பூமணி
”சர்க்கஸ் யானை முக்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பது மாதிரிதான் சிறுகதை எழுதுவது.சிறிய பரப்புக்குள் அனைத்தையும் சொல்லியாக வேண்டும்.அது என்னால் இப்போது முடிவதில்லை.மேலும் அனுபவங்களின் குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டும்தான் சிறுகதையில் சொல்ல முடிகிறது.பல்வேறு பாத்திரங்களை இயல்பாக நடமாடவிட்டு,பன்முகப்பட்ட அனுபவங்களைச் சித்தரிப்பதற்கு நாவல் வடிவம்தான் தோதாக இருக்கிறது”
தீராநதி இதழில் வெளிவந்த நேர்காணலில் பூமணி இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.2019 இல் வெளிவந்துள்ள (டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடான)’பூமணி சிறுகதைகள்’ என்கிற தொகுப்பில் உள்ள 53 சிறுகதைகளுடன் தன் சிறுகதைப் பயணத்தை முடித்துக்கொண்டு, நாவலில் தன் பயணத்தைத் தொடர்கிறார் எனக் கொள்ள,பூமணியின் இப்பிரகடனம் வாய்ப்பளிக்கிறது.
தமிழ்ச்சிறுகதை உலகுக்குத் தனித்துவம் மிக்க சிறுகதைகளைப் படைத்தளித்திருக்கும் நுட்பமான படைப்பாளி பூமணி.
தன்னைப்பற்றியும் தன் படைப்புகள் பற்றியும் உருவாக்கப்பட்டுள்ள எல்லாவித முன் முடிவுகளையும் நிராகரித்துத் தூரத்தள்ளி விட்டுத் தன் இயல்பில் கம்பீரமாக நடந்து செல்பவர் பூமணி.
அவரைத் தலித் எழுத்தாளர் என்று பலர் அடையாளப்படுத்தியதை முதலில் உறுதியாக மறுத்தார்.ஜெயமோகனுடன் உரையாடியபோது அவர் வெளிப்படுத்திய வார்த்தைகள் ”என்னை தலித் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை. அந்தக் கடன்வாங்கிய பட்டம் எனக்குத் தேவையுமில்லை. எழுத்தாளனை இப்படி சிறுகூண்டுகளுக்குள் அடைத்து நிறுத்திவைப்பது இலக்கியத்துக்குச் செய்யும் பெரிய துரோகமாகும். இதுதான் தொடர்ந்து நடக்கிறது
தலித் என்ற வார்த்தை இறக்குமதிசெய்யப்படுவதற்கு முன்பே நான் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றி எழுதியவன். என்னை இச்சாதிக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் கூச்சமோ தயக்கமோ கிடையாது,. அதற்காக நான் வேறு எந்த இனத்தினரைப்பற்றியும் எழுதக்கூடாது என்று தடைவிதிப்பதற்கு எந்தக் கொம்பனுக்கும் உரிமை இல்லை. ஏனென்றால் அடிப்படையில் நான் ஒரு மனுசன்”
இரண்டாவதாக தன்னைக் கரிசல் எழுத்தாளன் என அடையாளப்படுத்துவதையும் பின்னர் மறுத்துவிட்டார்.கரிசல் இலக்கிய முன்னோடியான கி.ராஜநாராயணனைத் தன் ‘ முன்னத்தி ஏர்’ என்று தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘வயிறுகள்’ தொகுப்பை அவருக்குச் சமர்ப்பணம் செய்த இடத்தில் குறிப்பிட்ட பூமணி,எழுத்தாளர் உதயசங்கர் .இந்தியா டுடே. இதழுக்காகப் பதிவு செய்த நேர்காணலில் இவ்விதம் குறிப்பிட்டு விடுகிறார்:
“ கரிசல் வட்டார இலக்கியம் என்று சொல்வதில் இப்போது எனக்கு உடன்பாடில்லை. சாதிய இலக்கியம் என்று இப்போது சொல்லுவதைப்போல குறுகிய பார்வை கொண்டதாக இருக்கிறது. கரிசல் இலக்கியம் கரிசல் இலக்கியம் என்று ஆரவாரித்ததில் கு.அழகிரிசாமி மாதிரியான எழுத்தாளர்களை நாம் தவறவிட்டு விட்டோம். கு.அழகிரிசாமியை முன்பே நாம் அங்கீகரித்திருந்தால் கரிசல் இலக்கியத்தின் வேகம் குறைந்திருக்கும். இப்போது எனக்கு குற்றவுணர்ச்சியே இருக்கிறது. அருமையான கதைகளை எழுதியுள்ள கு.அழகிரிசாமியின் எழுத்து கிராமங்களில் காலையில் ஆலங்குச்சியால் நிதானமாக ஒவ்வொரு பல்லாக விளக்குவதைப் போன்ற எழுத்து. புறவயமான சூழ்நிலைச் சித்திரத்தை அகவயப்படுத்தி அந்தக்கதையின் ஓட்டத்துக்கு இசைவாகவோ, கூடுதல் வெளிச்சம் தருகிற மாதிரியோ இருக்கிறது அவருடைய கதைகள். அவரையெல்லாம் விட்டு விட்டு காடு கரை என்று எதை எதையோ எழுதியாச்சு..”
எந்த ஒரு அமைப்பையும் சார்ந்தவராக அவர் எப்போதும் இருந்ததில்லை.’முற்போக்கு எழுத்தாளர்’ இவர்’ என்று நான் சொல்லுவேன்.எனினும் அப்படி முத்திரை குத்தி ஒருவிதமாக மட்டும் அடையாளப்படுத்தி விடவும் முடியாது.
ஏதாவது ஒரு டப்பாவுக்குள் போட்டு அவரை அடைத்துவிட முயலும் வாசகன் அல்லது விமர்சகனை இத்தகைய பிரகடனங்கள் மூலம் நிர்க்கதியாக்கி விடுகிறார் பூமணி.அவருடைய நாவல்கள்,சிறுகதைகள், நேர்காணல்கள்.வெகுசில உரைகள் இவற்றின் மூலம் அவரை அழுத்தமான சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்துடன், மார்க்சியத்தை உள்வாங்கி, எழுதுகிற படைப்பாளி என்று சந்தேகத்திற்கிடமின்றிக் கூறலாம்.
1971 இல் ‘தாமரை’ இதழில் வெளியான ’அறுப்பு’ சிறுகதையுடன் அவரது கணக்கு துவங்குகிறது.ஐம்பது ஆண்டுகால படைப்பு வாழ்க்கை அவருடையது.53 சிறுகதைகள்,பிறகு,வெக்கை,நைவேத்தியம்,வரப்புகள், வாய்க்கால்,அஞ்ஞாடி,கொம்மை என 7 நாவல்கள் ‘கருவேலம்பூக்கள்’ என்னும் முழு நீளத்திரைப்படம் (இயக்கம்) என இடைவெளியற்ற தொடர்ச்சியான படைப்புச் செயல்பாட்டுடன் நகர்ந்த 50 ஆண்டுகள்.”வெக்கை” நாவலிலிருந்து பிடிமண் எடுத்து சமீபத்தில் “அசுரன்” திரைப்படமும் வந்துள்ளது.’வெள்ளாவி” என்கிற நாவலை இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்.
பூமணியின் சிறுகதைகளுக்கான முக ஜாடையாகச் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.மிகுந்த சொற்சிக்கனத்தோடு,தேவைக்கு அதிகமாக ஒரு சொல் கூட இல்லாத கட்டிறுக்கமான மொழி.மடைதிறந்த வெள்ளம்போலப் பிரவகித்து வரும் கரிசல்காட்டுச் சொற்பிரயோகம்.வாசிப்பு இன்பம் தரும் கூர்மையான உரையாடல்கள்.அதிகம் பேசப்படாத, ஒடுக்கப்பட்ட உடல் உழைப்பாளிகளையே பெரிதும் பேசும் உள்ளடக்கம்.
அவருடைய முதல் தொகுப்பான ‘வயிறுகள்’இப்போது என் கைவசம் இல்லை.பிற தொகுப்பு எதிலுமே இந்தக்கதை இந்த ஆண்டில்,இந்த இதழில் வெளியானது என்கிற குறிப்புப் போடும் பழக்கமே அவருக்கு இல்லை.”அதெல்லாம் உனக்கு எதுக்கு? கதையைப் படி” என்கிற வீறாப்பு. தங்கள் தராசுகளில் வைத்து அவரை நிறுத்துச் சொல்லி விட முடியாமல் ஆய்வாளர்கள்,விமர்சகர்களைத் திண்டாட விடும் கெத்து. தொகுப்புகளில் முன்னுரை,பின்னுரை,வாழ்க்கைக் குறிப்பு என்றுகூட எதையும் பூமணி எழுதுவதில்லை. ஒரே ஒரு தொகுப்புக்கு பா.செயப்பிரகாசம் முன்னுரை எழுதியுள்ளார்.அதுகூடப் பதிப்பாளரின் முயற்சியாக இருக்கக்கூடும்.
அவருடைய சிக்கனம் அவர் சிறுகதைகளுக்கு வைத்திருக்கும் தலைப்பிலிருந்தே வெளிப்படும். அறுப்பு,வெளிச்சம்,பெட்டை,ஒதுக்கம்,ஓட்டை,நரி,வாடை,நாக்கு என 53 கதைகளுக்குமே ஒற்றைச் சொல்தான் தலைப்பு,நாவல்களுக்கும் அவ்விதமே ஒற்றைச்சொல்லே தலைப்பாகும்.அம்புட்டுச் சிக்கனம்.விதிவிலக்காக பிஞ்சுப்பழம்,உரிமைத் தாகம்,நல்ல நாள்,எதிர்கொண்டு,பொன்னரிசி என ஐந்தே கதைகளுக்கு இரட்டைச்சொற்களில் தலைப்பிட்டுள்ளார்.
எந்த செய்தியையும் கதைக்கு வெளியிலிருந்து பூமணி சொல்வதில்லை.கதைக்குள் ,கதையின் ஓட்டத்துடன் பொருந்தாத கருத்து எதையும் எந்தக் கதாபாத்திரத்தின் மூலமகவும் சொல்வதில்லை என 53 கதைகளும் கறாராகக் கலைக்கொடியை உயர்த்திப் பிடித்து நிற்பதே பூமணியின் சாதனை.
“அறுப்பு தொடங்கிவிட்டது.
வயக்காட்டு மூலையில் குரவைக் கும்மரிச்சம்.கொண்டை இறுகல்.முந்தானைச் செறுகல்.சீண்டல் சிணுங்கல்.ஏசல் நொடிப்பு.வெற்றிலைச் சிவப்பு.புகையிலைக் குதப்பல்.
கரகரத்த அரட்டல்.முண்டாசுக்கட்டு.தார்ப்பாய்ச்சல்.”
என்று ‘அறுப்பு’ சிறுகதை தொடங்குகிறது.அறுவடை நடக்கும் வயல் காட்சியை இவ்வளவான சொற்களில் சித்தரித்து விடுகிறார்.இவ்வளவு விவரங்கள் போதும் எனத் தீர்மானமாக இருக்கிறார்.வாசகனின் கற்பனை வளத்தின் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையும் மதிப்பும்தான் இத்தகைய சிக்கன நடவடிக்கைக்கான அடித்தளம்.வாசகனுக்குப் புரியாது என்கிற அவநம்பிக்கையில் விலாவாரியாகப் பிற எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருக்க பூமணி இப்படி ஒரு நிலைபாட்டில் நிற்பது போற்றத்தக்க பண்பல்லவா?
உறக்கம்,பேனாக்கள்,மந்தம்,ஆழம்,பொன்னரிசி,ஏலம்,பீளை,போட்டி,வெளியே ஆகிய ஒன்பது கதைகளைத்தவிர மீதி 44 கதைகளுமே கரிசல்காட்டுக் கிராமத்து வாழ்வில் நின்று அவ்வாழ்வைப் பேசும் கதைகளே.அவரது நாவல்கள் எதையுமே வாசிக்காத வாசகன் கூட இந்த 44 சிறுகதைகளின் வழியாக சுதந்திரத்துக்குப் பிறகான-60 களின் பிற்பகுதி வரையான –காலத்திய கரிசல் வட்டாரத்து வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.அப்படி ஒவ்வொரு கதையும் அவ்வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தை நம்முன் விரித்துக் காட்டுகின்றன.கு.அழகிரிசாமியைப்போல எழுதாமல், “காடு,கரை என்று எதை எதையோ எழுதியாச்சு” என்று பிற்காலத்தில் அவர் தன் எழுத்துக் குறித்து விசனப்பட்டுக் குற்ற உணர்வு கொண்டாலும், இந்தக் காடு,கரைகளையும் இப்படி ஒரு மொழியில் எழுதவும் ஒருவர் வேண்டும்தானே? என்று நாம் ஆற்றுப்படுத்த வேண்டியிருக்கிறது அவரை.
70களின் பிற்பகுதியில் முதன்முதலாக வாசித்த நாளிலிருந்து இந்த நிமிடம்வரை என்னைத்துரத்தும் கதைகளாகச் சிலவற்றைக் குறிப்பிட முடியும். அவற்றிலும் தனித்துச் சொல்ல வேண்டிய கதைகளாக “கரு” ”பசை” ஆகிய இரு கதைகளும் மிளிர்கின்றன.
முதலில் ‘பசை’
”யப்பாடி இப்படி வந்து உக்காரு. அந்தக் கெழவங் கிட்ட ரூம் போட்டு வர்ரதுக்குள்ள பெரிய போராப் போச்சு.”
”அவன் என்னமோ கேட்டானே.”
”அவன் கெடக்கான் விடு. கழுத்தில தாலியப் பிடிச்சுக் காட்டினாத்தான்பேசாம இருப்பான். இந்தக் கட்டிலென்ன கூப்பாடு போடுது. பெட்ஷீட்டக் கீழ எறக்கிப் போட்டா நல்லது. எழுந்திரு கொஞ்சம்.”
‘ஃபேனக் கொறச்சு வையுங்களேன்.”
* சின்ன ரூமாருக்கு”
. “இங்கயே குடியிருக்கவா போறோம்.”
’பசை’ கதை முழுக்க முழுக்க இரண்டு பேரின் உரையாடல் வழியாக மட்டுமே சொல்லப்பட்ட கதை.ஒரு ஆண்.ஒரு பெண்.தன் மனைவி அல்லாத இன்னொரு இளம் பெண்ணை அழைத்துக்கொண்டு போய் லாட்ஜில் அறை போட்டு முறையற்ற உறவு கொள்ளும் நிகழ்வு.சவாலான இவ்வடிவத்திலும் கூட காட்சிச் சித்தரிப்புக்காக வளவள என்று உரையாடலை நீட்டிக்கொண்டு போகாமல் கச்சிதமாகக் கொண்டுசென்று முடித்திருப்பார்.
லேசாப் புழுங்குதில்லையா? லைட்ட ஆஃப் பண்ணீட்டு ஜன்னல பாதி தெறந்து வச்சுக்கிரு வமா ?”
“ம்.’
”சொன்னபடி கரெக்டா வந்துட்டயே.”
“வந்து தான ஆகணும். நீங்க லீவு போட்ருக்கீங்களா?”
‘ “மதியத்துக்கு மேல. என்ன?”
”ஒண்ணுமில்ல… லீவுன்னாலும் சம்பளந்தான?”
”சும்மாவா.”
”மாசம் அரநூறு வாங்குவீங்களா?”
“எக்ஸாக்டாச் சொல்லீட்டயே”
“ஓங்க வீட்ல அக்கா ஒருநா பேச்சுவாக்கில சொன்னாங்க.”
”யாரு என் ஒய்ஃப்பா?”
“ஆமா. மாசம் எவ்வளவு மிச்சம் வப்பீங்க?”
”மிஞ்சிப் போனா எரநூறு.”
”எரநூறுன்னா இன்னொரு குடும்பத்தத் தாங்குமே. முன் னூற வச்சிட்டு எங்க வீட்ல அஞ்சாறு பேருக்கு ஓடுதே. ஒங்களுக்கென்ன ஒண்ணப் பெத்து வச்சிருக்கீங்க. அவன எனக்கு ரெம்பப் புடிச்சிருக்கு. வயசென்ன?”
”ரெண்டு முடியுது.”
”அதுக்குப் பெறகு ஒண்ணுங் காணும்?”
…..
”ஒடம்பேன் இப்படிப் பொசுக்குது?”
”வீட்டிலேயா கெடக்கென். கோதும் அரைக்கப் போனென். வெயில் ரெம்ப. கொழாயடியில நிண்ணது
வேற. சில நாள்ல நீர்க்கடுப்பு வந்து இடுப்பப் பிடிச்சிட்டே நிப்பென்.”’
”சர்பத் குடிச்சாத் தணியும்.”
“ஒரு டம்ளர் புளிச்ச தண்ணிதான் அதுக்கு மருந்து.”
”அப்படியா?”
”ஒங்க வீட்ல காலையில என்ன பண்ணிக்கிருவீங்க?”
“ஏதாவது டிஃபன் தான் .”
“பழசு போடுறதில்லையா?”
“பழசா எனக்கு கம்ப்ளீட்டா பிடிக்காது.”
“எங்க வீட்ல வாரம் ஒரு நா இட்லி பண்ணவே எங்கம்மா வுக்கு இடுப்பொடிஞ்சு போகும்.”
“எங்களுக்கு அவ இதுக்கெல்லாம் சளைக்கிறதில்ல. நல் லாப் பண்ணுவா. அவ சமையல் ரெம்ப டேஸ்ட்தான்.”
“ஏன் எல்லாப் பண்டமும் இருந்தா எல்லாரும் டேஸ்டாச் செய்யலாமே.”
உரையாடல் போகப்போக மெல்லத் திரை விலகிக் கதை பிடிபட ஆரம்பிக்கும்போது நமக்கு வறுமை நிலையால் இவன் கூட வர நேர்ந்த அவ்விளம்பெண்மீது பரிவும் ’கொழுத்துப் போய் அலைகிற’ இவன் மீது கோபமும் ஜுரம் ஏறுவது போல நம் மனதில் ஏறுவதை உணர முடியும்.பூமணி எந்த இடத்திலும் சார்பு நிலை எடுத்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நம்மை ஒரு நிலைப்பாடு எடுக்க வைக்கிறார்.இதுதான் பூமணியின் கலையின் வெற்றி.
இரண்டாவது கதை “கரு”
மிகுந்த பதட்டத்தை உருவாக்கும்கதை இது.
கரிசல்காட்டுப் பெண்ணொருத்தி திருமணத்துக்கு முன்பே கருவுற்று விடுகிறாள்.அவளுடைய தாய்க்கு மட்டும் அது தெரிந்து விடுகிறது.செல்ல மகளை அடி அடி என்று அடிக்கிறாள்-சத்தம் வெளிக்கேளாமல். தகப்பனுக்குத் தெரிந்தால் வெட்டிப்பொலி கொடுத்து விடுவான்.ஏற்கனவே வெளியூர் மாப்பிள்ளைக்குக் கட்டிக்கொடுத்த மூத்த மகள் கைக்குழந்தையோடு நகைப் பிரச்னைக்காக பிறந்த வீட்டில் வந்து வாழாவெட்டியாக உட்கார்ந்திருக்கிறாள்.
காலையில் அப்பன்காரன் வீட்டை விட்டு வெளியேறவும், வடக்கூரில் இருக்கும் மருத்துவச்சியிடம் (கருக்கலைப்புக்காக ) மகளை இழுத்துக்கொண்டு ,வேகாத வெயிலில் நடக்கிறாள் தாய்.அந்த நடைதான் கதை.தகப்பன்காரன் வீடு திரும்புமுன் வேலையை முடித்துக்கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற கால முள் நம் தலைக்கு மேலே ஓடிக் கதை முழுக்கப் பதை பதைப்பை உண்டாக்குகிறது.
“நாவறண்டு உதடு விருவிருத்தது.குடல் உலர்ந்த மாதிரி தண்ணீர்த்தாகம்.ஆத்தா இன்னும் திரும்பிப் பார்க்காமல் போனாள்.கொஞ்சம் எட்டிப்போனால் கூப்பிட்டுச் சொல்லலாம்.
ஓடையிறக்கத்தில் சேலையை அவிழ்த்துக்கட்டிக்கொண்டு முகஞ்சுளித்துக் காத்திருந்தாள் ஆத்தா.
“என்னவ்ளே சாவாரஞ்செத்த நட.எட்டித்தான் வந்தான்ன பேதியா வருது”
அப்போதும் தண்ணீர் தவித்தது.
………
“தண்ணி தவிக்குத்தா,கண்ணெக் கெட்டி வருது”
சொல்லி முடித்த பிறகு பயம் அதிகரித்தது.
“தண்ணி தவிச்சா செத்துப்போறயா, அந்தா கெணத்துல போயிக் குடிச்சிட்டு வந்து தொல.இல்ல அதுல வுழுந்து சாகு.”
……………………
”இரண்டு மூன்று முறை ஆத்தா திரும்பிப் பார்த்தாள். இதுக்கு முந்தி ஆத்தா கைதொட்டு அடித்ததில்லை. அய் யா அரட்டினால் அதுக்கே சண்டை போடுவாள். அவள் குணமே தனி. வெஞ்சணத்துக்கு அரைக்கும்போதுகூட அஞ்சாறு பொரிகடலை மடியில் எடுத்து வைத்திருந்து கொடுப்பாள். சிலசமயம் கடையில் ஏதாவது வாங்கித் தருவாள். எண்ணெய் தேய்த்து தலைமுடிந்து விடுவாள். அரிப்புத்தீர பேன் பார்ப்பாள். ஈர்க் கொல்லி வைத்து மெனக்கிட்டு உருவுவாள். என்னேரமும் ”சின்னவளே, சின்னவளே” தான்.
ஆத்தா ரெம்ப மனசு உடைந்து போய்விட்டாள். அக்கா வந்து கிடப்பதே பெரிய கவலை. அடிக்கடி அய்யாவை முனங்குவாள். அய்யா, ”ஒனக்கெல்லாம் அனயம் தெரி யும் சும்மா கெடயேன்” என்று சொல்லி விட்டுப் போவார். அக்கா பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டே மூக்கை உறிஞ்சுவாள்.
கண்ணெல்லாம் எரித்துக் கிடந்தது. அவ்வளவாய்த் தாளவில்லை. வெக்கையில் பொய் மேகங்கள் நிழல் விரித்து லாந்தின. முதுகில் தொங்கிய முந்தானையை வரிந்து சொருகிக் கொண்டு ஆத்தா சொன்னாள். ”வெருசா வாடி, அய்யா வருங்குள்ள போயித்திரும்பணும்.” சில்லோடைத்தாவில் சுடச்சுட நடந்து கரையேறிய போது வடக்கூர் திரட்சியாய்த் தெரிந்தது.
என்ன பிறப்பு இந்தப் பெண் பிறப்பு என்ற் மனம் நொறுங்கிப்போகிறது நமக்கு.சதாகாலமும் ஆண்களின் துரோகத்தால் வீழ்த்தப்பட்டுக்கொண்டே தவிச்ச வாய்க்குத் தண்ணி கிடைக்காமல் மருந்திடப்படாத காயங்களுடன் அதே ஆண்மகனை நம்பிக் கை பிடித்து நடக்கும் ஒரு வாழ்க்கை.கைவிடப்பட்ட தாயும் மகளும் வெக்கை வீசியடிக்கும் வெம்பரப்பில் நடந்து போகின்ற கோலம் ஓராயிரம் கேள்விகளையும் உணர்ச்சி அலைகளையும் நமக்குள் கிளர்த்துகின்றன.ஆனால் பூமணி எதையுமே கூடுதலாகச் சொல்லாமல் இப்படியாக இருக்கு பாருங்க என்பதுபோல கதையைச் சொல்லிப்போகிறார்.
”இந்திய சுதந்திரத்தைவிட மூன்று மாதம் மூத்தவரான பூமணி நம்பிக்கைக்குரிய இளந் தலைமுறை எழுத்தாளர்.
‘எழுத்து’ பத்திரிகையில் கவிதைகள் எழுதத் தொடங் கிய இவர் கடந்த பத்தாண்டுகளாகச் சிறுகதைத் துறையில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார்.
நெஞ்சை அழுத்திப் பிழியும் சோகமானாலும் குத்த லான கேலியானாலும் மெல்லிய நகைச்சுவையானா லும் அலட்டிக் கொள்ளாமல் வெளிக் கொணரும் ஆற்றல் மிக்க கலைஞர் இவர்.
இவரது கதைகள் வித்தியாசமானவை. வட்டார வழக்கு நடையில் ஒரு புதிய உலகுக்கு அழைத்துச் செல்பவை; வாழ்க்கையிலிருந்து அந்நியப்படாமல் பிரச்னைக்குத் தீர்வைத் தேடுபவை.
‘வயிறுகளுக்குப் பிறகு வரும் ‘ரீதி’ இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுதி. விரைவில் வெளிவரவிருக்கும் இவரது முதல் நாவலின் பெயர் ‘பிறகு’.”
என்கிற பின்னட்டைக் குறிப்புடன் 1979இல் வெளியான “ரீதி” தொகுப்பில் இவ்விரு கதைகளும் இருக்கின்றன.
கதைக்குள் தீர்வைச் சொல்வது அல்லது ‘முற்போக்காக’ கதையை முடிப்பது என்கிற ‘பாணி’ அவரிடம் இல்லை.தன்னியல்பில் கதை சென்று முடியும்.இன்னும் சரியாகச் சொன்னால் அவருடைய எந்தக் கதையும் இப்படித்தான் நடந்தது என்று முடிந்து போவதில்லை.இரவின் முடிவில் இன்னொரு காலை புலர்வதுபோல அவருடைய ஒவ்வொரு கதையும் இன்னொரு பக்கத்தில் தொடர்வதாகவே அமையும்.ஓடிக்கொண்டிருக்கும் பெருநதிபோன்ற வாழ்க்கையிலிருந்து தன் கதைகள் என்னும் ஒரு சிரங்கைத் தன்ணீரை நம் மீது தெளிக்கிறார்.அந்த நதி இதோ இன்னும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது என்கிற ஓர்மையை நமக்கு வழங்கியபடிதான் அவருடைய கதைகள் பயணிக்கும்.
என்றாலும் விளைச்சல்,உரிமைத்தாகம்,மாற்றம் ஆகிய மூன்று கதைகளில் மட்டும் கதைக்குள்ளேயே ஒரு தீர்வு சொல்லப்படும் “முற்போக்குப் பாணி” பின்பற்றப்பட்டுள்ளது.
‘விளைச்சல்’ கதையில் பக்கத்து கிராமத்தில் பெரிய விவசாயியாக இருக்கும் கிராம முன்சீப்பு தீர்வை வசூலிக்க வருகிறார்.
“எல்லோரும் கீழ எறங்கிக்கங்க.கெரமுனுசு சாமி வாறாக”
மேடையின் வடக்கோரத்தில் தூசியைப் பரசிவிட்டு தண்டியான புஸ்தகங்கள் திணித்த பையை இறக்கி வைத்த தலையாரி கணுவோடிய குண்டுப்பிரம்பைக் கம்பீரமாக ஊன்றி அதட்டல் விட்டார்.அவர் பார்வையில் பட்டாளத்தோரணை.”
என்று துவக்க வரிகளிலேயே அதிகாரத்தின் வாசனையை மேடையில் உட்காரவைக்கிறார்.கிராம முன்சீப் என்னும் இந்த உயர்சாதிக்காரர் தீர்வை வசூலிப்பதோடு அவ்வூர் விவசாயத்தொழிலாளர்களை தன் வயலுக்கு உழவடிக்கவும் இன்னபிற விவசாயப்பணிகளுக்கும் இலவச உழைப்பையும் நைச்சியமாகப் பேசிப் பெற்றுக்கொள்கிறார்.அதே மனிதர் இவ்வூர்ப் பயல்கள் மாடு மேய்த்துப் போகும்போது தன்னுடைய வயலில் லேசாக மேய்ந்துவிட்டதுக்காக, மாடுகளையும் பயல்களையும் அடித்து பவுண்டில் அடைத்து வைக்கிறார்.ஊர்ப்பெரியவர்கள் போய் தண்டம் கட்டி மக்களையும் மாடுகளையும் மீட்டு வருகிறார்கள்.
சில காலம் கழித்து மீண்டும் ஊருக்கு தீர்வைபோட வருகிறார்.
ஊர் மக்கள் தீர்வையை ஊர்க்கூட்டம் போட்டு வசூலித்து சல்லிக்காசு பாக்கியில்லாமல் ஆபீசில் கொண்டு கட்டியிருப்பார்கள்.அப்படியா என்று அதிர்ச்சியடையும் கிராமனுசு “சரி சரி பெரியசாமி இருந்தா கூட்டீட்டு வாரும்.வந்த கையோட ஒழவுச் சமாச்சாரத்தச் சொல்லீட்டுப் போயிறலாம்.இந்தப் பதத்துல அடிச்சுப்போட்டா நல்லது.
தலையாரி அசையாமல் வேப்ப மரத்தில் உரிந்திருந்த கரும்பட்டைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
மாட்டுக்காடியில் சாணியள்ளிக்கொண்டிருந்த ஒருத்தன் கோவத்தில் நிமிர்ந்தான்.
“ஆராச்சும் ஒழவுப்பேச்சுப் பேசுனீகனா மரியாத கெட்டுப்போகும்.மாடும் மனுசனும் ஓசிக்கு உழுது வெதச்ச வெள்ளாமைய வீட்லருந்து திங்கறதுமில்லாம சின்னஞ்சிறிசுக தெரிஞ்சுந்தெரியாம அத நோண்டீட்டாக்கூட வகுத்தப் பெரட்டுது வலி.பேசாம எறங்கிப்போயிருங்க.இல்ல…”
என்று கதை முடிகிறது.
’உரிமைத்தாகம்’ கதையில் கடன் கேட்டு வந்த தம்பியை ஏமாத்தி நிலத்தை பத்திரம் எழுதிக்கொண்ட வட்டிக்கு விடும் மேலூர்ப் பங்காருசாமி வயக்காட்டுக்கு வந்து அண்ணனையும் தம்பியையும் மிரட்டும் இறுதிப்பகுதியில் அண்னனும் தம்பியும் திருப்பி அடிப்பதாகக் கதை முடியும்.
‘மாற்றம்’ கதையில் முத்துப்பேச்சி என்கிற விவசாயக் கூலித்தொழிலாளி தங்களை வயல்வெளியில் மோசமாக நடத்தும் முதலாளியம்மாவுக்கு எதிராகவும் உளுத்துப்போன தானியத்தைக் கூலியாக அளப்பதற்கு எதிராகவும் போர்க்கொடி உயர்த்துவதாக-ஒரு சங்க நடவடிக்கை போல இயங்குவதாக- கதை முடியும்.
உலக அளவில் இடதுசாரி இலக்கியம் பேசிய உழைப்புச் சுரண்டல் பற்றியே பூமணி தன் கரிசல் கிராமத்து வாழ்வில் அது எவ்விதம் ஊடுறுவி நிற்கிறது என்பதைக் கலாபூர்வமாகப் பல கதைகளில் பேசுகிறார்.
‘நேரம்’ கதையில் கைக்குழந்தைக்குப் பாலூட்டக் கூடப் போக விடாமல் ‘காவல் காக்கும்’ முதலாளியம்மாவும் அதுபற்றிய எந்த வர்க்கக் கோபமும் இல்லாமல் பாலூட்டத்தவிக்கும் இளந்தாயை எக்கண்டம் பேசிக்கொண்டு வேலைபார்க்கும் சக கூலிப்பெண்களின் நிலை பற்றியும் மனம் நெகிழப்பேசுகிறார்.
கரிசல் வாழ்வின் பிரிக்க முடியாத அம்சமாக இருப்பவை நார்ப்பெட்டிகள்.அவற்றைப் பின்னிக் கொடுப்பவர்கள் பெரும்பாலும் அடிமூட்டையாகச் சமூகத்தில் நசுங்கும் சக்கிலியர் சமூகத்து மக்கள்.ஓட்டை,தேவை ஆகிய இருகதைகள் இத்தொழிலாளிகளின் அவல வாழ்வைப் பேசுகின்றன.வாழ்வின் அவலத்தை மட்டும் பேசாமல் இத்தொழிலை ஒரு தொழிலாக மட்டும் அல்லாமல் கலையாகப் பார்க்க வைக்கும் சித்தரிப்பு கதைகளின் உட்சரடாகப் பின்னி வருவது பூரணமாக அவ்வாழ்வைன் சாரத்தை நமக்குக் கடத்த உதவுகிறது.
“ சருவச்சட்டியில் தண்ணீரள்ளி காய்ந்திருந்த கடகத்தில் தெளித்து நமர்த்திய தாயம்மா நாரிலும் தடவி நுனியை வசப்படுத்தினாள்.
ஒரு சின்னக் கொட்டானோடு மல்லாடிக்கொண்டிருந்த மூத்த பயல் நிமிர்ந்து இடுப்பை நெளித்தான்.
“என்ன பொட்டியாருக்கு இடுப்பு வலிக்குதா. வாவளையம் மடக்கீட்டயா. இனியென்ன ஓலையைச் சொருகி நறுக்கிவுட வேண்டியதுதான. வாயக் கொஞ்சம் அகலிச்சே பின்னு. நாரு வுடுறதுக்கு அப்பத்தான் தோதாருக்கும்.”
“அவங்கிட்டக் கத்தியக் குடுக்காதம்மா. தெண்டித்தெண்டி ஓலையெல்லாம் அத்துருவான். மூங்கியங் குச்சுத்தான் அவனுக்குச் சரி.”
கூர்மையாய்க் குனிந்திருந்த இளையபெண் அக்கறையுடன் சொன்னாள். அவள் கையில் அழகழகாக அரும்பு வைத்த வெற்றிலைக் கொட்டான் மூடி இருந்தது.
தாயம்மாளுக்கு சந்தோசம். “அதுக்காக இப்படியே எத்தன நாளைக்கு. கத்திவச்சும் ஓலவுட்டுப் பாக்கணும். நீ அரும்பு மடக்கி அடுத்த வரிசையில் பிஞ்சுகெட்டு. சின்னக் கொட்டானுக்கு அதுதான் எடுப்பா ருக்கும்.”
அவள் கொண்டைக்கத்தியால் நுனிநாரைச் சீவிக் கூர்மை படுத்தினாள்.
தாவாரத்தடியில் தாய் மக்கள் மூணு பேரும் அமைதிப் பட்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் நறுக்கியெறிந்த ஓலைகளும் நார்களும் சிதறிக்கிடந்தன.
ஒருகாலத்தில் அவள் தனியாகவே இந்த வேலையில் கிடந்த அழுந்தியதுண்டு. ஓட்டைப்பெட்டி சுளகுகளுக்கு நார்விட்டுத் தருவதிலும் கோட்டைக்கட்டு கட்டித் தருவதிலுமே நாட்கள் கடந்து அதில் கிடைக்கும் கொத்துக்கு வயிறு கட்டுப்பட்ட நிலையெல்லாம் தாண்டி இன்றைக்கு ஒரு புதுப்பெட்டிக்கே கொட்டானுக்கோ அடிப்போட்டுத் தந்தால் அதைப் பின்னி முடித்து பல நிறத்தில் சாய ஓலைகள் விட்டு அழகுபடுத்து மளவுக்குப் பிள்ளைகள் வந்து கை கொடுத்திருப்பதை நினைத்தால் அவளுக்குப் பெருமைகூட.”
இப்பகுதி பூமணியின் எழுத்தின் மிக முக்கியமான பகுதி.உழைப்பையே தங்கள் பண்பாடாகக் ( WORK AS CULTURE) கொள்ளும் உழைப்பாளி வர்க்கத்தின் உழைப்பின் மீதான பெருமித உணர்வை -அந்த உளவியலை- துருத்தல் ஏதுமின்றி அழகாகப் படம் பிடிக்கும் பகுதி.
பல கதைகளில் வெள்ளாமையில் ஆடு மாடு புகுந்து உழப்புவதும் அதற்காக மாடு மேய்க்கும் சிறுவர்கள் நில உடமையாளர்களிடம் ஈவிரக்கமின்றி அடிபடுவதும் மீண்டும் மீண்டும் வருகிறது.தஞ்சை வட்டாரத்தில் பண்ணையடிமை முறையில் சாட்டையடியும் சாணிப்பாலும் பெற்ற கொடும் சுரண்டலில் கரிசல் காட்டு வடிவம் இதுவெனப்படுகிறது.’ரீதி’ கதையில் உண்மையாகவே சாட்டையடி படுகிறான் சிறுவன்.நம் கண்கள் கலங்கும் விதமாக அக்காட்சி விரிகிறது.
விவசாய வாழ்க்கையின் வீழ்ச்சி அல்லது சிதைவு நொறுங்கல்,அடமானம்,மணம் போல பல கதைகளின் களமாக அமைகிறது.
60 களின் கரிசல் கிராமங்களில் பள்ளிக்கூடத்தில் சேர்ந்திருக்கும் குழந்தைகளை விடவும் தீப்பெட்டி,விவசாயம்,கூடை முடைதல்,இட்லிக்கடை வேலை எனப் பல தொழில்களில் குழந்தை உழைப்பாளிகளாக இருக்கும் பிள்ளைகள் எண்ணிக்கையே அதிகம் என ஒரு கதையில் குறிப்பிடும் பூமணி நம் கல்வி முறை மீது ஆழமான விமர்சனத்தை பொறுப்பு,வயிறுகள் ஆகிய கதைகளில் வைக்கிறார்.இவற்றைவிட ‘கோலி’ கதையின் முதல் பத்தியில் பள்ளிக்கல்வி மீது அவர் வைக்கும் விமர்சனம் ஆழமானது:
”சுப்புவுக்குப் பள்ளிக்கூடம் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
எல்லாரும் ஒரே மாதிரி உட்காருவது நிற்பது பாடுவது படிப்பது ஒரே சமயத்தில் ஒண்ணுக்குப் போவது சாப்பிடுவது தண்ணீர் குடிப்பது ஒரே விளையாட்டைச் சேர்ந்து விளையாடுவது அதென்ன படிப்பு. நெருக்கும்போது ஒண்ணுக்கடிக்கணும். விக்கும்போது தண்ணீர் குடிக்கணும். தோணும்போது விளையாடணும். இன்ன விளையாட்டு என்றில்லாமல் இஷ்டத்துக்கு விளையாடணும். வேப்பமரத்தில் ஏறி ஊஞ்சலாடணும். வகுப்பில் ஒளிந்து தேடிப் பிடிக்கணும். பக்கத்திலுள்ள குமரன்கோயில் மலைக்கு ஓடி கால் வலிக்கப் படியேறி உச்சியில் நின்று ஊரை அளந்துவிட்டு உருண்டு திரும்பணும் .பள்ளிக்கூடக் கூரை விட்டத்தில் அருவியாக வடியும் குருவிக்கூட்டில் குடும்பம் நடப்பதை மல்லாந்து பார்த்தபடி கண் சொருகணும்.”
விவாதத்துக்கான முக்கியமான புள்ளி இது.
கரிசல் கிராமத்தில் பிறந்து வளர்ந்து போலீஸ் வேலையில் சேர்ந்து ஏட்டையாவாக பதவி பெற்றிருக்கும் ஏட்டையா ராஜகோபாலும் அவருக்கு ஒத்தாசையாக வரும் கான்ஸ்டபிள் ஆத்தியப்பனும் அடி,தகனம்,ஆத்திரம்,நாதி,மட்டம்,குடை ஆகிய ஆறு கதைகளிலும் ஜோடியாகவே வருகிறார்கள்.போலீசுக்குண்டான சேட்டைகள் கொஞ்சமாகவும் ஒரு கரிசக்காட்டு மனிதனின் ஈரமுள்ள மனம் அதிகமாகவும் கொண்ட கதாபாத்திரங்களாக இவ்விருவரும்-குறிப்பாக ஏட்டையா- இக்கதைகளில் வருகிறார்கள்.காவல்துறையின் சிதைவுப் பகுதியை அவர்கள் வாயிலாக வெளிப்படுத்துவதுடன்,பல சிக்கலான –சாதிப்பிரச்னை உட்பட –தங்கள் அளவில் தீர்த்து வைக்கவும் செய்கிறார்கள்.
மற்ற கதைகளில் காணப்படும் மன இறுக்கம் இந்த ஆறு கதைகளில் மட்டும் தளர்வு பெற்று சுவாரசியமான கதை சொல்லல் முறையில் சொல்லப்பட்டிருப்பது தொடர் வாசிப்பில் ஒரு இளைப்பாறலாக அமைகிறது.
ஒரு சிறு விபத்து அல்லது நோய் காரணாக போகிற போக்கில் இறந்து போகும் தகப்பன்கள்,தாய்கள்,குழந்தைகள் எனப் பல கதைகளில் வந்துகொண்டே இருக்கிறார்கள்.இறந்தவர் போக மிஞ்சியிருப்பவர்கல் வாழப் படுகிற பாடுகளை பிஞ்சுப்பழம்,தேவை கதைகள் பேசுகின்றன.
‘70களின் மிக முக்கியமான சமூகப்பிரச்னையாக இலக்கியம் பேசிய வேலையில்லாத் திண்டாட்டத்தை வண்ன நிலவனின் ‘கரையும் உருவங்கள்’ பேசியதைப்போல பூமணியின் ‘கிழிசல்’ கதை மனதை உருக்கும் விதமாகச் சொல்கிறது.

நேரடியாக ஒரு கதையைச் சொன்னாலும் அதே கதை குறியீடாக வேறொன்றைச் சொலவ்துபோல சில கதைகளை எழுதியிருக்கிறார். நரி,வாடை,குடை,,பாதை,விடுதலை,முழுக்கு போன்ற கதைகள் அந்த வகை.ஆனாலும் எதிலுமே துருத்திக்கொண்டு எதையும் சொல்லிவிடவில்லை என்பதையும் சேர்த்தே பதிவிட வேண்டும்.
வாடை கதையில் சாதியமைப்பின் குறியீடாக பாப்புக் கோனாரின் பிணம் அனாதைப் பிணமாக வயக்காட்டில் தனியாகக் கிடக்கிறது.கனத்த அந்தச் சடலத்தை யாராலும் தூக்க முடியவில்லை. செத்த நாயைத் தூக்குவதுபோல கம்பியில் கோர்த்துத் தூக்குகிறார்கள்.கடைசியில் யாரைத் தீண்டாமை மனநிலை காரணமாக வாழ்நாள் முழுவதும் பாப்புக்கோனார் கிட்ட அண்டவிடாமல் துரத்திக்கொண்டிருந்தாரோ அந்தச் சக்கிலியர் சமூகத்துக்கு மக்கள் வந்துதான் ஒரு மாட்டைத் தூக்கிப்போடுவதுபோலத் தூக்கிப் போடுகிறார்கள்.
முழுக்கு கதையில் மூட நம்பிக்கை,சாத்திரம்,சடங்கு இவற்றுக்கு முழுக்குப் போடுகிறார்கள். பாதை,விடுதலை இரண்டும் 70 களில் வசந்தத்தின் இடிமுழக்கமென முன் வைக்கப்பட்ட நக்சல்பாரி இயக்க அரசியலைப் பூடகமாகவும் குறியீடாகவும் சொல்வதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தன்னுடைய “பூமணியின் சிறுகதைகளும் மூன்று வித முரண்களும்” என்கிற கட்டுரையில் ஆதாரத்துடன் குறிப்பிடுகிறார்.அதை மறுக்க இயலாது.
ஜெயமோகன் கொண்டாடும் “நாக்கு” கதை அதிகாரத்தின் கைகளில் சிக்கும் எளிய விவசாயியின் நாக்கு அறுகப்பட்டு அவன் குணமாற்றம் அடைவதைப் பேசுகிறது.மிக முக்கியமான கதை.
மொத்தமாக இந்த 53 கதைகளை வாசிக்கும்போது 60களுக்குப் பிறகான வாழ்வை பூமணியின் சிறுகதைகள் பேசவில்லை என்பது துணிப்பாகத் தெரிகிறது.ஆனாலும் என்ன? எந்த வாழ்வைப் பின் திரையாக வைக்கிறார் என்பதை விடவும் எதைப் பேசுகிறார் என்பதுதானே கலையின் அரசியல்?
கரிசல் வாழ்வின் வர்க்க பேதங்களையும்,உழைப்புச் சுரண்டலையும்,குழந்தைத் தொழிலாளிகள் இழந்துவிட்ட பால்ய காலத்தையும்,எல்லாவற்றையும் தாங்கி குடும்பங்களைச் சிதையாமல் காத்து முகம் துடைக்கும் அய்யம்மாக்களையும் மானிடரின் துரோகங்களையும் அற வீழ்ச்சிகளையும் என எல்லாவற்றையும், குறைவான சொற்களில் சித்திரமாக வாசக மனதில் அழுந்தப் பதிய வைக்கும் கதைகள் பூமணியின் சிறுகதைகள்.
துவக்க காலக்கதைகள் உயிரோட்டமாக இருந்தன்.போகப் போக அந்த வீரியம் குறைந்து விட்டது என்கிற விமர்சனத்தை பூமணியின் கதைகள் மீது வைக்க முடியவில்லை.70களில் இறுக்கிப் பிடித்த லாகானை இன்னும் விட்டு விடாமல் பாய்ச்சல் காட்டும் படைப்பாளி பூமணி.
எந்த அமைப்போடும் தன்னை இணைத்துக்கொள்ளாவிட்டாலும் ஒரு மார்க்சியவாதியாக இடதுசாரி அரசியலின் சக பயணியாக அவரை அவரது சிறுகதைகள் அடையாளம் காட்டுகின்றன.

முந்தைய தொடர்கள்:
தொடர் 1 ஐ வாசிக்க
தொடர் 2 ஐ வாசிக்க
தொடர் 3 ஐ வாசிக்க
தொடர் 4 ஐ வாசிக்க
தொடர் 5 ஐ வாசிக்க
தொடர் 6 ஐ வாசிக்க
தொடர் 7 ஐ வாசிக்க
தொடர் 8 ஐ வாசிக்க
தொடர் 9 ஐ வாசிக்க
தொடர் 10 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 11 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 12 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 13 ஐ வாசிக்க
தொடர் 14 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்
தொடர் 15 ஐ வாசிக்க
தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
எனக்கு மிகவும் பிடித்த, எனது தமிழ் இலக்கிய முன்னோடிகள் தொகுப்பில் பூமணி பற்றிய கட்டுரையில் நான் மிகவும் ரசித்துக் குறிப்பிட்ட ‘கரு’ கதையைப் பற்றி தோழர் தமிழ்ச்செல்வனும் விரிவாக எழுதியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
படைப்பையும் படைப்பாளனையும் இறுகப் பற்றிக்கொள்கிறச் செய்கிற ,சமகாலத்திலேயே இவ்விரண்டையும் கொண்டாட வேண்டி நிர்பந்திக்கிற தொடர் இது. பூமணி அவர்களின் கதைகளை வாசிப்பதற்கு முன்னோட்டமாகவும் முந்தித்தள்ளுவதாகவும் இவை இருக்கிறது. நன்றி
தோழர் பிரமாதம் ஆழ்ந்த அலசல் இளம் படைப்பாளிகளுக்கான சிறு கதை உத்திகைளை கதையின் விமர்சனங்களுடன் அநாயசமாக கூறி செல்கிறீர்கள்
எழுத்தாளர் பூமணியிடம் சிறுகதைக்கலையில் எதைக் கற்றுக்கொள்ளலாம் , எதைவிட்டுவிடலாம் என்பதை நயமாக. உணர்த்தும் கட்டுரை. முதல் கட்டுரையிலிருந்து தொடங்கி இத்தொடரில் தமிழ்ச்செல்வனின் சொல்லும் நேர்த்தியும் நயமும் கூடிவருகிறது. இந்நயம் வாசிப்பவரிடமும் பற்றிக் கொள்கிறது.