உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் | Shakespeare's World Famous Romeo and Juliet Play Act III - Scene I in Translated Tamil | www.bookday.in

உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் (Romeo and Juliet) நாடக காட்சி 1 (Act III, Scene I) – தமிழில்: தங்கேஸ்

ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet)

மூன்றாம் அங்கம் – காட்சி 1 (Act III, Scene I)

 

மெர்குஷியோ, பென்வோலியோ, ஒரு சிறுவன் (Page) மற்றும் பணியாளர்கள் நுழைகிறார்கள்.

 

பென்வோலியோ: 

மெர்குஷியோ, 

நான்  உன்னை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.                           நாம் இங்கிருந்து   உடனே கிளம்பி விடலாம்.

இன்று வெயில்   கடுமையாக இருக்கிறது .  

அதை விடக்  கொடுமையான  காபுலெட்கள்  வேறு 

வெளியில் சுற்றிக் கொண்டு  திரிகிறார்கள். 

நாம் அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் 

ஒரு மோதலைத் தவிர்க்கவே  முடியாது   ; 

இந்த வெப்பமான நாட்களில்  எதற்கெடுத்தாலும்  

கோபம் எனக்கு   தலைக்கு ஏறிவிடுகிறது. 

 

மெர்குஷியோ:

 பென்வோலியோ நீ எப்படிப்பட்ட ரகம் தெரியுமா ? 

ஒரு விடுதிக்குள் நுழைந்ததும் உன் உடை வாளை மேஜை மீது எடுத்து  வைத்து  விட்டு   “கடவுளே, எனக்கு உன் உதவி  இனித் தேவையில்லை!” என்று சொல்வாய் . 

ஆனால் ,  அதுவே  இரண்டாவது கோப்பை மது  உள்ளே இறங்கி விட்டால்   , தேவை இல்லாமலேயே   அந்த  விடுதி  ஊழியன் மீது வாளை உருவிக் கொண்டு பாய்வாய்.  அப்படிப்பட்ட அதி  விநோதமானவன்  நீ .

 

பென்வோலியோ: 

என்ன   நான் அப்படிப்பட்டவனா?

 

மெர்குஷியோ: 

ஆமாம், ஆமாம்  ! இத்தாலியிலேயே கூட  உன்னை விட எளிதில் எரிச்சலடையக்கூடியவன் யாரும் இல்லை. 

மிக விரைவாகக் கோபப்படவும், அந்தக் கோபம் முடிவதற்குள் சட்டென்று சண்டைக்குச் செல்லவும் உன்னால் தான்  முடியும்.

 

பென்வோலியோ: 

பிறகு?

 

மெர்குஷியோ: 

உன்னைப் போன்ற இருவர் இருந்தால் போதுமப்பா  , ஒருவரை ஒருவர் கொன்று தீர்த்துக் கொள்வார்கள் 

 இறுதியில்  யாருமே மீதம் இருக்கமாட்டார்கள். 

உதாரணத்திற்கு  ஒருவன் தன் தாடியில் 

உன்னை விட ஒரு முடி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வைத்திருந்தாலே

 அவனுடன் நீ சண்டையிடுவாய்  தெரியுமா ?

 

ஒருவன்   பாதாம் கொட்டையை  உடைக்கிறான் என்பதற்காக அவனுடன் சண்டையிடுவாய்  . 

ஏன் என்று கேட்டால்  என் கண்களும்  பாதாம் கொட்டையைப் போல அதே  பழுப்பு நிறம்  தானடா  என்பாய். 

ஒரு முட்டைக்குள்  மஞ்சள் கரு நிறைந்துள்ளதைப் போல சத்தியமாக  உன் தலைக்குள் சண்டை தான்  நிறைந்துள்ளது; 

சண்டையிட்டே உன் தலை அழுகிய முட்டை போல் ஆகிவிட்டது  தெரியுமா ? . 

வெயிலில் தூங்கிக் கொண்டிருந்த உன் நாயை 

ஒருவன் இருமியே  எழுப்பிவிட்டான் என்பதற்காக 

அவனிடம் சண்டையிட்டவன் அல்லவா நீ?

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பே ஒரு தையற்காரன் புதிய சட்டையை அணிந்தான் என்பதற்காக

அவனிடம் சண்டை பிடிக்கவில்லையா நீ ? 

 பழைய நாடாவைக்  கொண்டு காலணியைக் கட்டியதற்காக ஒருவனிடம் வாதிட்டவன் அல்லவா நீ? 

அப்படியிருக்க நீயா எனக்குச் சண்டையிடக் கூடாது என்று பாடம் நடத்துகிறாய்?

 

பென்வோலியோ:

உன்னைப் போல நானும் ஓடி ஓடி  சண்டையிடும் சுபாவம் கொண்டவனாக இருந்தால்  , 

என் உயிரை எவனும்  ஒரு மணி நேரத்தில்  விலை கொடுத்து வாங்கிவிடுவான்  .

அதாவது, நான் அவ்வளவு சீக்கிரம் கொல்லப்படுவேன் தெரியுமா ? .

 

மெர்குஷியோ

உன்னோட உயிரின் விலை அவ்வளவு மலிவா ?

 

பென்வோலியோ: 

இதோ பார், காபுலெட்கள் வருகிறார்கள்.

 

மெர்குஷியோ: 

என் கால்   தூசு கூட அவர்களைப் பற்றி கவலைப்படாது. 

 

(டைபால்ட் மற்றும் பிறர் நுழைகிறார்கள்)

 

டைபால்ட்: 

என் பின்னால்  நீங்கள் நெருக்கமாக வாருங்கள்,

 நான் அவர்களுடன் பேசப் போகிறேன். 

வணக்கம்   உங்களில் ஒருவருடன் 

நான் ஒரு வார்த்தை பேச வேண்டும்.

 

மெர்குஷியோ: 

ஒருவருடன் ஒரு வார்த்தை மட்டும் தானா ?

 ஒரு மோதலையும் சேர்த்து இரட்டிப்பாக்கு 

அப்போது தான் இந்த சந்திப்பு களை கட்டும் .

பேச்சு  வார்த்தையோடு அடி தடி   சரியா  ?

 

டைபால்ட்: 

 நீங்கள் அதற்கான வாய்ப்பை  வழங்கினால் , 

 அதைச் செய்யவும்

 நான் தயாராகவே இருக்கிறேன் .

 

மெர்குஷியோ:

ஏன்   நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

நீயாகவே  வாய்ப்பை  ஏற்படுத்திக் கொள் .

ஒரு காரணம் கூடவா உனக்கு கிடைக்கவில்லை ?

 

டைபால்ட்: 

மெர்குஷியோ, நீ ரோமியோவுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாய் . 

 

மெர்குஷியோ:

 ஆட்டம் போடுறேனா   ?   பாட்டுப் பாடுறேனா  ?   

எங்களை என்ன தெருவோர இசைக்கலைஞர்கன்னு நினைச்சுகிட்டு இருக்கிறியா நீ  ?  

 நாங்கள் இசைப்பதாக இருந்தால், உனக்குப்  பிடிக்காத அபசுரங்களைத்தான் 

நீ எங்களிடமிருந்து  கேட்க நேரிடும். 

இதோ இது தான் என்   இசைக்கருவி (வாளைக் காட்டுகிறான்); இது உன்னை ஆட வைக்கும் பார்க்குறியா ?

சரி எதுக்கு வள வளன்னு பேச்சு 

அவன் கூட சேர்ந்து  தான் நான் ஆட்டம் போடுறேன் இப்ப அதுக்கென்ன ?

 

பென்வோலியோ: 

ஞாபகமிருக்கட்டும்  !   நாம் அனைவரும் பார்க்கும் பொது இடத்தில் பேசிக்கொண்டிருக்கிறோம். 

ஒன்று தனிமையான இடத்திற்குச் செல்ல வேண்டும் 

அல்லது நமது பிரச்சினைகளை  

நாமே சுமூகமாகபேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். 

இல்லையென்றால் இங்கிருந்து அமைதியாக கலைந்து சென்று விட வேண்டும் . 

அது தான் நமக்கு நல்லது. 

 

மெர்குஷியோ:

மனிதர்களின் கண்கள் பார்ப்பதற்கே படைக்கப்பட்டிருக்கின்றன . 

அவர்கள் பார்த்தால் பார்க்கட்டுமே அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. 

 (அப்போது  ரோமியோ நுழைகிறான்)

 

டைபால்ட்: 

சரி, சரி   உன்னோடு எனக்கு சமாதானமே. 

இதோ, நான் தேடி வந்த என்னுடைய ஆள் வந்துவிட்டான்.

 

மெர்குஷியோ:

எப்படி அவனை உன்னுடைய ஆள் என்று சொல்லுகிறாய் ? 

அவன் உன் பணியாட்களின் உடையை அணிந்திருந்தால் வேண்டுமானால்  ,  அவன் உன்னுடைய  ஆள் என்று சொல்லலாம்.

வேண்டுமானால் நீ போர்க்களத்திற்கு செல்

அவன் உன்னைப் பின்தொடர்வான்;

 அந்த வகையில் வேண்டுமானால்  நீ 

அவனை   உன் ஆள் எனலாம்.

டைபால்ட்: 

ரோமியோ  , உன் மீது எனக்கிருக்கும் “அன்பு”, உன்னை “ஒரு அயோக்கியன்” என்று அழைக்கச் சொல்கிறது. 

அதைத் தவிர வேறு சிறந்த வார்த்தைகள்

 எதையும்  தரவில்லை. 

 

ரோமியோ  : 

ஆனால்  டைபால்ட், நான் உன்னை நேசிப்பதற்கு

 ஒரு காரணம் இருக்கிறது, 

உன் கோபத்தினால்  எனக்கு   காயங்கள் ஏற்பட்டால் கூட  

அது என்னை மன்னிக்கச் சொல்கிறது. 

நான் ஒருபோதும் அயோக்கியன் அல்ல. 

எனவே விடைபெறுகிறேன்; 

நீ என்னை யாரென்று சரியாகப் புரிந்து கொள்ளவில்லை 

என்று எனக்குத் தெரிகிறது.

 

டைபால்ட்:

 சிறுவனே, நீ எனக்குச் செய்த அவமானங்களுக்கு இது போதுமானதல்ல . எனவே எடு  உன் வாளை எடு. 

 

ரோமியோ: 

நான் உன்னை ஒருபோதும் காயப்படுத்தவில்லை என்று உறுதியளிக்கிறேன். 

உன்னால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன். 

என் அன்பிற்கான காரணம் உனக்குத் தெரியும் வரை காத்திரு. என் இனிய காபுலட்டே , உன்  பெயரை என் சொந்தப் பெயராகவே நான் மதிக்கிறேன்.

 எனவே அமைதியாக இரு.

 

மெர்குஷியோ   : 

ஓ, என்ன ஒரு , அவமானகரமான  , இழிவான அடிபணிதல்! (வாளை உருவுகிறான்)

 டைபால்ட், எலி பிடிப்பவனே, வா இப்போதே போகலாம்  !

 

டைபால்ட்:

உனக்கு என்னிடம் என்ன வேண்டும்? 

 

மெர்குஷியோ:

 பூனைகளின் அரசனே  , உன் ஒன்பது உயிர்களில் ஒன்று மட்டும் எனக்கு  இப்போது  வேண்டும்; 

முதலில்  அதை  எடுத்துவிட்டு, மீதமுள்ள எட்டு உயிர்களையும் பிறகு கவனித்துக் கொள்கிறேன். 

உன் வாளை அதன் உறையிலிருந்து காதைப் பிடித்து இழுப்பது போல் வெளியே எடுப்பாயா? 

சீக்கிரம் செய், இல்லையென்றால்

 என் வாள் உன் காதுகளைச் சிதைத்துவிடும்.

 

டைபால்ட்: 

இதோ நான் தயார். (வாளை உருவுகிறான்) 

 

ரோமியோ:

மேன்மையான  மெர்குஷியோ, உன் வாளை உள்ளே வை. 

 

மெர்குஷியோ: 

வாடா அப்பா வா , உன் தாக்குதலைத் தொடங்கு.

 (அவர்கள் சண்டையிடுகிறார்கள்)

 

ரோமியோ: 

பென்வோலியோ, உன் வாளை எடு; 

அவர்கள் ஆயுதங்களைத் தட்டி விடு.

பிரபுக்களே, வெட்கக்கேடு! 

இந்த அக்கிரமத்தை நிறுத்துங்கள்! 

டைபால்ட்! மெர்குஷியோ! இளவரசர் இதைத் தடுத்துள்ளார்…

[தன் வாளை உருவுகிறான்] 

பென்வோலியோ, உன் வாளை உருவி, அவர்களுடைய ஆயுதங்களை வீழ்த்த எனக்கு உதவு. 

மேன்மையானவர்களே, இது வெட்கக்கேடானது. 

டைபால்ட்! மெர்குடியோ!

 வெரோனாவின் தெருக்களில் சண்டையிடுவதை 

இளவரசர் வெளிப்படையாகத் தடை செய்துள்ளார். 

நிறுத்து! டைபால்ட்!  மெர்குடியோ!

மெர்குடியோவும் டைபால்ட்டும் சண்டையிடுகிறார்கள்.

ரோமியோ சண்டையை முறியடிக்க முயற்சிக்கிறான் . ரோமியோவின் நீட்டிய கையின் வழியாக  டைபால்ட் மெர்குஷியோவை குத்தி வீழ்த்துகிறான் . ரோமியோவின் கைக்கு அடியால் மெர்குஷியோவை குத்திவிட்டு, தன் கூட்டாளிகளுடன் தப்பி ஓடுகிறான்.]

 

மெர்குஷியோ: 

எனக்கு காயம் பட்டுவிட்டது. உங்கள் இரு குடும்பங்களும் (மாண்டேக் மற்றும் கேபுலட்) நாசமாகப் போகட்டும்

!   நான் முடிந்துவிட்டேன். 

அவன் காயமின்றி தப்பிவிட்டானா  ?

 

பென்வோலியோ: 

என்ன, உனக்கு காயம் பலமாக இருக்கிறதா?

 

மெர்குஷியோ: 

ஆமாம், இது ஒரு சிறு கீறல்தான், 

ஆனால் இதுவே போதும் என்னை முடித்து விடுவதற்கு .

 என் சேவகன் எங்கே? தம்பி, போய் ஒரு மருத்துவரை அழைத்து வா. [சேவகன் வெளியேறுகிறான்]

 

ரோமியோ: 

தைரியமாக இரு நண்பா. காயம் அவ்வளவு தீவிரமாக இருக்காது.

 

மெர்குஷியோ: 

இல்லை, இது ஒரு கிணற்றைப் போல ஆழமானது அல்ல, அல்லது ஒரு தேவாலயத்தின் கதவைப் போல அகலமானதும் அல்ல. 

ஆனால்  என்னைக் கொல்லப் போதுமானது. 

நாளை என்னைப் பார்க்க வந்தால் நான் ஒரு பிணமாகத்தான் இருப்பேன் கல்லறையில் . 

நான் காயங்களால் நிறைந்திருக்கிறேன்,

 எதுவும் என்னைக் காப்பாற்ற முடியாது. 

இரு குடும்பங்களும் நாசமாகப் போகட்டும்! 

கடவுளே,   இது  வெறும் சிறு கீறலா ? 

இதன் வழியாக. ஒரு நாய், ஒரு எலி, ஒரு பூனை  புகுந்து  ஒரு மனிதனை அடித்துக் கொல்லும் அளவுக்கு இந்தக்  காயம் பெரிதாக  இருக்கிறது! 

அவன் ஒரு ஆரவாரமானவன் , ஒரு அயோக்கியன், 

வெறும் புத்தக  விதிகளை மட்டும்  வைத்துக்கொண்டு சண்டையிடும் வில்லன்.

 ரோமியோ, நீ ஏன் எங்களுக்கு இடையில் வந்தாய் ? 

 உன் கைக்கு கீழாகத்தான்  நான் குத்தப்பட்டேன்.

 

ரோமியோ   : 

உங்களை சண்டையிலிருந்து தடுக்கவே நான் அப்படிச் செய்தேன்.

 

மெர்குஷியோ: 

பென்வோலியோ, என்னை ஏதேனும் ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல். 

எனக்கு மயக்கம் வருகிறது. 

இவர்களின்  இரு குடும்பங்களும் நரகத்திற்குப் போகட்டும்! 

அவர்கள் என்னைப் புழுக்களுக்கு உணவாக்கிவிட்டார்கள். இதற்கு அந்த இரு குடும்பங்களுமே காரணம்.

 [மெர்குஷியோ மற்றும் பென்வோலியோ வெளியேறுகிறார்கள்]

 

ரோமியோ: 

இளவரசரின் நெருங்கிய உறவினரான இந்த உத்தமன், 

என் இனிய நண்பன், 

எனக்காக மரண காயம் பட்டு  உயிரைப் போக்கிக் கொள்ளும் நிலையில் இருக்கிறான்.

என் கௌரவம் டைபால்ட்டின் அவதூறால் மண்ணைக் கவ்விவிட்டது .

டைபால்ட், ஒரு மணிநேரமாக எனக்கு மைத்துனனாக இருப்பவன். 

ஓ ஜூலியட், உன்னுடைய அழகு என்னை ஒரு கோழையாக மாற்றிவிட்டது, 

என் வீரத்தை அழித்துவிட்டது.

 

[பென்வோலியோ மீண்டும் வருகிறான்]

 

உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் | Shakespeare's World Famous Romeo and Juliet Play Act III - Scene I in Translated Tamil | www.bookday.in

 

பென்வோலியோ: 

ஓ ரோமியோ! மாவீரன் மெர்குஷியோ இறந்துவிட்டான். மண்ணுலகை மதிக்காத அவனது அந்த உன்னத ஆன்மா,  அவனது காலத்திற்கும்   முன்பே விண்ணுலகைச் சென்றடைந்துவிட்டது.

 

ரோமியோ: 

இந்த மோசமான விதி வரும் காலத்தையும் பாதிக்கும். 

இது வரப்போகும் துன்பங்களின் தொடக்கம் மட்டுமே.

 

[டைபால்ட் மீண்டும் வருகிறான்]

 

பென்வோலியோ: 

இதோ அந்த வன்முறையாளரன் டைபால்ட் மீண்டும் வருகிறான்.

 

ரோமியோ:

 அவன் உயிரோடு வெற்றிக் களிப்பில் இருக்கிறான், 

ஆனால் மெர்குஷியோ இப்போது இல்லை. 

இனிமேல் நான் பொறுமையாக இருக்கப்போவதில்லை, ஆவேசமே எனது ஆயுதமாகட்டும். 

ஆத்திரமே என்னை  வழிநடத்தட்டும் ! 

டைபால்ட், நீ என்னை ‘வில்லன்’ என்று அழைத்தாயே, இப்போது அந்த வார்த்தைகளாலேயே நான் உன்னை அழைக்கிறேன். 

மெர்குஷியோவின் ஆன்மா வானத்தில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

 ஒன்று நீ, அல்லது நான், அல்லது நாம் இருவருமே 

அவனுடன் சேர்ந்து  செல்ல வேண்டியிருக்கும்.

 

டைபால்ட்: 

நீ  கெட்ட பையன், அவனோடு  தானே  (மெர்குஷியோ) சேர்ந்திருந்தாய்,

 இப்போதும் அவனோடேயே போய் விடு

 

ரோமியோ: 

அதையும் இந்த வாளே  தீர்மானிக்கட்டும் (சண்டையிடுகிறார்கள், டைபால்ட் விழுகிறான்).

 

பென்வோலியோ:

ரோமியோ, இங்கிருந்து ஓடிவிடு. மக்கள் கூடுகிறார்கள், டைபால்ட் இறந்துவிட்டான். 

நீ பிடிபட்டால் இளவரசர் உனக்கு மரண தண்டனை விதிப்பார். சீக்கிரம் போ! 

 

ரோமியோ: 

ஓ, நான் விதியின் கையில் ஒரு பொம்மையாகிவிட்டேனே!

 

பென்வோலியோ:

ரோமியோ ஏன் தயங்குகிறாய் ஓடு 

(ரோமியோ வெளியேறுகிறான். இளவரசரும் மற்றவர்களும் அங்கே வருகிறார்கள்)

குடிமக்கள் நுழைகிறார்கள்.

 

முதல் குடிமகன்: 

மெர்குஷியோவைக் கொன்ற அந்த ஆள் எங்கே ஓடினான்? அந்த கொலையாளி டைபால்ட் எந்தப் பக்கம் ஓடினான்? 

 

பென்வோலியோ: 

இதோ டைபால்ட் இங்கே கிடக்கிறான். 

 

முதல் குடிமகன்: 

 இளவரசரின் பெயரால் கேட்டுக்கொள்கிறேன். நீ உடனே என்னுடன் வரவேண்டும். 

(அந்த நேரத்தில்  இளவரசர், மெய்க்காப்பாளர்கள்; மாண்டேக், கேப்யுலட், அவர்களது மனைவிகள் மற்றும் பிறர் நுழைகிறார்கள்  ) 

 

இளவரசர்:

இந்தக்  கொடூரமான சண்டையைத் தொடங்கி வைத்தது யார்? 

 

பென்வோலியோ: 

மாண்புமிகு இளவரசரே, இந்த துரதிர்ஷ்டவசமான சண்டையைப் பற்றி என்னால் விளக்க முடியும். அங்கே இறந்து கிடப்பவன் தான் டைபால்ட், அவனை ரோமியோ கொன்றான். அதற்கு முன் டைபால்ட் உங்கள் உறவினரான மெர்குஷியோவைக் கொன்றான்.

 

லேடி கேபுலெட்

அய்யோ  டைபால்ட்  என் சகோதரன் மகனே ! 

என் மருமகனே ! 

ஐயோ,  இங்கே இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது! 

இளவரசரே, நீங்கள் நேர்மையானவர் என்றால், 

மாண்டேகு குடும்பத்தின் இரத்தத்திற்குப் பதிலாக

 இரத்தமே ஈடாக வேண்டும்.

 

இளவரசர்: 

பென்வோலியோ, இந்த இரத்தக்களரியை முதலில் யார் ஆரம்பித்தது? 

 

பென்வோலியோ: 

இதோ இறந்து கிடக்கும் டைபால்ட் தான் முதலில் தொடங்கினான்.

 ரோமியோ அவனிடம் மிகவும் மென்மையாகப் பேசி, சண்டையைத் தவிர்க்க முயன்றான். 

ஆனால் டைபால்ட் எதற்கும் செவிசாய்க்காமல் மெர்குஷியோவின் மார்பில் வாளால் குத்தினான்…

 

லேடி கேப்யுலட்: 

டைபால்ட், என் உறவினரே! ஓ என் சகோதரனின் மகனே!

 ஓ இளவரசரே பாருங்கள்ள!

 ஓ என் கணவரே பாருங்கள் !

 என் உறவினரின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. 

இளவரசரே, நீங்கள் தான்   நீதி வழங்க வேண்டும் 

அதிகாரத்தில் இருப்பதால், என் உறவினரின் இரத்தத்திற்குப் பதிலாக ஒரு மாண்டேக் குடும்பத்தவரின் இரத்தம் சிந்தப்பட வேண்டும். ஓ, என் உறவினரே!

 

இளவரசர்: பென்வோலியோ, இந்த இரத்தக் களரியான சண்டையைத் தொடங்கியது யார்?

 

பென்வோலியோ: 

இங்கே இறந்து கிடக்கும் டைபால்ட் தான் இதைத் தொடங்கினான்; 

 ரோமியோ அவனைக் கொன்றான். 

முதலில்  ரோமியோ அவனிடம் மென்மையாகத்தான்  பேசினான் .

இந்த சண்டை மிகவும் அற்பமானது என்று கூறினான், 

மேலும் உங்கள் கடுமையான கண்டனத்தையும் அவனுக்கு நினைவூட்டினான். 

அவன் மிகவும் பணிவாகவும், தாழ்மையுடனும் இதைக் கூறினான்.

 ஆனால் டைபால்ட்டின் கட்டுக்கடங்காத குணம் எந்த சமாதானப் பேச்சையும் கேட்கவில்லை. 

அவன் தன் வாளை உருவி மெர்குஷியோவின் மார்புக்கு நேராக நீட்டினான். 

ஆவேசமடைந்த மெர்குஷியோவும், அதே வேகத்துடன் தன் வாளால் பதிலடி கொடுத்தான்.

 மரணத்தை துச்சமாக மதித்து அவன் டைபால்ட்டை எதிர்கொண்டான். 

டைபால்ட் அதைத் தன் திறமையால் சமாளித்தான்.

 ரோமியோ சண்டையை நிறுத்தும்படி உரக்கக் கூவினான், சண்டையைத் தடுப்பதற்காக தனது கையை அவர்கள் இருவரின் வாள்களுக்கும் இடையில் குறுக்கே நீட்டினான்.

ஆனால் பொறாமைமிக்க டைபால்டின் வாள் அவன் கைகளின் ஊடாகப் புகுந்து  மெர்குஷியோவின் உயிரை பறித்தது; 

பிறகு தியபால்ட் தப்பியோடினான். 

ஆனால் சட்டென்று ரோமியோவிடம் திரும்பி வந்தான், பழிவாங்கும் உணர்ச்சியோடு அவர்கள் மின்னல் வேகத்தில் மோதிக்கொண்டார்கள்; 

நான் அவர்களைப் பிரிப்பதற்குள் வீரன் டைபால்ட் கொல்லப்பட்டான். 

இதைக் கண்ட ரோமியோ அங்கிருந்து தப்பிச் சென்றான். இதுதான் உண்மை, 

இல்லையெனில் பென்வோலியோ ஆகிய நான் இறக்கவும் தயார்.

 

லேடி கேபுலெட்:

 அவன் (பென்வோலியோ) மாண்டேக் குடும்பத்தைச் சேர்ந்தவன்; 

அவனது பாசம் அவனைப் பொய் சொல்லத் தூண்டுகிறது, அவன் உண்மையைச் சொல்லவில்லை. 

இந்த மோசமான சண்டையில் அவர்களில் ஒரு இருபது பேர் போரிட்டார்கள்; 

அந்த இருபது பேராலும் ஒரு உயிரைத்தான் (தியபால்ட்) கொல்ல முடிந்தது. 

இளவரசரே, நான் நீதியைக் கோருகிறேன்; 

ரோமியோ டைபால்ட்டைக் கொன்றான், 

அதனால் ரோமியோவும் உயிர் வாழக் கூடாது.

 

இளவரசர்: 

ரோமியோ அவனைக் கொன்றான்; ஆனால் அவன் மெர்குஷியோவைக் கொன்றானே

. இப்போது அவனது உயிரை  யார் திரும்பவும்  கொடுப்பது?

 

மாண்டேக்: 

ரோமியோ இதற்கு பொறுப்பு  அல்ல இளவரசரே, 

அவன் மெர்குஷியோவின் நண்பன்; 

டைபால்ட்டின் உயிர் சட்டப்படி முடிய வேண்டிய ஒன்றுதான், ( உயிரோடு இருந்திருந்தாலும் அவனுக்கு மரண தண்டனை தான் கொடுத்திருப்பீர்கள் )   

அதைத்தான் அவன் முடித்து வைத்திருக்கிறான்  (தற்காப்புக்காக).

 

இளவரசர்:

 அந்தக் குற்றத்திற்காக, நாம் அவனை உடனடியாக இங்கிருந்து நாடுகடத்துகிறோம். 

உங்கள் வெறுப்பினால் உண்டான விளைவுகளில் எனக்கும் அக்கறை இருக்கிறது,

 உங்கள் முரட்டுத்தனமான சண்டையால் இப்போது எனது இரத்தமும்  (உறவினரான மெர்குஷியோ) இங்கே சிந்தித் தவிக்கிறது. 

அதனால்  உங்களை நான் ஒரு பெரிய அபராதத்தால் தண்டிக்கப்போகிறேன், 

அதன் பிறகு தான்  இழப்பை நீங்கள் அனைவரும் உணர்வீர்கள். 

உங்கள் கெஞ்சல்களுக்கும்  கோரிக்கைகளுக்கும் நான் செவிசாய்க்க மாட்டேன்;

கண்ணீரோ அல்லது பிரார்த்தனையோ உங்கள் தவறுகளைத் தீர்க்காது. 

எனவே எதையும்  என்னிடம்  பயன்படுத்தாதீர்கள். 

ரோமியோ இங்கிருந்து விரைந்து வெளியேற வேண்டும்; 

அவன் பிடிபட்டால் அந்த மணித்துளியே அவனது கடைசி மணித்துளியாக இருக்கும். 

இந்த உடலை எடுத்துச் செல்லுங்கள், 

எமது கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்: 

கொலை செய்பவர்களை மன்னிப்பது, மீண்டும் கொலை செய்யத் தூண்டுவதைப் போன்றது

( அனைவரும் மறைகிறார்கள் )

 தொடரும் 

📚 எழுதியவர்:

மொழி பெயர்ப்பு  – தங்கேஸ்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *