உலகப் புத்தக தினமும் ஷேக்ஸ்பியரும் – சிவ.வீர. வியட்நாம்

உலகப் புத்தக தினமும் ஷேக்ஸ்பியரும் – சிவ.வீர. வியட்நாம்

ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தகம் தினம் என்று கொண்டாடுகிறோம். இந்த தினத்தில்தான் உலகைக் கலக்கிய  இலக்கியவாதியான ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளும், இறந்தநாளும் உள்ளது என்று தெரியுமா? ஆம், ஆங்கில  நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர்  1564ஆம் ஆண்டு இந்த தினத்தில்தான் இங்கிலந்தின் ஸ்ட்ராட்ஃபோட் ஆன் ஆவனில் (Stratoford-on-Avon)  பிறந்தார். 52 ஆண்டுகளே வாழ்ந்த இந்த நாடகாசிரியர் 1616ஆம் ஆண்டு இதே தினத்தில் மறைந்தார்.

 “ இந்த உலகமே ஒரு நாடக மேடை

நாம் எல்லோரும் அதன் நடிகர்கள்

ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு

ஒருவருக்கே பல வேடங்கள்  உண்டு”.

என்ற அந்த  நாடகாசிரியர், தன்னை ஒரு சிறந்த இலக்கியவாதியாக உலகம்  கொண்டாடும் என்று எண்ணிக் கூட பார்த்திருக்க மாட்டார். பழைய நாடகங்களை  மறுவடிவம் செய்து மக்கள் விரும்பும்படி அளிப்பவர், நடிகர், கவிஞர், நாடக மேலாளர், வசன கர்த்தா, ஆங்கில மொழிக்கு 3000 வார்த்தைகளுக்கு மேல் அளித்தவர்,  என்று பல்வேறு பரிமாணங்கள் ஷேக்ஸ்பியருக்கு உண்டு.  அவரது பல்வேறு மேற்கோள்கள் உலகின் பல மொழிகளில் உள்வாங்கப்பட்டு பழமொழிகளாக வழக்கில்  உள்ளன. அந்த மாமனிதன் பற்றி உலகப் புத்தக தினத்தன்று சற்று நினைவுகூர்வோம்.

ஷேக்ஸ்பியர் 24 ஆண்டுகள் (1588/1612) தீவிர இலக்கியவாதியாக செயல்பட்டார். இலக்கிய வடிவங்களிலேயே நாடகத்தை இயற்றுவதுதான் சிரமம் என்பார்கள் மேற்கத்திய இலக்கியவாதிகள். ஏனெனில் மற்ற இலக்கியங்களில் பூமியில் இருக்கும் ஒருவரை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல முடியும். ஆனால் நாடகத்தில், எல்லா செயல்களையும் சிந்தனைகளையும் மேடையில் நடித்துக்காட்டக் கூடிய வகையில் அமைக்க வேண்டும். அதன் வரவேற்பை மக்களிடம் நேரிடையாகக் காண வேண்டும். மக்கள்  ரசித்தால்தான் அந்த காலத்தின் வெற்றிகரமான படைப்பாக நாடகம் விளங்கும்.

11 things you didn't know about Shakespeare | Pictures | Pics ...

தனக்கு முன்பிருந்த நாடகக் கலையின் அம்சங்களில் பல்வேறு புரட்சிகளை புகுத்தியவர் ஷேக்ஸ்பியர். இவரது நாடகங்களை  இன்பியல் நாடகங்கள் (comedies), துன்பியல் நாடகங்கள் (Tragedies), வரலாற்று நாடகங்கள் (Histories) என்று மூன்று வகையாக வகைப்படுத்தினாலும்  இவற்றின் கலவையையும் அறிமுகப்படுத்தியர் ஷேக்ஸ்பியர். இன்பியலாக ஆரம்பித்து துன்பமான முடிவு கொள்ளும் நாடகங்கள் (Comic tragedies), துன்பியலாக ஆரம்பித்து இன்பமான முடிவு கொள்ளும் நாடகங்கள் (Tragi comedies) என்றும் பல்வேறு நாடக வடிவங்களை அறிமுகப்படுத்தினார் ஷேக்ஸ்பியர்.

இலக்கியம் என்பது காலத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. ஷேக்ஸ்பியர் இங்கிலாந்தில் மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்தவர். எலிசபெத் மகாராணியின் ஆட்சிக்காலம் ஆங்கில இலக்கியத்தின் பொற்காலம். இந்த காலத்தில்தான் இங்கிலாந்து கல்வியிலும் செல்வத்திலும் செழித்தோங்க தொடங்கியது. எலிசபெத் மகாராணியின்  ஆட்சியின் கீழ் செழுமை அதிகரிக்கத் தொடங்கியதால் மக்களுக்கு பொழுதுபோக்கிற்காக நேரம் கிடைத்தது.  இந்த நேரத்தை நாடகங்கள் பயன்படுத்திக்கொண்டன. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் மறுமலர்ச்சி கால இங்கிலாந்தின் வாழ்க்கையைப் பிரதிபலித்தன.

ஒவ்வொரு படைப்பாளியின் படைப்புக்களையும் அவரது  பல்வேறு காலங்களில் பரிணாம வளர்ச்சியின் மூலம் தொகுக்கலாம் என்பார்கள் மேற்கத்திய விமர்சகர்கள். ஒவ்வொரு காலத்திலும் இலக்கியவாதியின் படைப்பு சில குறிப்பிட்ட அம்சங்களை உள்ளடக்கியிருக்கும்.

 ஷேக்ஸ்பியரின் படைப்புக்கள் நான்கு காலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

 1. முதல் காலம் கி.பி. 1588லிருந்து கி.பி. 1594ஆம் ஆண்டு வரையிலானது. இந்தப் பகுதியில் வரலாற்று நாடகங்களுக்கு முன்னுரிமை கொடுத்தார் ஷேக்ஸ்பியர்.  அந்த காலத்தின் அரசியல் நுணுக்கங்களையும்  ஆட்சியாளர்களின் நெளிவு சுளிவுகளையும்  தன் வரலாற்று நாடகங்களில் அமைத்திருப்பார் ஷேக்ஸ்பியர். ஹென்றி VI, ரிச்சர்ட் III, ரிச்சர்ட் II, கிங் ஜான், ஆகிய நாடகங்கள் இந்த காலத்தின் போது படைக்கப்பட்டாலும் மற்ற வகை நாடகங்களையும் படைத்தார்.  காதல் காவியமான ரோமியோ ஜூலியட், காதல், இன்பம், துன்பம், சாதுர்யம் என்று அனைத்தும் கலந்த நாடகமான தி மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ், சிரிப்பு நாடகங்களான  லவ்ஸ் லேபர்ஸ் லாஸ்ட்,  காமெடி ஆஃப் எரர்ஸ், டூ ஜென்டில் மேன் ஆஃப் வெரோனா, எ மிட்சம்மர்  நைட்ஸ் ட்ரீம் ஆகிய நாடகங்களும் இக்காலத்தில் படைக்கப்பட்ட  முக்கிய நாடகங்கள்.

Romeo & Juliet : Original Edition (Limited Copies) eBook ...

 1. ஷேக்ஸ்பியரின் இரண்டாம் படைப்புக்காலம் கி.பி. 1594லிருந்து 1600 வரையிலானது. இந்த காலத்தில் அவரது படைப்புத்திறன் மேலும் செழித்தோங்கியது. இந்த காலத்தில் படைக்கப்பட்ட ஹென்றி IV. , ஹென்றி V. ஆகிய வரலாற்று  நாடகங்கள் முந்தைய நாடகங்ளை விட அருமையானவை. The Taming of the Shrew. The Merry wives of Windsor, Much Ado about nothing, As you Like it, Twelfth Night  ஆகிய சுவாரஸ்யமான நாடகங்கள் இந்த காலத்தில் படைக்கப்பட்டன.

  இந்த காலத்தில்தான் சானட்டுகள் எனப்படும் கவிதை வகையில் 154 கவிதைகளை ஷேக்ஸ்பியர் படைத்தார்.

சானட்டுகள் எனப்படும் கவிதை வடிவம் 14 வரிகளை மட்டுமே  கொண்டது. பொதுவான சானட்டுகளில்  ஆக்டேவ், செஸ்டட் என்று இரு பகுதிகள் இருக்கும்.  முதல் எட்டுவரிகளான ஆக்டேவ்வில் ஒரு கருத்தும் அடுத்த ஆறுவரிகளான செஸ்டட்டில் இந்த கருத்திற்கான தீர்வும் இருக்கும்.  இதிலும் ஷேக்ஸ்பியர் புதுமையை புகுத்தினார். ஷேக்ஸ்பியரின் சானட்டுகளில் முதல் 12 வரிகள் மூன்று பத்திகளாக பிரிக்கப்பட்டிருக்கும். இந்த கவிதையின் நீதி கடைசி இரண்டு வரிகளில் படைக்கப்பட்டிருக்கும்.

 ஷேக்ஸ்பியரின் சானட்டுகள்  இரண்டு கதாபாத்திரங்களையே கொண்டது. அவரது நெருங்கிய நண்பரான ஓர் இளைஞரையும், அவருக்கு காதல் தோல்வியை அளித்த ஒரு பெண்ணையும் சுற்றியே இவரது சானட்டுகள் படைக்கப்பட்டன.  ஆங்கில மொழியின் ஈடுஇணையற்ற காதல் கவிதைகளாக இந்த சானட்டுகள் கருதப்படுகின்றன.

 1. ஷேக்ஸ்பியரின் மூன்றாம் படைப்புக்காலம் (1600-08) துன்பியல் நாடகங்களின் உச்சத்தைத் தொட்டது. காலத்தால் அழியாத காவியங்களான ஜூலியஸ் சீசர், ஹேம்லெட், ஒதெல்லோ, கிங் லியர், மேக்பெத்  ஆகிய உணர்ச்சி பூர்வமான  நாடகங்கள் இந்தக் காலத்தில் படைக்கப்பட்டன.
The Murder of Julius Caesar – Ancient History Encyclopedia
 1. ஷேக்ஸ்பியரின் நான்காம் படைப்புக்காலம் (1600-08) அவர் ஓய்வெடுக்கப் போகிறார் என்பதைச் சுட்டிக்காட்டியது. மனிதனின் கடைசி காலத்தில்தான் இயற்கையை மீறிய சக்திகள் மேல் நாட்டம் பிறக்கும் என்று உணர்த்துபவை இந்தக் காலத்து நாடகங்கள். Antony and Cleopatra, The Tempest  ஆகிய அற்புதமான நாடகங்களை இக்காலத்தில் படைத்தார் ஷேக்ஸ்பியர்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அவரது காலத்தின் வாழ்க்கையை தெள்ளத்தெளிவாக பிரதிபலித்தாலும் காலத்தால் வெல்ல முடியாததாக உள்ளது. ஷேக்ஸ்பியர் ஆங்கில இலக்கியத்தின் பொற்காலமாக எலிசபெத் மகாராணியின் காலத்தில் வளர்ந்த இலக்கியவாதியாக இருந்தாலும், அவரது இலக்கியங்களால் அவர் எக்காலத்திற்கும் உரியவராகிறார்.

16ஆம் நூற்றாண்டு காலத்திலேயே பெண்களை புத்தி சாதுர்யம் உடையவர்களாகவும்  தைரியமானவர்களாகவும், சுயசிந்தனையும் சுதந்திரமாக முடிவெடுக்கும் திறன் உள்ளவர்களாகவும், துடிப்பான சுபாவம், கருணை உடையவர்களாகவும் படைத்திருந்தார் ஷேக்ஸ்பியர். போர்ஷியா, ரோஸலிண்ட், பீட்ரிஸ், க்ளியோபட்ரா, ஜூலியட் என்று மகத்துவமான ஆளுமைகளை ஷேக்ஸ்பியரின் பெண் கதாநாயகிகள் இருப்பார்கள்.

Evolutionary Psychology in the Humanities: Shakespeare’s Othello …

ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்களில் கதாநாயகிகள் மட்டும்தான் உண்டு, கதாநாயகர்கள் கிடையாது என்பார் கட்டுரையாளர் ரஸ்கின். ஆனால் ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில்  கதாநாயகர்கள் மிகவும் வலுவான ஆளுமையாகவும் கதாநாயகிகள் அப்பாவியாகவும் இருப்பார்கள்.  ஹேம்லெட், கிங் லியர், மேக்பெத், ஜூலியஸ் சீசர் ஆகியவை ஷேக்ஸ்பியரின் மகத்துவமான துன்பியல் நாடகங்கள். இவற்றின் ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும், அந்த பலவீனத்தினால் அவனுக்கு அழிவு ஏற்படும். ஒஃபீலியா, கார்டிலியோ போன்ற பெண் கதாபாத்திரங்கள் மிகவும் அப்பாவித்தனமான சுபாவமும், எளிதில் உடையக்கூடிய மனமும் கொண்டவர்களாகவும் படைக்கப்பட்டிருப்பார்கள்.

எங்கெல்லாம் பெண்கள் அறிவாளியாக, சுதந்திரமான ஆளுமைகளாக உள்ளார்களோ அங்கெல்லாம் வாழ்க்கை இன்பியல் நாடகம் போல் இனிமையாக இருக்கும். ஆண்கள் வலுவாக ஆதிக்கம் செலுத்துவது பலவீனம், அது துன்ப முடிவினையே அளிக்கும் என்று ஷேக்ஸ்பியர் மறைமுகமாக சொல்லியிருக்கிறார் என்று விமர்சிப்போரும் உண்டு.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல, காதலுக்கு கண் இல்லை,  ஆள் பாதி ஆடை பாதி,  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு,  பொன்னான மனம்,  போன்ற சொற்றொடர்கள்  ஷேக்ஸ்பியரின் வசனங்களிலிருந்து பெறப்பட்டவை.

BBC Radio 3 – Drama on 3, Antony and Cleopatra

 “சிலர் பிறக்கும்போதே மகத்துவத்துடன் பிறக்கிறார்கள், சிலர் தங்கள் செயல்களால் மகத்துவம் அடைகிறார்கள், சிலர் மீது மகத்துவம் திணக்கப்படுகிறது” என்றார்      ஷேக்ஸ்பியர்.    இலக்கியவாதிகள் தங்கள் செயல்களால் மகத்துவம் அடைபவர்கள்.

காதல், அன்பு, பாசம், வெறுப்பு, நம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, சகிப்புத்தன்மை, இராஜதந்திரம், சதிச்செயல்கள், விளையாட்டு, மனித மனத்தின் இதமான உணர்வுகள், குரூரமான எண்ணங்களினால் ஏற்படும் விளைவுகள் என்று உணர்ச்சிக் கலவையை ஷேக்ஸ்பியர் தன் படைப்புக்களில் வழங்கியுள்ளார்.

ஷேக்ஸ்பியரின் டெம்பெஸ்ட் என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமான ப்ராஸ்பரோ ஒரு புத்தகப்புழு.  மன்னரான ப்ராஸ்பரோவை சதி செய்து முடிதுறக்க வைத்து நாடு கடத்துவார்கள் வஞ்சகர்கள். அப்போது ப்ராஸ்பரோ தன்னுடைய கைக்குழுந்தையுடன் பல  புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு தீவிற்கு படகில் செல்வார். சில வருடங்கள் கழித்து தன் இராஜ்ஜியத்தை மீட்பார். அந்த அளவிற்கு புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளித்தவர் ஷேக்ஸ்பியர்.

வின் ...
எகிப்தின் பேரழகி கிளியோபட்ரா

“என்னையா ஏழை என்று கூறுகிறாய்?

என்னிடமுள்ள நூல்கள் இராஜ்யத்திலும் உயர்ந்தன அல்லவோ”

“என்னிடமுள்ள நூல்கள் எனக்கு  இராஜ்யத்திலும் பெரியதாகும்”

என்று புத்தகங்களுக்கு இராஜ்யத்தை விட அதிக முன்னுரிமை கொடுத்ததினால்தான் இலக்கிய சிம்மாசனத்தில் எந்தக் காலத்திலும் எவராலும் அசைக்கமுடியாத, அழிக்க முடியாத ஆளுமையாக  ஷேக்ஸ்பியர் உள்ளார்.  புத்தக தினத்தன்று கொண்டாடப்பட வேண்டிய படைப்பாளி ஷேக்ஸ்பியர்.

 அந்த மேதையின் மேதமையை பற்றிக்கூற வேண்டுமென்றால் ஒரு கட்டுரை போதாது.  மனித சமூகத்தின் மகத்தான படைப்பாளியாக உலகைக் கலக்கிய, கலக்கிக் கொண்டிருக்கும் படைப்பாளியாக அன்றும், இன்றும்,

 என்றும், என்றென்றும்  நிலைத்திருக்கிறார் ஷேக்ஸ்பியர்.

Show 1 Comment

1 Comment

 1. Rosetta

  Great post. I was checking constantly this blog and
  I’m inspired! Very useful information specifically the ultimate section 🙂 I care for such info a lot.
  I was looking for this certain information for a long time.
  Thanks and best of luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *