மனிதர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் அவர்களின் வரலாறு இருக்கிறது; பண்பாட்டுக் கூறுகள் இருக்கின்றன; அதிகார வேட்கை கொண்ட அரசியல் இருக்கிறது; அனைத்திற்கும் மேலாக அதைக் கையாளும் தனிமனிதரின் சிக்கலான இடியாப்ப உள்ளமும் இருக்கிறது. அதனால்தான் என்னமோ, இந்தக் குணம் கொண்ட சொல்லைக் கொண்டு சொல்லப்படும் ஒரு சிறுகதையும்கூடப் பன்முகப்பட்ட பின்னங்களோடு கூடிய பெருங்கதையாடலாகப் படிக்கிற வாசகருக்குள் பிரம்மாண்டமாக வளர்ந்து கொண்டே போகிற நிலைமை ஏற்படுகிறது போலும். இப்படித்தான் சண்முக சிவாவின் “எஞ்சி இருக்கும் மானுடம்” என்ற இத்தொகுப்பிலுள்ள எட்டுக் கதைகளும் படிக்கப் படிக்க வாசகருக்குள் வளர்ச்சி அடைந்து கொண்டே இருப்பவைகளைத் தொடர்வதை என்னால் உணர முடிந்தது.
‘புலிச்சிலந்தி’ என்ற முதல் கதையைப் படித்து முடித்தவுடன் தொடர்ந்து வாசிப்பதை நிறுத்திவிட்டேன்.அவர் போட்டுக் காட்டிய சொற்கோலங்கள் எனக்குள் பூதாகரமாக வளரத் தொடங்கிவிட்டன.ஒரு தாயையும் மகளையும் முன்னிறுத்தி, அவர்கள் ஏற்கெனவே சூழ்ச்சிகரமாகத் தயார்ப்படுத்தப்பட்டிருக்கும் வலைகளில் சிக்கிக் கொள்வதைக் கதைசொல்லி சித்திரிக்கிறார். வலையைப் பின்னிய சிலந்தி, பதற்றம் இல்லாமல் தன்னையும் இரையையும் பாதுகாப்பாக எப்படி நிலைநிறுத்திக் கொண்டு எப்படித் தின்று ஜீரணித்துத் துப்புகிறதோ அப்படித்தானா இந்த மனித வாழ்க்கையும்? என்னைத் தின்பதற்கு நானே சம்மதம் தரும்படியான நெருக்கடியைக் கண்ணுக்குத் தெரியாமல் உருவாக்கி உருக்குலைத்து அழிப்பதுதானா மனித சமூக வாழ்வு என்பது?இதைத்தான் நோம்சோம்ஸ்கி “சம்மதங்களை உற்பத்தி செய்யும் முதலாளித்துவச் சமூகம்” என்கிறாரா?எப்படியான ஒரு சமூகத்தில் பெருவாரி மக்களின் இருப்பு இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணரவைத்து வாசகர்களைச் சுடும் நெருப்பில் தள்ளி விடுகிறது இந்தக் கதை. தாய், மகள், மேனேஜர், மாமா என்பவர்கள் எல்லாம் குறியீடுகள்தான்; இந்தக் குறியீடுகள் மூலம் உடைமைச் சமூகம் தனது உச்சபட்ச தந்திரங்கள் மூலம் தனது இருப்பிற்கு எந்த ஏதமும் ஏற்பட்டுவிடாமல் எப்படித் தன்னைத் தொடர்ந்து வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது என்பதை இந்தக் கதை அழகாக உணர்த்திவிடுகிறது.
**
“ஒரு கூத்தனின் வருகை” – என்ற கதை எட்கர் ஆலன் போ பாணியில், இறுதியில் ஒரு ‘திருப்பத்தை’ முன்னிறுத்திப் புனையப்பட்ட ஒன்று. “இந்தத் தேகத்தால என்ன செய்யுறதுன்னு யோசிச்சவங்கக் கூத்த கண்டுபிடித்ததுபோல அந்தக் கூத்தன், இந்தக் கூத்துக்காகவே ஜென்மம் எடுத்ததுபோல வருவான்” என்று கூத்துக் கலையின் மகத்துவத்தைக் கொண்டாடும் முறையில் எழுதப்பட்டது என்றாலும், கலை, இலக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இருக்கும் உறவு குறித்த ஒரு விசாரணையாக எனக்குப் படுகிறது. “எங்களுக்கு இந்தக் காசு கால் தூசி” என்றும் “கலைஞன்னா கலையை வளர்க்கிறவன், விற்கிறவன் இல்லை” என்று அந்தக் கூத்தன் வாய் வழியாகக் கதைசொல்லியே பேசுவதாக எனக்குத் தோன்றுகிறது.
சமூகத்தின் அலகுகளான ஆண்-பெண் உறவுமுறை, சமயம், கல்வி, நீதி, அரசியல் முதலிய அனைத்தும் பணபலத்தால் அளக்கப்படும் ஒரு சமூக வாழ்வில், கலை, இலக்கியங்கள் மட்டும் காசு ஒரு தூசி என்று விலகி வாழ்ந்துவிட முடியுமா? முடியாதென்று கதை சொல்லிக்கும் தெரியாதது அல்ல. “சமூகத்தின் ஆன்மாவாக நின்று வழி நடத்துபவை; குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பவை; அடையாளம் அற்றுப் போனவர்களுக்கு அடையாளம் சூட்டுபவை. நிராகரிக்கப்படும், ஒடுக்கப்படும் எதையும் எதிர்த்து நிற்பவை இந்தக் கலை, இலக்கியங்கள்தான்”.இதுதான் மனித வரலாறுதோறும் கலை, இலக்கியங்களின் அறமாக இருக்கிறது. இத்தகைய அறவாழ்வை மேற்கொள்ளவேண்டிய கலை இலக்கியவாதிகள், “எற்றிற்கு உரியர் கயவரொன்று உற்றக்கால், விற்றற்கு உரியர் விரைந்து” – என்று வள்ளுவர் சொன்னது போல பணத்தின் முன்னால் ஒரு புழுப்போல ஆகிவிடும் கலை இலக்கியவாதிகள் பெருகிவிட்ட இன்றைய முதலாளித்துவ நுகர்வுச் சமூகத்தில், “பார்! இந்தக் கூத்துக் கலைஞர்கள் எப்படிக் கலைக்காகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் பார்!” என்று ஓங்கிக் குரலெடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஒரு பக்கம் எழுத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கருணை கசிய கண்ணீர் விடுவது; மறுபக்கம் இந்தப் பாதிப்பை நிகழ்த்தும் அதிகார வெறியர்கள் தரும் பட்டம், பதவி, பரிசு, பணம், புகழ் முதலியவற்றிற்கு முந்திக் கொண்டு ஓடுவது. இந்தக் கேவலத்தைத்தான் இந்தக் கதை விமர்சிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.கதைசொல்லி மிகவும் நுட்பமானவராக வெளிப்படுகிறார்.தான் சொல்ல நினைப்பதைச் சொல்லாமல் சொல்லிவிடத் தெரிந்தவராக இருக்கிறார்.இதுதானே தமிழ்ச் சங்க இலக்கியப் படைப்பு நெறியும்.
ஒரு பக்கம் கொடூரமான வறுமை; மற்றொரு பக்கம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஆசையைத் தூண்டும் வளமை. இத்தகைய பிளவுண்ட சமூக அமைப்பில் வாழப் பிறந்த பெருவாரி மக்கள் தனது கைக்குக் கிடைத்தது சிறு துரும்பானாலும் அதையே சிக்கெனப் பிடித்துக் கொண்டு, எங்கே இதையும் இழந்து விடுவோமோ, சுட்டுப் பொசுக்கும் வறுமை நெருப்புக்குள் மாட்டிக் கொள்வோமோ என்கிற அச்சத்திலேயே ஆவியைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்து தீர்க்கின்றார். கடைநிலை ஊழியர் தொடங்கி அதிகாரம் செலுத்தும் பதவியில் இருப்பவர் வரை எல்லோருக்குள்ளும் ஓர் உளவியல் பண்பாகவே உருவாகி இயக்குவது மேற்கொண்ட அச்சம்தான். இப்படியான ஓர் அச்சம் சமூகத்தில் நிலைகொண்டிருப்பதுதான், ஆளுகிற தொழிலை நடத்த ஆளும் அதிகாரவர்க்கத்திற்குப் பெரும் துணையாக இருப்பதால் (இராணுவத்தைவிட, காவல்துறையைவிட) மனிதச் சமூகம் இப்படி வறுமை x வளமை; கீழ் x மேல் என்று பிளவுபட்டுக் கிடப்பதிலிருந்து எந்தக் காரணம் கொண்டும் மாறிவிடாமல் கவனமாகப் பல்வேறு நுண்ணிய பாதுகாப்பு வளையங்களோடு கண்காணித்துக் கொள்ளுகிறது.
“மெர்சிடிஸ் பென்சும் முண்டக் கண்ணிம்மனும்” – என்ற கதை டிரைவர் முனியாண்டியும், மேனேஜர் ரட்னராஜாவும் கொள்ளும் அச்சத்தையும், அந்த அச்சத்தை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தையும் திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி போல புனைந்துரைக்கிறது. வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் டிரைவர், மேனேஜரின் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறார் என்றால், மேனேஜர் செய்வினையால் தன் பதவி போய்விடுமோ என்ற அச்சத்தில், அருள் வந்து சாமியாடும் டிரைவர் காலில் விழுந்து வணங்குகிறார்; அப்பொழுது அவருக்கு அவர் டிரைவர் அல்ல; சாமி! தெய்வம், மாந்திரீகம், சடங்கு, அருள்வாக்கு என்று நடத்துகிற பரிகாரம் வழியாகத் தன் அச்சத்தைத் தணித்துக் கொள்ளுகிறார் மேனேஜர்.சமூகத்தில் நிலவுகிற வறுமை x வளமை என்ற பிளவுகளின் உப உற்பத்திதான் இந்தச் சாமி, மாந்திரீகம் முதலிய பலவும்.
மேலும் இந்தப் பிளவு மேலே சொன்னதுபோல வறுமையில் விழுந்துவிடுவோம் என்ற அச்சத்தை மட்டும் விதைப்பதல்ல, உழைப்பைச் சுரண்டுவதற்கு ஏதுவாகவும் நாமும் இரவு பகலாக உழைத்தால் இப்படி வளமையாகவும் வாழ முடியும் என்ற கனவுகளையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் ஓர் அமைப்பு. இதை டிரைவர் பறப்பது போன்ற மெர்சிடிஸ் பென்சு காரில் பயணம் செய்ய ஆசைப் படுவதைச் சுட்டிக்காட்டி விடுவதன் மூலம் கதைசொல்லி பதிவு செய்து விடுகிறார்.கோயிலில் இருந்து திரும்பும் போது மேனேஜர் காரோட்ட அருள்வாக்குக் கூறிய டிரைவர் பின்னால், சாய்ந்து அமர்ந்து வருகிறார்.அவர் ஆசையும் தற்காலிகமாகவாவது நிறைவேறுகிறது.வாழ்க்கை இத்தகைய அபத்தங்களால் நிறைந்தது என்று சிரிப்போடு சிரிப்பாக வாசகரை உணர வைத்து உறைந்துபோகும்படிச் செய்துவிடுகிறார் கதைசொல்லி.எப்போதும் அங்கதத்திற்குள் ஆழமான துக்கம் இருக்கும் என்பதற்கு இந்தக் கதையும் ஒரு சான்று.மேலும் குற்றம்-தண்டனை என்கிறஒரு மன அமைப்பை வடிவமைத்து அதிகாரம், தன்னை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறதுஎன்கிற உண்மைக்கும் ஒரு காட்சி வடிவமாக இந்தக் கதை அமைந்துள்ளது.
**
சமயம், சாதி, வர்க்கம், மொழி என்று பிளவுற்றுக் கிடக்கும் ஒரு சமூக அமைப்பில், அதிகார மோகம் கொண்டலையும் அரசியல் வாதிகள் இந்த வேறுபாடுகளை வளர்த்து ஊதி வெறுப்பை விதைத்து மிக எளிதாக அறுவடை செய்து கொள்ளுகின்றனர். சமய அமைப்புகளுக்கும் அரசியலுக்கும் இருக்கும் உறவை முன்னிறுத்திச் ‘சாமிக்குற்றம்’ என்ற கதையைப் பின்னியுள்ளார். ‘சிம்பாங் அம்பாட்’ என்ற இடத்திலுள்ள பன்னாட்டுக் கம்பெனிக்குச் சொந்தமான செம்பனைத் தோட்டத்தின் மூலையில் இருந்த முனியாண்டிக் கோயிலுக்குக் குப்பை அள்ள வந்த லாரி, சுவரைஇடித்துச் சாய்த்துவிட்டது. அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க’ என்று ஊருக்குள் வந்து அறிவிக்கிறான் .அந்த ஊரில் இருக்கும் ஒரே பத்திரிக்கை நிருபர், இதை எப்படி மதப்பிரச்சனையாக்கி, அரசு சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதைப் பொறுத்துக் கொள் முடியாது என்கிற மாதிரியான ஓர் உரையாடலை உருவாக்கி விடுகிறார் என்பதைக் கதைசொல்லி கச்சிதமாகப் புனைந்து காட்டுகிறார். ஆளுங்கட்சித் தலைவர் டத்தோ கதிரேசன் கையிலெடுக்கிறார்; நெருக்கத்தில் தேர்தல் வர இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் முருகேசன் இந்து மதத்தைக் காப்பாற்ற உயிரையே விடத் தயாரென அறிக்கை விடுகிறார். இந்து சங்கம் மற்றும் என்.ஜி.ஓஸ் கண்டன அறிக்கைகள் எங்கும் பறக்கின்றன.அரசு தலையிட்டுப் பன்னாட்டுக் கம்பெனியின் ஒத்துழைப்போடு கோயிலை மறுசீரமைப்பு செய்து புதுப்பிக்க முனைகிறது. புதிதாக நிர்வாகக் கமிட்டி அமைக்கப்படுகிறது; ஆளும்கட்சியைச் சார்ந்த கட்டிடக் குத்தகையாளர் டத்தோ ஸ்ரீலிங்கம் அதன் தலைவராகிறார்; அவரே கட்டிட ஒப்பந்தத்தை எடுத்துக் கொள்ளுகிறார்; மற்ற நிர்வாக உறுப்பினர்களுக்குத் தேங்காய்க் குத்தகை, பூக்கடைக் குத்தகை என்று ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக் கும்பகோணத்திலிருந்து சிவாச்சாரியார்கள் வந்து இறங்கிவிட்டார்கள். இப்பொழுது முனியாண்டி முனீஸ்வரராகி மெல்ல மெல்ல ஈஸ்வரமூர்த்தியாகிவிட்டார்; முனியாண்டி இப்பொழுது காவல் தெய்வமாகக் கோயிலில் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்; அவருக்குச் சைவ உணவு பரிமாறப்பட்டது. பழைய பூசாரி சொற்பச் சம்பளத்தில் கோயில் துப்புரவுத் தொழிலாளி ஆனார்.“சக்தியுள்ள தெய்வம்” என்று திசையெங்கும் பேர் பரவி கோயில் வருமானம் பெருகிப் பணக்காரக் கோயிலாகிவிட்டது.
கதையை இத்துடன் முடித்திருந்தால் இது ஒரு சாதாரண அரசியல் கதையாக முடிந்திருக்கும்; ஆனால் பழைய பூசாரி கனவில் முனியாண்டி தோன்றி தனக்கொரு தனிக் கோயில் ஆற்றின் அடுத்த கரையிலுள்ள ஆலமரத்தின் கீழ் நீ எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டதாகக் கதைமுடியும்போது வேறொரு பரிமாணம் பெற்று விடுகிறது. கனவில் சொன்னபடிச் செய்யாவிட்டால் “சாமிக்குத்தம்” ஆகிவிடும் என்று மனைவியிடம் கூறியதற்கு அவள், “ஒனக்கும் ஒஞ்சாமிக்கும் வேற வேலை இல்லையா” என்று சடைத்துக் கொண்டது போலவும் பதிவு செய்கிறார்.
இந்தக் கனவுக்காட்சி மூலம் சமூகத்தின் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை யாரும் இந்தச் சாமிப்பயத்தைக் காட்டிச் சம்பாதித்து வாழ்வதை விட்டுவிடத் தயாராக இல்லை. சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் சாமிப்பயம் நிலைபெற்று இருக்கும் வரை இதை வைத்துப் பிழைக்கும் பூசாரிகளும் கீழே இருந்து மேலே வரை இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இருப்பவர்களுக்குச் சாமிப்பயம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இழப்பதற்கென்று எதுவும் இல்லாதவர்களுக்குள்ளும் இது எப்படிப் புகுந்து வினைபுரிந்து கொண்டிருக்கிறது என்பதையும் கதைசொல்லி இந்தக் கதை மூலம் விசாரிக்கிறார் எனப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக உடைமையாளர்களின் உடைமை மட்டுமல்ல, அவர்கள் வைரம், தங்கம், முத்து, தேரென்று பூட்டிக் கொண்டாடும் பணக்காரத் தெய்வங்களும் ஏழை, எளியவர்களிடமிருந்து பறித்துச் சுருட்டிக் கொண்டவைதான் என்கிற மறைக்கப்பட்ட கோயில் வரலாறுகளையும் சொல்லிவிடுகிறதுஇந்தக் கதை.
தன் தொழில் சார்ந்த எடுத்துரைப்பிலிருந்து எந்தக் கதைசொல்லியும் தப்பித்துவிட முடியாது என்பதற்கேற்பத் தன் மருத்துவத் தொழிற் பின்னணியில் சண்முகசிவாவும் சில கதைகளைப் படைத்துள்ளார். ‘எல்லாம் சரிதான்’, ‘கனவு’, ‘வைரத்தூசு’, ‘துர்க்கா பாய்’ ஆகிய நான்கு கதைகளும் அப்படிப் புனையப்பட்டுள்ளன.இக்கதைகள் நான்குமே அன்று தொட்டு இன்று வரை இலக்கியத்தின் அறமாக நின்று வினைபுரியும் குரல் அற்றவர்களின் குரலாக ஒலிக்கின்றன.
‘எல்லாமும் சரிதான்’ என்ற கதை பணக்கார, படித்த மருத்துவர் குடும்பம் ஒரு பக்கம்;படிக்காத, ரௌடிக் குடும்பம் மற்றொரு பக்கம் என்கிற இருமை நிலையில் புனையப்பட்டுள்ளது. வளமையான மருத்துவர் கந்தையா, பிலிப்பனோ நர்ஸ் ஒருத்தியைச் சேர்த்துக் கொண்டதால் அவர் மனைவி பிரிந்து தனியாக வாழத் தொடங்கி விடுகிறார். மனைவி மில்லியனர் ஒருவரின் மகள்; சொத்தெல்லாம் மனைவி பெயரிலேயே இருக்கிறது. பிரிந்திருக்கும் மனைவி கண்டபடிச் செலவு செய்வதாகக் கேள்விப் படுகிறார்; இப்பொழுது மனைவிமேல் குடும்ப அமைப்பு எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே ஆண்களின் உளவியலாக வந்து உறைந்து விட்ட சந்தேகப்படும் அந்த ஆதி மனம் மேலெழுந்து இவரைப் படுத்துகிறது; உளவு பார்த்துச் சொல்ல ஒரு ஆளை இரகசியமாகப் பார்க்க வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கும்போது, தன் குழந்தைக்கு மருத்துவம் பார்க்கத் தன்னிடம் வந்து சேர்ந்த டிரேகன் ராஜா என்று அழைக்கப்படும் ரௌடி நாகராஜனை வளைத்துப் பிடித்துவிடுகிறார். இத்தகைய இடங்களில் கதையை எடுத்துரைப்பதில் எந்தப் பிசிறும் இல்லாமல் தேர்ந்த ஒரு கதைசொல்லிக்குரிய குணத்தோடு மொழியாடுகிறார் சண்முகசிவா.
மூன்று மாதம் கழித்து ரௌடி நாகராஜனும் மருத்துவரும் அளவுக்குமீறி மது அருந்திக் கொண்டே உரையாடுகின்றனர். எந்த ஆண் மேல் தனக்குச் சந்தேகம் என்று மருத்துவர் சொல்லி அனுப்பினாரோ அந்த வக்கீல் (சிவபாதசுந்தரம்) ஒரு சீக்காளி என்றும், மருத்துவரின் மனைவி தங்கமானவர்; பயபக்தியோடு வாழ்கிறார்; தர்மம் பல செய்வதால் எங்கும் அவருக்கு நல்ல பெயர் என்றும் தகவல்களைத் தெரிவிக்கிறான். கூடவே “என் கதையை இப்பொழுது சொல்லுகிறேன் கேளுங்கள் டாக்டர்” என்று தன் கதையை அவரிடம் திறந்து வைக்கிறான். “ரௌடி வாழ்க்கையில் அடிபட்டு ஆண்மை இழந்து போனதை மறைத்து என் மனைவி லில்லியைத் திருமணம் முடித்துக் கொண்டேன்; இது மட்டுமா எனக்கு ஹார்ட்டில் ஓட்டை, ஆஸ்துமா, சுகர், ஒரு கிட்னிதான் வேலை செய்கிறது, இவ்வளவையும் பொறுத்துக் கொண்டு என்னோடு வாழ்ந்தாள். பத்து ஆண்டுகள் கழித்து, என் உயிரினும் மேலான என் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவம் பார்க்க உங்களிடம் ஓடி வந்தேனே அந்தக் குழந்தை ஐஸ்வரியா-வைப் பெற்றுக் கொடுத்தாள்; நான் என் குழந்தையாக அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டேன்” என்கிறான். மேலும் ‘அந்த பிலிப்பனோ காரிய விட்டுட்டு மேடம் கிட்ட மன்னிப்புக் கேட்டுப் போய்ச் சேந்துக்கங்க’ என்றும் அறிவுரை கூறுகிறான். இறுதியாகக் கதைசொல்லி இப்படி முடிக்கிறார் கதையை:
“அவகிட்ட உண்மைய சொல்லாதது தப்புத்தானே டாக்டர்” என்று சொன்னான். உங்க கிட்ட உண்மையச் சொல்றதும் தப்புத்தானே என்று நினைத்துக் கொண்டான்… “எல்லாமும் சரிதான் டாக்டர்” என்று சமாதானமாகச் சொல்லிவிட்டு எழுந்து கொண்டான்.“பொய்மையும் வாய்மை இடத்த” என்பதற்கு ஒரு கதைவடிவம் நமக்குக் கிடைக்கிறது.
ஆண்-பெண் உறவில் ஏற்படும் முடிச்சுகளில் எவ்வாறு ஆணின் உளவியலாக மாறிவிட்ட ஆணாதிக்கப் பார்வை செயல்படுகிறது என்பதை இந்தக் கதை நுட்பமாகக் காட்சிப் படுத்துகிறது. நர்சுடன், தான் கொண்ட உறவைத் தன் தவறாகக்கூட உணரவிடாமல் இந்த ஆணெனும் மனப்பான்மை எப்படிச் செயல்படுகிறது என்பதை இந்த உறவு குறித்து ரௌடியிடம் தெரிவிக்கும்போது, அந்த பிலிப்பனோ நர்ஸ்தான் “தந்திரம், மந்திரம் பண்ணித் தன்னை வளச்சிப் போட்டுட்டா” என்று அதையும் பெண்ணின் குற்றமாகவே பார்க்கும் பார்வை மூலமாகப் புலப்படுத்தி விடுகிறார்.
பொதுவாக உடைமையும் அதிகாரமும் கூடிக் கிடக்கும் இடங்களில் பெண்ணடிமைத் தனமும் கூடவே அதிகமாக வெளிப்படும்; அதிகாரமும் உடைமையும் குறைந்த இடங்களில் பெண்ணடிமைத்தனமும் குறைந்து காணப்படும் என்பர். இந்தக் கதையிலேயும் இது காட்சியளிக்கிறது. படிக்காத ரௌடியிடம் காணப்படும் “தன்னை அறிதல்” என்கிற பார்வை, படித்த மருத்துவரிடம் தோன்றாமல் மறைப்பது எது ‘தான் ஆண்’ என்கிற ஆதிக்கப் பார்வைதானே!
**
கனவு, துர்க்கா பாய், வைரத்தூசு – ஆகிய மூன்று கதைகளும் கிராமத்திலிருந்து நகரத்திற்குள் வந்து வாழ நேர்கிற வலிகளைப் படம் பிடிப்பவை ஆகும்.நகரங்கள் குற்றங்களின் கொள்கலமாகவும் அதிகாரத்தின் அடையாளமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தோட்டங்கள் கைமாறும்போது வேலை இழந்த கூலிகள், பிழைக்க வேண்டுமே என நகரத்திற்குள் வந்து அதன் இருண்ட சந்துகளில் ஒதுங்கிச் சீரழிந்துபோகும் வாழ்வின் கொடூரத்தைக் ‘கனவுக்’ கதையில் வரும் 16 வயது அருணாவின் அல்லலை முன்னிறுத்திச் சொல்லி விடுகிறார். இதுபோலவே “துர்க்காபாய்” கதையிலேயும் தினேஸ்வரி என்கிற 12வயது சிறுமி ஏமாற்றப்பட்டுக் கருச்சுமந்து கண்ணீர் விடும் கதையைப் புனைந்துரைப்பது மூலம் புலப்படுத்தி விடுகிறார்.
‘வைரத்தூசு’ – என்ற கதை, பார்வதி தன் 4 வயது பாலகனைத் தூக்கிக் கொண்டு, 80 வயது தாத்தா துணையோடு கிராமத்திலிருந்து கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மருத்துவம் பார்க்க நேரங்கெட்ட நேரத்தில் வந்து சேர்கிறாள்; அவசர அவசரமாக நடமாடித் திரியும் இந்த நகர மனிதர்கள் நடுவே அவள் தன்னை ‘அந்நியமாக’ உணர்ந்து உருக்குலைவதும், மருத்துவமனைக்குள் திசை தெரியாமல் தன்னைத் தானே தொலைத்துக் கொண்டு தவிப்பதுமாகக் காட்சிகள் கச்சிதமாகச் சொல்லப்படுகின்றன. வைரத்தூசு போல மின்னும் நகரத்துள் இருக்கும் அரசு பொது மருத்துவமனைகள் இல்லாதவர்களுக்கு எட்டாக் கனியாகவே இன்றும் இருக்கின்றன. நகரம் குற்றவாளிகளான அரசியல்வாதிகளுக்கும் உடைமையாளர்களுக்கும் சட்டத்தை மீறிச் சம்பாதிப்பவர்களுக்குமான களமாக இருக்கும்போது அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் சிற்றூர் மக்களுக்கு அங்கே கொடுக்கப்படும் உயர்தரமான மருத்துவம் மட்டும் எப்படிக் கிட்டிவிடும்? அங்கே கூட்டிப் பெருக்கும் ஓர் ஆயாவிடம் கொஞ்ச நஞ்சம் எஞ்சி இருக்கும் மனிதத் தன்மை மட்டும் கிட்டாமல் போயிருக்குமானால், “சாவதற்கான நியாயங்கள் தனக்கு அதிகம் இருப்பதாக நம்பும்” பார்வதி உயிர்காக்க உயர்ந்து நிற்கும் அந்த மருத்துவமனைக்குள்ளேயே உயிரை விட்டிருப்பாள். நகரங்கள் இப்படித்தான் ஏழைகளுக்குக் கொலைக்களமாகத் தன்னுள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
சமூகத்தின் கண்கள் காணாததைக் கண்டு கூறுவதும், சமூகத்தின் காதுகள் கேட்காததைக் கேட்டு வெளிப்படுத்துவதும்தான் இலக்கியத்தின் அறம்.சண்முகம் சிவாவின் கதைகள் இந்த அறத்தின் மேல் நின்றுகொண்டு தனக்கான அழகியலை வடிவமைத்துக் கொண்டுள்ளன.
சிவா, தன் தொழில் நெருக்கடி காரணமாகவோ என்னமோ தனக்குள் திரண்டு கிடக்கும் அரிதான,குறிப்பாக நகைச்சுவை கசியும் படைப்பாற்றலைக் கொஞ்சம்தான் இதுவரை வெளிப்படுத்தியுள்ளார்; இனிப் பணியில் இருந்து ஓய்வு பெறும் காலம் நெருங்கி விட்ட சூழலில் அவர்மூலம் தமிழ்ச் சிறுகதை இலக்கிய வெளித் தன்னைச் செழுமையாக நிரப்பிக் கொள்ளுமென்று நம்பலாம். சிவாவை ஒரு தடவை கோவையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்திய “புலம்பெயர் இலக்கியம்” குறித்த கருத்தரங்கில் சந்தித்துப் பேசி இருக்கிறேன்.நகைச்சுவை மிக்கவராக வெளிப்பட்டார்.எழுத்திலும் இதே நகைச்சுவை, அழகு சேர்க்கிறது என்பதையும் சொல்லவேண்டும். மேலும் உளவியல் மருத்துவர் என்பதால் கதை சொல்லும் பாணியில் புதுப்புது உத்திகளைக் கையாளுதல் என்கிற முறையில் இயங்கினால் சண்முகம் சிவா இன்னும் கூடுதலாக வெளிப்படுவார் எனச் சொல்லத் தோன்றுகிறது.
க.பஞ்சாங்கம்,
புதுச்சேரி-8.
நூல் விவரம்:
எஞ்சி இருக்கும் மானுடம் – மா.சண்முக சிவா சிறுகதைகள், தொ.ஆ. நவீன் (2018), வல்லினம் பதிப்பகம், மலேசியா.
***********†*********************