கலாச்சார தொழிற்சாலை தொடர் – 7
மாற்றத்தை பாடும் ‘பீட்ரெல்’ பறவை ஆவோம்
இந்த கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ‘டிங்’ எனும் சத்தத்துடன் செல்போனில் ஒரு நோட்டிபிகேஷன் வந்து விழுந்தது. ரூபாய் பதினொரு லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களோடு, அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி இந்திய பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார் எனும் செய்தி அது. உலக செல்வந்தர்கள் பட்டியலை செல்போன்ககளில் பார்க்கும் நாம் பெரும்பாலும் அரசியலுக்கும் அந்த செய்திக்கும் இடையிலான உறவை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும் அரசியல் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார் எனும் புகழை பெற்ற எம்.கே. தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான அசோக் குமார் திரைப்படத்தில் இடம் பெற்ற பிரபலமான பாட்டு இது.

“பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்,
உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இலையெனில் நர ஜென்மமிதே”
மானிட ஜென்மம் அடைந்தாலும், விலங்குகளைப் போல ஒரு வாழ்க்கை அமைந்தவர்களுக்கு வாழ்க்கை நரகமே என்பதை அந்த பாடலின் வரிகள் உணர்த்துகிறது.. பெரும் பணம் படைத்தவர்களுக்கும், உழைக்கும் மக்களுக்குமான இடைவெளி மேலும் அதிகரிப்பதற்கும், ஏழைகளின் வாழ்க்கை நரகமாக நீடிப்பதற்கும் பின்னணியில் இருப்பது அரசியல் அல்லாமல் வேறென்ன..?
அன்றாடம் பயன்படுத்தும் அரிசிக்கு கூட ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு சென்றிருந்தேன், ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் நடைபாதையில் அமர்ந்து கயிறு திரித்துக் கொண்டிருந்த கிழவி கட்டப்பட்ட கொடிகளை பார்த்துக் கொண்டே ‘ஏம்பா, என்ன நடக்குது இங்க..? என கேட்டார். ‘பாட்டி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்குது, நீங்க எந்த கட்சி’ ? என கேட்டேன். நான் எந்த கட்சியும் இல்லப்பா, நான் சோத்துக் கட்சி’ என சிரித்துக் கொண்டே பதிலளித்தார் அந்த கிழவி.. அந்த சோத்துக்கும் சேர்த்து இப்போ வரி போட்டுட்டாங்க பாட்டி, அதை கண்டிச்சு தான் ஆர்ப்பாட்டம் நடத்தறோம்’ என விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ’பாவிகளா, படுபாவிகளா’ என ஆட்சியாளர்களை சபிக்க துவங்கி விட்டார் பாட்டி. எளிய மக்களுக்கும் அரசியலுக்கான உறவு இந்த அளவில் தான் இருக்கிறது. சமூகம் என பொதுவாக நாம் ஒரு சொல்லை பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் இந்த சமூகம் வர்க்க அடுக்குகளால் ஆன சமூகமாக இயங்குகிறது. வர்க்கங்களுக்கிடையே முரண்பாடுகளும், போராட்டங்களும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. எனவே அரசியல் என்பது இங்கே பொதுவானதாக இருக்க முடியாது. ஆளும் வர்க்க அரசியல், உழைக்கும் வர்க்க நலன்களுக்கான அரசியல் என இருவகைப்பட்ட அரசியல் இருக்கிறது.

தனி ஒருவன் எனும் திரைப்படத்தில் ஒரு வசனம் இடம் பெற்றிருக்கும். ‘நாம படிக்கற பத்திரிக்கையில் வரும் செய்தில எதுவுமே தனித்தனியான செய்தி இல்ல. ஒவ்வொரு செய்திக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கு, முதல் பக்கத்துக்கும், மூன்றாம் பக்கத்தும் ஒரு தொடர்பு இருக்கும், வணிக செய்திக்கும் உள்ளுர் செய்திக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கும், அதையெல்லாம் ஒன்னோட ஒன்னா இணைச்சு புரிஞ்சிக்காம நம்மால அரசியல புரிஞ்சிக்க முடியாது’ என நாயகன் பேசுவதாக அந்த காட்சி இருக்கும். அதுதான் உண்மை. நாம் செய்திகளை வெறும் செய்திகளாகவும், ஒன்றோடு மற்றொன்றை தொடர்பு படுத்தி புரிந்து கொள்ளாமலும் தான் கடந்து போகிறோம்.

எட்வர்னோ காலியானோ எழுதிய ஒரு புத்தகம் தோழர் ப.கு.ராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளியாகியிருக்கிறது. ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்’ மிக அவசியமாக வாசித்து அறிய வேண்டிய அரசியல் நூலாகும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மிகத் துல்லியமாக அந்நூலில் விவரிக்கப்பட்டிருக்கும். அங்கு கிடைக்கும் கனிம வளங்களில் ஒன்று லித்தியம். நமது கைகளில் தவழும் அதிநவீன செல்போன்களில் இருக்கும் பேட்டரிகள் லித்தியத்தால் செய்யப்படுபவையே. ”ஏன் இன்னும் பழைய செல்போனை பயன்படுத்துகிறீர்கள், இதோ நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் நீடிக்கும் புதிய அதிநவீன செல்போன்களை வாங்கிச் செல்லுங்கள்’ என உள்ளூரில் வெளியாகும் விளம்பரங்களுக்கும் ஏகாதிபத்தியத்தின் லாபவெறிக்கும் மிக நெருக்கமான தொடர்பு உள்ளதை அரசியலாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது வாசல்படி வரைக்கும் வந்து விட்டது பாசிசம் என இப்போது கவலைப்படுகிறோம். ஆனால் அதன் நுண்ணரசியல் நடவடிக்கைகளை கவனிக்க தவறுகிறோம்.. 1947 ஆகஸ்ட் 15. வெறும் முப்பதாயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என எண்ணியிருந்த வேளையில், எதிர்பாராத வகையில் கூடிய சுமார் ஐந்து லட்சம் மக்களுக்கிடையே மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அதே வேளையில் மராட்டிய மாநிலம் புனே நகரத்தில் தேசியக் கொடிக்கு பதிலாக முக்கோண வடிவ காவிக்கொடியை ஏற்றினான் நாதுராம் கோட்சே. கொடியேற்றிய பிறகு அவன் ஆற்றிய உரை மிக முக்கியமானது. “இந்தியாவை துண்டாட இவர்கள் யார், சிந்து முதல் பர்மா வரை, திபெத் துவங்கி குமரி வரையிலும் நீண்டிருக்கும் பாரதமாதா துண்டாடப்பட்டிருக்கிறாள்.

காந்தியை நினைத்தால் என் வயிறு பற்றி எரிகிறது. அவர் ஒரு தேசப்பிதாவாம், மகாத்மாவாம், அஹிம்சாவாதியாம். பாரதமாதா துண்டாடப்படுவதற்கு அவர் தான் காரணம்’ என ஆத்திரம் நிறைந்த உரையை முடித்து விட்டு கீழே இறங்கிய கோட்சே, அங்கு நின்றிருந்த தனது நண்பன் ஒருவனிடம் மெல்லிய குரலில் சொன்னான். “என் பிணத்தின் மீதுதான் இந்தியா துண்டாடப்படும் என்றார் காந்தி. இந்தியா துண்டாடப்பட்டு விட்டது, ஆனால் காந்தி இன்னும் உயிரோடு இருக்கிறார்.” கோட்சேவின் வார்த்தைகளுக்கு பின்னால் இருப்பது ஒரு சித்தாந்தம். காந்தியின் அரசியலுக்கும், கோட்சேவின் சித்தாந்தத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் மெல்ல மெல்ல உரமூட்டி வளர்க்கப்பட்டு ஆபத்தான அரசியலாக வளர்ந்து நிற்கிறது. காந்தியின் தேசத்தில் கோட்சேக்கள் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் புறக்கணிக்கப்பட்ட அதே தேசியக்கொடி இன்று பெரிதாக நாடெங்கும் பறக்க விடப்படுகிறது. நாம் பேசுகிற மதம், பண்பாடு, தேசியம், கலாச்சாரம் எனும் ஒவ்வொன்றின் பின்னாலும், வெளிப்படையான அல்லது மறைக்கப்பட்ட அரசியல் வினையாற்றிக் கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்கொள்ளாமல், முறியடித்து முன்னேறாமல் மாற்றம் என்பது சாத்தியமில்லை. மாற்றத்தை நோக்கிய பயணத்தில் நமது ஒவ்வொரு அடியும் மிக முக்கியமானது. எத்தகைய சிறிய முயற்சியாக இருப்பினும் கூட அதை மாற்றத்திற்கான முயற்சியாக பெரும் உற்சாகத்தோடு முன்னெடுக்க வேண்டும் காலத்தை வென்றவர்கள் எனும் பெரணமல்லூர் சேகரனின் புத்தகத்தில் தடை செய்யப்பட்ட மாக்சின் கார்க்கியின் கவிதையும், அதன் பின்னணியும் விவரிக்கப்பட்டிருக்கும்.

’புயற்பறவையின் பாடல்’ எனும் தலைப்பில் இலைமறை காயாக புரட்சியை ஆதரித்து எழுதப்பட்டிருக்கும் ஒரு கவிதைக்காக மாக்சிம் கார்க்கி கைது செய்யப்படுகிறார். மேற்கத்திய இலக்கிய பாணியான அலிகாரி வடிவத்தில் எழுதப்பட்ட அந்த கவிதையை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத அதிகாரவர்க்கம் பிறகு கார்க்கியை விடுதலை செய்துவிட்டு, அந்த கவிதையை தடை செய்கிறது. ஆட்சியாளர்கள் குழப்பமடைந்து, முதலில் கார்க்கியை கைது செய்து, பிறகு கவிதையை தடை செய்யுமளவிற்கு அந்த கவிதையில் என்னதான் இருக்கிறது.
பனிக்கால பகல் பொழுதில் ஜன்னலருகே அமர்ந்துள்ள கவிஞன் ஒருவன் வெளியே பறந்து கொண்டிருக்கும் விதவிதமான கடற்பறவைகளை பார்க்கிறான். பறவைகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்கின்றன. காக்கைகள், ரெவன், புல்ஃபிஞ்ச் போன்ற பெரிய பறவைகள் அதிகாரத்தின் குறியீடாகவும், மிஷ்கின், பீட்ரெல் போன்ற குட்டிப்பறவைகள் புரட்சியின் குறியீடுகளாகவும் இருக்கின்றன.
அவைகளுக்கிடையேயான உரையாடலை ஜன்னலோரம் அமர்ந்து ஒட்டுக் கேட்கிறான் கவிஞன். குட்டி மிஷ்கின் பறவை தான் கேட்ட பாடல் ஒன்றை சுவைபட கூறுகிறது. குட்டி பீட்ரெல் பறவையோ புரட்சியை வரவேற்றுப் பாடிக் கொண்டே வரவிருக்கும் புரட்சியை தனது உரத்த குரலால் முன்னறிவிப்பு செய்கிறது. புரட்சியை முன்னறிவிப்பு செய்யும் பாடலை ஜாரின் அதிகார வர்க்கம் விரும்புமா என்ன..? பாடல் தடை செய்யப்படுகிறது. கார்க்கி கைது செய்யப்படுகிறார்.
கார்க்கி கவிதையில் விவரிக்கும் இந்த காட்சியை அப்படியே கற்பனை செய்து பாருங்கள். கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக கொள்கைகளை வகுக்கும் அதிகார வர்க்கம், தனக்கான எதிர்ப்புகளை நீர்த்துப்போகும் வகையில் பிரிவினை அரசியலை முன்வைக்கிறது. சட்டம், ஆட்சி, நீதி, ஊடகம், பணம், அதிகாரம் என அனைத்தையும் தன் வசம் குவித்து வைத்திருக்கும் அதிகார வர்க்கத்தின் குறியீடாக, பெரிய பெரிய பறவைகளாக அவை இருக்கின்றன. ஆனாலும் புரட்சியை, மாற்றத்தை உற்சாகமாக முன்னறிவிப்பு செய்யும் குட்டிப் பறவைகளான மிஷ்கின், பீட்ரெல் ஆகியவை இறுதியில் வெற்றி பெறுகின்றன. அந்த குட்டிப் பறவைகள் தங்கள் சின்ன சிறகுகளை கொண்டு சிறகடித்துப் பறப்பதைப் போல நாமும் மாற்றத்திற்மான பாதையை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறிச் செல்வோம்.
கட்டுரையாளர்:

கட்டுரையாளர், மார்க்சிய கருத்துரையாளர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்.
நூலைப் பெற : லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில் thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

