தங்கேஸ் எழுதிய ஏழு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

**********************************************

1.கதை சொல்லிகள்

ஓடும் நதியிலிருந்து கரையில் குதிக்க
துடித்துக் கொண்டிருக்கும்
கெண்டை மீனுக்கு
சாந்த சொரூபியாய்
காட்சியளித்துக்கொண்டிருக்கிறது
கரையிலிருக்கும்  வெண்நாரை

வெள்ளைத் தேவதையின்
கலையும் பிம்பங்களை
யாருக்கும்  தெரியாமல்
புரட்டிக் கொண்டே போகிறது
கதை சொல்லும் நதி

வளமையான  கதை சொல்லிக்கு
நாரையைப் போல மீனும்
ஒரு புனைவு தானேயன்றி
வேறொன்றுமில்லை

தூண்டிலை சிலுவையாக்கும்
கரங்கள் மட்டும்
அதன் புனைவுக்குள்
ஏனோ எப்போதும் வருவதேயில்லை

கடலில் கலக்கும் எண்ணிலா பாத்திரங்கள் பற்றியும்
பாதியில் கரையில் ஒதுங்கும்
அதிர்ஷ்டமற்ற பாத்திரங்கள் பற்றியும் கூட
கதை சொல்லிகள் பெரிதாகக் கவலைப் படுவதில்லை

தன்னைப் போல எத்தனை எத்தனை
கதை சொல்லிகள்
இந்தக்  கடலுக்குள் சத்தமின்றி அமிழ்ந்து கிடக்கிறார்கள்
என்பதும்  அவர்கள்  அறியாததில்லை

*****************************************************************
2. வளர்ச்சி

எந்த நிமிடத்திலிருந்து
ஆரம்பித்ததென்று தெரியவில்லை
அவனுடைய இந்த நோய்க் கூறு

மனிதர்களை நம்புவதை
அவன் முற்றிலுமாக
கை விட்டபின்
கபடம்
அவனது கண்களில் பீளையாக வந்து
அப்பிக் கொண்டது

நரித்தனம் ஒரு வாலைப் போல சொற்களின் இடையில் முளைத்து
அசைந்தாடுகிறது

நகரத்திற்கு ஒரு முறை சென்று திரும்பியதிலிருந்துதான்
அவன்  இவ்வாறு ஆகி விட்டதாக
அநேகம் பேர் சொல்லிக் கொண்டார்கள்

மேலும் அவன்  முழு நேர அரசியலில்
ஈடுபடப் போவதாகவும்
ஒரு பேச்சு உண்டு

வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய
விரும்புவதாகவும்
இன்னொரு வதந்தி

ஆனால் நிச்சயமாக அவன்
கவிஞன் இல்லை என்பதை
மட்டும் அனைவரும்
கண்டு கொண்டார்கள்

முதலில் அவனைத் தனியாக
பார்க்கும் போது
சற்று பயமாகத் தான்  இருந்தது

ஆனால் இப்போது ஊரில்
அவனைப் போலவே
நிறைய பேர் தென்பட
ஆரம்பித்து விட்டதால்
சற்று பயம் போய் விட்டது
என்பதும்  உண்மைதான்

கடைசியாக அவனை
மன நல மருத்துவரிடம்
காட்டிய போது
அவர் இவ்வாறு சொன்னதாகச் சொன்னார்கள்

“இனி இந்த தேசத்தில்
இறையான்மையின் வளர்ச்சி இப்படித்தான்
இருக்கப் போகிறது ”

*****************************************************************

3. நீங்க என்ன ஆளுக ?

நீங்கஎன்ன ஆளுங்க என
ஒருவனை
கேட்ட நொடியில்
ஒரு சயரோகி ரத்தத்துடன் கோழையைப்
புழுதியில் துப்பிவிட்டுச் செல்கிறான்
ஒரு வேசை காசு தராத வாடிக்கையாளின் பரம்பரைப் பெண்களை
அவளின் தொழிலுக்குப் போகச் சொல்லி சபிக்கிறாள்
குப்பைத்தொட்டியின் அருகில் கிடந்த
சாக்கு மூட்டை அசைந்து அசைந்து
மனித உடலம் தலை நீட்டுகிறது
முழுப் போதையில் போகும் டாஸ்மாக் குடிமகன்
தெருவை ஆபாச வசவுகளால் நெய்தபடி போகிறான்
தெரு நாய்களுக்குள் எலும்பு யாருக்கு என்ற சண்டை மறுபடி ஆரம்பமாகிறது
அன்பான கடவுள் மீது அநாவசியமாக கோபம் வருகிறது
வாலில்லாத குரங்குக்கு
மறுபடியும் வால் முளைத்ததும்
கிளைக்குக் கிளை தாவுகிறது

*****************************************************************
4

ஒரு தானியங்கிக் கதவைப் போல
திறந்து மூடுகிறது மனது

யார் வருகிறார்கள்
யார் போகிறார்களென்று
சொந்தக்காரன்
அறிய வேண்டியதில்லை
போலும்

இந்த வழியாகத்தான்
அவள் வந்து போனாள்

ஒரு நட்பின் துரோகம்
வந்துவிட்டுப்  போனது

உறவுகள் ஒரு கடைசி புன்னகையை
மட்டும் உதிர்த்து விட்டுச் சென்றன

பச்சைப் பசேலன்று
துளசிக் கொழுந்து போல
ஒரு குழந்தையும் வந்து
முத்தமிட்டுப்  போனது

எடுத்துக் கொள்வதற்கு
இனி எதுவுமில்லை என்றான பிறகு
லூசிபர்  கிளம்பிப் போனான்

கடைசியில் தன் பங்கிற்கு
கடவுளும்  வந்து
தேடிப் பார்த்து விட்டு
நிரம்பியிருந்த வெறுமையை
எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்

*****************************************************************
5. சுவாசம்

நட்சத்திரங்களை எடுத்து
பல்லாங்குழி ஆடுவாள்
நிலவு தான் குழி விழுந்த பலகை

உறங்காத விழிகளிடம்
இரவைப் பற்றிக் கேட்டால்
வானத்தின் ஜாதகத்தை சொல்லும்

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போய்
கழிந்தன கற்பனை நாளும் குறுகி

வழிதப்பிப் போகும் ஒற்றை நாரையோடு
சற்று நேரம் பறந்து விட்டு வரும்
அவள் இதயம்
உடல் கூட்டிற்குள் செல்ல மறுக்கிறது

காலத்தை சுமந்து வரும்
அவளது மூச்சு தான்
உன் கடைசி சுவாசமாக இருக்கக் கூடும்

*****************************************************************
6.எலும்புத் துண்டுகள்

சிசு போல் குழையும் இந்த உலகினை
சிறு சிறு எலும்புத்துண்டங்களாக்கிய பின்
வீதியில் வீசி
தகுதிப் போராட்டத்தை
தொடங்கி வைக்கிறார்கள் மேய்ப்பர்கள்
எலும்புகள் கிடைக்காத தெரு நாய்கள்
குறைந்த பட்சம்
தங்கள் தங்கள் குருதியை
தாங்களே  சுவைத்துக் கொண்டு
கடைவாய்க்குள்  ஜெயித்த
எலும்புத் துண்டுகளை
அதக்கிவைத்திருப்பதாக
பாவனை செய்கின்றன

*****************************************************************
7. அற்பம்

யாவரும் கைவிட்டுப் போன இரவில்
குழல் விளக்கில் மோதி சரிகின்றன
ஈசல் பூச்சிகள்

சிறகுகள் உதிர்ந்த பின் தென்படும்
அதன் அருவெறுப்பான தோற்றம் தான்
நம்மை ஒரு கணம் நிலைகுலைய
வைக்கின்றது

சிறு  அற்பமான வாழ்க்கையை
சிறிதேனும் அர்த்தப்படுத்தும்
ஒரு நேசமான புன்னகை கூட
கிடைக்கப்பெறாத பொழுதுகளில்
கைவிடப்பட்ட இதயங்கள்
சபிப்பது தம்மைத் தாமே தவிர
வேறொன்றையல்ல

நேசிக்கத் தெரியாத மனிதர்களை
அரக்கன் பலி கொண்டு போவதும்
இது போன்ற
தனிமை பீடித்த சமயங்களில் தான்

நடுகற்களைப் போல நின்றிருக்கும்
நட்சத்திரங்கள்
தூண்டிலில் அகப்பட்ட மீனைப் போன்று
துடிக்கும் இதயங்களை
இரவெல்லாம
கண் கொட்டாமல் பார்ப்பதும்
இப்படிப்பட்ட

*****************************************************************

📚 எழுதியவர் : 

✍🏻 தங்கேஸ்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *