பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு பாதுகாப்பு குறை தீர்ப்பு) சட்டம் 2013 (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013)
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயல் மட்டுமல்ல சொல்கூட பாலியல் துன்புறுத்தல் தான்.
இன்னும் இரண்டு மாதங்களில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதற்காக தயாராகி கொண்டிருக்கிறோம்.
இன்றைய காலக் கட்டத்தில் பெண்கள் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, சட்டம் போன்ற அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.
மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். ஆனால் பெண்கள் பணிபுரியும் இடத்தில் அவர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.?
பெண்கள் பணியிடங்களில் சமமான ஊதியமின்மை, பாலின சமத்துவமின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் உடன் பணிபுரியும் நபர்களாலோ அல்லது உயர் அதிகாரிகளாலோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண் ஊழியர்கள் புகார் அளிக்க தயங்குகின்றனர். காரணம் பாலியல் துன்புறுத்தலுக்கும், பிற துன்புறுத்தலுக்கும் இடையேயான வேறுபாடுகள் பற்றிய சரியான வழிகாட்டுதல்கள் இல்லை.
ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி பாலியல் நோக்கில் இரட்டை அர்த்தத்தில் பேசிவிட்டு தான் பாலியல் நோக்கத்துடன் அவ்வாறு பேசவில்லை என்று கூறி விடுகிறார் .
மேலும் தொட்டு பேசுவது கைகுலுக்க கூறி கட்டாயப்படுத்துவது, பணிபுரியும் போது பின்னால் நின்று கொண்டு பார்ப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார். பாதிக்கப்பட்ட பெண் நிறுவனத்தில் புகார் அளித்தால் தான் நிறுவனத்தின் உயர் அதிகாரி என்ற முறையில் அந்தப் பெண்ணின் பணியை மேற்பார்வை செய்தேன்தானே தவிர பாலியல் நோக்கில் செய்யவில்லை என்று கூறுகிறார்.
இந்நிலையில் பணிபுரியும் இடங்களில் பெண்களை அசௌகரியமாக உணர வைக்கும் செயல் மட்டுமல்ல சொல்லும் கூட பாலியல் துன்புறுத்தல் தான் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக அங்கு பணிபுரியும் 3 இளம் பெண்கள் அந்நிறுவனத்தில் உள்ள விசாகா கமிட்டியில் (Vishakha Committee) புகார் அளித்தனர்.
இதை விசாரித்த விசாகா கமிட்டி (Vishakha Committee) சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வோ பதவி உயர்வோ வழங்க கூடாது என பரிந்துரை செய்தது. விசாகா கமிட்டியின் (Vishakha Committee) இந்த பரிந்துரையை எதிர்த்த அந்த அதிகாரி சென்னையில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க எந்த வாய்ப்பும் அளிக்காமல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று தொழிலாளர் நல நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த அதிகாரியின் கோரிக்கையை ஏற்று அந்த அறிக்கையை தொழிலாளர் நல நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மென்பொருள் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு மாண்புமிகு உயர் நீதிமன்ற பி. ஆர்.மஞ்சுளா அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபர் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பின்னால் நின்று கொண்டு அவர்களை தொட்டு பேசுவதும் கைகுலுக்க கூறுவதும் உடையளவு என்ன என்று கேட்டும் தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அநாகரிகமான செயல் தங்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியதாக விசாகா குழுவிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர் என நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் தரப்பில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் அவர்களின் பின்னால் நிற்கவில்லை உயர் அதிகாரி என்ற முறையில் அந்தப் பெண்கள் செய்யும் வேலைகளை பின்னால் நின்று கண்காணித்துக் கொண்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாண்புமிகு நீதியரசர் பி.ஆர்.மஞ்சுளா அவர்கள் பிறப்பித்த உத்தரவில் பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் விரும்பத்தகாத செயல்களை செய்வதும் சொல்வதும் கூட பாலியல் துன்புறுத்தல் தான். எனவே இந்த வழக்கில் தொழிலாளர் நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விசாகா கமிட்டி (Vishakha Committee) அளித்த பரிந்துரை செல்லும் எனவும், மேலும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க வழிவகை செய்யும் சட்டம் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு நடத்தையை எப்படி உணர்கின்றனர் என்பதையே முதன்மை படுத்த வேண்டுமே அன்றி துன்புறுத்துபவரின் நோக்கங்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் அந்நிறுவனத்தில் உள்ள விசாகா கமிட்டி (Vishakha Committee) பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக நின்று நீதியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
விசாகா கமிட்டி (Vishakha Committee):

விசாகா கமிட்டி (Vishakha Committee) என்பது பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளிலிருந்து பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டதாகும்.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விசாகா என்னும் பெண்ணின் வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் 1997ல் பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகள், சீண்டல்கள், வன்முறைகள் ஆகியவற்றை தடுத்திட வேண்டி பெண்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் விசாகா கமிட்டி (Vishakha Committee) என்னும் பெயரில் குழு அமைத்திட வேண்டும் என்று ஆணையிட்டது.
இந்திய உச்சநீதிமன்றத்தின் விசாகா வழிகாட்டுதலின்படி (Vishaka Guidelines) இந்திய அரசு பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு பாதுகாப்பு குறை தீர்ப்பு) சட்டம் (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act 2013) 2013ல் கொண்டு வந்தது.
பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு பாதுகாப்பு குறை தீர்ப்பு) சட்டம் 2013 (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013):
இச்சட்டத்தின்படி பணிபுரியும் இடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களை புகார் தெரிவிக்க விசாகா கமிட்டி (Vishakha Committee) அமைக்கப்பட வேண்டும்.
10 ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி (Vishakha Committee) அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியின் தலைவராக பெண் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.
கமிட்டியின் மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும்.
இதில் ஒரு உறுப்பினர் நிறுவன ஊழியர் ஆக இல்லாமல் தன்னார்வ தொண்டு அமைப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
இந்த கமிட்டி அதன் செயல்பாடுகளை அறிக்கையாக தயாரித்து ஆண்டு தோறும் அரசுக்கு வழங்க வேண்டும்.
நோக்கம்:
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதையும், அதற்கு தீர்வு காண்பதையும் இச்சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தலின் வரையறை:
பாலியல் துன்புறுத்தல் என்பது பற்றி தெளிவான வரையறையை இச்சட்டம் வழங்குகிறது. விரும்பத்தகாத செயல்களை செய்வது பாலியல் நோக்கில் செயல்களை செய்வது, இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை பேசுவது தொட்டுப் பேசுவது , பணியை செய்யவிடாமல் அச்சுறுத்துவது அல்லது விரோதமான பணிச் சூழலை உருவாக்குவது பாலியல் துன்புறுத்தல் ஆகும்.
இச்சட்டம் பொருந்தும் இடம் :
அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.
10 ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ளக குழு அமைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது
பாலியல் தொடர்பான புகார்களை விசாரித்து தீர்வு காண்பதற்கும் பாதுகாப்பான பணி சூழலை பெண் ஊழியர்களுக்கு உருவாக்கி தருவதற்கும் இக்குழு பொறுப்பாகும் .
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்கள் நம்பிக்கையுடன் இக்குழுவிடம் புகார் அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது புகாருக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை பாதகமான செயல்களை செய்வதை இச்சட்டம் தடை செய்கிறது
குற்றம் நிரூபிக்கப்பட்டால் பண அபராதம் குறிப்பிட்ட காலத்திற்கு பதவி உயர்வு இல்லாமை பணி நீக்கம் ஆகிய தண்டனைகளை இச்சட்டம் வழங்குகிறது
புகார் செய்யும் நடைமுறை :
பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவர் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு நபரும் பாலியல் துன்புறுத்தல் பற்றிய எழுத்துப்பூர்வமான புகாரை அளிக்கலாம்
நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்தால் புகாரை உள் குழுவில் (Internal Committee)பதிவு செய்ய வேண்டும்.
பத்துக்கும் குறைவான ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்தால் மாவட்ட அலுவலர் அமைக்கப்பட்ட உள்ளூர் குழுவில் (Local Committee) புகாரை பதிவு செய்யலாம்.
விசாரணை செயல்முறை:
இந்த குழுவானது புகார் மீது நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும்.
புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணையின் போது தங்கள் வழக்கை முன்வைக்கவும் ஆதாரங்களை வழங்கவும் உரிமை உண்டு.
தாக்கல் செய்வதற்கான காலக்கெடு:
பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அல்லது கடைசியாக மூன்று மாதங்களுக்குள் புகார் பதிவு செய்யப்பட வேண்டும்
பாலியல் துன்புறுத்தலில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று குழு கண்டறிந்தால், அது தகுந்த நடவடிக்கைகளையும் தண்டனைகளையும் முதலாளிக்கு பரிந்துரைக்கும்.
முதலாளியின் நடவடிக்கை:
குழுவின் பரிந்துரைகளை 60 நாட்களுக்குள் செயல்படுத்த முதலாளி கடமைப்பட்டிருக்கிறார்.
வேலை வழங்குபவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும், அதில் பண இழப்பீடு, ஆலோசனை அல்லது பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கான வேறு எந்த நடவடிக்கையும் அடங்கும்.
மேல்முறையீடு:
IC/LC இன் முடிவு அல்லது முதலாளியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றில் எந்த தரப்பினரும் அதிருப்தி அடைந்தால், அவர்கள் தகுந்த அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம்.
பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் இத்தகைய பாலியல் துன்புறுத்தல்களை தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
எனவே இச்சட்டத்தின் மூலம் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தவிர்த்து பாதுகாப்பான பணி சூழலை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.
எழுதியவர் :

அ.காயத்ரி
அரசு சட்டக் கல்லூரி மாணவி, மதுரை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Usefull article comrade