோ.  காளிங்கராயன் வாய்க்காக் கரையிலே  ரண்டு மாடு மேய்க்கிற பசங்கள் கஞ்சிக்குச் செத்து உட்கார்ந்திருந்தாங்கோ”.

“சரி, சரி, சோத்து மூட்டையை அவுங்களுக்கு கொடுத்திட்டீங்களா?”

“ஆமாங்கோ,  வாய்க்கால் வெட்டி வச்சவன் வச்சான். ரண்டு வேளைக்குச் சோறுகூடப் போடப்படாதுங்களா? ரண்டு நாளைக்குப் பட்டினியாக் கிடந்தா நான் என்ன செத்தா போவனுங்க?”

மறுநாள் காலையிலே அந்தக் கிழவரின் முகத்தைப் பகல் வெளிச்சத்திலே பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை.  ஆனால் கிழக்கு வெளுக்கு முன்னமேயே கரிக்குருவி கூப்பிடுகிறபோதே எழுந்து அந்தக் கிழவர் போய்விட்டார்.

@பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.