The politics of tamil short story (Prapanchan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

 

“1961இல் என் கட்டுரை,கதை,கவிதை மூன்றும் முதன் முதலாகப் பிரசுரம் ஆயின.1968 தொடங்கி, பிரக்ஞையோடும்,படைப்பு மனோபாவத்தோடும் எழுதத்தொடங்கினேன்” என்று குறிப்பிட்ட பிரபஞ்சன் என்கிற நம் காலத்தின் பெரும்படைப்பாளி 2018 டிசம்பரில் தன் 73 ஆவது வயதில் காலமானார்.2018 வரைக்கும் இடையாறாது எழுதிக்கொண்டிருந்தார்.58 ஆண்டுகள் எழுத்து வாழ்க்கையில் (’பிரக்ஞையற்று’ எழுதிய முதல் ஏழு ஆண்டுகளைக் கழித்துவிட்டாலும் 51 ஆண்டுகள்) அவர் எழுதிய 10 நாவல்கள்,5 குறுநாவல்கள் அப்புறம் இரு நாடகங்கள்,சில கட்டுரைத்தொகுப்புகள் இவை எதையும் வாசிக்காமல் அவருடைய 212 சிறுகதைகளை மட்டும் வாசித்தே அவரையும் அவரது படைப்பாளுமை அல்லது மேதமையையும் புரிந்துகொள்ள முடியும். இளமைக்காலம் தொட்டே முழுநேர எழுத்தாளனாக வாழும் ஒரு வாழ்க்கையை அவர் தனக்காக வடிவமைத்துக்கொண்டார்.அல்லது அப்படியான ஒரு வாழ்க்கைக்கேற்பத் தன்னை அவர் செதுக்கிக்கொண்டார்.

2017 வரை அவர் எழுதிய 212 சிறுகதைகளும் மூன்று பெரும் தொகுதிகளாகத் (டிஸ்கவரி புக் பேலஸ்) தொகுக்கப்பட்டுள்ளன. சமூகத்தின் எல்லா அடுக்குகளையும் சேர்ந்த மனிதர்களைப்பற்றியும் – புதுச்சேரி குவர்னர் துரை முதல் தெருப் பிச்சைக்காரர் வரை-அவர் கதை எழுதியிருக்கிறார்.என்றாலும் அவருடைய சாய்மானம் எளிய உழைப்பாளி மக்கள்,பெண்கள்,குழந்தைகள் , திருநங்கைகள் என சுரண்டப்படும் மக்கள்  மீதுதான்.மூன்று காலங்களையும் ஊடறுத்துப் பாயும் அவரது சிறுகதைகள் மானுட வாழ்வின் மேன்மைகளையும் கீழ்மைகளையும் எவ்வித மனத்தடையும், முன் முடிவுகளும் அற்றுப் பேசுகின்றன.அரசியல் பேச அவர் கதைகள் தயங்கவில்லை- சமகால அரசியல் உட்பட.புதுச்சேரியைக் களமாகக் கொண்டே அவரது பெரும்பாலான படைப்புகள் இயங்குகின்றன.சென்னை மாநகரமும் தஞ்சாவூரும் சில கதைகள் நிகழும் நிலப்பரப்பாக அமைகின்றன.அவர் வாழ்வு இம்மூன்று நகரங்களிலேயே மையம் கொண்டு சுழன்றது காரணம்.

பிரச்சார வாசனை சற்றும் இல்லாத எண்ணற்ற ’முற்போக்கான’ சிறுகதைகளைப் படைத்தளித்த படைப்பாளி அவர். 

‘வர்க்கம்’ என்கிற அவரது சிறுகதை சாதியைத் தாண்டிய அல்லது சாதியை உள்வாங்கிய  வர்க்க உணர்வைக் கொண்டாடும் கதை.போனஸ் பிரச்னை காரணமாக மூடப்பட்ட ஆலைத்தொழிலாளி வாசுதேவனின் ’ஸ்ட்ரைக் கால வாழ்க்கை’யின் சில நாட்களே கதையின் புழங்குதளம்.அவர் பிராமண வகுப்பில் பிறந்தவர்.ஆலையில் ஒரு தொழிலாளி.”பிராமணனாகப் பிறந்தவன் பேனாப்பிடிக்கணும் அல்லது கரண்டி பிடிக்கணும்” என்று பழமொழியே உண்டு.ஆனால் இவன் ஆலைத்தொழிலாளி.ஸ்ட்ரைக் காலத்தில் அரைப்பட்டினி,முழுப்பட்டினி எனப்போகும் வாழ்க்கை.இதை ஒரு மூத்த பிராமணரான வக்கீல் ராமாச்சார் குத்திக்காட்டுகிறார்.

“என்ன பிழைப்போ போ,பிராமணனா பொறந்துட்டுலை வேலையும்,கூலி வேலையும் செஞ்சுண்டு வயித்தைக் கழுவிக்கணும்னு உன் தலையிலே எழுத்து.அதுவும் இல்லாமே,லங்கணம் போட்டிண்டு இருக்கியோன்னோ…”

வாசுதேவனுக்குச் சுருசுருவென்று எரிச்சல் ஏறியது.அது குரலில் தென்படாதபடிக்குச் சகஜமாகச் சொன்னார்.

“பெரியவா ,நீங்களே தர்ப்பையைத் தூக்கி எறிஞ்சுட்டு,கறுப்புக்கோட்டைப் போட்டுண்டு, வக்கீல்னு நீட்டி முழக்கிண்டு கோர்ட் கோர்ட்டா ஏறி,வியாஜ்ஜியம் பேசறேன்னுபொய்யைச் சொல்லிண்டு,கள்ளன், திருடன்,கேப்மாரிப்பயல்களோட காசை வாங்கிச் சீவிச்சுண்டுதானே மாமா பெரிய மனுஷாள் ஆனேள்?அப்புறம் நான் மட்டும் ஏன் ஆலையிலேயே பஞ்சு புடுங்கற உத்தியோகம் பண்ணப்படாது?இவ்வளவு பேசறேளே …உங்க பிள்ளை என்ன பண்றார்?’பாட்டா’விலே ,வர்றவன் போறவன் காலைப் புடிச்சு செருப்பை மாட்டிண்டுதானே ஜீவனம் பண்ரார்.பேண்ட்டும்,சர்ட்டும் போட்டுண்டா அது சக்கிலியன் வேலை இல்லேன்னு ஆயிடுமா?இதே சக்கிலியனை நாமதானே நாலு அடி தள்ளி நில்லுடான்னு சொன்னோம்.இப்போ நாலு காசு கிடைக்குதுன்னு தெரிஞ்சப்போ,நாமதனே செருப்பை மாட்டிவிடப்போறோம்.பிராமணன் என்ன பிராமணன்.நமக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?”

பூங்காவில் கேட்பாரற்று நின்ற விஷ்ணுவின் சிலையை பக்தனான வாசுதேவன் கழுவிச் சுத்தம் செய்து மாலை போட்டு பூசையும் செய்கிறான்.இவ்வளவு சிரத்தையோடு பகவானைச்சுத்தம் செய்து சேவிக்கும் அவனைத் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வசதியான பெரியவர் ஒருவர் அவன் கையில் நூறு ரூபாயைத் திணித்து சாமிக்குப் புஷ்பம் சாத்தி பிரசாதம் படைத்து வழிபட வழிகாட்டுகிறார்.அப்படியே வாசுதேவனுக்கு அந்தப்பணி தொடர்கிறது.வாசுதேவன் பக்திமானுமல்ல.நாத்திகனுமல்ல.அப்பாவின் வற்புறுத்தலால் ஆண்டாளைக் கொஞ்சம் வாசித்திருக்கிறான்.அது இப்போது கை கொடுக்க ,பலரும் வந்து வழிபடத் தொடங்குகிறார்கள்.அவனுக்கும் வரும்படி வருகிறது.ஸ்ட்ரைக் காலத்தில் சக தொழிலாளிகள் பட்டினி கிடக்கிறார்கள்.கடன் வாங்குகிறார்கள்.கடன்காரன் அவமானப்படுத்தும்போது தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.வாசுதேவன் குடும்பமும் பட்டினி கிடக்கும் குடும்பம்தான்.தொழிற்சங்கத் தோழர்கள் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளும் கோதுமை,தானியங்கள் கொஞ்சம் காசு இதை வைத்துத்தான் ஓடும் வண்டி..இப்போது பெருமாள் புண்ணியத்தில் மோருஞ்சாதமும் ஆறுபேர் கொண்ட அக்குடும்பத்துக்குக் குறைவின்றிக் கிடைக்கிறது..சில பணக்காரக் குடும்பத்தினர் சிறப்புப் பூஜைகள் செய்யச் சொல்லிப் பணம் தரும் ஒரு கதவும் திறக்கிறது.வருமானத்துக்கு பகவான் அருள்பாலித்துவிட்டார்.

இதற்கிடையில் போராட்டம் முடிவுக்கு வந்து மில் திறக்கப்போகிறார்கள்.பிரபஞ்சன் எழுதுகிறார்: “ சுமார் முப்பது உயிர்களைக் கொள்ளை  கொண்டபின் நாற்பது ஐம்பது குடும்பங்கள் ஊரை விட்டுச் சென்ற பின்,முன்னூறு நானூறு தொழிலாளர்கள் வேறு வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட பின் ,ஒரு வழியாக இரண்டு இரண்டரை  வருஷங்களுக்குப் பிறகு ஆலையை நாளை திறக்கிறார்கள்”

1992இல் எழுதப்பட்ட இவ்வரிகளை வாசித்ததும் என் மனம் பெருமூச்சுடன் விம்மித் தணிந்தது. என்னையறியாமல் கண்களில் நீர் துளிர்த்தது.கட்சி சார்ந்த,தொழிற்சங்க இயக்கத்தின் அங்கமாக இருக்கின்ற எழுத்தாளர்கள் மட்டுமே எழுதுவதற்கென இலக்கிய உலகில் பாகம் பிரித்து ஓரமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த வெகு சாதாரணமான, பட்டினியில் காய்ந்துபோன(இலக்கியத்தரமற்ற !) ,வார்த்தைகளைப் பிரபஞ்சன் எழுதிவிட்டாரே என்று ஒரு விசும்பல். என் மனம் அவர் கரங்களைப்பற்றிக் கண்ணில் ஒற்றிக்கொண்டது.கோவை ஸ்டேன்ஸ் மில் போராட்டத்தின் “காலுக்குச் செருப்புமில்லை..கால் வயிற்றுக் கூழுமில்லை..பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே பசையற்றுப் போனாமடா..” என்கிற தோழர் ஜீவாவின் பாடல் வரிகள் சுமந்து நின்ற சோகத்தை பிரபஞ்சனின் இந்த வரிகள் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றன.இந்த நீளமான ஒற்றை வரிக்குள் எத்தனை எத்தனை தொழிலாளர் குடும்பங்களின் துயரக்கதைகள் புதைந்து கிடக்கின்றன?என்ன ஒரு அழுத்தமான சாய்மானம் கொண்டவரிகள்.

கதையின் முடிவு இதைவிட அபாரம்.இப்போது வாசுதேவனுக்கு முன்னால் “ஆலைத்தொழிலாளி ஆவதா அல்லது பாட்டாச்சாரியார் வேலையிலே தொடர்ந்து இருப்பதா?”என்கிற கேள்வி எழுந்து நின்றது.பசியும் பட்டினியுமாகத் தவித்த வேளையில் தனக்குக் கிடைத்த கொஞ்ச கோதுமையையும் பகிர்ந்து கொண்ட தோழர்களின் நினைவு வந்தது.தான் அவர்களில் ஒருவன் அல்லவா.அவர்களை விட்டு எப்படி விலகிச்செல்ல முடியும்.சாமி கிடக்கட்டும் ஆலைக்கே போவோம் தோழர்களோடு என முடிவெடுக்கிறான்.சாதியும் வர்க்கமுமாகவும் சாதியே வர்க்கமாகவும் பின்னிக்கிடக்கிற நம் சமூகத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு ஒரு சுத்தமான தொழிலாளி வர்க்கக்கதையாக இதைப் பிரபஞ்சன் படைத்திருக்கிறார்.

தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கமும் வேலைநிறுத்தமும் 1905 ஆம் ஆண்டு வ.உ.சி.தலைமையில் துவங்கி விட்டது.தமிழ்ச்சிறுகதை 1920களில் பிறந்து விட்டது.ஆனாலும் தமிழ்வாழ்வின் பகுதியாகி நிற்கின்ற தொழிற்சங்கம்-வேலை நிறுத்தம்-அதன் காரணமாகப் பட்டினி- இதெல்லாம்  மகத்தான தமிழ்ச்சிறுகதைப் படைப்பாளிகளின் மனங்களை இன்னும் அசைக்க/தொட முடியாத பரிதாபம் தொடர்கிறது.பிரபஞ்சனும் அப்படைவரிசையில் வரும் நடுத்தரவர்க்க வாழ்வைச் சேர்ந்தவர்தான் என்றாலும் இந்த ஒரு கதையை எழுதித் தனித்த இடத்தைப் பெற்றுவிட்டார்.

தொழிற்சங்க வாழ்வை எழுதினால்தானா ஒருவரைப் படைப்பாளியாக ஏற்பீர்கள்?என்று கேட்டால் நிச்சயமாக அப்படி  எதிர்பார்ப்பில்லை.அதை மட்டும் ஓர் அளவு கோலாகக் கொள்வது  ஏற்புடையதல்ல.ஆனாலும் ஒரு கதை.ஒருகதையில் நாலு வரி.அவ்வளவே நம் எதிர்பார்ப்பு.

அரசியல் மற்றும் வரலாற்றுக் கதைகள்

பிரபஞ்சனின் அரசியல் பார்வை அவருடைய எல்லாக்கதைகளிலும் உள்ளார்ந்து நிற்பதை நம்மால் உணரமுடிகிறது என்றாலும், நேரடியாக அரசியல் பேசிய கதைகள் என சுமார் இருபது கதைகளைச் சுட்ட முடியும்.உண்மையில் இது பெரிய எண்ணிக்கைதான்.பிரபஞ்சன் புதுச்சேரிக்காரர்.புதுச்சேரி நீண்டகாலம் பிரான்ஸ் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்தது.பிரஞ்சு இந்திய விடுதலைப்போராட்டத்தின் பின் விடுதலை பெற்றது.இன்றைக்கும் புதுச்சேரிக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான உறவுகள் தொடர்கின்றன. புதுச்சேரி நகரில் ஒயிட் டவுண் எனப்படும் வெள்ளை நகரத்தில் பிரஞ்சுக்காரர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.தமிழர்கள் வாழும் பகுதி கறுப்பு நகரம் எனப்படுகிறது.பிரபஞ்சனின் இரு மகன்கள் உட்பட புதுச்சேரி மக்களில் பலரும் பிரான்சில் வேலை பார்த்து அங்கேயே குடியுரிமை பெற்று வாழும் யதார்த்தத்தை நாம் புரிந்துகொண்டு அவருடைய அரசியல்,வரலாற்றுக் கதைகளை 

 வாசிக்க வேண்டும்.அவை புதுச்சேரியின் வரலாற்றோடும் பண்பாட்டோடும் கட்டுண்ட கதைகள்.

பாதுகை,பப்பா,தியாகி,ஓர் ஏழை நாடும் ஒரு பரம ஏழையும்,வியாபாரம்,பதவி, தோழமை,தியாகராஜன், மக்களின் கதை அல்லது லாராவின் கதை,வனமல்லி,இரண்டு நண்பர்களின் கதை,நீரதன் புதல்வர்,குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது,தந்தையும் மகனும், அமைதி தவழும் நாடு ஆகிய கதைகள் கடந்த காலம் மற்றும் சமகால இந்தியாவின் அரசியலையும் வரலாற்றையும் களமாகக்கொண்டு  இயங்குகின்றன.

”ஓர் ஏழை நாடும் ஒரு பரம ஏழையும்” கதை ஒரு கடித வடிவில் அமைந்தது.இந்திய நாட்டின் பிரதம அமைச்சருக்கு புதுச்சேரிப் பிரஜை ஒருவர் எழுதும் கடிதமாக அது தொடங்குகிறது. கடிதம் எழுதுபவரின் பள்ளித்தோழன் அந்த்துவான் படித்ததும் எந்தக் கேள்வியும் இன்றிப் 

பிரான்சுக்குப் போய் உத்தியோகத்தில் சேர்ந்து ‘அவனல்லவா பிள்ளை..நீயும் இருக்கியே” ’என்று இவருடைய அப்பா ஒப்பீடு செய்து திட்டும் வாய்ப்பை உருவாக்குகிறான்.கடிதம் எழுதுபவரின் சொந்த  மாமாவும் பிரான்சில் தங்கிவிட்டவர் அவரும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்அந்த மாமா இவரிடம் பேசுகிறார்:

“ இந்த நாடு உருப்படாதுடா, இங்கே எம்.ஏ. படி.அதற்கு மேலும் படி.உனக்கு வேலை கிடைக்காது.எத்தனை லட்சக்கணக்கான பேர் வேலை இல்லாமல் திரிகிறார்கள்.நானும் பார்க்கிறேனே?” சுதந்திரத்திற்குப் பிறகாவது நிலைமை மாறும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால்,” கறுப்பு துரைகள்,வெள்ளை துரைகளைவிட மோசமானவர்களாக இருக்கக்கண்டு” மனம் உடைந்தனர்.

“ஆகவே இந்த நிலைமையில் ,நீ இந்தியாவை விட்டு பிரான்சுக்கு வருவதுதானே மேல்?என்று கேட்டார் மாமா.

“இல்லை.இந்த நிலைமையில் நான் இங்கு இருப்பதுதான் உத்தமம்.நீங்கள் சொன்ன அயோக்கியர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என் அண்ணன் தம்பிகள்.அவர்களுடன் இருந்து அவர்களுக்காக உழைத்தால்தான்,நான் மனிதன்” என்று சொன்னேன்.

இக்கடிதத்தில் பிரபஞ்சன் வெளிப்படுத்தும் கருத்துக்கள் தேசத்தின் பிரச்னைகளை அவர் புரிந்துகொண்டுள்ள பார்வையைப் பளிச்செனக் காட்டுகின்றன.கடிதத்தின் கீழ்க்கண்ட பத்தி அவரது அரசியல் பொருளாதாரப் புரிதலையும் காட்டுகிறது:

ஐயா, இந்தியர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று நான் சொன்னால், கோபிக்கக்கூடாது. மலைச் சரிவுகளில் குளிரோடும், விஷப் பூச்சிகளோடும் போராடி தேயிலை உற்பத்தி செய்யும் ஆட்கள் நாங்கள். ஆனால் எங்களுக்குக் கிடைப்பதோ மூன்றாம் தரத் தேயிலை. அது மாதிரித்தான் இந்த எறாலும், நாங்கள் அதை எறா என்போம். ஒரு காலத்தில்காலம் என்பது சுமார் இருபது வருஷங்களுக்கு முன்கூட, பெரிய பெரிய எறாக்கள் சுலபமாகக் கடைகளில் விற்றதுண்டு. இப்போது பெரிய எறாக்கள் கண்களிலே காணப்படுவதிலை. இது ஏன் இப்படி நேர்ந்தது? எங்கள் கடலில் எங்களால் பிடிக்கப்பட்டும், எங்களுக்கு உணவாகாமல் யாரோ அவற்றைத் தின்னும்படியாக நேர்ந்தது எப்படி

என் தாத்தாவுக்குக் கல்யாணம் ஆனபோது, அவர் வகித்திருந்த கணக்குப்பிள்ளை உத்தியோகத்துக்கு மாதம் பத்து ரூபாய் சம்பளம். ஆறு பெண்கள், மூன்று பிள்ளைகள் அவருக்கு. நிம்மதியாக உண்டு உடுத்து, பெண்களுக்குத் திருமணம் முடித்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து, வீடு வாங்கி, அதை ஒழுங்குபெறத் திருத்திக் கட்டி நிறை வாழ்வு வாழ்ந்திருக்கிறார் அவர்

நான் தங்களைக் கேட்பது இதுதான். பத்து ரூபாய்ச் சம்பளக்காரர் அவ்வளவு திருப்தியாகக் குடும்பம் நடத்தியது சாத்தியம் என்றால், ஆயிரம் ரூபாய்ச் சம்பாதிக்கிற ஒருவன் கடனாளியாக உழல்கிற நிலை எப்படி, ஏன் வந்தது? எனக்குச் சம்பளமாக என் உழைப்புக்குப் பதிலாக ஒரு ரூபாய் தரப்பட்டால், அதன் உண்மையான மதிப்பு பத்து பைசாவாக இருக்கிறதெனில், மீதியுள்ள தொண்ணூறு பைசாவுக்கு நான் ஏமாற்றப்படுகிறேன், என்பதுதானே பொருள் விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி ஸ்திரப்படுத்தாமல் சம்பளம் என்று வெறும் பேப்பர் நோட்டுகளை வாரி வழங்குவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? நெல்லை உற்பத்தி செய்கிறவனிடம் ஒரு ரூபாய்க்கு வாங்கி, மூன்று ரூபாய்க்கு விற்கிற, நெல்லோடு சம்பந்தப்படாத ஓர் இடைத்தரகனை, வியாபாரியை வளர்ப்பது எந்த சக்தி? –

எங்கள் தாத்தாவும், ஏன் எங்கள் தாய், தந்தையரும் வாழ்ந்த வாழ்க்கையை மானம் கெடாமல் மனம் நோகாமல் நாங்கள் வாழ்வது எக்காலம்?”

பாதுகை’ கதை காலனியத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தைப் பேசும் கதை. ”துரைகளோடு வாழ்க்கை நடத்தறது பேயோட சம்சாரம் பண்ணற மாதிரி,எப்போ மரம் ஏறும் எப்போ இறங்கும்னே கண்டுபிடிக்க முடியாது.கும்பிட்டவன் கூழ் குடிப்பான்.வம்பிட்டவன் வைக்கோல் தின்பான்னு பெரியவங்க சொல்லுவாங்க” என்று தம் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்த்த பிரஞ்சுக் காலனிய நாட்களில் புதிய சப்பாத்துகள் (ஷூ க்கள்) அணிந்து நீதிமன்றத்துள் நுழைய தமிழ் வழக்கறிஞர் பொன்னுத்தம்பிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.ஆனால் பொன்னுத்தம்பி பணிந்து ஏற்காமல் துணிச்சலுடன் ஒரு சட்டப்போராட்டத்தை நடத்தி ஓராண்டுக்குப் பின் சப்பாத்துகளுடன் நீதிமன்றத்துக்குள் நுழைகிறார்.பிரஞ்சு ஆட்சியோடு நடத்திப்பெற்ற முதல் வெற்றியைப் பிரபஞ்சன் இக்கதையில் ஆவணப்படுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

புதுச்சேரி தவிர்த்த இந்தியாவின் பிற பகுதிகளிலும் இந்த ஷூ அணிதல் தலைப்பாகை அணிதல் போன்றவை காலனியவாதிகளால் தடை செய்யப்பட்டிருந்ததையும் கலாச்சார மேலாதிக்கத்துக்கான ஒரு அம்சமாக உடைசார் பண்பாடு கட்டமைக்கப்பட்டதையும் வரலாற்றாய்வாளர் கே.என் பணிக்கர் அவர்கள் அவருடைய “The ‘Great’ Shoe question:Tradition ,Legitimacy and Power in Colonial India என்கிற அவருடைய புகழ்பெற்ற ஆய்வுக்கட்டுரையில் பேசியிருப்பார்.  வரலாற்றின் மிக முக்கியமான ஒரு போராட்டத்தை இலக்கியப்படைப்பாக்கியிருக்கிறார் பிரபஞ்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

’பப்பா’ என்கிற இன்னொரு முக்கியமான கதை பெருந்தலைவர் காமராசர் போன்ற ஒரு புதுச்சேரிக் காங்கிரஸ் தலைவரைப் போற்றும் கதையாக விரிகிறது.மக்களை வதைத்த ஒரு காவல்துறை அதிகாரியை மக்கள் அடித்து உதைத்துவிடுகிறார்கள்.அப்பிரச்னையில் ‘பப்பா’ அடித்தவர்களுக்கு சாதகமாக  நிற்கிறார்.அதுகண்டு இக்கதையைச் சொல்பவர் வியந்து பேசுகிறார்.பிரபஞ்சன் இக்கதையை முடித்த இடத்தில் அவருடைய அரசியல் முத்திரை வெளிப்படுகிறது.கதைசொல்லியின் வியப்பை அவருடைய தோழர் உடைப்பதாக முடிக்கிறார்:

“இன்ஸ்பெக்டரை உதைத்தவர் காங்கிரஸ் நண்பர்.அதே காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் செய்திருந்தால் ‘பப்பா’ அதை அனுமதித்திருப்பாரா?’பப்பா’ன்னா தமிழில் அப்பா என்று அர்த்தம்.அதாவது மாநிலத்தின் தந்தை.தந்தை காங்கிரஸ் பிள்ளைக்குப் பிஸ்கோத்தும்,கம்யூனிஸ்ட் பிள்ளைக்கும் பிரம்படியும் கொடுப்பானா?கொடுத்தால் அவர் தந்தையா?

தோழர் வார்த்தையில் உண்மை இருந்தது”

என்று கதையை முடிக்கிறார்.

பெருந்தலைவர் காமராசர்,மூதறிஞர் ராஜாஜி,அண்ணா,கலைஞர்,எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் மக்கள் தலைவர்கள் எத்தனை செல்வாக்குப் பெற்ற தலைவர்களாக இருந்தாலும் வர்க்க அரசியல் என்று வரும்போது சிறு சந்தேகத்துக்கும், எள்ளளவு பிசிறுக்கும் இடமின்றி முதலாளித்துவத்தையே சிக்கெனப் பற்றி நிற்பர் என்று கலாபூர்வமான இக்கதையில் நேரடியாகச் சொல்லியிருக்கிறார் பிரபஞ்சன்.

தஞ்சை வட்டாரத்தின், சாட்டையடிக்கும் சாணிப்பாலுக்கும் பேர்போன, பண்ணையடிமை முறை அதே காலகட்டத்தில் புதுச்சேரி வட்டாரத்தில் செயல்பட்ட முறையை வாசக மனம் அதிர்ச்சியடையும் வண்ணம் பேசியிருக்கும் கதை ‘வியாபாரம்’ 

பெரியய்யா என்றழைக்கப்பட்ட பண்ணையாரிடம் பண்ணையாளாகக் குடும்பத்தோடு அடிமைப்பட்டிருப்பவர் மண்ணாங்கட்டி.அவருடைய மனையாள் செவந்தி.அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்கு ’வடிவு’ என்று செவந்தி  பெயர் சூட்டுகிறாள்.அவளைத் தன் அண்ணன் வீட்டுக்கு அனுப்பி அவளையாவது இந்த அடிமை வாழ்விலிருந்து தப்புவிக்க வேண்டும் எனச் செவந்தி கனாக் காண்கிறாள். பெரியய்யாவிடம் குழந்தையைக் காட்டி வடிவு என்று பேர் சூட்டியிருப்பதாக மண்ணாங்கட்டி சொல்லி நிற்கிறான்.

“பெரியய்யாவின் முகம் சுருங்கியது.பெரிய கோயில் சாமியின் பேரைப்போய் ,இந்த சனங்கள் வைத்திருக்கிறார்களே என்கிற சிறு எரிச்சல் மூண்டது அவருக்கு.

“என்னடா,வடிவு? உங்க சனத்துக்கு இந்தப்பேரு அடுக்குமாடா?”என்றபடி ,அவர் யோசித்தார்.செவந்தி தன் அருமை மகளுக்கு ஆசையாய் வத்த பேர் அது.அய்யா யோசித்தார்.அந்நேரம் ஆள்காரன்,பலசரக்குக் கடையிலிருந்து ஒரு மூட்டையைத் தூக்கிக்கொண்டு ,அவ்விடம் வந்தான்.

”என்னடா மூட்டை?”

“துவரம்பருப்புங்க ஐயா”என்றான் ஆள்காரன்.

அய்யா,மண்ணாங்கட்டியைப் பார்த்துச் சொன்னார்.

“உன் குட்டிக்குத் துவரைன்னு பேர் வையடா.உங்க சனத்துக்கு அது போதும்”

சத்தம் இல்லாமல் வடிவு,துவரையானாள்.”

துவரைக்குட்டிக்கு ஏழெட்டு வயதானபோது பெரியய்யாவின் பார்வையில் பட்டு அவளை வீட்டு வேலைக்கு அடிமையாகக் கொள்கிறார்.கதையின் முடிவில் தூய்மா துரை தன் நாட்டிலுள்ள தன் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக அடிமைகளை வாங்கிக் கப்பலில் அனுப்புகிறான்.அந்தக்கூட்டத்தில் மொட்டையடிக்கப்பட்ட துவரைக்குட்டியும் இருக்கிறாள்.இறுதிப்பகுதி மனதை உருக்கும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது

.’சத்தமில்லாமல் வடிவு துவரையானாள்’ என்கிற ஒரு வரிக்குள் தமிழகப்பண்பாட்டு ஒடுக்குமுறை மற்றும் சாதிய ஒடுக்குமுறை வரலாற்றின் பல பக்கங்கள் சடசடத்து அடங்குகின்றன. ஆ.சிவசுப்பிரமணியனின் ‘தமிழகத்தில் அடிமை முறை’ நூலில் விளக்கம் பெற்ற உண்மைகள் ஒரு படைப்பாக வெளிவரும்போது அது ஏற்படுத்தும் தாக்கம் பெரிது.கடந்த காலத்தின் ஒரு கதவு ‘டப்’பெனத் திறந்து துயரம் பாரித்த காற்று நம் முகத்திலடித்ததுபோல நம்மை உடல் சிலிர்க்கச் செய்கிறது இக்கதை.

வரலாற்றில் ஒரு வரியாகக் கடந்துபோய்விடக்கூடிய நிகழ்வுகளை ஒரு படைப்பாளி புனைவாக்கும்போது அவ்வரலாறு ஒரு செய்தியைப்போல எளிதில் நம்மைக்கடந்து போய்விடுவதில்லை.நாமே அவ்வரலாற்றின் தெருக்களில் நடந்துகொண்டிருக்கிறோம்.அன்றைய வெக்கையையும் குளிர்ச்சியையும் நாம் முகத்தில் வாங்குகிறோம்.வாசிப்பில் அக்கடந்த காலம் நம் நிகழ்தருணமாகி உறைக்கிறது.சதத் ஹசன் மண்ட்டோ ,அம்ரிதா பிரிதம் போன்றோர் தம் சமகால வரலாற்றுக்கு ஆற்றிய பங்களிப்பைத் தமிழில் பிரபஞ்சன் ஆற்றியுள்ளார்.அவருடைய மானுடம் வெல்லும்,மகாநதி,வானம் வசப்படும் போன்ற வரலாற்று முப்புதினங்களில் போலவே சில பத்துச் சிறுகதைகளில் அவர் வரலாற்றைக் கைக்கொண்டு சுழன்றாடியிருக்கிறார்.

போலீஸ்காரக் கோப்பையனின் சம்சாரம் வனமல்லி, அரைமூட்டை அரிசியைத்தூக்கி அனாயசமாக இடுப்பில் வைத்துக் கொண்டுபோகும் வலிமை உடையவள்.புருசன் போலீஸ்காரன் என்பதால் பெருமை.மட்டுமின்றி வெள்ளைக்காரனை விரட்டிட்டு நம்ம ஊரு ஜனங்க ஆளப்போகுதுங்களாம். இதெல்லாம் நடக்கிற காரியமா என்கிற நினைப்பும் அவளுக்கு உண்டு.கண் அவன் என்பதால்.

அது 1942.வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குக் காந்திஜி அறைகூவல் விடுத்த காலம்.பிரபஞ்சனின் ‘வனமல்லி’ கதை புயல் வீசிய அந்நாட்களின் ஒரு கீற்றை நமக்குள் பாய்ச்சுகிறது.

காந்திஜியின் அறைகூவலைக்கேட்டு ‘மண் வெடித்துத் திடுமென்று ஒரு ஜனக்கூட்டம் தோன்றுவது போல,ஒரு பெரும் திரள்.சில நிமிஷங்களில் ,அந்தத்தெருவில் சேர்ந்துவிட்டது.இசைவாக டேப் தங்கவேலு அங்கு பிரசன்னமாகிப் பாடத் தொடங்கினார் 

“கடலைப் பாருடா வெள்ளைக்காரா-அதுல

கப்பலைப்பாருடா வெள்ளைக்காரா

மூட்டையக் கட்டிட்டு நாட்டையும் விட்டுட்டு

நடையைக்கட்டுடா கொள்ளைக்காரா”

தொண்டர்கள் உற்சாகத்தில் ”மகாத்மா காந்திக்கு ஜே” என்றார்கள்.

ஊர்வலம் பேரோசையுடன் கிளம்புகிறது.துப்பாக்கிச்சூடு நடக்கிறது.ஆண்களையும் பெண்களையும் பிடித்துக்கொண்டுபோய் ஸ்டேசனில் வைத்துச் சித்திரவதை செய்கிறார்கள்.நகக்கண்ணில் ஊசி ஏற்றுகிறார்கள்.பெண்களை நிர்வாணமாக்கிச் சொல்லத்தகாத கொடுமையெல்லாம் செய்கிறார்கள். வனமல்லியின் தெருப்பெண்கள் இதைப்பற்றி வயிறெரியப் பேச்சிக்கொண்டிருக்கும்போது வனமல்லி தன் புருசன் அப்படி வேலையெல்லாம் செய்ய மாட்டான் என நம்புகிறாள்.ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.மக்களைச் சுட்ட வெள்ளைக்கார லோன் துரையை மக்கள் அடித்துக் கொன்றுவிட்டதால் வெள்ளைக்காரப்போலீஸ் ஆவேசமாகியிருந்தது.

தன் சகதோழியான ராமக்காவையே போலீஸ் பிடிச்சிக்கிட்டுப் போனதைக் கேள்விப்பட்டு ஸ்டேசனுக்கு ஓடுகிறாள் வனமல்லி.அங்கே மூன்று பெண்கள் பிறந்த மேனியுடன் கைகால்கள் கட்டப்பட்டுத் தரையில் கிடந்தனர்.ஆண்களும் அவ்விதமே.அந்நிலையில் அடித்துத் துவைத்துக்கொண்டிருந்தார்கள்.

”வனமல்லீ” என்ற அக்காவின் குரல் கேட்டு வனமல்லி தன் புடவையை உருவி அக்காவையும் இதர பெண்களையும் போர்த்தினாள்.தன் கணவனைப் பார்த்துச் சொன்னாள்,”அவங்க கட்டுகளை அவுத்து விடுய்யா.முதல்ல,அவங்க புடவையைக் கொடு.தாயைப் பெண்டாளறிங்கள்டா ,பாவிகளா..”என்றாள்,அனிச்சையாகத் தன் கைகளைக் குறுக்காக வைத்துக்கொண்டு.வெள்ளைக்கார அதிகாரி “கிக் ஹர் அவுட்” என்று கத்துகிறான்.கோப்பையன் கொத்தாக அவள் கூந்தலைப் பற்றி நெட்டி வாசல் பக்கமாகத் தள்ளினான்.”என் மானத்தை வாங்கறியே.என் பொண்டாட்டியா,நீ நாயே..”

”இல்லை. நான் உன் பெண்டாட்டி இல்லை. எனக்கு ஆம் படையானா இருக்க, உனக்கு என்ன யோக்யதை இருக்கு? பொம் பிளை மானத்தை வாங்கறியே. உனக்கு நான் உலைவைப்பனா? ஆக்குவேனா? முந்தானை

விரிப்பனா, நீயும் ஒரு பொம்பிளை கிட்டே பிறந்தவன்தானேடா, ஐயோ. இப்ப சொல்றேன், கேளு. இந்த வேலையை விட்டுட்டு மனுசனா வந்தியானா நான் உனக்குப் பொண்டாட்டி, இல்லைன்னா என் ஜென்மம் தீர்ற மட்டும் உன்னை நான் தீண்ட மாட்டேன். இது சத்தியம். இது சத்தியம்.” 

மயக்கமுற்று தரையில் சரிந்தாள் வனமல்லி.’ என்று கதை முடிகிறது.

ஆவேசமும் உணர்ச்சிக் கொந்தளிப்புமான இக்காட்சியை வாசிக்கையில் நாம் மீண்டும் அந்தக் காலப்புள்ளியில் வாழ்பவர்களாகி விடுகிறோம்.

எழுத்தில் உறைந்துபோன வரலாற்றுக்கு வாழ்வளிப்பவனாகப் படைப்பாளி,தன் படைப்புகளின் மூலம் இன்றின் பிரச்னைகள் என்பவை நேற்றின் தொடர்ச்சி என்பதை உணர வைக்கிறான்.இன்றைப் புரிந்து கொள்ளவே நேற்றை அவன் மீண்டும் இன்றாக்கிக் காட்டுகிறான்.

பிரபஞ்சனின் இதர அரசியல்,வரலாற்றுக்கதைகள் பன்முகப்பட்ட பார்வைகளையும் பரிமாணங்களையும்  முன் வைக்கின்றன.

தியாகி,தியாகராஜன் என்று இரு கதைகள்.சுதந்திரப்போராட்டத்தியாகி ஒருவர் தனக்கு அளிக்கப்பட்டு வரும் தியாகிப் பென்ஷன் இனிமேல் வேண்டாம் என்று நிறுத்தச்சொல்லி மனுக் கொடுப்பதையும் அதற்கான காரணத்தையும் பற்றி ‘தியாகி’ கதை பேச ‘தியாகராஜன்’ கதை ஆரம்பத்தில் தியாகி பென்சன் வேண்டாம் என்று மறுத்தவர் பிற்காலத்தில் குடும்ப நெருக்கடி காரணமாக இப்போது பென்சன் வேண்டும் என மனுச் செய்கிறவர் பற்றிய கதை.இவ்விரு கதைகளிலும் நாட்டுக்காகப் போராடினோம் பென்சனுக்காகவா போராடினோம் என்கிற அவர்களின் உணர்வுதான் அடிப்படை.அரசியல் என்பது வியாபாரமல்ல எனக் கருதிய ஒரு தலைமுறைக் காந்தியவாதிகள் இருந்தனர் எனச் சொல்வதன்மூலம் பிரபஞ்சன் இன்று காந்தியைவிளம்பரச்சின்னமாகப் பயன்படுத்துவோரையே அம்பலப்படுத்துகிறார்.

புதுச்சேரி வரலாற்றின் புகழ்பெற்ற நாயகன் ஆனந்தரங்கம்பிள்ளை இரண்டு கதைகளில் மையக்கதாபாத்திரமாக வருகிறார்.’பதவி’ கதையில் புதுச்சேரி பிரஞ்சு ராஜாங்கத்தின் துபாஷியாக இருந்த கனகலிங்க முதலியார் மறைவுக்குப் பின் அப்பதவியை லஞ்சம் கொடுத்து வாங்க லாசர் தானப்ப முதலியும் அன்னபூர்ண அய்யரும் போட்டி போட்டு முயற்சித்துக்கொண்டிருக்க எதுவும் வேண்டாம் என்கிற மனநிலையை ழான் துரைக்கு வெளிப்படுத்துவதையே ஒரு தந்திரமாகக் கையாண்டு வெல்கிற ஆனந்தரங்கப்பிள்ளையின் மதியூகத்தை ஒன்றும் சொல்லாமலே உணர்த்தும் கதை.

தர்மபுரி பகுதியில் நக்சலைட்டுகளைப் பூண்டோடு வேரறுக்க ஐ.ஜி.தேவரம் காலத்தில் எடுக்கப்பட்ட காவல்துறையின் வன்முறை நடவடிக்கைகளைப் பற்றிய ’தோழமை’ என்னும் கதை,தோழர் அப்புவைத் தப்பிக்க விட்டுத்தான் கைதாகிச் சித்திரவதைக்குள்ளாகும் ஜானகி என்னும் பெண் தோழரின் மனத்திடத்தைப் பேசுகிறது.

நீரதன் புதல்வர்,தந்தையும் மகனும் ஆகிய இரு கதைகளும் இன்றைய உள்ளீடற்ற கயமை நிறைந்த கட்சி அரசியல்வாதிகளைத் தோலுரிக்கும் கதைகள்.

மிகவும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று யாதெனில், தமிழகத்தின் வரலாற்றில் சாதிகளின் தொகுதியாக இடங்க,வலங்கை என்கிற பிரிவினை இருந்ததும் அவற்றுக்கிடையில் மோதல்கள் இருந்ததும் நாமறிவோம்.அம்மோதல்களைச் சிறுகதைகளில் படைத்தளித்த ஒரே எழுத்தாளர் பிரபஞ்சன் தான் என்று நினைக்கிறேன்.சமபந்தி,நீதி போன்ற கதைகள் அழுத்தமாக இம்மோதலைப் பேசுகின்றன.

தொகுத்துப் பார்த்தால், இந்த அரசியல் மற்றும் வரலாற்றுக் கதைகள் வெவ்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளதோடு எப்படியான ஒரு அழுத்தமான அறம் சார்ந்த ஜனநாயக,இடதுசார்பு அரசியல் பார்வையை பிரபஞ்சன் கொண்டிருந்தார் என்பதையும் தெள்ளென வெளிக்காட்டி நிற்கின்றன.கட்சி மற்றும் அமைப்புகள் சாராத நவீன இலக்கியவாதிகள் எவரிடமும் வெளிப்படாத ஒரு நிலைப்பாடு இது.

சாதி,மதங்களைப்பற்றிய கதைகள்

வெளியேற்றம்,சகோதரர் அன்றோ,பாயம்மா,நான் இருக்கிறேன்-2,அமானுடன்,அழகுப்பரதேசியின் அந்திப்பொழுதுகள் ஆகிய ஐந்து கதைகள் மத நம்பிக்கைக்குள் ஊடாடும் நேர்மறையான கூறுகள் மீது ஒளி பாய்ச்சும் அதே நேரத்தில் நாணயத்தின் மறுபக்கமாக அதன் எதிர்மறை  அம்சங்களையும் மதவெறி அரசியலையும் கிழித்துப் போடுகின்றன.சாதி ஆணவக்கொலை குறித்த ‘நேற்று மனிதர்கள்’, துப்புரவுத் தொழிலாளியைப் பெருமைப்படுத்தும் ‘சுந்தரன்’ ஆகிய கதைகள் அவருடைய சாதிக்கெதிரான கருத்தியலை நமக்குக் காட்டுகின்றன.

‘சகோதரர் அன்றோ’ கதை தமிழ்க் கிறித்துவத்துக்குள் பேயாட்டம் போடும் சாதியத்தை அடையாளம் காட்டுகிறது.பாதிரியார் லூர்து சுவாமியார் புதுச்சேரிக்கு வந்து நாலு தினங்களே ஆகிறது.சர்ர்ச்சுக்குள் சுவாமியார் பிரசங்கிக்கிற மேடைக்கு நேர் எதிராக ,வயலுக்கு வரப்பெடுக்கிறமாதிரி ஒரு சுவர் கட்டப்பட்டிருந்தது.சுவருக்கு இந்தப்பக்கம் தாழ்த்தப்பட்ட மக்களும் அந்தப்பக்கம் மேல் சாதியார்கள், எசமானர்கள் இருந்து கொண்டு பூசை கேட்பார்கள் என்பதை அறிய மனம் வேதனைப்படுகிறார்.லூர்து சாமியார் சேரிக்குச் செல்கிறார்.சேரி மக்களைத் திரட்டிக்கொண்டு வந்து சர்ச்சுக்குள் இருக்கிற சுவரை இடித்துத் தகர்க்கப் பண்ணுகிறார்.மேல்சாதிக்காரர்கள் வர்த்தகர் ஞானப்பிரகாசம் தலைமையில் பெரிய சாமியாரிடம் சென்று லூர்துசாமியார் மீது புகார் சொல்லுகிறார்கள்.

பெரிய பாதிரியார் சொன்னார்

“ஞானப்பிரகாசம், அந்தச் சுவரை இடிக்கப்பண்ணினது என் தப்பல்ல.அதை இதுநாள் வரைக்கும் அனுமதித்தேனே,அதுதான் என் தப்பு.மலரைப்படைத்து உங்களுக்கு அளித்த தேவனுக்கு முள்ளைப் பரிசாக அளிக்கிறீரே?மனுஷ்யருக்குள் பாரபட்சம் எமக்கு உடன்பாடு அன்று.அது தேவனுக்கு விரோதம்”

ஆனாலும் சாதி அடங்கிப்போகவில்லை.சர்ச் வாசலில் நின்று தராறு பண்ணுகிறது.தகராறு செய்பவர்களைக் கழுத்தில் அறைந்து கிடங்கில் போடுமாறு குவர்னர் துரை உத்தரவிட்டதும் சலம்பல் அடங்குகிறது.ஆனால் சாதி பிறகும் அடங்கவில்லை.சர்ச்சுக்குள் கிடந்த நாற்காலிகளைக்கொண்டு ஒரு சுவரை நடுவில் அமைத்து இப்பக்கம் உயர்சாதியாரும் அப்பக்கம் மேல்சாதியாரும் அமர்ந்தார்கள்.

லூர்து பாதிரியார் தானாக விரும்பி மாற்றலுக்கு விண்ணப்பித்து,மாகியில் இருக்கும் சர்ச்சுக்கு மூட்டை முடிச்சுகளுடன் கப்பல் ஏறுகிறார்.அவர் மனம் அழுதுகொண்டிருந்தது.கடற்கரையிலிருந்து,தேவாலயம்  தெரிந்தது.சிலுவையும் தெரிந்தது.அவர் அதையே பார்த்துக்கொண்டிருந்தார் .

திடீரென்று அவருக்கு ஒரு பிரமை.சிலுவையிலிருந்து தேவகுமாரன்,திடீரென்று காணாமல் போயிருந்தார்.”

இந்தக்கதை நமக்கு நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் நின்றிருந்த ‘டவுசர் சர்ச்’சின் கதையை நினைவூட்டுகிறது.தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி அளித்துக் குடியிருப்புகள் கூடக் கட்டிக்கொடுத்து(சாயர்புரம் ஒரு உதாரணம்) நல்லது பண்ணின கிறித்துவத்துக்குள், இந்தியச் சாதி புகுந்து கொண்டு அங்கேயும் அழிம்பு பண்ணிக்கொண்டிருக்கும் யதார்த்தத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட புனைவு இது.லூர்து பாதிரியார் மூட்டை முடிச்சுகளுடன் தப்பி ஓடுவதாக பிரபஞ்சன் எழுதியிருப்பது, சாதியிடம் தோற்று, மதம் ஓடுவதன் குறியீடென்று நாம் கொள்ளலாம்.சாதி காக்காத மதம் இங்கு நீடிக்க முடியாது.தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் ஒன்று இன்றைக்கும் தேவையாகத்தானே இருக்கிறது.

லூர்து பாதிரியாரைப்போலச் சாதியத்திடம் தோற்றோடிய இந்துச்சாமியாராக ஒரு ஆத்மானந்தாவை “வெளியேற்றம்” கதையில் பிரபஞ்சன் படைக்கிறார்.சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்ட ஆறுமுகம் ஆத்மானந்தாவாக மாறி மடத்தின் தலைமைப்பீடாதிபதியாகிறார்.மடத்துக்குள் நடக்கும் ஊழல்களைக்கண்டு மனம் கொதிக்கிறார்.நதிக்கு இக்கரையில் மடம் இருக்க, அக்கரையில் நின்றுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.தினம் தினம் நதியின் இக்கரையில் நின்று அக்கரையில் “கழுவப்படாத படச்சுருளைப்போல, சேரிக்குடிசைகள் தெரிவதை’ குற்ற உணர்வுடன் ஆத்மானந்தா பார்த்துக் கொண்டிருக்கிறார். மடத்தின் முக்கிய நிர்வாகியான நரசிம்மனின் மகள் தலித் சேரியைச் சேர்ந்த சோமுவைக் காதலிக்கிறாள்.ஆத்மானந்தா அதை ஆதரிக்கிறார்.ஆனால் சேரி கொளுத்தப்படுகிறது.சோமு தீக்குள் எறியப்படுகிறான்.ஆத்மானந்தா அந்த லூர்துசாமியாரைப்போலச் சாதியிடம் தோற்று மடத்தை விட்டு வெளியேறுகிறார்.ஒரு கடிதத்தை அவர் விட்டுச்செல்கிறார்:

‘முதலதிகாரிக்கு

ஆசிகள்.நான் மடத்தைவிட்டும்,அது சார்ந்திருக்கிற மதத்தைவிட்டும் வெளியேறுகிறேன்.வீடு கொளுத்தச் சொல்லாத,ஏற்றத்தாழ்வு கற்பிக்காத ,குறந்த பட்சம் மனச்சாட்சியைக் கட்டிக்காக்கிற,ஒரு மதத்துக்கு,நதிக்கு அப்புறம் இருக்கும் மக்கள் போகிறார்கள்.அவர்களுடன் நானும் சங்கமிக்கிறேன்.பேரறிவும்,நல்ல சங்கமும் உண்மைச் சரணமும் கொண்ட மதம் இப்போதைக்கு என் விலாசமாக  இருக்கட்டும்.அந்த வீட்டையும் துறந்து,சகலத்தையும் நேசிக்கிற மனதையும் வரம்புகள் அற்ற அன்பையும் பகவான் எனக்கு அருளுவார்.ஆசிகள்.”

ஆத்மா நதியைக்கடந்து இப்பக்கம் வந்து சேர்ந்தார்.இருட்டு சுத்தமாக அகன்றிருந்தது.

இரு மதங்களுக்குள்ளிருந்தும் இரு இணைகளைப் படைத்துத் தன் கதைகளில் உலவவிடுவதில் காலூன்றி நிற்பது பிரபஞ்சனின் அரசியல்.இஸ்லாத்துக்குள் நிலவும் பிற்போக்கான பார்வைகளையும் நேர்மறையான அம்சங்களையும்’இப்ராஹிம் என்னும் வள்ளல்’கதையில் பேசியிருக்கிறார்.நாட்டுப்புற தெய்வ வழிபாட்டில் உள்ள நம்பிக்கைகளையும் கருப்பனையே ஏமாற்றும் பூசாரி முத்துப்பாண்டியையும் ’அமானுடன்’ கதையில் காட்டுகின்றார். 

கழியையும் கமண்டலத்தையும் போட்டுவிட்டுத் ‘தான் மட்டுமே அறிந்த காரணங்களுக்காக’ காஞ்சி மடத்தை விட்டு ஜெயேந்திரர் சில நாட்கள் ‘காணாமல் போன’ அந்த வெளியேற்றத்தை வைத்து ஒரு புனைவை மகத்தான பெரும் படைப்பாளி எழுத்தாளர்  ஜெயகாந்தன் ”ஜெய ஜெய சங்கர” என்கிற நெடுங்கதையில் தந்தார்.ஜெயேந்திரரின் ‘வெளியேற்றம்” எதற்காக என்று ஒரு தத்துவ முலாம் பூசி விளக்கத்தை அளிக்க ஜெயகாந்தன் முயன்றிருப்பார்.ஆனால் பிரபஞ்சன் படைத்த ஆத்மானந்தாவின் “வெளியேற்றத்தில்’ ரகசியமோ மர்மமோ ஏதுமில்லை மத வரம்புக்குள், ஒரு சமூக நீதிக்காகக் குரல் எழுப்பித் தோற்று வெளியேறுகிறார் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

”அம்மாவின் விரலைப் பிடித்துக்கொண்டு நடக்கையில்,ஒரு பச்சை முருங்கையைப் பிடித்துக்கொண்டு நடப்பதாய் இருக்கும் எனக்கு” என்று ஆரம்பிக்கிற ‘நான் இருக்கிறேன் -2’ என்கிற கதையில் வரும் அம்மா குழந்தைக்கு முடியாவிட்டால் காலையில் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டு மாரியம்மன் கோவில் புற்றுக்கு பாலும் முட்டையும் படைத்து,கன்னி மரியம்மையின் முன்னால் அம்மா குழைந்து நின்று மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கி,மசூதி வாசலில் ஓதிக்கொண்டு நிற்கும் பக்கீரிடம் குழந்தையைக் காட்டி மயில் தோகையால் பக்கீர் ப்பூ என்று முகத்தில் ஊதிப் பிள்ளையின் தலைமுதல் கால்வரை தடவி அனுப்ப, வழியில் பாயம்மா வீட்டில் முறுக்கும் எள்ளடையும் வாங்கித் தின்று (பாயம்மா அம்மா பார்வதியின் சினேகிதி),வீடு வந்து அப்பாவுடன் ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்தும் வாங்கிக் கொடுப்பார்.இப்போதும் அம்மா பார்வதியின் பேரனுக்குக் காய்ச்சல் என்றதும் காலையிலேயே பயணம் புறப்பட்டு விட்டார் அம்மா.மாலை மகன் வந்து பேரனை ஆசுப்பத்திரிக்கும் எடுத்துப்போவான்.அன்றைக்கு ஊருக்குள் கலவரம்.முஸ்லீம்களை ஒரு கூட்டம் துரத்தித் துரத்தித் தாக்குகிறது.எங்கும் பீதி நிலவுகிறது.மகன் சற்றுப் பதட்டமாக இருக்க,அம்மா பார்வதி என்னப்பா என்று கேட்கிறாள்.அவன் இந்தக் கலவரம் பற்றிச் சொல்கிறான்.அம்மா சொல்கிறாள்:

“அதைச் சொல்றியா”போக்கத்த ,பைத்தியக்காரப் பசங்க.வர்ற வழியில பாயம்மாவைப் பார்க்கப்போயிருந்தேன்.கதவைத்திறக்கவே பயந்து கிடக்கு.பாவம்,தனியா இருக்கிற பொம்பிளை. ஆயிஷாவும் வேற இருக்கா.வீட்டுக்காரரோ துபாயில இருக்கார்.என்னவாச்சும் ஆகுமா அக்கான்னு கேட்டுச்சு.என்ன ஆகும்.நாமென்ன தீவிலயா இருக்கோம்.மனுசங்க மத்தியிலதான இருக்கோம்.ராத்திரி துணைக்கு நான் வந்து இருக்கேன்னுட்டு வந்திருக்கேன்.நான் சித்தே இருந்துட்டு ஏழு மணிக்கா புறபடறேன்.நீ டாக்டர் வீட்டுக்குப் புறப்படு”என்றது அம்மா.

“நீ எதுக்கும்மா தனியா,அதுவும் ராத்திரிக்கு அங்கே போகணுமா?”

”இந்த நேரத்துலதானே நாம துணையா இருக்கோணும்

அம்மா புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தது.

இந்தக்கதையை பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத்தொடர்ந்து சங்பரிவாரங்கள் நாடெங்கும் விஷம் விதைத்துக்கொண்டிருந்த காலத்தில் பிரபஞ்சன் எழுதியிருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.மறைமுகமாகவோ பூடகமாகவோ சொல்லாமல் கலை நேர்த்தி குறையாமலேகூட முகத்திலடித்தாற்போல உண்மைகளைக் கதையில் நேரடியாகச் சொல்ல அவரால் முடிந்திருக்கிறது.ஒரு கலைஞன் செய்யவேண்டிய சமூகப்பணி  இதுதான்.களத்தில் இறங்கிப் போராட வந்தால் மகிழ்ச்சி.இல்லையென்றாலும் அவன் தன் படைப்பில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டாலே போதும்.பிரபஞ்சன் அதில் ஒருபோதும் குறை வைத்ததில்லை.

பெண் வாழ்வையும் பெண் விடுதலையையும் பேசும் கதைகள்

பிரபஞ்சனின் 212 சிறுகதைகளிலும் பெண்களின் வாழ்வும் வலியும் பேசப்பட்டாலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கதைகள் என அம்மா,3 நாள்,மனுஷி,மனசு,காலம் இனி வரும்,காணாமல் போனவர்கள்,தொலைந்து போனவர்கள்,விட்டு விடுதலையாகி,2000 வருஷத்து,அப்பாவுக்குத் தெரியும்,ஒரு வித்யாவின் கதை,ஒரு பறவையுடன் சேர்ந்து பறத்தல் அல்லது ஒரு குருவியும் அதன் பறக்கும் தன்மையும்,சுடச்சுட ஒளிரும்,பரமு மாமாவுக்கு,இது ஒரு வித்தியாசமான காதல் கதை,பிந்து, மிதிப்பாளர்கள்,ஈரம்,சட்டை,மழை,இடம்,குயிலம்மை,வாசனை-1,வாசனை-3 என ஒரு 25 கதைகளைச் சொல்ல வேண்டும்.பிரபஞ்சன் தன் சிறுகதைகளில் மிக அதிகமாகப் பேசியிருப்பது நம் பெண்களின் நிலை பற்றியும் அவர்களின் விடுதலை பற்றியும்தான்.

பெண்விடுதலை குறித்த மிக நவீனமான பார்வை கொண்டவராக பிரபஞ்சனை இக்கதைகள் காட்டுகின்றன.ஆண் பெண் உறவு குறித்தும் மனத்தடைகள் தாண்டிய விசாலமான பார்வை கொண்டிருக்கிறார்.மரபான இந்திய மனங்களை அதிர்ச்சியடைய வைக்கும் கதைகள் பல என்றாலும் ஊன்றி வாசிக்கும் எந்த வாசகனையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் அணுகுமுறையுடனும் மொழியுடனும் இக்கதைகள் நகர்கின்றன.

ஆரம்பகாலக் கதைகளில் புதுச்சேரிக் குடும்பங்களுக்குள் வீட்டிலேயே அடைந்து ஆண்களுக்குச் சேவகம் செய்யும் பெண்களைப் படைத்துக்காட்டும் பிரபஞ்சன் பின்னர்,விட்டு விடுதலையான நவயுகப்பெண்களைப் படைத்துக் காட்டுகிறார்.

மாதம்தோறும் விலக்கு ஏற்படும் 3 நாட்களும் சுமதி அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்பது மாமியாரின் கட்டளை.அவ்வளவு ஆச்சாரமும் மடியுமாக வாழ்பவர் மாமியார்.மட்டுமின்றி வீடும் சின்னது.மாதவிலக்கு நாட்களில் அவளைத் தூரமாக உட்கார வைக்கத் தனி அறையோ பின்பக்கத் தோட்டமோ ஏதும் இல்லாத சிறு வீடு.ஆகவே மாதா மாதம் சுமதி ரயிலேறி அம்மா வீட்டுக்குப் போகிறாள்.குளித்துவிட்ட நான்காம் நாள் கிளம்பி மீண்டும் கணவன் வீடு. அவள் இன்னும் கருத்தரிக்கவில்லை.குளிச்சிட்டுத்தான் இருக்கிறாள் என்பதை மாதாமாதம் அண்டைவீட்டாருக்கெல்லாம்  அறிவிப்பதாக இருக்கிறது அவளது மாதாந்திரப்பயணங்கள்.அதில் அவள் மிகவும் கூசிப்போகிறாள்.

படுக்கையில் கணவனிடம் முறையிடுகிறாள்:

”இதெல்லாம் மத்தவங்களுக்குத் தெரியற விஷயமா?என் ரகசியத்துல உங்களுக்குப் பங்கில்லையா ..எனக்கு அவமானம்னா அது உங்களுக்கும் இல்லையா..மாசா மாசம் அதை நினைச்சாலே பகீர்னு வருதுங்க .அவமானத்தால செத்துக்கிட்டு இருக்கேன்.நீங்களாவது மாமிக்கு இதை எடுத்துச்சொல்லக்கூடாதா?”

“….”

“ஏண்ணா…”

இலேசான குறட்டை ஒலி அவனிடமிருந்து வெளிப்பட்டது.நிர்க்கதியாகிவிட்டது போல் இருந்தது அவளுக்கு.

பெண்களின் உள்காயங்களுக்கு மருந்திடுவது இரண்டாவது பிரச்னை.அவர்கள் காயம்பட்டு நிற்பதை,அது என்னவென்றே கூட அறிந்துகொள்ளத் துப்பற்றவர்களாகக் குறட்டைவிடும் ஜீவராசிகளாக ஆண்கள் இருப்பதைச் சுளீர் எனக் கூறும் கதை இது.

மடிசார் குடும்பத்து ஆண் என்றில்லை.மாடர்ன் உலகத்து ஆண் கூடப் பெண்ணைப் புரிந்துகொள்வதில் தடுமாறத்தான் செய்கிறான்.”அந்தக் கதவு மூடப்படுவதில்லை” கதையில் நிறைய ஆண் நண்பர்கள் கொண்ட மெர்ஸி விடுதியில் தங்க முடியாத சிக்கல் வரும்போது அவள் வேணுவின் அறைக்கு வந்து சில நாட்கள் அவனோடு தங்கி,அங்கிருந்து தினமும் பல்கலைக்கழகம் சென்று வருகிறாள்.அவள் மிகவும் நேசிக்கும் நண்பன் தான் அவன்.இருவரும் சேர்ந்து இரவுகளில் மது அருந்தியபடி எல்லாவற்றையும்பற்றி மனந்திறந்து பேசுவார்கள்.ஓர் இரவில் அவன் அவளை நெருங்கி வந்து முத்தமிடுகிறான்.அவள் அதை மகிழ்வுடன் ஏற்கிறாள்.ஆனால் அதற்குமேல் அவனுடைய அணைப்பு நெருக்குகையில் “வேணாம் ப்ளீஸ்” என்று மறுத்துவிடுகிறாள்.அதே சமயம் அந்த மறுப்பினால் அவன் காயம் பட்டுவிடக்கூடாதே என்றும் நினைக்கிறாள்.

 

நான் இன்னும் கன்னிதான். உடலுறவு கொள்ளலை. இன்னும்  உனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், அது உண்மை . என்ன காரணம் தெரியலை. அது, வேறு ஒரு சூழ்நிலையில், வேறு மாதிரியாக, நான் கதவைத் திறக்கும்போது, நான் தயாராகும்போது அது நடக்கணும். இடமும் சூழலும் ஒத்துழைக்கும் நேரம்தான் இது. நீயும் மிகவும் சரியான நபர்தான் உன்னிடம் முதல் உறவு என்பது எனக்குப் பரிசுதான், சந்தேகம் இல்லை.ஆனால் அதுக்கு  நான் மனதளவில் தயாராகவில்லை . என் உடம்பு அனுமதிக்கத்தான்  சொல்லுது. இப்பக்கூட உன்னோடு உடலுறவுகொள்ளணும்னுதான் ஆசையா இருக்கு. நமக்குள்ள எதுக்கு வெட்கம்? ஆனா, ஏனோ மனசு ஒத்துழைக்க மறுக்குது., வேணாம்னு ஏதோ ஒரு குரல் எனக்குக் காதில் கேட்குது. எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு. என் வாழ்நாள் முழுக்கவும் நான் குற்ற உணர்வே இல்லாமே, சந்தோஷமா இந்த அனுபவத்தை நினைவு கூரணும், இல்லையா, உனக்குப் புரியும். என் மேல உனக்கு இருக்கும் மரியாதை எனக்குத் தெரியும்.

பிரபஞ்சன் படைத்துள்ள பெண்கள் எந்த நிலையில் வாழ்ந்தாலும் புத்திக்கூர்மையுள்ள நேர்கொண்ட பார்வையுள்ள ஆரோக்கியமான சிந்தையுள்ள பெண்களாக வாழ்கிறார்கள்.அப்படியெல்லாம் படைத்துப் பெண்களைக் கௌரவப்படுத்தியிருக்கிறார் என்று கொள்ள வேண்டும். ஆண்களும் ஆணாதிக்க சமூகமும் அதைப் புரிந்து கொண்டு ஏற்கும் தகுதியில் இல்லை என்பதையே பல கதைகளில் பல்வேறு வடிவத்திலும் மொழியிலுமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் பிரபஞ்சன்.

என்ன சொல்லியும் கேட்காத ஆண்களை என்னதான் செய்வது?’காலம் இனி வரும்’ கதையில் அதற்கு விடை சொல்கிறார் பிரபஞ்சன்.

வேலைக்குப் போகிற,புத்தகம் வாசிக்கிற அறிவார்ந்த பெண்ணான சத்யாவின் முதல் இரவு இப்படி நடக்கிறது.”அவளை அவன் புயல் மாதிரிதான் எதிர்கொண்டான்.என்ன நடக்கிறது என்று அவள் நிதானிக்குமுன்பே ,அவள் உடம்பில் துணி எதுவும் இன்றி இருந்தாள்.

குளிக்க அழும் குழந்தையைக் குளிப்பாட்டும் ஓர் அம்மாவின் முரட்டுத்தனமும்,இரண்டாவது ஷிப்டுக்குப் போகிறவன் அவசர அவசரமாகச் சாப்பிடுவது போலவும் அது நடந்து முடிந்திருந்தது.

காலம் காலமாக,இந்த மண்ணில்  பிறந்த பெண் எதைக் காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கற்பிக்கப்பட்டு வந்ததோ,உயிரை இழந்தாலும் எதை இழக்கக்கூடாது என்று உபதேசிக்கப்பட்டு வந்ததோ அதைச் சில நிமிடங்களுக்குள் இழந்து விட்டாள் சத்யா.”

கதையின் இறுதிப்பகுதி பெண்ணின் ஆவேசமிக்க போராட்டமாக வாசக மனதை எழுச்சிகொள்ளவைக்கும் வண்ணமாக அமைந்துள்ளது.எரிகின்ற கொள்ளிகட்டையால் கணவனின் மூஞ்சியில் சத்யா அறைவதோடு கதை நிறைவு பெறுகிறது.கதைக்குள்ளேயே தீர்வு சொல்லும் ‘முற்போக்கு’க் கதை என ’தரவாதி’கள் கூட முகம் சுளிக்க முடியாவண்ணம் அத்தனை அழகும் வலியும் இணைந்து பயணிக்கும் கதை இது.

விதவிதமாகச் சொல்லிப் பார்த்தும் மனம் நிறைவடையாத பிரபஞ்சன் இந்த ஆண்மையச் சமூகத்திடம் பேச வேண்டியதையெல்லாம் தொகுத்து சுபா, தன் பரமு மாமாவுக்கு எழுதும் கடித வடிவத்தில் எழுதிய கதை ‘பரமு மாமாவுக்கு’மாதிரிக்கு ஒரு பத்தி:

“மாமா! தங்களுடன் சில மாலை வேளைகளில் நான் பேசினேன்.பெண் சம்பாதிக்க வெளியே போவது உங்களுக்குப் பிடிப்பதில்லை என்று சொன்னீர்கள்.சம்பாதிப்பது என்பது உப்பு,புளி,மிளகாய்,மிக்ஸி டி.விக்காக மட்டும் இல்லையே!சமூகத்தில் நான் ஒரு அங்கம் என்ற முறையில்,என் பங்களிப்பில் ஏதாவது இருக்க வேண்டும் என்ற காரணத்தால்தான்,நான் வேலைக்குப் போக வேண்டும் என்கிறேன்….”

பரமு மாமாவுக்கு,அம்மாவுக்கு மட்டும்பிந்து,3 நாள் போன்ற கதைகளையெல்லாம் கருத்துத் தாள்களாக்கி இளைஞர்,மாதர்,மாணவர் இயக்கங்கள் தங்கள் அணிகளுக்குள் சுற்றுக்கு விட்டு வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டும்.இயக்கங்கள் இலக்கியத்திலிருந்து எடுக்க வேண்டியவற்றை எடுத்துக்கொள்ளும் காலம் இன்னும் கனியவில்லை என்கிற பெருமூச்சு மட்டுமே இப்போதைக்கு நிற்கிறது.

இசையால் நிறையும் கதைகள்

கசப்புடன் இறங்கும் ஒரு நல்ல பில்டர் காஃபிக்காகவும் நல்ல இசைக்காகவும் தன் வாழ்நாளையே எழுதிக்கொடுக்கச் சித்தமாக இருந்தவர் பிரபஞ்சன் என்பதை அவரோடு பழகியவர்கள் அறிவார்கள்.50க்கு மேற்பட்ட சிறுகதைகளில் பில்டர் காப்பி பற்றிய சித்தரிப்புகள்,சிலாகிப்புகள்,ஏக்கங்கள் விரவிக் கிடக்கின்றன.இசையை இசைக்கலைஞர்களின் வாழ்வைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைகள் என சுகி,சிட்சை,இப்படியாக ஒரு ஜீவிதம்,மகிழம்பூ,சுந்தா மாமா ஆகிய கதைகளைச் சொல்லலாம்.இந்த ’இசை’க்கதைகளிலும் ஆணாதிக்கம், மேட்டிமை வர்க்கத்தின் ஆணவம் எளியவர்களைப் பலி கொடுத்தல் போன்றவையே கதைகளின் அடிச்சரடாக அமைகின்றன.

’சுகி’ கதையில் பாடகன் வரதுவும் ப்ரீதியும் ப்ரீதியின் அம்மாவிடம் சங்கீதம் பயின்றவர்கள்..வரதுவின் கலையின் மீதும் வரது மீதும் பெருமதிப்பும் சினேகமும் கொண்ட ப்ரீதி இன்னொரு பாடகன் ரங்குவைக் கல்யாணம் செய்து கொண்டாலும் அவளது ப்ரீதி வரது மீதுதான்.வரது ரங்குவின் இசையைச் சிலாகிக்கிறவனாக இருக்க,ரங்குவோ வரதுவை பகைக்கிறான்.சபாக்களிலும் தஞ்சாவூர் உள்ளிட்ட பெரும் இசைப்புலங்களிலும் ரங்குவுக்குத்தான் இடமும் பேரும் புகழும் பணமும் கிடைக்கிறது.ஆனால் ப்ரீது மதிப்பது வரதுவின் இசையை.ரங்குவுக்கும் அவளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் இக்கதையின் மிக முக்கியமான புள்ளி:

“இந்தத் தலைமுறைப்பாட்டுக்காரர்களிலே வரதுதான் உசத்தி.பரங்கி மலை,விராலிமலை,கல்வராயன் மலைக்கு  மத்தியிலே அவன் இமயம்.வராளி ஒன்று போதும்..அவன் மேதமையைக் காட்ட..இல்லையா ரங்கு..”

“அது எப்படிச் சொல்ல முடியும்?நீ சொல்றது உண்மையானா,அவன் கச்சேரிக்கு சபாவிலே ஏன் சான்ஸ் தர மறுக்கிறா?”

“சபாக்காரன் ஒண்ணும் சங்கப்பலகை இல்லையே…….இது சர்க்கஸ்.திறமைசாலி வேறே..கலைஞன் வேறே ரங்கு புரிஞ்சுக்கோ…”

“என் பாட்டைப்பற்றி என்ன சொல்றே?”

“உன் பாட்டு ஜூஸ் டப்பாவிலே ‘எசன்ஸ்’ போட்டு வாசனையா தர்றாளே  ஜூஸ்.அது.”

“வரது பாட்டு…?”

”அது கெட்டி மாம்பழம்.ரொம்ப இயற்கையாகப் பழுத்தது.கொம்பிலே கனிஞ்சது.அணில் கடி படாதது.வெளியே இருந்து உள்ளே போகிற பயணம் அது.அவன் பாட்டு அழுக்கை எல்லாம் அடிச்சுத் துவைக்கிற பாட்டு.”

“நான் போலிங்கிறே?”

“இல்லை உன் சங்கீதத்துலெ சில்லறைச் சத்தம் கேட்குது.வெள்ளிக்காசோட சத்தம்.அவன் பாட்டிலே அது இல்லே.ஆத்மார்த்தமா இருக்கு.கோயில் நந்தியாவட்டை மாதிரி அவன் மணக்கிறான்”

’இப்படியாக ஒரு சங்கீதம்’ கதையில் வரும் பக்கிரி ஓர் அபூர்வமான கதாபாத்திரம்.ஆள் பார்த்தால் கைவண்டி இழுக்கிற கூலித் தொழிலாளி மாதிரி அழுக்கு வேட்டியும் மேலே ஒரு துண்டுமாக தெருவில் திரிகிறவன்.ஆனால் தாளத்தில் அவனுக்கு ஈடு இல்லை.எவ்வளவு பெரிய சங்கீதக்காரன் அந்த ஊருக்கு வந்தாலும் அவனைத்தேடி அழைத்து மேடைக்கு முன்னால் உட்கார வைத்துக்கொள்வார்கள்.மேடையில் சங்கீதம் போய்க்கொண்டிருக்க,கீழே உட்கார்ந்து பக்கிரியும் தாளம் போட்டுக்கொண்டிருப்பான்.

பக்கிரிக்கு முன்னால் அழகுப்பிள்ளை தவில் கொண்டு கட்டும் வீடு எழும்பிக்கொண்டிருக்கிறது.தனித்தனிச் செங்கல்லாக அவர் எழுப்பும் வீடு,தனித்தனிச் சொல்லாக அவர் எழுப்பும் சப்த மாளிகை,காற்றின் திமிரங்களில், ஆகாசத்தில் கற்பனாஸ்திதியில் அவர் கட்டி எழுப்பிய ஸ்தூபியில் ஏறி உச்சியில் ஏறிக்கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்…..மிக இசைவாக,லாவகமாகத் தாளம் போட்டுக்கொண்டிருந்தான் பக்கிரி.முத்தாய்ப்பு ஒவ்வொன்றும் தாளத்துக்குக் கச்சிதமாக உராயாமல் உறைக்குள் புகும் வாள் மாதிரிப் பொருந்திக்கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு கணம் தாளம் பிசகியது அழகுப்பிள்ளைக்கு.”மாமா..தாளம் தப்பிட்டுது..” என்று கத்திய பக்கிரியின் குரலில் இடிந்து போய் நிறுத்தினார் அழகு.ஒரு நிமிடம்தான்.எல்லாம் ஒரு நிமிடம்தான்.ஆனாலும் அவர் பலமெல்லாம் இழந்து சக்கையாக நிற்பதுபோல் நின்றார்.

மதியம் மாமா..என்று எப்பவும்போல சிரித்துக்கொண்டு வந்தான் பக்கிரி.அறைக்குள் அவனை இழுத்து நையப்புடைக்கிறார்.எனக்கா தாளம் தப்பிட்டுதுன்னு சொன்னே என்று.ஆனாலும் உண்மை அவரை உறுத்துகிறது.மறுநாள் ரயிலேறும்போது எப்பவும்போல மாமா..என்றபடி வந்து நிற்கிறான் பக்கிரி.அவனைத் தனியாக அழைத்துக்கொண்டு போனார் அழகு,”ரொம்ப நீசத்தனமாக நடத்துட்டேண்டா பக்கிரி..மன்னிச்சிடு.நீ ஞானி.நான் வெறும் தவில்காரன்..” என்று கதை முடிகிறது.

இலக்கியமோ கலையோ எதுவானாலும் இரண்டும் பேசும் பாஷை ஒன்றுதானே.மனிதத்தை உன்னதப்படுத்தும் பாஷை.கசடுகளை வெளியேற்றும் பாஷை.துக்கங்களைக் கரைத்துவிடும் பாஷை.ஷணத்தின் கறைகளை அழித்து நித்தியத்துவத்தின் சிரிப்பைத் தவழவிடும் பாஷை.இசை குறித்த பிரபஞ்சனின் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்.ஒவ்வொன்றும் ஒரு ராகம்.

கல்விக்கதைகள்

 

பிரபஞ்சனின் அடுத்த அக்கறை குழந்தைகள் மீதும் கல்விமுறையின் மீதும் கவிகிறது.இந்தியக் கல்வியின் மீது தீராத மனக்குரையும் விமர்சனமும் கொண்டு பேசியவர்,இயங்கியவர் பிரபஞ்சன்.எது கல்வி என்பது குறித்துத் தீர்க்கமான கருத்துக்கள் அவருக்கு உண்டு.பூக்களை மிதிக்கக்கூடாது,சூரியனைப் பார்க்காமல்,காணாமல் போனவர்கள்,அடி,மரி என்ற ஆட்டுக்குட்டி,கமலா டீச்சர்,கூண்டும் குழந்தையும்,இப்ராஹிம் என்ற வள்லல்,மூவர்,பூக்களை மிதிப்பவர்கள்,ஆகாசப்பூ போன்ற 11 கதைகளை கல்விக்கதைகள் என அடையாளப்படுத்தலாம்.

இக்கதைகளில் மிக அதிகமாக வாசிக்கவும் பேசவும்பட்ட கதை மரி என்ற ஆட்டுக்குட்டி.அது நாடகமாகவும் பல மேடை கண்டது.பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர் எல்லாக்குழந்தைகளையும் சமமாகப் பாவிக்கும் மனநிலையைக் கேள்விக்குள்ளாக்கி,ஒவ்வொரு குழந்தையும் என்னமாதிரியான கலாச்சார,பொருளாதாரப் பின்னனி உள்ள குடும்பத்திலிருந்து வருகிறார்கள் என்பதைப் பள்ளி கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிற முக்கியமான கருத்தை வலியுறுத்தும் உணர்ச்சிகரமான கதை இது.

பிரபஞ்சனின் பல கதைகளில் தப்பி ஓட முடியாதபடிக்கு சிறைகளின் மதில் சுவர்களை விடவும் உயரமான சுவர்களைக்கொண்டதாக பள்ளிகள் ஏன் கட்டப்பட்டுள்ளன என்கிற கேள்வி வந்துகொண்டே இருக்கும்.கறாரான ஜெயிலர்களைப்போல வரும் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு இம்பொசிசன் தருகிறார்களிம்பொசிசன் தராத கருணைமிக்க ஆசிரியர்களை குழந்தைகளுக்குப் பிடிக்கிறது.அவர்கள் நடத்தும் பாடங்களும் அவர்களுக்குப் பிடிக்கிறது என்பதைச் சொல்கிறது”பூக்களை மிதிக்கக்கூடாது”கதை.

”பூனைக்கு என்ன இங்கிலீஷ்?”

“கேட்”

“கேட்..?”

“கேட்..சி.ஏ.டி. கேட்..”

“பூனைக்கு எதுக்குக் ‘கேட்’டுன்னு சொல்லணும்.அது மியாவ்,மியாவ்னுதானே கத்துது.மியாவ்னு பேர் இருந்தா நல்லா இருக்குமே!மியாவ்னா பூனை”

நாய்க்கு ‘லொள்’னு பேர் வைக்கணும்.குதிரைக்கு ‘ஹிஹி’ன்னு பேர் வைக்கணும்.

இப்படியெல்லாம் ஞானவான்களாக இருக்கும் குழந்தைகளை இந்த வாழ்க்கை எப்படிக் காணாமல் அடிக்கிறது என்கிற துயரைப் பகிரும் கதை ‘காணாமல் போனவர்கள்’

தான் நேசிக்கும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் வாய்ப்பைப் பறிக்கும் திருமணத்தைப் புறக்கணித்து வாழ்நாள் முழுவதும் டீச்சராகவே இருக்கும் ‘கமலா டீச்சர்’ஓர் அபூர்வமான படைப்பு..பள்ளிக்கூட வாத்தியார் பையனிடமிருந்து வகுப்புச் சாவியைத் தொலைத்துவிட்டதற்காக பணம் வசூலிக்கிறார்.பள்ளிக்கு வெளியே மிட்டாய் விற்கும் தாத்தா அன்பையும் கருணையையும் கற்றுத்தருகிறார்.நாம் சூரியனைப் பார்க்காமல் தார் ரோட்டைப் பார்த்துக்கொண்டு வாழ்கிறோம் என்கிற விமர்சனத்தை வைக்கிறது ‘சூரியனைப் பார்க்காமல்’கதை.சோவியத் கல்வியாளர் மெகரங்க்கோ சொன்னதுபோல வகுப்பறை என்பது பள்ளிக்குள் இருக்கும் ஓர் அறை மட்டுமல்ல.குழந்தைகள் புழங்கும் வெளி அத்தனையையும் உள்ளடக்கி விரிவு கொள்வதே வகுப்பறை என்பதை வலியுறுத்தும் கதை.

ஆங்கிலக்கல்வி ‘ஹராம்’ என நினைக்கும் பிற்போக்கான இஸ்லாமியப் பெரியவர்களை மீறி திருவோடு ஏந்தி பிச்சை எடுத்துப் புதிய பள்ளியைக்கட்டுகிறார் இப்ராஹிம்.”சீனா சென்றாகிலும் அறிவைத்தேடிக்கொள்ளுங்கள்.அறிவு என்பது இறை நம்பிக்கையாளர்களின் தவறிப்போன பொருளாகும்.தவறிப்போன பொருள் உடையவர்க்கு மீண்டும் கிடைக்கும்போது அவர் எவ்வளவு மகிழ்ச்சியடைவார்.கல்வி கற்கிற மகிழ்ச்சி அதற்குச் சமமானது.கல்விப்பயணம் என்பது உண்மையில் இறைப்பயணமே..” என்று நம்பிய ஒரு தலைமுறையின் பிரதிநிதியாக ‘இப்ராஹிம் என்ற வள்ளல்’ வருகிறார்.

மலை வாழ்மக்களின் மொழியைப்பற்றி ஆராய்ச்சி செய்ய மலைக்குப் போகும் சந்திரப்பிரபா அங்கே நூறு சதம் மனுசங்களாக வாழும் மலைவாழ் மக்கள் துப்பாக்கி முனையில் அரசால் தங்கள் வாழிடம் விட்டுத் துரத்தப் படுவதைப் பார்க்கிறாள். அவளால் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர்களின் மொழியைப்பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க முடியவில்லை.ஆனால் நிறுவனம் மொழியை ஆராய்ச்சி பண்றது மட்டும்தான் உன் வேலை என்கிறது.’கல்விப்புலத்தின் அயோக்கியத்தனமே அந்த இடத்திலேதான் துவங்குது’என்பதை சந்திரபிரபா மூலமாகச் சொல்கிறார் பிரபஞ்சன், ’ஆகாசப்பூ’ கதையில்.

நாம் வாழும் சமூகத்தின் மினியேச்சர் (குறு வடிவம்) தான் வகுப்பறை,முழுச்சமூகத்தையும் கற்றுத்தரும் இடமாகப் பள்ளி துலங்க வேண்டும்  என்கிற புரிதல் பிரபஞ்சனுக்கு இருந்ததை அவருடைய கதைகள் வெளிப்படுத்துகின்றன.கல்வியின் அரசியலைச் சரியாகவே அவர் புரிந்துகொண்டு கதைகளை முன் வைத்துள்ளார். 

பிற கதைகள்

திரைப்பட உலகத்துக்குள் கால்வைத்துத் திரும்பியவர் பிரபஞ்சன் என்பதன் சாட்சியமாக நிழல்,கதாநாயகி குளித்த கதை ,அணிலாடும் முன்றில்,அந்தக்குரல்,காயம்பட்ட மாலை வானம் போன்ற கதைகள் இருக்கின்றன.இவற்றில் பிரதானமாக துணை நடிகர்,துணை நடிகை,இரண்டாம் நிலைப் பாடகர்கள், கலைஞர்களின் வாழ்நிலையையும் வலிகளையுமே அதிகம் பேசியிருக்கிறார்.கதாநாயகியைக் குளிக்க வைத்துக் காட்சிப்படுத்துவதை ஒரு ட்ரெண்டாக்கிய காலத்தில்(மழியில் குளிக்கும் காட்சி வைத்த ஒரு படம் வெற்றி பெற்றால்-அதே பாணியில் படம் எடுப்பார்கள்) ஒரு படத்துக்குத் தலைப்பு வைக்க ‘டிஸ்கசன்’ நடக்கிறது.

‘மழையில் நனையும் மங்கை’

‘பிரமாதம்’ என்கிறார் தயாரிப்பாளர்.மங்கை என்ற வார்த்தை தமிழர்களுக்குப் புரியுமா என்று கேட்டார்.

‘மாது’

’இன்னும் புரியாது’

“இளம்பெண்”

“ஊகூம்”

“பருவக்குமாரி”

“’ஏ’சர்டிபிகேட் கொடுத்துருவான்யா”

“அழகி”

“விபச்சாரத்தில் கைதாகும் பெண்களுக்கு அந்தப் பேர் போய்விட்டது”

மீண்டும் ஜன்னல் ஓரம் போய் நின்றார் இயக்குநர்.”மழை-ஓகே-’நனையும்’ டபுள் ஓகே-அதுக்குப் பிறகு ஒரு வார்த்தை அதுதான் முக்கியம்”

“மழையில் நனையும் சுந்தரி” என்கிறார் இணை இயக்குநர்.சபாஷ் என்கிறார் தயாரிப்பாளர்.சுந்தரி மட்டும் போதாது கூட இன்னொரு வார்த்தை வேண்டும் என்கிறார் இயக்குநர்.கடைசியில் ”மழையில் நனையும் மத்தாப்பு சுந்தரி” என்று முடிவாகிறது.பிரபஞ்சன் “அணிலாடு முன்றில்”என்கிற இக்கதையில் மழையில் நனைக்கப்படும் அந்த நடிகையின் உள்ளத்து உணர்ச்சிகளை அவளுடைய அருவருப்பை அவளது தீய்ந்துபோன கலைக்கனவுகளையே விஸ்தாரமாகப் பேசுகிறார்.ஆண்களாகக் கூடிப்பேசி அவளை மத்தாப்பு சுந்தரியாக்கி ஆண் ரசிகர்களுக்கான பண்டமாக அவள் மாற்றப்படும் அவலமே கதையின் உள்ளடக்கம்.

சின்னி,புனல்வழிப்படும் கதைகளில் திருநங்கையர் வாழ்வைச் சித்தரிக்கிறார்.சின்னி கதையில் சின்னியின் காதல்,காமம் இரண்டையும் உரிய கௌரவத்தோடு அங்கீகரித்து எழுதும் பிரபஞ்சன், சர்வதேச அளவில் இன்று திருநங்கையர்,திருநம்பிகள் போன்றோர் குறித்து உருவாகியுள்ள புரிதலோடு கதையைப் படைக்கிறார்.ஒரு கலைஞன் தன்னையும் தன் புரிதலையும் சதா தற்காலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாகப் பிரபஞ்சன் திகழ்கிறார்.

மேற்குறிப்பிட்ட கதைகள் எல்லாம் போக பிரபஞ்சனின் அடையாளமாகப் பேசப்படும் அப்பாவின் வேட்டி .   அடி,மீன் போன்ற கதைகளைப்பற்றி இங்கு இன்னும் பேசவில்லை.முழுக்க முழுக்க வாழ்க்கை அனுபவத்தின் மீது நின்று பேசும் கதைகள் என்பதால் பிரபஞ்சனின் சிறுகதைகள் வாசக மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.

ரகுநாதன்,புதுமைப்பித்தன்,கு.அழகிரிசாமிக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை கொண்ட ஒரு படைப்பாளியாக, இசையில் அபரிமிதமான ஈடுபாடும் இடதுசாரி ,பெரியாரிய அம்பேத்கரிய மரபுகளைச் சரியாக உள்வாங்கியவராக அவருடைய சிறுகதைகள் அவரை நமக்கு அடையாளம் காட்டுகின்றன.எதையும் விட்டுவைக்காமல் எழுதி விட்டார் என்கிற உணர்வை அவரது கதைகள் ஏற்படுத்துகின்றன.

அவர் புதுச்சேரிக்காரரா சென்னைக்காரரா தஞ்சாவூர்க்காரரா என்று கேட்டால் அவருடைய ‘இடம்’ கதையில் வரும் வரிகளையே பதிலாகச் சொல்ல முடியும்:

“எந்த மண் மனிதர்க்குச் சொந்த மண்?

பிறந்த மண்ணா?வளர்ந்த மண்ணா?

எங்கே நேசிக்கும் நெஞ்சங்கள் இருக்கின்றனவோ அதுவே சொந்த மண்”

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3 ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4 ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்தொடர் 5 ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்தொடர் 10 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 5 thoughts on “தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்”
 1. வர்க்கம் உண்மையிலே சிகரம் தொட்ட மகத்தான சிறுகதை.

  சமூகத்தில் பூசாரியாய் இருப்பது சவுகரியமானது மட்டுமல்ல பீடத்தில் வைத்திருக்கவும் செய்கிறது. ஆயின்

  வாசுதேவன் அலமேலுவின் வார்த்தைகளைத் தள்ளி ஆலைக்குள் நுழைவதில்தான் வர்க்கம் வெளிப்படுகிறது.

 2. அருமையான் ஆய்வு தோழர். . ஒரே ஒரு கட்டுரைக்குள் எழுத்தாளர் பிரபஞ்சனின் முழுமையான தன்மையை வெளிப்படுத்த முயன்றும் வெற்றி பெற்ற எழுத்து. சின்னச் சின்னதாக இடையில் இணைந்து கொண்டிருக்கும் பிரப்ஞ்சனின் எழுத்துகளை முழுமையாக வாசிக்கத் தூண்டும் படியாக அமைந்துள்ளது. எனக்கு பிரபஞ்சனின் நாவல்களோடு இருக்கும் அறிமுகம் அவருடைய சிறுகதைகளில் இல்லை. நிலம் பற்றிய பதிவுகள், ஒடுக்கப்பட்டோருக்கான ஆதரவு, உழைப்பாளிகளைப் பற்றிய புரிதல், சாதிகள் – மதங்கள் என தான் வாழ்ந்த விரிவான உலகின் அசலான பதிவுகளை புனைவோடு பிரபஞ்சன் வெளிப்படுத்தியிருப்பதை கட்டுரை அருமையாகப் பதிவு செய்திருக்கிறது. 212 கதைகளையும் நீங்கள் மறுபடியும் வாசித்து, எழுதிய இக்கட்டுரையின் வழியாக பிரபஞ்சன் கதைகளை வாசிப்பவர்கள் அதிகமாவார்கள் என்றே தோன்றுகிறது.

  1. நீங்கள் அக்கதை பற்றி பேசிவருவதை அறிவேன்.மகிழ்ச்சி தோழர்.

 3. அன்புத் தோழருக்கு வணக்கம்,
  மனதின் ஈரம் கசியக் கசிய தோழர் பிரபஞ்சனின் அகம் தொட்டிருக்கிறீர்கள். பிரபஞ்சனின் எழுத்துக்கள் எதைப் பேசுகிறதோ., அதற்கு சற்றும் சளைக்காமல் அவரின் படைப்பு குறித்த உங்கள் அவதானிப்பு இருப்பதாக நான் உணர்கிறேன். இன்குலாப் குறித்ததாகட்டும் வண்ணதாசன் குறித்ததாகட்டும் இப்பொழுது பிரபஞ்சன் குறித்தாகட்டும் படைப்புக்களோடு பயணம் செய்யும் வித்தையையும் அதனோடு கலந்து கரைந்து போகிற உணர்வையும் கற்றுக் கொள்வதற்கான விதைகளை உங்கள் ஆய்வுக் கட்டுரைகளில் விதைத்துவிடுகிறீர்கள்.

  தமிழ்ச்செல்வன் தோழரின் இத்தொடரை சிறப்பாக வெளியிட்டு வரும் புக்டே இணையதளத் தோழர்களுக்கும் நன்றி.

 4. பிரபஞ்சனின் சிறுகதை அரசியல் பற்றிய கட்டுரை மிக அருமை. வாசிக்கும்போதே பிரபஞ்சன் கதைகளோடு மறுபயணம் செய்வதைப் போல உணர்வு. வாசிக்காமல் விடுபட்ட. கதைகளை மீண்டும் தேடிப்படிக்கத் தொடங்குகிறது.அவரது நடையையும் நாம் கைக்கொள்ள வேண்டியதிருக்கிறது.வாழ்த்துகள் தோழர். அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *