தொடர் 7: பாயசம் – தி.ஜானகிராமன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 7: பாயசம் – தி.ஜானகிராமன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

என்னுடைய வாழ்க்கையில் நான் கண்ட கேட்ட அநுபவித்த பல ரஸானுபவங்களை அடிப்படையாக வைத்துத்தான் பல கதைகளையும் எழுதியுள்ளேன்.  ஒரு சிறுவனைப் போல நான் அன்றாட உலகைப் பார்த்து வியக்கிறேன். சிரிக்கிறேன். பொருமுகிறேன். நெகிழ்கிறேன். முஷ்டியை உயர்த்துகிறேன். ஒதுங்குகிறேன். சில சமயம் கூச்சல் போடுகிறேன் என்கிறார் தி.ஜானகிராமன்

பாயசம்

தி.ஜானகிராமன்

சாமிநாதுவும் அவர் அண்ணாவும் மணலூரிலிருந்து இங்கே வந்ததால் மணலூரார் குடும்பமென ஆகியது.  சாமிநாது அவர் மனைவி வாலாம்பாளுக்கு இரண்டு பிள்ளை இரண்டு பெண்கள்.  இப்போது உயிரோடிருப்பது சாமிநாதுவும் அவர் நான்காவது பெண்ணும் மட்டுமே.  அவளும் கல்யாணமாகி மூன்றாவது வருடம் நார்மடி கட்டி முக்காடு போட்டுக் கொண்டு பிறந்த வீட்டோடு வந்து விட்டாள்.

அண்ணாவின் ஒரு பிள்ளை சுப்பராயன்.  பால்யத்தில் கஷ்டப்பட்டான்.  அப்போவோ பெரியப்பாவோ அவனைப் படிக்க வைக்க முடியாதவர்களாகவே இருந்தார்கள்.  சுப்பராயன் கணக்கெழுதி பின் கடன் வாங்கி கடை வைத்து மொத்தக் கடையாகி நெல் பிடித்து உளுந்து பிடித்து பயிறு பிடித்து இருபது வருஷங்களுக்கள் இருபது லட்சம் சொத்து உள்ளூரிலேயே கால் பங்கு நிலம் வாங்கியாகி விட்டது.  அதையே பாகம் பண்ணி சாமிநாதுவுக்கு பாதி கொடுத்தான்.  ஆற்றுப் படுகைக்கு எட்டாக்கையில் இருந்ததால் அவருக்கு கோபம்.

“என்ன கொடுத்து வச்சேளா?  உங்க பாட்டா சம்பாதிச்ச சொத்தா? இல்லே உங்க அப்பா சம்பாதிச்சதா? ஒண்டியா நின்று மன்னாடி சம்பாதிச்சதை சித்தப்பாக்குனு கொடுக்கறான்”.

“நீ அவனுக்கு பரிஞ்சுண்டு கூத்தாடறதைப் பார்த்தா, நீ என் ஆம்படையளா எங்க அண்ணா ஆம்படையாளான்னே புரியலியே?”

“தூ, போறும் அசடு வழிய வேண்டாம்”  வாலாம்பாள் நகர்ந்து விட்டாள்.

சுப்பராயனின்  கடைசிப் பெண்ணின் திருமணம்தான் நடைபெறப் போகிறது.  உற்றார் உறவினர் வந்து கொண்டிருக்கின்றனர்.

காவேரியில் குளிக்கச் சென்றார்.  அரசமரத்தடி பிள்ளையாரை சாமிநாது பார்த்தார்.  லேசாக நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் என்று காதைப் பிடித்துக் கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக் கொண்டார்.

“நன்னா முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழுந்துண்டுதான் போடேன் நாலு தடவை.  உனக்கு இருக்கற பலம் யாருக்கு இருக்கு?  நீ என்ன சுப்பராயம் மாதிரி நித்ய கண்டம் பூர்ண ஆயுசா?  சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா? ப்ளட் பிரஷரா? மண்டைக் கிறுகிறுப்பா உனக்கு?” யாரோ சொல்வது போலிருந்தது.  யாரும் சொல்லவில்லை.  அவரே சொல்லிக் கொண்டார்.

“மோளம் கொட்டி, தாலிகட்டி கடைசிப் பெண்ணையும் ஜோடி சேர்த்து, கட்டுச் சாதம் கட்டி எல்லாரையும் வண்டி ஏத்திப்ட்டு, நீ என்ன பண்ணப் போறே?  கோதுமைக் கஞ்சியும், மாத்திரையும் சாப்பிட்டுண்டு பொங்கப் பொங்க வெந்நீர் போட்டு உடம்மைத் துடச்சுக்கப் போறே.  கையை காலை வீசி இப்படி ஒரு நாளைக்கு வந்து காவேரியிலே ஒரு முழுக்கு போட முடியுமான்னேன்”.

காவேரிக்கு வருகையில் பல உறவினர்களும் இவர் சுப்பராயனின் சித்தப்பா என்று அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார்.

03-தி.ஜானகிராமன் சிறுகதைகள் & 9 ...

காவேரி மணலில் கால்தட்டு முன்பே தெருவிலிருந்து தவுல் சத்தம் தொடங்குவது கேட்டது.  நாதஸ்வரமும் தொடர்ந்தது.  பத்தரை மணிக்குத்தான் முகூர்த்தம்.  மணி எட்டுகூட ஆகவில்லை சும்மா தட்டுகிறான்கள்.  அவனுக்குப் பொழுது போக வேண்டும்.  சுப்பராயனும் பொழுது போகாமல்தானே ஏழு பெண்களையும் நாலு பிள்ளைகளையும் பெற்றான்.

சாமிநாது பார்ததார் இடது பக்கம்.  ஆற்றின் குறுக்கே புது மாதிரிப் பாலம்.  இந்தப் பாலம் வருவதற்கு சுப்பராமன்தான் காரணம், இல்லாவிட்டால் நாற்பது மைல் தள்ளிப் போட்டிருப்பார்கள்.  சர்க்காரிடம் அவனுக்கு அவ்வளவு செல்வாக்கு.  வலது பக்கம் பின்னால் வேளாளத் தெருவில் புகை.  வெல்லம் காய்ச்சுகிற புகை.  சுப்பராயன்தான் கரும்புப் பயிரை ஊருக்கு கொண்டு  வந்தான்.  அக்கரையில் நாலு இடத்தில் புகை.  வெல்ல ஆலைப் புகை.  எல்லாம் சுப்பராயன்தான்.  பாலத்துக்கு ஓரமாக கோவாப்பரட்டி சுப்பராயன்.

“ஏன் கிடந்து வேகறேள்? உங்க அண்ணா பிள்ளைதானே அவன்.  நானும் உங்க கையைப் பிடிச்சுண்டு படியேறி இருபது வருஷம் பாதி நாளைக்குப் பழையது வத்தக்குழம்பு, இந்தப் பவழமாலை வேற என்னத்தைக் கண்டேன்?” வாலாம்பாள் குரல் ஒலித்தது.

அவர் வீடு, சுப்பராயன் வீடு இரண்டும் அண்ணன் தம்பியாக நிற்கின்றன.  இரண்டு வாசல்களையும் அடைத்தப் பந்தல்.  தாண்டிக் கொண்டு உள்ளே போனார்.  வேட்டியை கட்டிக் கொண்டார்.  கொல்லைக்குப் போய் காலை அலம்பி வந்து ஜபத்திற்கு உட்கார்ந்தார்.

“அப்பா” கூப்பிட்டது அவர் பெண்தான்.  நார்மடியும் முக்காடுமாக நின்ற பெண்.  “பரதேசக் கோலம் புறப்படப் போறது,  போங்களேன்.  நாளைக்கு ஜபம் பண்ணிக்கலாமே?”

அவள் ஏறிட்டுப் பார்த்தாள் அவரை,  குழப்பம்.

“போன்னா போயேன், வரேன்”.

அவள் நகர்ந்தாள் கதவை லேசாக சாத்திக் கொண்டு.  அவர் கழுத்துக்குள் அனலாகச் சுடுகிறது,

எல்லாரும் கூப்பிடுகிறார்கள்,  மாலை மாற்றினார்கள்.  கண் ஊஞ்சலாடி நின்றார்.  நாயனக்காரன் வாங்கி வாசிக்கிறான் அந்த ஊஞ்சலை.

சாமிநாதுவுக்கு மூச்சு முட்டிற்று.

கோட்டையடுப்புகள் மொல மொலா என்று எரிகின்றன.  கூட்டம் கூட்டமாக நெருப்பு எரிந்தது.  தவலை தவலையாகக் கொதிக்கிறது.  கோட்டையடுப்புக்கு இப்பால் மேடை மீது ஒரு பாரி ஜோட்டுத் தவலை.  இடுப்பளவு.  பாயசம் மணக்கிறது.  திராட்சையும் முந்திரியுமாய் மிதக்கிறது.  எப்படி தூக்கி மேடை மீது வைத்தார்களோ?  மேல் வளையங்களில் கம்பைக் கொடுத்து பல்லக்கு மாதிரி இரண்டு பேராக தூக்கினால்தான் முடியும்.  ஐந்நூறு அறுநூறு பேர் குடிக்கிற பாயசம்.

தி.ஜானகிராமன் நூற்றாண்டு: தி ...

நான் ஒண்டியாகவே கழித்து விடுவேன்

பாயசம் சாக்கடையில் ஓடிற்று.

வெள்ளரிப்பிஞ்சு நறுக்கிற பயல் ஓடி வந்தான்.

கை கால் உதறல், வாய் குழறிற்று.

“படவாக்களா எங்கே போயிட்டேள் எல்லாரும்?  இத்தனை பெரிய எலியைப் பாயசத்திலே நீஞ்ச விட்டுட்டு  கிராதகன்களா? மூடக்கூடவா தட்டு இல்லே?”

வேலைக்காரி ஓடி வந்தாள்.  “என்ன பெரியசாமி?”

“ஆமாண்டி, பெரியசாமி பாக்காட்டி பெருச்சாளி முழுகின பாசயம்தான் கிடைச்சிருக்கும். போங்கோ எல்லோரும் மாலை போட்டுண்டு ஊஞ்சலாடுங்கோ

நார்மடியும் முக்காடுமாய் பெண் வந்தாள்.  “எப்படிப்பா இத்தணாம் பெரிய ஜோட்டியைச் சாச்சேள்?”

பெண் அவரை முள்ளாய்ப் பார்த்தாள்.  கண்ணில் முள் மண்டுமா?  சாமிநாதுவுக்கு புதரைப் பார்க்க முடியவில்லை.  தலையைத் திருப்பிக் கொண்டு “எங்கே அந்த சமையக்காரப் படவா?” கூடத்தைப் பார்த்தார்.

பெ.. பெ.. பெ.. பெ..

ஆனந்த பைரவியில் ஊஞ்சல் பாட்டை  வாங்கி நாயனம் ஊதுகிறது.

வாலாம்பாள் பாடுகிற மாதிரி இருந்தது.

கணையாழி, ஆகஸ்ட் 1971

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *