உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் | Shakespeare's World Famous Romeo and Juliet Play Act 3 - Scene 3 in Translated Tamil | www.bookday.in

உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் (Romeo and Juliet) நாடக காட்சி 3 (Act III, Scene III) – தமிழில்: தங்கேஸ்

ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet)

களம்  3, காட்சி 3 (Act III, Scene III)

பாத்திரங்கள்: துறவி லாரன்ஸ், ரோமியோ, செவிலி

(துறவி லாரன்ஸ் தன் அறைக்குள் நுழைகிறார் )

துறவி லாரன்ஸ்

ரோமியோ , வெளியே வா.
அஞ்சும் நெஞ்சத்தவனே. வெளியே வா,
துயரமே உன்மீது காதல் கொண்டுவிட்டது;
துன்பம் உன்னை தொடர்ந்து வருகின்றது
பேரழிவோடு நீ மணமுடித்துவிட்டாய் .

ரோமியோ,

தந்தையே, என்ன செய்தி ?
என் மீது என்ன தீர்ப்பு எழுதியிருக்கிறது விதி ?
நான் எவ்வாறு தண்டிக்கப்பட வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறார் இளவரசர் ?
என்னை தேடி வந்து கொண்டிருக்கும் நானறியாத
அந்த துன்பம் என்னவென்று சொல்லுங்கள் …

துறவி லாரன்ஸ்

அன்பு மகனே, துன்பம் என்பது உன்னை தொடர்ந்து வரும் நண்பன் போல

உனக்கு இளவரசர் அளிக்கவிருக்கும் தண்டனை குறித்து ஒரு செய்தியை நான் உன்னிடம் சேர்ப்பதற்கு கொண்டு வந்துள்ளேன்.

ரோமியோ

மரண தண்டனை தானா ? அல்லது அதை விட சற்று குறைந்த தண்டனையா ?

துறவி லாரன்ஸ்

இளவரசரின் உதடுகளிலிருந்து ஒரு மென்மையான தீர்ப்பு வெளிப்பட்டுள்ளது

உனக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை ஆனால் உன்னை உடனடியாக நாடு கடத்தச் சொல்லி உத்தரவு

ரோமியோ

ஆ என்ன … நாடு கடத்தலா ! அதை விட “மரண தண்டனை ” என்றே சொல்லியிருக்கலாமே ? .
மரணத்தை விடவும் நாடு கடத்தலே எனக்கு மிகவும் கொடுமையானது.

இன்னொரு முறை “நாடு கடத்தல்” என்ற வார்த்தையை மட்டும் என்னிடம் சொல்லாதீர்கள்.

துறவி லாரன்ஸ்

பொறுமையாயிரு;

நீ வெரோனாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளாய் அவ்வளவு தான் . ஆனால் இவ்வுலகம் மிகப் பெரியது,
இதில் எத்தகைய நிகழ்வு வேண்டுமானாலும் எப்போதும் நேரலாம் என்பதை புரிந்து கொள் .

ரோமியோ

வெரோனாவின் சுவர்களுக்கு வெளியே உள்ள உலகம் நரகமே இந்த ரோமியோவுக்கு
அது சித்திரவதையே என் சிந்தைக்கு .

வெரோனாவிலிருந்து நாடுகடத்தப்படுவதென்பது உலகத்திலிருந்து நாடுகடத்தப்படுவதற்குச் சமம்,
உலகத்திலிருந்து நாடுகடத்தப்படுவது மரணத்திற்குள் என்னை தள்ளுவதற்கு சமம்.

நாடுகடத்தல் என்பது மரணத்திற்கு சூட்டிய வேறு பெயர் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் .

எனவே, ’ நான் நாடுகடத்தப்பட்டேன் ’ என்று சொல்வது, ஒரு தங்கக் கோடரியால் என் தலையை வெட்டி, கொலை செய்யும் போது , என்னைப் பார்த்து புன்னகைப்பதைப் போன்று கொடுமையானது

துறவி லாரன்ஸ்

ரோமியோ நீ இவ்வாறு பேசுவது கொடிய பாவமாகும் !

ஓ, திமிர் பிடித்த, நன்றிகெட்ட குழந்தையே !

உன் குற்றத்திற்கு வெரோனாவின் சட்டப்படி மரண தண்டனை தான் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் , ஆனால் இளவரசர் தன் கருணையால் , அந்த சட்டத்தையும் மீறி , உன்னைப் பாதுகாப்பதற்காக , மரணத்திற்குப் பதிலாக நாடு கடத்தலை விதித்துள்ளார். அவரின் கருணையை உன்னால் காண முடியவில்லையே .!

Romeo and Juliet - Act 3 Scene 3 - "Romeo, come forth" (Subtitles in modern  English)

ரோமியோ

இது கருணையல்ல தந்தையே, சித்திரவதை !

தந்தையே, சொர்க்கம் என்பது எங்கே உள்ளது ?

என் ஜூலியட் வாழும் இடமே எனக்கு சொர்க்கம். பூனையும், நாயும், சிறு எலியும் இப்படித் தகுதியற்ற ஒவ்வொரு உயிரினமும்
இங்கே ஜூலியட்டோடு சொர்க்கத்தில் வாழ்கின்றன; அவளைக் காணும் பெரும் பேறு பெறுகின்றன;

ஆனால் இந்த ரோமியோவால் அது இயலாது. என்னைவிடப் பிணந்தின்னும் ஈக்களுக்கே இங்கே அதிக உயிர்ச்சக்தியும், மேலான நிலையும், காதலுரிமையும் வாய்த்துள்ளன.

அவை, என் அன்பு ஜூலியட்டின் வெண்ணிறக் கரங்களைப் பற்றிக்கொள்ளலாம்;
அவள் இதழ்களிலிருந்து அழியாப் பேரின்ப முத்தங்களைத் திருடிக்கொள்ளலாம்.
அவளோ , தூய்மையையும் கன்னிக்குமுரிய நாணத்தையும் ஒருங்கே கொண்டவள்;
முத்தங்களால் தீண்டுகையில், அது ஒரு பாவமே என எண்ணி,
இன்னும் வெட்கத்தால் முகம் சிவப்பவள்.

ஆனால் ரோமியோவால் அதைச் செய்ய இயலாது; அவன் நாடு கடத்தப்பட்டுவிட்டான்.

ஈக்களால் அவளை முத்தமிட முடியும்; ஆனால் நான் இங்கிருந்து பறந்தோட வேண்டும்.

அவை சுதந்திரமானவை; ஆனால் நான் நாடு கடத்தப்பட்டவன்.

நாடு கடத்தப்படுதல் என்பது மரணமல்ல என்று நீங்கள் இன்னும் வாதிடுகிறீர்களா ?

என்னை உடனடியாக மாய்க்க நஞ்சு கலந்த பானமோ,

கூர் தீட்டப்பட்ட கத்தியோ, அல்லது வேறு ஏதேனும் உடனடி உபாயங்களோ உங்களிடம் இல்லையா?

“நாடு கடத்தல்” எனும் சொல்லைக் கொண்டே என்னைக் கொல்ல வேண்டுமா?

ஓ துறவியே , நரகத்தில் உழலும் சபிக்கப்பட்ட ஆன்மாக்களே

“நாடு கடத்தல்”! என்னும் தண்டனையில் உழல்கின்றன !

அச்சொல் ஒலிக்கையில்,

அழுகையும் ஓலமும் அதைத் தொடர்கின்றன.

ஒரு பாதிரியாராகவும், பாவ மன்னிப்பு அளிப்பவராகவும் , என் நண்பராகவும் திகழும் உங்களுக்கு , ‘நாடு கடத்தப்பட்டாய்’ எனும் சொல்லைக் கொண்டு என்னை சிதைக்க எப்படி மனது வந்தது ?

துறவி லாரன்ஸ்

ஏ அறிவற்ற பைத்தியமே , ஒரு கணம் நான் சொல்வதைக் கேள்.

ரோமியோ

மறுபடியும் நீங்கள் நாடுகடத்தலைப் பற்றித்தானே பேசப் போகிறீர்கள். ?

துறவி லாரன்ஸ்

துன்பத்திற்கான மருந்தாவது தத்துவம்

அதனை நான் உனக்குத் தருவேன்

அந்த தத்துவத்தைப் பயன்படுத்தி , அந்த பயங்கரச்சொல்லின் தாக்கத்திலிருந்து நான் உன்னைப் பாதுகாப்பேன்; நீ நாடு கடத்தப்பட்டாலும் , அத்தத்துவம் உன்னை பாதுகாக்கும் .

ரோமியோ

உங்கள் தத்துவத்தால் ஒரு ஜூலியட்டை உருவாக்கி விட முடியுமா ?
இந்த நகரத்தை அப்படியே நகர்த்திப் போய் இடமாற்றம் செய்ய இயலுமா ?
அல்லது இளவரசனின் தண்டனையைத்தான் நிறுத்தி வைக்க முடியுமா ?
இப்படி எதற்குமே உதவாத உங்கள் தத்துவத்தை தூக்கில் தொங்க விடுங்கள்
அதைப் பற்றி பேசுவதை நீங்கள் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்

துறவி லாரன்ஸ்

ஆஹா பைத்தியக்காரர்கள் அனைவருமே செவிடர்கள் என்பதை இப்போது நான் கண்டுபிடித்துவிட்டேன்.

ரோமியோ

அறிஞர்களுக்கே கண்கள் இல்லாதபோது, ​​பைத்தியகாரர்க்ளுக்கு மட்டும் எப்படி காது கேட்கும் ?

துறவி லாரன்ஸ்

உனது விதியைப் பற்றி நான் உன்னோடு விவாதித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை முதலில் நீ புரிந்து கொள்ள வேண்டும்

ரோமியோ

நீங்கள் உணராத ஒன்றைப் பற்றி உங்களால் உளமார பேச முடியாது. நீங்களும் என்னைப் போல் இளமையாக இருந்து, ஜூலியட்டைக் காதலித்து, அவளைத் திருமணம் செய்து ஒரு மணி நேரமே கடந்து , அதற்குள் டைபால்ட்டைக் கொன்று… அடடடா இன்னும் புரியவில்லையா உங்களுக்கு ?
நீங்களும் என்னைப் போல் அவளைக் காதலித்து, கை பிடித்த உடன் நாடு கடத்தப்பட்டிருந்தால்,
அப்போது உணருவீர்கள் என் எல்லையில்லாத வேதனையை ஒரு வேளை நீங்கள் இந்த ரோமியோவாக இருந்தால்
உங்களால் உண்மையில் இப்படி பேசத்தான் இயலுமா ?

நீங்களும் உங்கள் முடியைப் பிய்த்துக்கொண்டு, இப்போது நான் செய்வது போல்

[அவன் தரையில் விழுந்து உருளுகிறான்]

தரையில் விழுந்து உருண்டு

கட்டப்படப் போகும் உங்கள் கல்லறையின் அளவைத்தானே எடுத்துக் கொண்டு இருப்பீர்கள் ? .

ROMEO AND JULIET

துறவி லாரன்ஸ்

யாரோ கதவை தட்டுகிறார்கள். எழுந்திரு ரோமியோ.
உடனே .ஒளிந்துகொள்,

(தட்டும் சத்தம் மேடைக்கு வெளியிலிருந்து வருகிறது.)

ரோமியோ

என் இதய வேதனையின் பெருமூச்சுகள் என்னை மறைக்கும் ஒரு மூடுபனியை உருவாக்கினால் மட்டுமே நான் தேடும் கண்களிலிருந்து ஒளிந்துகொள்வேன்.
(மேடைக்கு வெளியிலிருந்து தட்டும் சத்தம் கேட்கிறது.)

ஃபிரையர் லாரன்ஸ்

அவர்கள் மீண்டும் தட்டுகிறார்கள் !— அங்கே யார் ?— ரோமியோ, எழுந்து நில். அவர்கள் உன்னைப் பிடித்துவிடுவார்கள்.— ஒரு கணம் பொறு. — ரோமியோ, எழுந்து நில்.

(மேடைக்கு வெளியிலிருந்து தட்டும் சத்தம் கேட்கிறது.)

என் படிப்பு அறையில் ஒளிந்துகொள்.— ஒரு நிமிடம் — கடவுளே, இவ்வளவு முட்டாளாக இருக்காதே ! நான் வருகிறேன். நான் வருகிறேன்.

(மேடைக்கு வெளியிலிருந்து தட்டும் சத்தம் கேட்கிறது.)

இவ்வளவு பலமாகத் தட்டுவது யார் ? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?

செவிலி

[மேடைக்கு வெளியிலிருந்து] என்னை உள்ளே அனுமதியுங்கள் பிறகு நான் இங்கு ஏன் வந்தேன் என்று சொல்கிறேன். நான் சீமாட்டி ஜூலியட்டிடமிருந்து வருகிறேன்.

தந்தை லாரன்ஸ்

[கதவைத் திறக்கிறார்] அப்படியானால் நல்வரவு.

செவிலி

ஓ புனிதத் துறவியே, , சொல்லுங்கள்,
என் பெண்ணின் கணவர் எங்கே? அந்த ரோமியோ எங்கே ?
( கேட்டுக் கொண்டே செவிலி உள்ளே நுழைகிறாள். )

துறவி லாரன்ஸ்

அதோ அங்கே, தரையில், தன் கண்ணீரிலேயே தான் மூழ்கிக் கிடக்கிறான் பார்

செவிலி

இவனும் ஜூலியட்டைப் போலவே தான் நடந்துகொள்கிறான். ஓ, மிகவும் கொடிய பரிதாபம் ! என்னவொரு பயங்கரமான இக்கட்டான நிலை இது ! இவனைப் போலவே தான் அவளும் தரையில் கிடந்து தத்தளிக்கிறாள் . தலை விதியை நினைத்து விம்மி அழுதுகொண்டேயிருக்கிறாள்.

(ரோமியோவைப்பார்த்து)

எழுந்து நில். எழுந்து நில். நீ ஒரு ஆண்மகனாக இருந்தால் எழுந்து நில். ஜூலியட்டுக்காக , அவளுக்காக, எழுந்து நில். ஏன் இவ்வளவு பயங்கரமாக முனங்குகிறாய் ?

ரோமியோ

செவிலி

செவிலி

சரி சரி. மரணம் எல்லோருக்கும் தான் ஒரு நாள் வரும்.

ரோமியோ

ஜூலியட் எப்படி இருக்கிறாள்? அவளைப் பற்றி பேசு அவளுடைய உறவினனைக் கொன்று , புத்தம் புதிதாக மலர்ந்திருந்த எங்கள் காதலை நான் கெடுத்துவிட்டதால், நான் ஒரு கொடூரமான கொலையாளி என்று அவள் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாளா? அவள் இப்போது எங்கே இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? எங்கள் காதலைப் பற்றி என் மனைவி என்ன சொல்கிறாள்?
உடனே சொல்

செவிலி

ஓ, அவள் ஒன்றும் பேசுவதேயில்லை அப்பனே !. ஆனால் அழுதுகொண்டே இருக்கிறாள்.
அழுதுகொண்டே இருக்கிறாள் தன் படுக்கையில் விழுகிறாள், பிறகு எழ முயற்சிக்கிறாள், பிறகு டைபால்ட்டின் பெயரையும் உன் பெயரையும் மாறி மாறி உச்சரிக்கிறாள் .
மீண்டும் படுக்கையில் விழுகிறாள்.
அழுதுகொண்டே இருக்கிறாள்

ரோமியோ

நான் அவளுடைய உறவினனைக் கொன்றது போலவே அவளையும் கொன்று விட்டேன் போலும்.
துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட தோட்டா ஒன்று அவளை கொன்றது . அந்த தோட்டாவின் பெயர் ரோமியோ
அந்த துப்பாக்கி ரவையைப் போலத்தான் அவள் என் பெயரை வெறுப்பாக உச்சரித்துக் கொண்டிருக்கிறாள்
அவள் உறவினனைக் கொன்ற அதே துப்பாக்கி தோட்டாதான் இப்போது அவளையும் கொல்கிறது அதன் பெயர் ரோமியோ
துறவியே , என் உடலின் எந்த இழிவான பகுதியில் என் பெயர் எழுதப்பட்டிருக்கிறது சொல்லுங்கள்,
நான் அதை அந்தப் பகுதியிலிருந்து உடனடியாக அந்தப் பெயரை வெட்டி எடுக்க வேண்டும்.

[அவன் தன் கத்தியை உருவுகிறான்]

William Shakespeare – Romeo and Juliet Act 3 Scene 3 | Genius

துறவி லாரன்ஸ்

போதும் நிறுத்து ! விரக்தியில் செய்யும் எதுவும் வீணாகத்தான் போகும் . நீ ஒரு ஆண் பிள்ளை தானா ? பார்ப்பதற்கு என்னவோ ஒரு ஆண் பிள்ளை போலவே தான் இருக்கிறாய். ஆனால் ஒரு பெண் பிள்ளை போல அல்லவா கண்ணீர் வடிக்கிறாய் ? . உன் காட்டுத்தனமான கூச்சல் ஒரு மிருகத்தின் பகுத்தறிவற்ற சீற்றத்தைப் போலவே இருக்கிறது.

நீ ஒரு ஆணுக்குள் ஒளிந்திருக்கும் பொருத்தமற்ற பெண்ணைப் போல இப்போது இருக்கிறாய்,
அல்லது ஆண் பாதி பெண், பாதி என்ற உருவத்திற்குள் ஒளிந்திருக்கும் வெட்கக்கேடான மிருகத்தைப் போல தோற்றமளிக்கிறாய் !
வியப்பில் ஆழ்த்திய நீ தான் இப்போது என்னை திகைப்பிலும் ஆழ்த்துகிறாய் .

என் புனித சபையின் பெயரால் சொல்கிறேன்,

நீ இதைவிட வலிமையானவனாகவும், நிலையானவனாகவும் இருப்பாய் என்று நான் நினைத்திருந்தேன்.

நீ டைபால்ட்டைக் கொன்றுவிட்டாயா ?

அதனால் நீ உன்னையே கொன்றுவிடப் போகிறாயா ? அப்படி ஒரு பாவத்தைச் செய்வதன் மூலம் உன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் உன் மனைவியையும் கொன்றுவிடுவாயா ?

வானம், பூமி உன் பிறப்பு இவைகளைப் பற்றியே ஏன் இப்போது பிதற்றிக் கொண்டிருக்கிறாய் ? நீ இந்த மூன்றின் இணைப்பால் ஆனவன் தானே, ஆனால் இப்போது அவற்றுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள விருப்பமில்லையா ? நீ உன் உடலுக்கும், உன் காதலுக்கும், உன் மனதிற்கும் அவமானத்தைக் கொண்டு வருகிறாய். இந்த மூன்றாலும் தான் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய், ஆனால் ஒரு வட்டிக்கடைக்காரனைப் போல, உன் உடலையோ, காதலையோ மனதையோ அவற்றின் உண்மையான நோக்கத்திற்காக நீ பயன்படுத்துவதில்லை.

கம்பீரமோ , கௌரமோ உன்னத குணமோ இல்லாமல் போகும் போது , உன் உடல் வெறும் மெழுகுச் சிலைதான். நீ சத்தியம் செய்த காதல் ஒரு வெற்றுப் பொய்யாய் போகிறது ஏனென்றால் நீ போற்றிப் பாதுகாப்பதாகச் சத்தியம் செய்த காதலையே இப்போது கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாய். உன் உடலுக்கும் காதலுக்கும் திறவுகோலாக இருக்கும் உன் மனம் , அவை இரண்டையும் திறம்படக் கையாளத் தவறிவிட்டது. அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாததால், தற்செயலாகத் தன் துப்பாக்கி வெடிமருந்தையே தன் மீது வெடிக்கச் செய்து மரிக்கும் ஒரு திறமையற்ற சிப்பாயைப் போல நீ நடந்து கொள்கிறாய்: உன்னைப் பாதுகாக்க வேண்டிய ஒன்றைக் கொண்டே உன்னை நீயே கொன்று கொள்கிறாய். உணர்ச்சிகளால் கொந்தளித்துப் போன மனிதா ! இப்போது உன்னை நீயே கட்டுப்படுத்திக்கொள், உன் ஜூலியட் உயிருடன் இருக்கிறாள்

(அவளுக்காகத்தான் நீ இப்போது உன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டிக்கொண்டிருக்கிறாய்).

அது முதலில் ஒரு மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம். டைபால்ட் உன்னைக் கொல்ல முயன்றான், ஆனால் நீ அவனைக் கொன்றாய். அதுவும் ஒரு மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம்தான் . உனக்கு மரண தண்டனை விதித்த சட்டம், கருணையுடன் நாடுகடத்தலாக மாற்றப்பட்டது — இதுவும்ஒரு மகிழ்ச்சிக்குரிய மற்றொரு விஷயம் தான் . இதை புரிந்து கொள் நீ பலமுறை ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய், பிரகாசமான மகிழ்ச்சியால் சூழப்பட்டிருக்கிறாய்.

ஆனால், ஒழுங்கீனமான . முகம் சுளிக்கும் ஒரு பெண்ணைப் போல, உன் துரதிர்ஷ்டத்தையும் நிறைவேறாத காதலையும் எண்ணி எண்ணி நீ புலம்பிக் கொண்டிருக்கிறாய்.

இப்போது நான் சொல்வதைக் கேள்: நீ இப்போது நடந்துகொள்வது போல் நடந்துகொள்பவர்கள் எப்போதும் துயரத்துடன்தான் இறப்பார்கள்.
நாம் திட்டமிட்டபடி , நீ உடனடியாகச் சென்று உன் காதலியை சந்திக்க வேண்டும்

அவளுடைய படுக்கையறைக்கு மாடி வழியே ஏறிச்சென்று அவளுக்கு ஆறுதல் கூறு. ஆனால், காவலர்கள் காலையில் வருவதற்குள் நீ அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்பதை ஞாபகத்தில் கொள்

ஏனென்றால், நீ மன்டுவாவுக்குத் தப்பிச் செல்வதற்குள் அவர்கள் உன்னைத் தடுத்துவிடுவார்கள். நாங்கள் உங்கள் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்து, உங்கள் இரு குடும்பங்களுக்கும் இடையே சமாதானம் செய்து, இளவரசரிடம் உனக்கு மன்னிப்பு கோரும் வரையிலும் நீ மன்டுவாவில்தான் வசிக்க வேண்டும். அதன் பிறகு , நீ இங்கிருந்து கிளம்பும்போது உணரும் சோகத்திற்கு ஈடாக இருபதாயிரம் மடங்கு அதிக மகிழ்ச்சியுடன் நாங்கள் உன்னை மீண்டும் வரவேற்போம்.
செவிலியே , ரோமியோ பின்தொடர்வதற்குள் ஜூலியட்டிடம் செல்.

உன் எஜமானியிடம் என் வணக்கங்களைத் தெரிவித்து விட்டு , வீட்டில் உள்ள அனைவரையும் விரைவாகப் படுக்கைக்குச் செல்லச் சொல். எப்படியும், அவர்களுடைய துக்கம் அவர்களைத் தூங்க வைக்கும். ரோமியோ பின் தொடர்ந்து வருகிறான்.

செவிலி

ஓ ஆண்டவரே, இவ்வளவு சிறந்த ஆலோசனைகளைக் கேட்க நான் இரவு முழுவதும் இங்கேயே தங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது . ஓ, கல்வி என்பது என்னவொரு அற்புதம் என்பதை இப்போது கண்டு கொண்டேன் !

[ரோமியோவிடம்] அப்பனே, நீ வருவாய் என்று என் தலைவியிடம் சொல்கிறேன்.

ரோமியோ

அப்படியே செய், என் அன்புக்குரியவளை என்னைக் கடிந்துகொள்ளத் தயாராக இருக்கும்படி சொல்.

செவிலி

இதோ, அப்பனே , ஜூலியட் உன்னிடம் கொடுக்கச் சொன்ன இந்த மோதிரத்தை உன்னிடமே ஒப்படைத்து விடுகிறேன் வாங்கிக்கொள். [அவள் ஜூலியட்டின் மோதிரத்தை ரோமியோவிடம் கொடுக்கிறாள்] சீக்கிரம், நேரம் ஆகிவிட்டது.
( செவிலி வெளியேறுகிறாள் )

ரோமியோ

இந்த மோதிரம் எனக்கு புத்துயிர்ப்பை தந்திருக்கிறது
அளவற்ற ஆறுதல் அது போதும் எனக்கு

துறவி லாரன்ஸ்

இனிய இரவு வணக்கம் இப்போது நீ செல்லலாம் . இரவுக்காவலர்கள் தங்கள் இடங்களுக்கு வருவதற்கு முன் நீ வெரோனாவை விட்டு வெளியேறவேண்டும் . அல்லது மாறுவேடமிட்டு விடியலுக்குப் பிறகு சாமர்த்தியமாக வெளியேற வேண்டும் . நீ ரகசியமாக புறப்படுவதைப் பொறுத்தே எல்லாம் அமையும் என்பதை நினைவில் கொள் . மன்டுவாவில் சிறிது காலம் தங்கியிரு . நான் உன் வேலைக்காரனைக் கண்டுபிடித்து , இங்கு உனக்காக நடக்கும் ஒவ்வொரு நல்ல முயற்சியைப் பற்றியும் அவ்வப்போது அவன் மூலம் உனக்கு செய்தி அனுப்புகிறேன்.

இப்போது உன் கையைக் கொடு . நேரம் ஆகிவிட்டது. விடைபெறுகிறேன். இது இனிய இரவாகட்டும் உனக்கு

ரோமியோ

பேரானந்தம் என்னை அழைக்கும்போதும்,
உங்களை விட்டு பிரிந்து செல்வது உண்மையில் துயரமாகவே இருக்கிறது.
விடைபெறுகிறேன்.
(அவர்கள் அனைவரும் வெளியேறுகிறார்கள். )

தொடரும் 

📚 எழுதியவர்:

மூலம் : ஷேக்ஸ்பியர்
மொழி பெயர்ப்பு : தங்கேஸ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *