இங்கு அரசியல் பேசவும்
வரலாறு என்பது
மக்கள் வெற்றியின் கதை.. அது,
நைல் போல, வால்கா போல, கங்கை போல
வற்றாது ஓடும் ஜீவநதி..
-ஜோத் சிங் –
போராடிக் கொண்டேயிருப்பதால் என்ன பயன் எனும் கேள்வி தற்போது பரவலாக எழுவதை பார்க்கிறோம். கோரிக்கையில் வெற்றி பெற முடியாத போது ஏன் போராட வேண்டும் எனும் கேள்வியை தர்க்க ரீதியாக சிலர் முன்வைக்கிறார்கள். இப்படியாக எழுப்பப்படும் கேள்விகளை எளிதில் கடந்து போய்விட முடியாது. போராட்டக்களங்களில் வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேறாததால் போராட்டங்களே அவசியமற்றவை எனும் கருத்து உண்மையில் அரசியலற்றதாகும். கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசு அல்லது நிர்வாக அமைப்பை நோக்கி மேலும் உரத்த குரல் எழுப்புவதற்கு பதிலாக போராட்டங்களின் கூர்முனையை மழுங்கடிக்கும் நுண்ணரசியலே இத்தகைய கேள்விகளுக்குள் ஒளிந்திருக்கிறது. இருபது நாட்களாக உடைக்கப்பட முடியாத வலுவான முட்டையின் ஓடு தானே இருபத்தொன்றாம் நாளில் உடைக்கப்படுகிறது. உடைக்க முயற்சிப்பவர்களின் வலு அதிகரிக்க அதிகரிக்க, உடைபடும் ஓடுகள் பலவீனமானதாகி விடுகின்றன.
ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்பார் மார்க்ஸ். வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டுமாயின் அதனை தட்டையாக வாசிக்காமல், அனைத்துக் கோணங்களிலிருந்தும் கிரகித்துக் கொள்ள வேண்டும். ஒளிவட்டத்தையும், பிம்பத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட்ட நாயகர்களின் வரலாறுகளை ஏடுகள் ஆயிரமாயிரம் பக்கங்களில் பதிவு செய்திருக்கின்றன. ஆனால் எளிய மனிதர்களின் அர்ப்பணிப்பும், பங்களிப்புகளும் வாசிக்கப்படாமலேயே வரலாற்றின் பக்கங்களில் உறைந்து போயிருக்கின்றன. காலச்சக்கரத்தை முன்னோக்கி உந்தித் தள்ளுகிற மகத்தான பணியில் கைகோர்த்து நின்ற எளிமையான மனிதர்களின் பயணம் மிக நீண்டதும் முக்கியமானதும் ஆகும். அவற்றை அடைகாத்து நமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வரலாறு திரிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது.
உலகம் முழுவதும் பரவலாக வாசிக்கப்பட்ட உணர்ச்சிகரமான புதினங்களில் ஒன்று மாக்சிம் கார்க்கியின் படைப்பில் உருவான ‘தாய்’ நாவல். அதில் பாவெலின் அம்மாவாக வரும் பாத்திரத்தின் பெயர் நீலவ்னா. கதையின் நாயகனாக பாவெல் இருப்பினும் நீலவ்னாவின் பாத்திரத்தை குறிக்கும் வகையில் தாய் என தலைப்பு வைத்திருப்பார் மாக்சிம் கார்க்கி. தொழிற்சாலையில் நடைபெறும் போராட்டங்களின் போது மகன் பாவல் கைது அடுத்தடுத்து செய்யப்படுகிறான். கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகிறான். பிறகு சைபீரியாவிற்கு நாடு கடத்தப்படுகிறான்.
இத்தகைய துயரங்களையெல்லாம் காண நேர்ந்தாலும் கூட உறுதி குலையாமல் மகன் பாவெல் பின்பற்றும் அரசியல் வழிநின்று, சக தொழிலாளர்களோடு இணைந்து தொழிற்சாலைகளுக்கு சென்று தொழிலாளர்களிடையே பிரசுரங்களை விநியோகிப்பது, சோஷலிச கொள்கைகளை பிரச்சாரம் செய்வது, நீதிமன்ற நடவடிக்கைகளில் உணர்வு மேலிட வாதாடுவது என நீலவ்னாவின் மனவலிமையையும், தியாகத்தையும் விவரிக்கும் தாய் நாவலை வாசிக்கும் போது அன்னை கே.பி.ஜானகியம்மாவின் தியாக வாழ்க்கை நினைவில் நிழலாடுவதை தவிர்க்க இயலாது.
1939 இல் துவங்கிய இரண்டாம் உலக யுத்தத்தை கண்டித்தும், ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான யுத்தங்கள் மக்கள் வாழ்வை சூறையாடுவதை அம்பலப்படுத்தியும் மக்களிடையே உரையாடுகிற போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் கே.பி.ஜானகியம்மாள். கடுமையான ஆஸ்துமா நோயும், சித்ரவதைக் கூடங்களான சிறைச்சாலைகளும் அவரின் மன உறுதியை குலைக்கவில்லை. 1941 ல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தென்னிந்தியாவின் முதல் வீராங்களை கே.பி.ஜானகியம்மாள் தான். 12 வது வயதிலேயே பழனியாப்பிள்ளை நாடகக்குழுவில் இணைந்து நல்ல குரல் வளத்தோடு பாடல்களை பாடி நாடகங்களில் நடித்த அனுபவங்களை கொண்டு சுதந்திர உணர்வை ஊட்டும் நாடகங்களை நடத்துவது, 1943 ல் ஏற்பட்ட வங்கப் பஞ்சத்தின் போது கலை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி கொடுப்பது என தான் கற்றுக் கொண்ட கலையையும், தான் தேர்ந்தெடுத்த அரசியலையும் ஒன்றோடு ஒன்று இணைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தால் தான் அனைவராலும் அம்மா என அன்போடு அழைக்கப்பட்டார். தனது உடைகளை, நகைகளை படிப்படியாக விற்று, பிறகு தான் வாழ்ந்த வீட்டையும் விற்கும் வறுமைச் சூழல் வந்தபோதும் கூட விடுதலை போராட்டத்திலிருந்து விலகிவிடாமல் நின்று, விடுதலைக்கு பிறகும் உழைக்கும் மக்களின் நலனுக்கான தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அந்த அன்னையின் வரலாற்றை புறக்கணித்து விட்டு வேறு எந்த வரலாற்றை வாசித்து விட முடியும் நம்மால்..?
நீலகிரியில் வசிக்கும் தோடர் மக்களோடு இணைந்து போராட்டங்களில் பங்கேற்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. மலைகளின் உள்ளார்ந்த பகுதிகளில் மேய்ச்சல் மற்றும் விவசாயத்தை மட்டுமே நம்பி வசிக்கும் தோடர் பழங்குடி மக்களுக்கு நிலம் மட்டுமே ஒரே வாழ்வாதாரம். அவர்களிடமிருந்த நிலங்களின் ஒரு பகுதியை வனத்துறை வஞ்சகமாக ஆக்ரமித்துக் கொள்ள முயற்சி செய்த போது அதை கண்டித்து ஒரு போராட்டம் நடைபெற்றது. உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், தங்கள் பாரம்பரிய உடைகளோடு தோடர் சமூக ஆண்களும் பெண்களும் குழுமியிருக்கிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் செங்கொடி பறந்து கொண்டிருக்கிறது. போராட்டத்தை ஒடுக்க குவிக்கப்பட்ட காவலர்கள் கூட்டத்தில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர், அவர்கள் கைகளில் இருந்த செங்கொடியை பறிக்க முயன்ற போது வெகுண்டெழுந்த மக்கள் ஆவேசம் கொண்டு அவரை தள்ளி விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டார்கள். அந்த முற்றுகை போராட்டத்தின் போது நடைபெற்ற மோதல்களில் பலருக்கும் குறிப்பாக பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும் அவர்கள் தங்கள் போராட்டத்தில் பின்வாங்கவில்லை. வாழ்வாதாரக் கோரிக்கைக்காக தங்களை ஒன்றிணைத்த செங்கொடியை பறிக்க முயன்ற அக்கணத்தில் அந்த எளிய மக்களிடம் உருவான சத்திய ஆவேசத்தை காண முடிந்தது. தடையை மீறி நடைபெற்ற அப்போராட்டத்தில் பங்கேற்றதற்காக அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்தே பூங்காவிற்காகவும், செல்வந்தர்கள் விளையாடும் கோல்ஃப் மைதானத்திற்காகவும் இன்னபிற காரணங்களுக்காகவும் தங்களின் பாரம்பரிய நிலங்களை பறிகொடுத்த போதெல்லாம் கூட போராட முன்வராத தோடர் பழங்குடி மக்கள் திடீரென செங்கொடியை கையில் ஏந்தினால் ஆட்சியாளர்கள் அனுமதித்து விடுவார்களா என்ன…? ஆகவே அடக்குமுறையை கட்டவிழ்த்து விட முயற்சித்தது அரசு நிர்வாகம். ஆனாலும் அந்த எளிய மக்களின் மன உறுதியும் போராட்டங்களும் அரசு எந்திரத்தை பணிய வைத்து கோரிக்கைகளின் மீதான வெற்றியை பெற்றுத் தந்தது. சிறிதோ அல்லது பெரிதோ மக்கள் பங்கேற்கும் போராட்டங்கள் எப்போதும் மகத்தானவையே.
சோவியத் நாட்டின் மீது ஹிட்லரின் பாசிச ஜெர்மானிய படைகள் மிக மூர்க்கமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டது. அந்த போரின் போது, பனி படர்ந்த எல்லைப்பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சோவியத் எழுத்தாளர் பரிஸ் வசிலீயெவ் எழுதிய ’அதிகாலை அமைதியில்’ எனும் நாவல் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான படைப்பாகும். ஒரு படைப்பிரிவின் கட்டளைத் தளபதி வஸ்கோவ் மற்றும் அவரோடு இணைந்து ஜெர்மானிய பாசிசப் படைகளோடு போரிடும் ஐந்து பெண்களை சுற்றி எழுதப்பட்டிருக்கும் அற்புதமான கதை அது.
போர்க்களம் என வந்து விட்டால் எதிரிகளை அழித்து வீழ்த்துவது. அல்லது எதிரிகளோடு மோதி வீரமரணம் அடைவது எனும் இரண்டே வழிகளைத் தவிர போரில் ஒரு போதும் சமரசம் என்பதே இருக்கக் கூடாது என்பதை அழகிலோடும், உணர்வு ரீதியிலும் வெளிப்படுத்தும் அந்த கதையின் காட்சிகளையும், பாத்திரங்களையும் அடிப்படையாக கோண்டே பேராண்மை எனும் திரைப்படத்தை இயக்கியிருப்பார் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். ‘எதை படிக்கறீங்களோ இல்லையோ அரசியல் பொருளாதாரத்தை படிங்க‘.. ‘சர்வதேச அரசியலை தெரிஞ்சுக்காம உள்ளூர் அரசியலை புரிஞ்சிக்க முடியாது’.., ’பொதுவா படிக்கலேனாதான் திட்டுவாங்க, இவங்க என்னடான்னா படிச்சா அடிக்கறாங்களே’ எனும் வசனங்களின் மூலமாகவும், காட்சியமைப்புகளின் வாயிலாகவும் எளிய மக்களின் வாழ்வியலையும், அரசியல் போராட்டங்களையும் காத்திரமாக வெளிப்படுத்தியிருப்பார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
”உனக்கான அரசியலை நீ பேசாவிட்டால், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்” எனும் புரட்சியாளர் லெனின் அவர்களின் எச்சரிக்கை கவனிக்கத்தக்கது. ’தேர்தல் அரசியலை’ கடந்து ’மக்கள் அரசியல்’ குறித்த உரையாடலை நாம் துவங்க வேண்டும்.
கட்டுரையாளர்:
இங்கு அரசியல் பேசவும்
கட்டுரையாளர், மார்க்சிய கருத்துரையாளர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.