பாவலன் எழுதிய 7 புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

பாவலன் கவிதைகள்

பாவலன் கவிதைகள்

***********************************************

1. என் உண்மையான முதல் கவிதை…

இயற்கை சூழ்ந்த
அந்த அழகுப் பூங்கா தான்
என் கவிதைக்கான
கருவறை.

பூக்களோடும்
மரங்களோடும்
குயில்களோடும்
பறவைகளோடும்
பேசி எப்படியாவது
ஒரு கவிதை
முடித்து விட வேண்டும்
என்று தான்
காத்து நின்றேன்.

அப்பொழுதெல்லாம்
ஒவ்வொரு கவிதையும்
தாயின் முதல் பிரசவம்
போன்று வாய்ந்தது
எனக்கு.

இன்னும் சில கவிதைகள்
காதலுக்காகவும்
படைத்திருந்தேன்.
அவையும் அப்படித்தான்.

நான்…
கவிதைக்காக தான்
பூங்கா சென்று
வந்திருக்கக்கூடும்.
ஒருபோதும்
எனக்காக அல்ல.

அந்த…
மண்வெட்டிகளுடனும்
கடப்பாறைகளுடனும்
கத்திகளுடனும்
வம்பிழுத்தே
கோடாரி காம்பு
செய்வதும் தான்
என் உண்மையான
முதல் கவிதை.

***********************************************

2. பலி

எவனோ பாவி ஒருவன்
செய்த தவறால்
நாம் எதற்கு எல்லோரும்
பலியாக வேண்டும்.

நாம் அவனுக்கு
பாடம் கற்பிக்கலாம்
சாதியை எரித்து
மதத்தைக் கொளுத்தி
ஆரவாரம் செய்யலாம்
ஒரு தீபாவளிப் பண்டிகையை போல.

பள்ளன்
பறையன்
சக்கிலி மோலி
நாயக்கன்
பிராமணன்
அவர்கள்
யாரும் நமக்கு வேண்டாம்.

இந்து
முஸ்லிம்
கிருத்துவம்
இவையும்
நமக்குத் தேவையில்லை.

இவற்றில் இருந்து
ஒரு மனிதனைக் கண்டெடுப்போம்.

இல்லையெனில் வாருங்கள்
நாம் அனைவரும்
எல்லோரும்
ஒரு நூலகம்
சென்று வரலாம்.

நூலகத்திலிருந்து
திரும்பும் போது
சாதியையும்
மதத்தையும்
எரித்துவிட்டு
மனிதநேயம் மிக்க
நல்ல மனிதர்களாக
திரும்ப வருவோம்.

அன்று நம்மை எப்படி
அடையாளப்படுத்த முடியும்
மனிதன் என்பதைத் தவிர?

இதுவரை நம்மைத்
தந்திரமாகத் தடுத்துப்
பிரித்து வைத்த சமூகப் பிராணிகள்
அந்தச் சாத்தான்கள்
இறந்து போனது
நம் கண் முன்
விரிந்து கிடக்கும்.

அன்று
உண்மையான
மனிதனாகப் பிறந்திருப்போம்.

***********************************************

3. நண்பன்

உப்பைப் போன்றவன்
சில நேரத்தில் ருசியாகவும்
சில நேரங்களில் விஷமாகவும்
மாறிவிடுகிறான்.

எல்லைகளற்ற
என் கூடாரத்தில்
உனக்கு ஒரு வசிப்பிடத்தை
உருவாக்கித் தந்தேன்.
ஆனால் நீயோ?
இறுதியில் என்னையே
கொன்று தின்று விட்டாய்.

***********************************************

4. மரம்

அதுக்கு அரசியல் தெரியாது.
அனைவரையும் நம்பும்.
அரவணைக்கும்.

கல்லடி பட்டுக் காயப்படும்.

தன்னை வெட்ட வரும்
கோடாரிக் காம்புகளுக்காகவும்
இடம் தந்து மகிழ்ச்சி அளிக்கும்.

எதிர்ப்படும் மனிதர்களிடம்
நலம் விசாரிக்கும்.

இலையுதிர் காலத்திலும்
தன்னுடைய திடமான
நம்பிக்கையை வேர்களுக்கு
திரவ நிலையில் கடந்தும்.

ஆழ்ந்த நம்பிக்கையுடன்
புன்னகை பூக்கும்.

தன்னை எரித்த
பாவத்திற்காக
வசந்தத்தில் யாராவது
ஒருவர் இறுதி நாளில்
மரித்ததை நினைத்து
மரியாதை செய்யும்

சவப்பெட்டி யாகவோ?
வேறு எதுவாகவோ?

நீ அவ்வளவு எளிதில்
தூக்கி எறிந்து விட்டு
சென்றுவிட முடியாது.

மண்ணுக்கும் மனிதனுக்கும்
தொடர்புண்டு என்பதை
வேர்களை வைத்து நினைவு கூரும்.

***********************************************

5. என் இளமை.

அவிழ்க்கப்படாத
ஆடையில்
வடிந்து ஒழுகியது
உன் காம போதை.

உன் மோகப் பார்வை
முள்ளாய்க் குத்துகிறது
கிழட்டு நரியின்
நமட்டுச் சிரிப்பு.

பனி பொழியும் இரவில்
நனையாத அங்கங்களில்
கதகதப்போடு
சில்லிட்டுப் பேசுகிறேன்
உன்னிடம்.

நிம்மதிப் பெருமூச்சில்
ஆழ்ந்து தூங்கினாய்
நலிந்து செல்கிறது
என் இளமை.

***********************************************

6. அப்பா

மயான அமைதி
தூரத்தில் கரையும் காக்கா.

இடைவிடாமல் இரைச்சல்
எழுப்பும் கியாம் பூச்சி.

கூரையின் எரவானம் ஓலை
மளமளவென முறிய
எருமை செல்லும் பாதை.

இழுத்துக் கொண்டு கிடக்கும்
ஆயாவின் இருமல் சத்தம்.

இறுதியாக உன்னைப்
பார்க்க வந்து
ஆறுதல் சொன்னார்கள்
யாருக்கும் தெரியாமல்
நகர்கிறார்கள்.

இப்பொழுது
தனிமரமாக நிற்கிறேன்.
ஆலமரமாக இருந்தாலும்
ஆடித்தான் போகிறது.

இப்பொழுது
வாய்விட்டு கதறுகிறேன்
அப்பா… அப்பாவென்று….

வயிற்றுப் பூச்சி
ஒவ்வொன்றாக
செத்து மடிகிறது.

இடை இடையே
எச்சிலை கூட்டி
முழுங்குவதைவிட

தொண்டையில் ஈரம் இல்லை.

***********************************************

7.

இன்னும் உன் பழமை
ஊறிய மூளைக்குள்
இணைந்து பிணைந்தாடுகிறது
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று.

விடியலின் தலைக்குப்புற
விழுந்து கிடக்கும் இரவாய்
வெளிச்சத்துக்கு ஏங்கி தவிக்கிறேன்.

பனிப்பொழியும் இரவில்
நனையாத அங்கங்களின்
கதகதப்போடு சில்லிட்டு
பேசுகிறேன் உன்னிடம்.

பெருமை கொண்டு இந்திய
தேசத்தில் முகவரி
சாதியும் மதமும் தான்.

எங்கள் துயர் துடைக்க
உன் கரம் படருமென்று
நம்பினோம்.

ஆனால் எங்கள் துயரமே
உங்கள் கரம் தான் என்பதை
இப்பொழுதோ அறிந்து கொண்டோம்.
எம் இனத்தின் விடுதலையை
நாங்களே மீட்டெடுப்போம்.

கூட்டுக் உதவாத
உன் பழம் புராணத்தையும்
வேதத்தையும்
தீயிட்டு பொசுக்கு.
அப்பொழுதாவது அதன்
சூட்சுமத்தை அறிவாய்

வேதங்கள் நான்கும்
வேள்வி தீயும்
அதை அறியாத
மக்களிடம் தான்
திமிர்த்தனத்தை காட்டும்.

***********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 பாவலன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. BALA SUBRAMANI

    Good lines for make good future of life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *