The politics of tamil short story (Lingan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

 

2010 வாக்கில் லிங்கன் காலமாகிவிட்டார். 1974 க்கும் 1978க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் ‘தாமரை இதழில் 13 கதைகள் எழுதியிருக்கிறார். நாகர்கோவிலில் இருந்து வனமாலிகை அவர்கள் நடத்திய ‘சதங்கை’ மார்ச் 1975 இதழில் ’ஓர் இரவுக்காக’ என்கிற ஒரே ஒரு கதையை எழுதியிருக்கிறார். இந்தப் 14 கதைகளையும் தொகுத்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் டிசம்பர் 1984இல் ‘கருணை மனு’ என்கிற தொகுப்பாக வெளியிட்டுள்ளது.ஜெயகாந்தன் அவர்களின் ஆதரவுடன் 80களின் முற்பகுதியில் வந்துகொண்டிருந்த ‘கல்பனா’ மாதநாவல் இதழில் “இன்னுமொரு உபநதி’ என்கிற சிறு நாவலை எழுதியிருக்கிறார். அதற்குப்பின் லிங்கன் எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.

அவர் மட்டும் தொடர்ந்து எழுதியிருந்தால் இன்று தமிழ்ச்சிறுகதை உலகின் மகோன்னதமான சிறுகதையாளராக, எல்லாத்தரப்புச் சிந்தனைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் கொண்டாடும் படைப்பாளியாக மலர்ந்திருப்பார். அவருடைய 14 சிறுகதைகளும் அதற்குக் கட்டியம் கூறுபவையாக அமைந்திருப்பதை இப்போது வாசிக்கும்போதும் உணர முடிகிறது.

No photo description available.

அவர் ஒரு ’தாமரை’ எழுத்தாளர்.70களில் அப்படி ஒரு வழமை இருந்தது. தோழர் மேலாண்மை பொன்னுச்சாமியும் கோவை ஞானபாரதியும் அருணனும் நானும் கூட செம்மலர் தவிர வேறு இதழ்களுக்கு எழுதுவதில்லை என இருந்தோம்.அன்றைய இயக்கத்தோழர்களில் சிலரின் மனோபாவமாகவே இது இருந்தது. “நம்ம பத்திரிகையிலே எழுதுவோம் தோழர்.அடுத்தவனுக்கு ஏன் கொடுக்கணும்?” நீண்ட காலத்துக்குப் பின்னரே அம்மனநிலை மாறியது.

லிங்கன் தாமரையில் எழுதினார்.தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் இயங்கினார்.ஓர் இடதுசாரி இலக்கிய இயக்கத்தைச் சேர்ந்த படைப்பாளி அவர்.ஆனால் அவருடைய கதைகளில் கலை அமைதி மீறிய கதை என ஒன்றைக்கூடச் சொல்ல முடியாது.அவருடைய ஒரே தொகுப்புக்கு வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய முன்னுரையில் உள்ள கீழ்க்கண்ட இந்த வாசகங்கள் புகழ்ச்சியில்லை.நூற்றுக்கு நூறு சதம் உண்மை என்பதை இந்தப் 14 கதைகளை இப்போது வாசிக்கையிலும் அறிகிறோம்:

”சமீப காலத்தில் இத்தகைய தனித்தன்மையுடன் எழுதி, வாசகர்களின் கவனத்தை ஈர்த்து, தரமான ரசிகர்களின் பாராட்டுதலைப் பெற்றுள்ள இளைய படைப்பாளிகளுள் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய சிலருள் எழுத்தாளர் லிங்கனும் ஒருவர்.

மனித நேயத்தோடு, சமூகத்தையும் தற்கால வாழ்க்கை அமைப்பு முறைகளையும், இவற்றிடையே உழல்கிற மனிதர் களையும் கவனிக்கிற எவரும்அவை குறித்துச் சிந்திக்கிற யாரும்இங்கு மலிந்து கிடக்கிற அவலங்களையும், குறைபாடு களையும், பொருளாதார பாதிப்புகள் ஏற்படுத்தி வருகிற சிதை வுகளையும் சீரழிவுகளையும் சுட்டிக் காட்டாமல் இருக்க இய லாது. இவற்றின் பிரதிபலிப்புகளை லிங்கன் எழுத்துக்கள் அனைத்திலும் காண முடிகிறது. அவை வெறும் தகவல் விவரிப்புகளாகவோ, நடைச் சித்திரங்களாகவோ, சிந்திக்கும் உள்ளத்தில் சலனங்கள் எழுப்பும் அழகிய மன நிழல்களா கவோ அமையவில்லை. ஆழமும் அழுத்தமும் நிறைந்த சிந் தனைச் சித்திரங்களாகப்  பின்னப் பெற்றுள்ளன சில. சிறுமை களிலிருந்து மீட்சி பெறப் போராடும் உள்ளங்களின் வலிய உணர்ச்சித் துடிப்புகளாகவும், செயல்வேகம் காட்டும் புரட்சிக் குரல்களாகவும் எழுந்துள்ளன சில. உறுத்தும் உண்மைகளின் சத்தான, கனமான தாக்கங்களாகவும் சில எழுத்துவடிவம் பெற்றுள்ளன. அனைத்திலும் கலை நயம் ஊடு பாவு ஆக ஓடிக்கிடப்பதை ரசிகர்கள் உணர்ந்து மகிழ்வார்கள்.

Image may contain: 1 person

தனிமனித, குடும்ப மற்றும் சமூக வாழ்க்கையை மட்டுமின்றி தனி நபர்களின் குண நலன்களையும்  வறுமை எவ்வளவு தூரத்துக்குச் சிதைத்துப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது,பொருளாசை, சொத்தின் மீது ஏற்படும் மோகம், பணப்பாசம் மனித உள்ளங்களை எப்படியெல்லாம் கறைப்படுத்தித் தீய்த்து விடுகிறதுகுடும்ப, சமூக உறவுகளை எவ்வாறு களங்கப் படுத்தி நற்பண்புகளைக் காவு கொடுக்கக் காரணமாகிறது, முதுமையில் மனிதரை வறுமை எப்படி அலைக்கழித்து,பலவீனர்களாக்கி வாழ்வை நாசப்படுத்துகிறதுஇவ்வித மான நோக்கிலும் சிந்தனை அடித்தளத்திலும் லிங்கன் கதைகள் பல எழுதப்பட்டுள்ளன.

சில நுண் உணர்வுகளை அடிப்படையாக்கி அழகான உணர்ச்சிச் சித்திரங்களை சிறுகதை வடிவத்தில் அமைத்துக் கொடுக்கும் திறமையும் லிங்கனிடம் இருக்கிறது என்பதை அவருடைய சில கதைகள் புலப்படுத்தும். உதாரணத்துக்குஒரு பெண் ஊரணியில் குளிக்கிறாள்‘, ‘அவள் நாணம் கொண்டாடினாள்போன்றவற்றைக் குறிப்பிடலாம்

எதை கதைக்குரிய பொருளாக்க வேண்டும் என்று தேர்ந்து கொள்வதிலும், தேர்ந்தெடுத்த விஷயத்தை எவ் வாறு செறிவும் அழுத்தமும் அழகும் உடைய கதையாக எழுத வேண்டும் என்று நிர்ணயிப்பதிலும் லிங்கன் நல்ல அனுபவம் பெற்றிருக்கிறார். இதை அவருடைய அனைத்துக் கதைகளும் சுட்டுகின்றன.

அவருடைய ஆற்றல் மேலும் பிரகாசிக்கத்தக்க விதத்தில் மேன்மேலும் நல்ல கதைகள் பலவற்றைப் படைப்பதற்கு அவருடைய அனுபவமும், விசாலநோக்கும், சிந்தனைத் திறமும், தளராத உழைப்பும் துணை நிற்கும் என்று நம்புகிறேன்.”ஆனால் வல்லிக்கண்ணனின் எதிர்பார்ப்பு நிகழவில்லை. லிங்கன் தொடர்ந்து எழுதவில்லை. வாழ்க்கை அவரைப் பேனாவைத்தொட அப்புறம் அனுமதிக்கவே இல்லை..

2012இல் புதிய புத்தகம் பேசுது இதழில் என் சக பயணிகள் என்கிற தொடரில் லிங்கனின் கதைகள் பற்றி நான் இவ்விதமாக எழுதியிருக்கிறேன்: 

”என் வாசிப்பில் லிங்கனுடைய கதைகளின் முக்கியத்துவம் அக்கதைகளின் மொழியிலும் கதைத் தேர்விலும் இருப்பதாகக் கருதுகிறேன். 70களில் முற்போக்காளர்கள் பேசத் தயங்கிய பல விஷயங்களை அவர் எடுத்துப் பேசினார். பாலியல் சார்ந்த விஷயங்கள் அவற்றின் சமூக பண்பாட்டுப் பின்புலத்தோடு ஒரு சமூகப் பிரச்சனையாக அவர் கதைகளில் ரூபம் கொண்டன. இது அன்று அபூர்வம். ஒவ்வொரு கதையிலும் பாத்திரங்களின் வார்ப்பு அத்தனை கச்சிதமாக அமைந்திட அவரது ஆற்றொழுக்கான மொழி கைகொடுக்கிறது. இரண்டாவதாக அவரது கதைகள் 70களின் தமிழகக் கிராமங்களின் அசலான படப்பிடிப்பாக அமைந்து இன்று வாசிக்கையில் ஒரு வரலாற்று ஆவணமாக கலைஞனின் ஒவ்வொரு எழுத்துமே ஆவணம் தான் என்பதன் சாட்சியாகவடிவம் கொண்டு ஒளிர்கிறது.

’சுயார்ஜிதம்’ கதையில் தாயை இழந்த இரு பெண்களான கமலமும் ஜெயாவும் தகப்பனின் பராமரிப்பில் வளர்கிறார்கள்.இருவருக்குமே கல்யாண வயது வந்து பல ஆண்டுகளானாலும் தகப்பன் அவர்களுக்குக் கல்யாணம் செய்யும் சிந்தனையே இல்லாமல் இருக்கிறான்.சின்ன மகள் ஜெயாவின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது.விவசாயம் பொய்ப்பதும் வறுமையும்  ஒரு காரணம் என்றாலும் எல்லா ஆண்டுகளிலும் பூமி பொய்க்கவில்லை.நல்ல விளைச்சலும் லாபமும் கிடைக்கும் ஆண்டுகளிலும் தகப்பன் அப்பணத்தைக் கொண்டு புதிய நிலபுலன்களை வாங்கிக் குவிக்கவே பயன்படுத்துகிறான்.தரகர் சுப்பையாக்கோனார் உதவியுடன் வாங்கி வாங்கிப்போடுகிறான் தகப்பன்.

பருவம் தப்புமுன் பெண்ணுக்குக் கல்யாணம் கட்ட வேண்டாமா?காமம் பருவ வயதின் முக்கியமான இயற்கை உணர்வல்லவா? என்பதுதான் கதையின் மையப்புள்ளி.ஆனால் நிலப்பசி என்பது கிராமத்து விவசாயியின் அடங்காத பசி அல்லவா?இரண்டுக்குமான மோதல் கதையில் பளிச்சென வெளிப்பட்டு நிற்கிறது.

Image may contain: 1 person, eyeglasses

ஜெயா அப்பாவின் போக்கை ஏற்க முடியாமல் ஒருநாள் பேசுகிறாள்.

“இப்ப எதுக்குப்பா நமக்கு நெலமெல்லாம்…?”

“ஏன், வேண்டாமா?”

“அக்காளுக்குக் கல்யாணத்த முடிச்சா என்ன?”

“சரிதான்.எனக்கு யோசன சொல்ல வந்துட்டியோ? பேசாம உன் வேலக்கழுதையப்பாரு.அதெல்லாம் எனக்குத் தெரியும்” தந்தையின் அதட்டலில் ஜெயா அப்படியே அமுங்கிப் போய் விட்டாள்.

கதையின் முடிவு ‘கதைக்குள்ளேயே தீர்வைச் சொல்லும்’ 70களின் ‘முற்போக்கு மரபை’ப் பின்பற்றினாலும் உறுத்தலாகவோ துறுத்தலாகவோ ஒரு வரி இல்லாமல் வெகு இயல்பாக நிறைவுபெறுகிறது.

“வீட்டிற்குள்ளிருந்து வந்து கொண்டிருந்த வேதனை முனகலை இடையிடையே அந்த இரவு லாரிகளின் இறைச்சல் தேய்த்துக்கொண்டு சென்றது.மற்ற நேரங்களில் அந்த முனகல்-சில சமயம் அது ஒரு நீண்ட கதறலாகவும் மாறி –கதவிடுக்கின் வழியே வந்து அவன் மனதைச் சுட்டுச்சுட்டுக் கருக்கிக்கொண்டிருந்தது” என்று துவங்கும் அடுத்த கதையான ‘சுதந்திர மண்ணில் சில புதைகுழிகள்” திகிலூட்டும் ஒரு கதை.வீட்டின் முன் பக்க வராந்தாவில் கோபால் உட்கார்ந்திருக்க,வீட்டுக்குள்ளே அவனுடைய தங்கை விஜயாவின் வயிற்றில், சாதி மீறிய அவளுடைய காதலால் உருவான, கருவைக் கலைக்கும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அவனுடைய தாயும் தகப்பனுமே அதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.கத நிகழும் இடம் கொடைக்கானல் மலை.தூரத்து ஊரான குற்றாலம் பக்கம் உண்டான காதலின் அடையாளத்தை மலையில் வைத்து அழித்துக்கொண்டிருந்தார்கள்.

பாரஸ்டராகப் பணியாற்றும் கோபாலை இது என்ன வேலை?இதை விட்டொழித்துவிட்டு ஊருக்கு வா என்று தகப்பன் அழைக்கும்போதெல்லாம்,உடல் உழைக்காமலே சுகபோகத்துடன் வாழும் வாழ்க்கைதான் உயர்ந்தது என்று தன் தந்தை கணித்து வைத்திருப்பதை எண்ணி அவனுக்குள் ஒரு கசப்பு மேலெழுந்து வரும்.

”அவனிடம் வேலை பார்க்கும் அந்த நாற்பது கூலியாட் களின் முகங்கள்அவர்கள் அனுபவிக்கிற சுக துக்கங்கள், அவர்கள் அவன் மேல் வைத்திருக்கும் காரணம் புரியாத சகோதர வாஞ்சை, அவனுக்கு மேலதிகாரியாகபிளாண் டேஷன் ரேஞ்சராய் இருந்து அவனைப் பாராட்டி, ஒரு தந்தைக்குள்ள பிரியத்தோடு அரவணைத்துக் கொண்டி ருக்கும், உழைப்பை மதிக்கத் தெரிந்த ஒரு உயர்ந்த மனிதர். அனைத்திற்கும் மேலாக, ஐந்து வருடங்களுக்கு முன் னால் அவன் வந்த புதிதில் நடவு செய்த வாட்டில் செடிகள் இளம் மரங்களாகி, பூப்பெய்தி, வனத்தில் வரிசை வரிசையாய் நின்று கொண்டு எதன் வரவையோ அந்தரங்கமாய் அவனுக்கு முன்னறிவிப்பவைபோல் தங்கள் மஞ்சள் நிறப் பூங்கொத்துகளைக் காற்றில் அசைத்து நிற்கும் காட்சி…..! இவற்றுக்கெல்லாம் உள்ளோட்டமாய் நின்று, இவர்களை ஒருவர் மேல் ஒருவர் பற்றுக் கொள்ளச்செய்து இணைத்து வைத் திருக்கும்உழைப்பு“, — அது அந்த நேரத்தில் அன்பு, பாசம், நட்பு இவற்றின் பிணைப்பைவிட எவ்வளவோ உயர்ந்ததாயும், உறுதிமிக்கதாயும் தோன்றுவதை அவன் அப்போது உணர்வான்.”

உறவுகளைப் பிணைக்கும் கண்ணியாக ‘உழைப்பை’க் குறிப்பிடுகிறார் லிங்கன்.உழைப்பின் உயர்வைப் பலரும் பாடியிருந்தாலும் உறவின் கண்ணியாக உழைப்பைச் சொன்னவர் லிங்கன் தான். 

கதையில் அந்தச் சட்டவிரோதக் கருக்கலைப்புக் காரியத்தில் விஜயா இறந்து போகிறாள்.1974 ஆகஸ்ட் மாதத்திலேயே இப்படி ஒரு ஆணவக்கொலை கதையை லிங்கன் ”துள்ளத் துடிக்க” எழுதியிருக்கிரார் என்பதுதான் வியந்து போற்றத்தக்க ஒன்று.

”கருணை மனு” கதையில் வரதட்சிணையாக தர ஒப்புக்கொண்ட ஸ்கூட்டரை வாங்கித்தராததால் மனைவி அம்பிகாவைத் தள்ளி வைக்கிறான் கோபிநாதன்.அம்மா இல்லாத அம்பிகா, அப்பாவுடன் கிராமத்தில் வாழ ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.ஒவ்வொரு மாதமும் அவனுக்கு ஒரு கருணை மனுவைப்போல அவள் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறாள். “கடிதத்தை எழுதிவிட்டு கவருக்குள் போட்டு ஒட்டுமுன் கடைசி முறையாக அதை அவள் படித்துப்பார்க்கும்போது அவளே மனம் நெகிழ்ந்து அழுதிருக்கிறாள். ஆனாலும் அவனிடமிருந்து பதிலே வராது. 

Image may contain: one or more people, people sitting and people standing

இம்முறை அவளுக்குப் பதிலாக அவளுடைய அப்பா சுந்தரேசய்யர் எழுதுகிறார்.அதற்கு பதில் வருகிறது.கடிதத்துடன் அம்பிகா கையெழுத்துப்போட வேண்டிய விவாகரத்து சம்மத ஸ்டேட்மெண்ட்டையும் அனுப்பியிருக்கிறான்.” நீ விவாகரத்துக்கு சம்மதிக்காவிட்டாலும் கூட நான் அதற்காகக் கவலைப்படவோ ,கலங்கவோ போவதில்லை.ஏனெனில் எனக்கு மனைவி இல்லாததால் நான் எதையும் இழந்துவிடப் போவதில்லை.நான் ஆண்.ஆயிரம் இடங்களுக்கு என்னால் சுதந்திரமாகப் போக முடியும்,வரமுடியும்…!”

அம்பிகா டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்துப்போட முடிவு செய்கிறாள்.போட்டு அனுப்பவும் செய்கிறாள்.மனைவி இல்லாமல் தன்னால் வாழ முடியும்னு அவனாலே சொல்ல முடிஞ்சா கணவன் இல்லாம மனோபலத்துடன் என்னாலும் வாழ முடியும் என்று சொல்கிறாள்.சகிப்புத்தன்மையும் பிற உயிர்களின் வலிகளை அறியாத மனப்போக்கும் கொண்ட ஒருவனோடு வாழ முடியாது என்று தீர்க்கமாக முடிவெடுக்கிறாள்.

ஆனால்,வாழ்க்கையின் திருப்பமாக கோபிநாதன் சாலை விபத்தில் சிக்கு ஒரு காலை இழந்து மருத்துவமனையில் சிகிச்சையில் கிடக்க நேரிடுகிறது.தான் செய்த குற்றங்களை மன்னித்துத் தன்னோடு வந்து வாழ வேண்டும் என அவன் அம்பிகாவுக்கு இப்போது கடிதம் எழுதுகிறான்.சுந்தரேசய்யரும் மகளை அழைத்துக்கொண்டு செல்லத் தயாராகிறார்.ஆனால் அம்பிகா உறுதியாக மறுக்கிறாள்.

”ஊனம்னா வெறும் உடல் ஊனம்தான் ஊனமா?கையிலே பொருள் இல்லாமே எத்தனையோபேர் உயிர் வாழறதுக்கு முடியாமே தவிக்கறாளே-அவங்களும் ஒரு வகையிலே ஊனமானவங்கதான். நம்பட்டே பணம் இல்லாமேதானப்பா நம்மாலே அவருக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்க முடியலே.அந்த இயலாமைக்காக அவர் என் மேலே இரக்கப்பட்டாரோ?”என்று வாதிடுகிறாள். சமூகம் உண்டாக்கிய ஊனம்தான் பொருள் இல்லாமை என்பதே கதையின் சாரமாக விளங்குகிறது.

வரதட்சிணைக்கு எதிராக வசனம் ஏதும் பேசாமல் அதற்கு எதிரான உணர்வை இக்கதையில் உருவாக்கி விடுகிறார்.

பிராமணக்குடும்பத்தின் பிரச்னையாக 70கள் வரை  இருந்த வரதட்சிணை இப்போது சர்வஜாதிகளுக்கும் பரவிவிட்ட வியாதியாகிவிட்டது.

‘ஓர் இரவுக்காக’ கதை முற்றிலும் வித்தியாசமான பொருள் தேர்வைக்கொண்டது. பொருளாதாரத்தில் வசதியான வாழ்க்கை கிடைக்கும் என்கிற கணவனின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, சம்பாதிக்கும்  தன் தங்கையைக் கணவன் இரண்டாந்தாரமாகக் கட்டிக்கொள்ளச் சம்மதிக்கும் ஒரு பெண் பாலா. இரு மனைவியருடன் வைகை அணைக்குச் சுற்றுலாப்போகும் ஒரு சனிக்கிழமை மாலைப்பொழுதே கதைக்களம். சனிக்கிழமை என்பது இளையவளுடன் அவன் இருக்க வேண்டிய நாள். ஆகவே,அவர்கள் இருவரையும் ஜோடியாக முன்னே நடக்க விட்டுச் சற்றே பின்னால் நடந்து வருகிறாள் பாலா. பாலாவின் மனநிலையே கதையின் மையம்.பூங்காவின் காட்சிகளிலும் கூட்டம் கூட்டமாக வரும் சுற்றுலாப்பயணிகளின் பேச்சுக்கள் விளையாட்டுக்களிலும் தன்னை மறந்து நிற்கும் பாலா சுய நினைவுக்கு வரும்போது அவர்கள் இருவரும் காணாமல் போயிருப்பதைக் கண்டு திகைக்கிறாள். அந்தத் திகைப்புடன் வைகை அணை முழுவதும் தனித்தே அலைகிறாள்.முன்னே விட்டுப் பின்னே நடந்தது,தனித்தே திரிவது ஆகிய இந்த இரு காட்சிகள் அவளுடைய வாழ்வின் அவலத்தை நம் மனம் கசியும் வண்ணம் உணர்த்துகின்றன. இரவு விடுதி வாசலில் அவர்கள் இருவரும் வரட்டும் எனக் காத்திருக்கிறாள். என்ன ஒரு சித்திமான சித்திரவதையான காட்சி ! ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அவளுக்கும் ஒரு பார்சல் வாங்கிக்கொண்டு இருவரும் அப்புறமாக வருகிறார்கள்.ஒரே அரையில் பாலா தரையில் படுத்துக்கொள்கிறாள்.கட்டிலில் அவர்கள் இருவரும்.பாலாவின் உள்மனதில் ஆற்றாமை இருட்டில் பொங்குகிறது.கு.ப.ராஜகோபாலனின் ‘ஆற்றாமை’ கதையில் வரும்  சாவித்திரியின் மனநிலைக்குச் செல்கிறாள் பாலா.கு.ப.ரா. கதையைப்போல ஒரு வலுவான முடிவைக்கொண்ட  கதை இந்த ‘ஓர் இரவுக்காக’.எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் பொலிகாளையாகத் திரியும் அந்த ஆண் மீது நமக்குக் கோபம் வரச் செய்யும் கதையாகவும் இது உருக்கொள்கிறது.

’தெருமணல் சுடும்போது’ ஒரு கிராமத்துக்கதைதான். ஆனாலும் மிக நவீனமான உள்ளடக்கத்தைக் கொண்ட கதை. கட்டுமானப்பணிகளில் தலைமைக் கொத்தனாராக இருக்கும் 70 வயதுக்காரரான இராமலிங்கக் கொத்தன்  தனிக்கட்டை.எதிர்வீட்டில் குடியிருக்கும் மங்கம்மா 45 வயதான கணவனை இழந்த பெண்.அவளும் தனிக்கட்டை.ராமலிங்கக் கொத்தனிடம் சித்தாள் வேலை பார்க்கும் மங்கம்மா காலில் செங்கல் விழுந்து காயம்பட்டு வீட்டில் கிடக்கிறாள்.ஏனென்று கேட்க நாதியில்லை.நாலு நாளாக அவள் வேலைக்கு வரவில்லை.ஒருவாரம் கழித்துத்தான் மங்கம்மாவைப்பற்றிய நினைவு வந்து கொத்தனார் அவள் வீட்டுக்குச் செல்கிறார்.

Image may contain: 1 person

“அப்போது நன்றாக இருட்டியிருந்தது.மங்கம்மாவின் வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு கொத்தனார் அவளைப் பெயர் சொல்லி அழைத்தபோது இருட்டுக்குள் எங்கோ ஒரு மூலையிலிருந்து தொண்டை நெரிந்தவளைப் போல “என்ன மாமா..” என்று அவள் குரல் கொடுத்தாள்.

கொத்தனார் வீட்டிற்குள் போனார்.

“கால் புண் எப்பிடி இருக்கு?”

“இன்னும் அப்பிடியேதான் இருக்கு”

“சாப்பாட்டுக்கெல்லாம் என்ன செய்றே?-என்று அவர் கேட்டதும் திடீரென்று அழ ஆரம்பித்துவிட்டாள். கொத்தனாருக்கு நிலைமை விளங்கி விட்டது.உடனே அவர் தன் வீட்டிற்குப் போய் ,ஒரு தட்டில் சோறு போட்டு,குழம்பு ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தார்.அதற்குப் பிறகும் இரண்டு நாள் அவர்தான் அவளுக்கு உணவளித்தார்”

என்ன ஒரு காட்சி இது.பசியின் சித்திரம்.பசியில் தோய்த்த தூரிகையால் வரையப்பட்ட சித்திரம். லிங்கனின் பல கதைகளில் பசி இவ்விதமாகக் காட்சிப்படுத்தப்பட்டு நம் மனதைக் கரைப்பதைக் காணலாம். அங்கே கொத்தனாருக்கும் மங்கம்மாவுக்கும் இடையில் ஓர் உறவு மலர்கிரது.

கட்டுமானப்பணி முடித்து மாலையில் இருட்டும் நேரத்துக்கு வீடு வந்து அதற்கப்புறம் கிணற்றில் தண்ணீர் எடுத்து சமைத்துத் தானும் உண்டு மங்கம்மாவுக்கும் உணவளிக்கும் இந்த விகல்பமில்லாத ஒத்துழைப்பை,நட்பை ஊர் தப்பாகப் பேசுகிறது. உழைப்பும் பட்டினியும் இணைந்து உருவாக்கிய இந்தக் கிராமத்து நட்பை மிக அழகாகச் சொல்லும் இக்கதை மிக முக்கியமான, மிக நவீனமான கதை.

உடுமாத்துக்கு இன்னொரு சேலை இல்லாத கிராமத்துப் பெண்கள் வயல் வேலைகள் முடித்து வரும் வழியில் ஊருணியில் கரையில் சேலையை அவிழ்த்து வைத்துவிட்டு துணியின்றி ஓடிப்போய்த் தன்னீருக்குள் உட்கார்ந்து மானத்தை மறைத்துக்கொண்டு குளிப்பது வழக்கம்..தனியாக அப்படி நீருக்குல் மூழ்கிக் குளிக்கும் ஓர் இளம்பெண்ணின் இக்கட்டை மன அவதிகளை நுட்பமாகச் சொல்லும் கதை “ஒரு பெண் ஊரணியில் குளிக்கிறாள்” ஆணாதிக்க சமூகத்தைச் சாட்டையால் அடிக்கும் கதை.ஆனால் ஒரு வரி அல்லது ஒரு வசனம் அதைப்பற்றிக்கிடையாது.வறுமையின் இன்னொரு வண்ணமாகவும் பெண்மையின் ஆவேசம் வெடிக்கும் களமாகவும் இக்கதை அமைகிறது.மு.சுயம்புலிங்கத்தின் “தூரம்” கதை இக்கதையை நினைவு படுத்தும்.

‘சந்திப்பு’கதை ஒரு செவ்வியல் காதல் காவியம்தான். மலேரியா ஒழிப்புத்துறையின் தற்காலிக ஊழியரான தினகருக்கும் மூணு மாத லீவு வேகன்சியில் தற்காலிகமாக வேலைக்குச் சேரும் வசந்தாவுக்கும் இடையிலான காதலைச்சொல்லும் கதை. ரெண்டுபேரும் தற்காலிகம்.எப்போ வேணாலும் வேலை போகலாம்.”ஆகவே நமக்குள் ஏற்பட்ட காதல்,அந்தச் சில நிமிஷச் சம்பவம் இதற்காக நாம் கல்யாணம் செய்துகொண்டே ஆக வேண்டுமா?வாழ்க்கைக்கான வெளி ஆதாரங்களை முழுக்க முழுக்க ஒதுக்கிவிட்டு வெறும் உணர்வுக்கலப்பையும் ,சரீரக் கலப்பையும் சாக்காய் வைத்து ஏற்படுத்திக்கொள்கிற  ஒப்பந்தங்கள் அவ்வளவு உறுதியாக நிற்காது” என்று தெளிவாக அன்பாக மென்மையாக ஆனால் உறுதியாக மறுக்கிற பெண்ணாக வசந்தா இக்கதையில் வருகிறாள். கதையின் முடிவு பதைபதைப்பை உண்டாக்கி சொற்றிறம்பாத தினகரின் கற்புடன் முடிவடைவது மிக நவீனம்.மலேரியா ஒழிப்புத்துறை என ஒன்று இருந்ததே இன்றைய தலைமுறைக்குத் தெரியாது.அவ்வகையில் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இக்கதை திகழ்கிறது.

நடமாட்டம் அற்றுப்போன ஒற்றை ஆளான சீரங்கம் பாட்டி உட்கார்ந்த நிலையிலிருந்து பார்க்கும் ஒரு நாளின் காட்சிகளே  ”தோப்பிற்குள் சில தனிமரங்கள்”சமூக விமர்சனங்களைப் பாட்டியின் நினைவின் வழியே கூர்மைப்படுத்தும் கதை.

“பாவம் ஆடு நனைகிறது” என்று ஒரு கதை.அருமை அருமையான கதைகளுக்கெல்லாம் இப்படிக் கண்றாவியாகத் தலைப்பு வைத்திருக்கிறாரே என்று இன்றைய இளம் வாசகருக்குத் தோன்றும்.70 களில் “ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிரது” மாதிரித் தலைப்புகள் வைப்பது சிலருக்கு ஒரு ஃபேஷனாக இருந்தது என்கிற வரலாற்று உண்மையைச் சொல்லித்தான் சமாதானப்படுத்த வேண்டும்.

லீவு ப்ளேசில் வேலை பார்க்கும் ஜோதிக்கு அன்று ஆபீசுக்குப் போனதும் ஒரு கெட்ட சேதி.கன்னியப்பன் லீவை ரத்து செய்துவிட்டு வேலைக்கு வரப்போக்கிறான். அப்படியானால் அவள் வீட்டுக்குத்தான் போக வேண்டும். ஆபீசில் பல ஆண்கள் அவளுக்கு உதவத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் அவளிடமிருந்து ஒவ்வொரு எதிர்பார்ப்பு. ஆணாதிக்க சமூகத்தின் பன்முகமும் ஒரே நாளில் வெளிப்படும் விதமாகச் செல்லும் கதை.ஆனால் ஒரு வார்த்தை தேவையில்லாமல் எழுதப்படவில்லை.

பெற்ற தாயைத்தவிர வேற என்ன வேணாலும் கிடைக்கும் என்று பேர் பெற்ற நத்தம் சந்தைக்குப் புறப்பட்டு ஒருவர் போய்த்திரும்புகிற ஒரு நாளின் நிகழ்வுகளே “ஒரு பெண் நாணம் கொண்டாடினாள்” கதை. வறுமையும் இல்லாமையும் வியாபாரமயமாகிவிட்ட தமிழ் வாழ்வின் பரிமாணங்களும் ஆணாதிக்கமும் பெண் மனமும் என ஒரு சின்னக்கதைக்குள் எவ்வளவு சித்திரங்களைத் தீட்ட முடிகிறது இவரால் என வியக்க வைக்கும் கதை.

ஜெகமே உதிர்க,ரேஷன் அட்டை இரண்டுமே இல்லாமையின் கதைகள்.பட்டினியோடு ஒரு தாய் தன் மகனுக்காக நடத்தும் துயர்மிகு போராட்டமாக ’ஜெகமே உதிர்க’ இருக்கிறதெனில் இல்லாமை,போதாமை யிலிருந்து கிடைக்கக்கூடிய அரைநாள் விடுதலையைக்கூட இழக்கும் ஒரு பெண்ணின் கதை ரேஷன் அட்டை.

எண்ணெய்ச்செக்கு வைத்து ஆட்டி எண்ணெய் வியாபாரம் செய்து செருக்காக வாழ்ந்த குடும்பம் நவீன எண்ணெய் ஆலைகளின் வரவால் சிதைந்து சின்னாபின்னமாகிறது. கல்யாணமாகி வந்த காலத்தில் எண்ணெய்ச்செக்குக்காரர் மனைவியாகத் தலைமுதல் கால் வரை தண்ணியாக எண்ணெயைத் தேய்த்துக்கொண்டிருந்த அவள் ,தொழிலும் நசிந்து,புருசனும் எங்கோ ஓடிப்போக பெற்ற ஒரு மகனுக்காக வாழ்கிறாள். தலைக்கு எண்ணெயும் வைத்துக்கொள்ள வக்கற்றுப்போன அவள் எப்போதும் மொட்டைஅடித்துக்கொண்டு எண்ணெய்ச்செலவில்லாமல் திரிகிறாள். இப்படியான காட்சிப்படுத்தல் மூலமாகவே வாழ்வின் சிதைவுகளைச் சொல்லிவிட லிங்கனால் முடிந்திருப்பதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

தொகுப்பின் கடைசிக்கதையான மறுபக்கம் படிப்பின் மூலம் முன்னேற்றம் காணத் தவிக்கும் தலித் வாழ்வில் வந்து விழுகின்ற முடிச்சுகளையும் சிக்கல்களையும் பேசும் கதை. வெள்ளையங்கிரியை எலே வெள்ளை என்றே எப்போதும் அழைக்கும் பண்ணையார் சுண்ணாம்புக்காரக் கவுண்டர்,வெள்ளையின் மகன் ஊரிலேயே யாருக்கும் கிட்டாத மாதம் 700 ரூபாய்ச் சம்பளத்தில் பாங்கு வேலைக்குப் போய்விட்டான் என்று அறிந்ததும்,பலவிதமான கணக்குப்போட்டு வெள்ளையை இப்போது “என்னப்பா…வெள்ளியங்கிரி..” என்று மரியாதையாக அழைக்கத்துவங்குகிறார்.வெள்ளைக்கு ஒன்றும் புரியவில்லை.தன்னை இவ்வளவு மரியாதையாக பன்ணையார் அழைக்கிராரே..இதனால் ஏதும் தனக்கு வம்பு வந்து சேருமோ என அஞ்சுகிறார்.

பான்ஹ்கு வேலைக்குபோன மகன் ஆறு மாசம் ஒழுங்காகப் பணம் அனுப்புகிறான்.பின்னர் ஒரு தகவலும் இல்லை.மகனைத் வ்தேடிப் போகிறார் வெள்ளை.அங்கே அவன் ஒரு அய்யர் பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கொண்டு வாழ்வதைக்கண்டு திரும்புகிறார்.

Image may contain: 1 person, eyeglasses and closeup

”அவனும் இங்கே வரமாட்டான்.இங்கிருந்து யாரும் அங்கே போகவும் கூடாது.பணமும் அனுப்ப மாட்டான்.கடுதாசியும் எழுத மாட்டான்.அவனுக்கும் இவர்களுக்கும் இனிமேல் ஒரு தொடுப்பும் இருக்கப்படாது.அந்த அய்யரு வீட்டுப்பொண்ணு அப்படி நீ இருந்தாத்தான் கட்டிக்குவேன்னு சொல்லிச்சாம்.அது எல்லாத்துக்கும் செரி போட்டுச் சம்மதிச்சுக் கட்டிக்கிட்டானாம்.ரிஸ்தர் கல்யாணமாம்”

சாதி மறுப்புக் காதல்,சாதிமறுப்புக் கல்யாணத்தின் ஒரு முக்கியமான முகம் இது.இதைக் கச்சிதமாக வரைகிறார் லிங்கன்.இதெல்லாம் தெரிந்த பிறகு சுண்ணாம்புக்கவுண்டர் மறுபடி எலேய் ..வெள்ளை..என்று அழைக்கத்துவங்குவதோடு கதை முடிகிறது.

எல்லாக்கதைகளிலும் வர்க்க அரசியலையே பேசும் லிங்கன் எந்தக் கதையிலும் முஷ்டி உயர்த்தவில்லை.முழக்கம் இடவில்லை.போராடுவோம் என்று கூடச் சொல்லவில்லை.ஆனால் அத்தனையும் முத்தான முற்போக்கான கதைகள்.உயிர்த்துடிப்புடன் நம் மனங்களை அசைக்கும் கதைகள்.ஆங்காங்கே சிலும்புகளாகத் துருத்தும் சில சின்னச் சின்னக் குறைகளும் கூட அவர் தொடர்ந்து எழுதியிருந்தால் காணாமல் போயிருக்கும்.ஓர் அற்புதமான படைப்பாளி தொடர்ந்து எழுதாமல் போனாரே….

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்( 2012இல்) நான் எழுதிய வரிகள் இன்றைக்கும் பொருந்துவனவாக அப்படியே நிற்பதால் அப்பகுதியை மீண்டும் தருகிறேன்:

”லிங்கன் 80களுக்குப் பிறகு எழுதவில்லை .கலை இலக்கியப் பெருமன்ற இயக்கங்களிலிருந்தும் விலகி வாழ்ந்திருக்கிறார். ஆகவே அவருடைய தற்போதைய இருப்பு பற்றி இயக்கத்தோழர்கள் யாருக்கும் தெரியவில்லை. தோழர்கள் பொன்னீலன், ஹெச்.ஜி.ரசூல், பா.ஆனந்தக்குமார் ஆகியோரிடமிருந்து கீரனூர் ஜாகிர்ராஜா திரட்டிய தகவல்கள் அடிப்படையில் திண்டுக்கல் தமுஎகச தலைவர் தோழர் இரா.சு.மணி  அவர்களின் முயற்சியில் லிங்கன் திண்டுக்கல்லை அடுத்த நத்தம் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது அறியக்கிடைத்தது. அவரது மகன் விவேகானந்தன் அங்கேயே ஒரு பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் தகவலும் அவரது செல்பேசி எண்ணும் திண்டுக்கல் மாவட்ட கலை இலக்கியப் பெருமன்ற செயலாளர் பிரபாகரன் மூலம் கிடைத்தது. இலக்கிய உலகுக்கு அருங்கொடையாககருணை மனுசிறுகதைத் தொகுப்பை வழங்கிய தோழர் லிங்கன் இப்போது நம்மோடு இல்லை. அவர் காலமாகி மூன்றாண்டுகள் ஆகிவிட்ட செய்தியை இதன் மூலம் இலக்கிய உலகுக்குக் கனத்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறோம் இதைத் தெரிந்துகொள்ளவா இத்தனை தூரம் தேடினோம் என்று மனம் துக்கம் கொள்கிறது.

எங்களுக்காகத்தான் அப்பா எழுத்தை விட்டுட்டு வேலை, விவசாயம் என்று போய்விட்டார்கள்என்று விவேகானந்தன் ஒரு வருத்தமான குரலில் பேசினார். நான்கு குழந்தைகள் அவருக்கு அவரது துணைவியார் பிள்ளைகளோடு நத்தம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். மகன் விவேகானந்தன் இப்போதும் என்சிபிஎச் கடையோடு தொடர்பில் இருக்கிறார். தொடர்ந்து இயங்காவிட்டால் நாம் யாரையும் மறந்து போவோம் என்பதற்கு ஓர் உதாரணமாக லிங்கன் அவர்களின் வாழ்க்கை நம் முன்னே விரிந்து கிடக்கிறது நுட்பமும் செறிவும் அழகும் கூடிய படைப்புகளைத் தந்த அவர் எப்படித்தான் எழுத்தை மறந்தாரோ என்று மனம் லேசான பதைப்புக் கொள்கிறது. இலக்கியத்தைவிட வாழ்க்கை, அதிலும் நம் குழந்தைகளின் வாழ்க்கை, மிக முக்கியமல்லவா?

ஆகவே அவர் பொருளாதாரம் தேடிப் பயணித்தது தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். ஆனால் சக இலக்கியவாதிகளான நாம்தான் அவரோடு தொடர்ந்து பேசியிருக்க வேண்டும். வாழ்வோடு போராடிக்கொண்டே எழுத்தையும் விட்டு விடாதிருக்க நம் தூண்டுதல் அவசியம் அல்லவா? அங்கே நாம் எல்லோரும் தவறிழைத்து விட்டோம் என்கிற குற்ற உணர்வை நம் இலக்கிய உலகம் அறியாமலே போன அவரது மரணமும் அவரது எழுத்தின் மரணமும் எனக்கு ஆழமாக ஏற்படுத்தி விட்டுள்ளது. தன் சிறுகதைத் தொகுப்பை எந்த இலக்கிய இதழும் கண்டுகொள்ளாமல் யாரும் ஒரு விமர்சனக்கூட்டமும் நடத்தாமல் சக எழுத்தாளர்கள் கூட யாரும் பேசாமல் போன பெரும் வருத்தத்தில் தன் முதல் சிறுகதைத் தொகுப்பின் அத்தனை பிரதிகளையும் எழுத்தாளர் சுப.புன்னைவனராசன் (தூத்துக்குடி) தீயிட்டுப் பொசுக்கிய செய்தி அறிந்து மனம் பதறியது.

இன்னும் நம் தொடர்பு எல்லைக்கு வெளியில் தனித்து நிற்கும் படைப்பாளிகள் யார் யார் என்று ஒரு சிறு பதட்டத்துடன் மாவட்ட வாரியாக மனம் தேடத் துவங்குகிறது. தான் எழுதுவது முக்கியம்தான் என்பதை ஒரு படைப்பாளிக்குச் சொல்ல சக படைப்பாளிக்குக் கடமை உண்டு. எல்லார் மீதும் சமமாக வெளிச்சம் படாதுதான். ஆனாலும் சிறிது வெளிச்சமும் படாதுபோனால் படைப்புமனம் கருகிப்போகுமே. கருகத்திருவுளமோ?

(பி.கு. இப்போது எங்கும் கிடைக்காத அவரது நாவலையும்கருணை மனு சிறுகதைத் தொகுப்பையும் அவரது குடும்பத்தாரின் அனுமதியோடு சேர்த்து மறுபதிப்புக் கொண்டு வருவது மிக மிக அவசியம். என்.சி.பி.ஹெச் நிறுவனமே இதைச் செய்யலாம் என அன்புடன் வேண்டுகிறேன். முடியாத பட்சத்தில் நாமே கொண்டுவரலாம்)

என் எழுத்து முன்னோடி தனுஷ்கோடி ராமசாமி வீட்டிலிருந்து அவர் மகன் டாக்டர் அறம் எடுத்துக்கொடுத்த ‘கருணை மனு’தொகுப்பின் பிரதியை என்னிடமிருந்து திரு.லிங்கன் அவர்களின் மகன் மே 2020இல் பெற்றுள்ளார். என்சிபிஹெச் மூலமாக அது மறுபதிப்புக் காணும் என்று சொல்லியிருக்கிறார்.

இளம் படைப்பாளிகள்,முற்போக்கு இலக்கியவாதிகள் வாங்கிப்படிக்க வேண்டிய கதைகள் அவை.

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3 ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4 ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்தொடர் 5 ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்தொடர் 10 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 4 thoughts on “தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்”
 1. ஒவ்வொரு முறையும் சிறுகதை தொடர்பான ஆளுமைகளை, எழுத்துக்களை கொண்டாடுகிற போது சில சமயங்களில் சம காலத்தில் அவர்களை கொண்டாடாமல் போய்விட்டதே! அவரை ஒருமுறையேனும் சந்திக்காமல் காலம் இப்படி காலாவதியாகிவிட்டதே என்று கலங்குவதுண்டு. இப்போது எழுதிக் கொண்டிருக்கிற ஆதர்சமிக்க எழுத்தாளர்களை இன்னும் கூடுதலாக கவனப்படுத்தி சமகால அரசியலை படைப்பாக்க வேண்டியதன் நுட்பத்தை அடிக்கொடிடவோ அல்லது அப்படி இயங்குபவர்களை சமூகத்திற்கு அடையாளப்படுத்துவதோ கூட முக்கியமான அரசியலென விளங்குகிறது. காலம் கடந்த படைப்பாளனை இன்று புதியதாக அறிந்துகொண்ட திருப்தி.. நன்றி தோழர்.

 2. அன்புத் தோழர்.
  லிங்கன் இந்தப் பெயரில் இப்படி ஒரு படைப்பாளியை உங்கள் எழுத்துக்களின் வாயிலாக இப்பொழுதுநான் கேள்விப்படுகிறேன்.
  வாசிக்கும் பொழுதே.. அவர் தொடர்ந்து எழுதாது குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் அறிகிற பொழுது இப்பொழுதும் வாழ்க்கையோடு போராடிக்கொண்டு எழுதிக் கொண்டும் எழுதாமலும் இருக்கிற எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த வேண்டிய சக படைப்பாளியின் கடமையை இக்கட்டுரையின் வாயிலாக மேலும் அழுத்தமாக நான் புரிந்து கொள்கிறேன். இப்படி எத்தனை பேர்களை நாம் தவறவிட்டிருக்கிறோமோ என்கிற சிந்தனையும் சேர்ந்தே எழுகிறது.

  லிங்கனின் தொகுப்பை உடனே வாசித்து விட நெஞ்சம் அடித்துக் கொள்கிறது தோழர்.

  புதிய பதிப்பு வந்ததுமே தாமதமில்லாமல் வாங்கிவிடவேண்டும்.

  நன்றி தோழர்.

 3. என் கல்லூரி காலத்தில் வாய்ப்பு கிடைத்த போது நூலகத்தில் தாமரையில் வாசித்த. நினைவு மேலெழுகிறது. இத்தொடரில் லிங்கன் கதைகள் கிளர்த்திய தாக்கம் எவ்வளவோ அவ்வளவு தாக்கம் நல்ல எழுத்தாளரைக் காணாமல் சமூகம் விட்டுவிட்டதே , இந்தத் தவறுக்கு நம்மைப் போன்ற அமைப்பு சார்ந்தவர்களும் பொறுப்பு ஏற்கவேண்டும் என்ற தார்மீக வருத்தமும் உணர்த்துகிறது. இந்த. வருத்தத்தை களைவதற்கு அறிகுறியாகவும் இனி எந்த படைப்பாளியிடமும் பாராமுகமாக இருக்கமாட்டோம் என்று உறுதி கூறுவதாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது. பெருமகிழ்ச்சி. வாழ்த்துகள் தோழர்.

 4. லிங்கன் வாழ்வின் முடிவு வருத்தம் அளிக்கிறது.அவரது படைப்புகள் மூலம் நம்முடன் வாழ்வார்.இவரது வாழ்க்கை படிப்பினைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *