உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் | Shakespeare's World Famous Romeo and Juliet Play Act 3 - Scene 2 in Translated Tamil | www.bookday.in

உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் (Romeo and Juliet) நாடக காட்சி 2 (Act III, Scene II) – தமிழில்: தங்கேஸ்

ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet)

களம்  3, காட்சி 2 (Act III, Scene II)

 

பாத்திரங்கள் ஜூலியட், செவிலி

(ஜூலியட் புது மணப் பெண் , செவிலிக்காக காத்திருக்கிறாள். ஆனால் செவிலி கெட்ட செய்தியோடு வருகிறாள். )

ஜூலியட்

வேகமாய் விரையுங்கள்,
தீப்பிழம்பு போன்ற பாதங்களையுடைய குதிரைகளே !
சூரியக் கடவுளான ஃபீபஸின் இருப்பிடத்தை நோக்கிச் இக்கணமே செல்லுங்கள் .

ஃபீட்டன் போன்ற ஒரு தேரோட்டி உங்களை எவ்வளவு விரைவாக அடித்து ஓட்டியிருந்தால்,
நீங்கள் அதற்குள் சூரியனை மேற்கே கொண்டு வந்து சேர்த்திருப்பீர்கள் !
மேகங்கள் சூழ்ந்த இரவை இக்கணமே இங்கே வரவழைத்திருப்பீர்கள். ! காதலுக்குத் துணை நிற்கும் இரவே !
உன் அடர்ந்த திரையை விரிப்பாயாக,
தலைமறைவாக ஓடிக் கொண்டிருப்பவர்களின் கண்கள் தானாக மூடிக்கொள்ளட்டும் ;
அப்படி நடந்தால் தான் ரோமியோவோ ,
எந்தக் கண்களிலும் படாமல் பாய்ந்து வந்து
என் கரங்களுக்குள் அடைக்கலமாவான் .

காதலுக்கு கண்ணில்லை என்றால் தான் என்ன ?
காதலர்கள் தங்கள் ’ அந்த ’ அந்தரங்க காதல் சடங்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு , அவர்களின் சொந்த அழகின் ஒளியே போதுமானது ;
கரிய இரவோடுதான் காதல் மிகச் சிறப்பாகப் பொருந்தும்.

வா, என் கண்ணியமான இரவே !
கருமை நிற ஆடை அணிந்த , அடக்கமான கன்னிப் பெண்ணே வா !
களங்கமற்ற கன்னியும் , கட்டழகனும் ஆடும் ஒரு இளமைப் போட்டியில் ,
எப்படித் தோற்றுப் போவது என்பதை நீ எனக்குக் கற்றுக்கொடு.
என் கன்னங்களில் முட்டுகின்றது கட்டவிழ்த்து விlடப்பட்ட இளமையின் இரத்த ஓட்டம்
அடடா குப்பெனச் சிவந்திருப்பதா நாணம் ?
என் இனிய இரவே !

அடக்கப்படா உணர்வுகளையெல்லாம் ,
உன் கருமை என்ற போர்வையால் மூடி மறைப்பாயாக ;
அப்போதுதான் , சற்றேனும் துணிவு கொள்ளும் என் காதல்,
உண்மையான காதலின் இயல்பு நாணமே என்று பிறர் எண்ணுவர்.

வா, இரவே !
வா, ரோமியோ !
இரவுக்குள் ஒளிரும் என் பகலே வா !
ஏனெனில் நீ இரவின் சிறகுகளின் மீது படுத்திருப்பாய் ;
அது, ஒரு காகத்தின் முதுகில் விழுந்த புதுப் பனியை விடவும் வெண்மையானது.

வா, மென்மையான இரவே ! வா, அன்பான, கருமைப் புருவங்களையுடைய இரவே !
என் ரோமியோவை என்னிடமே ஒப்படைப்பாயாக . நான் இறக்கும் தருவாயில்,
அவனை எடுத்து , சிறு சிறு நட்சத்திரங்களாக வெட்டிப் பரப்பிவிடு;
அப்போது அவன் விண்ணின் முகத்தை எத்துணை அழகாக ஒளிரச் செய்வான் தெரியுமா ?
உலகமே இரவின் மீது காதல் கொள்ளும்;
மேலும் அந்தப் பகட்டான சூரியனை யாரும் வணங்க மாட்டார்கள்.

ஓ! நான் காதலின் மாளிகையை விலைக்கு வாங்கிவிட்டேன்,
ஆனால் இன்னும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளவில்லை; நானும் ரோமியோவுக்கு உரியவளாகிவிட்டேன் ,
ஆனால் அவன் இன்னும் என்னை அள்ளி எடுத்து முழுமையாக தனதாக்கி கொள்ளவில்லை
ஒரு திருவிழாவிற்கு முந்தைய இரவைப் போல்; இந்த நாள் நகர்வேனா என்று அடம் பிடிக்கிறது .,
புதிய ஆடைகளைப் பெற்றிருந்தும், அவற்றை அணிய முடியாமல் தவிக்கும் ஒரு பொறுமையற்ற குழந்தைக்கு திருவிழாவிற்கு முந்தைய இரவு எத்தனை கொடியதோ , அத்தனை கொடியதாகவும் சலிப்பூட்டுவதாகவும் இருக்கிறது இந்த நீண்ட நெடிய இரவு எனக்கு
(அப்போது செவிலி கயிற்று ஏணியைச் சுமந்துகொண்டு நுழைகிறாள். )

ஓ, இதோ என் செவிலி வருகிறாள் செய்தியோடு,
இங்கே பேசும் ஒவ்வொரு நாவும்,
ரோமியோவின் பெயரைத்தான் பேரன்புடன் உச்சரிக்கின்றன
இப்போது, செவிலியே , என்ன செய்தி ? கையில் என்ன கொண்டு வந்திருக்கிறாய்?
ரோமியோ உன்னைக் கொண்டுவரச் சொன்ன கயிற்று ஏணியையா ?

(ஜூலியட் தனியாக உள்ளே வருகிறாள். )

No photo description available.

செவிலி

ஆம், ஆம், அந்த ஏணி.

ஜூலியட் ( பதறிப் போய் )

ஐயோ, என்ன செய்தி ? ஏன் உன் கைகளை இப்படிப் பிசைந்துகொள்கிறாய்?

செவிலி

ஆ, என்ன மோசமான துயரம் ! அவன் இறந்துவிட்டான், அவன் இறந்துவிட்டான், அவன் இறந்துவிட்டான் !
நாம் அழிந்துவிட்டோம், அம்மா, நாம் அழிந்துவிட்டோம் !

இந்த நாள் சபிப்பிற்குரியது ! அவன் போய்விட்டான், அவன் கொல்லப்பட்டுவிட்டான், அவன் இறந்துவிட்டான்!

ஜூலியட்

கடவுள் இவ்வளவு கொடுமையானவராக இருக்க முடியுமா?

செவிலி

கடவுளால் முடியாது ஆனால் ரோமியோவால் முடியும்,
இதை யார்தான் கற்பனை செய்திருக்க முடியும் ? ரோமியோ!

ஜூலியட்

என்னை இந்த விதமாகத் துன்புறுத்தும் நீ எத்தகைய பிசாசு? இத்தகைய சித்திரவதை நரகத்திற்கு மட்டுமே உரியது. ரோமியோ தன்னைத்தானே மாய்த்துக்கொண்டானா?
“ஆம்” என்று சொல்;
அந்த ஒற்றை வார்த்தை, ‘காகட்ரைஸ்’ பாம்பின் மரணப் பார்வையை விடக் கொடூரமாய் எனக்கு விஷமூட்டிவிடும்.

ரோமியோ தன்னைத்தானே மாய்த்துக்கொண்டான் என்று நீ கூறினால்,
நான் இனி நானாகவே இருக்கமாட்டேன். நீ ஒற்றை வார்த்தையில் பதில் சொல்
அவன் இறந்துவிட்டிருந்தால், “ஆம்” என்று சொல். இல்லையென்றால், “ இல்லை ” என்று மட்டும் சொல். அந்தச் சிறிய வார்த்தைகளே எனது மகிழ்ச்சியையோ வேதனையையோ தீர்மானிக்கட்டும்.

செவிலியர்

நான் அந்தக் காயத்தைப் பார்த்தேன், அதை என் கண்களால் பார்த்தேன்—
கடவுளே, என்ன ஒரு கோரக் காட்சி !
அவனது ஆண்மையுள்ள மார்பில். !
ஒரு பரிதாபமான சடலம், இரத்தம் தோய்ந்த ஒரு பரிதாபமான சடலம்.

வெளிறி, சாம்பலைப் போல வெளிறி, முழுவதும் இரத்தத்தில் நனைந்து,
முழுவதும் இரத்தக் கறை படிந்து. அய்யோ அந்தக் காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்தேன்.

ஜூலியட்

ஆ , என் நொடித்துப்போன இதயம் நொறுங்கிப் போகிறதே! என் கண்களே , நீங்கள் சிறைபுகுவீராக; இனி ஒருபோதும் இவ்வுலகை நோக்குவதற்கு உங்களுக்குச் சுதந்திரம் கிடைக்காதிருக்கட்டும்.

அசைவற்று கிடக்கும் என் உடல் அப்படியே கிடக்கட்டும்
அனைத்தும் முடிந்தது என் உடலை புதைக்கப் போகிறேன் , ரோமியோவுடன் ஒரே சவப்பெட்டியில்.

செவிலி

ஓ டைபால்ட், டைபால்ட்! எனக்குக் கிடைத்ததிலேயே மிகச் சிறந்த நண்பனே! ஓ, நற்பண்பும் கண்ணியமும் மிக்க டைபால்டே! அடக் கடவுளே அவன் இறப்பதை நேரில் காணுமளவுக்கு நான் உயிரோடு இருந்திருக்காவிட்டால் எத்துணை நன்றாக இருந்திருக்கும் !

ஜூலியட்

இத்தனை விதமான பேரழிவுகளை விளைவிக்கும் இந்தப் புயல் எத்தகையது ?
ரோமியோ கொல்லப்பட்டுவிட்டானா?

அவனுடன் டைபால்ட்டும் கொல்லப்பட்டுவிட்டானா?

என் உயிரினும் இனிய உறவான டைபால்ட் ஒரு புறம் ; என் இன்னுயிர் கணவன் , பேரன்புக்குரியவனான ரோமியோ இன்னொரு புறம் — இவர்கள் இருவருமே மாண்டு விட்டனரா? அப்படியென்றால், உலக அழிவின் தொடக்கத்தை அறிவிக்கும் அந்த இறுதிப் பெருமுழக்கம் இப்போதே ஒலிக்கட்டும் ! ஏனெனில், அவ்விருவருமே மறைந்துவிட்ட நிலையில், வேறு யார் தான் இங்கே உயிரோடு இருக்க முடியும்?

செவிலி

டைபால்ட் இறந்துவிட்டான் . ரோமியோ நாடு கடத்தப்பட்டுவிட்டான். டைபால்ட்டைக் கொன்றது ரோமியோதான் ; அதனால்தான் அவன் நாடு கடத்தப்பட்டான்.

ஜூலியட்

ஓ கடவுளே! ரோமியோவின் கரங்கள் தான் டைபால்ட்டை இரத்தம் சிந்தச் செய்தனவா ?

செவிலி

ஆம், அதுதான் நடந்தது ; அதுவே நடந்தது. துரதிர்ஷ்டவசமாக அது அப்படியே நடந்தது.

ஜூலியட்

ஓ, அழகான முகத்திற்குப் பின்னால் தான் ஒரு துரோகியின் இதயம் மறைந்திருக்கிறது ! இவ்வளவு அழகான குகையில் எந்த டிராகனாவது கூடு கட்டியிருக்குமோ ?
அவன் ஒரு அழகான கொடுங்கோலன் !

ஒரு கொடூரமான தேவதை !

புறாவின் இறகுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு அண்டங்காக்கை !

ஓநாய் போல கொல்லும் ஒரு ஆட்டுக்குட்டி!

அழகான தோற்றத்தால் மறைக்கப்பட்ட ஒரு வெறுக்கத்தக்க உண்மை.
அவன் தோன்றத்திதற்கு நேர் எதிர் தான் அவன்.

அவன் ஒரு புனிதனைப் போலத் தோன்றினான், ஆனால் சபிக்கப்பட்டிருந்தவானாக இருந்திருக்கிறான் ! அவன் மரியாதைக்குரியவனாகத் தோன்றிய ஒரு வில்லன் !
ஓ இயற்கையே , சொர்க்கத்தில் இவ்வளவு பரிபூரணமான ஒரு மனிதனின் உடலில் ஒரு பிசாசின் ஆன்மாவை வைத்தபோது , நீ நரகத்தில் என்ன செய்து கொண்டிருந்தாய் ?

இவ்வளவு மோசமான உள்ளடக்கங்களைக் கொண்ட எந்த புத்தகத்திற்காவது இதைவிட அழகான அட்டைப் படம் இருந்திருக்கிறதா ?
ஓ, இவ்வளவு அழகான உடலில் இத்தகைய துரோகம் எப்படி மறைந்திருக்க முடியும்?

செவிலி

ஆண்களிடத்தில் உண்மையே இல்லை;
நம்பிக்கையோ, நேர்மையோ அறவே இல்லை. அவர்கள் அனைவரும் பொய் சாட்சியாளர்கள் ;
அனைவரும் தங்கள் உறுதிமொழிகளை மீறியவர்கள் தான் ; அனைவரும் பயனற்றவர்கள்;
அனைவரும் வஞ்சகர்கள்.

ஆ, என் பணியாளன் எங்கே போனான் ? — எனக்குச் சிறிது உயிரூட்டும் பானத்தை
( ‘அக்வா விட்டேஎன்ற மது ) உடனே கொடு. —
இந்தத் துயரங்கள், இந்தத் துன்பங்கள், இந்தச் சோகங்கள் என்னை முதுமையடையச் செய்கின்றன.
ரோமியோவுக்கு அவமானம் உண்டாகட்டும் !

ஜூலியட்

ரோமியோவின் மீது அத்தகையதொரு விருப்பத்தை வெளியிட்ட உன் நாவில் கொப்புளங்கள் எழட்டும் ! இழிவு என்பதற்கும் ரோமியோவிற்கும் எவ்விதத் தொடர்பும் இருக்க முடியாது. அவமானம் என்பது அவனை ஒருபோதும் நெருங்காது; ஏனெனில் , அளப்பரியதும் முழுமையானதுமான பெருமையை மட்டுமே அனுபவிக்கப் பிறந்தவன் அவன். ஐயோ ! அவனை இழித்துரைத்த நான் எத்துணை மோசமான ஒரு மிருகம் !

செவிலியர்

உன்னுடைய உறவினனைக் கொன்ற ஒரு மனிதனைப் பற்றியா நீ இவ்வளவு உயர்வாக பேசுகிறாய் ?

ஜூலியட்

என் சொந்தக் கணவனையே நான் இழிவாகப் பேசலாமா ? ஆ , என் பரிதாபத்திற்குரிய கணவனே ! உன்னை மணந்து மூன்று மணி நேரமே ஆன நான், உன்னை இவ்வளவு கொடிய சொற்களால் ஏசிக் கொண்டிருக்கும்போது , ​​வேறு யார் தான் உன்னைப் பற்றி நல்லவிதமாகப் பேசுவார்கள் ? ஆனால் ஏன், ஓ கொடியவனே , நீ ஏன் என் உறவுமுறைச் சகோதரனைக் கொன்றாய் ? இல்லையென்றால், அந்தத் துஷ்டனான என் சகோதரன் உன்னைக் கொன்றிருப்பான் இல்லையா ? ,
என் கணவனே ! நான் அழுவதை மறுக்கிறேன். டைபால்ட்டின் மரணத்திற்காகப் பெருந்துயரம் கொள்வது போலத் தோன்றும் இந்தக் கண்ணீர், உண்மையில் ரோமியோ இன்னும் உயிரோடு இருக்கிறான் என்பதற்கான ஆனந்தக் கண்ணீரே ஆகும்.

டைபால்ட்டால் கொல்லப்பட்டிருக்கக்கூடிய என் கணவன், உயிரோடு இருக்கிறான். என் கணவனைக் கொல்லத் துடித்த டைபால்ட், இறந்துவிட்டான். இது ஒரு நற்செய்தியே.

அப்படியிருக்க, நான் ஏன் அழுது கொண்டிருக்கிறேன்? ஏனெனில், டைபால்ட்டின் மரணத்தை விடவும் மிக மோசமான ஒரு செய்தி எனக்குக் கிடைத்ததுள்ளது.
என் உள்ளத்தையே கொன்றுவிடும் அளவிற்கான ஒரு மோசமான செய்தி அது. அதை நான் மறந்துவிட விரும்புகிறேன்; ஆனால், குற்ற உணர்வு கொண்ட மனதைச் செய்த பாவங்கள் விடாமல் ஆட்டிப்படைப்பது போலவே,
அந்தச் செய்தியும் என் நினைவில் வலுக்கட்டாயமாகப் புகுந்து என்னைக் கொல்கிறது .

Act 3, Scene 2 of Romeo and Juliet | Summary & Analysis Video

“டைபால்ட் இறந்துவிட்டான்; ரோமியோ நாடு கடத்தப்பட்டுவிட்டான்.” அந்த ‘நாடு கடத்தப்பட்டான்’ என்ற சொல்—அந்த ஒற்றைச் சொல்—பத்தாயிரம் டைபால்ட்களின் மரணத்தை விடவும் மிகக் கொடியது.

வேறு எதுவும் நிகழாமல் இருந்திருந்தால் கூட, டைபால்ட்டின் மரணம் மட்டுமே எனக்குப் போதுமான துயரத்தை அளித்திருக்கும்.

அல்லது, துயரத்திற்குத் துணை தேவை என்றால்—ஒரு துயரம் முடிந்ததும் அடுத்த துயரம் கட்டாயம் வரவேண்டும் என்றிருந்தால்—டைபால்ட் இறந்துவிட்டான் என்று சொன்ன கையோடு, என் தாயோ, தந்தையோ, அல்லது அவர்கள் இருவருமே இறந்துவிட்டார்கள் என்று அந்தத் தாதி என்னிடம் சொல்லியிருக்கலாம். அது என்னை இயல்பான துயர உணர்வுகளுக்குள் தள்ளியிருக்கும்.

ஆனால், டைபால்ட் இறந்துவிட்டான் என்று சொல்லிவிட்டு, உடனே “ரோமியோ நாடு கடத்தப்பட்டுவிட்டான்” என்று சொல்வது… அப்படிச் சொல்வது என்பது—என் தந்தை, என் தாய், டைபால்ட், ரோமியோ மற்றும் ஜூலியட் ஆகிய நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டோம், அனைவரும் மொத்தமாக இறந்துவிட்டோம் என்று சொல்வதற்குச் சமமாகும்.

“ரோமியோ நாடு கடத்தப்பட்டுவிட்டான்.” அந்த நான்கு சொற்களுக்குள் அடங்கியிருக்கும் மரணத்தின் வீரியம் முடிவற்றது; அளவிட முடியாதது.
அந்தத் துயரத்தை விவரிக்க எந்தச் சொற்களாலும் இயலாது. என் தந்தையும் தாயும் எங்கே இருக்கிறார்கள், செவிலியே?

செவிலியர்

டைபால்ட்டின் சடலத்தின் முன் அழுதுகொண்டிருக்கிறார்கள். நீயும் அவர்களுடன் சேர்ந்து அழ விரும்புகிறாயா ? நான் உன்னை அங்கே அழைத்துச் செல்கிறேன்.

ஜூலியட்

அவர்கள் அவனது காயங்களைக் கண்ணீரால் கழுவுகிறார்களா? அவர்கள் கண்ணீர் வற்றிப்போன பிறகும், என் கண்ணீர் தொடர்ந்து சிந்தப்படும். ஆனால் அது ரோமியோவுக்காக அவன் நாடு கடத்தப்பட்டதற்காக
சரி அந்தக் கயிற்று ஏணியை எடுத்து வா. —

பாவம் கயிறுகளே நீங்கள் !
நீங்களும் நானும் ஏமாற்றப்பட்டுவிட்டோம்;
ஏனெனில் ரோமியோ நாடு கடத்தப்பட்டுவிட்டான்.
என் படுக்கையறைக்கு வருவதற்காக
அவன் உங்களை அமைத்தான்,
ஆனால் ……
நானோ, ஒரு கன்னிப்பெண்,
கணவன் இருந்தும் விதவை கன்னியாகவே மடியப்போகிறேன்.

வாருங்கள், கயிறுகளே.—வாருங்கள், செவிலியே. நான் என் திருமணப் படுக்கைக்குச் செல்கிறேன்.

ரோமியோவால் தான் முடியவில்லை இனி மரணமாவது என் கன்னித்தன்மையை உரிமையாக்கிக்கொள்ளட்டும் !

செவிலி

உன் படுக்கையறைக்குச் செல்.

நான் சென்று ரோமியோவை உனக்கு ஆறுதல் சொல்ல அழைத்து வருகிறேன்.

அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியும்.

கவனி : உன் ரோமியோ இன்றிரவு இங்கே உன்னுடன் இருப்பான். நான் அவனை அழைத்து வருவேன். அவன் ஃபிரையர் லாரன்ஸின் அறையில் ஒளிந்திருக்கிறான்.

ஜூலியட்

[அவளுக்கு ஒரு மோதிரத்தைக் கொடுத்து]
ஓ, அவனைக் கண்டுபிடி!
இந்த மோதிரத்தை என் உண்மையான வீரனுக்குக் கொடு,
மேலும் இறுதி விடை பெறுவதற்கு அவனை இங்கே வருமாறு சொல்.

(அவர்கள் இருவரும் மறைகிறார்கள் )

தொடரும் 

📚 எழுதியவர்:

மூலம் : ஷேக்ஸ்பியர்
மொழி பெயர்ப்பு : தங்கேஸ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *