Shakespeare in Lockdown!!!
     A question may pop up! What!
     Covid-19 hasn’t spared even
     Shakespeare????
1564-ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் என்ற  நகரத்தில், ஒரு இளம் கணவன், மனைவி தங்களுடைய இரண்டு குழந்தைகளையும் ” பியூ போனிக் பிளேக்” கொள்ளை நோயில் பறி கொடுத்தனர். பின்னர், தங்களுடைய மூன்று மாத குழந்தையைக் காப்பாற்ற வேண்டி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
( Self-quarantine). அந்த மூன்று மாத குழந்தைதான் வில் என்று அழைக்கப்பட்டு வந்த  வில்லியம் ஷேக்ஸ்பியர். லண்டன் மாநகரத்தில் ஒரு முறை மட்டுமல்ல, தொடர்ச்சியாக 1518 – 19, 1563, 1582, 1592-93 , 1603 என்று கிட்டத்தட்ட 6 முறை ப்ளேக் நோயால் மக்கள் அடைந்த துயரம் கொஞ்ச நஞ்சமல்ல.  பெரியம்மை, காசநோய், டைபாய்ட் போன்ற நோய்களும் பெருகியிருந்த இச்சமயத்தில் தான் இந்த கொள்ளை நோய் பெரிதாக உருெவடுத்து ஷேக்ஸ்பியரின் பல நண்பர்களையும் , உறவினர்களையும், அவருடைய மூன்று சகோதரிகளையும் பலி வாங்கியது. உச்சக் கட்டமாக அவருடைய அன்பு மகன் ஹாம்னெட்- ஐயும் ப்ளேக்கிற்கு ஷேக்ஸ்பியர் பறி கொடுத்தார்.
இப்பொழுது கொரோனாவிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தனிமைப் படுத்திக் கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ, 15, 16 நூற்றாண்டுகளிலும் ப்ளேக் நோயிலிருந்து விடுபட மக்களை தனிமைப்படுத்திக் கொள்ள பல முயற்சிகளும், ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில் ப்ளேக் நோயின் தாக்கம் அவ்வளவு எளிதாக கடந்து செல்லக் கூடிய ஒன்று அல்ல.
The Black Death – Historic UK
எலிகள் மூலம் பரவி ஐரோப்பாவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த கருப்புக் கொள்ளை நோய் மரணம் (Black Death )என்று அழைக்கப்பட்ட ப்ளேக் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் சொல்லி மாளாது. அது இன்றைய கொரோனாவின் தாக்கத்தைப் போன்று பன்மடங்காயிருந்தது. துரிதமான நாடித்துடிப்பு, மூச்சுத் திணறல், கடுமையான கால், முதுகு வலி, நடப்பதற்கே இயலாமை, மன அழுத்தத்தினால் உண்ட பாதிப்புகள் , பேசுவதற்கே சிரமப்படுதல் போன்ற நிறைய உடல் உபாதைகளால் மக்கள் பெருமளவு சிரமப்பட்டனர். இவை அனைத்திற்கும் மேலாக உடலிலுள்ள கழுத்து போன்ற பகுதிகளில் உள்ள நாளங்களில் சிகப்பு, வெள்ளை நிறத்திலான கட்டிகள் உண்டாயின. அவை நாளடைவில் பெரிதாகி, உடைந்து பொறுக்க முடியாத வலி ஏற்பட்டதைத் தாங்காமல் பலர் தற்கொலையும் செய்து கொண்டனர். ஷேக்ஸ்பியர் ப்ளேக் நோயினால் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை எனினும், கிட்டத்தட்ட அவரது வாழ்நாள் முழுவதும் ப்ளேக் நோயின் அச்சுறுத்தலினூடேதான் வாழ்ந்திருக்கிறார்.
plague during Shakespeare’s times | Screen Rant
தனிமைப்படுத்திக் கொள்ளலின் அவசியம் அரசினால் பல வழிகளிலும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டேயிருந்தன.ஷேக்ஸ்பியர் வீட்டின் எதிரில் இருந்த தேவாலயத்தின் மணி இறுதிச் சடங்கை அறிவிக்கும் விதமாக விடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. இன்று நாம் அனுபவிக்கும் பொருளாதார நெருக்கடியும், வர்த்தகப் பாதிப்பும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் ஷேக்ஸ்பியரின் காலத்திலும் மேலோங்கியிருந்தன.  நாடக அரங்குகள் மூடப்பட்டதால் மக்களின் ஒரே பொழுதுபோக்கு அம்சமான நாடகங்களை நடத்த இயலாமல் போய்விட்டது. 1592-ம் ஆண்டில் தான் ஷேக்ஸ்பியர் ஒரு வெற்றிகரமான நாடகாசிரியராகவும், நடிகராகவும் உருவாகத் தொடங்கியிருந்தார். இரண்டு நாடகக் கம்பெனிகளின் பங்குதாரராகவும் இருந்தார்.
ஷேக்ஸ்பியரின் குளோப் தியேட்டர் போன்ற நாடக அரங்குகள் உள்பட, மக்கள் கூடுமிடங்களான அனைத்து அரங்கங்களும் 1603 லிருந்து 1613 வரை நடுவில் சில மாதங்கள் நாடகங்கள் நடைபெற்ற போதிலும், கிட்டத்தட்ட 78 மாதங்களாக மூடிக் கிடந்தன. நாடகக் கலைஞர்கள் பிழைப்பிற்காக வேறு வேலைகளைத் தேடிப் போயினர். பசியும், பட்டினியும் , மக்களை வாட்டி வதைத்தது.நாடகத் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை மேற்கொண்டு எழுத முடியாத நிலை ஏற்பட்ட பொழுதுதான் வாழ்க்கையை நடத்தப் பொருளாதார தேவையை ஒட்டி கவிதைகள் (Poetry) பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.
King Lear | Mental Floss
இக்காலக்கட்டத்தில் தான் கிங் லியர், ரோமியோ ஜூலியட், மேக்பத் போன்ற மாபெரும் சோகக் காவியங்களை எழுதினார். ப்ளேக் நோயினால் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் சிக்கல்களை மனதில் வைத்தே கிங் லியர்,  மேக்பத், ஹேம்லட் போன்ற தலைமைக் கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. ஆயினும் நாடக அரங்கங்கள் மூடப்பட்டதால் இந் நாடகங்களை மேடையேற்ற முடியாததால் தான் ஷேக்ஸ்பியர் ” வீனஸ் அண்ட் அடோனிஸ்”  ” தி ரேப் ஆஃப் லூக் ரெஸ்” என்ற இரு பெரும் நீள் கவிதைகளை  ( narrative poems) எழுதினார்.
“வீனஸ் அண்ட் அடோனில்” என்ற கவிதையின் நாயகனாக பெரிய நிலப்பிரபுவான ஏர்ல் ஆஃப் சவுத் தாம்டன்  என்ற இளைஞனை மையப்படுத்தி எழுதினார். இக்காலத்தில்தான், நூற்றி ஐம்பத்தி நான்கு எண்ணிக்கை கொண்ட சானட்ஸ் எனப்படும் பதினான்கு வரிக் கவிதைகளை எழுதினார். இவற்றின் சிலவற்றில்தான்அவரைத் தன் புரவலராக்கிப் புகழ்ந்து எழுதினார்.தன்னுடைய  பொருளாதாரத் தேவைகளை இப்படியெல்லாம் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலையை அந்த ப்ளேக்நோய் ஷேக்ஸ்பியருக்கு உருவாக்கியது.
Romeo and Juliet | EW.com
அதனால் தான் பிளேக் நோயைப் பற்றியக் குறிப்புகள் அவரது கதாப்பாத்திரங்களின் வசனங்களின் மூலமாக வெளிப்பட்டன. ரோமியோ ஜுலியட் என்ற நாடகத்தில் ஒரு கதாபாத்திரம் தன்னுடைய வெறுப்பை இன்னொருவர் மேல் கொட்டும் பொழுது ” எ ப்ளேக் ஆன் யுவர் போத் ஹவுசஸ்( A PLAGUE on your both houses) என்ற வரி பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
கிங் லியர் என்ற தனது சோக காவியத்தில் ஷேக்ஸ்பியர் படைத்த கென்ட் என்ற கதாபாத்திரம் தன்னுடைய வேலையாள் தவறு செய்யும் பொழுது  எ ப்ளேக் அபான் யுவர் எபிலெப்டிக் விசேஜஸ் ( A PLAGUE upon your epileptic visages ) என்று கூறுவதாக எழுதியிருப்பார். இன்னும் பல நாடகங்களில் ப்ளேக் காற்றினால் பரவக்கூடிய நோய் என்பது போன்ற வசனங்களை எழுதியுள்ளார்.
இவ்வளவு கடுமையான சோதனைகளையும், வலிகளையும் அனுபவித்தும் ஷேக்ஸ்பியர் மனமொடிந்து போகாமல், நாடகங்கள் நடத்த முடியாமல் போனாலும், பொயட்ரி என அழைக்கப்பட்ட கவிதைகள் பக்கம் தன் கவனத்தை நிலை நிறுத்திக் கொண்டதால்தான் ஆன்டனி அண்ட் கிளியோபாட்ரா எமிட் சம்மர்ஸ் நைட் ட்ரீம் , ரிச்சர்ட் தி செகண்ட், மேக்பத் போன்ற அரும் பெரும் நாடகங்கள் நமக்குக் கிடைத்தன.ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி என்ன?
shakespeare-globe-theatre-| Octane Seating
கோவிட் – 19   பல சவால்களைத் உருவாக்கியிருக்கிறது. சரியான திட்டமிடுதல் இல்லாமல், திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பல ஏழை , எளிய மக்கள் சொல்லொணாத் துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். மருத்துவ வசதிகளும், அறிவியல் பரிசோதனைகளும் அருகியிருந்த வேுக்ஸ்பியரின்  காலத்திலேயே, அவரும் மக்களும் மீண்டெழுந்த போது, மருத்துவத் துறையிலும், அறிவியல் துறையிலும் பன்மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளகுழலில் எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில்,நாம் நிச்சயமாக மீண்டு விட முடியும். நம் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட்டு,  மனதளவிலும், உடலளவிலும் நம்மை நிச்சயமாகத் தயார் படுத்திக் கொள்ள முடியும். சிக்கலில் தவித்து துன்பத்தில் உழலும் மக்களுக்கும் உதவ முடியும்.
தொடர்புக்கு: [email protected]
கட்டுரையாளர்;ஆங்கில மொழிப் பயிற்றுநர்.
One thought on “ஊரடங்கு காலத்தில் ஷேக்ஸ்பியர் – இரா.சசிகலா”
  1. காலத்தின் காயங்களுக்கு மருந்திடாவிட்டாலும் கவலைகளை எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் கொள்ளவைக்கிறது உங்கள் கட்டுரை… நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *