உலகம் முழுவதும் எதேச்சதிகாரப் போக்குள்ளவர்கள் தேர்தல்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஜனநாயகப் பண்புகளைத் தோண்டிப் புதைக்கும் நபர்களும் இயக்கங்களும் வெற்றி பெற்று வருகிறார்கள். தங்களுக்கு கஷ்டம் கொடுத்தாலும் மக்கள் அந்த எதேச்சதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதை விளக்கிக் கூறுவதற்கு இன்றைய அறிவுத்துறை வளரவில்லை போலுள்ளது. – பக். 127 ஷம்பாலா
கலைகள் எப்போதும் பூரணமான விளக்கத்தை நிராகரிக்கின்றன. எந்த எதிர்கால அரசும் கூட கலையை கைது செய்யமுடியாது, பக் 210 ஷம்பாலா தமிழவனின் புதிய நாவல் ஷம்பாலா. ஓர் அரசியல் நாவல் என்ற துணைத்தலைப்புடன் வெளிவந்துள்ளது. அரசிலை பல குறியீடுகள் வழிப்பேசும் ஒரு அரசியல் குறியீட்டு நாவல். அரசியல் குறியீடு என்பது மற்ற குறியீடுகளைவிட சமூக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப்பண்ணை என்ற நாவல் உலக அளவில் மிக முக்கியமான அரசியல் நாவலாக பேசப்பட்ட ஒன்று. முழுக்க எதேச்சதிகார அமைப்பு குறித்த பல குறியீடுகளைக் கொண்ட நாவல். ஆனால், அந்நாவல் முழுக்க ஒரு விலங்குப் பண்ணையாக எதேச்சதிகார சமூகத்தையும், அந்த சமூகத்தின் அதிகாரத்தில் உள்ள கட்சியையும் குறியீடாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். அந்நாவல் ஆசிரியரான ஜார்ஜ் ஆர்வெல் குறித்து பல சந்தேகங்கள் உள்ளன. அவர் அமெரிக்க உளவுத்துறையோடு இணைந்து செயலாற்றியவர் என்றும் ரஷ்ய சோஷலிச சமூகத்திற்கு எதிராக எழுத வைக்கப்பட்டவர் என்றெல்லாம்.அந்நாவல்கூட சமூகத்துவ சமூகத்தை (சோஷலிஸ்ட் சொசைட்டி) ஒரு விலங்குப்பண்ணையாக குறியிடப்பட்டு எழுதப்பட்டது என்பதும், அது உலக அளவில் முதலாளிய சக்திகளால் கொண்டாடப்பட்டதும் வரலாறாக சொல்லப்படுகிறது. அது முழுக்க ஒரு குறியீட்டு நாவல் என்பதைவிட ஒரு அங்கதவகை. தமிழவனின் இந்நாவலோ, பல அரசியல் குறியீடுகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நிகழ்ந்த பல அரசியல் நிகழ்வுகள் நாவலில் வேறு வேறு வடிவங்களில் பேசப்பட்டுள்ளது.
தொடர்ந்து உலக, இந்திய, தமிழக அரசியலை கவனித்துவரும் ஒரு படைப்பாளியின் தற்கால அரசியல் குறித்த ஒரு புனைவாக வெளிவந்துள்ளது இந்நாவல்.உலக அளவிலும் குறிப்பாக இந்தியாவிலும் பெருகிவரும் வலதுசாரி பாசிச அரசியல் குறித்து கவனம் குவிக்கச் செய்கிறது இந்நாவல். அதற்காக அங்கதம் என்பதை நாவலின் வடிவமாக கொள்ளாமல் நாவலுக்குள் நிகழும் நிகழ்வுகளில் உள்ளிருத்தியும், நாவல் நடப்பியல்-யதார்த்தம் மற்றும் புனைவு-யதார்த்தம் இரண்டிலும் எழுதப்பட்டுள்ளது. யதார்த்த சித்தரிப்புகளும், யதார்த்தமீறிய நிகழ்வுகளுமாக. உலகெங்கிலும் வலதுசாரிவாதம் கோலோச்சும் இன்றைய சூழலில், அதற்கான உளவியல், சமூகவியல் சார்ந்த அரசியலை ஆராயமுற்படுகிறது இந்நாவல். வலதுசாரிவாதம் ஜனநாயக அரசமைப்பிற்குள் நுழைந்து ஒரு சட்டவாத-பாசிச அரசாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், அதன் உள்ளார்ந்துள்ள உலக ஆதிக்கம் பற்றிய கனவைப் பேசுகிறது. அக்கனவிற்கான ஒரு ஆன்மீக மையமாக அமைந்த இடமே ஷம்பாலா.
நாவலின் பெயர் ஷம்பாலா. ஷம்பாலா என்பது ஒரு தொன்மம். உலக அரசாட்சியின் மையமான அதிகாரம் நிறைந்த இடம். இது குறித்து நாவலின் இறுதி அத்தியாயத்தில் தண்டிபத்லா என்கிற சாமியரால் விளக்கப்படுகிறது. நாவலில் ஷம்பாலா என்பது ஒருவகை ஆன்மீக அரசியலின் குறியீடு. அது புத்த லாமாக்களால் கொண்டாடப்படும் திபேத்தில் உள்ள ஒரு மலைச்சிகரம். புத்த கருணையின் வடிவமாக உள்ள ஷம்பாலா, உலக அதிகாரத்தை கருணைக்கு எதிரான கொலைவெறி மூர்க்கத்தின் வழிபெற்றுவிடலாம் என்று நம்பவைக்கப்படுவதே இந்த நாவலின் நகைமுரண். நாவலில் ஷம்பாலா குறித்துப் பேசப்படுவது மிகக்குறைவுதான். மதமும், ஆன்மீகமும், அரசியலும் கலந்து நவீன சாமியார்கள் எப்படி அதிகாரத்தோடு கைகோர்த்துக் கொண்டு, அரசை ஆட்டுவிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு. இதுபோன்ற குறியீடுகள்தான் ஆன்மீகத்தை அரசியலாக மாற்றும் ஒரு மர்மமான பகுதியாக, திரைமறைவில் இயங்குவதாக உள்ளது. ஆக ஷம்பாலா என்பதே நாவலின் மையப்படிமம். உலக அதிகாரம் பெற அதீத மனிதஉருவாக்கம் நிகழ வேண்டும். அந்த அதிமனிதன் உருவாக்கமே நாவலின் புனைவு-யதார்த்தமாக, நாவலுக்குள் உள்ள நடப்பியல்-யதார்த்த எழுத்தாளன் நாயகன் அமர்நாத்தால் எழுதப்படும் நாவலாக எழுதிக் காட்டப்பட்டுள்ளது. நாவல் ஒரே நேரத்தில் ஒரு புராணிகத் தன்மைக் கொண்ட உலக அதிகாரத்திற்கான வேட்கை செறிந்துள்ள ஆன்மீக ஆற்றல் மையத்தையும், பரவிவரும் உலக அரசாட்சிக்கான மதம் சார்ந்த வேட்கையையும் புனைவாக்கி காட்டுகிறது. நாவலின் நாயகராக உள்ள அமர்நாத் தொடர்ந்து அரசால் கண்காணிக்கப்படுவதும், அவரை கண்காணிக்கும் உத்திகளும் மிக நுட்பமாக நாவலில் பகடி செய்யப்படுகிறது.
அமர்நாத் ஒரு எழுத்தாளர். தன்னை ஒரு இடது தாராளவாதியாகக் கருதிக்கொண்டு எழுதுபவர். அவரை சிந்தனை போலிஸ் என்ற ஒரு வகை போலிஸ் மோப்பம் பிடிக்கிறார்கள். எப்படி என்றால் அவர் சிறுநீர் கழித்தபின் அவரது கழிப்பறையில் உள்ள கழிப்பிடத்தை முகர்ந்து, அந்த மோப்பம் வழி அவரது சிந்தனையை அறிய முற்படுகிறார்கள். இப்படி உளவுத்துறை முழுக்க எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை கண்காணிப்பதும், அப்படி கண்காணிப்பதன் வழியாக சில உத்திகளைப் பயன்படுத்தி அவர்களது சிந்தனைகளை கட்டுப்படுத்துவதுமே நாவலின் நடப்பியல் யதார்த்த பகுதி.
நாவலில் இரண்டு யதார்த்தங்கள் உள்ளன. மேலே சுட்டியுள்ளதைப்போல ஒன்று நடப்பியல்-யதார்த்தம். வழக்கமாக நாம் வாசிக்கும் நாவல்களில் நிகழும் நடப்பியல் சார்ந்த கதையாடல். மற்றொன்று, இந்நாவலில் வரும் புனைவு-யதார்த்தம். அந்த சிந்தனை போலிஸ்அமர்நாத்தைக் கட்டுப்படுத்த துவங்கியவுடன் அவருக்குள் உருவாகும் ஒரு புனைவு யதார்த்தமே நாவலின் மற்றொரு கதை. இவ்விரண்டு கதைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவையே. அதாவது நடப்பியலில் எழுத்தாளர்கள் அரசால் அச்சுறுத்தப்படுவதற்கான நடவடிக்கையாக உளவுப்பார்த்தல், அவர்களை கைது செய்தல், வழக்காடுதல் என்பது ஒரு புறம். இதெல்லாம் நடப்பதற்கான அரசு உருவாக்கம் நிகழ்வது மறுபுறம். இந்நிகழ்வுகளே மற்றொரு புனைகதையாக நாவலில் எழுதப்படுகிறது. அந்த புனைவு-யதார்த்தம் இன்றைய அரசியலின் நடப்பியல் யதார்த்தமாக உள்ளது. சங்கத்தமிழ் அல்லது தொல்காப்பிய முறையியலில் சொன்னால் ஒன்று அகத்தில் உருவாகும் கதை, மற்றது புறத்தில் நிகழும் கதை. இந்த அக புற விளையாட்டு இரண்டு அக-புற யதார்த்தங்களாக எழுதப்பட்டுள்ளது நாவல்.
யதார்த்தமும், புனைவும் கண்ணாமூச்சி ஆட்டத்தை நிகழ்த்துவதாக நாவல் வாசிப்பில் சுவராஸ்யத்தையும், சிரத்தையையும் கூட்டுகிறது. சொல்லப்பட்ட அரசியல் சார்ந்த செய்திகள், குறிப்புகள் கவனத்துடன் உருவாக்கப்பட்ட பதிவுகளாக உள்ளன. ஒரு சிறுவன் கிணற்றில் பிணமாக மிதக்கிறான். அவனது உடல் முஸ்லிம், இந்து என்கிற மதம்சார்ந்த கதையாடலுக்குள் நுழைந்து வதந்தியாக பரவுகிறது. இப்படி எல்லாவற்றையும் மதக் கண்கொண்டு பார்க்கும் நிலைக்கு காரணமாக அமைவது ஷம்பாலா போன்ற தொன்மங்கள் உருவாக்கும் அரசியல் அதிகாரம் இதில் விவரிக்கப்படுகிறது. ஊடகங்கள் எப்படி அரசிற்கு விலைபோயின என்பதையும் நாவல் விட்டு வைக்கவில்லை. அமர்நாத்தின் நண்பரான சுரேஷ் என்ற எழுத்தாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் கொண்டுவரப்படுகிறார். அதை ஒரு செய்தியாகக்கூட ஊடகங்கள் ஆக்க தயாரற்ற நிலையே உள்ளதை காட்சிப் படுத்துகிறது.நாவலுக்குள் வரும் புனைவு-யதார்த்தம்ஒரு கிராமத்தில் பிறந்த முரட்டு சிறுவன், தனது தாய் இறந்துவிட்டாள் என்று கூசாமல் பொய் சொல்லி ஆசிரியரிடம் தப்ப நினைக்கும் சிறுவன், குஸ்தி பயில்கிறான், ஓவியக்கலை படிக்கிறான், அவன் விரும்பிய பெண்ணால் ஹெல்பர் பல்பர் என்றும் ஹிட்லர் பட்லர் என்றும் அழைக்கப்படுகிறான். எப்பொழுதும் அவனுள் ஒரு கோரப் புலி ஒன்று உறங்கிக்கொண்டு உள்ளது. அது அவனை சில வேளைகளில் அவனே அறியாத பல அசாத்தியங்களை செய்விக்கிறது. உள்ளுறங்கும் புலிதான் அவனது ஆன்மீக மையமாக உள்ளது. அதை சாமியார்கள் உசுப்பேற்றி அவனது திறமையாகக் கூறி அவனை அதி-மனிதனாக (சூப்பர்-மேன்) மாற்ற முயல்கிறார்கள். பிற்காலத்தில் அரசியலில் நுழைந்து குறுகிய காலத்தில் இணை அமைச்சராகி, சாமியாரின் ஆசியுடன் எதிர்காலத்தில் தலைமைக்கு வரக்கூடியவனாகக் காட்டப்படுகிறான்.
இயல்பில் வெற்றி என்கிற அதிகார வெறிக்கொண்ட, கருணையற்ற, தனது போட்டியாளர்கள் மேல் வன்மம் கொண்டு பலிவாங்கும் அவன், ரத்த உறவு, பாசம், காதல் உள்ளிட்ட எந்த ஒரு உணர்வுகளையும் தனது முன்னேற்றத்திற்கான ஒன்றாக பாவிக்கும் குணம் கொண்டவனாக இருக்கிறான். ஹார்வேர்டில் படித்த முதல்வர் தனது அறிவாற்றலை முழுக்க தனது அதிகாரத்தை நிலைநிறுத்தும் சதிகளுக்கு பயன்படுத்த, அவருக்கு நம்பிக்கைக்கு உரிய உள்ளவட்ட ஆளாக மாறுகிறான்.அவன் அமைச்சர் பொறுப்பைப்பெற முதலமைச்சரின் அடியாளாக, ஏவலாளாக அனைத்து வேலைகளையும் செய்கிறான். அவனது பெயர் ஹிட்லர். அதாவது வரலாற்றில் உருவான முதல் ஹிட்லர் யாரென்றே அறியாத இரண்டாவது ஹிட்லர் அவன்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மார்க்சியம் முன் அனுமானித்த முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி என்பது உலகில் வரும்போதெல்லாம், இப்படியான ஒரு ஹிட்லரை அந்த முதலாளிய உற்பத்தி முறையே உருவாக்கி விடுகிறது. தற்போது உலக அளவில் நிலவும் பொருளாதார மந்தம் உருவாக்கியுள்ள எண்ணற்ற ஹிட்லர்களின் ஒரு குறியீடே இந்நாவலில் வரும் 32 இட்லி தின்ற மேஸ்ரிதியின் மகனான ஹிட்லர். பொருளாதார பெருமந்தம் (graet depression) முதலாளித்துவத்தின் தவிர்க்கமுடியாத விதி. காரணம் சரக்குகளின் மிகை உற்பத்தி உருவாக்கும் தேக்கநிலை, சந்தை நிறைவு ஆனபின் புதுச்சந்தை தேடுதல் என்பதற்காக அது ஜனநாயக அரசை ஒரு எதேச்சதிகார அரசாக மாற்றி அந்நிய நாடுகளை நோக்கிப் படை எடுத்து புதிய சந்தை உருவாக்கத்தை நிகழ்த்தும். அப்படியான ஒரு அரசியல் நிகழ்வே நெப்போலியன், ஹிட்லர், முசோலினி ஆகியோரின் தோற்றத்தை உருவாக்கியது. இன்று அந்த பெருமந்தம் உலக முதலாளியச் சந்தைகளாக மூன்றாம் உலக நாடுகளை சூறையாடத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் பேச்சில் சுதேசி, செயலில் விதேசியாக ஒரு எதேச்சதிகார அரசு உருவாக்கம் உலக அளவில் நிகழ்கிறது. இதன் ஒரு கருத்தியல் விளைவே வலதுசாரி எழுச்சி. இந்த எழுச்சிக்கான அரசியல்-உளவியலை புனைவாக்க முயன்றதே இந்நாவலின் வெற்றி. தமிழவனின் கோட்பாட்டு வாசிப்பு அதற்கான பின்புலத்தை தருகிறது. நாவல் பல நுட்பமான நிகழ்வுகள் குறித்தும் அதன்பின் உள்ள சமூக உளவியலை வெளிப்படுத்துவதாக உள்ளது. நாவலை கோட்பாட்டு அடிப்படையில் வாசித்தால், நுண் (மைக்ரோ) அரசியல் மற்றும்பாரிய (மேக்ரோ) அரசியல் தளத்தில் இரண்டு வடிவங்களாக எழுதப்பட்டுள்ளது எனலாம். பொதுவாக நாவல் தரும் வாசிப்பு இடதுசாரிகள் மேக்ரோ அரசியலைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால், வலதுசாரிகள் மைக்ரோ அரசியலை நடைமுறைப்படுத்துகிறார்கள். பக். 190-ல் இது குறித்த ஒரு விரிவான குறிப்புகள் உள்ளது. ராபர்ட் என்கிற வினாயக் எப்படி வலதுசாரி அரசியலுக்குள் போய், தீவிர மதவாதியாக மாறி, ஒரு சாமியாரிடம் பயிற்சிபெற்று, பிறகு அந்த சாமியாரின் தம்பி செய்த கொலையை ஏற்று சிறை சென்று, அங்கு ஒரு சமண அதிகாரியால் மனம்மாறி புத்தக வாசிப்பாளனாகி, மதவாதத்தை எதிர்ப்பவனாக மாறுகிறான். புத்தக வாசிப்பு மனதை எப்படி பண்படுத்தும் என்பதைச் சொல்லும் இப்பகுதிகள் கவித்துவமாக எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் வலதுசாரிவாதம் எப்படி ஒரு நுண்அரசியலாக (மைக்ரோ அரசியலாக) கண்ணுக்குத் தெரியாமல் உள்ளார்ந்து இயங்கி ஒரு பெரும் படையை கட்டமைத்துள்ளது என்பதை நாவல் விவரிக்கும் பகுதிகள் மிக முக்கியமானவை.
நமக்குப் புரியாத பகுதி எப்படி வலதுசாரி இந்துத்துவ மதவாத பாசிசம் இந்தியாவில் வெற்றிவாகை சூடுகிறது என்பது. அதற்கு காரணமாக அமைந்த அவர்களது இந்துத்துவ உடல் உருவாக்கம் எப்படி, உடற்பிற்சி என்பதில் துவங்கி வலுவான உடலை உருவாக்குதல், அறிவும், மனமும் ஆரோக்கியமான உறுதியான உடலுக்கு எதிரானது என்று அறிவு எதிர்ப்பு சிந்தனையையை கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் பொதுச் சிந்தனையாக, பொதுபுத்தியாக கட்டமைத்தது என்பதை விவரிக்கிறது. இது அரசியலில் முட்டாள்தனம் உடலுறுதி என்கிற பாசிச உறுதிப்பாடாக கோலோச்சத் துவங்கியதை விவரிக்கிறது. உலக ஆன்மீக மையம் என்ற நவீனத் தொன்மமாகக் கட்டப்பட்ட புண்ணிய பூமி என்கிற இந்தியாவில், ஹிட்லர் என்ற ஜெர்மானிய பாசிசவாதி, சமூகத்தின் அறிவற்ற மூடத்தனத்தால் அதாவது உடலுறுதி என்ற 60 இஞ்ச் மார்பு உள்ளது, யோகம் செய்தல், உடலை வலுப்படுத்துதல் ஆகிய ஊடகத் தொன்மங்கள் வழி எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை புனைவாக்கி காட்டுகிறது நாவல். அரசியல் திரைமறைவு வேலைகள் எப்படி இயல்பானதாக நிகழ்த்தப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
நாவலின் மையப்படிமம்சிந்தனை போலிஸ். இந்த சிந்தனைப் போலிஸ் மிக நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு குறியீடு. இவர்கள் புறத்தில் சிந்தனையை கண்காணிப்பவர்களாக இருந்தாலும், அகத்தில் இவர்கள் சிந்தனை தணிக்கை செய்யும் தன்னிலையாக வடிவமைக்கிறார்கள். அதாவது ஒவ்வொருவரது உடலிற்குள்ளும் சிந்தனை போலிஸ் என்கிற தணிக்கை செய்யவும், சிந்தனையை, உணர்வை கட்டுப்படுத்தவும், தனக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் ஆன ஒரு நனவிலியே இந்த சிந்தனை போலிஸ். இந்நனவிலி் எப்படி ஒவ்வொரு உடலுக்குள்ளும் உருவாக்கப்படுகிறது என்பதை உள்ளுறையாகக் கொண்டு எழுதப்பட்ட பிரதியே நடப்பியல்-யதார்த்தப் பிரதி. இதன் மறுதலையாக உருவாகுவதே மேக்ரோ லெவலில் ஆன பாசிச அரசியல். ஆக பாசிசத்தின் இரண்டு தளங்களுமே இந்நாவலின் மையப்பிரதியின் அமைப்பாக பொருந்தியுள்ளது.
சிந்தனை போலிஸ் எப்படி நமது தன்னிலைக்குள் ஊடுறுவி நம்மை முழுக்க அதிகாரத்திற்கு ஏற்புடைய தன்னிலைகளாக கட்டமைக்கிறார்கள் அல்லது நமது எதிர்ப்பை எப்படி நீர்த்துப் போகச்செய்கிறார்கள் என்பதை இந்நாவல் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது. அமர்நாத்தின் மகள் அவர்களது கண்முன்னால் உள்ளபோதே காணவில்லை என புகார் அளித்ததாகக்கூறி, தொடர்ந்து அவரது மனதை இருமைக்குள் நுழைத்து, பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குவார்கள். தினமும் தொலைபேசியில் அவருக்கு உங்கள் மகளை காணவில்லை என நீங்கள்புகார் அளித்துள்ளீர்கள் என தகவல் அனுப்புவது மட்டுமே அவர்கள் பணி. ஆனால், மகள் காணாமல் போகலாம் என்கிற ஊகத்தை அளித்து அவளைப் பாதுகாப்பதற்கான அவரது முழுமையான செயல், அறிவு, உணர்வை அதைநோக்கி திருப்பிவிடுவார்கள். ஒரு பொய்த்தகவல் உண்மையாக நம்ப வைக்கப்படுவது பற்றிய ஒரு நிகழ்வைக் குறியீடு மட்டுமின்றி, எது உண்மை? எது பொய்? என்று பிரித்தறியும் பகுத்தறிவை இல்லாததாக ஆக்கும் செயலும் பாசிச நுண்தள உளவியல் ஒடுக்குமுறையாகும். அதை நுட்பமாக வெளிப்படுத்துவதாக உள்ளது.
அதாவதுஅவரது தினவாழ்வு என்பதே சிந்திக்கமுடியாத அந்த நரகச் சூழுலில் சிக்கிவிடும். இப்படியாக அவரது தன்னிலை என்பது அவர்களது பிரசன்னம் இல்லாமலேயே அவர்கள் இவருடன் தன்னிலையில் அமர்ந்துகொண்டு அவரை கண்காணிக்கத் துவங்கிவிடுவார்கள். இந்த கண்காணிப்பு என்கிற விளையாட்டை நமது கற்பனை மனத்தளத்தில் உருவாக்கி நமது தனிப்பட்ட வாழ்வை (பர்சனல் லைப்) முழுக்க பொதுப்பார்வையில் நிகழ்த்துவதான தன்னிலையாக மாற்றிவிடுகிறார்கள். இது சிந்திப்பவர்க்கு என்றால், சிந்திக்காத பொதுமக்களுக்கு ஊடகங்கள் வழியாக இந்த தன்னிலை கண்காணிப்பு நிகழ்த்தப்பட்டு, தன்னிலை வடிவமைக்கப்படுதல் என்பது நிகழ்கிறது.
பிரஞ்சு மார்க்சிய திரைப்பட இயக்குநரான லூயி புனுவல் திரைப்படம் ஒன்று முதலாளியத்தின் இத்தகைய கண்காணிப்பு பேயுருக்கள் (surveillance phanthom) குறித்து விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படம் ஒன்றை எடுத்தார். முதலாளியத்தின் பேயுருக்களே இந்த சிந்தனை போலிஸ் என்பது. இவை எல்லோரையும் அதன்தன் அளவில் பிடித்தாட்டும் ஒன்றாக மாறியுள்ளது. ஆக, இன்றைய வாழ்வு பாசிசம் கையளித்துள்ள அதன் கண்காணிப்பு கட்டுப்பாட்டுக்குள் நிலவும் ஒன்றே. இங்கு அனைவரும் இந்த சிந்தனைப்போலிஸ் என்கிற நனவிலி கொண்டவர்களாக மாற்றப்பட்டுள்ளோம். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இலக்கியம், எழுத்து உள்ளிட்ட அனைத்து அறிவுசார் துறைகளும் படைப்பு என்பதை முதன்மைப்படுத்தி, அதன்வழியாக கோட்பாடற்ற ஒரு அறிவு எதிர்ப்பு மரபை கட்டியமைத்ததே. இந்த இலக்கியக் குழுக்களின் நுண் அரசியலுக்கும் இத்தகைய பாசிச உருவாக்க பாரிய அரசியலுக்கும் உள்ள உறவை நுட்பமாக இந்நாவல் தனது உள்ளார்ந்த குறியீட்டுவழி முன்வைக்கிறது. எழுத்தாளர்களும், பதிப்பகங்களும், வாசகர்களும் ஒரு வலைப்பின்னலாக இப்பாசிச விஷத்திற்கு எப்படி இரையாக்கப்படுகிறார்கள் என்றும். ஒரு பிரிவினர் எப்படி விளைபொருளாக மாற்றி விஷத்தைப் பரப்புகின்றனர் என்கிற ஒரு நுட்பமான பார்வை வெளிப்படுகிறது. இதை உணர இந்நாவல் வாசிக்கப்படுவது அவசியம்.
இந்நாவல் உலக நாவல் தன்மை கொண்டதாக, பொதுவான வலதுசாரி பாசிசத்தின் தோற்றமூலத்தை தேடுகிறது. அதே நேரத்தில் தமிழ் நாவல் தன்மைகொண்டதான அக-புற ஊடாட்டத்தில் அதன் அரசியல், கருத்தியல் ஆகியவற்றை அகழ்ந்து முன்வைக்கிறது. பிரஞ்சு சிந்தனையாளரான ஜீ்ல் தெல்யுஸ் இறந்தபின் வெளிவந்த அவரது மிக முக்கியமான அறிக்கை ஒன்றில் எதிர்கால சமூகம் எப்படி கண்காணிப்பும் கட்டுப்படுத்தலும் ஆன சமூகமாக மாறப்போகிறது என்பதை விவரிக்கிறது. அக்கட்டுரை இறையாண்மை என்பதன் வரலாறு எப்படி ஒரு மனித உடலை, சமூகத்தை கண்காணிப்பதிலிருந்து, கட்டுப்படுத்தலை நோக்கி செலுத்துகிறது என்பதை விவரிக்கிறார். இன்றைய அரசுகளின் இறையாண்மை கட்டுப்படுத்தும் சமூகமாக மாறியுள்ளது என்பதே. அதற்கான ஒரு புனைவு யதார்த்தமாக இந்நாவல் வெளிப்பட்டுள்ளது.
இன்றைய அரசுபாசிசம் சட்டவயமாக மாறுவதற்கான பல அரசியல் சித்துவேலைகள் இந்நாவல் ஆச்சர்யப்படும் விதம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மதுசூதன் என்ற போலிஸ் அதிகாரியின் கதை, இதை வெளிப்படுத்துவதாக அமைகிறது. நமக்கு யார், என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமலே நாம் நம்மை அறியாமல் இந்த பாசிச அரசியலுக்குள் உள்ளிழுக்கப்படுவதையும் குறிநிலைப்படுத்தும் நிகழ்வு அது. மதமும், சாமியார்களும், ஆன்மீகமும் வலதுசாரிவாதத்தின் மைய வடிவமாக இருத்தல், இரண்டு கதைகள் எது உண்மை? எது புனைவு? என்ற சிக்கலை உருவாக்குதல்,பாத்திர அறிமுகங்கள் குறித்த விபரங்கள் துண்டு துண்டாக செய்தல், ஒரு பாத்திரம் குறித்து வழக்கமான நாவல் பாணியில் ஒரு அறிமுகத்தை செய்யாமல், அந்த பாத்திரம் யாரால் நோக்கப்படுகிறதோ, அவரது உணர்விற்கு ஏற்ப அறிமுகப்படுத்துதல், அதாவது நாவலுக்குள் ஒருவர் மற்றவரைப் பார்ப்பது குறித்து, ஒரு நோக்குநிலை வர்ணனையை வெளிப்படுத்துதல் என்பது வாசிப்பில் புதியதொரு உணர்வை தருவதாக உள்ளது.
வேதகால ராக்கெட் குறித்த பகடி? 30-களில் சமஸ்கிருத பண்டிதர்கள் ஹிட்லர் உறவு, மொழி-அடையாளமாக வெளிப்படும் உளவியல், சிந்தனை போலிஸ் மொழியை ஒரு உளவியல் குறியாகக்கொண்டு (symptoms)ஆய்வது, அதற்கென அவர்கள் வைத்துள்ள சொல்தொகுப்பு ஆய்வு, எழுத்தாளர் கண்காணிப்பு என்பது சிறிது சிறிதாக நனவிலி இயக்கமாக மாற்றப்பட்டு, மனப்பிறழ்ந்த நிலைக்கு தள்ளுதல் என மிகவும் தற்காலத்தன்மை கொண்ட நாவலாக வெளிப்பட்டுள்ளது. நாவலின் மிக முக்கியமான பகுதி சிறுபான்மை (மைனாரிட்டி)பெரும்பான்மை (மெஜாரிட்டி) குறித்த உளவியல் கட்டமைப்பு. இந்தியாவின் மிகப்பெரும் ஆபத்தே இதுதான். இதை அந்த சிறுபான்மை ராபர்ட்-வினாயக்காக மாறுதல் என்பதில், அவன் சிறுபான்மை, பெரும்பான்மையாக உள்ள ஒரு கிறித்துவ கிராமத்தில், அவனது இந்து நண்பன் ஒடுக்கப்படுவதும், அவனது நண்பன் வீடு இடிக்கப்படுவதும், அதனால் பாதிக்கப்பட்டு ராபர்ட் வினாயக்காக மாறுதல் என்பதாக விளக்கப்படும் பகுதிகள் முக்கியமானவை. இன்று பெரும்பான்மை அரசியல் எப்படி சிறுபான்மைகளை சோதனை எலிகளாக மாற்றி தங்கள் வினாயக வழிபட்டை நிகழ்த்தி, ஒரு பேரச்சத்தை கட்டமைக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள நல்லதொரு பகுதி. இதில் சிறுபான்மையினர், பெரும்பான்மை உளவியலில் ஏற்படுத்தும் சிக்கல் குறித்த கருத்து முக்கியமானது.
வலதுசாரிகள்சுனாமிபோன்ற நிகழ்வுகளில் உதவுதல் என்றரீதியில், வேர்க்கால் மட்டத்தில் பணியாற்றுகிறார்கள். அதனால் அவர்களால் இலவச அடியாட்படைகளாக மொத்த பெரும்பான்மை சமூகத்தில் சில பொறுக்கி எடுத்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் அதிகாரத்திற்கான பகடைக் காய்களாகப் பயன்படுத்த முடிகிறது. மனிதர்களிடம் காணப்படும் பிறன்மை வேட்கையான சேவை மனப்பான்மை, கருணை, இரக்கம் ஆகியவை இவர்களால் உடல்களில் உயிர் முதலீடுகளாக்கி தங்களது உடல் ஆயுதங்களாக அவர்களை பயன்படுத்த முடிகிறது. வலதுசாரி வளர்ச்சி, ஊடகங்கள்-கதைகள்-வாசிப்பின் இடத்தில் காட்சியை முன்வைத்தல், பல பொய் மதவாதக் கதைகளைக் கட்டுவது என ஊடகப் பொய்கள்தான் உலகை ஒரு மீ-யதார்த்த மெய்நிகர் உலகை (hyper real virtual world) உருவாக்கி உண்மை எனக்காட்டுகிறது. அந்த உண்மைகளின் பொய்மை அரசியலைப் புனைவாக எழுதிக் காட்டப்பட்ட கதையே இந்நாவல். இன்றைய அரசியல் புனைவுகளை அறிய அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.
– ஜமாலன்