தமிழவனின் ஷம்பாலா என்ற நாவல் அவருடைய ஆடிப்பாவைக்கு அடுத்ததாக வந்துள்ள முக்கிய புதினப் படைப்பு.ஒரு சிந்தனையாளனாக இருக்கிற எழுத்தாளன் தற்கால நாட்டு நடப்புகளைக் கண்டு படும் பாட்டின் ஒரு வரைகோட்டுப் படைப்பு இது . சிந்தனையாளரான பேராசிரியர் அமர்நாத் அறிவு வன்முறையை எதிர்க்கிற அறிவு வர்க்கத்தின் பிரதிநிதியாகவும் அமர்நாத் உருவாக்கிக் கதைக்குள் கதையாக இரண்டாவதாக வரும் உண்மை அரசியல் கதையின் நாயகன் ஹிட்லர் சாதாரண மனிதனின் உடல் சார்ந்த வன்முறையால் எதிரிகளை வீழ்த்தும் சதை அரசியலின் பிரதிநிதியாகவும் காணப்படுகின்றனர்.
மனிதன் தான் வாழும் காலத்தின் நிலைகளுக்கு ஏற்ப உருவாகும் அரசியல் சமுக உறவுகள் பண்பாட்டு அமைப்புகள் இவற்றால் சிறைப்படுத்தப்பட்ட கைதி.ஒவ்வொரு காலமும் தரும் நெருக்கடிகளை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதன் பதிவாக இலக்கியம் முதலியன வெளிப்படுகின்றன.ஆனால் அவ்வாறு வெளிப்படுவது அல்லது வெளிப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல.வென்று நாடாளும் அதிகார வர்க்கம் தனக்கு எதிரான எந்தக் கருத்தாக்கத்தையும் தாராளமாக அனுமதிக்காது.அவை பூடகமாக மறைமுகமாக உருவகமாக அல்லது முகமூடிகளுடன்தான் வெளியாக வேண்டும்.இதை மனதில் கொண்டு நாம் பழைய இலக்கியங்களை எல்லாம் தோலுரித்துப் பார்க்க முடியும்.
இன்றைய காலம் அச்சம் தரும் ஒரு இக்கட்டான நெருக்கடிநிலையைச் சிந்திக்கிற எல்லோரு மேலும் திணித்திருக்கிறது. இங்கே அதை உணர முடிந்த தமிழவன் இந்த அச்சம் நிரம்பி வழியும் சூழலைக் கதையுலகில் படைத்துக் காட்டியுள்ளார்.
இங்கே இவர் கதை நடப்புலகில் நடந்தாலும் ஷம்பாலா என்ற நன்மை நிறைந்த அமைதிப் பூமியைக் கைகாட்டுகிறார்.இந்த இடம் பற்றிய கதை விஷ்ணுபுராணத்தில் உள்ளதாம். அங்கிருந்துதான் உலகைக் காப்பாற்றப் போகிற கல்கி அவதாரம் தோன்றும் என்கிறது அது. இதுவே புத்தமத நூல்களில் ஷம்பாலா எனக் கூறப்படுகிறதாம்.அது எங்கோ திபெத்திற்கு மேலே உள்ளதாகக் கதைகள் கூறுகின்றன.இந்த உலகை உண்மையிலேயே சோவியத் ருஷ்யாவினர் தேடிச் சென்ற கதையும் உண்டு.இந்த உலகை மையமிட்ட ஆங்கிலம் முதலிய மொழிகளில் நாவல்களும் திரைப்படங்களும் வந்துள்ளதாக அறிகிறோம்.
உத்தரகுருவம் என்ற ஒன்று ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமதவஞ்சம், ஏமவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம் என்ற அறுவகைப்பட்ட போகநுகர்ச்சித் தானங்களில் (பிங்.) ஒன்றாகப் புராணங்கள் கூறும். அங்கு மனிதர்கள் பதினாறு வயதும் பன்னிரு வயதும் உள்ள ஆண் பெண்ணாய் எப்போதும் இன்பம் துய்த்திருப்பார்களாம்.உத்தம தானம் செய்துள்ளவர்கள் தானப் பயனால் இதை எய்தி தானப் பயன் உளளளவும்இன்பம் துய்த்திருப்பர்.பூம்புகார் உத்தர குருவம் போன்றிருந்து கோவலனும் கண்ணகியும் அங்கு இன்பம் துய்த்திருந்ததாகச் சிலப்பதிகாரம் ( மனையறம்படுத்த காதை 10) கூறுகிறது.இத்தகைய செய்திகளை சீவக சிந்தாமணியிலும் காணலாம்.மேலும் இந்தக் கருத்தாக்கமே தமிழ் ஐந்திணைக் கோட்பாட்டிற்கு வித்திட்டிருக்கவேண்டும் என்று ச.வையாபுரிப்பிள்ளை கருதுவார் என்பது சிந்திக்க வேண்டிய சுவையான செய்தி.அதாவது கரடு முரடான உண்மை வாழ்க்கையிலிருந்து விடுதலையைத் தேடும் ஆதிமனிதனின் கற்பனை ஓட்டங்கள் இவை.தமிழவனும் அறிந்தோ அறியாமலோ இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார் இங்கே.ஆனால் அது நாவலின் இறுதியில் அமைந்து விரிவு பெறவில்லை .கதை முழுதும் நடப்புலகில் நடக்கிறது. சிந்தனைக் காவல் துறையின் காவலர்கள் சிந்தனையாளர்களைக் கணந்தோறும் மனப்பிரமையாக வந்து துரத்துகிறார்கள்.ஆனால் அவர்கள் உண்மையிலும் அப்படி நடப்பதின் பகடியாகவே நாம் இதைப் பார்க்கலாம்.மொத்தத்தில் இன்று நாம் வாழும் சூழலில் நிரம்பி நிறைந்திருக்கிற அச்சம் நாவல் முழுதும் பரவியிருக்கிறது.அதை அவர் கதை நடத்தும் முறை சாதித்திருக்கிறது.
தமிழ்ச் சமுகம் உட்பட்ட இந்தியச் சமுகம் சமய வழிப்பட்டதாகவே வரலாற்றுக் காலந்தொட்டு இயங்கி வந்திருக்கின்றது. பழங்குடிச் சிந்தனை மரபிலிருந்து சமயச் சிந்தனை மரபிற்கு அடியெடுத்து வைத்த இந்தியச் சிந்தனை மரபு அடுத்த அறிவியல் சிந்தனை மரபிற்கு இடம்பெயரவே இல்லை.அதற்கு இந்த நாட்டின் பொருளாதார வறுமையும் அறிவு வறுமையுமே காரணம்.இவற்றை நன்கு பயன்படுத்திக் கொண்ட புரோகித வர்க்கம் இந்த மாற்றத்தை வளர விடவில்லை.இது ஒரு புறம்.
உலகெங்கும் இந்திய சமுகம் போன்று பின்தங்கியிருக்கும் இசுலாமிய சமுகம் தன் மீது தொடுக்கப்பட்ட போர்களால் தன்நிலையை விடாமல் பிடித்துக் கொள்ளச் சமயக் கூடாரத்திற்குள் ஒளிந்து கொண்டு அடிப்படை வாதத்தை வளர்த்தெடுத்தது.இதற்கு சீயோனியவாதிகளும் இசுலாமிய நாடுகளின் ஆளும் வர்க்கமும் காரணமாக விளங்க அதற்குக் கிரியா ஊக்கிகளாக மேற்கத்திய சக்திகள் அமைந்தன.இதற்கு அவர்கள் தங்கள் நலம்பேணும் தந்நலம்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
ஆங்கிலேய ஆட்சியில் உருவான மறுமலர்ச்சி இயக்கங்கள் இந்திய சமுகத்தை அறிவியல் யுகத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பட்டிருந்த அருமையான வாய்ப்பை இந்தியத் தேசியத்தின் அடையாளங்களில் ஒன்றாகச் சமயச் சார்பு அடையாளத்தை வளர்த்தெடுத்துப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.இங்கே உலக அளவில் மேற்கத்திய நாடுகள் இன்று செய்து வரும் சூழ்ச்சி போல ஆங்கில ஆட்சியும் அன்றே செய்து இந்திய சமுகத்தைச் பிற்போக்குகள் நிறைந்த சமயச் சார்புச் சமுதாயமாக ஆக்கிவிட்டது.
முதன் முதலில் சமயச் சார்பை விட்டு நின்று ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க முயன்ற விடுதலைப் போராட்ட இயக்கங்களின் பணிகளை முடக்க ஆங்கில அரசாட்சி முடுக்கி விட்ட சமயங்கலந்த அரசியல் இந்தியா பாகிஸ்தான் என்ற பிரிவினைக்கு வித்திட்டது.காலங்காலமாக அரசியலோடு பின்னிப் பிணைந்து கிடந்த சமயம் பாகித்தானை உருவாக்கினாலும் பங்களாதேஷில் உருவான மொழிவழித் தேசியம் சமய வழித் தேசியம் என்ற பாகிஸ்தான் என்ற கருத்தாக்கத்தை உடைத்தது.
பாகிஸ்தான் பங்களா தேஷ் என்ற இரு நாடுகளின் வரலாறு போல இந்தியாவிலும் விடுதலைக்கு முன்பிருந்தே சமயவழித் தேசியமும் மொழிவழித் தேசியமும் வளர்ந்து வந்தன என்பதை நாம் அறிவோம்.தமிழ் நாட்டில் சமய வழித் தேசியம் விடுதலைக்கு முன்பும் பின்பும் இன்றும் எடுபடாத சரக்குத் தான்.சமய வழி அரசியலின் வஞ்சக வலைகளைப் பருமையாகத் தோலுரித்துக் காட்டி இதை வளராமல் செய்து மொழிவழித் தேசியம் வளரத் துணைநின்ற சக்திகளில் வலுவான ஒன்றை உருவாக்கித் தந்தவர் பெரியார்.அவர் போன்றோர் காட்டிய வழியில் இயல்பாக வளர்ந்திருக்கவேண்டிய மொழிவழித் தேசியத்தை வளரவிடாமல் உடைக்கும் கருவியாகத் தேசிய அளவில் சமய வழித் தேசியத்தைக் கட்டமைக்கிற போக்கு இன்று வலுப்பெற்று வருகிறது.இதே செயலை மொழிவழித்தேசியத்தை வளர்த்தெடுக்கவேண்டிய மாநிலச் சக்திகள் சாதியச் சுருக்குக்குள் வீழ்ந்து தாம் அறிந்தோ அறியாமலோ சமயவழித்தேசியச் சக்திகளின் செயலுக்குத் துணை நிற்கிற போக்கையும் பார்க்கிறோம்.இதை நாவலில் தமிழவனும் விவாதிக்கிறார். (பக்.43).மொத்தத்தில் உலகெங்கும் சமயங்கள் அரசியலில் இருந்து பல நாடுகளில் விலகி நிற்க இந்திய அரசியலில் அவை பண்டு போல ஆட்சி பெற்று வீறுபெறுவது பெரும்பான்மை மக்களின் விடுதலைக்கு உகந்தது அன்று.
அது போலவே இந்திய மொழிகளில் பலவற்றின் இலக்கியங்களும் சமய இலக்கியங்களாக உள்ளன.அதுவும் இம்மொழிகளில் தொடக்க கால இலக்கியங்கள் இராமாயணம் பாரதம் போன்ற சமயச் சார்பு இலக்கியங்களாகவே உள்ளன.வடமொழியில் தோன்றிய இராமாயணம் பாரதம் என்ற இவை இரண்டும் தொடக்க காலத்தில் சமயம் சாராது வீரகாவியங்களாக இருந்தன என்றும் அவற்றைப் பிற்காலத்துப் சமயப் புரோகித வர்க்கமே சமய இலக்கியங்களாக மாற்றி விட்டன என்றும் ச.வையாபுரிப் பிள்ளை வேறு மேற்கோள்களையும் ஆதாரம் காட்டி இலக்கிய உதயம் என்ற தன் நூலில் குறிப்பிடுவது நினைக்கத்தக்கது.
தமிழில் சங்க இலக்கியத்தை நாம் சமயச் சார்பற்ற தன்மைகளைக் கொண்டிருந்தது என்று கொண்டாடினாலும் அது எந்த அளவுக்கு அமைந்திருந்தது என்பதை நாம் நுட்பமாக ஆராயவேண்டும். சங்க இலக்கியத்திலேயே வைதிக புரோகித வர்க்கமும் அவர்கள் கோட்பாடுகளான வேள்வி வேட்டல் ,அறநூல் (ஸ்மிருதி)கருத்துக்கள் ,அண்டகோளக் கோட்பாடுகள் போன்றவையும் தமிழர்க்குரிய தனிக்கோட்பாடுகளோடு தலைமேல் வைத்துக் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். (சுப்பிரமணிய சாஸ்திரியார் பி.எஸ், சங்க நூல்களும் வைதிக மார்க்கமும், யுனைட்டெட் பிரிண்டஸ் லிமிடெட் அச்சுக்கூடம், 1951).சமயம் அதிரடியாக இலக்கியத்துக்குள் நுழைந்துவிட்டது என்பதைப் பரிபாடலில் பார்க்கலாம்.பிற்காலத்தில் பொங்கி எழுந்த சமய இலக்கியங்கள் சங்க இலக்கியத் திணைக்கோட்பாடுகளை தழுவிக்கொண்டு தமிழ் இலக்கிய வளர்ச்சியைத் தம்போக்கில் தீர்மானித்தன என்பது தமிழ் இலக்கிய வரலாற்றின் மறுபக்கம். எப்படி இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழ் இலக்கியம் பெருமளவில் சமயஞ்சார்ந்ததாகவே இருந்தது.அது சமயத்திலிருந்து விடுதலை பெற்றுச் சமயச் சார்பற்ற தன்மை நோக்கி நடைபோட்டது மேலை நாட்டுத் தொடர்புகளால்தான்.இன்றையத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் போக்குகள் சமயஞ்சாராததாக அமைந்திருப்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய நாழிகைக் கல் ஆகும்.எனினும் இசையிலும் நாட்டியத்திலும் சமயம் இன்னும் தன் செல்வாக்கை விடவில்லை. இசையில் மாயூரம் வேதநாயகர், இலக்குமணப்பிள்ளை போன்றோர் சமயச் சார்பற்ற தன்மைகளைப் புகுத்திய புரட்சியைச் சநாதன இசை உலகு தோற்கடித்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.சொற்பொழிவுத் துறையில் சமய இலக்கியச் சொற்பொழிவுகள் தம் செல்வாக்கை இழக்கவில்லை எனினும் சமயம் சாராத சிலம்பு மணிமேகலை போன்றவற்றை மையமிட்ட இலக்கியச் சொற்பொழிவுகள் சமயம் சாராத கூறுகளை வளர்க்கின்றன.சிலப்பதிகாரத்தைச் சமயம் சாராமல் பட்டி தொட்டியெல்லாம் சொற்பொழிவு மூலம் எடுத்துச் சென்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சி.,பின் வந்த திராவிட இயக்கப் பேச்சாளர்கள் போன்றோர் தமிழ்ச் சொற்பொழிவை சமயத்திலிருந்த தம்மை அறியாமலேயே விடுதலை செய்துள்ளார்கள்.
தமிழ் எழுத்து இலக்கியம் சமயத்தின் பிடியிலிருந்துவிடுபட்டது போன்றே அது மேட்டுக் குடிமக்களின் ஒதுக்கிடமாகவும் காலம் காலமாக இருந்த நிலையை மாற்றிப் புதுக் கல்வி அறிவு பெற்ற தலைமுறையினர் தமிழ் இலக்கியத்தை மக்களாட்சிப் பண்பு பெற்ற ஒரு பொது அரங்காக வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.தமிழில் தோன்றியிருந்த சமுக யதார்த்த வாதம் இப்போது தோன்றியுள்ள தலித்தியம், பெண்ணியம், வட்டார இயம், சூழலியம் போன்ற போக்குகள் சமயத்தின் பிடியிலிருந்தும் சமுதாய ஆதிக்கங்களின் பிடியிலிருந்தும் தழிழை விடுதலை செய்துள்ளன.
இன்று கோலோச்சும் திரைத்துறை அன்று சமயத்தின் பிடியிலிருந்தது என்றும் அது பின் படிப்படியாகத் திராவிட இயக்கங்களின் முயற்சியால் அதிலிருந்து விடுதலை அடைந்தது என்றும் உணர்ந்துகொள்ளும்படி பாரதிதாசன் என் தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார் என்று தொடங்கும் தமிழ் நாட்டிற் சினிமா என்ற ஒரு அருமையான கவிதையையே இயற்றியுள்ளார் (தமிழ்த்திரைப்படங்களும் தமிழ் இலக்கியங்களும் கி.நாச்சிமுத்து சாகித்திய அகாதமிக் கருத்தரங்கத் தலைமையுரை 2013)
இன்றைய சின்னத்திரைத்துறை மீண்டும் கோயில் வழிபாடு, பரிகார பூசை ,குறி சொல்லல் ( சங்க கால வெறியாட்டு), அற்புதங்கள் போன்றவற்றை மீண்டும் மீண்டும் காட்டிச் சமுதாயத்தைச் சமயம் சார்ந்த பண்பாட்டுக்குள் வீழ்த்திக் கொண்டுள்ளன என்பது ஒரு அபாய அறிவிப்பாகும்.அரசியலில் சமயத்தைப் புகுத்துவது போல கலையில் மறுபடியும் பின்நோக்கிப் போகும் போக்கு இது.
தமிழ் இலக்கியத்தைச் சமயத்தின் பிடியிலிருந்து விடுபடத் துணை நின்ற இலக்கிய சமுக இயல் சார்ந்த போக்குகளான சமுக யதார்த்த வாதம்,பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றுடன் பின் நவீனத்துவம் மாய எதார்த்த வாதம் போன்ற புது இலக்கியப் போக்குகளும் தன் பங்கை ஆற்றி வருகின்றன.இவற்றை முன்னெடுப்பவர்களில் ஒருவராகத் தமிழவன் இலக்கியத்தில் நீண்ட காலமாக இயங்கிக் கொண்டுவருகிறார்.அவருடைய முந்தைய நாவல்கள் இப்போக்கில் தமிழக அரசியல் சமுகவியல் சார்ந்து வெளிவந்துள்ளன.இந்த நாவலில் தமிழவன் தன் நாவல் வழி தனக்குத் தெரிந்தோ தெரியாமலோ சமய ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நிலையிலுள்ள தமிழ் இலக்கியத்தில் ,சமயம் அரசியலில் புகுவதால் ஏற்படும் அச்சத்தையும் விளைவையும் பாடுபொருளாக்கியிருக்கிறார்.இது எனக்குத் தெரிந்தவரை யாரும் செய்யாத ஒன்று.ஒரு வகையில் இந்த வகை நாவல் வகை மூலம் தமிழவன் தமிழில் ஒரு புதிய இலக்கியத் தடத்தை உருவாக்கியிருக்கிறார் என்று நாம் கொண்டாடமுடியும்.இன்று வழக்குப் பெற்று வரும் உருவக வழக்கான முன்னத்தி ஏர் ஓட்டி இருக்கிறார் என்ற புகழ்ச்சி மொழியாலும் இதைக் குறிப்பிடலாம். இதை அரசியல் நாவல் என்ற வகையிலும் வகைப்படுத்திப் பார்க்க முடியும்.அதை நாவலுக்குள் முக்கிய கதை மாந்தரான அமர்நாத்தே சொல்கிறார்,(பக்.9),
இங்கே நாம் இரண்டைக் குறிப்பிடவேண்டும். சமயத்திற்கு எதிரான இயக்கம் என்பது ஒன்று ,இன்னொன்று சமயத்தை அரசியலில் கலப்பதை எதிர்க்கும் இயக்கம் என்பது இன்னொன்று.பெரியார் இரண்டையும் செய்தார்.சமயத்திற்கு எதிரான இயக்கம் என்பது சமயத்தை அழிப்பது அன்று.சமயச் சிந்தனைக்கு மாற்றாக காரண காரிய நேரடி அனுபவ ஆராய்ச்சியை அடித்தளமாகக் கொண்ட அறிவியல் உணர்வைப் பரப்புவது.இப்போராட்டத்தில் சமயக் கண்டனம் என்பது தவிர்க்க முடியாதது.அது முதல் கட்டம்.ஆனால் அறிவியல் உணர்வைப் பரப்புவது என்ற இரண்டாம் கட்டமே முக்கியம் பெறுகிறது.இதை எந்த சமய எதிர்ப்புணர்வையும் காட்டி யாரையும் சீண்டாமல் அமைதியாக அறிவியல் பரப்புரை செய்வது.இதைத் தான் இலக்கியம் செய்ய முயல வேண்டும்.அத்தோடு பிற துறைகளில் குறிப்பாக அரசியலில் சமயம் புகுவதை எதிர்ப்பது.இதையும் இலக்கியம் செய்யவேண்டும்.அந்த வேலையையே தமிழவனின் இந்த நாவல் மறைமுகமாகச் செய்கிறது.
இங்கே ஒன்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.தமிழவன் சமயத்தை மதத்தை எதிர்க்கவில்லை.அது அரசியலிலும் பிற துறைகளிலும் கலப்பதன் விளைவுகளைத் தான் நடுநிலையாகச் சொல்ல முயல்கிறார்.இவ்வாறு ஒரு உயர்ந்த பொதுத் தளத்தில் உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் கொச்சையாக மத எதிர்ப்புப் பரப்புரை செய்கிறார் என்று முத்திரை குத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது. சமயம் சாராத நல்ல அரசியலில் சமயம் தன்பாட்டுக்கு அடங்கி இருக்கும்.ஆனால் அது ஆட்டிப் படைக்கும் சக்தியாக இருக்காது.
இதை வேறு வகையிலும் விளக்கலாம். நமக்குத் தெரிந்த திருக்குறள் வழியாக இதை விளக்கலாம்.நாம் போற்றிக் கொண்டாடும் மனுநீதிச் சோழர் வகைத் தமிழ் அரசர்கள் போலன்றித் திருவள்ளுவர் கண்ட அரசியலுக்கு சமயம் அடிப்படையில்லை.சமயத்திற்கு அரசியல் அடிப்படை என்கிறார்.மற்றெல்லாரும் மனுநீதி வேதநெறி தவறாத ஆட்சி என்று கூற வள்ளுவரோ நல்ல ஆட்சி நடந்தால்தான் சமய வழிப்பட்ட வாழ்க்கை நடக்கும் என்று தலை கீழாகக் கூறுகிறார்,
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்.(குறள்.560)
இங்கே ஆபயன் என்ற பொருளாதாரமும் அறுதொழிலோர் நூல் என்ற சமய வாழ்வுக்கும் நல்ல ஆட்சியே அடிப்படை என்கிறார்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் .(குறள்.543 )
என்ற குறளில் அந்தணரை மையமிட்ட சநாதன சமயமும் தவத்தோராகிய சமணர் பௌத்தர் முதலியோர் கூறும் அறங்களும் நல்ல ஆட்சியிலே நடக்கும் என்கிறார்.இது ஒரு சமயச் சார்பற்ற அரசியல் அறிக்கை.இதைத்தடம்புரட்டிப் பரிமேலழகர் அந்தணர் நூலுக்கும் அதில் கூறும் அறங்களுக்கும் என்று குன்றக் கூறுலாகத் தன் சார்பு வெளிப்படக் கூறுவார். இங்கே சமயச் சார்பற்ற அரசியல் நடத்தும் அரசன் ஆட்சியிலேயே அந்தணர் சமயமும் அதற்கு மாற்றாக விளங்கும் சமயங்களும் செழிக்கும் என்று வள்ளுவர் கருதுவதாக விளக்குவது நடுநிலை விளக்கமாக இருக்கும்.
இங்கே தமிழ்ச் சிந்தனை வழி வந்த தமிழவனையும் நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.ஒற்றைத் தன்மைப் பட்ட சமய வாழ்வை முன்னிறுத்தும் அரசியல் ஆபத்தானது என்பதை நாம் வள்ளுவர் வழியாகப் புரிந்து கொண்டு தமிழவன் நாவலை வாசித்தால் அவர் சமயச் சார்பற்ற தமிழ் மரபின் மைந்தன் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
இது வரை பீடிகை நீண்டு விட்டது.நாவல் பற்றிய திறனாய்வை இனிப் பார்ப்போம்.
கதைக்குள் கதையாக நாவல் விரிகிறது.கதை ஆசிரியர்தான் அமர்நாத் என்ற கதை சொல்லியாக நாவலை நகர்த்துகிறார்.அவர் மனவெளியில் தோன்றிய கதை அவர் கதையோடு கதையாக இணைந்து நடக்கிறது.
பேராசிரியர் அமர்நாத்தை அரசின் சிந்தனைக் காவல் துறைக் காவலர்கள் வீடுதேடிவந்து விசாரிப்பதிலிருந்து கதை தொடங்குகிறது முதல் இயலில். ஒற்றைப்படை இயல்களான 1,3,5,7,9,11,13,15 ஆகியவற்றில் நீளும் எட்டு இயல்களில் அவர் கதை நடக்கிறது.இரண்டாம் இயலில் அவர் கற்பனையில் உருவான ஹிட்லர் என்ற இளைஞன் கதை இணைகோடாகத் தொடங்கி இரண்டாம் இயலில் தொடங்கி இரட்டைப்படையா அமையும் ஏனை 2,4,6,8,10,12,14 ஆகிய ஏழு இயல்களில் நடக்கிறது.இது சிந்தனைப்போலிஸ் உளவு பார்க்க வந்த அன்று அமர்நாத்தின் மூளையிலிருந்துவந்த சிந்தனையில் நிழல் படிந்த உபகதை (பக்.219 ).அமர்நாத் கதையை நனவிற் கனவாகவும் ஹிட்லர் கதையை கனவில் நனவாகவும் நாம் கருதலாம்.
இவ்வாறு கதைகளை இணையாக வெவ்வேறு இயல்களில் நடத்தும் உத்தியைத் தமிழவன் தன் ஆடிப்பாவை என்ற நாவலிலும் கையாண்டிருந்தார்.
முதல் இயலில் அரசின் சிந்தனைக் காவல் துறைக் காவலர்கள் இருவர் இடது சாரிச் சுதந்திரச் சிந்தனையாளரான பேராசிரியர் அமர்நாத்தின் மனதில் ஒளிந்துகொண்டிருக்கும் அரசுக்கு எதிரான கருத்துக்களை விசாரிக்க வருகின்றனர்.மூன்றாம் இயலில் தொடர்ந்து அவர்கள் விசாரணை பற்றிக் கதை சொல்கிறது.இங்கே அமர்நாத் நண்பர் சுரேஷ் என்பவர் அவரை நூலகத்தில் சந்திக்கின்றார்.இங்கே அவர்கள் தமிழ் நாட்டில் பெரியார் தாக்கம் குறைவைதையும் சாதிய மதவாத சக்திகள் வலுப் பெற்று வருவதையும் கவலையுடன் பேசுகின்றனர்.அடுத்ததாக ஐந்தாம் இயலில் அமர்நாத்தின் பக்கத்து வீட்டுக்காரர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இராஜஸ்தானத்துக்காரர் ராம் நாத், அமர்நாத் வீட்டுக்கு வருகிறார்.நாட்டுப் பற்றை வளர்க்க டாங்கியைக் காட்சிப்பொருளாகப் பல்கலைக்கழகத்தின் முன் வைத்த துணைவேந்தரைப் பற்றிய பேச்சு வருகிறது.புதுமைப் பித்தனுடைய கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதை பற்றி ஒரு குறிப்பு வருகிறது.தமிழ் நாட்டில் வடமொழி தமிழ்ப் பகை சாதிப் பகையாக இருப்பதைப் போலக் கர்நாடகத்திலும் நல்ல சமஸ்கிருதம் பேசாதவன் தாழ்த்தப்பட்டவனாகச் சித்தரிக்கப்படும் இலக்கியக் குறிப்புகள் வருகின்றன.இங்கே யுவன் சந்திரசேகர் எழுதிய குள்ளச்சித்தன் சரித்திரத்தில் பிராமண ஆசிரியர் மாணவனை முத்துஸ்வாமி என அழைக்க அவன் சார் நான் முத்துச்சாமி ,முத்துஸ்வாமி அல்ல என்பான்.அதே போன்று தமிழவன் மொழிபெயர்த்த சித்தலிங்கையாவின் கவர்மெண்ட் பிராமணன் என்ற நாவலிலும் இது போன்ற ஒரு நிகழ்ச்சி வரும்.தொடர்ந்து அவர் வீட்டிற்குத் தொலைதூர மலையூர் ஒன்றிலிருந்து வரும் அவர் பெரியப்பா மகன் கன்னையா வருகிறார்.அவர் எப்படி தொலைத்தொடர்புகள் அற்ற அவர்கள் ஊரில் இன்னும் பண்டமாற்று இருப்பதையும் பணமதிப்பு நடவடிக்கை அவர்களுக்குத் தெரியாமல் போய்க் கிழவிகள் செத்த கதைகளையும் கூறுகிறார்.பல்வேறுபட்ட சமச்சீரற்ற பண்பாட்டு வளர்ச்சி உள்ள இந்தப் பரந்த நாட்டை ஒற்றைப் பண்பாட்டு முறையில் புதிய செய்தி பரிமாற்றம் பெற்ற ஒரு நாடாக அரசு கருதுவது எவ்வளவு அவலமானது என்பதை இங்கு சுட்டுகிறார்.
அடுத்ததாக ஏழாவது இயலில் பேராசிரியர் அமர்நாத் திருநெல்வேலி மொழிபேசும் ஒருவர் நடத்தும் பதிப்பகம் ஒன்றுக்குப் போகிறார்.அங்கு காலேல்கர் என்ற மராத்திப் பெயரில் தமிழில் சினிமாத்தனமான நாவல்களை எழுதித்தள்ளும் எழுத்தாளரைச் சந்திக்கிறார். அவரைப் பற்றிய ஒரு கேலிச்சித்திரத்தை அதில் தீட்டிக் காட்டுகிறார். மலையாளத்தில் ஓ.வி.விஜயன் நெருக்கடி நிலைக் காலத்தில் எழுதிய தர்மபுராணம் என்ற நாவல் பற்றிய குறிப்பு வருகிறது அந்த நேரத்தில் அவர் நண்பரும் சிந்தனையாளருமான சுரேஷ் வருகிறார்,இருவரும் இஸ்லாமியத் தீவிரவாதம் சமய பாசிசத் தீவிரவாதத்திற்குத் தீனிபோடுகிறது என்பதை விவாதிக்கின்றனர்.இங்கே ஒரு இரண்டாம் நெருக்கடி நிலைக் காலத்திற்குரிய அறிகுறிகள் தென்படுவதைத் தொட்டுப்பேசுகின்றனர்.
ஒன்பதாவது இயலில் ஊரில் அன்று இறந்துபோன ஒரு சிறுவனின் இறப்பை வைத்து நடக்கும் மத அரசியல் பற்றி அமர்நாத்,ராம் நாத்,பதிப்பக உரிமையாளர் ஆகிய மூவரும் நடத்தும் உரையாடல்கள் சமகால நிகழ்வுகளை எதிரொலிக்கின்றன. இங்கே ஒவ்வொருவரும் வைத்திருக்கிற உண்மையைத் தங்கள் சக்திக்கேற்ப எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பதை அமர்நாத் சிந்திக்கிறார்.காந்தியின் கொலையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் படுவதைப் பற்றிய குறிப்பும் வருகிறது.கடைசியில் அமர்நாத் மகள் வீட்டிலிருக்கவே காணாமல் போனதாக ஒரு புகார் வந்திருப்பதாகக் காவல்துறை செய்தி வருவது அவருக்குள் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அடுத்து பதினொராவது இயலில் மறுபடியும் சிந்தனைக் காவலர்கள் இருவர் வருகின்றனர்.அவர்களில் ஒருவர் பேராசிரியர் அமர்நாத் மிக மதிக்கும் பேராசிரியர் வைத்திய நாத தேசிகர் மகன்.அவர் சிந்தனைக் காவல் துறையினர் கைக்கொள்ளும் புரட்சிவாதிகள் போன்றோர் எழுத்துக்களை ஆராயும் சொல் தொகுப்பு ஆராய்ச்சி முறை பற்றிப் பேசுகிறார்.திவிரவாதிகள் எழுத்துக்களை வாசித்து அவர்கள் கொலைச் செயல்களில் ஈடுபடும் முன்னே அதைத் தடுக்க முடியும் என்கிறார்.அதாவது அவர் புத்தகங்களையும் சிந்தனைகளையும் உளவு பார்க்கும் துறையைப் பற்றியும் அரசு தன் கொள்கைகளை எப்படி நுட்பமான பிரச்சாரம் மூலம் பரப்பும் என்பதைப் பற்றியும் பேசுகிறார்.காணாமல் போகாத தன் குழந்தை அமரியைக் காணாமல் போனதாகச் செய்தி பரப்புவது இத்தகைய உத்தியா ?தண்டனையா? என்று யோகிக்கிறார் அமர்நாத்.மேலும் இவ்வியலில் நீதித் துறை நடு நிலை பிறழ்வதைப் பற்றிய பேச்சும் வருகிறது.கி.பி.ஆறாம் நூற்றாண்டியல் பல்லவ மன்னன் மகேந்திர வர்மன், தான் எழுதிய மத்தவிலாசப் பிரகசனத்தில் தன் நாட்டு நீதிபதிகளே கையூட்டு முதலியவற்றால் முறைதவறியதை நையாண்டி செய்வான்.இங்கே திருவிளையாடல் புராணத்தில் பழிக்கஞ்சின திருவிளையாடல் நினைவுக்கு வருகிறது.
பதின்மூன்றாவது இயலில் கொஞ்சம் விறுவிறுப்பான கதைகள் வருகின்றன.அமர்நாத் சென்றிருந்த பதிப்பகத்தில் வேலைசெய்த இளைஞன் அமர்நாத் அவர்களைச் சந்திக்க வருகிறான்.அவன் இயற்பெயர் எட்வர்ட்.அவனுக்குப் படிப்பு வராமல் பல வேலைகளையும் செய்து திரிகிறான்.அவன் நண்பன் ஒருவன் வீட்டை நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்ற பாதிரியார் கைக்கொள்வதைக் கண்டு சினந்து வலது சாரித் தீவிர வாதிகள் குழுவில் சேர்கிறான்.அங்கு அவன் கூட்டத்தோடு கூட்டமாய் எப்படி மூளைச் சலவை செய்யப்படுகிறான் என்பது சொல்லப்படுகிறது.அவன் வேலை தேடி வடநாடு செல்லும்போது அங்குள்ள ஒரு கோயிலை ஒட்டியுள்ள பஜனை கோஷ்டியுடன் சேர்ந்தும் பின் அரசியல் செல்வாக்கு மிக்க மடாதிபதி ஒருவரிடம் பணியாற்றியும் தீவிர மதவாதியாக இருந்த காலத்தில் மடாதிபதி தன் தம்பி செய்த ஒரு குற்றத்திற்கு அவனை ஈடாக்கிச் சிறைக்கு அனுப்ப ஏற்பாடு செய்து விடுகிறார்.அங்கு சிறை அதிகாரியாக வரும் ஜெயினரான பரத்வாஜ் அவனுக்குக் கல்வியிலும் படிப்பிலும் ஆர்வம் ஏற்படுத்தி அவனைப் பட்டதாரியாக்கிச் சிறையிலிருந்து விடுதலை செய்து அனுப்புகிறார்.அவர் ஊட்டிய அகிம்சையைக் கற்றுக் கொண்டதால் கொலைவெறியோடு இருந்த ஏட்வர்டு அந்த எண்ணத்தைக் கைவிட்டுக் கத்திக்கு மாற்றாகப் புத்தகத்தைக் கையிலெடுக்கிறான். அப்படித்தான் அவன் அந்தப் பதிப்பகத்தில் வேலைக்குச் சேர்கிறான்.அமர்நாத் போன்றோர் படைப்புக்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறான்.புத்தகங்களை உருவாக்கும் அமர்நாத் போன்றோர்களைச் சிந்தனைப் போலீஸ் பின்தொடர்வதைப் பார்த்துத் தானும் அவரைப் பின்தொடர்கிறான்.இங்கே வலது சாரி அமைப்புகள் எப்படிக் கட்டமைக்கப்படுகின்றன என்பதை அவரும் சுரேஷும் நுட்பமாக அலசுகின்றனர்.அமர்நாத் வீடுவந்து சேர்ந்து மகள் இன்னும் கடத்தப்படாமல் அது பற்றிச் செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில் அவர் மனைவி அவர் நிலையை அறிந்து அழுவதாகக் கதை நடக்கிறது.
இறுதி பதினைந்தாம் இயலில் அவர் நண்பர் சுரேஷைக் காலனிய காலத்திய புட்டலிக்ட் என்ற கொடிய தடைச்சட்டத்தில் போலீஸ் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது.நீதிபதி அவ்வழக்கை விசாரிப்பதாகத் தெரியவில்லை .அமர்நாத் மனதில் தோன்றி இணையாக வளர்ந்து வரும் புதிய ஹிட்லர் உப கதையை நினைத்துப் பார்க்கிறார்.அக்கதை இங்கு வந்து இணைந்து கொள்கிறது.அக்கதையில் வரும் தண்டிபத்லா சாஸ்திரிகள் கூறும் எல்லா அதிகாரமும் நிறைந்த ஷம்பாலா என்ற கற்பனை உலகைப் பற்றிக் குறிப்பிடுவதோடு கதை முடிகிறது.இந்த ஹிட்லர் கதை அமர்நாத்துக்கு ஒரு வடிகாலாக அமைகிறது என்பது அவர் கருத்து.கலையை எந்த அரசும் கைது செய்ய முடியாது என்று நினைக்கிறார்.இது நாவலின் ஒரு தடம்.
இந்தப் பேராசிரியர் அமர்நாத் கதை முற்றும் சமகால அரசியல் பற்றி வரலாறு சமுகவியல் முதலிய கோணங்களில் வெளிப்படும் அறிவு பூர்வமான தன்னுரைகளும் உரையாடல்களும் கலந்து கதையாக நகர்த்தப்படுகின்றது.சற்றுக் கவனத்துடன் வாசிக்க வேண்டியவை.
சிந்தனைப்போலீஸ் உளவு பார்க்க வந்த அன்று பேராசிரியர் கருத்தில் உதித்த ஹிட்லர் என்ற இளைஞனின் கதை ஏழு இரட்டைப்படை இயல்களில் சொல்லப்படுகிறது.நாவலை இவ்வாறு இரண்டாகப் பிரித்துப் படிக்கவேண்டும்.

நாஜித் தலைவனாகிய ஜெர்மானிய ஹிட்லரை நினைவுபடுத்தும் படிப்பில் கவனமில்லாத ஒரு சிற்றூர் இளைஞன் அரசியல் அடியாளாக அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ.வாகவும் பின் துணை மந்திரியாகவும் ஆகிற கதை இது.அவன் நிழல் போல் தொடரும் அவன் பள்ளிப் பருவத்து ஏ.பி.சிங்.கதையும் சேர்ந்தே வருகிறது.இந்தக் கதை சமகால அரசியலில் தலைவர்களாக உருவாகியிருக்கிற சிலர் கதைகளோடு சில பகுதிகளில் ஒத்திருக்கலாம்.மேலும் இன்று வரும் சில அரசியல் திரைப்படங்களும் இது போன்ற கதைகளைக் கொண்டிருக்கின்றன.
ஏழாம் வகுப்பில் சாதுவாக இருந்த ஹிட்லர் என்ற பெயர் கொண்ட ஒரு கொத்தனார் மகன் திடீரென்று குஸ்திப் பயில்வானாகப் பெயரெடுக்கிறான்.அவன் பள்ளிக்கு நேரங்கழித்துச் சென்றதற்கு அவன் ஆசிரியரிடம் தன் தாய் செத்ததாகப் பொய் சொல்கிறான்.அதைக் கேட்ட ஆசிரியர் இதே போன்று இளமையில் முப்பத்தொரு ஆண்டுகட்கு முன் தன் அண்ணன் செய்து அடிவாங்கிப் பின் அவன் வீட்டை விட்டே ஓடிவிட்ட கதை நினைவுக்கு வருகிறது.இவ்வாறு இரண்டாம் இயலில் வரும் ஹிட்லர் கதை தொடர்கிறது.
பள்ளியில் தலைமை ஆசிரியரே பார்த்து அச்சப்படும் ஆளுமை கொண்ட ஹிட்லர் தான் குஸ்தியில் வீழ்த்திய சக மாணவன் ஏ.பி.சிங்கைத் தன் வாழ்நாள் முழுவதும் துணைவருகின்ற நண்பனாக்கிக் கொள்கிறான்.கிராமத்துப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து வெளியேறுகிறான் ஹிட்லர்.அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் அவன் வாழ்வில் நடந்தேறுகின்றன.. ஒன்று அவன் பள்ளியில் படித்த பின் ஒவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறான்.அங்கு ஆசிரியையாகிய தேவகி மேனனிடம் நட்புப் பூணுகிறான். இரண்டாவது தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஹார்வார்டில் படித்து முதலமைச்சரானவரின் கீழ்த் துணை அமைச்சராகிறான்.அவருடைய ஏவலின் பேரில் எதிர்க்கட்சித் தலைவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறான்.இது நான்காம் இயல் கதை.இதற்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் காணாமல் போய்விடுவதாக ஒரு குறிப்பு வருகிறது.ஆனால் எதிர்க்கட்சித் தலைவரின் கதையைக் இன்னும்கொஞ்சம் விரிவுபடுத்தியிருக்கலாம்.
ஆறாம் இயலில் முற்பகுதியில் ஓவிய ஆசிரியை தேவகி மேனன் ஹிட்லரிடம் உள்ள ஓவியத் திறமையைக் கண்டு வியந்து அவனை ஊக்குவிக்கிறாள்.இதனிடையில் ஹிட்லர் அங்கு படித்த பிரேம்குமாரோ ராம்குமாரோ என்ற ஒரு முரட்டு மாணவனை மொட்டை அடிக்கச் செய்து பழி தீர்த்து அடக்குகிறான்.இதற்கு அவனுடன் படித்துக் கொண்டிருந்த ஏ.பி.சிங்கு அள்ளைக் கையாகச் செயல்படுகின்றான்.தேவகி மேனனுக்கும் அவள் ஆந்திரக் கணவனுக்கும் பிறந்த மகள் பீரித்தி ராவ் என்ற கல்லூரி மாணவியை ஹிட்லர் அவர்கள் வீட்டில் சந்திக்கிறான்.இரண்டாம் பகுதியில் அவன் அமைச்சனானதை ஏற்றுக் கொள்ள முடியாத முதலமைச்சரின் இரண்டாவது மகனும் அவன் மனைவியான முன்னாள் சபாநாயகர்க்காரியாக இருந்தவளின் மகளும் அவர்கள் குழந்தையாகிய பேத்தியும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.முதலமைச்சர் மகனையும் அமைச்சராக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.ஹார்வார்ட் முதலமைச்சர் வேண்டு கோளுக்கு இணங்க ஹிட்லர் முன்னாள் சபாநாயர்க்காரி வீட்டுக்குச் சென்று அவர்கள் மீண்டும் முதலமைச்சர் வீட்டுக்கு வர ஏற்பாடு செய்கிறான்.
அடுத்த எட்டாம் இயலில் கதை இரண்டு கணுவாகப் பிரிகிறது.ஒரு பன்னாட்டு ஹோட்டலில் நடக்கும் ஒரு கூட்டத்திற்கு முதலமைச்சர் வருகிறார்.அவர் முகத்தில் தன் மகனும் மருமகளும் பேத்தியும் வீடு வந்து சேர்ந்த நிம்மதி தெரிகிறது.இதைப் பார்த்த முதலமைச்சரின் தனிச் செயலர் ஐயர் இதைக் குடைந்து குடைந்து கேட்கிறார்.ஹிட்லர் தான் முதலமைச்சர் மகனைச் சந்தித்து உங்களுக்காக நான் எதுவும் செய்வேன் என்று சொல்லித் தன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக் காட்டி அவரைச் சம்மதிக்க வைத்த குட்டைச் சொல்லி ஐயர் வாயைப் பிளக்க வைக்கிறான்.இங்கே காரியம் சாதிக்க எந்த அளவுக்கும் செல்வான் ஹிட்லர் என்பதை உணர்த்துகிறார் ஆசிரியர்.இங்கே தனிச்செயலர் ஐயர் பற்றிய நையாண்டிக் கேலிச்சித்திரம் நகைச் சுவை நிறைந்த பகுதி.இன்னொரு பகுதியில் ஹிட்லர் மான அவமானங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதை இரண்டு நிகழ்ச்சிகள் மூலம் காட்டுகிறார்.தேவகி மேனனுக்கு முருங்கை மரம் ஏறிக் காய் பறிக்கிறான். தேவகி மேனனின் ராங்கிக் காரியான மகள் பிரீத்தி ராவுக்காகத் தென்னை மரம் ஏறி இளநீர் பறிக்கிறான்.
பத்தாவது இயலும் பன்னிரண்டாவது இயலிலும் கதைகள் தொடர்சியாக அமைகின்றன.பத்தாவது இயலில் ஹிட்லர் தன் தலைமை ஆசிரியரிடம் பட்ட அடியை நினைத்துக்கொள்கிறபோது தான் ஒரு நாள் ஏ.பி.சிங் காலைத் தன் டயர் செருப்பால் மிதித்துவிட அதை அவன் சட்டை செய்யாததைப் பார்த்த பிரீத்தி ராவ் ஏ.பி.சிங் காலை அதே செருப்பால் மிதித்த ஒரு சாரமற்ற செய்தியை நினைத்துக் கொள்கிறான். இது ஹிட்லர் உணர்ச்சிகளைக் கண்டுபிடிப்பது எளிதல்ல என்பதைக் குறிக்கிறது போலும்.
இந்த இயலிலும் பன்னிரண்டாவது இயலிலும் முக்கியமாக இடம் பெறும் கதை நிகழ்ச்சி அசாம் கேடரைச் சேர்ந்த தலித்தான லக்ஷ்மண் என்ற ஐ.பி.எஸ் ஆபிசர் கதையும் தண்டிபத்லா விசுவநாத சாஸ்திரியின் ஒன்றுவிட்ட தம்பி தண்டிபத்லா சாஸ்திரி கதையும்.
லக்ஷ்மண் ஐ.பி.எஸ் உயர் போலீஸ் அதிகாரியாயிருந்தாலும் தன் சொந்த ஊரில் செருப்பு அணிந்து வர முடியாத அவலத்தால் இடமாற்றம் பெற்று ஹிட்லர் மாநிலத்திற்கு வருகிறான். தான் காதலித்து மணந்து கொண்ட தன் ஐ.பி.எஸ் பேட்ச் மேட்டான தன் மனைவி புல்புல்லை அடித்த புகார் அவனை அலைக்கழிக்கிறது.அவர் அசாமில் பணியாற்றியபோது அங்குள்ள மேல் சாதிக் காவல் துறை ஒரு மதக் கலவரத்தில் அமைதி திரும்பப் போலீசுக்கு உதவிய இரு முசுலீம்களை வேண்டுமென்றே என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிட்டு அப்பழியை இவர் மீது போட்டுவிடுகிறது.அதனால் அவர் தம்பி பைத்தியமாகிறான். வேலை மாறுதல் பெற்று வந்த மாநிலம் ஹிட்லர் துணை அமைச்சனாக இருக்கும் மாநிலம்.அம்மாநிலத்தின் முதலமைச்சர் இரண்டு குழந்தைகளைக் கொன்ற ஆட்டோ டிரைவரை விசாரணையின்றி என்கவுண்டரில் கொல்லச் செய்து அப்பழியைத் தலித்தான லக்ஷ்மண் மேல் போட ஹிட்லர் துணை நிற்கிறான் என்ற கதை லக்ஷ்மண்ணின் புலம்பலாக அவர் கூட வேலை செய்யும் காவல் துறை மேலதிகாரியிடம் கூறப்படுகிறது. ஏ.பி.சிங் ஹிட்லரை என்றோ செத்துப் போன பிணம் என்று விமரிசனம் செய்கிறான்.
இந்த இயலிலும் அடுத்த பன்னிரண்டாவது இயலிலும் வரும் இன்னொரு முக்கியமான பாத்திரமான ஆந்திர மாநிலம் தண்டிபத்லா விசுவநாத சாஸ்திரியின் ஒன்றுவிட்ட தம்பி தாடிக்கார டிஷர்ட்காரர் தண்டிபத்லா சாஸ்திரி என்பவர் அறிமுகம் செய்யப்படுகிறார். ஆந்திர மாநிலம் தண்டிபத்லா விசுவநாத சாஸ்திரி வடமொழி நூல்களிலுள்ள வேதகால ராக்கெட் தொழில் நுட்பங்களை 1930 களில் ஜெர்மானியருக்குக் கற்பித்தவராம் . அவர் ஒன்றுவிட்ட தம்பியான இந்த தண்டிபத்லா சாஸ்திரிக்கும் இதெல்லாம் நல்ல அத்துபடியாம்.வேதகால அறிவியல் பற்றிய நம்பிக்கையுள்ள முதலமைச்சர் அழைப்பின் பேரில் அவர்அதையெல்லாம் முதலமைச்சருக்கு எடுத்துச் சொல்ல வருகிறார்.அவருக்கு உதவுவதான் ஹிட்லர் வேலை.ஹிட்லருடன் காரில் போகும்போது சாஸ்திரி இதையெல்லாம் பிரசங்கம் செய்யும் போது ஏ.பி.சிங் வெளியில் ஒரு நாய் பின்கால்களைக் குறுக்கி வைத்துக் கொண்டு ஒன்றுக்கிருப்பதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்(பக்.148) என்று கதையில் வருணனை வரும் போது வேதகால ராக்கெட் தொழில் நுட்ப அறிவு பற்றி செய்தி என்ன பெறுமானம் பெறுகிறது என்று சொல்லப்படுகிறது.இங்கு வருணனையில் ஒன்றிருக்கிருப்பது இரண்டிருக்கிருப்பது என்றிருப்பின் பொருத்தம்.
பின் தண்டிபத்லா சாஸ்திரியை முதலமைச்சர் அறிவுரையின்படி அடிக்கடி ஐந்து நட்சத்திர விடுதியில் சந்திக்கிறார்.அப்போது அவன் பெயரைக் கேட்டு அசந்த சாஸ்திரி ஆம்லெட்டை லபக் கென்ற விழுங்கிவிட்டு அவனிடம் ஷம்பாலா என்ற இடத்தைப் பற்றிப் பேசுகிறார்.உலகம் முழுவதையும் அடக்கும் சக்தி ஷம்பாலாவில் இருக்கிறது. ஷம்பாலாதான் கல்கி அவதாரம் நடக்கும் இடம்.நிரந்தரமாக மனித இனத்தைக் கட்டுப்படுத்தப் போவது ஷம்பாலாதான். அது பற்றிய குறிப்பு விஷ்ணுபுராணத்தில் வருகிறது.அது உருவாக வேண்டுமென்றால் தூய்மையான இதயம் வேண்டும்.ஹிட்லரிடம் உலகை அடக்கி ஒடுக்கும் குணம் தெரிகிறது என்று ஹிட்லரிடம் கூறுகிறார் சாஸ்திரி.
பன்னிரண்டாவது இயலில் ஹிட்லர் கதையில் விடுபட்ட இளமைக்கால வாழ்க்கை குறிப்பாக அவன் அரசியலில் நுழைந்த பழைய வரலாறு சொல்லப்படுகிறது.ஓவியக் கல்லூரியில் ஓடியாடிப் பணியாற்றிய நீலக்கண் கொண்ட ஹிட்லர் ஒரு அரசியல் கழுகின் பார்வையில் பட்டு அரசியலில் நுழைகிறான்.அடிதடிகளில் தன் வலிமையைக் காட்டுகிறான்.இந்த நேரத்தில் முன் இவனால் மொட்டையடிக்கப்பட்ட பிரேம் குமாரோ ராம்குமாரோ ஹிட்லரைப் பழி தீர்க்க நினைக்கிறான்.ஹிட்லரின் தலைவனாக இருந்த ஸ்ரீதர் என்பனையும் மதுசூதனன் என்ற காவல் துறை ஆய்வாளனையும் பயன்படுத்தி ஹிட்லரைக் காவல் துறைச் சிறையில் நையப் புடைக்க ஏற்பாடு செய்கிறான்.இவ்வாறு அவன் அடிபட்டு வந்த வேளையில் தேவகி மேனனும் அவள் மகள் பிரீத்தி ராவும் ஊரை விட்டு அவர்கள் ஊருக்குப் புறப்படுகின்றனர்.அப்படி விடைபெறும்போது பார்க்க வருகிற பிரீத்தி ராவுக்கு அவள் கேட்டுக் கொண்டதால் காவல் துறையில் பட்ட புண்களையும் பொருட்படுத்தாமல் தென்னை மரம் ஏறி இளநீர் போட முயன்று தோற்றுச் சோர்ந்து அவள் பிரிவையும் எண்ணி ஏ.பி.சிங் தோளில் சரிகிறான்.
பதினான்காம் இயலில் கதையின் முடிவைப் பார்க்கலாம்.பிரீத்தி ராவ் மீது கொண்டிருந்த காதல் நிறைவேறாமல் போன ஹிட்லர் தான் அமைச்சராவதற்கு நான்காண்டுகளுக்கு முன்பு சாதாரணமான ஒரு குடும்பப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிற கதைக்குப் பின் ஒரு பழிவாங்கும் படலத்தின் கதையும் அதையும் தாண்டிஅவனிடம் வெளிப்பட்ட மனிதாபிமானமும் வெளிப்படுகின்றன.தன்னை அடித்துக் காலைப் பதம் பார்த்த மதுசூதனன் என்ற துணைக் காவல் ஆய்வாளரைப் பழி தீர்க்கத் திட்டம்போடுகிறான் ஹிட்லர். அதன்படி அடியாட்களைவிட்டு மதுசூதனின் இடது கையை மரம் அறுக்கும் ரம்பம் கொண்டு கொடூரமாக வெட்டச் செய்கிறான்.அப்போது முன்னாள் காவல் ஆய்வாளர் மதுசூதனன் வேண்டுகோளுக்கு இணங்கப் போலியோ தாக்கி நடக்க முடியாத அவன் தங்கையைத் திருமணம் செய்து கொள்கிறான்.
முதலமைச்சரின் பேத்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்கிறது.அதில் தண்டிபத்லா சாஸ்திரி ,ஹிட்லர் முதலானவர்கள் கலந்து கொள்கிறார்கள்.இதில் அந்தப் பேத்தி அவள் பாட்டியான சபாநாயகர்க்காரி வாய்க்குள் முணுமுணுத்த கண்டாரோளி என்ற கெட்ட வார்த்தையைக் கேட்டு அதன் கடைசி அசையாகிய ரோளி என்பதைப் பல்லவி போல பாடி வருவதை ஆசிரியர் வருணிக்கும்போது நகைச்சுவை மிளிர்கிறது.நிகழ்ச்சி முடிந்தபின் சாஸ்திரி முதலமைச்சரையும் ஹிட்லரையும் விடுதி அறையில் சந்தித்து ஷம்பாலா என்ற கற்பனை உலகைப் பற்றிப் பேசுகிறார்.அதைப் பற்றிய ரகசியங்களைத் தன் ஒன்று விட்ட சகோதரன் ஜெர்மானிய ஹிட்லருக்குக் கற்பிக்காமல் மறுத்துவிட்டான்.அதை நான் எதிர்காலத்தில் ஷம்பாலாவைப் பிடிக்கப்போகிற இந்த நம் நாட்டு ஹிட்லருக்குக் கற்பிக்கப் போகிறேன் என்று சொல்கிறார்.ஜெர்மானிய ஹிட்லரைப் பற்றிக் கேள்விப்பட்டிராத நீலக்கண் ஹிட்லர் அவர் காலில் விழுகிறான். பின் தான் தன் ஒன்றுவிட்ட தமையன் அறிவுரைப்படி ஷம்பாலாவைத் தேடிச் சென்ற குழுவினருடன் இமய மலை, திபெத் முதலிய இடங்களுக்கு மேற்கொண்ட அபாயம் நிறைந்த பயணத்தை விவரிக்கிறார் சாஸ்திரி,இறுதியில் அதை அடைவது எளிதல்ல என்பதால் அதைத் தேடுவதைக் கைவிட்டோம்.அங்கு லாமாக்களின் போதனை ஒன்று பரவியது.‘நாம் சாதாரணமானவர் என்று பிறர் கூறும்படி அப்படியே இருந்தோமென்றால் இப்போது போலவே தான் எப்போதும் இருக்க வேண்டியவர்களாவோம்’ என்று கூறிக் கதையை முடிக்கிறார்.
அரசியல் என்பது கொள்கைகளின் சமுகச்செயல்பாடாக இருந்த காலம் மாறி அரசியல் கொள்கைகளற்ற அதிகாரம் பதவி பணம் பறிக்கும் தனிமனிதத் தொழிலாக உருவெடுத்த இன்றைய நிலையைப் படம் பிடிப்பதாக ஹிட்லர் கதை சொல்லாமல் சொல்கிறது.
அரசியலில் அதிகாரமும் பதவியும் பணமும் ஒருமுறை ஒருவர் அல்லது ஒரு குழுவிடம் கிடைத்துவிட்டால் எப்படி அவை புற்று நோய்போலப் பெருகித் தழைக்கின்றன என்பதை நாம் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.காவல் துறை ,நீதித் துறை, நிதித்துறை ஊடகத் துறை,புரோகித வர்க்கம் போன்றவை அதிரடித் தடைச் சட்டங்கள்,தடுப்புக் காவல் , வருமான வரி முற்றுகை ,ஊழல் வழக்கு,துணைவர்களுக்குப் பணம் பதவி அதிகாரம் வாரியிறைப்பு,மக்களுக்கு இலவசங்கள்,தலைமை வழிபாட்டை வளர்த்தெடுத்து வீரத்திருமகனை உருவாக்கல் என்று எப்படி இவை வளர்வதற்கு நீர் பாய்ச்சுகின்றன என்பதையும் பார்க்கிறோம்.
சமய நிலையில் புராணங்களும் வழிபாடுகளும் சமயப் பரப்புரைகளும் மீட்பர்களை உருவாக்குவது போலவே அரசியலும் கலையும் கைகோத்து தலைமை வழிபாட்டை உருவாக்கி வீரத்திருமகன்களை உருவாக்குவது கல்வியறிவும்,பகுத்தறிவும் ,தன்மானமும் ,பொருளாதாரமும் குறைந்த சமுகங்களில் சாத்தியம் என்பதற்கு நம் கண்முன் சான்றாக நம் தமிழ்ச் சமுகமே முன்நிற்கிறது.திராவிட இயக்கம் திரைப்படம் வழி ஒரு எம்.ஜி.ஆரை உருவாக்கப் பாலசந்தர் போன்ற இயக்குநர்கள் ரஜினிகாந்தை உருவாக்கி வேடிக்கை காட்டுகிறார்கள்.
இவற்றையெல்லாம் புதினப் படுத்தும் வாய்ப்பு இந்த நாவலில் மிஞ்சி நிற்கிறது.ஒரு வேளை தமிழவன் இதை இதன் இரண்டாம் பகுதியாக எழுதக் கூடும் என்று தோன்றுகிறது.
தமிழவன் இந்த நாவலில் சொற்கள் பற்றி மிகுந்த கவலை கொள்கிறார் என்பதை நாம் அடிக்கடி காண்கிறோம். இரண்டிடங்களைக் காட்டலாம்.
‘மனதில் நிறைய சொற்கள் பறவைபோல் கூடின.மணியடித்ததும் பள்ளிக்கூடச் சிறுவர்கள் பறவை கூடடைவது போல வகுப்புகளில் மௌனமாக மறைவேது போல அவை மறைந்தன‘( பக்.8-9 ) .
‘ஒரு சொல்லுக்குப் பின்னால் பல சொற்கள் ரயிலுக்கு டிக்கட் எடுக்க வரிசையாய் மனிதர்கள் நிற்பது போல் நிற்கும்‘(பக்.38).
கீழே காணும் வருணனையின் படிம உத்தி மனதைக் கவர்கிறது.
‘அமர்நாத் கொஞ்சநேரம் நடந்தார்.தனிமை பெரிய ராட்சசன் போலத் தன்னுள்ளே மூர்க்கமாய்ப் படுத்திருந்ததை உணர்ந்தார்‘ ( பக் 124 ).
கீழே இருப்பது போன்ற நீண்ட வாக்கிய அமைப்புகள் வாசகனைச் சிண்டைப் பிடித்துக்கொள்ளச் செய்தாலும் நாவலின் கதைச்சூழலின் ஆழத்தைப் புலப்படுத்தும் பின்னணியை வாசகனுக்கு ஏற்படுத்துகின்றன.இவை போன்ற வாக்கிய அமைப்பை எழுதுவதும் அவ்வளவு எளிதல்ல.இவை ஆசிரியரின் ஆற்றலை மட்டுமல்ல தமிழின் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றன.
‘இப்படி ஒரு பள்ளிக்கூட ஆசிரியர்,தன் கடமையாற்ற மோசமான வடிவமுள்ள தோசையைக் காலையில் தின்றுவிட்டுச் சென்ற ஒரு நாளில் தான் அவரது பிரம்புவேகமாகப் பாய்ந்து தன் கையைப் பதம் பார்த்த விவரம் அமைச்சனாகிக் காரில் சுகமாய் ஜம்மென்ற போய்க்கொண்டிருந்த ஜுனியர்அமைச்சனின் ஞாபகத்துக்கு அவ்வப்போது வந்தால் இப்போதும் கூடக் கை வலிக்கும்‘. ( பக்.140 )
‘எதிர்காலத்தில் இன்னும் ஓர் ஆறு ஆண்டுகளில் கிடுகிடு என உயர்ந்து புகழ் பெற்ற ஒரு முதல்வரின் அமைச்சரவையில் இடம் பிடிக்கப் போகிறான் என்பது தெரியாமல்,தன் காதலியை இழக்கக் காரணமாக இருந்து தன்னை அடித்துச் சிதைத்தவன் ஒரு காக்கிச் சட்டை என்பதை முப்பதாம் வயதில் இரவு பகல் என மறக்காமல் அலைந்து கொண்டிருந்தான் ஹிட்லர் ‘ (202 ).
கீழ்க் கண்ட வாக்கியத்தில் வேற்றுமையுருபுகள் ஆட்சி ஆங்கில வழி வந்தனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
‘பலமுறை தன் எதிரியைச் சிக்க வைத்து ஏமாற்றுவதுதான் ஒரே தந்திரம் என்றிருந்த பிரேம்குமாரோ ராம்குமாரோ,நீலக்கண் இளைஞன் நம்பியபடி சுற்றிக்கொண்டிருந்த ஸ்ரீதர் என்ற இளம் அரசியல் தலைவனையும் அவன் மூலம் ஒரு காவல் துறை ஆய்வாளனையும் நட்புக் கொண்டான்.‘ ( பக் 166 ).
இங்கு இளம் அரசியல் தலைவனிடமும் அவன் மூலம் ஒரு காவல் துறை ஆய்வாளனிடமும் என்றிருப்பின் நலம்.
தமிழவனின் ஷம்பாலா என்ற அரசியல் நாவல் பல நிலைகளில் தனித்து நிற்கிறது என்பதைப் படித்து முடித்ததும் உணர்ந்தேன்.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.எல்லா நாவல்களைப் போலவே முற்றுப் பெறாத இரண்டு கதைகள்.படித்துப்பாருங்கள்.
(தமிழவன், ஷம்பாலா, சிற்றேடு வெளியீடு, 253- இரண்டாவது பிளாக்.கத்ரிகுப்பே வாட்டர் டேங், பி.எஸ்.கே.3 ஆவது ஸ்டேஜ்,மூன்றாவது ஃபேஸ்,பெங்களுர்560085 , 2019 பக் 219)
நாவலை வாங்க கிளிக் செய்க: தமிழவனின் ஷம்பாலா நாவல்

