ஷேக்ஸ்பியரின் ரோமியோ மற்றும் ஜூலியட்
களம் 4, காட்சி 1 (Act 4, Scene 1)
சுருக்கம் (Context)
இந்தக் காட்சியில், ஜூலியட்டின் தந்தை அவசர அவசரமாகப் பிரவு பாரிஸுக்கும் ஜூலியட்டிற்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் ஜூலியட் ஏற்கனவே ரோமியோவை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதால், இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க ஃபிரையர் லாரன்ஸிடம் உதவி கேட்கச் செல்கிறாள்.
(துறவி லாரன்ஸ் மற்றும் பாரிஸ் துறவியின் அறைக்குள் வருகிறார்கள்.)
துறவி லாரன்ஸ்
வியாழக்கிழமையா ஐயா ! கால அவகாசம் மிகக் குறைவாக உள்ளதே ?
பாரிஸ்
சீமான் கேபுலட் அப்படித்தான் விரும்புகிறார் தந்தையே ; அவரது அவசரத்தைக் குறைக்கவோ தாமதப்படுத்தவோ நான் விரும்பவில்லை.
துறவி லாரன்ஸ்
அந்தப் பெண்ணின் மனநிலை என்னவென்று உங்களுக்குத் தெரியாது என்கிறீர்கள்.
இது ஆபத்தான பாதை என்பதில் ஐயமில்லை . ஆதலால் இதில் எனக்கு விருப்பமில்லை.
பாரிஸ்
தந்தையே , டைபால்ட்டின் மரணத்திற்காக , ஜுலியட் அளவுக்கு அதிகமாக அழுது கொண்டிருக்கிறாள்; அதனால் நான் அவளிடம் என் காதலைப் பற்றி எதுவும் பேசவில்லை.
கண்ணீர் சிந்தும் வீட்டில் காதல் மலராது அல்லவா?
இப்போது, இவளை இவ்வளவு துயரத்தில் விட்டு விடுவது அதிகம் ஆபத்தானது என்று அவளது தந்தை கருதுகிறார்.
அவளது கண்ணீர்ப் பெருக்கை கட்டுப்படுத்தவே , அவர் எங்கள் திருமணத்தை நடத்த இவ்வளவு அவசரப்படுத்துகிறார் என்று நினைக்கிறேன்.
அவள் தனியாகவே இருந்து தன் துயரத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பதால் அது அவளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது .
ஓர் உற்ற துணை உடனிருந்தால் அவளை அதிலிருந்து மீட்கலாம் என்று அவர் நினைக்கிறார் போலும்.
இப்போது இந்த அவசர திருமணத்திற்கான காரணத்தை நீங்கள் அறிந்து கொண்டீர்களா தந்தையே ? .
துறவி லாரன்ஸ்
[தனக்குள்ளே]
கையறு நிலையில் அந்தப் பெண் கதறுகிறாள்
காதல் கீதல் என்று இவன் பிதற்றுகிறான்
இந்த திருமணத்தை ஏன் தாமதப்படுத்த வேண்டும் என்பதற்கான காரணமாவது எனக்குத் தெரியாமலே இருந்திருக்கக்கூடாதா இறைவா !
இதோ பாருங்கள் ஐயா , அந்தப் பெண் என் இருப்பிடத்தை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கிறாள்.
(ஜுலியட் அங்கே வந்து கொண்டிருக்கிறாள்)
பாரிஸ்
என் அன்பிற்குரியவளே , என் மனைவியே , உன்னை சந்தித்ததில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
(ஜூலியட் உள்ளே வருகிறாள்)
ஜூலியட்
நிகழ வேண்டியது நிகழத்தான் செய்யும்.
துறவி லாரன்ஸ்
அது உறுதி செய்யப்பட்ட உண்மை.
பாரிஸ்
இந்தத் துறவியிடம் பாவ மன்னிப்பு கேட்க வந்திருக்கிறாயா?
ஜூலியட்
இதற்குப் பதிலளித்தால், நான் உங்களிடமே என் பாவத்தை ஒப்புக்கொள்வது போலாகிவிடுமே.
பாரிஸ்
நீ என்னை நேசிக்கிறாய் என்பதை மட்டும் அவரிடம் மறுக்காதே பெண்ணே.
ஜூலியட்
நான் அவரை (கடவுளை) நேசிக்கிறேன் என்பதை உங்களிடம் கூட ஒப்புக்கொள்வேன்.
பாரிஸ்
நீ என்னை நேசிக்கிறாய் என்பதையும் ஒப்புக்கொள்வாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஜூலியட்
நான் அப்படிச் சொல்ல நேர்ந்தால், அதை உங்கள் முகத்திற்கு நேராகச் சொல்வதை விட, உங்கள் முதுகுக்குப் பின்னால் தான் சொல்வேன் அது தான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறேன் .
பாரிஸ்
பாவம், கண்ணீரால் உன் முகம் கன்றிப் போயிருக்கிறது
ஜூலியட்
ஆனால் கண்ணீருக்குப் பெரிய வெற்றி ஏதும் கிடைப்பதில்லை,
மேலும் கண்ணீர் விட்டு அழுவதற்கும் முன்பே என் முகம் அவ்வளவு அழகாக இருந்ததில்லை.
பாரிஸ்
அப்படிச் சொல்லாதே ,நீ அப்படிச் சொன்னால் அந்த கண்ணீரை விட நீயே உன் முகத்திற்கு அதிக அநீதி இழைக்கிறாய் என்று நான் சொல்லுவேன் .
ஜூலியட்
ஐயா, இது பொய் அல்ல; இது உண்மை.
என் முகத்தின் உண்மையை என் முகத்திற்கு நேராகவே நான் சொல்கிறேன்
பாரிஸ்
அன்பே ! உன் முகம் இப்போது உன்னுடையதல்ல
அது என்னுடையது,
அதனை நீ ஏன் அவதூறு செய்தாய்.
ஜூலியட்
அது உண்மை தான் , ஏனெனில் இப்போது என் முகமே எனக்கு சொந்தமானதல்லவே
(துறவி லாரன்ஸிடம்) புனித தந்தையே !, நீங்கள் இப்போது ஓய்வாக இருக்கிறீர்களா,
அல்லது மாலைத் திருப்பலியில் வந்து நான் கலந்து கொள்ளவா ?
தந்தை லாரன்ஸ்
எனக்கு இப்போது நேரம் இருக்கிறது.
என் துயருற்ற மகளே,
(பாரிஸிடம்) பிரபுவே , நாங்கள் இப்போது தனியாகச் சிறிது நேரம் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
பாரிஸ்
உங்கள் பிரார்த்தனைக்கு இடையூறாக இருப்பதற்கு அந்தக் கடவுளே என்னை அனுமதிக்க மாட்டார் என்று நினைக்கிறேன் ஆனால் ஜூலியட் , வியாழக்கிழமை அதிகாலையில் நான் உன்னை என் மணமகளாக எழுப்புவேன்.
[அவளை முத்தமிடுகிறான்]
அதுவரை, விடைபெறுகிறேன் அன்பே, இந்தப் புனித முத்தத்தை இப்போது நீ நினைவில் வைத்துக்கொள்.
(பாரிஸ் வெளியேறுகிறான்)
ஜூலியட்
ஓ, கதவை மூடுங்கள்! நான் கண்ணீர் விட்டு அழ வேண்டும்,
உங்களுக்கு என்மீது பரிவிருந்தால் நீங்களும் சேர்ந்து கண்ணீர் விடுங்கள்
இனி இந்த வாழ்க்கையில் நம்பிக்கையோ, தீர்வோ, உதவியோ ஒன்றும் இல்லை.
துறவி லாரன்ஸ்
ஓ ஜூலியட் ! உன் துயரம் எனக்கு ஏற்கனவே தெரியும்.
என் அறிவுக்கு எட்டாத இக்கட்டான நிலை இது .
அடுத்த வியாழக்கிழமை அன்று நீ அந்த பிரபுவை மணக்க வேண்டுமென்றும், அதை எவராலும் தள்ளிப்போட முடியாதென்றும் நான் கேள்விப்பட்டேன்.
ஜூலியட்
துறவியே இதைக் கேள்விப்பட்டதாக என்னிடம் சொல்லாதீர்,
இதை எப்படித் தடுக்கலாம் என்பதை மட்டும் சொல்லுங்கள்
உமது ஞானத்தால் எனக்கு உதவி செய்ய முடியாவிட்டால்,
எனக்கு நானே உதவிக் கொள்ளுவேன் இந்தக் கத்தியுடன் துணையுடன்
(கத்தியை காட்டுகிறாள்)
இது தான் எனது உறுதியான தீர்மானம் என்பதை தாங்கள் இறுதியாக தெரிந்து கொள்ளுங்கள்
கடவுள் என் இதயத்தை ரோமியோவின் இதயத்துடன் இணைத்து வைத்தார் .
நீங்களோ எங்கள் கைகளை ஒன்றாக இணைத்து வைத்தீர்கள்.
ரோமியோவுக்கே உரித்தான என் கையோ அல்லது இதயமோ வேறொரு ஆணுக்கு அளிக்கப்படுவதற்கு முன்பாகவே, இந்தக் கத்தியைக் கொண்டு நான் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்.
எனவே, உங்கள் நீண்ட அனுபவத்தையும் அறிவையும் கொண்டு நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு ஆலோசனை கூறுங்கள்; அல்லது, நான் சிக்கியுள்ள இந்த இக்கட்டான சூழலை கண்ணியமான முறையில் தீர்த்துக்கொள்ள , ஒரு நீதிபதியைப் போல இந்தக் கத்தியை நான் பயன்படுத்துவதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருங்கள்.
பேசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் கூறும் வழி ஒரு தீர்வாக அமையாவிட்டால், நான் இறக்கவே விரும்புகிறேன்.
துறவி லாரன்ஸ்
பொறு, மகளே. ஒரு நம்பிக்கை கீற்றை நான் காண்கிறேன்;
ஆனால், இதற்கும் ஒரு துணிச்சலான, தீவிரமான செயல் தேவைப்படுகிறது.
பாரிஸ் பிரபுவை மணப்பதற்குப் பதிலாக,
உன்னை நீயே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மன உறுதி உனக்கு இருக்குமானால் ,
இந்த அவமானத்தைப் போக்கிக்கொள்ள, மரணத்தைப் போன்ற
ஒரு நிலையை ஏற்றுக்கொள்ளவும் நீ துணிவாய் என்றால் ,
அது தான் இதிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி
அதாவது, மரணத்திலிருந்து தப்பிக்க அந்த மரணத்தையே
எதிர்கொள்ளும் வழி
உனக்கு அந்தத் துணிச்சல் இருந்தால்,
அதற்கான வழியை நான் உனக்குச் சொல்வேன்.
ஜூலியட்
ஓ, பாரிஸை மணப்பதற்குப் பதிலாக, இதோ அந்தத் கோபுரத்தின்
உச்சியிலிருந்து கீழே குதிக்கச் சொல்லுங்கள்;
அல்லது திருடர்கள் நடமாடும் பாதைகளில் நடக்கச் சொல்லுங்கள்; அல்லது பாம்புகள்
நிறைந்த இடத்தில் பதுங்கியிருக்கச் சொல்லுங்கள்; கர்ஜிக்கும் கரடிகளுடன் என்னைக் கட்டிப்போடுங்கள்;
அல்லது இறந்தவர்களின் சத்தமிடும் எலும்புகள்,
நாற்றமெடுக்கும் , காலெலும்புகள் மற்றும் தாடை இல்லாத மண்டை ஓடுகள் நிறைந்திருக்கும் ஒரு பிணவறையில் ஒவ்வொரு இரவும் என்னை அடைத்து வையுங்கள்—
அல்லது புதிதாகத் தோண்டப்பட்ட ஒரு கல்லறையில் இறங்கி,
இறந்த ஒருவரின் சவத்துணியின் கீழ் என்னைப் பதுங்கிக்கொள்ளச் சொல்லுங்கள்—
இவற்றை எல்லாம் கேட்பதே என்னை நடுக்கமுற வைக்கும் —
இருப்பினும், என் இனிய காதலனுக்குக் களங்கமற்ற மனைவியாக வாழ்வதற்காக,
எந்தவித அச்சமும் இன்றி நான் இவைகளை செய்து முடிப்பேன் .
துறவி லாரன்ஸ்
அப்படியானால் வீட்டிற்குச் சென்று மகிழ்ச்சியாக இரு. பாரிஸை மணக்கச் சம்மதம் தெரிவித்து விடு. நாளை புதன்கிழமை. நாளை இரவு நீ தனியாகவே படுக்கைக்குச் செல்ல வேண்டும் . உன் படுக்கையறையில் செவிலி உன்னுடன் தங்க அனுமதிக்க வேண்டாம்.
[அவளிடம் ஒரு சிறிய குப்பியைக்காட்டுகிறார்]
படுக்கையில் இருக்கும்போது இந்தக் குப்பியை எடுத்து, இதிலுள்ள திரவத்தை முழுவதுமாக அருந்து.
உடனே உன் நரம்புகள் வழியாக ஒரு குளிர்ந்த, மயக்கமூட்டும் உணர்வு உள்ளுக்குள் பரவும்;
உன் நாடித்துடிப்பு நின்றுவிடும்.
இயல்பான நாடித்துடிப்பு நின்று, செயல் இழந்துவிடும்.
உயிர் இருப்பதை உணர்த்தும் வெப்பமோ மூச்சோ இருக்காது.
உன் உதடுகளிலும் கன்னங்களிலும் உள்ள ரோஜா நிறம் மறைந்து,
சாம்பல் நிறம் படரும்; மரணம் வாழ்வின் பகல் பொழுதை முடித்து வைப்பது போல உன் கண்களும் மூடிக்கொள்ளும்.
உடலின் ஒவ்வொரு பகுதியும் இயங்கும் தன்மையை இழந்து,
விறைத்துப்போய், குளிர்ந்து, மரணத்தைப் போலவே காட்சியளிக்கும்.
மரணம் போன்ற இந்தத் தற்காலிக நிலையில்
நீ நாற்பத்திரண்டு மணிநேரம் இருப்பாய்,
பிறகு ஒரு இனிய உறக்கத்திலிருந்து விழித்தெழுவது போல விழித்தெழுவாய்.
காலையில் மணமகன் உன்னை எழுப்ப வரும்போது,
நீ இறந்துபோனவளாகக் காணப்படுவாய்.
அப்போது, நம் நாட்டின் வழக்கப்படி,
உனக்கு சிறந்த ஆடைகளை அணிவித்து , மூடியின்றி பாடையின் மீது வைக்கப்பட்டு,
அந்தப் பழமையான கல்லறைக் அறைக்குக் கொண்டு செல்லப்படுவாய்,
அங்குதான் கேபுலெட் குடும்பத்தினர் அனைவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நீ விழித்தெழுவதற்குள்,
ரோமியோ என் கடிதங்கள் மூலம் நம் திட்டத்தை அறிந்துகொள்வான்,
அவன் இங்கு திரும்பி வருவான் ; அவனும் நானும்
நீ விழித்தெழுவதைக் கவனிப்போம்; அன்று இரவே
ரோமியோ உன்னை இங்கிருந்து மான்டுவா நகருக்கு அழைத்துச் செல்வான்.
இது உன்னை இப்போதைய அவமானத்திலிருந்து விடுவிக்கும்;
ஆனால், உறுதியற்ற எண்ணமோ அல்லது பெண்களுக்கே உரிய இயல்பான பயமோ
இதைச் செயல்படுத்தும் உன் துணிச்சலைக் குறைத்துவிடக்கூடாது என்பதை மட்டும் நெஞ்சில் நிறுத்திக் கொள் .
ஜூலியட்
தந்தையே அதை என்னிடம் கொடுங்கள்,
இனி பயத்தைப் பற்றியெல்லாம் என்னிடம் கூற வேண்டாம் !
துறவி லாரன்ஸ்
[அவளிடம் அந்தச் சிறிய குப்பியைத் தருகிறார்]
இதை வைத்துக்கொள். புறப்படு. உறுதியுடன் இரு; உன் இந்தத் தீர்மானம் சிறப்பானதாக அமையட்டும். உன் அன்புக் கணவருக்கு (ரோமியோவுக்கு) நான் எழுதிய கடிதங்களுடன் ஒரு துறவியை விரைவாக மான்டுவாவுக்கு அனுப்புகிறேன்.
ஜூலியட்
காதல் எனக்கு வலிமையைத் தரட்டும்; அந்த வலிமை எனக்குத் துணையாக இருக்கட்டும்.
விடைபெறுகிறேன், அன்புத் தந்தையே.
அவர்கள் தனித்தனியாக வெளியேறுகிறார்கள்.
(அவர்கள் எதிர் எதிர் திசைகளில் வெளியேறுகிறார்கள். )
📚 எழுதியவர்:
மூலம் : ஷேக்ஸ்பியர்
மொழி பெயர்ப்பு : தங்கேஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

