ஆயிரம் சந்தோஷ இலைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்) – நூல் அறிமுகம்
2001ம் ஆண்டு வெளியான ஷங்கர்ராமசுப்ரமணியனின் முதல் தொகுப்பான ‘மிதக்கும் இருக்கைகளின் நகரம்’ தொடங்கி> அடுத்தடுத்து வெளி வந்த ‘காகங்கள் வந்த வெயில்’> ‘சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை’> ‘அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள்’ மற்றும் 2012-ல் வெளிவந்த ‘ராணியென்று தன்னையறியாத ராணி’ தொகுப்பு வரையிலான கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தொகுப்பில் உள்ளன.
‘கவிதை எந்த/அற்புதத்தையும்/நிகழ்த்துவதில்லை../அது எளிய விசயங்களை/நேசிக்கிறது..’ என்று கவிதையைப் பற்றியே போகன்சங்கர் ஒரு கவிதையில் எழுதியிருப்பார். ‘எளிய விசயங்களை நேசிப்பதே’ இங்கு ஓர் அற்புதம்தானே..?
நம்மைச் சுற்றியும் நம்;மூடாகவும் நிகழந்;து கொண்டிருக்கும் பல புறச்சூழல் விவரணைகள் – காட்சிப்பிடிப்புகள் ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகளில் தொடர்ந்து வந்தபடி உள்ளன. சில இடங்களில் அவை வெறும் காட்சிப்படிமங்களாக எஞ்சி நின்று அதன்வழியே ஒரு சர்ரியலிச உணர்வை ஏற்படுத்துகின்றன. ஸ்டேஷன் என்ற தலைப்பில் ‘அந்த அதிகாலையில்/பெயர் மட்டுமே பரிச்சயமான/ஊரின் ரயில் நிலையத்தில்/சிறு பையுடன்/இறங்குகிறீர்கள்..’ எனத் தொடங்கும் கவிதை உள்ளிட்ட சில இவ்வகையிலானவை.
மெலிவான
காற்றில்
காதலால் வலுப்பெற்று
நெடுஞ்சாலையில்
அலைவுறுகிறது
தெர்மகோல் அட்டை
கடக்கும் வாகனங்களில் சட்டென மோதி
உருண்டைகளாய்
உதிர உதிர
மீண்டும்
உக்கிரம் பெற்று
தன் குறைஉடலுடன்
ஆசையுடன்
நடனம் ஆடுகிறது
சில இடங்களில் அந்தக் காட்சிக்குப் பின் ஓர் உணர்வு நிலையை ஒரு சில வாக்கியங்களில்/சொற்களில் கொண்டு வந்து நிறுத்துகிறார். அது சர்ரியலிசத் தன்மையை மிகுந்த ஓர்மையுடன் சிதைத்து அதில் கவிஞனின் உணர்வு நிலையை ஏற்றி ஓர் அர்த்தச் செயல்பாட்டை நிகழ்த்துகிறது.
ராணியென்று தன்னையறியாத ராணி
மலைச்சரிவிலுள்ள
அந்தச் சிறுவீட்டின்
வாசல்படியில்
கன்னத்தில் கைபதித்து
மென்சோகத்துடன்
காத்திருக்கிறாள்
ராணியென்று
தன்னையறியாத
ராணி…
இந்த இடத்தில் வாசகன் தனது உணர்வுநிலையுடன் அல்லது கவிஞனின் உணர்வுநிலையில் இருந்து மாறுபட்ட உணர்வுநிலையை அக்கவிதையில் ஏற்றுகையில் ஒரு கவிதையானது இரண்டாக – ஏன் – வாசிக்கும் பல்வேறு நபர்களுக்குத்தக பல்வேறு கவிதைகளாக உருமாறுகிறது.
நெடுஞ்சாலை உணவகம்
பயணிகளின்
மூத்திரத்தால் உப்பேறிய நிலங்களில் நிற்கும்
நெடுஞ்சாலை உணவகங்கள்
அவை
அகாலத்தில் இசைக்கும்
பாடல்கள்
யாரொருவர் துக்கத்தையோ
யாருக்கோ
அவசரஅவசரமாய்
பட்டுவாடா செய்துவிடுகின்றன
இளநீர் இல்லாத இளநீர் ஒன்றைப் பருகுகிறீர்கள்
உணவு இல்லாத உணவொன்றைப் புசிக்கிறீர்கள்
நிலவற்ற ஒரு நிலவை வெறிக்கிறீர்கள்
இரவற்ற ஒரு இரவில்
குறுக்குமறுக்காக
காதலுக்கு இலக்கற்று அலையும்
நம் மூட்டத்தின் மனச்சித்திரமா
இந்த நெடுஞ்சாலை உணவகம்.
இன்னொன்றும் நிகழ்கிறது – கவிஞன் தனது எண்ணத்தை/உணர்வை வாசகனிடத்தே திணிக்கும் மேல்xகீழ் நிலையாக்கம். இது திணிப்பா அல்லது கவிதையின் கையறு நிலையா என்று சிந்திக்கத்தான் வேண்டும். அந்தக் கவிதை அப்படியானதொரு நிலைப்பாட்டினை அதுவே தேர்ந்துகொள்கிறதோ என்னவோ..? எனக்கு வான்கோவின் பிரபல ‘கைவிடப்பட்ட ஷூக்கள்’ ஓவியத்தை கீழ்க்கண்ட கவிதை நினைவுபடுத்துவதை தவிர்க்கவே இயலவில்லை.
துக்கம்
குப்பைவண்டி சேகரித்துச் செல்வதற்காக
வீதியோரத்தில்
வைக்கப்பட்டுள்ளது
ஷூ ஜோடி.
கிழிந்து நைந்து
தோல் சிதைந்து
நெகிழ்ந்திருக்கிறது
கருணை பணிவு
பிரார்த்தனை மரணம்
காதல் நிச்சயமின்மை
அனைத்தையும் சுமந்திருக்கும்
முதியவனின் பழுதுபட்ட கண்களுடன்
அவை இன்று
வீதியை வெறிக்கின்றன.
என்னைப் பொருத்தவரை இன்றைய தமிழ்ச்சூழலில் மேற்சொன்ன அனைத்தும் கவிதைகளில் நிகழ்த்தப்படும்போது அதுவே ஒரு கவிஞனின் முக்கியமான இயக்கமாக/செயல்பாடாகவே கருதுகிறேன். அது ஷங்கரின் இத்தொகுப்பில் முழுமையாக உணர முடிகிறது.
ஷங்கரின் கவிதைகளில் துலக்கமாக ஒளிரும் இரு விசயங்கள் – காமமும் முதுமையும் (மரணம் என்றும் சொல்லலாம்). காமத்தின் அழகியல் (சிலருக்கு வெறும் காமம் மட்டுமே எடுபடும்) என்பது தமிழ்க் கவிதைகளில் வெகு சிலருக்கே நுட்பமாக வாய்க்கப் பெற்றிருக்கிறது. அதில் ஒருவர் ஷங்கர்ராமசுப்ரமணியன் என்று இத்தொகுப்பின் மூலம் சொல்ல முடியும். காமத்தின் அழகியல் இவரது கவிதைகளில் நுணுக்கமாக வெளிப்படுகிறது. அது அவருடைய புழக்கடைப் பாத்தியில் முளைவிடும் பசிய இலையாய் ஒளிர்ந்து கலவியின் போது ஒற்றைக் கொம்புடைய வரிக்குதிரைகளை ஆங்கொரு சிறுமரத்தடியில் மேயச் செய்கிறது. போலவே> ‘டோனி’ மற்றும் ‘முதிய கவிஞன்’ கவிதைகளில் இயல்பாகவும் அழகாகவும் ஒருபால் ஈர்ப்பும் உறவும் காட்சிப்படுத்தப்படுகிறது. காதல்> காமம் என்றாலே அனைத்தும் அடங்கியதுதானே..!
மிகச் சிறப்பாக தொகுப்பு முழுதும் தொடர்ந்து சிறுமியின் (சிறுவனின் அல்ல) புறஉலகம்> அகஉலகம் இரண்டும் மேலும் சிறுமியைப் பற்றிய கவிஞனின் உலகமும் துல்லியமாகவும் ஏக்கமாகவும் பதிவு செய்யப்படுகிறது. அது போல பிராயத்தில் இருந்து முதுமைக்கு மாறும் காலமாற்றம்> அதனால் ஏற்படும் அகச்சலிப்பு அல்லது அகவிரிவு என்பவையும் தொடர்ந்து அவரது கவிதைகளில் தொழிற்படுகிறது. தவிட்டுக்குருவிகளை வேடிக்கைப் பார்த்து புதிய காலணிகளை பறிகொடுத்த போதிருந்து அந்த அகமாற்றத்தை உணரத் தொடங்கும் கவிஞர் குழந்தைகள் பூங்காவில் செவ்வகக் கூண்டுக்குள் நேர்க்கோட்டில் ஓடிக்கொண்டே இருக்கும் மனதை அவதானித்து> கொடியின் ஓரத்தில் உலரும் வெளிறிய வெள்ளை உள்ளாடையாய் காற்றில் மெதுவாக ஆடிக்கொண்டிருக்கும் தனது வயதைக் கூர்ந்து பார்த்து குழந்தைகள் விடைபெற்றுச் செல்லும் ஒவ்வொரு பொழுதும் நடுங்கும் முதுமையின் கரங்களில் கனக்கும் அந்தியை நாள்தோறும் உணரத் தலைப்படுகிறார்.
மேலும்> ‘பிழைத்திருத்தலின்’ அபத்தத்தை உணர்த்தும் ‘ஒரு இரங்கற்பாடல்’> ‘கௌரி அம்மாள்’> ‘சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்’> ‘துணி துவைத்துத் தேய்ப்பவன்’> ‘மாமிச உணவின் நறுமணம்’> ‘சூரிய உதயத்திலிருந்து வருகிறோம்’ போன்ற நேர்த்தியான கவிதைகளும் உள்ளன.
கூடுதலாக> ஒட்டுமொத்தமாக ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகளை வாசிக்கையில்> தொடக்க காலத்தில் இருந்து பிற்காலக் கவிதைகளில் கூடிய செவ்வியல்தன்மையும் (ராணியென்று தன்னையறியாத ராணி தொகுப்புக் கவிதைகள்)> மெலிதான பகடியும் (‘ஜி.நாகராஜன் இறந்து விட்டார்’> ‘நான் தமிழ் புரோட்டா’> ‘கவிதையை கவிஞர் கே. இப்படி’> ‘ஒரு நாள்’ போன்றவை) அதிகரித்தபடி இருப்பதை அவதானிக்க இயலும். வண்டிக்காரன் கழற்ற இயலாமல் போன இரவாடிய விளக்கின் மர்மங்களைப் போலவே ஷங்கர்ராமசுப்ரமணியனின் கவிதைகளில் தொடர்ச்சியாக ஒரு நம்பிக்கையின்மையின் கசப்பானது> வண்டிக்குக் கீழே உலர்ந்த சேறுபடிந்து தரையில் பதிந்துள்ள அரிக்கேன் விளக்காய் அவரது கவிதைகள்வழி உணர முடிகிறது. அது சரி> வாழ்வென்பது எல்லாமும்தானே..!
அனைவரும் வீடு நீங்கி
கருக்கல்
இருட்டுக்குள்
தங்களைப் பொதிந்து
கொண்டனர்
கால்நடைகளோடு
நிற்கும் அவர்களின் முகத்தில்
சாயங்காலம் மீந்த நிழல் உள்ளது
நண்பனின்
அறை தாழிடப்பட்டிருக்க
பேருந்துநிலைய இருக்கையில்
ஒரு பறவையின் முணுமுணுப்பும்
நான் உதிர்க்கும் சாம்பலும்
விழுந்து கொண்டிருக்கிறது
ஒரு மாபெரும் ஆஷ்ட்ரேவுக்குள்.
இக்கவிதையை வாசித்து முடித்ததும் உங்களுக்குள் ஏற்படும் வெறுமையும் கையறுநிலையும் ஷங்கரின் கவிதைகளின் ஆதார சுருதி. ஷங்கர்ராமசுப்ரமணியனின் இன்றைய கவிதை எதிலிருந்து உருவாகி வந்துள்ளது என்பதை அறிய இத்தொகுப்பு இன்றியமையாதது
நூலின் விவரங்கள்:
நூல்: ஆயிரம் சந்தோஷ இலைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்)
கவிஞர்: ஷங்கர் ராமசுப்ரமணியன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ரூ.250/-
எழுதியவர் :
✍🏻 அன்புச்செல்வன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
