பெண்ணின் விடுதலைக்கு எவை எவை முட்டுக்கட்டையோ,  எவை எவை தட்டிப் பறிக்கப்படுகின்றனவோ, எவை எவை இழி நிலையை உருவாக்குகின்றனவோ,  எவை எவை உணர்த்தப்பட வேண்டுமோ, உணரப்பட வேண்டுமோ,எவை எவை நீக்கப்பட வேண்டுமோ அவற்றின் உண்மைத் தன்மைகளை உணர்த்துவதே ப்ரகாஷின் இலக்கியத் தொடர் பயணம்.

சோடியம் விளக்குகளின் கீழ்

தஞ்சை ப்ரகாஷ்

கேரளத்துக் கோடியில் ஒரு தர்மாஸ்பத்திரியில் பிறந்தபோது அகிலாவின் அம்மா ஆஸ்பத்திரியிலிருந்தே போய்விட்டாள் என்று பத்து வயசானபோது கேள்விப்பட்டாள்.  பதிமூன்றாவது வயதில் பம்பாய்க்கு ஒரு குடும்பத்துக்கு வேலை செய்யப் போய் டெல்லி, நாக்பூர் என்று பதினாலாவது வயதில் போலீஸ் ஸ்டேஷன் பழக்கமாகியது.

கல்கத்தா நகரில் கடியகாட்டி போலீஸ் ஸ்டேஷனில் பத்துப் பதினாலு போலீஸ்களோடு மல் யுத்தம் செய்ததற்காக மூன்று வருஷம் உள்ளே இருந்து வெளியே வந்ததும் ரோட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள்.

அகிலாவுக்கு தஞ்சாவூர் புதுசு, ஆறுமாசம்தான் ஆச்சு.  போலீஸ் தொந்தரவு ஜாஸ்தி வேற வழியும் இல்லே.  எந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்தாலும் முதலில் ஒரு மாசம் போலீஸ்காரங்களுக்குத்தான்.  அதுக்கப்பறம் ஊர் பெரிய மனுஷங்களப் பார்க்கலாம். அப்பறம் ரோடு கம்பெனி.  ரோடுதான் அவ வீடு.  அவளுக்கு ரோடுதான் பிடிச்ச எடம்.  வெளிச்சம் இருக்கும். ஆனா இருட்டும் இருக்கும்.

கல்கத்தாவில் அவளை கும்பலிலிருந்து காப்பாற்றிய காபூலிக்காரன் அவளை தரையில் அழுத்தி உட்கார வைத்து பிசுபிசுத்த எண்ணெய் மணம் மூச்சேற, உலகமே இருண்டு போக  தூரத்தே நண்பர்கள் குரலொலிகள் நைந்து போயின.  காபூலி அவளை விட்டு எழுந்த போது கிழக்கு வெளித்திருந்தது.  கீழே எண்ணெய்க் காட்டில் அகிலா.  அவன் கைநிறைய கொடுத்த நோட்டுகள் அவளை மயக்கவில்லை.  அவன்தான் மயக்கினான்.  பெரிய மீசை.  சிவந்த கண்கள்.  உயரமான அந்த ஆண்மை.  அவளைச் சற்றும் விலகாத அவன் துணிச்சல்.

உரையாடலை நேசித்த தஞ்சை ப்ரகாஷ் ...

இருபது வருஷங்களுக்குப் பின் காபூலி தந்த கௌரவம் அவள் நெஞ்சில் நிறைந்து கிடந்தது.  பணம் மட்டுமா இது? 

மணி பத்து: கூர்க்கா, போலீஸ் பீட் யாரும் அவள் வியாபாரத்தில் தலை காட்ட வரமாட்டார்கள்.  மாமூல்.  ஜங்ஷனுக்கு வெளியே இளைஞன் ஒருவனுக்குத் தூண்டில் வீசினாள்.  சோடியம் விளக்கு மட்டும் அவன் கண்களை கூசச் செய்யவில்லை.  வேறிருவரின் செயல்பாடும் அவனைத் தயக்கத்திலாழ்த்தியது.  கீழ வீதி வழியே நடந்து மாமா சாய்பு மூலைக்கு வந்தாள்.  சந்துகள் இருளில் ஆழ்ந்து கிடந்தன.  அதில் போய் இருட்டில்தான் மறைய முடியும்.  ஆள் கிடைக்கவில்லை.  லேசாய் வயிறு கிள்ளியது.  நேற்றிரவு சாப்பிட்டது.

மணி 11.30: சோடியம் விளக்குகள் உக்ரமாய் தொழில் செய்து கொண்டிருந்தன.  தஞ்சாவூருக்கு சோடியம் விளக்குகள் வந்ததோட அது போச்சு.  வெளிச்சமாப் போச்சு.  வழக்கமான வாடிக்கை ஆட்கள்கூட வெளிச்சத்துக்கு பயந்து விட்டார்கள்.  அகிலா சலித்தாள். படிப்படியாக நடமாட்டம் வேறு குறைந்து கொண்டே வந்தது.  ஒருத்தனைக்கூட காணோம்.

மணி 12.30:  விளக்குகள் வால்டேஜ் உஷ்ணம் தகிக்க எரிந்து கொண்டேயிருந்தது.  ஒரு சினிமாதான் விட்டிருந்தது.  இன்னும் அரை மணி நேரத்தில் ஆள் எல்லாம்போய் அடங்கிவிடும்.  அதற்கு அப்பால் அவளும் திண்ணைக்குப்போய் குப்புற விழ வேண்டியதுதான்.  இன்னைக்குப் பட்டினிதான்.  பசி புதுசு இல்லே.  

ஆத்திரம் தாங்க முடியவில்லை அகிலாவுக்கு.  கீழே குனிந்தாள்.  நல்ல பெரிய கருங்கல் ஒன்று, மறு கையிலும் ஒரு கருங்கல் கப்பி.  ரோடு போட வந்த கல்.  சோடியம் ஆவி விளக்கை நோக்கி வீர்ர் கல் பறந்தது.  கம்பத்தின் உச்சியில் புஸ்ஸ்ஸென்ற புகை. மறுகை வீசினாள் அகிலா.  எதிர்க்கம்பம்.  ஆச்சர்யம், மூச்சு வாங்கியது அவளுக்கு.  கண்ணாடித் துண்டுகள் ரோட்டில் சிதறியது.

ஜட்ஜ்மெண்ட் வாசித்தார்கள்.  அது அகிலாவுக்கு எதற்கு.  மூன்று ஆண்டுகள் ஜெயில் இருள்.

இருட்டி விட்டது.  ரோடுகளில் சோடியம் விளக்குகள் எரிய ஆரம்பித்தது.  ஆரஞ்சு ஒளி வெள்ளம்.  எங்கும் ஒரே வெளிச்சம்.  சோடியம் ஆவி விளக்குகளின் பிரகாசம். அகிலாவை ஏற்றிக் கொண்டு வேன் புறப்பட்டது.  அகிலா எழுந்து நின்று கம்பி வலை வழியே திண்ணையைப் பார்க்க முயன்றாள்.  ஆவி வெளிச்சம் இனி அவளைக் காட்டிக் கொடுக்க முடியாது.  அந்த சோடியம் ஆவி விளக்குகளுக்கு அகிலாவைத் தொட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *