உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் | Shakespeare's World Famous Romeo and Juliet Play Act 3 - Scene 5 in Translated Tamil | www.bookday.in

உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் (Romeo and Juliet) நாடக காட்சி 3 (Act III, Scene V) – தமிழில்: தங்கேஸ்

ஷேக்ஸ்பியரின் ரோமியோ மற்றும் ஜூலியட்

களம் 3, காட்சி 5 (Act 3, Scene 5)

பாத்திரங்கள்:
ரோமியோ, ஜுலியட் முதிய கேபப்லட், கேபுலட் மனைவி, செவிலி

(இரவு நேரம்)

ரோமியோவும் ஜூலியட்டும் மேடைக்கு மேலே நுழைகிறார்கள்.

ரோமியோவும் ஜூலியட்டும் மேடைக்கு மேலே உள்ள பால்கனியில் நுழைகிறார்கள்.

ஜூலியட்

அன்பே நீ போகிறாயா ? அதற்குள்ளாகவா ?
இன்னும் விடியவில்லை.

உன் காதினை துளைத்து அந்த அச்சமூட்டும் கானம் பாடியது அந்த வானம்பாடியல்ல, அது இரவுக்குருவிதான்.
ஒவ்வொரு இரவும் அது அந்த மாதுளை மரத்தில் பாடுகிறது.
என்னை நம்பு, அன்பே,
அது இரவுக்குருவிதான்.

ரோமியோ

விடியலை வரவேற்கப் பாடுவது வானம்பாடி, இரவுக்குருவி அல்ல ( குயில் ) . என் அன்பே,
கிழக்கில் விலகும் மேகங்களை ஒளிரச் செய்யும் கீற்றுகளைப் பார். இரவு முடிந்துவிட்டது.
மலை உச்சிகளில் பகல் மெல்லப் பரவுகிறது. நான் வாழ வேண்டுமென்றால் பிரிந்து செல்ல வேண்டும். இல்லை இறக்க வேண்டுமென்றால் இங்கேயே தங்கி விடுகிறேன்

ஜூலியட்

அந்த ஒளி பகல் ஒளியல்ல , எனக்குத் தெரியும். இன்றிரவு உனக்கு ஒரு தீப்பந்தமாக இருப்பதற்காக,
அது சூரியன் வெளிவிடும் ஏதோவொரு விண்கல்.
ஆம்
மாந்துவா செல்லும் உன் வழியில் உனக்கு ஒளியூட்டுவதற்காக.
அது சூரியன் வெளிவிடும் விண்கல் தான்
ஆகவே, இன்னும் சிறிது நேரம் நீ இங்கேயே இரு அன்பே .
இப்போது நீ போக வேண்டியதில்லை.

ரோமியோ

அவர்கள் என்னைப் பிடிக்கட்டும். எனக்கு மரணதண்டனை நிறைவேற்றட்டும் . நீ விரும்பினால், நான் மகிழ்ச்சியாகவே இறப்பேன். அதோ மேகத்தில் தெரியும் அந்தச் சாம்பல் நிறம் விடிந்து கொண்டிருக்கும் விடியல் அல்ல , அது வெளிறிய நிலவின் பிரதிபலிப்பு என்று சொல்லுவேன்.
நம் தலைக்கு மேலே வானத்தில் பாடுவது வானம்பாடி அல்ல.
அது இரவுக் குருவி தான் போவதை விட இங்கேயே தங்குவதையே நான் விரும்புகிறேன். வா, மரணமே! நீ இங்கே வரவேற்கப்படுகிறாய் ! ஜூலியட் அதை விரும்புகிறாள்.
இப்போது பேசலாம் எப்படி இருக்கிறாய், என் அன்பே ? இன்னும் பகல் வரவில்லை தானே .

ஜூலியட் (பதறிப் போய்)

இது பகல் தான் , இதோ பகல் வந்து விட்டது ஆம். நீ போய் விடு, தொலைந்து போ, தொலைந்து போ!
அங்கே கடுமையாகவும் சுருதி விலகியும் பாடுவது வானம்பாடிதான் .
வானம்பாடியின் பாடல் இரவுக்கும் பகலுக்குமான இடைப்பட்ட பொழுதில் ஒரு இனிமையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பார்கள் சிலர். அது உண்மையல்ல. ஏனெனில் இந்தப் பாடல் நம் இருவரையும் பிரிக்கிறதே !.
வானம்பாடியும் அருவருப்பான தேரையும் தங்கள் கண்களை மாற்றிக் கொள்ளும் என்பார்கள் சிலர் .
இப்போது அவை தங்கள் குரல்களையும் மாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஏனென்றால், வானம்பாடியின் குரல் நம்மை தழுவலிலிருந்து பிரித்து வைக்கிறது
மனிதர்களை நம்மைத் தேடி வேட்டையாட வைக்கிறது.
ஓ, கிளம்பு. வெளிச்சம் அதிகமாகிக்கொண்டே போகிறது.

ரோமியோ

ஒளி கூடக் கூட, நம் துயரங்கள் மேலும் மேலும் துன்பங்களாக வளர்கின்றன!
( செவிலி நுழைகிறாள். )
செவிலி
பெண்ணே .ஜூலியட்
செவிலியா ?

செவிலி

உன் தாய் உங்கள் படுக்கையறைக்கு வந்து கொண்டிருக்கிறார். விடியலும் வந்துவிட்டது. கவனமாக இருங்கள். எச்சரிக்கையுடன் இருங்கள்.

ஜூலியட்

அப்படியானால், ஜன்னலே , பகலை உள்ளே விடு, உயிரை வெளியே எடு.
(செவிலி வெளியேறுகிறாள்.)

ரோமியோ

விடைபெறுகிறேன், விடைபெறுகிறேன். ஒரே ஒரு முத்தம், இன்னும் ஒரே ஒரு முத்தம் நான் இறங்கிச் செல்கிறேன்.
(அவர்கள் முத்தமிடுகிறார்கள். ரோமியோ ஏணியைக் கீழே போட்டுவிட்டு இறங்குகிறான்.)

ஜூலியட்

அப்படியே சென்றுவிட்டாயா ,
என் அன்பே, என் பிரபுவே ? என், கணவணே
, என் நண்பணே,
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் உன்னிடமிருந்து நான் செய்தி பெற வேண்டும்,
ஒரு நிமிடத்திற்குள் பல நாட்கள் உள்ளனவே.
ஓ , இந்தக் கணக்கின்படி பார்த்தால் , நான் மீண்டும் என் ரோமியோவைக் காண்பதற்குள், முதுமையுற்றுவிடுவேன் போலிருக்கிறது .

ரோமியோ

விடைபெறுகிறேன் அன்பே !
என் காதலை தெரிவிக்க வாய்க்கும் எந்த வாய்ப்பையும் நான் தவறவிட மாட்டேன், அன்பே.

ஜூலியட்

அன்பே நாம் மீண்டும் சந்திப்போம் என்று நினைக்கிறாயா?

ரோமியோ

எனக்கு அதில் எந்த சந்தேகமுமில்லை, இந்தத் துயரங்கள் எல்லாம், வரவிருக்கும் நம் முதுமைக் காலத்தில், நாம் நினைவு கூர்ந்து பேசித் தீர்க்கப் போகும் இனிய உரையாடல்களுக்குப் பயன்படப் போகின்றன பார்.

ஜூலியட்

கடவுளே, ஏதோ தீமை வருவதை என் ஆன்மா உணர்கிறது ! நீ அங்கே கீழே நிற்பதைப் பார்க்கும்போது, ​​ ஒரு கல்லறையின் அடியில் இறந்து கிடப்பவளைப் போலத் தெரிகிறாய். என் பார்வை மங்குகிறது, அல்லது நீ வெளிறிப் போய்க்கொண்டிருக்கிறாய்.

ரோமியோ

என்னை நம்பு, அன்பே, என் பார்வையில் நீயும் அப்படித்தான் தெரிகிறாய். வறண்ட துயரம் நம் இரத்தத்தைக் குடிக்கிறது. விடைபெறுகிறேன், விடைபெறுகிறேன்!
(ரோமியோ வெளியேறுகிறான்.)

ஜூலியட்

ஓ விதியே. நீ நிலையற்றவள் என்று எல்லோரும் சொல்கிறார்கள்
எப்போதும் உன் மனதை மாற்றிக்கொள்கிறாய் என்றும் மக்கள் சொல்கிறார்கள். நீ அவ்வளவு நிலையற்றவள் என்றால், விசுவாசத்திற்குப் பேர் போன ரோமியோவை நீ என்ன செய்யப் போகிறாய்? நீ நிலையற்றவளாக இரு, விதியே, அவனை நீண்ட காலம் அங்கே வைத்திருக்காதே. அதற்குப் பதிலாக, அவனை விரைவில் வெரோனாவுக்குத் திருப்பி அனுப்பி விடு.
( திருமதி கேப்லேட் நுழைகிறாள் )

திருமதி கேப்லேட்

[மேடைக்குப் பின்னால்]
என் மகளே! எழுந்து விட்டாயா ?

ஜூலியட்

யார் அழைத்தது ? என் அம்மாவா? அவர் ஏன் இவ்வளவு சீக்கிரமாக எழுந்து விட்டார் ?
அல்லது தாமதமாகத்தான் வந்திருக்கிறாரா ? அவர் என்னைப் பார்க்க வந்ததற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்?

திருமதி கேப்லெட்

உன் உறவினனின் மரணத்திற்காக என்றென்றும் நீ அழுதுகொண்டிருக்கப் போகிறாயா ? அல்லது உன் கண்ணீராலேயே அவனது கல்லறையை கழுவி விட முடியும் என்று நினைக்கிறாயா? அப்படியே முடிந்தாலும், உன்னால் அவனை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா ?
முடியாது. எனவே அழுவதை நிறுத்து.
சிறிதளவு துயரமே உனது மிகுந்த அன்பைக் காட்டி விடும் . அதுவே அளவுக்கு அதிகமானால் உன்னை முட்டாளாகவே காட்டும்.

ஜூலியட்

இத்தகைய கொடிய இழப்பிற்காக நான் அழ வேண்டும்.

திருமதி கேபுலேட்

இப்படி அழுவது இழப்பை உணர வைக்கும், ஆனால் நீ இழந்த நண்பனை உயிர்ப்பிக்க வைக்க உதவாது

ஜூலியட்

இழப்பை மிகவும் ஆழமாக உணர்கிறேன் அன்னையே , அவனுக்காக என்றென்றும் அழாமல் இருக்க முடியவில்லை.

திருமதி கேபுலேட்

சரி பெண்ணே, நீ அவன் மரணத்திற்காக அழவில்லை, மாறாக அவனைக் கொன்ற அந்தத் தீயவன் இன்னும் உயிரோடு இருப்பதற்காகவே அழுகிறாய் சரியா ?.

ஜூலியட்

எந்தத் தீயவன், அம்மா ?

திருமதி கேபுலேட்

அதே தீயவன் தான் , ரோமியோ.

ஜூலியட்

[தனக்குள்] அவன் உண்மையில் ஒரு கொடியவன் தான் , பல மைல்கள் தொலைவில் இருக்கிறான்.
[சீமாட்டி கேபுலெட்டிடம்]
கடவுள் அவனை மன்னிக்கட்டும்! நான் என் முழு இதயத்துடன் அவனை மன்னிக்கிறேன், ஆனாலும் அவனைப் போல் வேறு எந்த மனிதனும் என் இதயத்தை வருத்தமடையச் செய்ததில்லை.

சீமாட்டி கேப்லெட்

அதற்குக் காரணம், அந்தத் துரோகியான கொலையாளி இன்னும் உயிருடன் இருக்கிறான்.

ஜூலியட்

ஆம், அம்மா, ஏனென்றால் அவன் என் கைகளுக்கு எட்டாத தூரத்தில் வாழ்கிறான். என் உறவினனின் மரணத்திற்காக பழிவாங்கும் ஒரே ஆள் நானாக இருந்திருக்கக் கூடாதா ?

சீமாட்டி கேப்லெட்

நாம் அதற்குப் பழிவாங்குவோம், நீ கவலைப்படாதே. உன் அழுகையை நிறுத்து . மான்டுவாவில் நமக்குத் தெரிந்த ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு நான் ஒரு கடிதம் அனுப்புகிறேன், அங்கேதான் அந்த நாடு கடத்தப்பட்ட துரோகி ரோமியோ வாழ்கிறான். அந்த மனிதன் ரோமியோவுக்கு விஷம் கொடுப்பான், அதனால் ரோமியோ விரைவில் மரணமடைந்து டைபால்ட்டுக்குத் துணையாக சென்று விடுவான். அப்போது ​​நீ திருப்தியடைவாய் என்று நம்புகிறேன்.

ஜூலியட்

உண்மையில், நான் ரோமியோவைப் பார்க்கும் வரை அவன் மீது எனக்கிருக்கும் கோபம் ஆறாது . என் உறவினனை நினைக்கும் போதெல்லாம் என் ஏழை இதயம் அப்படித்தான் உணர்கிறது. அம்மா, விஷம் வைத்திருக்கும் ஒரு மனிதனையாவது உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் சொல்லுங்கள், நானே அதைக் கலப்பேன், ரோமியோ அதை உட்கொண்டவுடன் நிம்மதியாக உறங்குவான். ஓ, அவன் பெயரைக் கேட்பதை , அவனைத் தேடிச் செல்ல முடியாமல் இருப்பதை நான் வெறுக்கிறேன் ! என் உறவினன் மீதான என் அன்பை, அவனைக் கொன்றவனின் உடலின் மீது தாக்குதலால் காட்ட வேண்டும் போலிருக்கிறது!

திருமதி காபுலேட்

நீ அதற்கான வழியைக் கண்டுபிடி, நான் அப்படிப்பட்ட ஒருவனைக் கண்டுபிடித்துத் தருகிறேன்.
ஆனால் இப்போது நான் உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லப் போகிறேன், பெண்ணே.

ஜூலியட்

இத்தகைய இக்கட்டான நேரத்தில் மகிழ்ச்சி வருவது நல்லது தானே .
அது என்னவென்று சொல்லுங்கள் அன்னையே

திருமதி காபுலேட்

ஆஹா, ஆஹா, உனக்கு ஒரு அக்கறையுள்ள தந்தை இருக்கிறார் என்பதை மறந்து விடாதே , மகளே.
உன் துயரத்திலிருந்து உன்னை விடுவிப்பதற்காக,
திடீரென ஒரு மகிழ்ச்சியான நாளை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
அதை நீ எதிர்பார்க்கவில்லை, நானும் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஜூலியட்

அம்மா, சீக்கிரம், அது என்ன நாள்?

சீமாட்டி கேபுலேட்

அது உன் திருமணம் நடக்கப் போகும் நாள் தான் மகளே
திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் நீ , வரும் வியாழக்கிழமை அதிகாலையில், புனித பேதுரு தேவாலயத்தில்,
உன் திருமணம் சீமான் பாரிஸ், வீரமும், இளமையும், மேன்மையும் வாய்ந்த கனவான் , உன்னை ஒரு மகிழ்ச்சியான மணமகளாக மாற்றுவார்.

ஜூலியட்

இப்போது, ​​புனித பேதுரு தேவாலயத்தின் மீதும், பேதுருவின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன்,
அவர் என்னை அங்கே ஒரு மகிழ்ச்சியான மணமகளாக ஆக்கமாட்டார்.
இந்த அவசரத்தைக் கண்டு நான் வியக்கிறேன், ஏன் இப்போது நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்,
என்ன வியப்பு !
என்னை நேசித்து என் சம்மதத்தை பெறுவதற்கும் முன்பே என் வருங்கால கணவன் என்னை மணம் முடித்து விட வேண்டுமா ?
தயவுசெய்து அந்த பிரபுவுக்கும் தந்தைக்கும் சொல்லுங்கள், அம்மா ,
நான் இப்போதைக்குத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அப்படி நான் திருமணம் செய்து கொண்டால், ​​ சத்தியமாக, நான் வெறுக்கும் ரோமியோவைத்தான் மணமுடிப்பேன்
பாரிஸை அல்ல் இது தான் என் செய்தி
இதை தந்தைக்கு சொல்லவும்

திருமதி கேப்யுலெட்

இதோ உன் தந்தையே வருகிறார். உன் தீர்மானத்தை நீயே அவரிடம் சொல், அவர் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்று பார்க்கலாம்

(கேப்லெட்டும் செவிலியும் உள்ளே நுழைகின்றனர்.)

காபுலேட்

சூரியன் மறையும்போது காற்றில் பனித்துளிகள் தூறுகின்றன. ஆனால் என் சகோதரனின் மகன் இறந்தபோது, ​​ பெரும் மழையே பொழிந்தது.
[ஜூலியட்டிடம்] உனக்கு என்ன ஆயிற்று ? நீ ஒரு நீரூற்றாகிவிட்டாயா ? நிறுத்தாமல் அழுதுகொண்டிருக்கிறாயே ? என்றென்றும் இது போலவே அழுதுகொண்டே இருப்பாயா ?
ஒரு கடலாகவும் , கப்பலாகவும் , காற்றாகவும் ஒரே நேரத்தில் தோற்றம் தருகிறாய்
கடலைப் போல, உன் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிகின்றன.
உன் உடலோ , உன் கண்ணீர் எனும் உப்பு நீரில் பயணிக்கும் ஒரு கப்பலைப் போன்று நடுங்குகின்றது
உன் பெருமூச்சுகள் காற்றைப் போல சீறிப்பாய்கின்றன,
நீ உடனடியாக அமைதியடையாவிட்டால் , கப்பல் புயலில் சிக்கியது போல கவலை உன்னை அலைக்கழித்து மூழ்கடித்துவிடும். ( மனைவியடம் ) சரி, மனைவியே என்ன விசயம் ? நம்முடைய அறிவிப்பைப் பற்றி அவளிடம் சொல்லி விட்டாயா ?

திருமதி காபுலேட்

ஆம். அதற்குப் அவள் நன்றி சொன்னாள் , ஆனால் இந்த திருமணம் வேண்டாம் என்கிறாள். இதற்குப் பதிலாக இந்த முட்டாள் தன் கல்லறையையே மணந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் !

காபுலேட்

என்ன ? மனைவியே . எனக்கு இதை மீண்டும் நீ விளக்கிச் சொல்,
அவள் மறுக்கிறாளா?
அவள் நன்றி கூட சொல்லவில்லையா ? உண்மையிலேயே இந்தத் திருமணத்தைப் பற்றி அவள் பெருமைப்படவில்லையா? இவளுடைய தகுதிக்கும் அதிகமான மணமகனாக இவ்வளவு உன்னதமான ஒருவரைக் கண்டுபிடித்ததற்காக, அவள் உண்மையில் தன்னை ஒரு பாக்கியசாலி என்றும் எண்ணவில்லையா ?

ஜூலியட்

நீங்கள் உன்னதமான ஒருவரை கண்டறிந்ததைக் குறித்து நான் பெருமை கொள்ளவில்லை, ஆனால் உங்களின் முயற்சிகளுக்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நான் வெறுக்கும் ஒன்றைக் குறித்து என்னால் பெருமை கொள்ள முடியாது. ஆனால், நான் வெறுக்கும் ஒன்று கூட அன்பின் வெளிப்பாடாக இருந்தால், அதற்காக என்னால் நன்றியுள்ளவளாக இருக்க முடியும்.

கேபுலெட்

என்ன, என்ன, , என்ன என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான தர்க்கம் இது !
என்ன ஒரு பிதற்றல் இது?
உன்னால் எப்படி இப்படி மாற்றி மாற்றி பேசமுடிகிறது. “பெருமை”கொள்கிறேன் என்கிறாய் பிறகு ” இல்லை ” என்கிறாய் , “நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்”என்கிறாய் பிறகு , “ நன்றி கூறவில்லை”என்று மறுக்கிறாய் . “மதி கெட்டுப்போன மடச்சிறுமியே , இந்த “நன்றி கூறமாட்டேன் ” மற்றும் “பெருமை கொள்ளவில்லை” போன்ற வார்த்தைகளை இனியும் என்னிடம் பிதற்றாதே . வியாழக்கிழமை திருமணத்திற்கு உன்னை நீயே தயார்படுத்திக்கொள், அன்று நீ பாரிஸுடன் புனித பீட்டர் தேவாலயத்திற்குச் செல்லவேண்டும் . அவ்வாறு நீ செல்ல மறுத்தால், நான் உன்னை அங்கே இழுத்துச் செல்வேன். அடக் கடவுளே , நீ ஒரு நோயுற்ற பிணம் ! ஒரு பயனற்ற சுமை! ஒரு களையிழந்து வெளிறிப் போன முகம்!
உன்னை பார்ப்பதற்கே எனக்கு அருவெறுப்பாக இருக்கிறது.

திருமதி காபுலேட் (கேலேட்டிடம் கோபமாக)

உங்களுக்கு வெட்கமாக இல்லையா ! நீங்கள் என்ன, பைத்தியமா ?

ஜூலியட்

அன்பான தந்தையே, நான் மண்டியிட்டு கெஞ்சுகிறேன்,
மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்
ஒரு வார்த்தை , ஒரே ஒரு வார்த்தை மட்டும் நான் பேசுவதை பொறுமையாக கேளுங்கள்.

கேப்லெட்

கீழ்ப்படியாத, பயனற்ற அற்பப் பெண்ணே ! நான் உனக்கு ஒன்று சொல்கிறேன்: வியாழக்கிழமை தேவாலயத்திற்குச் செல்ல வேண்டும் இதற்கு மேல் ஒரு வார்த்தை என்னை எதிர்த்து பேசாதே இனி ஒருபோதும் என் முகத்தில் விழிக்காதே என்னைப் பார்க்காதே . பேசாதே. பதில் சொல்லாதே .
அவ்வளவு தான். [ஜூலியட் எழுகிறாள்]
உன்னை கன்னத்தில் அறைய என் விரல்கள் துடிக்கின்றன.
ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறது . மனைவியே , கடவுள் நமக்கு இந்த ஒரே ஒரு குழந்தையை மட்டுமே கொடுத்ததற்காக நாம் ஆசீர்வதிக்கப்படாதவர்கள் என்று ஒருபோதும் நாம் நினைக்கவில்லை, ஆனால் இப்போது தான் தெரிகிறது, இவள் ஒருத்தியே நமக்கு நிறைய குழந்தைகள் தரும் துயரத்தை தருவதற்காக பிறந்த சாபக்கேடு என்று . ஆம் இவள் பிறந்தபோதே நாம் சபிக்கப்பட்டு விட்டோம். அவள் எனக்கு அருவருப்பைத் தான் தருகிறாள் .

செவிலி

பரலோகத்தில் உள்ள பரம பிதா அவளை ஆசீர்வதிக்கட்டும் ! நீங்கள் அவளிடம் அப்படிக் கத்துவது தவறு, ஐயா.

காபுலேட்

என் ஞான தேவியே ? உன் வாயை முதலில் மூடு. போய் புறங்கூறும் நண்பர்களுடன் அரட்டையடி.

செவிலி

நான் தவறாக எதுவும் சொல்லவில்லை.

கேபுலேட்

ஓ, கடவுளே ! உன் வாயை மூடு என்றேன்

செவிலி

ஒருவர் பேசக்கூடாதா?

கேபுலேட்

அமைதி, அமைதி முணுமுணுக்கும் முட்டாளே !
உன் ஞானத்தையெல்லாம் உன்னோடு புறம் பேசுபவர்களின் மேல் கொட்டு,
இங்கே அது எங்களுக்குத் தேவையில்லை.

சீமாட்டி கேபுலேட்

நீங்கள் மிகவும் கோபமாக இருக்கிறீர்கள்.

கேப்லெட்

கடவுளே ! இவளது பதில் எனக்குக் கோபத்தை தான் ஏற்படுத்துகிறது ! இரவும் பகலும், ஒவ்வொரு மணித்துளியும் இவளது எதிர்காலத்தையே நினைத்து நினைத்து ஒரு வரனை கொண்டு வந்துள்ளேன்.

கடுமையான பணியில் இருந்தாலும் , ஓய்வாக விளையாடி களித்தாலும் , தனியாக இருந்தாலும் , துணையுடன் இருந்தாலும் , இவளுக்கு ஒரு நல்ல வரனைப் பெற்றுத் தர வேண்டுமென்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டேதானிருந்தது .

அதற்காக நான் கடுமையாக முயற்சித்தேன். இப்போது, ​​அவளுக்கு ஒரு உன்னதமான கனவானைப் மணமகனாக பெற்றுத் தந்திருக்கிறேன் . அவனுக்கு என்ன குறை ? அவன் அழகானவன், இளமையானவன், நன்கு படித்தவன், கண்ணியமானவன், எந்தப் பெண்ணின் கனவு நாயகனும் அவனே. ஆனால் இந்தப் பரிதாபகரமான, முட்டாள் இவனை மறுக்கிறாள் , ஒரு சிணுங்கும் பொம்மையைப் போல அழுதுகொண்டு இ ந்த பொன்னான வாய்ப்பை புறம் தள்ளுகிறாள் , “நான் திருமணம் செய்ய மாட்டேன். என்னால் காதலிக்க முடியாது. நான் மிகவும் இளையவள். என்னை மன்னியுங்கள்,” என்று ஏதேதோ பிதற்றுகிறாள். இதை நன்றாக கேட்டுக் கொள் நீ திருமணம் செய்துகொள்ள மாட்டாய் என்றால், நான் உன்னை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்.

இந்த வீட்டில் உனக்கு இடமில்லை. என் வீட்டைத் தவிர, நீ விரும்பும் இடத்தில் சாப்பிடு. அதைப் பற்றி நன்றாக யோசி. நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. வியாழக்கிழமை விரைவில் வரப்போகிறது. கண்டபடி கதைக்கும் உன் இதயத்தை உன் கையால் மூடிக்கொண்டு என் அறிவுரையைக் கேள் . என் மகளைப் போல நடந்துகொள் . உன்னை நான் பார்த்த மாப்பிள்ளைக்குத்தான் திருமணம் செய்து வைப்பேன். இதற்கு நீ சம்மதிக்காவிட்டால் இந்த வீட்டிலிருந்து விரட்டப்படுவாய் , பிச்சை எடுத்து, பட்டினி கிடந்து , அனாதையாக தெருக்களில் செத்துப்போவாய். என் ஆன்மாவின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், இனி ஒருபோதும் உன்னை நான் கண்டுகொள்ளவோ ​​உதவவோ மாட்டேன். இதை உறுதியாக நம்பு. யோசித்துப் பார். ஒரு நாளும் நான் என் வார்த்தைகளை ( சபதத்தை ) மீற மாட்டேன்.

(கேப்லெட் வெளியேறுகிறார்.)

ஜூலியட்

கடவுளே உனக்கு கருணை இல்லையா?
என் துயரத்தின் ஆழத்தைக் கண்டும் இன்னும் நீ இரங்கவில்லையா ?
ஓ என் இனிய தாயே , என்னை புறம் தள்ளிவிடாதீர்கள்
இந்தத் திருமணத்தை ஒரு மாதமோ, குறைந்தது ஒரு வாரமோ தள்ளிப்போடுங்கள்.
அப்படிச் செய்ய மனதில்லையென்றால் என் மணவறையை டைபால்ட் உறங்கும் கல்லறையின் அருகில் அமைத்து வைத்து விடுங்கள் .

சீமாட்டி கேப்லெட்

என்னிடம் மீண்டும் மீண்டும் பேசாதே, பதிலுக்கு நான் ஒரு வார்த்தையும் பேச மாட்டேன்.
இனி நீ விரும்பியபடியே செய்யலாம் , உன்னுடன் பேசுவதற்கு எனக்கு ஏதுமில்லை
என் வேலை முடிந்துவிட்டது.
(சீமாட்டி கேபுலெட் வெளியேறுகிறாள்.)

ஜூலியட்

கடவுளே கடவுளே இதை எவ்விதம் எங்களால்
தடுக்க முடியும் ?
என்னுடைய கணவன் மண்ணில் இருக்கிறான்
அவன் திரும்ப வருவான் என்ற நம்பிக்கையோ
விண்ணில் இருக்கிறது
அந்த நம்பிக்கையை விண்ணிலிருந்து எவ்விதம் மண்ணுக்கு அழைத்து வருவேன் ?
ஒரு வேளை என் கணவனே அந்த விண்ணுக்கு சென்று அந்த நம்பிக்கையை மண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டுமா ?
ஒன்றும் புரியவில்லை உதவுவோர் யாரும் உண்டோ ? இந்த சின்னஞ்சிறிய பலவீனமான பெண்ணுக்கு உதவுவது யார் ?
நான் என்ன செய்ய வேண்டும் இப்போது ?
ஆதரவாக ஒரு வார்த்தை சொல்லவும் ஆளில்லையா ?
கடவுளே கடவுளே உன் சோதனைகளை ஏன் இந்த அபலையில் மீது நிகழ்த்திப் பார்க்கிறாய் ?
செவிலியே ! என்னை மகிழ்ச்சிப்படுத்த உன்னிடம்
ஒரு சிறிய சொல்கூட இல்லையா சொல் ?

செவிலி

ஏன் இல்லை நிறைய இருக்கிறது
ரோமியோ நாடு கடத்தப்பட்டு விட்டான்
அவன் அவ்வளவு எளிதாக திரும்பி வரப்வதில்லை
அப்படியே திரும்பி வந்தாலும் அவன் திருட்டுத்தனமாகத்தான் திரும்பி வரவேண்டும்
ஆகையால் நீ திருமணம் செய்து கொண்டாலும் அவன் திரும்பிவந்து
உன்னை ஒன்றும் கேட்கப் போவதில்லை
அதனால் உனக்கு உண்மையிலே இப்போது நன்மை செய்வது என்னவென்றால் , அந்த பாரிஸ் பிரபுவை மணந்து கொள்வது தான்
அந்த பிரபு உண்மையிலேயே அழகான நேசிக்கத்தகுந்த இளைஞன் தான்
அவனோடு ஒப்பிடும் போது ரோமியோ
அவ்வளவு அழகனல்ல
அதனால் இந்தப் பிரபுவை நீ இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் இன்புற்று வாழலாம்
ஏனென்றால் உன் முதல் கணவனைவிட இவன் அழகன் தகுதியானவன்
கழுகின் கண்கள் கூட இவன் கண்களைப் போல இப்படி பச்சையாக அழகாக துடிப்பாக இருக்காது
அடக்கடவுளே நானே கண்போட்டுவிடுவேன் போலிருக்கிறது.
பெண்ணே , உன் முதல் திருமணம் நடந்ததையே மறந்து விடு
இப்போது ரோமியோ உயிரோடு இல்லையென்று நினைத்துக் கொள்
அவன் உயிரற்ற பிணம் மாதிரி தான் இப்போது அங்கே இருக்கிறான்.
அவனை கட்டிக் கொண்டதால் நீ அனுபவித்தது ஒன்றுமில்லை
இனி அனுபவிக்கப் போவதும் ஒன்றுமில்லை

ஜூலியட்

நீ மனதாரத்தான் இதையெல்லாம் பேசுகிறாயா ?

செவிலி

நீ சபிக்கவில்லையென்றால் மனப்பூர்வமாகவும் இதயபூர்வமாகவும் நான் பேசுவேன்

ஜூலியட்

ஆமென்

செவிலி

என்ன ?

ஜூலியட்

அருமையாக என்னை நீ ஆறுதல் படுத்தியிருக்கிறாய்
அது தவிர அற்புதமான யோசனையையும் தந்திருக்கிறாய்
உள்ளே போய் அன்னையிடம் சொல்
நான் தந்தையை அதிகமாக கோபப்படுத்தி விட்டதால் உடனே ஆலயத்திற்கு செல்கிறேன் என்று சொல்
அங்கே சென்று துறவி லாரன்ஸை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும்

செவிலி

ஆமாம் அது தான் சரியான முடிவு
(செவிலி அன்னையிடம் செல்கிறாள் )

ஜூலியட்

தொலைந்து போகிறவள் மோசமான பிசாசு
என் வாழ்க்கையை தொலைக்க ஆலோசனைகளை வாரி வாரி வழங்குகிறாள்
அவள் என் காதலை கைவிடச் சொல்லி மிகப் பெரிய பழி பாவத்திற்கு ஆளாகச் சொல்கிறாள்
என் கணவனைப் பற்றி அடுக்காதவைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாள்
அதே வாயால் அவனை எவ்வளவு புகழ்ந்திருப்பாள் !
இந்த உலகத்திலேயே நிகரற்ற அழகன் அவன் தான் என்றாளே ?
என்னிலிருந்து தொலைந்து போ செவிலியே
இன்றிலிருந்து உன்னிதயமும் என்னிதயமும் நிரந்தரமாகப் பிரிந்து விட்டன
நான் துறவி லாரன்ஸை சந்தித்து உதவி கேட்கப் போகிறேன்
அனைத்தும் தோல்வியில் முடிந்தால் என்னுயிரை மாய்த்துக்கொள்ளும் ஆற்றல்
எனக்கு இருக்கிறது.

📚 எழுதியவர்:

மூலம் : ஷேக்ஸ்பியர்
மொழி பெயர்ப்பு : தங்கேஸ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *