கேள்விக்குள்ளாக்குதலும் மாற்றுச் சிந்தனையும்
கலாச்சார தொழிற்சாலை தொடர் – 5
மக்கள் கலைஞன் சார்லி சாப்ளின் நடிப்பில் 1921 இல் வெளியான ’தி கிட்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. கண்ணாடி ரிப்பேர் செய்யும் வயதான ஒருவரின் பராமரிப்பில் ஒரு அனாதைச் சிறுவன் வளர்வான். ஒரு தெருவிற்கு செல்லும் அந்த சிறுவன் கற்களை எடுத்து அங்குள்ள வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து விட்டு ஓடிவிடுவான். சிறிது நேரம் கழித்து அந்த தெருவிற்கு செல்லும் முதியவரிடம் பேரம் பேசி உடைந்த கண்ணாடிகளை சரி செய்து கொள்ளும் வீட்டு உரிமையாளர்கள் அதற்கான பணத்தைக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள். கண்ணாடியை உடைப்பதும், பிறகு உடைத்தவர்களே சரி செய்து கொடுத்து பணம் பெறுதலும் ஒருவகை உத்தி என்றால் கண்ணாடியின் பின்னே பூசப்பட்டுள்ள முலாமைச் சுரண்டி அதை பயனற்றதாக ஆக்குவது வேறொரு வகையிலான உத்தியாகும். முலாம் சுரண்டப்படுவதைப் போலவே, நம்மிடம் இருக்கும் சமூகம் சார்ந்த அக்கறையையும், நம்பிக்கைகளையும் சுரண்டி நம்மை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மனிதர்கள் ஒன்றாக கூடி பரஸ்பரம் பேசி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நேரங்களையெல்லாம் தற்போது தனிமை திருடிக்கொண்டு விட்டது. சந்திப்புகள், குடும்ப நிகழ்ச்சிகள், விழாக்கள் எல்லாமே Business Like ஆக மாறிவிட்டன. வேலையும், வேலைத் தளங்களும் Stress நிறைந்ததாக இருக்கிறது.
அந்த காலத்திலெல்லாம் அப்படி இல்லீங்க, இப்போதாங்க சமூகம் ரொம்ப கெட்டுப் போச்சு’ என இயல்பாக பலர் குறைப்பட்டுக் கொள்வதை கவனித்திருப்போம். ஆனால் நுட்பமாக கவனித்தால் புறச்சூழல்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் நம்மிடமிருந்து தான் துவங்கியிருக்கிறது. வீடுகள் நவீனமாகியிருக்கின்றன. ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் மொபைல், ஸ்மார்ட் கிச்சன் என அனைத்துமே ஸ்மார்ட் ஆக மாறியிருக்கின்றன. ஆனாலும் பழமையைக் கொண்டாடும் மனநிலை மாறாமல் நீடிக்கிறது. அறையின் வரவேற்பறையில் மாட்டப்பட்டுள்ள அதிநவீன ஸ்மார்ட் டிவியில் ‘ராசிபலன்’ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதும், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை முடித்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லுகிறவர்கள், ஜாதகத்தைக் கொடுத்து துணை தேடுவது மிக இயல்பாக இன்னமும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஊதியம், வாழ்நிலை உள்ளிட்ட அம்சங்களில் முன்னேறினாலும் கூட பிற்போக்கு கருத்தியலை பின்பற்றுகிற நிலைமைகளில் மாற்றமேதும் ஏற்பட்டுவிடவில்லை.
மாசு நிறைந்த தெருக்களில் பயணம் செய்து வீட்டிற்கு வந்தவுடன் குழாயைத் திறந்து முகத்தை சுத்தம் செய்து விடுகிறோம். அதே போல நமது மூளைகளில் படியும் மாசையும் கழுவி அகற்ற வேண்டும் தானே. அதை அப்படி செய்வது என்பது முக்கியமான கேள்வி. மாற்றங்களை உருவாக்க வேண்டுமெனில் மாற்றுச் சிந்தனைகள் அவசியம். அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். குறைந்த பட்சம் நமக்குள்ளேயாவது “கேள்விக்குள்ளாக்குதல்” என்பது நிகழ வேண்டும். கேள்விக்குள்ளாக்குதலும் மாற்றுச் சிந்தனையும் என இரண்டும் இணைந்து நிகழ்வது தான் கருத்தியல் போராட்டமாகும். மேடைகளில் நிகழ்த்தப்படும் உரைகளின் மூலமோ, அல்லது கலை வடிவங்களின் மூலமோ மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒரு வகையிலான கருத்தியல் போராட்டமெனில், வீடு, வாழ்க்கை, நடவடிக்கைகள், நம்பிக்கைகள் என அனைத்து தளங்களிலும் இத்தகைய கருத்தியல் தலையீடுகளை மேற்கொள்வதும் முக்கியமானதாகும்.
பன்னிரண்டு மணி நேர ரயில் பயணத்தின் போது வாசித்த ஜான் ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ எனும் புத்தகம் காந்தியை மகாத்மாவாக மாற்றுவதற்கான வித்தாக அமைந்தது. வாசிப்பினூடாக தனக்குள் இருந்த மற்றொரு மனிதனை கண்டறிந்ததோடு, மக்களுக்காக போராடுவது எனும் புதியதொரு பாதையைத் தேர்ந்தெடுத்தார். புத்தக வாசிப்பு சமூகத்தை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை நமக்கு தருவதோடு, நாம் நிகழ்த்த வேண்டிய கருத்தியல் போராட்டத்திற்கான பாதையையும் நமக்கு தகவமைத்துக் கொடுக்கிறது. மெய்நிகர் தளங்களில் ஏராளமான நேரத்தை செலவிடும் நாம் புத்தக வாசிப்பில் பெரும்பாலும் நம்மை ஈடுபடுத்துக் கொள்வதில்லை. நேரமில்லை, துக்கம் வருகிறது, கடினமாக இருக்கிறது என காரணங்களை அடுக்கி புத்தக வாசிப்பு எனும் போராட்டத்தில் வெற்றி பெற இயலாமல் தேங்கி விடுகிறோம். அந்த போராட்டத்தில் நாம் அடையும் முன்னேற்றமும் நமது எதிர்கால இலக்கு குறித்த பாதையும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாகும்.
காந்தியை பற்றி பேசும் போது மற்றொரு விஷயத்தையும் இங்கே நினைவில் கொள்வது முக்கியமானது. ஐந்து அடி உயரமும் மெலிந்த தேகமும் கொண்ட ஒரு மனிதன் மக்களை புரிந்து கொண்டதால், அவர்களுக்காக போராடியதால், ஏழ்மையும் வறுமையும் சூழ்ந்த மக்களுக்கான தனது ஆடையை துறந்து எளிமையை போர்த்திக் கொண்டதால் இந்த தேசம் அவரை தந்தையாக கொண்டாடியது. ஆனால் அதே மண்ணில் நாளொன்றுக்கு நான்கைந்து முறை விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு வலம் வருகிற ஒருவர் தான் பிரதமர் என்பது எத்தகைய நகைமுரண். மக்களுக்காக போராடுகிறவர்களிடையே தனக்கான தலைவர்களை தேடுவதற்கு பதிலாக ‘திடீர் இரட்சகர்’ (Messia) ஒருவரை கொண்டாடும் மனநிலை சமூகத்தில் உருவாகியிருப்பது தான் இத்தகைய அவலங்களுக்குக் காரணம்.
அடுத்து சில நாள்களில் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்றேன். அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய கவிஞர் நந்தலாலா சொன்ன கதையொன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ”ஒரு ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. வறுமை சூழ்ந்த கணவனும் மனைவியும் படிக்கட்டின் அருகில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கண் பார்வை இழந்த பெண்ணின் மடியில் இரண்டு பச்சிளம் குழந்தைகள் இருந்தன. அதில் ஒரு குழந்தை ஏற்கனவே இறந்து போயிருந்தது. இறந்த குழந்தையை அடக்கம் செய்ய வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த போது, கணவன் அப்பெண்ணிடம் ஒரு யோசனை சொன்னான். நாம் போகும் ரயில் வழித்தடத்தில் சில குகைப்பாதைகள் உள்ளன.
குகைக்குள் ரயில் போகும் போது இருள் சூழ்ந்து விடும். அப்போது வெளிச்சம் இருக்காது. அப்போது நான் உன் தோளை தட்டுகிறேன். நீ இறந்த குழந்தையைத் தூக்கி வெளியே வீசிவிடு என்று சொன்ன கணவனின் யோசனையை முதலில் மறுத்தாலும் சூழ்நிலையின் அழுத்தம் கருதி ஏற்றுக் கொண்டாள் கண் பார்வையற்ற மனைவி. ரயில் அடுத்த குகைக்குள் சென்ற போது, கணவன் மனைவியில் தோளை தட்ட, மனைவி குழந்தையை வெளியே வீசி விடுகிறாள். ரயில் இருள் சூழ்ந்த குகையைக் கடந்து வெளியே வந்த பிறகு மனைவியின் மடியில் இருந்த குழந்தையை பார்த்த கணவனுக்கு பேரதிர்ச்சி. இறந்து போன குழந்தைக்குப் பதிலாக உயிரோடு இருந்த குழந்தையை தவறுதலாக வீசியிருக்கிறாள் கண் பார்வை இழந்த மனைவி. இந்த கதையை கேட்டவர்கள் உறைந்து போயிருந்தார்கள். தவறுதலாக வீசப்பட்ட குழந்தைக்கான துயரம் அவர்கள் கண்களில் தெரிந்தது.
நுட்பமாக யோசித்துப் பார்த்தால், ரயிலில் தவறுதலாக தூக்கிவீசப்பட குழந்தையை போலவே பல தவறுதலான முடிவுகளை எடுப்பதும் அல்லது சரியான முடிவுகளை நிராகரிப்பதுமான நிலைமைகள் நம்மை சுற்றிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
”விசையுறு பந்தினை போல் – உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன், நித்தம்
நவமென சுடர்தரும் உயிர் கேட்டேன்”
என சிவசக்தியை நோக்கி வேண்டி நின்றான் மகாகவி பாரதி. அத்தகையதொரு சிந்தை தெளிவை நோக்கிய பாதையில் பயணிப்பது இன்றைய சூழலில் மிகவும் அவசியமாகிறது. ஜான் ஸ்விண்டன் எனும் அமெரிக்க எழுத்தாளர் மாமேதை மார்க்ஸை நோக்கி ஒரு கேள்வியை எழுப்புகிறார். ”வாழ்க்கையில் என்ன இருக்கிறது.”..? புன்முறுவல் பூத்த முகத்தோடு, ஆனால் உறுதியான வார்த்தைகளில் மார்க்ஸ் அளித்த பதில் ”வாழ்க்கையெனில் போராட்டமே”.. ஆம் போராட்டங்கள் தான் வாழ்க்கையின் நியதி. அதை புரிந்து கொள்ளத்தான் மனித குலம் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது. மகத்துவம் படைத்த எளிய மக்களின் போராட்டங்கள் அந்த பேருண்மையை நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. அவற்றை அடுத்துப் பார்ப்போம்.
கட்டுரையாளர்:

கட்டுரையாளர், மார்க்சிய கருத்துரையாளர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Thoughtful message sir
.