தொடர் 9: ஒரு லட்சம் புத்தகங்கள் – சுஜாதா | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 9: ஒரு லட்சம் புத்தகங்கள் – சுஜாதா | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

இவர் தமிழ் மட்டுமல்ல, கதைக் களங்களும் புத்தம் புதியதுதான்

ஒரு லட்சம் புத்தகங்கள்

சுஜாதா

ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாரதி பற்றிய சர்வதேச அளவிலான கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.  துணை வேந்தர்களும் சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்களும் ஆய்வறிஞர்களும் திரளாக அங்கே கூடியிருக்கின்றனர்.  டாக்டர் நல்லுசாமி இவர்தான் விழா நாயகன்.  இன்று மதியம் நடைபெறவிருக்கும் விவாத அரங்கிற்கு தலைமை தாங்கவிருக்கிறார்.  அதைக் காட்டிலும் முக்கியமானது புதியதாக துவக்கப்பெறும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இவர் நியமனம் செய்யப்படுவார் என்பதுதான்.  அதன் பொருட்டுதான் அமைச்சரும் இவ்விழாவில் பங்கேற்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இருபத்தைந்து வயது என்று சொல்லக்கூடிய ஒல்லியான உக்கிரமான கண்களுக்குக் கீழ் அவன் வயசுக்கு சற்று அவசரமான நிழல்கள்.  தோளில் பை மாட்டியிருந்தான்.  பையில் விழாவின் சிறப்பு மலர் எட்டிப் பார்த்தது.  தன்னை செல்வரத்தினம் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட இவ்விளைஞன் நல்லுசாமியின் அறைக்குச் செல்கிறான்.

யாழ்ப்பாணத்திற்கு ஒரு மாநாடு சம்பந்தமாக சென்ற போது அவன் வீட்டிற்கு சென்றதும் அங்கே உணவருந்தியதும் அவன் தங்கை நெஞ்சில் உரமின்றி என்று இனிமையாக பாடியதும் நல்லுசாமிக்கு நினைவிற்கு வந்தது.  விசாரிக்கிறார்.  அனைவரும் ஆகஸ்ட் கலவரத்தில் இறந்த விட்டதை கூறுகிறான்.  தங்கை தெருவில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மரித்ததையும் விவரிக்கிறான்.

“இத்தனை நடந்திருக்குன்னா ரத்தம் கொதிக்குது” என்று நல்லுசாமி கூறுகிறார்.

“அதப் பத்தி இப்ப பேச வேண்டாங்க.  நான் வந்தது வேறு விசயத்துக்காக”.

“சொல்லுங்க. உங்களுக்கு எந்த விதத்தில் என்ன உதவி தேவையா இருக்குது?”

தமிழ் நாட்டு மக்கள் அறியாத யாழ்ப்பாணம் நூலகம் போலீஸ்காரர்களால் கொளுத்ததப்பட்ட செய்தியை அவன் சொல்கிறான்.

“அப்படியா?”

“அருமையான புத்தகங்கள்.  பாரதியாரே சொந்த செலவில் பதிப்பித்த ஸ்வதேச கீதங்கள்.  1908லேயோ என்னவோ வெளியிட்டது.  இதன் விலை ரெண்டனாண்டு போட்டு இருந்தது.  ஆறுமுக நாவலருடைய முதல் எடிஷன்கள் எல்லாம் இருந்தது.  1899ல் வெளியிட்ட சிங்காரவேலு முதலியாருடைய அபிதான சிந்தாமணியின் முதல் பிரதி.  லட்சம் புத்தகங்களானா எத்தனை தமிழ் வார்த்தைகள்.  எண்ணிப் பாருங்க.  அத்தனையும் தெரிவில் எரிச்சாங்க.”

அதை விழா மேடையில் தெரிவிக்கப் போவதாகவும் அத்தோடு இலங்கையிலிருந்து வரக்கூடியவர்களை தமிழ்நாட்டில் அகதிகளாக நடத்தப்படும்விதம் கூறித்தும் கூறப் போவதாக தெரிவிக்கிறான்.

“இது இலக்கியக் கூட்டம், இங்கே அரசியலைக் கொண்டு வர முடியாது” என்கிறார் நல்லுசாமி.

சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி என்ற பாரதி பாடலை அவன் நினைவு கூர்கிறான்.  ஒரு லட்சம் புத்தகங்களை எரிச்சத்ற்கு பதிலாக மாநாட்டு மலரை மேடையில் எரிக்கப் போவதாக கூறுகிறான்.  சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி சொன்னது காங்கிரீட் பாலத்தையல்ல மனப்பாலத்தை என்று அவன் விவரிக்கிறான்.

சுஜாதா எனும் எழுத்து அரக்கன் பற்றி ...

“எல்லாம் சரிதாங்க. இதை நீங்க சொல்ல வேண்டிய மேடையைப் பத்தித்தான் எனக்கு”  என்று நல்லுசாமி சந்தேகிக்கிறார்.

ஏடிஎம்கே காரங்களும் டிஎம்கே காரங்களும் இதுக்காக தமிழகம் பூரா கதவடைப்பு செஞ்சதாக சொன்னார்கள் என்று கூறிய செல்வரத்தினம் இது பற்றிய  தமிழகத்துப் பத்திரிக்கைகளின் நிலைபாட்டினையும் வெளிப்படுத்துகிறான்.  விகடன்லே கண்ணீர்த்துளியோட அட்டைப் படம் போட்டதாகவும், குமுதத்தில் எவரையும் சந்திக்க முடியவில்லை என்பதையும், விகடனில் எழுதிவிட்டபடியால் தாங்கள் எழுத முடியாது என்று குங்குமத்தில் கூறியதையும், ராணியில் தொடர்கட்டுரை வெளியிட்டு வருவதாக கூறியதையும் தெரிவிக்கிறான்.  ஒரு சில பத்திரிக்கைகள் கற்பழிக்கப்பட்ட  தங்கையின் கலர் படத்தை அட்டையில் போட்டு செய்தி வெளியிட தயாராக இருப்பதையும்  கூறினான்.

“எனக்கு ஒரு நாட்டு குடிமகன்கிறது யாருங்கறதைப் பற்றி ஆதாரமாக சந்தேகங்கள் வருதுங்க.  சிங்களவர்கள், தமிழர்கள் இரண்டு பேரும் இந்தியாவில் இருந்து வந்தவங்க.  அவங்க வங்காளம், ஒரிஸ்ஸாவில இருந்து வந்த ஆரியர்களாம்.  நாங்க ஒண்ட  வந்த கள்ளத் தோணிங்களாம்.  சக்கிலியர்களாம்.  இதையெல்லாம் சொல்ல வேண்டமா?” பொரிகிறான்.

நல்லுசாமி மதுரையில் உள்ள மனைவிக்கு போன் செய்கிறார்.  தனது துணைவேந்தர் நியமனத்துக்கு பங்கம் விளைந்திடுமோ என்று அஞ்சுகிறார்.  செல்வரத்தினம் செயல்பாட்டினை தடுத்திட காவல் துறையில் உள்ள தனது மைத்துனரின் உதவியை கோரச் சொல்கிறார்.

மதியம்  நிகழ்வுகள் துவங்குகின்றன.  பிஜித்தீவிலிருந்து வந்திருக்கும் ஜார்ஜ் மார்த்தாண்டம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.  இடையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கில் பிரவேசித்து ஏதோ விசாரித்து செல்வரத்தினத்தை அழைத்துச் செல்கிறார்.

மறுநாள் தினமணி நாளிதழில் செய்தி வெளி வந்திருந்தது.

டாக்டர் இரா. நல்லுசாமி தன் தலைமையுரையில் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி சொன்னது கான்க்ரீட் பாலத்தை அல்ல மனப்பாலத்தை என்றார்.  அமைச்சர் தன் உரையில் அரசு புதிதாக துவக்கப் போகும் பாரதி பல்கலைக் கழகத்துக்கு டாக்டர் நல்லுசாமி துணை வேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற செய்தியை அறிவித்தார்.

செல்வரத்தினத்தின் விசா ரத்து செய்யப்பட்டு உடனடியாக தாய்நாடு திரும்ப வேண்டுமென்று கட்டளையிடப்பட்ட செய்தி நாளிதழ் எதிலும் வரவில்லை,

@

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *