The politics of tamil short story (Makkal Pavalar Inkulab (Inquilab)) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

 

இன்குலாப் சிறுகதை எழுதியிருக்கிறாரா என்கிற வியப்புத்தான், அவரது கதைத் தொகுப்பான “பாலையில் ஒரு சுனை” யைப் பார்த்ததும் மனதில் எழுந்தது.அன்னம் பதிப்பகம் 1992இல் வெளியிட்ட முதல் பதிப்பை  தாமதாகவே வாசிக்க வாய்த்தது.

“எழுதியதெல்லாம்

மொழிபெயர்ப்புத்தான்.

இளைஞர் விழிகளில்

எரியும் சுடர்களையும்

போராடுவோரின்

நெற்றிச் சுழிப்புகளையும்

இதுவரை கவிதையென்று

மொழிபெயர்த்திருக்கிறேன்.”

என்று தன் கவிதை எதைப் பேசுகிறது என்று பிரகடனம் செய்த இன்குலாப் சிறுகதையிலும் அதையேதான் செய்திருக்கிறாரா என்று பார்க்கும் ஆர்வமும் குறுகுறுப்பும் இயல்பாகவே ஏற்பட்டது. தவிர,போராடும் மக்களுக்கு உத்வேகம் ஊட்டக்கூடிய அவரது கவிதைகள், பிரகடனங்களையும் அறைகூவல்களையும் சற்றுத் ‘தூக்கலான’ தொனியிலும் மொழியிலும் பேசியவை.கவிதைகளுக்கேயுரிய இயல்பு அது.பிற்காலக்கவிதைகள் “நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கையிலும் நெஞ்சம் படரும்” என நிதானம் கொண்டன என்றாலும் மண்ணிலிருந்து சற்று மேலெழும்பிய தன்மை பொதுவாகக் கவிதைக்கு உண்டு.ஆனால் சிறுகதைக்கான மொழி முற்றிலும் வேறாயிற்றே?மண்ணோடு மண்ணாகத் தரையில் நின்றே பேசும் மொழி சிறுகதைக்கு அடிப்படை அல்லவா?அது மகத்தான கவியான இன்குலாப்புக்கு வாய்த்திருக்கிறதா என்று பார்க்கும் ஆவலும் ஏற்பட்டது.

மக்கள் கவி பாரதி | Bharathi - hindutamil.in

நவீன தமிழ் இலக்கியத்தில் கவிஞர்கள் சிறுகதை எழுதுவது புதிதல்ல. பாரதி ஆரம்பித்து வைத்தான். ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா. ரகுநாதன் (திருச்சிற்றம்பலக் கவிராயர்) சுந்தரராமசாமி (கவிதைக்குப் ’பசுவய்யா’) வண்ணதாசன்(கவிதைக்குக் கல்யாண்ஜி) வண்ணநிலவன் , மு.சுயம்புலிங்கம், கந்தர்வன், உதயஷங்கர் என கவிதை, சிறுகதை இரண்டையும் ஒரே நேரத்தில் படைத்தவர்கள் உண்டு. நீண்ட காலம் கவிதை மட்டுமே  படைத்துவிட்டுப் பின்னாட்களில் நாவல்,சிறுகதைக்கு வந்தவர்கள் எனச் சில ஆளுமைகள் உண்டு. சுகுமாரன், கலாப்ரியா, விக்கிரமாதித்யன்,சமயவேல் போல. இந்த இரண்டாவது வரிசையில் வருபவர் இன்குலாப். 70களிலிருந்து கவிதை படைத்து வரும் இன்குலாப் தன் முதல் சிறுகதைத்தொகுப்பை 1992இல்தான் வெளியிடுகிறார்.

இன்னொரு வரிசையிலும் இன்குலாப் இடம் பெறுவார்.ரகுநாதன்,கு.சின்னப்பபாரதி,டி.செல்வராஜ், பொன்னீலன்,கந்தர்வன்,பா.செயப்பிரகாசம் போல ஒரு இடதுசாரி அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டு இயங்கிய, அமைப்புசார் படைப்பாளிகள் வரிசையிலும் இன்குலாப் இடம் பெறுவார். ஆகவே,இலக்கிய உலகின் “தர வாதிகள்” வீசுகின்ற “இவர்கள் இலக்கியக் கால் நனைப்புக் கொண்ட அரசியல்வாதிகள்” என்கிற வசை இவர்கள் எழுதுவது இலக்கியமே அல்ல என்கிற பாராட்டு இவர்மீதும் விழும். விழுந்தது.

இதுபோக, கிழக்கு இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்வாசனையோடு எழுதியவர்கள் என ஒரு பட்டியல் உண்டு. கந்தர்வன், வேல.ராமமூர்த்தி (கருவக்காட்டு எழுத்து எனத் தன் கதைகளை அடையாளப் படுத்தியவர்), அகாலத்தில் மறைந்து விட்ட இளம் படைப்பாளி தவசி (சேவல்கட்டு தொகுப்பு) இப்போது எழுதத்துவங்கி இருக்கும் சா.துரை,அதிரூபன் என்கிற அந்தப் பட்டியலிலும் இன்குலாப் இடம் பெறுவார்.

எந்த வரிசையில் வைத்துப் பார்க்கும்போதும் ஏமாற்றாத சிறுகதைகளை இன்குலாப் படைத்துள்ளார் என்றே குறிப்பிட வேண்டும். கவிஞர் மீராவின் முன்னுரையோடு வெளியான இத்தொகுப்பில் 12 சிறுகதைகளும் ஒரு நெடுங்கதையும் இருக்கின்றன.

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன் ...

”கவிதை, கட்டுரை வாயிலாக உங்களைச் சந்தித்த நான் இப்பொழுது கதைகளோடு வந்து நிற்கிறேன். இதிலுள்ள அனைத்தையும் கதைகள் என்று சொல்ல முடியாது. கதை மாதிரி கொஞ்சம்.

என் அனுபவங்களைக் கதை வடிவத்தில் சொல்ல முயன்ற முயற்சிகள் இவை. இவற்றில் நான் நேரடியாகவும் வருகிறேன். ஒளிவு மறைவாகவும் வருகிறேன். இந்தக் கதைகளில் முன்னிலையில் மட்டுமல்லாமல், ஏதோ ஒரு மூலையிலேனும் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

என்னுள் பாதிப்பை ஏற்படுத்திய சமூக மனிதர்களை அறிமுகப்படுத்த விரும்பினேன்; இயற்பெயராலும், புனை பெயராலும் அவர்கள் உங்கள் முன் நிற்கிறார்கள்.” என்று தன் சிறுகதைகள் குறித்த தன் பார்வையை ‘என்னுரை’யில் வைத்துவிடுகிறார்.

எல்லாக்கதைகளுமே இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை ஓரக்கிராமங்களில் வாழும் இஸ்லாமியக்குடும்பங்களில் நிலைகொண்டு நம்மோடு பேசுகின்றன. சென்னையில் நடக்கும் ஒரே கதையான ‘கொரில்லாக்கள்’ கூட அந்தக் கரம்பை மண்ணின் வாசத்தோடுதான் எழுதப்பட்டிருக்கிறது. மண்வாசனை ,இஸ்லாமிய அடையாளம் என ஏதும் இல்லாமல் போராட்ட வாசம் வீசும் அவரது கவிதைகளின் மொழிக்குச் சற்றும் தொடர்பற்ற,வெகு யதார்த்தமான சித்தரிப்புகளுடன் நேரடியான இராமநாதபுரம் வட்டார மொழியில் இந்தப் 13 கதைகளும் எழுதப்பட்டிருப்பது இக்கதைகளின் பலம்.’ இந்த வடிவத்துக்கான மொழி இதுதான்’ என்கிற முழுத்தன்னுணர்வுடன் அவர் இயங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொழியைப் பற்றி “உம்மாவோட முகம்” என்கிற கதைக்குள்ளேயே அவர் எழுதுகிறார்.

”இப்போது எழுதும் போது திருத்தமாக எழுத முயற்சி செய்கிறேன். ஆனால் இது ரொம்பவும் செயற்கை என்று தெரிகிறது. அம்மாவை நான் ஒரு போதும் அம்மா என்று கூப்பிட்டதில்லை. உம்மாதான் எனக்குப் பழக்கப்பட்ட சொல். இப்பொழுது அம்மா என்று எழுதுகிறேன்.

எங்கோ இருக்கும் என் வயசான உம்மாவைப்பற்றி எழுதும் போதுதான் நான் எவ்வளவோ செயற்கையாக மாறிப் போய் விட்டேன் என்பது தெரிகிறது. இந்த எழுத்துகள் என் தாய்மொழியில்லை. என் தாய்மொழி ரொம்ப ரொம்ப இயற்கையானது. அதை நான் மறந்து விட்டேன்…. பள்ளியில் படிக்கும்போது கொஞ்சம் மறந்தேன். கல்லூரியில் படிக்கும்போது இன்னும் கொஞ்சம் மறந்தேன். இப்பொழுது தமிழ் கற்பித்துப் பெரும்பாலும் மறந்துபோய் விட்டேன். –

என் உம்மாவைப் பத்தி எழுதும்போது உம்மா எனக்குச் சொல்லித்தந்த சொல்லுலேதான் சொல்லணும். அதுதான் நான் அவுங்களுக்குச் செய்யும் மரியாதை. வேறெ எந்த மரியாதையையும் நான் இது வரைக்கும் செய்யலை. அவுங்களும் இதுவரைக்கும் எதையும் எதிர்பார்க்கலே.. இந்த எழுத்துதான் நான் சாம்பாதிச்சுக் கொடுக்கறது. அதைத்தான் அவுங்களும் விரும்புனாங்க. அதத்தான் சொல்லத் தொடங்குறேன். இனி அவுங்க சொல்லித்தந்த சொல்லுலேயே சொல்லுறேன்.

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர் ...

உம்மா பக்கத்துலே அவுங்க முந்தாணியைப் பிடிச்சபடி.. ஒறக்கம் அவ்வளவு லேசிலே வராது.. எனக்கு மட்டுமில்லே உம்மாவுக்குந்தான்..”

என்று அந்தக் கதை ஊரில் விட்டு வந்த தன் தாயையும் ‘தாய் மொழி’யையும் பற்றித் தொடர்கிறது.தன் வட்டார மொழியைத்தான் ‘தாய் மொழி’ என்று இன்குலாப் குறிப்பிடுவதை இங்கு கவனிக்க வேண்டும்.பள்ளிகளும் ,கல்லூரிகளும்,பண்டிதர்களும் கொண்டாடும் ‘பொதுத்தமிழை’ அவர் தாய் மொழி எனக்கொள்ளாது தன் ஊரின் மொழியையே தாய்மொழி எனக் குறிப்பது முக்கியமான  மொழி அரசியல்.

நகர்மயமாக்கலின் ஒரு முக்கியமான கூறாக இந்த ’ஊர்ப்பேச்சை மறத்தல்’ என்பது நம் எல்லோர் வாழ்விலும் இருக்கிறது.ஊர்ப்பேச்சை மறத்தல் என்பது ஊரின் –கிராமத்தின் -பண்பாட்டு அசைவுகளையெல்லாம் மறத்தல் அல்லது துறத்தல் என்பதன் குறியீடுதான்.இந்த மறத்தல் குறித்து வண்ணதாசன் தன்னுடைய ‘சில வாழை மரங்கள்’ என்கிற கதையில் அழுத்தமாக இப்படிப் பதிவு செய்திருப்பார்:-

”ஊர் ஞாபகம் வந்தால் நேராக சைலப்பன் வீட்டிற்கு வந்துவிடுவேன். அவனும் என்னைப் போல இந்தப் பட்டணத்தில் வந்து எலிப்பத்தயத்தில் மாட்டினது மாதிரித்  திணறிக் கொண்டுதான் இருக்கிறான். என்னைவிட அவன் கூடக்  கொஞ்சம் கஷ்டப்படுகிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அதில் என்ன விசேஷம் என்றால், இவ்வளவு கஷ்டத்திற்கு இடையிலும் அவன் பேச்சு இன்னும் எங்கள் ஊர்ப்பேச்சாகவே இருக்கிறது.

எனக்கென்னவோ ஊர் என்பது மனிதர்கள் மூலமாகவும், மனிதர்கள் என்பவர்கள் தங்களது பேச்சு மூலமாகவுமே பளிச் பளிச்சென்று அடையாளம் காட்டிக் கொள்வது போலத் தோன்றுகிறது. வனாந்திரங்களில் அடைக்கலாங் குருவிச்சத்தம் கேட்டது மாதிரி, திரும்பத் திரும்ப, இந்தப் பேச்சும் சொற்களுமே நகரத்தின் புழுதிகளுக்குள் புதையுண்டு போய்க் கொண் டிருக்கிற எங்களுடைய ஊர்த்தெருக்களையும், காரை வீடுகளையும் காப்பாற்றித் தருகிறது போல இருக்கிறது.”

இன்னும் தொடர்ந்து வரும் இவ்வாசகங்கள் உண்மையிலேயே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குபவைதாம்:

”பாட்டிலிலே தண்ணி விக்கிற மாதிரி, இன்னங் கொஞ்ச நாளில் இந்த மாதிரிப் பேச்சு எல்லாம் கூட டேப்புல வந்திரும்ணு நினைக்கேன். அந்த ஊர்ப் பேச்சு, இந்த ஊர்ப் பேச்சு, அப்பா கூடப் பேசுகிறது, மகன் கூடப் பேசுகிறது. பெண்டாட்டி கூடப் பேசுகிறது என்று அது அதுக்கு டேப் வந்திரும். உத்தேசமாக நீ என்ன என்ன எல்லாம் பேசுவியோ, அதுக்குப் பதில் பேச்சு அதிலேயே இருக்கும். ஸ்விட்சைப் போட்டு, காதில் மாட்டிக் கிட்டே பேச வேண்டியதுதான்…’ ஏதோ விளையாட்டாக ஆரம்பித்து விட்டேனே தவிர, பேச்சுக்கு ஆளற்றுப் போவோம் என்ற நிலைமை எனக்கே கஷ்டமாகத்தான் இருந்தது.”

இன்குலாப் இந்த மொழி இழப்பில் ஊடாடும் கல்வியின் அரசியலையும் சுட்டிக்காட்டுவது சிறப்பான ஒன்று. கி.ராஜநாராயணன், வண்ணதாசன், இன்குலாப்  உள்ளிட்ட பல படைப்பாளிகள் இந்த ’மொழிப்பிரச்னை’ குறித்த பிரக்ஞையுடன் பேசுகிறார்கள்.பேச்சு வழக்கை எழுத்தில் வம்படியகக் கொண்டுவந்து கலகத்தை ஆரம்பித்து வைத்த ‘நைனா’கி.ராஜநாராயணனின் பாட்டையில் இன்குலாப்பின் எல்லாச் சிறுகதைகளும்  நடைபோடுவது ஒன்றைச் சுட்டுவதாக இருக்கலாமோ என்கிற சந்தேகம் வருகிறது. 30 ஆண்டுகாலம் ‘நல்ல’ தமிழில் கவிதைகள் எழுதிய இன்குலாப் அவிழ்த்துவிடப் பட்ட கன்றுக்குட்டி தாய்மடியை நோக்கிக் கதறிக்கொண்டு ஓடுவதைப்போலச் சிறுகதைகளில் தன் ‘தாய்மொழி’க்குத் தாவி ஓடியிருக்கிறார் எனலாமா?

நாடறிந்த மக்கள் எழுத்தாளரான இன்குலாப்பின் கதைகள் என்ன அரசியலைப்பேசும் என்பதை ஆராய்ந்து சொல்ல வேண்டிய அவசியமின்றி அது பளிச்செனத் துலங்கும்படியாக ஒவ்வொரு கதையிலும் வெளிப்படுகிறது. உழைக்கின்ற எளிய மக்களின் வாழ்வை அவர்களின் பக்கம் நின்று உரக்கப்பேசும் அரசியலே இன்குலாப் சிறுகதைகள் முன்னெடுக்கும் அரசியல்.

அத்தோடு நேரடியான கட்சி அரசியலைச் சொல்வதற்காகவென்றே ஓரிரு கதைகளை எழுதியிருக்கிறார்.

സിപിഐ – സിപിഎം പിറന്നാൾ തർക്കം | CPI ...

அதில் ஒன்றுதான் ‘புதிய மனிதன்’ என்கிற கதை.இன்குலாப் சார்ந்திருந்த நக்சல்பாரி இயக்கத்தின் உயர்வைச் சொல்ல இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யையும் மட்டம் தட்டி எழுதப்பட்டகதை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி “அப்புராணிக் கட்சி. அது மூட்டைப் பூச்சியைக் கூட நசுக்காது” அவ்வளவுதான். மார்க்சிஸ்ட் கட்சி இந்திராகாந்தியை ஆதரிக்கலே அவ்வளவுதான். மற்றபடி அதும் இதுவும் ஒண்ணுதான். நக்சல்பாரி இயக்கம்தான் வெண்மணிக் கொலையாளியைச் சரியாகப் போட்டுத்தள்ளிய சரியான இயக்கம் என்கிற பெருமையைச் சொல்லும் கதை. அருளானந்தன்,சந்திரன்,வாசன் என்கிற மூன்று வேறு பட்ட கட்சித் தோழர்களைக் கதாபாத்திரங்களாக வார்த்து, ஒரு குடும்பக்கதைபோல ஆரம்பித்து கட்சி அரசியலைப் பேசுகிறார். வெண்மணியில் கோபாலகிருஷ்ண நாயுடு கொலைக்குப் பிறகு இந்த ‘அழித்தொழிப்பு’அரசியல் பாதை தவறானது என்று நக்சல்பாரி இயக்கமே அதைக் கைவிட்டு விட்டது வேறு கதை. அவர் கட்சியை அவர் புகழ்கிறார். அது பிரச்னை இல்லை. அது கலையாகி நிற்கிறதா என்றுதான் நாம் பார்க்க வேண்டும்.

இக்கதையை விட, கடத்தல்,மறுபடி வருவார்கள் என்கிற இருகதைகள் நக்சல்பாரி இயக்கத்தோழர்களின் தியாகத்தைப் பிரச்சாரமின்றிப் போற்றும் கதைகள். இவை இரண்டுமே அரசியல் தொடர்பில்லாத இரு குடும்பப்பெண்களின் பார்வையில் சொல்லப்படுவதால் உயிர்ப்புள்ள கதைகளாக மிளிர்கின்றன. கட்சி அரசியலைக் கதைக்குள் கலையமைதி கெடாமல் கொண்டு வர விரும்பும் எக்கட்சி எழுத்தாளர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய கதைகள் இவ்விரண்டும்.

இம்மூன்று கதைகளைத்தவிர, பிற 10 கதைகளும் இராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற மக்களின் இன்னும் குறிப்பாக கிராமப்புற இஸ்லாமிய மக்களின் வாழ்வில் நிகழ்ந்து வரும் மாற்றங்களையும் சிதைவுகளையும் அம்மண்ணின் மொழியில் நுட்பமாகச் சொல்லுகின்றன.

கிராமத்திலிருந்து கிளம்பி பிழைப்புக்காகப் பெரு நகரம் சென்று நடுத்தர வர்க்கமாக மாறி வாழ்கிறவர்களுக்கு ஒரு ஊர்ப்பாசமும் ஊர் நினைவும் எப்போதும் அலையடித்துக் கொண்டிருக்கும். அப்படி அலையடிக்கும் நினைவுகளோடு நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் செல்லும் மனிதர்கள் “ஊரு முன்னே மாதிரில் இல்லே. ரொம்பக்கெட்டுப் போச்சு” என்று அறிந்து துயருறும் மனநிலையைப் பலரும் கதைகளில் வரைந்துள்ளனர். இன்குலாப் தன்னுடைய ‘பாலையில் ஒரு சுனை’ மற்றும் ‘விபத்து’ ஆகிய இரு கதைகளில் தன் பழைய ஊரைத் தேடிப்போகிறார்.

உச்சி வெயிலில் மெயின் ரோட்டில் இறங்கி கிராமத்துக்கு வறண்ட பாலை மணல் வெளியில்  நடக்கும் தகப்பன் ,தாய், மகள் மூன்று பேரும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.தாய் இதே போல ஒருநாள் சிறு வயதில் தான் செருப்பில்லாமல் நடந்து போகையில் எதிர்ப்பட்ட ஒரு கிராமத்து மனுஷி தன் செருப்பைக் கழற்றி தனக்கு அணிவித்த நிகழ்வைச் சொல்லி அந்த மதிரி ஈரமுள்ள மனுசங்களைப் பார்க்கத்தான் இன்று கிராமத்துக்கு வந்ததாகக் கூறுகிறாள்.அந்த ஈரம் இப்போதும் இருக்குமா என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது.கதை இப்படி முடிகிறது:

“மூவரும் மணல் மேட்டின் உச்சியை நெருங்கினோம்.அங்கு ஒரு மூதாட்டி தலையில் சுள்ளிக்கட்டைச் சுமந்தபடி நடந்து வந்தாள்.எங்களைப் பார்த்துவிட்டு இந்த வேணாத வெயில்லே ஏன் நடந்து போறீங்க..பஸ்ஸுலே போகக்கூடாதா?என்று கேட்டபடி நடந்தாள்.”

சக பயணிகளான மனுசர் மக்கள் மீது கொள்ளும் இந்த அக்கறைதான் பாலையிலும் ஒரு சுனையாக நம்மை நனைப்பதாக இன்குலாப் எழுதுகிறார்.

அதன் மறுபக்கமாக ‘விபத்து’ கதையில் ஊரின் சமூக மனநிலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை வரைந்து காட்டுகிறார்.முன்பெல்லாம் யார் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்தாலும்  கொறிப்பதற்கு வேர்க்கடலையோ கொண்டைக்கடலையோ தட்டுகளில் நீளும்.கடிப்பதற்கு முறுக்கோ சேவோ இருக்கும்.குடிப்பதற்குச் சாயாவோ சர்பத்தோ தயாராகும்.எல்லாவற்றுக்கும் மேலாக “வா” என்ற சொல்லிருக்கும்.

தவாரிஷ் : இன்குலாப் – peruvelipenn

இப்பொழுதும் எல்லா வீடுகளிலும் மனிதர்கள் இருக்கிறார்கள்.ஆனால் முன்பிருந்த  முகங்களும் இல்லை.சொற்களும் இல்லை.”

தண்ணீருக்குத் திண்டாடும் இராமநாதபுரம் மண்ணின் வெக்கையை வற்றாது நிற்கும் சாதிக்கிறுக்குடன் பிணைத்துச் சொல்லும் கதை ’கிணறு’

”கடைசிச்சொட்டுத்தண்ணியையும் வெயில் குடிச்சிருச்சு”

“கொக்குக நிறங்கூட மாறிப்போயிருச்சு”

என்கிற வரிகளில் வறண்டுபோன நீர்நிலைகளைப் படம் பிடிக்கிறார்.

‘சின்ன வானத்தில்’ கதை சினிமாப்பைத்தியம் பிடித்த இளைஞர்கள் அவர்களின் கதாநாயகர்களை நேரில் காணச் சென்று அவமானப்பட்டுத் திரும்புவதைச் சொல்கிறது.கிணறு,சின்ன வானத்தில் இரு கதைகளும் எதிர்பார்த்த முடிவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன.

”மம்முராம்சா காக்காவின் ஜனநாயக அனுபவம்” என்கிற கதை நக்சல்பாரிக் கண்ணோட்டத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கேலி செய்யும் கதை.நக்சல் அரசியலின் பிரச்சாரக் கதைதான். ஆனாலும்  பிரச்சார நெடி தூக்கலாக இல்லாமல் சொல்ல முயன்ற கதை.மம்முராம்சா என்கிற அப்பாவி மனிதரின் குணாதிசயம் நுட்பமாகச் செதுக்கப்பட்டிருப்பதால் இது சாத்தியமாகியுள்ளது. பாராளுமன்ற அரசியலை நம்புபவர்கள் எல்லோருமே அப்பாவிகள் என்கிற நக்சல் அரசியலை அவர்மூலம் குறியீடாகச் சொல்வதில் வெற்றி பெற்ற கதை.

கொரில்லாக்கள் கதை சென்னை கடற்கரையில் முறுக்கு விற்கும் இராமநாதபுரத்துச் சிறுவர்களின் வாழ்வைப் பேசும் கதை. சரியாக முறுக்கு விற்பனை ஆகாவிட்டால் ‘முதலாளி அடிப்பார்’ என்று சொல்லும் ராமநாதபுரம் மாவட்டத்துப் பையன்களில் துயரத்தை மட்டும் சொல்லி நம் பரிவைக் கோராமல் அடிப்பதை எதிர்த்துப் பையன்கள் ஒன்றுகூடிக் குரல் கொடுக்கும் கதையாகப் படைத்ததில்தான் இன்குலாப்பின் அரசியல் வெளிப்படுகிறது. சில நுட்பமான,கவித்துவமிக்க வரிகளில் அந்தப் பையன்களைப்பற்றி எழுதியிருப்பார்:

“நீயும் பரமக்குடிப் பக்கந்தானா” என்றேன்.

அவன் ஆச்சரியத்தோடு என்னைப்பார்த்து “ஆமாம் சார்.உங்களுக்கு எப்படித் தெரியும்”என்றான்.

“அந்த ஊருக் கரம்பை மண்ணு இன்னும் உங்க மூஞ்சியிலே ஒட்டிக்கிட்டிருக்கே” என்றேன்.

முறுக்கு விற்கும் பையனை அறிமுகம் செய்யும் ஒரு பத்தியும் கூட கவித்துவமாக இருக்கும்

“இராமநாதபுரம் மாவட்டம் ஒன்றும் வளமான பகுதியில்லை.ஆயினும் அங்கும் கொஞ்சம் பசுமை ஒட்டிக்கொண்டிருந்தது. இப்பொழுது அந்தப் பசுமையும் களவு போய்க்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.அந்த ஊரிலிருந்து ஒரு மனிதத்துளி சென்னைக் கடற்கரையை நோக்கி வீசப்பட்டிருக்கிறது.”

இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளாக ”செடிக்கும் கொஞ்சம் பூக்கள்”,”தனிமையில் ஒரு தோழமை”, மற்றும் “மதம்” நெடுங்கதை ஆகிய மூன்றும் அமைந்துள்ளன.

“புகையில் பாதியாய்ப்

பொருமலில் பாதியாய்

கசியும் உனது

கண்களைத் துடைத்துக்கொள்”

என்று கவிதையில் சொல்லிவிடுவது எளிதுதான்.அனைத்துலக மகளிர் நாளை ஒட்டி என் துணைவியாரை நோக்கி என்கிற அடைப்புக்குள்ளான வாசகத்தோடு இன்குலாப் எழுதிய கவிதை வரிகள்தாம் இவை.ஆனாலும் நம் பெண்கள் ’விலகி வீட்டிலோர் பொந்தில்’ (இது பாரதியின் வரி) எவ்விதம் இந்தக் கசடுகளையும் சுமைகளையும் சுமந்தும் வாழ்கிறார்கள் என்பதை “இதோ பாருங்கள் இப்படித்தான்” என விளக்கும் கதைகள் செடிக்கும் கொஞ்சம் பூக்கள் மற்றும் தனிமையில் ஒரு தோழமை.

இன்குலாப் நேர்காணல்கள் - Inquilab ...

கணவர், குழந்தைகளை எழுப்பிக் குளிக்க வைத்து உணவு தயாரித்து எனப் பரபரக்கும் காலைப்பொழுதுகள்.

“கிளைகளை விட்டுப் பறவைகள் பறந்து விட்டன.இனி, நொடிமுள்ளுடன் போட்டியிட வேண்டியதில்லை. சாப்பிட்டுப் போட்ட பாத்திரங்கள்,குளித்துப் போட்டு விட்டுப்  போன துணிமணிகள் மதியச் சாப்பாட்டுக்கு வேண்டிய காய்கறிகள். பாத்திரங்களைத் தேய்த்துக்கொண்டிருந்தவள் திறந்து கிடந்த  கதவுக்கு அப்பால் தற்செயலாகப் பார்த்தாள். பூனையொன்று அவளைப் பார்த்துவிட்டு ஓடியது.

“ராஸ்கோல், நீதான் ராத்திரி வந்து குப்பை வாளியைக் கொட்டிவுட்டியா?மறுபடி வந்துபாரு ..உன்னை என்ன செய்யுறேன் தெரியுமா?”என்றாள்.

இந்தப் பூனையோடு அவளுக்கு ஒரு தோழமை உருவாகிற கதைதான் இது.

தனக்குத்தானே பேசிக்கொள்ளும் புலம்பல்கள்,குடும்பத்தாருடன் போடும் சண்டைகள்,சிறு சிறு சச்சரவுகள் ,கணவனோடு கொள்ளும் ஊடல்கள்,கெஞ்சல்கள்,கொஞ்சல்கள்,பிள்ளைகள் மீது கொள்ளும் பாசமும் கோபங்களும் என இவையெல்லாம்தான் நம் பெண்கள் பேசும் மொழி. இந்தக் கேடுகெட்ட வாழ்வையும் சகித்துக்கொள்ள இந்த மொழியே கைத்தாங்கலாக அவர்களுக்கு உதவுகிறது. இந்தப் புலம்பல்கள் ,பெருமூச்சுகள்,கொஞ்சல்கள்  போன்றவை ஒரு மொழியாக மட்டுமின்றி தங்களுக்குத் தேவையானதைச் சாதித்துக்கொள்ளும் போராட்ட  வடிவங்களாகவும் அமைகின்றன. அவர்களின் குடும்ப ஆயுதங்கள்.இவற்றால் எல்லாம்தான் பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறர்கள்.

இந்த வரிசையில் ஒரு பூனையை அவளுக்குத் தோழமையாகக் கொண்டு நிறுத்துகிறார் இன்குலாப்.அப்பூனையொடு அவள் நடத்தும் உரையாடல்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகாலத்துப் பெண்ணின்  தனிமையை  அதன் அழுத்தத்தை நமக்கு உணர்த்திவிடுகின்றன.உணர்ச்சிகரமான அதிர்வுகளை ஏற்படுத்தும் கதை இது.

இதே அலைவரிசையில் ராவியத்து என்கிற இளம் பெண்ணின் இன்னொரு கதை செடிக்கும் கொஞ்சம் பூக்கள்.வயதுக்கு வந்ததால் படிப்பை இழந்த அவள் பூந்தோட்டத்தில் உழைத்து உழைத்துப் பூக்க வைக்கும் பூக்களை விற்றுக் குடும்பப் பொருளாதாரத்துக்கு உதவுகிறாள்.விருந்தினராகச் செல்லும் நகரத்து மனுசர்கள் பார்வையில் கதை விரிகிறது.கதை இப்படி முடியும்:

இன்குலாப் நாடகங்கள் | Buy Tamil & English Books ...

”ஒவ்வொரு செடியிலும் ஒன்றிரண்டு பூக்கள் வெள்ளையாய்ச் சிரித்தன. ஆயிசாவும், மைமூனும் போய் அந்தப் பூக்களைப் பறித்து முகர்ந்து பார்த்தார்கள். வாசனையால் முகங்கள் மலர்ந்தன.

“இந்த மொட்டையெல்லாம் பறிக்காம உட்டுட்டியலே… இவ்வளவு பூவு செடியிலயே மிஞ்சிடுச்சே” என்றாள் ஆயிசா.

“ஆமாக்கா… நான் பார்க்காம உட்டுட்டேன்” என்றாள் பரகத்து.

“நான் ஒண்ணுரண்டு பூவைப் பறிக்காமயே உட்டுறுவேன்” என்றாள் ராவியத்து.

“என்?” மைமன் கேட்டாள்,

“காலைலே அந்தப் பூவு செடியிலேயே மலர்ந்திருக்கும். மைமூன்குட்டி செடிக்கும் கொஞ்சம் பூ வேணாமா?” என்று ராவியத்து சிரித்துக் கொண்டாள்.”

அந்தக்கதையில் ஒரு பூனை எனில் இக்கதையில் செடிக்கும் கொஞ்சம் இருக்கணும் என்கிற ராவியத்தின் அறம்.

“மதம்” என்கிற நெடுங்கதை அல்லது குறுநாவல் 78 பக்கங்களில் 80களில் தமிழகத்தில் இந்துமுன்னணி காலூன்றுவதற்காக முன்னெடுத்த சதிவேலைகளின் முகத்தைக் கிழித்துக்காட்டும் கதை.அதே காலத்தில் இஸ்லாமியரிடையே மதப்பகை உணர்வை விசிறிவிட்ட இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளையும் தோலுறிக்கும் கதையாகவும் அமைகிறது.வேலாயி என்கிற கிராமத்துப் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலையுறுகிறாள்.அவளைக் –இந்துப் பெண்ணான அவளைக்-கெடுத்துக் கொலை செய்தது மூன்று முஸ்லீம்கள் என்கிற வதந்தியை மூலதனமாகக் கொண்டு முன்னணி அவ்வட்டாரத்தில் இந்து-முஸ்லீம் பகையையும் கலவரத்தையும் எப்படித்தூண்டுகிறது என்பதை யதார்த்தமாகவும் நடுநிலையோடும் மக்கள் ஒற்றுமை என்கிற மேடையில் நின்று மதச்சார்பற்ற கண்ணோட்டத்தில் இன்குலாப் எழுதியிருக்கிறார்.ஒரு நாவலாக விரிந்திருக்க வேண்டிய கதை.

இஸ்லாமிய வாழ்வுக்குள் நின்று மதச்சார்பற்ற கண்ணோட்டத்துடன் வலுவாகப் பேசுகிற ஒரு குரலை இழந்துவிட்டோமே என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தும் கதை இது.இக்கதையில் இந்து முன்னணி பயன்படுத்தும் பார்முலாவைத்தான் இந்தியா பூராவும் இன்று பயன்படுத்தி மதவெறி அரசியலை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.ஒரு அசலான கலைஞனாக,சமகால அரசியலையும் நிகழ்வுப்போக்குகளையும் நிதானத்துடனும் கலையழகுடனும் படைத்தவராக இன்குலாபை இந்தப் பதின்மூன்று கதைகளும் அடையாளம் காட்டுகின்றன.

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் சொன்னது போல “கதைக்குள்ளேயே தீர்வைச் சொல்லிவிட வேண்டும் என்கிற இடதுசாரிப் படைப்பாளிகளின் ‘மன நோய்’” ஓரிரு கதைகளில் இன்குலாப்பிடமும் வெளிப்படுகிறது.பொதுவான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய படைப்புப் பிரச்னை இது.

ஏழு நாவல்கள்,ஒரு நூறு சிறுகதைகள் எழுதி, சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளும் பெற்ற இடதுசாரிப் படைப்பாளியான பூமணி 70 வயதுக்கு மேல் இப்படிப் பேசுவதை நாம் உற்று நோக்க வேண்டும்:

“இப்போது எனக்கு குற்றவுணர்ச்சியே இருக்கிறது. அருமையான கதைகளை எழுதியுள்ள கு.அழகிரிசாமியின் எழுத்து கிராமங்களில் காலையில் ஆலங்குச்சியால் நிதானமாக ஒவ்வொரு பல்லாக விளக்குவதைப் போன்ற எழுத்து. புறவயமான சூழ்நிலைச் சித்திரத்தை அகவயப்படுத்தி அந்தக்கதையின் ஓட்டத்துக்கு இசைவாகவோ, கூடுதல் வெளிச்சம் தருகிற மாதிரியோ இருக்கிறது அவருடைய கதைகள். அவரையெல்லாம் விட்டு விட்டு காடு கரை என்று எதை எதையோ எழுதியாச்சு..”

”புறவயமான சூழ்நிலைச் சித்திரத்தை அகவயப்படுத்தி அந்தக்கதையின் ஓட்டத்துக்கு இசைவாகவோ, கூடுதல் வெளிச்சம் தருகிற மாதிரியோ” இடதுசாரிப் படைப்பாளிகள் எழுத வேண்டும் என்கிற பூமணியின் முன்வைப்பு ஆழ்ந்து உள்வாங்கி உரையாட வேண்டிய ஒன்று.

இப்படிப் பல விவாதப்புள்ளிகளை நோக்கி நம்மை அழைக்கிறதாக இன்குலாப் அவர்களின் சிறுகதைகள் அமைந்திருப்பதே அவரது கலையின் வெற்றி.தொடர்ந்து கதைகள் எழுதாமல் போனாரே என்கிற ஏக்கத்தை இக்கதைகள் ஏற்படுத்துகின்றன.

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3 ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4 ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்



தொடர் 5 ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்



தொடர் 10 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. அய்.தமிழ்மணி

    “சித்திரம்” இந்த வார்த்தைக்குப் பின்னால் தான் எத்தனை ஊடாடல்கள். வாழ்வியலின் ஏதாவதொரு துளியைப் படைப்பாக்கம் செய்வதற்கான கூறுகளைப் பதியமிடுவதற்கு எத்தனை விவாதங்களையும் மெனக்கெடல்களையும் செய்ய வேண்டியிருக்கிறது.

    பா.செயப்பிரகாசம் பூமணி ஆகியோரின் மேற்கோள்களில் கதைகள் வாழவேண்டும் என்கிற நோக்கமிருக்கிறது. அதே நேரத்தில் இன்குலாப்பின் கதைகளில் மனிதர்களும் மண்ணும் வாழுகிற அழுத்தம் இருக்கிறது.

    கதை வாழும்படி படைக்கிற பொழுதே கதை மாந்தர்களும் கதை நிலமும் வாழமுடியும் என்கிற வாதத்தினை தெளிவுற உங்கள் மதிப்பீடுகள் முன்மொழிவதாகக் கருதுகிறேன் தோழர்.

    எதையாவது எழுத வேண்டும் எனத் தொடங்குபவர்களுக்கு உங்களின் இந்தக் கட்டுரைகள் எதை எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என அடிக்கோடிடுபவைகளாக திடம் கொள்கிறது.

    ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் கூடுவிட்டு கூடு பாய்ந்து அவர்களின் உயிரோட்டத்தின் மையத்தைத் தொட்டு விடுகிறீர்கள். அதை அப்படியாக ஒளிவு மறைவில்லாமலும் சொல்லியும் எழுதியும் விடுகிறீர்கள்.

    வியக்க வைக்கிறீர்கள் தோழர்.
    சில வியப்புக்கள் வியப்பின் காரணியிலிருந்து நம்மைத் தள்ளி வைத்துவிடும்.
    உங்கள் மீதான வியப்பு தூண்டிவிட்டு உள்ளிழுக்கிறது.

    நன்றி.

  2. jananesan

    இன்குலாப்பின் காத்திரமான. படைப்புகளை மண்ணின் மணத்தோடும் தவிர்க்க. முடியாத விமர்சனத்தோடும் பதிவு செய்திருக்கிறீர்கள். இக்கட்டுரை சிறுகதைக் கலையில் தோழர் இங்குலாப்பின் பங்களிப்பினை பதிவு செய்து அவருக்கு புகழஞ்சலியையயும் செலுத்தியுள்ளீர்கள். நன்றி தோழர் , இங்குலாப்பின் கதைகளோடு மறுபயணம் செய்ய வாய்ப்பளித்தமைக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *