The politics of tamil short story (Vannadasan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

 

“வண்ணதாசனின் புனைகதை உலகம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளால், அவற்றினூடே ஓடும் மென்மையும் நொய்மையுமான மன உணர்வுகளால், சுற்றம் மற்றும் நட்புக்களோடு கொண்டிருக்கும் அளப்பரிய நேசத்தால் ஆனது.”-என்று பேராசியரும் நல்ல மொழிபெயர்ப்பாளரும் கவிஞருமான எம்.ஏ.சுசீலா குறிப்பிடுவார். திருநெல்வேலி சைவப்பிள்ளைமார் குடும்பப்பின்னணியில் வைத்து அன்பையும் நேசத்தையும் அள்ளித்தரும் கதைகள் இவை எனச் சொல்பவர் பலருண்டு.

ஆங்கிலத்தில் Folklore என்று சொல்வதைத் தமிழில் நாட்டார் வழக்காறுகள் என்கிறோம். அதை ஏதோ கிராமப்புறம் சார்ந்தது என்றே பலரும் புரிந்து வைத்திருக்கிறோம். அப்படி அல்ல அது. ஏதேனும் ஒரு மக்கள் குழுவுக்கேயான பிரத்தியேகமான வழக்காறுகளை –அது நகர்ப்புறம் சார்ந்தும் இருக்கலாம்-ஒரு தொழில் சார்ந்தும் இருக்கலாம்-அவற்றையெல்லாம் Folklore என்றே குறிப்பிடுகிறார்கள்.வண்ணதாசனின் சிறுகதைகளை திருநெல்வேலி டவுண் சார்ந்து வாழும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் பண்பாட்டின் மீது காலூன்றி நின்று மனிதப்பொதுமையான உணர்வுகளைப் பேசும் Folklore என்று குறிப்பிடத் தோன்றுகிறது. அப்படிப் பார்த்தால் தன் மண் சார்ந்து எழுதுகிற ஒவ்வொரு எழுத்தாளனுமே ஏதோ ஒரு வகையில் ஒரு Folklorist தான்.

வண்ணதாசன் என்னும் ரசிகர் ...

நாட்டார் வழக்காறுகள் குறித்து தோழர் அந்தோனியோ கிராம்ஷி சொன்ன வாக்கியமும் கூடவே நினைவுக்கு வருகிறது.’அது வெகுமக்களின் உலகக் கண்ணோட்டம்.முற்போக்கு மற்றும் பிற்போக்கான கருத்துகளின் அருங்காட்சியகம்.காமன் சென்ஸ் எனப்படுவதே தத்துவத்தின் நாட்டார் வழக்காறுதான் .’கதைக்குள் வரும் மாந்தர்களின் கருத்துநிலை விமர்சிக்கப்படாமல் அப்படியே கதைகளுக்குள் வருவதால் இக்கதைகள் கிராம்ஷி சொன்னதுபோன்ற அருங்காட்சியகமாகவும் சில சமயம் தோற்றம் கொள்கின்றன.

வண்ணதாசனின் சிறுகதைகள் ஒரு பகுதி மக்களின் அக வரலாற்றில் பயணப்படுகிறவையாக இருக்கின்றன.புற உலகோடு அவை கட்டாயமாக இணைப்பைக் கொண்டிருக்கின்றன-ஒருசில கதைகள் தவிர்த்து.ஒரு மகத்தான அகக்காட்சிகளின் கலைஞர் என்று சௌந்தர் குறிப்பிடுவதும் ஒருவகையில் சரிதான்.

வண்ணதாசன் வாழ்க்கையைப்  பார்க்கிறாரா? வாழ்க்கைச் சித்திரங்களைப்  பார்க்கிறாரா? புற உலகத் தோற்றங்கள் இவரை  வெகுவாக  ஆகர்ஷிக்கின்றன. இவற்றை க் கிரகித்துக் கொள்ளும்  பொறிகள் அவருடையவை. வெகு நுட்பமாக இந்த நுட்பங்களை வெகு நேர்த்தியாகச் சொல்லத் தெரிந்தவர் அவர். இவை திறமைகள். இது ஒரு சம்பத்து; இது ஒரு வில்லங்கம். வாழ்வு பற்றிய தன் அபிப்ராயத்தை ரேகைப் படுத்தும் பணியில் இத் திறமைகள் பின்னொதுங்கி உதவும் போது, இது சம்பத்து. பொறிகள் விரிக்கும் கோலங்களின் அளைதல் வாழ்வின் மையத்துக்கே நகர முட்டுக்கட்டையாகும் போது இது ஒரு வில்லங்கம்.

இக்கதைகளில் வாழ்வு பற்றி ஒரு மயக்க நிலை ஊடாடி நிற்கிறது. விழிப்புடன் வாழ்வை க்கவனித்து, அதன் முழு வீச்சை கிரகித்துக் கொள்ளும் உன்னிப்பைத் தூண்டுவதற்கு பதிலாக, மயக்கத்தின் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.”- என்பது சுந்தரராமசாமி அவர்களின் கணிப்பு.வண்ணதாசனின் இரண்டாவது தொகுப்பான ‘தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்’ தொகுப்புக்கான முன்னுரையில் 1978இல் இப்படி அவர் எழுதியபோதிருந்தே இக்கணிப்போடு எனக்கு உடன்பாடில்லை.’சிதம்பரம் சில ரகசியங்கள்’ கதையில் வரும் விவாதம் போல ’மனுசங்களையெல்லாம் பார்த்தால் மட்டும் போதாது இன்னும் உத்துப் பாக்கணுமல்லவா?’ சுந்தரராமசாமி போன்ற மாபெரும் ஆளுமை வண்ணதாசனை உற்றுப்பார்க்கவில்லையோ என ஐயுற்றேன்.உற்றுப்பார்க்கையில்தான் புறத்தோற்றங்களின் சித்திரங்கள் அகவாழ்வுடன் கொண்டிருக்கும் ஜீவனுள்ள பிணைப்பைக் காண முடியும்.

எல்லோரும் சொல்லி, அப்புறம் வண்ணதாசனே சொன்னது “நான்சின்ன விஷயங்களின் மனிதனாக  மட்டுமே இருக்க விரும்புகிறேன்அப்படியே இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்க்கிறேன். ’சின்ன விஷயங்களின் மனிதன்’ . நன்றாகத்தான் இருக்கிறது.”

வண்ணதாசனின் நாட்டார் வழக்காறுகளாக மேற்சொன்ன கணிப்புகளை எல்லாம் கொண்டு வந்துவிட முடியும்.இவ்வழக்காறுகளின் மூலமாக அவர் மென்மையான ,மயக்கமான,அன்பை மட்டுமே முன்னிறுத்துகிறவராகத்தான் இருக்கிறாரா?பூப்பூவாய் விரியும் சினேகங்களை மட்டும்தான் பேசினாரா? வாழ்வின் வெக்கையையும் அனலையும்  பேசவில்லையா?பொருளியல் வாழ்வின் அழுத்தங்களை அவர் பேச வில்லையா? அவருடைய சிறுகதைகள் முன்னெடுக்கும் அரசியல்தான் என்ன?

வண்ணதாசன் - Buy Tamil Books Online - Books2Home -

  1. கலைக்க முடியாத ஒப்பனைகள்-1978- 15 கதைகள்
  2. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்-1978 -11 கதைகள்
  3. சமவெளி-1983-12 கதைகள்
  4. பெயர் தெரியாமல் ஒரு பறவை-1985-12 கதைகள்
  5. மனுஷா மனுஷா-1990- 10 கதைகள்
  6. கனிவு-1992-16 கதைகள்
  7. நடுகை -1996-22 கதைகள்
  8. உயரப்பறத்தல்-1998-17 கதைகள்
  9. பெய்தலும் ஓய்தலும் -2007 12 கதைகள்
  10. ஒரு சிறு இசை-2013 -15 கதைகள்
  11. ஒளியிலே தெரிவது -2010-12 கதைகள்
  12. கிருஷ்ணன் வைத்த வீடு -2015-12 கதைகள்
  13. நாபிக்கமலம் -2016-13 கதைகள்
  14. கமழ்ச்சி-2017 -14 கதைகள் 
  15. மதுரம் -2018 -11 கதைகள் 

ஆகிய 15 தொகுப்புகளில் சேகரமாகியுள்ள 176 சிறுகதைகளை(சிநேகிதிகள் கதை இரு தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது) ஒருசேர வாசிக்கையில், எல்லா மகா கலைஞர்களையும் போல வண்ணதாசனும் ’பேசாப்பொருளைப் பேசவே’ கதை எழுதுவது புலப்படுகிறது.அவருடைய கதைகளின் முகங்களாகச் சிலவற்றை அடையாளப்படுத்தலாம் என்று தோன்றுகிறது. இதுபோன்ற வகை பிரிப்புகள் புரிந்துகொள்ளும் வசதிக்காகவேயன்றி ஒவ்வொரு கதையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

முகம்-1:

 1983இல் வெளியான ’சமவெளி’ தொகுப்பிலுள்ள ’வருகை’ கதையில் வரும் இப்பகுதியை வாசிப்போம்.மேற்குறிப்பிட்ட அத்தனை கணிப்புகளையும் தாண்டிப் புதிய முகம் காட்டும் பத்தியாக இது நிற்கிறது: 

”வழியவழிய விம்மிக் கிடக்கிற சரக்குகள் மூடின தார்ப் பாயுடன் ஒரு லாரி, கடைக்கு முன்னால் ரோட்டில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் கொஞ்சம் தயங்கி நின்றது. அவ்வளவு சரக்குகளுக்கும் மேல், அவ்வளவு வெயிலுக்கும் மத்தியில், மேகத்திலிருந்து இறங்கினது போல, அதில் ஒருத்தன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். லாரி நின்று நின்று நகர்கிறபோதெல்லாம், கடையிலுள்ள பழங்கள்மாதிரி, அவனுடைய தலை லேசாக அசைந்து கொடுத்தது. பக்கா, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இப்படி நமக் கெல்லாம் நிம்மதியாகத் தூங்க முடியுமா?’ என்கிறதுமாதிரிக் குஞ்சுவைப் பார்த்தாள்.

லாரி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இடம் கிடைத்ததும் வேகம் அடைந்து, வேர் ஹவுஸ் பக்கம் போகப்போக, எங்கிருந்து வந்தார்கள் என்பது தெரியாதது போல் ஒரு ஏழெட்டுப்பேர் தடதடவென்று லாரியோடு ஓடினார்கள். இருபத்தைந்து வயதுமுப்பது வயதுநாற்பது வயது என்று எல்லோரும் லாரியின் பின்னாலேயே சத்தம் போட்டுக்கொண்டு ஓடினார்கள். சிலர் லாரியின் பின்பக்க வளையங்களையும் கொக்கிகளையும் பிடித்துக்கொண்டு ரொம்பச் சுலபமாக ஏறி ஜெயித்துவிட்டது போல் சரக்கின் மேல் நின்றுகொண்டு இன்னும் பின்னால் ஓடிவருகிறவரைப் பார்த்துச் சிரித்தார்கள்

இப்படி ஓடியவர்கள், ஓடினவர்களில் முந்தியவர்கள், முந்திய வர்களில் லாரியில் ஏறினவர்களில் சரக்கு லாரியின் டிரை வருக்குச் சிநேகிதமானவர்கள், அவர்களுக்கு மட்டும் இன்றைக்கு லாரியிலிருந்து வேர் ஹவுஸ் கோடவுனுக்குச் சரக்கு இறக்குகிற வேலை கிடைக்கும். அவர்கள் மாத்திரம் இன்றைக்கு உடம்பு முழுவதும் வியர்வையும் முகம் முழுவதும் சிரிப்புமாக வருவார்கள். அவர்கள் மாத்திரம் பாட்டையா கடையில் அரிஷ்டம் குடிப்பார்கள். ரொட்டி சால்னா சாப்பிடுவார்கள். ஆனால் நாளைக்கும் இப்படி ஒரு சரக்கு லாரி வர வேண்டும். பின்னாலேயே ஓட வேண்டும். ஓடி ஜெயிக்க வேண்டும்.

பக்காவுக்கு மறுபடியும் குடல் அறுந்து போகிறமாதிரி அவர்கள் ஓடின ஓட்டம் கண்ணுக்கு முன்னால் தெரிந்தது. அந்த லாரி டிரைவருக்கு, பின்னால் இப்படி ஓடிவருவது தெரியத்தானே செய்யும். அவனேகூட ஒரு காலத்தில் இப்படி ஓடியும் இருந்திருப்பான் இல்லையா?கொஞ்சம் நிறுத்தி ஏற்றிக்கொண்டால் என்ன?இப்படி ஏன் ஓட ஓட அடிக்க வேண்டும்?வயிற்றுக்குக் கால் முளைத்து ஓடுகிறது மாதிரி,இது என்ன கொடூரம்?”

வண்ணதாசன் தன் சிறுகதைகளின் மூலம் பேசும் அரசியல் என்ன என்கிற கேள்விக்கு ’ஒரு’ விடையாக இந்தப் பகுதியை எடுத்துக்கொள்ளலாம். அவர் கதைகளின்  ஒரு முக்கியமான முகம் இது.பொதுச் சமூகத்தின் கவனம் பெறாத உதிரிப் பாட்டாளிகள்,வீடுகளில் உழைக்கும் பெண்கள்,வேலைக்காரர்கள், உடலை விற்கும் பெண்கள்,குழந்தை உழைப்பாளிகள்,வேலை கிடைக்காதவர்கள்,கைவிடப்பட்ட அனாதைகள் என விளிம்புநிலை மக்களான  இவர்கள் மீதும் இவர்கள் வாழ்நிலை மீதும் நம் கவனத்தைக் குவிக்கும்-பதட்டத்துடன் குற்ற உணர்வு கொள்ள வைக்கும்- நுட்பமான வரிகளை வண்ணதாசன் தன் சிறுகதைகளில் எழுதிக்கொண்டே இருக்கிறார்.அவருடைய சிறுகதைகளில் இத்தகைய எளிய மனிதர்களின் ஒரு பெரிய உலகமே எழுந்து நின்று நம்மைத் துயர் கொள்ளச் செய்கின்றது

.ஒரு வரியில் முழுவாழ்வின் வலியையும் சுமையையும் சொல்லிவிடும் மொழி அவருடையது- “வயிற்றுக்குக் கால் முளைத்து ஓடுகிறது மாதிரி” “குடல் அறுந்து போகிற மாதிரி அவர்கள் ஓடின ஓட்டம்” என்ன மாதிரியான வரிகள்! பசி துரத்த ஓடும் ஒரு வாழ்க்கையை இதைவிட மனம் பதைக்கச் சொல்லிவிட முடியுமா?

ஒரு லாண்டரியில் வேலை பார்க்கும் கீழ் நடுத்தர வர்க்கத்துச் சிறு பெண்ணின் பார்வையில் இவ்வரிகள் சொல்லப்படுகின்றன. அவள் அனுபவ எல்லைக்குள், டிரைவர் மீது குற்றமாகச் சொல்லி முடித்தாலும் என்ன வாழ்க்கை இது என்று நம் வாசக எல்லை இன்னும் மேலே விரிந்து சமூகத்தின் மீதான விமர்சனமாகப் பொருள் கொள்கிறது.

கலைக்க முடியாத ஒப்பனைகள் தொகுப்பிலுள்ள ’மிச்சம்’  ஒரு துன்பியல் காவியம்போல என்றென்றும் அழியாச்சித்திரமாக மனதில் நிற்கும் கதை. உதிரி உழைப்பாளிகளையும் குழந்தைத் தொழிலாளர்களையும் பாலியல் தொழிலாளியையும் நகராட்சித் துப்புரவுத் தொழிலாளியையும்(தூப்புக்காரி) ஒரே கோட்டில் நிறுத்தி நம்மைக் குற்ற மனம் கொள்ளச் செய்யும் கதை.மஞ்சள் நிற வேனில் அதிகாலை பஸ் ஸ்டாண்டுக்கு வரும் சோடா,கலர் காலி பாட்டில் கிரேடுகளை இறக்கி வைத்துவிட்டு,அதற்குக் கூலியாக ஒவ்வொரு பாட்டிலிலும் அடியில் மிச்சமாகத் தேங்கியிருக்கும் எச்சிற் பானத்தை உற்சாகக் கூவலுடன்  சிறு பையன்களான குட்டியும் சோணையும் குடித்துக்கொள்ளும் காட்சி ஒரு குறியீடுபோல அமைந்து நம் மனதை அசைக்கிறது..மிச்சமும் எச்சில் பட்டதுமான வாழ்வைத்தானே இவர்கள் வாழ்கிறார்கள்.

Vannadasan wins Sahitya Akademi award || 'ஒரு சிறு இசை ...

கலைக்க முடியாத ஒப்பனைகள் தொகுப்பின் “ பாம்பின் கால்” மற்றும் சமவெளி தொகுப்பில் வரும் ‘கூறல்’ ஆகிய இரு கதைகளிலும் சவரத்தொழிலாளிகள் மையமான கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.இன்னொரு கதையில் வரும் சுரேஷ் சலூன்கடை வைத்திருந்தாலும் கதை நாயகர்களின் நண்பனாக மட்டுமே வந்து நிற்கிறார். இவ்விரு கதைகளில்,அவர்களின்  வறுமையும் இல்லாமையும் பேசப்படுவது மட்டுமின்றி அவர்களின் தொழில் சார்ந்த ஈடுபாடும் நுட்பமான திறன்களும் உளவியலும் பேசப்படுகின்றன. பிறரால் ஆகாததை எளிதில் செய்ய முடிகிற கலைஞர்களாக இச்சவரத்தொழிலாளிகள் சித்தரிக்கப்படுவது இக்கதைகளின் பலம்.

’சுவர்’ கதையில் வீட்டுக்கு(பழைய காலத்து மட்டப்பா வைத்த காரைவீடுகள்) வெள்ளையடிக்க வரும் நாராயணன் இன்னொரு உதிரித்தொழிலாளி-நம் சங்க பாஷையில் சொன்னால் முறைசாராத்தொழிலாளி- அக்கதையை வண்ணதாசன் விரிவாகச் சித்தரிக்கும் விதத்தில் நாமே வீடு பூராத்துக்கும் வெள்ளையடித்த களைப்பே உண்டாகிவிடுகிறது.இரண்டு நாட்களுக்கு முன்னால் வீட்டுக்கு வந்து சுண்ணாம்பை நீத்தி வைப்பதில் துவங்கும் வேலை அடுப்படியை வெள்ளையடித்து முடிப்பதோடு நிறைவு பெறும்.அதை வெறும் வேலை என்று பாராமல் அத்தொழிலாளி கொள்ளும் ஈடுபாடு கதையின் மையமாகிறது.

“நாராயணனுக்குத் தெரியும் ,எல்லா வீட்டுக்காரர்களும் அடுப்படிச் சுவர்கள் நிறம் பெறுவதையும்  சுத்தமடைவதையும் வைத்தே பொதுவாக வெள்ளையடிப்பு பற்றிய முடிவுக்கு வருகிறார்கள் என்று.

நாராயணன்,மட்டப்பா போட்ட இந்தக் காரை வீடுகளின்  கட்டை வெளிகளை அடிக்கும்போது எடுக்கிற சிரத்தையைக் காட்டிலும் கூடுதலாக அடுப்படியைக் கழுவி விடவும்  சுண்ணாம்படிக்கவும்  முயல்கிறதுண்டு.கழுத்து வலிக்க நிமிர்ந்து ,விம்பல் விழாமல் ,மிகுதியும்  பனங்கம்பு பாவின கட்டைவெளிகளில் சிராய் பூசிவிடாமல் அடிக்கிறதெல்லாவற்றையும் விட அடுப்படிக்கு வெள்ளையடிப்பதானது சந்தோஷம் கொடுப்பது.”

இந்த சந்தோஷம் என்கிற வார்த்தை முக்கியமானது.அடுப்படிக்கும் அடித்து முடித்துவிட்டு வீட்டு ஆச்சி  போட்ட சோற்றைத் தின்னும்போது ”நாராயணன் ,எதிரே பார்க்கிறதுக்குத் தெரிந்த அடுக்களைச் சுவர்களையே பார்த்தான்.இன்னும் ஒரு சுற்றுக்கூட அடிக்கலாம் என்று தோன்றியது.புகையுடன் சமமாகச் ஜெயிக்காதது போல் பட்டது.” உழைக்கும் வர்க்கத்தின் முக்கிய குணங்களில் ஒன்றான உழைப்பைக் கொண்டாடும் கலாச்சாரம் பதிவான இடம் இது.புகைபடிந்த சுவருடன் அத்தொழிலாளி ஒரு சமரை நடத்துகிற மனநிலை கொள்கிறான்.

பெயர் தெரியாமல் ஒரு பறவை தொகுப்பிலுள்ள வேறு வேறு அணில்கள் கதையில், சிலம்பாயி என்னும் உதிரி உழைப்பாளியின் கோபம் கொப்பளிப்பதைச் சொலியிருக்கிறார்.

வெற்றிலை,லேசான சாராய வாசனை(சிலம்பாயிடம் கேட்டால் ‘சுவர்முட்டி’ என்று அல்லது ‘பழரசம்’ என்று பேர் சொல்வாள்) இந்த மூன்றும் இல்லாமல் அவள் இல்லை.இப்படி அறிமுகமாகும் சிலம்பாயி ஒரு நாள் ,

தன் இந்தத் தொழில் குறித்தும் தன் வாழ்நிலை குறித்தும் அந்த வீட்டு அய்யாவிடம் பகிர்ந்து கொள்கிறாள்” துட்டுக்கு செய்யுற வேலையா இது.அம்மாவங்க தர்ற நாலு ரூபாயை வச்சுக் கைப்பிள்ளைக்கு தினம் ரொட்டி வாங்கிப் போட முடியுமா, இல்லை, சீனியம்மாவுக்கு  உள்ளங்கழுத்துச் சங்கிலி பண்ணிப் போட முடியுமா?…வீட்டில இருக்க இருக்க அடிதான்,உதைதான்,கச்சராதான்.ஒரு திருப்பு கழுத்தைக் கட்டிக்கிட்டு சினிமாப்பாத்துட்டு வந்தால் மட்டும் ஆயிடுச்சா.மறுமடியும் வீட்டுக்குத்தானே வரணும்.வீட்டில் என்ன இருக்கு.அப்படி இழுத்துப் பிடிச்சு உக்கார வைக்கிற மாதிரி.இப்படி வெளியில் வந்தாலாவது கூட நாலு ஜனம் ,ரெண்டு செடி-கொடி,கண்ணுல ,மொகத்தில படும்.”

ஒரு இருபது ரூபாய் அட்வான்ஸ் கேட்கிறாள்சிலம்பாயி.அவளுடைய மகள் சீனியம்மாவின் நடத்தை பற்றிய புகாரினால் அவளையும் வேலையை விட்டு நிறுத்தும் உத்தேசத்தில் அந்த வீட்டு அம்மாள் இருக்க,இவள் அட்வான்ஸ் கேட்கவும் அவர் கறாராக மறுக்கிறார்.

“பத்து ரூபாயாவது கண்டிப்பாத் தரணும்.இல்லேண்ணு சொல்லிரப்படாதும்மா”

“பத்துப் பைசா கூட இல்லை”

இந்த இடத்தில் சிலம்பாயி காயம்பட்டு விட்டாள்.

“பிச்சைக்கு வந்தா நிக்கிது.உங்ககிட்ட,பாடுபடுகிறவ ஒரு ஆத்திர அவசரத்துக்கு கேட்டா,உண்டு –இல்லைன்னு அமர்ந்த வார்த்தையாச் சொல்லாம,இது என்னம்மா பெரிய பேச்சு” 

“எப்படிப் பேசணும்னு நீ ஒண்ணும் சொல்லிக்கொடுக்க வேண்டாம்,போய்ச்சேரு”

“பின்னே இங்கேயேவா காத்துக்கிடக்கப்போறோம்”

உழைப்பாளியின் தன்மான உணர்வோடு எதிர்க்குரல் எழுப்பும் இக்காட்சி சிலம்பாயியை படைப்பாளி கௌரவிக்கும் இடமாகும்.

இந்தக்கதையையும் ‘நரகத்துக்கு வெளியே கொஞ்சம் சொர்க்கம்’ கதையையும் வாசிக்கையில் கு.அழகிரிசாமியின் “காற்று” கதை நினைவுக்கு வந்து கனம் சேர்த்தது.இருக்கும் இடத்தின் இறுக்கமும் புழுக்கமும் வெளிக்காற்றை நோக்கித்தள்ளும் புற யதார்த்தம் மனித இயல்புகளை எப்படித் தகவமைக்கின்றன என்பதே இக்கதைகளின் அடிநாதம்.

குழந்தை உழைப்பாளிகள் மீது பரிவும், அந்நிலை குறித்த இயல்பான கோபமும் வண்ணதாசனின் பல கதைகளில் வெளிப்பட்டுள்ளன.மூன்று கதைகளை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.ஒன்று எல்லோரும் கொண்டாடும் ’நிலை’.அப்புறம் ’வாழையடிகள்’,இன்னொன்று ‘இமய மலையும் அரபிக்கடலும்’

தான் வேலைக்கு நிற்கும் குடும்பத்தினர் எல்லோரும் தேரோட்டம் பார்க்கப் போக, ஆசையிருந்தும் போக வழியின்றி வீட்டுக்குத் தண்ணீர் பிடித்துக்கொண்டும், வீட்டு ஆச்சிக்குக் காவலாகவும் பூட்டிய வீட்டுக்குள் அடைபட்டு இருக்க நேரும் கோமுவின் கதைதான் நிலை.தேரோட்டம் பார்த்துவிட்டுச் சிரிப்பாணியாகத் திரும்பிவரும் குடும்பத்தாரை எதிர்கொண்டு சிரித்துக்கொண்டே  கோமு கைப்பிள்ளையை வாங்கின பொழுது-

“என்னடி பண்ணிக்கிட்டிருந்தே  இவ்வளவு நேரம்,ஆற்றுத்தண்ணீர் பிடிச்சி வச்சியா இல்லையா?”என்று தெய்வு ஆச்சி கேட்டாள்.”பிடிச்சாச்சு” என்று கோமு சொன்னதைக் கேட்காமலேயே எல்லோரும் உள்ளே போனார்கள்.

இந்த நாலு வரியில் கோமு என்கிற குழந்தை உழைப்பாளியின் வாழ்வைச் சித்திரமாகத் தீட்டிவிட முடிகிறது.கேள்வி கேட்டுவிட்டு அவள் சொன்ன பதிலைக்கூடக் கேளாமல்,அவளைப் பொருட்படுத்தாமல், நகரும் குடும்பத்தின் உளவியல் நமக்குக் கோபத்தை உண்டாக்குகிறது.வண்ணதாசனின் கலையின் அரசியல் இது.

’வாழையடிகள்’ என்கிற செம்மலரில் வெளியான கதையில் வரும் சித்திரை வடிவு, முள்ளுவெட்டப்போன அவளுடைய அம்மாவைச் சாராயம் காய்ச்சப் போனதாகப் பொய்க்கேஸ் போட்டுப் போலீஸ் இழுத்துக்கொண்டுபோக மானம் தாங்காமல் அவளுடைய அப்பா மேலக்கிணற்றில் விழுந்து செத்துப்போக நகரத்தில் மேட்டு வீட்டுக்கு வேலைக்கு வந்து சேருகிறாள்.மரத்தடியில் துணி தேய்க்கிற குடும்பத்தின் குழந்தையான  பாண்டியம்மாள் முதல் நாளே இவளோடு நட்பாகிறாள்.அந்த இரு குழந்தைகளின் குழந்தைமையை வெளிப்படுத்தும் இடங்கள் கலங்க வைப்பவை.

எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய ...

இமயமலையும் அரபிக்கடலும் கதையில் இரண்டு இடங்களை கண்ணீரில்லாமல் வாசித்துக் கடக்க முடியவில்லை.வேறொருத்தியோடு வாழப்போய்விட்ட தகப்பன்.இரண்டு பெண்குழந்தைகளில் சின்னவளான தங்கத்தை டாக்டரம்மா வீட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறாள் தாய்.அவள் மகளுக்கு வழி சொல்லி அனுப்பும் இடம்.”பெரிய வேலை ஒன்றும் இருக்காது.ரூம் ரூம்பாக ஜன்னல் எல்லாவற்றையும் தூசி தும்பு இல்லாமல் துடைக்க வேண்டும்.சாப்பிடச்சொன்னால் சாப்பிடக்கூடாது.அம்மா சேர்த்துப் பொங்கியிருப்பாள் என்று சொல்லிவிட வேண்டும்.யாரும் குற்றம் சொல்கிறமாதிரி நடந்துகொள்ளக் கூடாது.சரியா?”

அவள் முதல் முதலாக வேலைக்குப் போகும் வீட்டுக்கு நடந்தே போகிறாள்.வழி தப்பி விடுகிறாள்.ஒரு தாத்தாவின் வழிகாட்டலில் மீண்டும் நடக்கிறாள்.அப்படி நடக்கும்போது வழியில் அவளிடம் இல்லாத பேனா ஏதாச்சும் கீழே கிடக்காதா என்று யோசித்தபடி நடக்கிறாள்.”தெருவில் கிடந்தால் எடுத்துக்கொள்ளலாம்.அது தப்பு இல்லை.” என்று அவள் தனக்குள் பேசிக்கொள்கிறாள்.இந்த இரண்டு சின்ன வரிகளைக் கடந்து போகவே முடியவில்லை.குழந்தைகளின் நேர்மை எப்போதும் நம்மை நடுக்குறச்செய்பவை.நேர்மையற்ற உலகை நாம் படைத்து எழுப்பியிருக்கிறோம்.அப்பழுக்கே இல்லாத இக்குழந்தைகளுக்காக அதைத்தானே விட்டுச்செல்லப்போகிறோம்?களங்கமற்ற இக்குழந்தைகள் உழைத்துப்பிழைக்கும் அவலத்தை ஒழிக்க ஒரு சமூக ஏற்பாடு இல்லையே நம்மிடம்.அச்சிறு குழந்தைகளின் கைகளைப் பற்றி மன்னிப்புக்காக மன்றாடத் தோன்றியது வண்ணதாசனின் இவ்வரிகளை வாசிக்கையில்.

’பட்டறைகள்’ என்கிற கதையில் போகிற வேகத்தில் வந்து விழுகிற இந்த நாலு வரிகள் நம்மை உலுக்கிவிடுகின்றன: 

”இவன் மாத்திரம் என்றில்லை, நிறைய சிறு பையன்கள் வர ஆரம்பித்து விட்டார்கள். பிச்சாண்டி லேத்தில் ஒன்பதுபத்து வயதுப் பையன் ஒருத்தன் நிற்கிறான். ‘அடுத்த வருஷம் புஸ்தகம் வாங்கணும். ரெண்டு மாசத்துக்கு வேலை போட்டுக் கொடுங்க ஸார்என்று முன்னீர்ப்பள்ளம் பையன் ஒருத்தன் இவன் காதுபடக் கேட்டிருக்கிறான். மாதம் முப்பது ரூபாய்ச் சம்பளத்துக்கு, ரெடியாக, ஆறும் ஏழும் படித்துவிட்டு மேற்கொண்டு முடியாமல், ஒர்க் ஷாப்பில் தூக்குச்சட்டியோடு வந்து நிற்கிறவர்கள் இந்த ஹைரோட்டில் ஒரு முப்பதுக்கு மேல் தேறும்.”

1983இல் எழுதப்பட்ட இக்கதையில் வரும் வாழ்நிலை 70-80களுக்கு உரியது என ஒதுக்கிவிட முடியாது. இன்றும் நகரங்களின் பட்டறைத்தெருக்களில் தொடரும் துயரம்தான்.புலம்பெயர் தொழிலாளிகள் லட்சக்கணக்கில் வந்து இந்த இடங்களில் இன்று நிற்கின்றனர்.

ஒரு எளிய ரொட்டி விற்கும் மனிதனைப் பற்றிய  கதையான “பெயர் தெரியாமல் ஒரு பறவை” 84இல் முதல் தடவை வாசித்தபோது, உடைந்து நொறுங்க வைத்த கதை.அடிபட்டுக் குப்புற வீழ்ந்து கிடந்த ஒரு பறவையைக் கண்ட நினைவுடன் திண்ணையில் அமர்ந்து கொட்டும் மழையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த மழையில் நனைந்தபடி வீட்டு முன் கதவைத்தள்ளிக்கொண்டு தன் சைக்கிளுடன் உள்ளே வருகிறார் ரொட்டி விற்கிறவர்.அவர் நனைவது பற்றிக் கவலையே இல்லாமல் சைக்கிளின் பின்னால் மழைத்தாள் சுற்றி கட்டியிருந்த ரொட்டி டப்பாவைத்தூக்கிக்கொண்டு வந்து ”என்னைப் பெத்த அம்மா” என்றபடி திண்ணையில் வைத்து பேப்பர் கேட்டு வாங்கி ரொட்டிகளைக் காப்பாற்றும் கவனத்திலேயே இருக்கிறார்.’மழைக்கு முன்னலே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சேர்த்துடலாம்னுல்லா நினைச்சேன்’ என்று ரொட்டியுடன் பேசிக்கொண்டே இயங்குகிறார்.அதைப்பார்க்க, சொல்ல முடியாத துன்பம் கொடுத்தது.

கதையை வண்ணதாசன் இப்படி முடித்திருப்பார்.

” உள்ளே போய்க் கொடியில் கிடந்த துண்டை உருவி எடுத்து அவர்மேல் போட்டேன். கனமான அந்தத் துண்டு தோளில் விழவும்அக்‘; என்ற சத்தத்துடன் ஏறிட்டுப் பார்த்தார். “மொதல்லே, எழுந்திரிச்சுத் தலையைத் துவட்டும்யா”. ‘அக்மறுபடியும் லேசாகத் திடுக்கிடுவது போன்ற அந்த சப்தத்துடன், மேலே விழுந்த துண்டைப் பற்றிக்கொண்டே எழுந்தார். லேசாகக் கண் கலங்கினதுமாதிரி இருந்தது. நடைப்பக்கம் போய், “அய்யா, துவட்டுகிறதுக்குப் பழைய துணி எதுவும் இல்லையாஎன்றார். “சும்மா துவட்டும்என்ற குரலுக்குக் கீழ்ப்படிவதுபோல மடமட வென்று துவட்டிக்கொண்டார்.

தீப்பெட்டி இருக்காய்யா?” என்று என்னிடம் வாங்கிப் பீடி பற்றவைத்துக்கொண்டே, குத்தவைத்துக் கீழே உட்காரப் போனவர் தான், வெளியே பார்த்துக்கொண்டே – “நாயி உள்ள வந்து எதையோ கவ்விக்கிட்டுப் போகுதேஎன்று சொன்னார்.

எனக்குப் புரிந்துவிட்டது. “ரொட்டியை இல்லைஎன்று மட்டுமே அவரிடம் சொல்ல முடிந்தது.”

என்ன ஒரு துயரகாவியம் இக்காட்சி?ஒரு சுத்தமான துண்டுக்குத் தகுதியற்ற தலையா உன் தலை தோழா என்று மனம் வெடித்து வரும் – ஒவ்வொரு முறை இக்கதையை வாசிக்கும்போதும்.

களங்கமின்மையைத் தேடி ...

அவர் விஸ்தாரமாகச் சொல்கிறார்.நிறையக் காட்சிப்படுத்துகிறார்.கதைக்கு வராமல் வெளியே சுற்றுகிறார் என்கிற கருத்துக்களெல்லாம் ’உற்றுப்பார்க்காததால்’ வந்த வினைகள் அல்லது எதிர்வினைகள். வண்ணதாசன் அக மற்றும் புறக்காட்சிகளாக விரிப்பது ஒரு திரைச்சீலை.அத்திரைச்சீலையில் அவர் வரையப்போவது ஒரு ஓரத்தில் ஒரு சிறு ஓவியம்தான்.ஆனாலும் அவ்வளவு பெரிய திரையில் வரையும்போதுதான் அச்சிறு தருணம் துல்லியப்படுகிறது.இது வண்ணதாசனின் பாணி என்பதை ஏற்க வேண்டும்.வண்னதாசனின் உச்சமான கதைகளில் இக்கதை ஒன்று. நம் வாழ்வின் ஓட்டத்தில் எப்போதேனும் நிகழ்கிற முக்கியமான தருணம் ஒன்றைக் கப்பெனப் பிடித்து நம் கையில் அப்படியே ஒப்படைப்பதுதான் வண்ணதாசனின் கதைகளின் சாகசம்.

இதே கதையில் குப்புற செத்துக்கிடந்த பறவையைப்பற்றிய விரிவான விவரிப்பில் வரும் இந்த வரிகளை வேண்டாத விவரிப்பு என ஒதுக்கிவிட முடியுமா?

”குழந்தைகளை, மனிதர்களையெல்லாம் அடித்து இரவோடிரவாக இப்படி வாசல்களில் நிர்த்தாட்சண்யமின்றி எறிந்து போகிற சமீபத்திய இனக்கலவரங்களின் ஞாபகம் வந்தது. வயலில் அகோரமாய்ச் செத்துக்கிடக்கிற கிழவி, வரிசைவரிசையாக வயிறூதிக் கிடத்தப்பட்டிருக்கிற சிசுக்களின் வரிசையை அதிகப் படுத்த ஒருத்தன் கைகளில் ஏந்திவருகிற இன்னொரு மல்லாந்த குழந்தையின் ஊதின வயிற்றுத் தொப்புள், இறந்துகிடக்கிற தன் குழந்தையின் உடல்கண்டு, அதனருகே உட்கார்ந்து அழுகிற தகப்பனின் கிழிந்த முகம், அப்படிக் கிழிந்த நிலையில் ஒரு கைத்துப் போன சிரிப்புப்போலப் புகைப்படத்தில் பதிவாகியிருப்பது எல்லாம் கலந்து இந்த ஒற்றைப்பறவையாகக் குப்புறக் கிடந்தது.”

முகம் 2 :

வறுமை,இல்லாமை,போதாமை இவையே பெரும்பாலான வண்ணதாசன் கதைகளின் திரைச்சீலையாக அமைகின்றன.அவர் வேறொரு சித்திரத்தை வரையவே திரைச்சீலையை விரித்தாலும் நமக்கு திரைச் சீலையிலிருந்து பார்வையை விலக்கி ஓவியத்தின் மீது கவனம் கொண்டுவிடமுடியாதபடிக்கு அது நம்மைத் தாக்குகிறது.இரண்டையும் விரிப்பது அவர்தான்.சிலர் ஓவியத்தை மட்டும் பார்க்கிறார்கள்.சிலர் திரைச்சீலையைத் தாண்ட முடியாமல் தவித்து நிற்கிறார்கள்.வெகுசிலர் இரண்டையுமே –இதை அதில் வைத்துப்-பார்க்கிறார்கள்.

சுடுசோறு இல்லை. விரதம் விரதம்னு மிஞ்சிப்போன ரெண்டு நாள் பழையது பானையில் கிடக்கு. வேணும்னா வாங்கிக்கஎன்று வீட்டம்மாள் கேட்டபோது, அவள், “வேண்டாம்என்று சொல்லியிருந்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. எச்சில் இலையும் கையுமாய், மீசை மயிரில் பருக்கை ஒட்டத் தின்றுகொண்டிருந்த பிச்சைக்காரனை அவள் பார்த்திருக்காவிட்டால், ஒருவேளை தாராளமாகஅதை வாங்கிச் சாப்பிட்டிருப்பாள். அவ்வளவு பசி இருக்கத் தான் செய்தது. அந்தப் பிச்சைக்காரனுக்கும் தனக்கும் நிச்சயம் வித்தியாசம் இருப்பதாக அவள் நம்பினாள். மொத்தத்துக்கு வாங்கிச் சில்லரைக்கு விற்பதில் பெரிய வருமானம் வந்துவிடா விட்டாலும், அவளுடைய மகன், இந்நேரம் கோயில்வாசலில் சிறு சிறு அலுமினியக் கிண்ணங்களில் வைத்துக் குங்குமமும் மஞ்சள்கிழங்கும் விற்றுக்கொண்டிருப்பான் என்ற பெருமை அவளுக்கு இருந்தது.

வீட்டுக்கு முன்னால் வச்சுச் சாப்பிட்டு அசிங்கம் பண்ணிக் கிட்டு, என்னப்பா இதெல்லாம்?’ என்று தோரணையாகவே அந்தப் பிச்சைக்காரனை அதட்டிவிட்டுத் தண்ணீர் எடுக்கப் புறப்பட்டு வந்தாள். வெற்றுக்குடமே கனக்கிற மாதிரி இருக்கிறது.” என்று துவங்கும் ”சில நிமிர்வுகள் சில குனிவுகள்” கதை வயிற்றின் பசிக்கும் மனசின் மான உணர்ச்சிக்கும் இடையில் நடக்கும் உணர்ச்சிகரமான போராட்டமாக விரிகிறது.வழியில் ஒரு குழந்தை கீழே மண்ணில் போட்டுவிட்ட மரச்சீனிக்கிழங்குத் துருவல் பொட்டலத்தை எடுத்துத் தின்பதா கடந்து போவதா என்கிற  மனப்போராட்டம்.பிரியங்களையும் சினேகங்களையும் மட்டும் பாடிய கலைஞன் அல்ல வண்ணதாசன்.பசியையும் பட்டினியையும் உரக்கப்பாடிய கலைஞன் என்பதை உலகுக்குப் பிரகடனம் செய்யும் கதை இது.கு.அழகிரிசாமிக்கு எப்படி ஒரு ’திரிபுரம்’ கதையோ அதைப்போல வண்ணதாசனின் ’எக்காலத்துக்கும் நிற்கும்’ ஒரு கதை இது.  

இதற்கு இணையான இன்னொரு கதை “கிளைகள் இலைகள்”மாரடைப்பினால் மரண பயத்துடன் படுத்திருக்கும் சின்ன மாமாவைப் பார்க்கப்போகிறார்.’ரோமத்துல்லியத்தில் அறுந்து விழுந்து செருகக் காத்திருக்கும் மரணத்தின் கூர் விளிம்பால் மிகுந்த பயத்திற்கும் நிர்க்கதிக்கும் ஆளான முகம் சின்ன மாமாவுக்கு வந்திருந்தது.”

”…. ஒரே ஒரு பெண் குழந்தைக்கு மட்டும் திருமணமாகியிருக்க, மீதி இன்னும் ஐந்து பெண்களும் இரண்டு பையன்களும், தனக்குப் பின் யாருமற்று நிற்கப்போகிற உண்மைதான் அவரை அப்படிப் பயமுறுத்தியிருக்க வேண்டும். உண்மைக்கும் மரணத்துக்கும் பயப்படாமல் எப்படி இருக்க முடியும்? ‘ ‘இந்தப் பயலை ஒரு டிகிரி வாங்கக்கூட வைக்காமல் தெருவில் நிறுத்திட்டுப் போயிடுவேன் போல இருக்கேப்பாஎன்று மூர்த்தியை இழுத்து முன்னால் நிறுத்திக்கொண்டு சின்ன மாமா அழ, ப்ளஸ் டூ படிக்கிற மூர்த்தி அழ, எல்லோர் மூலம் படர்ந்து அமுக்கின துக்கத்தை வகிர்ந்து இருபுறமும் தள்ளி முன்செல்வதுபோல நான் சின்ன மாமாவின் கட்டிலில் உட்கார்ந்து, ‘அப்படியெல்லாம் நாங்க விட்டிருவோமா மாமா. எல்லாரும் இல்லையா?’ என்று சொன்னேன். எத்தனையோ பேர் இருக்க, இதை நான் சொன்னதும் மாமா எட்டி என் கையைப் பிடித்துக் கொண்டு தாரைதாரையாக அழுதார்.”அந்த வார்த்தையைப் பற்றிக்கொண்டு நம்பிக்கையுடன் மாமா எழுந்து விட்டார்.

இலக்கியவாதியின் பக்கங்கள் ...

ஆனாலும் அந்த வார்த்தைக்கு உண்மையாகத் தான் இருக்க முடியாதே.மூத்த பையனின் படிப்புச் செலவைக்கூட ஏற்கிற பொருளாதார நிலை தனக்கு இல்லையே என்கிற பயத்தில் அப்புறம் மூணு வருசம் மாமா வீட்டுப்பக்கமே போகாமல் தவிர்க்கிறார்.இந்த நடுத்தர வர்க்க மனநிலையை போதாமையிலிருந்து எழும் குற்ற மனதை இத்தனை துல்லியமாக எழுத முடியுமா என்னும் வியப்பை ஏற்படுத்தும் கதை இது.

ஜன்னல்,தாகமாய் இருக்கிறவர்கள்,வருகை,அந்தந்த தினங்கள்,திறப்பு,அடங்குதல்,சிறுகச் சிறுக,நீச்சல்,விளிம்பில் நிற்கிறவர்கள்,ஆறு,அந்தப்பையனும் ஜோதியும் நானும்,முழுக்கைச் சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரு,மாறுதல் ,அரச மரம்,அப்பாவைக்கொன்றவன்,ஒருவர் இன்னொருவர்,உயரம்,பூரணம்,வரும்போது இருந்த வெயில் என இக்கதைகள் அத்தனையும் வறுமையையும் நொடித்த வாழ்வையும் போதாமையையும் பேசும் கதைகள்.இல்லாமை மனித குணங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் ஆதரவாக நீளும் கைகளைப் பற்றிக்கொள்ளும் ஆவலில் காற்றில் துழாவும் கைகளும்,அன்பென்னும் சிறு முளையைப் பற்றிக்கொண்டு வறுமையின் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படாமல் கிடந்து உழலும் வாழ்க்கையே இக்கதைகளின் பாடுபொருள்- என்று இல்லாமையின் விதவிதமாக கோணங்களில் எடுத்துப்பேசும் இக்கதைகள் வண்ணதாசனின் கலையின் அரசியலை அழுத்தமாக நம் முன் வைக்கின்றன.அதற்காக, எதையும் வெளிப்படையாகவோ துருத்தலாகவோ சொல்லிவிடாமல் கலை அமைதி சற்றும் குலையாமல் நுட்பமான மொழியில் இக்கதைகள் நம்மிடம் வந்து சேர்கின்றன.

முகம் 3:

வண்ணதாசனின் கதைகள் அத்தனையிலும் பெண்கள் மையமான இடத்தைப் பெறுகிறார்கள். ஆணாதிக்கத்தின் சகல வடிவங்களையும் தங்கள் உடம்பிலும் மனசிலும் தழும்புகளாக ஏற்றுக்கொண்டு,பின்னும் அன்பு செய்பவர்களாக,அன்புக்கு ஏங்குபவர்களாக வளைய வருகிறார்கள்.கு.ப.ரா., தி.ஜானகிராமன்,வண்ணநிலவன் வரிசையில் ஆண்-பெண் உறவின் உச்சங்களையும் கீழ்மைகளையும் பேதமின்றிப் பாடிய கலைஞனாக வண்ணதாசனை அவருடைய கதைகள் காட்டுகின்றன. இந்தச் சுமார் 200 கதைகளிலும் எத்தனை நூறு விதமான பெண் மனங்களைப் படைத்தளித்துவிட்டார் என்கிற மலைப்பு ஏற்படுகிறது.

இரண்டு கதைகளை மட்டும் இங்கே இருசோற்றுப்பதமாக எடுத்துக்காட்டலாம்.’மிதிபட’ ஒரு கதை.இன்னொன்று ”எது தெரிகிறதோ அது”

கூலித்தொழிலாளியான புருசனால் துரத்தப்பட்ட பொன்னுலட்சுமி அண்ணன் வீட்டுக்குச் சுமையாகத் தொடர்ந்து இருக்க மாட்டாமல் மீண்டும் புருசனையே தேடித் தனியாக ஒரு பையில் ஸ்டவ் அடுப்பை எடுத்துக்கொண்டு போகிறாள்.

“என்ன மயித்துக்கு இங்க வந்தே?” 

என்கிற கேள்வியோடு அவன் அவளை வாசல்படியில் நிறுத்துகிறான்.

தான் வந்த எத்தனையோ பஸ்களின் டயர்களில் மிதிபடுவதற்கென்றே ரோட்டின் நடுவில் அறுவடைத் தானியக்கதிரைக் குவித்து ஒதுங்கி நின்றவர்கள் போல, இவனிடம் மிதிபட வாழ்க்கையைக் கொடுக்கும்படி இவளைத் தூண்டுகிற விசை எது

பொன்னுலட்சுமிக்குள் முடிவற்ற கேள்விகள் தெறித்துச் சிக்கலாகிக் கொண்டிருந்தபோது, கப்பென்று இருட்டுப் படர்ந்து வலையாக விழுந்தது. மில் சங்கின் சத்தம் உய்ங்கென்று கேட்டது. ‘லைன் மாத்துதானா, …’ என்று பொன்னுலட்சுமி நிதானித்து, மறுபடி வெளிச்சம் வரக் காத்திருந்த நேரத்தில், அவள் மேல் இரண்டு கைகள் விழுந்தன. உடம்பை இழுத்து நெருக்கி, மிகுந்த பரபரப்புடன், இந்த இருட்டே ஒரு அனுகூலம் போன்று வெறியுடன் அவள் முகத்துடன் முகம் அப்பியது, முத்துதான். அவன் கைகள், அவன் வாடை. இவ்வளவு நேரம் நாயை விரட்டுகிற மாதிரி விரட்டினவன், எவன் வரச்சொன்னான் என்று கேட்டவன்.

பொன்னுலட்சுமி மிகுந்த மூர்க்கமுடன் பலம் திரட்டி உதறித் தள்ளவும், அவன், இருட்டுக்குள், கதவு, சுவர் என்று எதனுடன் எல்லாமோ மோதி விழவும், மறுபடியும் வெளிச்சம் வந்ததுவெளிச்சம் முழுவதுமாகத் தான் வீழ்ந்திருப்பதைக் காட்டிவிடக் கூடாது என்பதுபோல, ஒரு மிருகம் நிகர்த்து, அவசரம் அவசரமாகப் பாய்கிற முயற்சியில், அவன் விழுந்து கிடந்த இடத்திலிருந்து வேட்டியைப் பற்றிக்கொண்டு எழுந்து5 “வெளியே போயிருஎன்று கத்தினான்.

பொன்னுலட்சுமிக்கு வேறு எந்த யோசனையுமின்றி வெளியே போவதற்கு மிகுந்த உடன்பாடு தோன்றிற்று. பையை எடுப்பதற்குள், அவள் குனியும்போது, இடுப்பில் அவன் மிதிக்கக்கூடும் என்ற பயத்தை மட்டும் தவிர்க்க முடியவில்லை.

TamilsNow Newsதமிழ் எழுத்தாளர் வண்ணதாசன் ...

காத்திருக்க ஒருத்தி’ என்று ஜெயகாந்தன் ஒரு கதை எழுதியிருப்பார்.கணவனின் வருகைக்காகக் காலமெல்லாம் வீட்டில் காத்திருக்கும் பெண்கள் பற்றிய குறுநாவல் அது.வண்ணதாசனின் இந்தக்கதைக்கு “மிதிபட ஒருத்தி” என்று பெயர் வைத்தால் இன்னும் கூடப் பொருத்தமாக இருக்கலாம்.குடும்ப வன்முறைச் சட்டமென்று ஒன்றைக் கொண்டு வரவேண்டிய அளவுக்குப் பெண்கள் மீதான வன்முறை உச்சத்தில் இருக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது.அந்த வன்முறைப் புள்ளிவிவரங்களின் ஒரு துளியாக இந்த ’மிதிபட’ கதையை வண்ணதாசன் வார்த்திருக்கிறார்.”பஸ்களின் டயர்களில் மிதிபடுவதற்கென்றே ரோட்டின் நடுவில் அறுவடைத் தானியக்கதிரைக் குவித்து ஒதுங்கி நிற்கும்” இந்திய விவசாயிகளையும் இந்தியப் பெண்களையும் அடுத்தடுத்து நிறுத்தி வைத்து இச்சமூகத்தின் முன் கேள்விகளை ஆவேசத்துடன் வீசும் கதையாக இதைப் பார்க்க வேண்டும்.

பொன்னுலட்சுமிக்கு நேர் மாறாகக் கணவன் மீது கடுமையான ஆத்திரத்தோடு அவனோடு சேர்ந்து வாழ்ந்தாலும் மனதால் ‘போடா..’ என்று விலகி நிற்கும் பிரேமா ”எது தெரிகிறதோ அது” கதையில் குழந்தையுடன் தாய் வீடு வந்திருக்கிறாள்.மதிய வெயிலில் நகராட்சிப் பூங்காவுக்குப் போய் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறாள்.

”கல்யாணம் ஆவதற்கு முன் எட்டு வருடங்கள் தினசரி நடமாடிய இந்த இடத்தின் திசை எப்படி விடுபட்டது என்பதை அவளால் தாங்கமுடியவில்லை. கல்யாணம் ஆகிப் போன இந்தப் பதினோரு வருடங்களில் தான் இதுவரை, நான்கு, எட்டு, பதினாறு என அறிந்திருந்த அத்தனை திசைகளையும் பிடுங்கிக் கொண்டு, இப்படி உச்சி வெயிலில், தன்னந்தனியாக ஊஞ்சலாட விடும்படி எப்படி ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழந்தைகளைப் பெற்றவன் இருக்கமுடிகிறது என்று கோபம் உண்டாயிற்று.

இம்முறை முன்னைவிடவும் வேகம் கூட்டுவதற்காக, தரையில் உதைத்து உடலைப் பின்னுக்குச் சாய்ந்து உந்திய நேரத்தில், எட்டித் தூரப் போய்நவீனாப்பாஎப்படி விழுந்திருப்பான் என்று நினைக்க பிரேமாவுக்கு சந்தோஷமாக இருந்தது. மகளுக்கு நவீனா என்ற பெயரை பிரேமா தான் வைத்தாள். நவீனாவுக்கு அப்பா என்பதால், நவீனாப்பா என்பது ஒரு அடையாளமாக இருக்கிறதே தவிர, பிரேமா அவனுடைய பெயரைக் கூட இப்போது அதிகம் உச்சரிப்ப தில்லை . – பிரேமாவுடைய அம்மா கோபத்திலும், கோபத்தை விட வருத்தத்திலும் அவளிடம் கேட்டிருக்கிறாள், ஒரு ஆத்திர அவசரத்துக்கு, கட்டினவன் பெயர் என்ன என்று கேட்டால் கூட, வாயால் சொன்னால் குறைஞ்சா போயிருவே?.’ அதற்கு பிரேமா ரொம்பக் கடுமையான பதிலைச் சொன்னாள், ‘வாயால சொல்லச் சொல்லுதே இல்லே. வாயின்னா என்ன? எச்சில். எச்சிலோடு எச்சிலா அவனைச் சேர்த்து எவ்வளவோ முழுங்கியாச்சு. துப்பணும்னா சொல்லு. உன் ஆசைக்கு அந்தப் பெயரை என் வாயால சொல்லி, உன் முன்னாலேயே துப்பீருதேன். ஓரமாகப் போயின்னா ஓரமா. இல்லை . நடுச் சந்தியிலேன்னா, அப்படியே‘. ”

பொன்னுலட்சுமியைப்போல மிதிபட்டு வாழப் பிரேமா தயாராக இல்லை.ஊஞ்சலாடும் போது மானசீகமாகவேனும் தன் கணவனை மிதித்துக் குப்புறத்தள்ளும் கோபத்தோடு இருக்கிறாள்.

பொன்னுலட்சுமியும் பிரேமாவும் இந்தியப்பெண்களின் இரு வேறு வார்ப்புகளாக,இரு வேறு யதார்த்தங்களின்  பிரதிநிதிகளாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பின்னர் எழுதிய கதைகளில் பெண்களை அவள்-இவள் என விளிக்காமல் அவர்-இவர் எனக் குறிப்பிடும் வண்ணதாசனின் மொழிப்பிரக்ஞை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.

“இவுக படுத்துத பாடு தாங்க முடியலியே அய்யா” என்று மகனிடம் புலம்புகிற தாய்(பாசஞ்சர் ரயிலும் ஆண்கள் பெட்டியும்) “வேற வீடு பாத்துப் போயிராலாங்க” என்று கணவன் மீது விழுந்து கேவி அழுகிற நுண்ணுணர்வு கொண்ட பெண் (சுலோச்சனா அத்தை,ஜெகதா மற்றும் ஒரு சுடுமண் காமதேனு)”பொம்பளப் புள்ள இப்படிக் கருப்பாப் பிறந்திடுச்சே..இடி விழுந்திடுச்சே” என்று கதறி அழுகிற இளம் தாய் (மாசிலாமணிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது) “அமுதா மாதிரிப் புள்ளைங்களைத்தான் நாம வளர்க்கணும் மற்றவங்களை வளர்க்கத்தான் ஏகப்பட்ட பேரு இருக்காங்களே” என்று மாற்றுத்திறனாளியான மகளைக் கட்டிக்கொள்கிற இளம் தாய் (சில சமயங்கள்) “எல்லாத் திசைகாட்டிகளும் பிடுங்கி எறியப்பட்ட சாலையில் நான் நிற்கிறேன்” என்று கையறு நிலையிலும் கால் ஊன்றி நிற்கிற ஜானகி (ஒரு பறவையின் வாழ்வு)  எனப் பண்மையின் வண்ணங்களையும் வகைவகையான வாதைகளையும் பெருமிதங்களையும் வரைந்து வரைந்து காட்டுகிறார் வண்ணதாசன்.மேற்கோள் காட்டப்பட்ட மேலே உள்ள ஒவ்வொரு வரிக்குள்ளும் பொதிந்து வைக்கப்பட்டுள்ள உணர்ச்சிக் கொந்தளிப்பும் தத்தளிப்பும் ஓராயிரம் கதைகளை நமக்குள் கிளர்த்தி நிற்கின்றன.அவர் சொன்னதுபோக நம் மனம் நம் வாழ்விலிருந்து எண்ணற்ற கதைகளை உருவி எடுத்து நம் முன் விரிக்க இக்கதைகள் ஒரு புறாவைப்போலப் பறந்து சென்று கூட்டமாகத் திரும்பி வரும் வினோதத்தை காண்கிறோம்.

முகம் 4:

தி.க.சிவசங்கரன் என்கிற ஒரு தொழிற்சங்கவாதியின் மகன் வண்ணதாசன்.வங்கி ஊழியர் சங்கத்தின் உறுப்பினராக சங்கத்தின் அறைகூவல்களை ஏற்று வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றவர்.சங்கக்கூட்டங்களில் அவர் வாசித்த கவிதைகள் வங்கி ஊழியர் சங்க வட்டாரத்தில் ரொம்பப் பிரசித்தம்.அவர் தொழிற்சங்கவாதி அல்ல என்றாலும் தொழிற்சங்கத்தில் இருந்தவர்தான்.

வண்ணதாசன் | ஆபிதீன் பக்கங்கள்

ஆனாலும் தொழிற்சங்க வாழ்க்கை  அவருடைய சிறுகதைகளில் ஒருபோதும் பாடுபொருளாக வந்ததே இல்லை-இதுவரை.ஏன்?அவர் வாழும் இதே உலகத்தின் வாழும் யதார்த்தமாக அது இருக்கும்போது அது ஏன் ஒரு கதையில் கூடப் பாடுபொருளாக அமையவில்லை என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.இதே அன்பும்,சினேகமும்,பிரியமும் தொழிற்சங்க வாழ்க்கையில் இல்லையா?

கதைகளைத் தேடித்தேடிப்பார்க்கையில் “வரும் போகும்” கதையில் தொழிற்சங்க ஆபீசில்  தட்டி போர்டு எழுதிக்கொண்டு கண்ணாடி வழியாக சிநேகமாகப் பார்க்கும் ஒரு ராமையா வருகிறார்.

‘பட்டறைகள்’ கதையில் தொழிற்சங்கப் போராட்டத்தால் வேலை இழந்து கரும்புச்சாறு பிழிந்துகொண்டிருக்கும் ஒரு கண்டக்டர் சங்கரவேல் அண்ணாச்சி வருகிறார்.”கிளைகள் இலைகள்” கதையில் தனியார் வங்கியில் ஒரு தொழிற்சங்கத்தை நிறுவி அடுத்தடுத்த போராட்டங்களை வழி நடத்தியதன் மூலம் அந்த வங்கி விஸ்தரித்திருந்த தெற்கத்தி ஜில்லா பூராவும் தோழர் டி.எஸ் என்று அறியப்பட்டிருந்த சின்னமாமா படுத்திருக்கிறார்.மனுஷா மனுஷா கதையில் வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கத்தின் உண்ணாவிரதப்பந்தலில் பிரமு அண்ணாச்சி இருக்கிறார்.

அவ்வளவுதான் 200 கதைகளில் போகிற போக்கில் தொழிற்சங்கம் பெற்றிருக்கும் இடம் இவ்வளவுதான்.ஏன்? இப்போது இந்த ஏன் கேள்வியை நான் உள்முகமாகத் திரும்பி தொழிற்சங்க இயக்கத்திடம் வைக்க விழைகிறேன்.மக்கள் மனங்களில் நமக்கு அழுத்தமான இடம் இருந்தால் ஒரு கலைஞனின் படைப்பில் இடம் பெற்றிருப்போமே?கிளைகள் இலைகள் கதையில் வரும் தோழர் டி.எஸ். கூடத் தடுமாறி நிற்கும் கணத்தில் தொழிற்சங்கத்தின் தோளைப்பற்றிக்கொள்ளலாம் என்று நினைக்காமல் ஒரு அப்பாவி மருமகனின் கைகளை அல்லவா தேடுகிறார்? புலம் பெயர் தொழிலாளிகள் சங்கத்துக்குள் வரவில்லை என்பது ஒருபுறமிருக்க காண்ட்ராக்ட் மற்றும் உதிரி உழைப்பாளிகளின் அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக நாம் இன்னும் மாறவில்லையே என்கிர ஏக்கம் பிறக்கிறது.எழுதாமல் விட்டதன் மூலம், வண்ணதாசன் என்கிற கலைஞன் முன் வைக்கும் விமர்சனம் இது, எனப் புரிந்துகொள்கிறேன்.

முகம் 5:

உஷாதீபன்: “ஒரு மரம்…சில மரம் ...

நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் யாரேனும் யாரிடமேனும் வழி கேட்டு, முகவரி தேடிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.வண்ணதாசன் கதைகளின் முக்கியமான அடையாளமாக இந்தத் ’தேடுதல்’ இருக்கிறது.ஏற்கனவே வாழ்ந்த வாழ்க்கையின் தொடர்ச்சியை ஒரு திருப்பத்தில் இழந்து விட்டு மீண்டும் பல வருடங்கள் கழித்து பழைய வாழ்வுச் சங்கிலியின் இன்றைய கண்ணி எங்கே எப்படி நிற்கிறது எனத் தேடிப்பார்க்கும் ஆவல்.அதே அன்புடன் அதே பாசத்துடன் அப்பயணம் தொடர்கிறதா என அறிந்துகொள்ளும் குறுகுறுப்பு.ஆதிநிலைகளைத் தேடிச்செல்லும் அகப்பயணமாகப் பல கதைகள்.கடந்த காலத்தை ஊடறுத்துச் சென்று தன் அகமுகத்தை முழுதாகப் பார்த்துவிடச் செய்யும் முயற்சிகள் என்று இக்கதைகளைக் கூறலாம்.நீ அங்கிருந்து வந்தவன்.அப்படி இருந்தவன்.இப்போ நீ ஏன் இப்படி ஆயிட்டே என்பதை மானுடர்க்கு நினைவு படுத்திக்கொண்டே இருப்பது ஒரு கலைஞனின் வரலாற்றுக் கடமை அல்லவா?

1990இல் அலர்மேலு நரசய்யாவை(சிநேகிதியும் சிநேகிதர்களும்) நமக்கு அறிமுகம் செய்து வைத்த வண்ணதாசன் அப்படியே விட்டுவிடாமல் ஏழு ஆண்டுகள் கழித்து 1997இல் கல்யாண அழைப்பிதழ்ழோடு நம்மை அவரிடம் மீண்டும் அழைத்துச் சென்று (அழைக்கிறவர்கள்) “குயில் கூவித்துயில் எழுப்ப,கொடியரும்பு கண்விழிக்க’ என்கிற பாடலைக் கேட்க வைத்து நம்மை நிரப்பி அனுப்புகிறார்.

” ஜான்சி கண்ணை மூடிக்கொண்டாள். மருதாணி வாசனை வர ஆரம்பித்து இருந்தது.

ஆட்டோவை நிற்கும்படி சொன்னாள். அவள் சொன்ன தெரு இன்னும் வரவில்லை. கொஞ்ச தூரம் போக வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுகிறவர் சொன்னபோதும் இறங்கினாள். அவளுக்குச் சற்று நடக்க வேண்டும்போல இருந்தது. நடந்து நடந்து ஒரே ஒரு நாளின் ஒரே ஒரு தருணத்துக்குப் போய்விட வேண்டும்.

திரும்பிப் போவதும் அல்லது திரும்பி வருவதும் அப்படி ஒன்றும் சுலபமில்லை. ஆனால் எத்தனை முறை இப்படித் திரும்பிப் வாயாயிற்று. திரும்பி வந்து ஆயிற்று, கடைசி வரை போகாவிட்டாலும் பாதி தூரம் வரையாவது போய்க்கொண்டே இருக்கத்தான் தோன்றுகிறது. வாசலில் போட்டு இருக்கிற கோலம், உதிர்ந்திருக்கிற போகன்வில்லாப் பூக்கள் வரை போய் விட்டுக்கூட, படியேறி வீட்டுக்குள் போகாமல் திரும்பிவிடுவது இல்லையா என்ன? பஸ் ஜன்னல் வழியாகப் பார்க்கிற தற்செயலான தண்டவாளங்களில் இருந்து, எப்போதோபோன ரயில்களின் பெட்டிகள் நம்முடன் நகரத் துவங்குவது உண்டுதானே?”

”நடந்து  நடந்து  ஒரே ஒரு நாளின்  ஒரே ஒரு தருணத்துக்குப் போய்விட வேண்டும்.” என்கிற ஒரு வரியில் இவ்வகைக்கதைகளின் இலக்கை வண்ணதாசன் உணர்த்திவிடுகிறார்.

தருணங்களைக் கைப்பற்றி வாசகனுக்குக் கையளிப்பதுதானே வண்ணதாசன் கதைகளின் தனித்துவம்.

முகம் 6:

வண்ணதாசன் எழுத்துமுறை | வண்ணதாசன்

திரும்பத் திரும்ப வரும் பெயர்கள் (சுந்தரம், முருகேசு, ஈஸ்வரி, தினகரி, ராஜு, திரிகூடம், பேசி, சரஸ்வதி) திரும்பத் திரும்ப வரும் இடங்கள்,நிலப்பரப்பு இக்கதைகள் அனைத்தும் ஒரு நாவலின் வெவ்வேறு அத்தியாயங்கள் போன்ற உணர்வை ஒரே வாழ்க்கையின் வேறு வேறு பக்கங்கள் என்கிற உணர்வைத்தருகின்றன.வாசிக்க வாசிக்க நாம் அவ்வாழ்வின் ஒரு பகுதியாக ஆகி விடுகிறோம்.கனவில் நாமும்  ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ இருக்கும் தெருவில் அங்கிட்டும் இங்கிட்டுமாக நடந்துகொண்டிருக்கிறோம்-அந்த வீட்டைப் பார்த்தபடி –குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட அவ்வீட்டாரின் உடல்களை மாடியிலிருந்து இறக்கும் காட்சியைப் பார்த்தபடி- கொலுசணிந்த சசியின் இடது காலைப் பார்த்துக் கதறி அழுதபடி….அப்புறம் அந்த குளக்கரைப் படியில் அமர்ந்து தன் தாய் செத்து மிதந்த குளத்துக்குள் தான் பெற்ற பரிசுக்கோப்பைகள் அனைத்தையும்  வீசி எறியும் இளஞனின் தோள்களைப் பற்றி ஆறுதல் சொல்கிறோம்…பார்க்கிற சிறு பெண்பிள்ளைகளையெல்லாம் “என் அம்மையில்லா..” என்று வாஞ்சையுடன் முகம் தடவி நிற்கிறோம்.அழகான பெண்ணாகப் பிறந்ததாலேயே மாப்பிள்ளை அமையாமல் அப்படியே ஒடுங்கிப்போன விசாலத்துக்காகக் கண்ணீர் சிந்துகிறோம்.கல்யாணம்தான் ஒரு பெண்ணுக்கு இறுதி லட்சியமா? எழுந்து வா தாயி என்று அவள் கரம் பற்றி எழுப்புகிறோம்.

முகம் 7:

மணவாழ்வுக்குள் போன பின்னும் ஒரு ஆண் இன்னொரு பெண் மீதும் ஒரு பெண் இன்னொரு ஆண் மீதும் கொள்ளும் பாசம்,அன்பு,நட்பு,ஈர்ப்பு – இதை இயல்பாக எடுத்துக்கொள்ளாத மனுஷர்கள், மனுஷிகள் அதனால் ஏற்படும் மன இடைவெளிகள்,மன அழுத்தங்கள்,சண்டைகள்,பிரிவுகள்,மனப்பிறழ்வுகள் ஒரு புறமும் இந்த உறவுகளை வெகு இயல்பாக எடுத்துக்கொண்டு போற்றுகிற மனுஷர் மனுசிகள் புழங்குகிற வீடுகள் மறுபுறமுமாக ஒரு படபடப்பு மிக்க வாழ்க்கைப் பக்கத்தை 50க்கு மேற்பட்ட கதைகள் பேசுகின்றன.இதுவே வண்ணதாசன் படைப்புகளின் முக்கிய அடையாளமாகப் பரவலாக ஒரு சித்திரம் ஏற்பட்டுள்ளதும் உண்மை.

’உயரப்பறத்தல்’ கதை இந்த இரு வேறு மன உலகங்களையும் ஒரு சேரக் கைப்பிடித்து நம்மிடம் தருகின்ற கதை. 

”அவள் அப்படி நின்ற தோற்றம் பிடித்திருந்தது”

“அவன் ‘மனுஷி’ என்று சொன்ன விதம்பிடித்திருந்தது”

“அப்படியே போய் அவளைக் கட்டிக்கொண்டால் நன்றாக இருக்கும்”

என்பது போன்ற உணர்வும்,வரிகளும் மீண்டும் மீண்டும் வருவது இவ்வகைக்கதைகளின் பொதுவான அம்சமாக இருப்பதைக் காணலாம்.

பால் பேதமற்றுத் தொட்டுப் பேசும் ஒரு பண்பாடாக பிரியத்தை வெளிப்படுத்தும் முறையாக இந்தியப்பண்பாடு மாற வேண்டும் என்கிற கோரிக்கையை இக்கதைகள் முன் வைக்கின்றன.பரிசீலிக்கப்பட வேண்டிய கோரிக்கை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.அதற்கு முன்னதாக இந்தச் சமூகத்தைச் சற்றுக் கல்வி புகட்டிப் பெண்ணை சக மனுஷியாகப் புரிந்து கொள்ளப் பயிற்றுவிக்க வேண்டிய பெரிய வேலை பாக்கி இருக்கிறது.ஒரு ஆண் ஒரு பெண்ணை அல்லது ஒரு பெண் ஒரு ஆணை ,நினைப்பதில் அல்லது தொடுவதில் மகிழ்ச்சி இருந்தால் அது ஆரோக்கியமானது.மயக்கம் இருந்தால் அது விவாதிக்கப்பட வேண்டியது.மகிழ்ச்சியை நோக்கி வண்ணதாசனின் கதைகள் அழைக்கிறதாகக் கொள்ளலாம்.ஒன்றிரண்டு கதைகளில் ஒன்றிரண்டு விவரிப்புகளில் உடல் சார்ந்ததாக இந்த மயக்கம் வெளிப்படுவதையும் காண்கிறோம்.

முகம்-8

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் ...

பிற்காலக்கதைகளில்,அவரே ஒரு முன்னுரையில் குறிப்பிடுவதுபோல, முதியவர்களின் மன உலகமும் வாழ்நிலையும் மிக விரிவாகப் பேசப்படுகின்றன.தன்னிடம் ஏதோ மறைக்கிறார்கள் என்று கவலைப்பட்டு அழுகிற ஒரு தாத்தா.பாலியல் வக்கிரத்தை வெளிப்படையாகக் காட்டி குடும்பத்தாரை மிரட்டும் இன்னொரு தாத்தா தனக்குத் தானமாகக் கொடுத்த நிலத்தை கொடுத்தவருக்கு திரும்பத் தானமாகக் கொடுக்கும் சந்தனம் தாத்தா.தன் மருமகளை ‘இவதான் என் பெஸ்ட் ஃபிரண்ட்” என்று சேர்த்து இறுக்கிக் கட்டிக்கொள்ளும் இன்னொரு தாத்தா.ஆற்றில் பிடித்த மீனை ஆற்றில்தான் விட்டுவிட வேண்டும்.அதக் கிணற்றில் விடக்கூடாது என்று இயற்கை அறம் பேசும் வேலம்மாப்பாட்டி.ஒண்ணைப் பிடுங்கினா ஒண்ணை நடணுமில்லையா என்று கேட்டு செடி நடுகிற நடுகைத்தாத்தா.தாத்தவுக்கு யாரும் அறியாமல் காசு கொடுத்துக் கௌரவமாக வைத்திருக்கும் ”நிறை” பாட்டி..துயர்மிகு பெருவாழ்வைக்கடந்து நிற்கும் மாமு ஆச்சி என முந்தைய வாழ்வின் தொடர்பறாமல் வாழ்பவர்களாகவும் தொடர்பறுத்து வாழ்பவர்களாகவும் முதியவர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.முதுமையின் தனிமை குறித்து இவ்வளவு கதைகளை இவ்வளவு நுட்பமாக தமிழில் வண்ணதாசனைத்தவிர வேறு யாரும் எழுதவில்லை.

“ஒரு பூஞ்செடித் தொட்டியை வெயிலில் வைக்கிற நேரத்தில் வெயிலில் வைத்தேன்.நிழலில் வைக்கவேண்டிய நேரத்தில் நிழலில் வைத்தேன்.நான் வேறு ஒன்றும் செய்ய வில்லையே” என்று சொல்லிச் சாதாரணமாகச் சிரிக்கும் சுயம்புலிங்கப் பெரியப்பா போல ஒரு மனசு முதுமையில் நமக்கு வாய்த்தால் போதும் என்கிற பெருமூச்சை இந்தக் கதைகளுக்கூடாகப் பெறுகிறோம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.ஒவ்வொரு கதையிலும் புதுசாக ஏதேனும் ஒன்றைத் தராமல் வண்ணதாசன் ஏமாற்றியதே இல்லை-அது நமக்குப் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம்.ஒவ்வொரு கதையும் ஒரு முகம்தான்.

வாசிக்க வாசிக்க ஒரு புள்ளியில் வண்ணநிலவனின் கதையை வாசித்துக் கொண்டிருப்பதான ஒரு உணர்வு வந்துவிட்டது.எவ்வளவு கொடுமையானதாக இந்த வாழ்க்கை இருந்தாலும் பற்றிக்கொள்ள ஒரு கையும் சாய்ந்துகொள்ள ஒரு தோளும் உன்னைப்போல ஒரு மனுஷன் உண்டுமா நீ கலங்கலாமா என்கிற சொற்களும் கிடைத்துவிட்டால் போதுமே என்கிற மனநிலைக்கு வந்து சேர்கிறோம்.ஆகவே, வண்ணநிலவன் கதைகள் மீது வைத்த அதே விமர்சனத்தை வண்ணதாசன் கதைகள் மீதும் வைக்கலாம். 

எப்போதும் ‘அய்யா..அய்யா..”என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு தன்னலம் ஏதுமின்றி மலையப்பன்கள் உழைத்துக்கொண்டிருக்க வேண்டும்.தனக்கென அவன் எடுத்துக்கொள்வதை வீழ்ச்சியாகப்பார்க்கும் மனிதர்கள் மத்தியில் அன்பை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்ந்துவிட முடியவில்லையே.

காசு சம்பாதிப்பதற்காக அல்லாமல் ஒரு அடையாளத்துக்காகப் பூ விற்கும் சுடலைகளுக்கு உத்தரவாதமான ஒரு வாழ்க்கையை அன்பும் தயவும் மட்டும் கொடுத்து விடவில்லையே.

எல்லோரும் எல்லாமும் பெறுகின்ற காலத்தைக் கனவு காண்பவர்தான் வண்ணதாசன்.அதுவரை தாக்குப்பிடிக்க வண்ன நிலவனும் வண்ணதாசனும் முன் மொழிகிற ’இன்னும் வற்றி விடாத இந்த ஈரத்தையும் அன்பையும்’ பற்றிக்கொண்டு போராடலாம்.

தமிழ்ச்சிறுகதை உலகில் இடைவெளி இன்றி இயங்கும் படைப்பாளி வண்ணதாசன்.தமிழ்ச்சமூகத்தின் குரலாக அவர் பலவற்றையும் நம் முன் விரித்து வைத்திருக்கிறார்.அவருடைய பல கதைகளில் வருவது போல,கதவைத் தட்டி விட்டுத் திறக்கக் காத்திருக்கிறார்.அமர்ந்த முகத்தோடும் ஆதுரமான சொல்லோடும் கதவு திறக்கும் என நாமும் காத்திருப்போம்.

 உங்களுக்கு மண்டையிடி வருமா?”

வந்ததேயில்லை என்று அவன் மறுத்துச் சொன்னபோது, “எனக்கு வரும். குழவிக்கல்லைத் தூக்கி நச்சுண்ணு தலையில் போட்டுக்கொள்ளலாம்கிற மாதிரிகூட வலிக்கும்.”

அவளையே பார்த்துக் கொண்டிருப்பான், சொல்லச்சொல்ல.

ஆமா, லேசு வலியிண்ணாத்தான் தாங்க முடியாது. வலி ஜாஸ்தியாக இருந்ததுண்ணாத் தேள் கொட்டினது மாதிரி விறுவிறுண்ணு சுகமா இருக்கும்.”

இவனுக்குத் தேள் கொட்டின அனுபவமும் இல்லை , யென்றாலும், அது அவ்வளவு சுகமான விஷயமாக நிச்சயமாக இராது என்று தெரியும்.

இந்தமாதிரி அவள் நிறைய விஷயங்களில் வித்தியாச மாகவே இருந்தாள். காற்று, எவ்வளவு சிநேகிதமான விஷயம் என்று அவளிடமிருந்தே அவன் கற்றுக்கொண்டது. தன்னுடைய முதல் ஆசைகளில், “ஒரு டேபிள் ஃபான் வாங்குவமா?” என்பதை ஒன்றாகச் சொன்னாலும், அவள் மரங்களின் இலைகளும் கிளைகளும் தருவித்து அனுப்புகிற காற்றையே மரியாதையுடன் விரும்பினாள். காற்றுக்காக இரவுகளில் பின் கட்டுக் கதவுகளைத் திறந்து கொண்டு ,அவிழ்ந்து கிடக்கிற கேசத்தோடு ‘ஹப்பா’ என்று மனதோடு மனதான குரலில் ,இருட்டுக்குள் உடம்பில் காற்றுப்பட அவள் நிற்கிற நேரம் ஒரு தேவதை மாதிரிதான் தெரியும்.தூரத்து அரசமர இலைகளில் ,நிலவு,வெளிச்சம் தடவிக்கொடுக்க ,சல் என்கிர மிருதுவான குரலுடன் வருகிற காற்றைச் சூடிக்கொள்கிற தேவைதயேதான் அவள்.

(அன்பின் வழியது)

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3 ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4 ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்



தொடர் 5 ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்



தொடர் 10 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



8 thoughts on “தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்”
  1. ஆடைகள் களைந்துவிட்டு குளிக்க ஆயத்தமாயிக் கொண்டிருந்த சமயம். வண்ணதாசன் அவர்களின் வண்ணங்களின் வரிகளுக்கான வருகையையை ஒட்டி குளிப்பதை சற்றே தள்ளிவைக்க வேண்டியதாயிற்று.

    படிக்க படிக்க நனைவதைப் போலொரு உணர்வு. நனைதலில் ஒவ்வொன்று ஒரு தனிரகம். வெயிலும் மழையும் சேர்ந்தாற்போல் விழுகிற தூறலில் நனைவது போல, பிறந்த குழந்தையை முதன்முதலாக குளிப்பாட்ட பாட்டி ஈரத்துணியால் ஒத்தியெடுப்பது போல, குற்றால அருவியில் குளிப்பதற்கு முன்பே நனைத்துவிடுகிற ஈரக் காத்துப்போல, கடலுக்குள் மூழ்கும் முன்னே நுரை பொங்கும் அலை கால் வந்து நனைப்பதுபோல..

    இப்படி வண்ணதாசன் அவர்களின் எழுத்துலகத்தில் வரைந்து ஓவியமாகிய ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொருவித நனைதல் அனுபவம். இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. எண்ணெய் தேய்த்து மனதை மசாஜ் செய்தாற்போல் இருக்கிறது இக்கட்டுரை. வண்ணதாசன் அவர்களைப் பற்றிய சரியான புரிதலுக்கு இது வழிகாட்டுகிறது.

  2. சிறப்பான அறிமுகம் தோழர். சாகித்ய அகாடமி விருது பெற்ற கதையைப்பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.அவருடைய கவிதைகளைப்பற்றி தனியாக எழுதுங்கள்.நன்றி.

    1. நன்றி தோழர்களே.தோழர் சிசுபாலன் சொன்னதுபோல ஒரு சிறு இசை தொகுப்புக் கதைகள் பற்றி தனித்துக் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.அத்தொகுப்பிலிருந்தும் சில கதைகளைக் குறிப்பிட்டிருக்கிறேன்.விடுபடல்கள் நிறைய இருக்கும்தானே.

  3. வண்ணதாசன் என்றதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அது கச்சிதமாய் நிறைவேறி இருக்கிறது.

    வண்ணதாசனின் ராசிபோலும்.

    கச்சிதமான பதிவு.
    சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்தான்.
    நிறைவான கட்டுரை.
    அன்பின் வலியது . எனும் இரண்டு சொற்கள் வண்ணதச்னில் விடுபட்ட அத்தனையும் சொல்லிவிட்டது.

  4. பிரமாதம் அச்சு அசலான வாழ்வு கண்முன் விரிகிறது. வண்ணதாசன் என்னும். சிற்பியின் உலகம் பூக்களாலும் காற்றாலும் மனிதர்களின் பிரியங் களாலும் ஆனது. தோழர் தமிழ்செல்வனின் விமர்சைனமே ஒரு பட்டாம்பூச்சி இறகு விரித்துகதை சொல்வது போல விரிந்துகொண்டே செல்கிறது

  5. அன்புத் தோழர்.
    முகங்கள் எட்டையும் வாசித்தேன். வண்ணதாசன் என்ற பெயரின் முகவரியாக தோழரின் படைப்புக்கள் சமூக வண்ணங்களை சிதறடிப்பு செய்திருக்கின்றன. உங்கள் பார்வை ஒரு புதிய உத்திக்கான இலக்குகளை வாசிப்பவர்களுக்கு வழங்கிவிட்டுச் செல்கிறது. தொழிற்சங்க அனுபவங்கள் செயல்பாடுகள் குறித்த வண்ணதாசனின் பார்வையை அவர் தொழிற்சங்கங்களுக்கு வைக்கிற கேள்வி என நீங்கள் புரிந்திருப்பதும் அதற்கான படைப்பாளியின் பார்வை குறித்த உங்கள் விளக்கமும் ஏற்புடையவையே. ஆனால் தொழிற்சங்க வாதிகள் இது சம்பந்தமாக கருணை கொள்வார்களா என்பதிற்கான சூழல் வாய்க்க வேண்டும்.

    நீங்கள் மேற்கோள்கள் காட்டிய வாழ்வின் புள்ளிகளை மையப்படுத்திவிடுகிற வண்ணதாசனின் வார்த்தைகளைப் போலவே “அன்பின் வழியது” என கட்டுரையின் சாராம்சத்தினை வழங்கிவிட்டீர்கள்.

    வண்ணதாசன் என்கிற வானவில்லிற்கு எட்டாவது வண்ணத்தினை வழங்கியிருக்கிறீர்கள்.

    நன்றி தோழர்.

  6. வண்ணங்களின் நிறப்பிரிகை போல,வண்ணதாசனின் படைப்புலகின் வண்ணங்களை பிரித்து தோரணம் கட்டியது போல அவரின் படைப்புகளின் நிறங்களை கட்டுரையாக்கி உள்ளீர்கள். இது வரை யாரும் பார்த்திராத பார்வைக் கோணங்களில் வண்ணதாசனின் பலம் பலவீனங்களை அவரது அன்பொழுகும் பானியிலே கட்டுரையைதந்துள்ளீர்கள். இதைத் தேர்ந்தவர் தெரிவர். கயற்றின் மீது நடந்து கடந்து விட்டீர்.கயறும் அறவில்லை.கீழேயும் விழவில்லை. வாழ்த்துகள் தோழரே. தொழிற்சங்கத்தினர் காட்டும் அன்பை ஆள்பிடிக்கும் தந்திரமாய்க் கொச்சையாகப் பார்க்கப்படுவதும் , அத்தகைய தருணங்களை எழுதும் போது பிரச்சார நெடி என்று முகத்தைச் சுளித்துக் கொண்டோரிடையே எப்படி எழுதுவது. உங்களது தொழிற்சங்க அனுபவங்கள் அடங்கிய ஜிந்தா ஜிந்தாபாத் வெளிவட்டாரத்தில் எப்படி பார்க்கப்பட்டது என்ற அனுபவத்தை நீங்களும் அறிவீர்..தொழிற்சங்வாதிகளின் அர்ப்பணிப்பால் அன்பால் கவரப்பட்டுதானே நீங்களும் நானும் ஒருபுள்ளியில் இணைந்திருக்கிறோம். நன்றி.வாழ்த்துகள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *