மனதைப் புடமிடுதல்*

வறீதையா கான்ஸ்தந்தின்

‘சமூகத்துக்கான பெரும் முன்னெடுப்பாக மாறிவிடும் வாய்ப்பு கொண்ட அரிதான தன்பரிசோதனை.’

 

அண்மையில் எனக்குக் கிடைத்த அற்புதமான வாசிப்பு அனுபவங்களில் ஒன்று திரு.சாந்தமூர்த்தியின் ‘1000 மணிநேர வாசிப்புச் சவால்’.

இலக்கியத்துக்குத் தாமதமாக அறிமுகமானவன் நான். சாண்டில்யனின் வரலாற்றுப் புதினங்கள் வாசித்திருக்கிறேன். என்றாலும் முறையான இலக்கிய அறிமுகம் என்பது பேராசிரியர் வேதசகாயகுமார் வழியாகக் கிடைத்ததுதான். ‘இலக்கியம் வாழ்வை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என்பார் அவர். புனைவு சாரா எழுத்துக்கும் அது பொருந்தும் என்றே கருதுகிறேன்.

1

பெயர்த்தி அட்வியோடு சாந்தமூர்த்தி முயன்ற பண்பாட்டுப் பரிசோதனைகள் என் நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்ளும் அனுபவமானது.

பணிநிறைவுக்குப் பிறகு ஜூன் 2018இல் சென்னைக்குக் குடிபெயர்ந்த நேரத்தில் ஊடகர் அருள் எழிலன் தமிழில் தட்டச்சு செய்யும் என்.எச்.எம். மென்பொருளை அறிமுகப்படுத்தினார்; அதோடு, அதற்கான இணைப்பையும் அனுப்பி வைத்திருந்தார். ஆங்கிலத்தில் தட்டச்சு பழகியிருந்த எனக்கு, ட்ரான்ஸ்லிட்டெரேஷன் வழி யூனிகோடு தமிழ் பழக சில நாட்களே தேவைப்பட்டன.

பிறகு நிகழ்ந்தது ஒரு பாய்ச்சல் என்று சொல்ல வேண்டும். சப்தமின்றி, என் அறை ஒரு டெஸ்க்டாப் பதிப்பு அலுவலகமாய் மாறியது. மெய்ப்பு, செம்மையாக்கம், வடிவமைப்பு, அழகியல் எல்லாமே இணையவழி பரிவர்த்தனை என்றானது. சில ஆயிரம் பக்கங்களை ஊற்றுப்பேனா கொண்டு எழுதிப் பழகிப்போன நான், இப்போது மனதின் ஓட்டத்தைக் கணினிக்குக் கடத்த வேண்டியிருந்தது. ஆரம்பச் சறுக்கல்களுக்குப் பிறகு அதற்குப் பழகிக் கொண்டேன். மூன்று வருடங்கள் அப்படிக் கழிந்தபோது, என் அழகான கையெழுத்தை இழந்திருந்தேன்!

பெங்களூரு பல்கலைக் கழகத்தில் புள்ளியியல் பேராசிரியராயிருந்த நஞ்சுண்டன், பிரதியாக்கத்தில் புலி. சில நூல்களைக் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். 2006இல் காலச்சுவடுக்காக என்னுடைய தொகுப்பு ஒன்றைப் நஞ்சுண்டன் பிரதியாக்கம் செய்திருந்தார். தமிழ்நடைப் பயிற்சிப் பட்டறைகள் சிலவற்றை ஒருங்கிணைத்திருந்தார். ‘இப்பொழுதெல்லாம் கையெழுத்துப் போட மட்டுமே பேனாவைப் பயன்படுத்துகிறேன்; கணினிக்குப் பழகிவிட்டேன்’ என்றார். கவிஞர் மாலதி மைத்ரி போல பலரும் அப்படிச் சொன்னார்கள். சாந்தமூர்த்திக்கு என்னுடைய சில நூல்களை அனுப்பி வைக்கிறேன் என்றபோது, ‘வேண்டியதில்லை, நான் கிண்டிலில் படித்துவிடுகிறேன், அதுதான் எனக்கு வசதி’ என்றார். நான் வியக்கவில்லை. அவரவர் பழக்கம்.

இயல்பு வாழ்க்கையைப் பெரும் சஞ்சலங்களுக்கு உள்ளாக்கிய கோவிட் பெருந்தொற்று, வாழ்வைப் பற்றிய என் பார்வையைப் புரட்டிப் போட்டது. என் தேவைகள் குறைவுதான். என் வயிறு ருசி தேடும் ஒன்றல்ல; அரிசியும் பயிறும் கிடைத்தாலே போதும், நாட்களை நகர்த்திவிடலாம் என்று நினைப்பவன். தேவைகளைக் குறைத்துக் கொண்டால் சிக்கல்களும் குறைந்துவிடுகின்றன. தொற்று நேராமல் பார்த்துக் கொள்வதே கொடுங்கனவுதான். வந்துவிட்டால் சிகிச்சைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், மருத்துவமனைக்கு மட்டும் போய்விடக்கூடாது, தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் கூடாது என்று இருவரும் கங்கணம் செய்து கொண்டோம். ஊடகங்களில் வந்த காட்சிகள் எச்சரித்துக் கொண்டிருந்தன. ‘மூழ்குதல் அத்தனை துயரமானதல்ல, மூழ்காதிருக்க நாம் செய்கிற முயற்சிகள் போல’ என்று எமிலி டிக்கின்சன் ஒரு கவிதையில் எழுதியிருப்பார். இறுதியில் அது வந்தேவிட்டது. இணையரும் நானும் தொற்றுக்கு உள்ளானோம். மருத்துவமனை போகும் அளவுக்கு நிலைமை தீவிரப்படவில்லை என்பது நல்விதி.

கோவிட் காலத்தில் கிடைத்த இரண்டு அற்புதமான அனுபவங்களில் ஒன்று, என் பெயரனோடு வாழும் பேறு. அவனைக் குளிப்பாட்டுவது, பலவிதமான பொம்மைகளை வைத்து அவனுடன் விளையாடுவது, நடை போவதும் மட்டுமல்ல, அவன் குரலே எனக்கு உத்வேகம் தந்தது. நோய்வாய்ப் பட்டிருந்த காலத்தில் அன்றாடம் காலையில் எங்கள் அறைக் கதவைத் திறந்து, மனனம் செய்ததை ஒப்புவிப்பது போல, ‘தாத்தா, சொகமாயிட்டீங்களா?’ என்று கேட்பான். சுகமானால்தான் தாத்தா அவனோடு விளையாட முடியும் என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. இரண்டாவது அனுபவம், 70, 80 வயது நண்பர்கள் சிலரிடம் அவ்வப்போது தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தது. உரையாடல் இரு தரப்புக்கும் நன்மை பயத்தன. பேராசிரியர் ச.வின்சென்ட் குறிப்பிட்ட கால இடைவெளியில் அழைத்துக் கொண்டிருந்தார். மற்றொருவர் காப்டன் மைக்கேல் வின்சென்ட் லூயிஸ்.

பெருந்தொற்றுக் காலத்தில், மதில்சுவரில் பூனை போல மரணம் என் முன்னால் உட்கார்ந்திருந்தது. வாழ்வில் முதன்முதலாக அப்படியொரு உணர்வு ஏற்பட்டது. வாசகர் பலருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. பதட்டம் அடைவதற்குப் பதிலாக மரணத்துக்கு என்னை ஒப்புவித்துக் கொண்டேன். அந்த முடிவு, என்னை வேறொரு வேலைக்குத் தயார்ப் படுத்தியது. என் 20 ஆண்டுகால எழுத்து என் மறைவுக்குப் பிறகு காணாமல் போய்விடலாம்; அல்லது, கண்டவர் கண்டபடி கையாளும்படி ஆகலாம். அவை எல்லாவற்றையும் சேகரித்து, மின்பிரதியாக வெளியிடும் திட்டமிருந்தது. அதற்கான காலம் இப்போது கனிந்திருப்பதாகத் தோன்றியது.

2021 மார்ச்சில் என் தேவைக்கேற்ற புதிய கணினியை மருமகன் ஜிம்கர் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். என் சேமிப்பு 40,000த்துடன், இணையரின் பங்களிப்பு 25000. ஏற்கனவே வெளிவந்திருந்த என்னுடைய 21 நூல்களைக் கிண்டிலில் மின்பதிவாக்கினேன். வாழ்வில் குறைந்த காலத்தில் நிகழ்த்தி முடித்த மிகப்பெரும் பணி. அதோடு, மனதுக்கு நிறைவான புதிய நூல் ஒன்றையும் எழுதி முடித்திருந்தேன்.

மனநலம் பற்றிய ஒரு நூலை 2022 செப்டம்பரில் வெளியிட்ட பிறகு, தமிழில் மனநலம், மாற்றுத் திறனாளிகள் / அவர்களின் பராமரிப்பாளர்கள் எழுதிய புத்தகங்களைப் பட்டியலிட்டு, ரெ.விஜயலெட்சுமி, போகன் சங்கர், ஜிம்கர் உதவியுடன் வாங்கிவைத்து, வாசிக்கத் தொடங்கியிருந்தேன். 2023 ஆகஸ்ட்டில் லெவ் தல்ஸ்தோயின் ‘பாவமன்னிப்பு’ என்கிற தன்வரலாற்றை வாசித்தேன். கடுமையான சுயபரிசோதனையாக இருந்தது. செப்டம்பரில், ஓரிரு நாட்கள் திருவனந்தபுரம் மருத்துவமனை ஒன்றில் சில நாட்கள் தங்க நேர்ந்தபோது லெவ் தல்ஸ்தோய், ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி எழுதிய நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகளை வாங்கிச் செர்த்துக் கொண்டேன்.

அந்தப் புத்தகங்கள் வரவேற்பறையின் அலமாரியிலிருந்தபடி என்னைச் சவாலுக்கு அழைக்கும்- ‘எப்போது வாசித்து முடிக்கப் போகிறாய்?’ என்று. 2021 அக்டோபரில் சென்னையிலிருந்து ஊருக்கு வந்துவிட்டேன். இன்று வரை தனிமைதான் என்றாலும் நூல்களின் துணையோடு வாழ்ந்தேன். வேலைத் தீவிரத்தில் சிலமுறை நான்கைந்து நாட்கள் மனித முகங்களைப் பார்க்காமல் வீட்டில் அடைந்து கிடப்பேன். சமயங்களில் உணவு நேரம் தவறிவிடும்.

ஓர் இடர் ஒருவரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடலாம். நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் வாசிப்புக்குள் நுழைந்த கதை ஓர் உதாரணம். சிறுவயதில் அவரது இதயம் லப்-டப் என்று துடிக்கவில்லை. டப் என்கிற ஓசைக்குப் பதிலாக ‘த்..ப்..’ என்கிற முணுமுணுப்பு மட்டுமே கேட்கும். இந்தக் கோளாறை ‘சிஸ்டாலிக் மர்மர்’ என்பார்கள். ‘உங்கள் பையனை இனிமேல் விளையாடவோ, சைக்கிள் மிதிக்கவோ அனுமதிக்கக் கூடாது’ என்று மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். வாசிப்புதான் பொழுதுபோக்கு என்றாகி, பிற்காலத்தில் தீவிர ஆய்வுக்குள் நுழைந்துவிட்டார் சிவசு. வாழ்க்கையின் திசையை மாற்றிய ஏதொவொன்று ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்திருக்கலாம்.

‘வாசிப்பு ஒரு தவம்’ என்று சாந்தமூர்த்தி ஜெயமோகனை மேற்கோள் காட்டுகிறார். வாசிப்பு தவமெனில், எழுத்து வேள்வி. இரண்டையும் நிகழ்த்திய ஜெயமோகன், ‘இளவயதில் இரவுபகல் பாராமல் நாள்கணக்கில் தொடர்ந்து படித்தார்’ என்று குறிப்பிடும் ஆசிரியர், அதைத் தனக்கான சட்டகமாய்க் கொள்ள வேண்டியதில்லை. பெரும் துயரமும் நெருக்கடிகளும் வாழ்வின் விளிம்புக்குத் துரத்திக் கொண்டிருந்த காலமற்ற காலத்தில் அவருக்கு அது நிகழ்ந்தது.  பிறகொரு கட்டத்தில் எதிர்பாராமல் கிடைத்த வழிகாட்டுதல் அவருக்கு உதவியது. அது கிடைக்காமல் போயிருந்தால் அவர் வேறென்னவாகியிருப்பார்? பதில் தர முடியாத கேள்வி. அவ்வாறான துயரம் எவருக்குமே நேரக்கூடாது என்று மனம் வேண்டுகிறது.

2

நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கு நேர்ந்த பேரிழப்பின் துயரத்திலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி என்கிற யோசனையில் இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. நீண்டகாலத் தாக்கம் உள்ள எந்த முடிவையும் ஓராண்டு தள்ளிப்போடுவது என்பதில் இருந்த தெளிவு, இன்னும் ஓராண்டை எப்படித் தாண்டப் போகிறோம் என்பதில் ஏற்படவேயில்லை. எங்காவது ஒரு தொலைதூரப் பயணம் மேற்கொள்ளலாம் என்றால் மருத்துவமனை அலைச்சலில் உடல் பலவீனமாகி இருந்தது. டிசம்பர் காலநிலை வேறு பயமுறுத்தியது. திட்டமிட்டிருந்த இரயில்பயணத்துக்கான முன்பதிவுச் சீட்டுகளை ரத்து செய்தேன்.

மீண்டும் எழுத்தில் தீவிரமாய் இறங்கத் தீர்மானித்தேன். முதலில் வாசிப்பில் மனதை ஒருமுகப்படுத்தியாக வேண்டும். எழுத்து ஒன்றுதான் எனக்குத் தெரிந்த வேலை, பொழுதுபோக்கு, கனவு எல்லாம். இப்போதைய மனநிலையில் அதில் இறங்க முடியுமா? வீழ்ந்துவிட்டால், என் கனவுகளும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையும் பொருளற்றுப் போய்விடும்.

உலகம் இறந்தவர்களின் சடலங்களைச் சுமந்துகொண்டு பயணிப்பதில்லை. எந்த இழப்பிலிருந்தும் மீண்டுவிடுவது உயிரின் அடிப்படை உந்துதலாய் இருக்கிறது. துயரமும் வலியும் ஒருவரை எந்த விளிம்புக்கும் இழுத்துச் செல்லும் என்று சொல்வதற்கில்லை. கடந்து வருவது என்பது பெரும் சவால். சாந்தமூர்த்திக்கு அது சாத்தியம் ஆகியிருக்கிறது.

நலவிரும்பிகள் என்னோடு உரையாடிக் கொண்டிருந்தனர். ‘மீண்டு வந்துவிடுவேன், அதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன’ என்று அவர்களுக்குச் சொன்னேன். என்னை அழுத்திக் கொண்டிருந்த உணர்ச்சிகளை அறிவால் எதிர்கொள்ளத் தீர்மானித்தேன். மனதைக் குடைந்து கொண்டிருந்தவற்றை eழுத்தில் பதிவு செய்தேன். இலக்கிய நிகழ்ச்சிகளுக்குப் போகத் தொடங்கினேன். ஐந்தாறு நிகழ்ச்சிகளில் உரை நிகழ்த்தினேன். அதில் ஒரு நிகழ்ச்சி நூல் அறிமுக சந்திப்பு. பொள்ளாச்சியைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவன் யோகீஸ்வரன் எழுதிய ‘கஜராஜன் கலீம் தாத்தா’வை அறிமுகம் செய்து உரையாற்றினேன். என் ஊரில் நான் படித்த நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் நூல் வாசிப்பு குறித்து உரையாடத் தீர்மானித்தேன்.

புதிய மனிதர்கள், புதிய சூழல், புதிய தலைப்புகளில் தேடல். எவரெஸ்ட்டில் கொடியேற்றுவது போல, ஒரு புதிய தொடரையும் ஜனவரியில் எழுதி முடித்தாயிற்று. நம்பிக்கை வந்ததால் எழுதவில்லை, துணிந்து எழுதியதால் தன்னம்பிக்கை மீண்டது. வாசிப்பு அதற்கு உதவியது என்பதில் ஐயமில்லை.

இந்த வேளையில்தான் ‘1000 மணிநேர வாசிப்புச் சவால்’ கைக்கு வருகிறது. ஒரு புதினத்தின் சுவாரஸ்யத்தோடு நூலை வாசித்து முடித்தேன். ஏறத்தாழ ஒரு புத்தாக்கப் பயிற்சியை நிறைவு செய்த புத்துணர்வு. வாசிப்பினூடே என் வாழ்க்கைப் பயணத்தை அசைபோட்டேன். என் வாசிப்பு எப்போது தொடங்கியது, என்னைச் செதுக்கிய நூலகங்கள், நிறுவனங்கள், மனிதர்கள்; ஆய்வு, எழுத்து நிமித்தமான தீவிர வாசிப்பு, பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வி வழிகாட்டல் பயிற்சிகள் நடத்திய காலம்; சூழலியல் களப்பயணங்கள், வாழ்வின் கடினமான கட்டங்களைக் கடக்க எழுத்தைக் கைத்தலம் பற்றியது— இப்படி எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும் தருணமாக அமைந்தது இந்த வாசிப்பு.

3

வாழ்க்கை முழுவதும் வாசிக்காமலேயே கடந்துவிடுவதற்கான காரணங்கள் சாந்தமூர்த்திக்கு நிறையவே இருந்திருக்கின்றன. நிர்வாகப் பணியில் அலுவலக நேரம், ஓய்வு நேரம் என்கிற வேறுபாடு இல்லை; 24 மணி நேரமும் ஒருவரைச் சிந்தனை ரீதியாக முடக்கிப்போடும் ஆற்றல் கொண்டது. அரசுதுறைப் பணி என்றால் கேட்கவே வேண்டாம். வாசிப்பில் சற்றே தேக்கம் நேர்ந்தாலும், புத்தகங்களின் மீதுள்ள காதலைத் துறக்காமலே அவர் பணிக்காலத்தைக் கடந்து வந்திருக்கிறார். அது சாதனை. ஆனால் அதையெல்லாம் தாண்டி, அவருக்குள் ஒரு கல்வியாளர், ஓர் உளநல கலந்தறிவாளர் உயிர்த்திருக்கிறார். தங்கள் காலத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாதவற்றைத் தங்கள் குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோரின் மடமையை, அதனால் ஏற்படும் விபரீதங்களைப் பேசும் அக்கறையும் நாசூக்கும் அருமை. சில துளிகளைத் தொட்டுக் காட்டலாம்:

‘கல்வி குழந்தைமையைக் குலைத்துவிடக் கூடாது… ஒருபோதும் திணிப்பாகிவிடக் கூடாது…’

‘பழங்குடி மக்களின் உணர்ச்சி நரம்புகள் நம்மைவிட தெளிவாகவும், தீட்சண்யத்தோடும் செயல்படும்…’

‘புதியவற்றைக் கற்பதற்குமுன் மூளையில் பதிந்திருக்கும் பழைய பதிவுகளை நீக்குவதற்கான எனிமா தேவை…’

‘ஆஸ்திரேலியாவில் உங்கள் வீட்டுக்கு நீங்களே பெயிண்ட் அடித்துக்கொள்ள முடியாது…’ 

நேர மேலாண்மை என்பது நம் முன்னுரிமைகளை வரையறுத்துக் கொள்வதுதான். என்னைப் பொறுத்தவரை வாசிப்பு, எழுத்து என்கிற இருவேறு செயல்பாடுகளைப் பிரித்துவைத்துச் செய்வதுதான் பெரும் சவால். அன்றாடம் கணினியிலும், சமையலிலும், தோட்டத்திலும் செலவிடும் நேரம் ஒழிய, வாசிப்புக்கு நேரம் ஒதுக்குவதுதான் சிக்கல். இரவு உணவுக்குப் பிறகு சிறிதாய் ஒரு நடை போவேன். இரவுத் தூக்கத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்பாவது கணினி, கைபேசி பார்ப்பதை நிறுத்திவிட வேண்டும் என்றொரு சுகாதாரக் குறிப்பு உண்டு. அதைக் கடைசியாய் எப்போது கடைபிடித்தேன் என்று நினைவில்லை. உட்கார்ந்து புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போது, கணினியில் பாதியில் விட்ட கட்டுரை நினைவில் வந்து தொலையும். மூளையில் வடிவம் கொண்டுவிட்ட ஒரு கட்டுரை, வரிகளில் முழுமை பெறும் வரை, ‘நோவெடுத்துச் சிரமிறங்கும் நேரம்’ என்று பசுவையா குறிப்பிட்ட வேதனையே. நொண்டிச் சாக்குகளைத் தாண்டி, என் முன்னுரிமைகளை இன்னும் தெளிவாய் வரையறுக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

என்னைத் தொந்தரவு செய்யாத ஒன்றைப் பற்றி எழுத உட்கார்ந்ததில்லை; திருப்தியாவது வரை எழுதியதைக் கைமாற்றுவதும் இல்லை. பாம்பின் கால் பாம்பறியும். மற்றவர்கள் நேரத்தை எப்படி மேலாண்மை செய்கிறார்கள் என்று வியந்துகொள்வேன். மனமுண்டானால் வழியுண்டு என்பதற்கு சாந்தமூர்த்தியைவிட சிறந்த உதாரணம் வேண்டுமா? ‘ஆழமான வாசிப்புகள் மனதை நுட்பமான உணர்வுகளுக்கு ஆட்படுத்துகிறது’ என்கிறார்; வாசிப்பு தீர்வுகளுக்கு அவசரம் காட்டும் மனசைப் புடம்போடுகிறது. அந்த அரிய வரத்தை அனுபவித்த ஒருவர் இழக்க விரும்பமாட்டார் என்பதுதான் ஆசிரியரின் அனுபவமாக உள்ளது. ஆனால், வாழ்க்கை என்பது, வாசிப்பும் எழுத்தும் மட்டுமல்லவே!

‘1000 மணிநேர வாசிப்பு சவால்’ வாசிப்பை மையமிட்ட நூல். ஆனால், நூலின் பேசுபொருள் அது மட்டுமல்ல; சுயத்தைச் செதுக்குதல், குழந்தைகளுடன் வளர்தல், நேர மேலாண்மை முதலான நிறைய பொருண்மைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. முடக்குவாதம் மனதை எப்படி முடக்கிப் போடும் என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். சமூகத்துக்கான பெரும் முன்னெடுப்பாக மாறிவிடும் வாய்ப்பு கொண்ட அரிதான பரிசோதனை இந்த தன்பரிசோதனை. எந்த மனிதனையும் சடுதியில் உடைத்துப் போடுகிற ஸ்ட்ரோக் என்கிற மருத்துவ நெருக்கடியைத் தனக்கான புதிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட அவரது மனத்திட்பம் என்னை உசுப்புகிறது. நூலை வாசிக்க வாசிக்க, வேறுவேறு இடங்களுக்குப் பயணிக்கும் இரண்டு இரயில்கள் அவ்வப்போது ஒரே இரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்வது போலிருந்தது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இதுபோல ஏதேனும் ஒன்று பொறியாக அமைந்துவிடும்.

‘எனக்குத் தடுமாற்றமில்லாமல் வேகமாய் நடக்க முடியும்; ஆனால் மெதுவாக நடக்கப் பெரிதும் திணறுவேன்’ என்று ஓரிடத்தில் அவர் குறிப்பிடுகிறார். மூன்று முறை வாசித்த பிறகுதான் புரிந்தது. ‘யாராவது ஜோக் சொன்னால் சிரித்துவிட்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருப்பேன்’, ‘…எனக்குப் புதிய இடத்தில் தூக்கம் வராது’ என்கிறார். ஒருவரின் குணச்சித்திர வரைபடத்தை இவை போன்ற குறிப்புகளிலிருந்தும் பெற முடியும். நஞ்சுண்டனைப் பற்றி அவரது நட்புவட்டத்தில் ஒருவர் இப்படிக் குறிப்பிட்டார்- ‘அவரால் பேனா இல்லாமல் வாசிக்கவே முடியாது’. பழக்கம் மனிதனை மாற்றிவிடும் ஆற்றல் கொண்டது. ‘பத்து நிமிஷம் ஒருவரால் எப்படி படிக்காமல் இருக்க முடியும் என்று தோன்றுகிறது’ என்கிறார் சாந்தமூர்த்தி. ‘சற்று நேரம் எதையும் செய்யாமல், சிந்திக்காமல் இருப்பதும் ஒரு வரம்’. இதை செரிக்க முடியாத வேறொரு எல்லையில் அவர் நிற்கிறார்.

ஆனால் சாந்தமூர்த்தியிடம் எனக்கு மிகவும் பிடித்தது, எதற்கும் உரிமை கோராத, எதன்மீதும் தீர்ப்புரைக்காத, கடந்த காலத்தின்மீது புகார்ப் பட்டியல் வாசிக்காத அவரது எடுத்துரைப்பு. குழந்தைமையின் வியத்தலோடு வாழ்வை எதிர்கொள்கிறார். சான்றாக, தனது பெயர்த்தி அட்வியோடு இணைந்து அவர் நிகழ்த்தும் பண்பாட்டுப் பரிசோதனை. அதன் ஈவுகளைத் தனக்குக் கிடைத்த படிப்பினையாக முன்வைக்கும் அவர், எந்தப் புள்ளியிலும் தனது பெயர்த்தியை விதந்தோதவில்லை. ‘இது எந்தக் குழந்தைக்கும் சாத்தியம்- முறையான பயிற்சி கிடைத்தால்’ என்பதே அவர் முன்வைக்கும் மையச் செய்தி.

4

வாழ்க்கையை எதைக் கொண்டு நிரப்புவது என்றறியாமல் தொலைந்து போகிற மனிதர்கள் பெரும்பான்மையினர். வாசிப்புக்கு எதிரிகள் வெளிநாட்டிலோ, எதிர்வீட்டிலோ அல்ல, நம் வீட்டிலேயே இருப்பார்கள். ஒருமுறை படிப்பறையில் வாசிப்பில் தீவிரமாய் இருந்தபோது ஏதோ எரிச்சலில் மகளிடம் சொன்னது என் காதில் விழுந்தது- ‘ஆமாம், நாளைக்குப் பரிச்சை; அதற்குப் ப்ரிப்பேர் பண்ணிட்டு இருக்காங்க.’ ‘சில பெண்களுக்குப் புத்தகம் மீது பொறாமை உண்டென்றும் ஒரு கருத்து உண்டு. தன் இடத்தைப் பங்கு போட வந்தவர் மேல் உண்டாகும் எரிச்சல்…’ என்கிற ஆசிரியரின் கருத்து ஆண்களுக்கும் பொருந்தும். ‘இணையருக்கும் புத்தகத்தில் ஆர்வத்தை ஊட்டிவிட்டால் சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கலாம்’ என்பது பொதுவிதி அல்ல. தன் இணையர் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பது அவருக்கு நல்விதி. சூழலியல் எழுத்தாளர் நக்கீரனின் எல்லா எழுத்துகளுக்கும் முதல் வாசகி அவரது இணையர்தான். ஜெயமோகனின் இணையர் அருண்மொழி 1000 மணிநேர வாசிப்பை நிகழ்த்தியிருக்கிறார் என்பதை இதோடு இணைத்தே பார்க்கிறேன். எல்லோருக்கும் அப்பேறு அமைந்துவிடுமா என்ன.

‘24 மணி நேரமும் சமையலைறையைக் கட்டிக்கொண்டு கிடக்காமல் வெளியே வா, கொஞ்சம் வாசித்துப் பழகு, நீ எளிதாக வாசிப்பதற்கென்றே நிறைய கதைப் புத்தகங்களை வாங்கிப்போட்டிருக்கிறேன், பத்திரிகைகள் கிடக்கின்றன’ என்று இணையரிடம் பல முறை சொன்னதுண்டு. ஒரு புத்தகத்தை எடுத்தால் பத்துப் பக்கங்களைச் சேர்ந்தாற்போல் படிக்க முடியாமல் கீழே வைத்துவிடுவார். ‘எனக்குப் புரியவில்லை’ ‘பிடிக்கவில்லை’, ‘தூக்கம் வருகிறது’ என்று, நேரத்தைப் பொறுத்து ஏதாவது ஒன்றைச் சொல்வார். அவரைக் குற்றம் சொல்வதற்கில்லை. மூளைக்குள் இழுத்துப் போட்டுக்கொண்ட வேலைகள் (mental pre-occupation) வாசிப்பை அனுமதியாது. அவருக்குள்ளே என்னைப் பற்றிய, பதில் கிடைக்காத, பெருங்கேள்வி ஒன்று இருந்தது: ‘பணத்தைச் செலவுசெய்து இப்படிப் புத்தகங்களை வாங்கி வாங்கிப் படித்து இந்த மனுஷன் என்னத்தைச் சாதித்தார்?’ ஆனால் இன்றைக்கு என்னால் சொல்ல முடியும்- புத்தகங்கள்தான் என்னைக் கரை சேர்த்திருக்கின்றன. நம்மைப் பற்றி நாம் புரிந்து கொண்டால் போதும், பிரகடனம் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை.

‘மறதிக்கு ஆற்றல் உண்டு; திரும்பத் திரும்ப நினைவுகூரப்படாத எதுவும் எஞ்சாது’ என்பது அறிவியல் ரீதியாகச் சரியானதே. எனினும், ‘படித்ததெல்லாம் முதல் வேலையாக மறந்து போகிறது’ என்கிற அவரின் கவலையில் நியாயமில்லை. மூளையும் காலமும் வடிகட்டிகள். தரவுகளைக் கையாளும் தனித்திறன் மூளைக்கு இல்லாமல் போயிருந்தால் உலகில் எல்லோரும் பிறழ்வு மனிதர்களே. பரிணாமம் மனித மூளையைச் சரியாகவே பக்குவப் படுத்தியிருக்கிறது.

‘வாழ்க்கையில் நீங்கள் படிக்கும் ஒரு சிறு விஷயம் கூட வீணாய்ப் போவதில்லை’. ஜெயமோகன் பேசியதில் எனக்கு மிகவும் பிடித்த கூற்று இது. வாசித்த வரிசையில், கோர்வையாக அவை நினைவுக்கு வராமல் போகலாம். மனித மனம் தொடர்புபடுத்திச் சிந்திக்கும், ஆனால் எப்போதும் கோர்வையாக சிந்திக்கவேண்டும் என்பதில்லை. நினைவில் பதிந்துபோன ஒன்று தேவையான தருணத்தில் அருகில் வந்து நிற்கும்.

தேர்வு அறைக்குச் செல்லுமுன் ஒருகணம், ‘படித்தவை ஒன்றும் மூளையில் நிற்கவில்லை’ என்கிற அங்கலாய்ப்பு நமக்குள் ஏற்படுவதுண்டு. ஆனால் தேர்வறைக்குப்போய் உட்கார்ந்து, மனதை இயல்பாக்கி, ஒரு கேள்வியை வாசித்தவுடன் அதற்கான விடை விரல்நுனியில் வந்து நிற்கிறது. அவர் வாழ்க்கை முழுவதும் வாசித்த நூறு நூறு நூல்கள் அவருக்குள் ஞானமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன; அவரைச் செதுக்கியிருக்கின்றன. அவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள் அதற்குச் சான்று. ஏதொன்றையும் அணுகுவதில் அவர் காட்டும் அக்கறையும், மிகைப்படுத்தலற்ற விவரணையும் அவரது ஆழ்ந்த வாசிப்பின் பெறுமதி. சாந்தமூர்த்தியைப் போல நாமெல்லாம் வாசிக்க இயலாமல் போகலாம்; ஆனால் புத்தகம் ஒரு மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் என்கிற மையச் செய்தியை அவர் நேர்சாட்சியாய்ப் பகிர்கையில் அதன் உண்மை நம்மைத் தொடுகிறது.

நமக்கெல்லாம் ‘யானைபோல் வாசிப்பு என்னும் ஆறாப் பசியையும் தின்ன புத்தகக் காடுகளையும் அருளுமாறு இறைஞ்சி’ சாந்தமூர்த்தி இந்நூலை நிறைவு செய்கிறார். இதற்கு மேல் நானென்ன சொல்வது!

 

                 நூலின் தகவல்கள் 

நூல் : 1000 மணி நேர வாசிப்புச் சவால்

ஆசிரியர் : சாந்தமூர்த்தி

வெளியீடு : விருட்சம், 2023

விலை : ரூ .1௦௦ 

         

             நூலறிமுகம்  எழுதியவர்

            வறீதையா கான்ஸ்தந்தின்

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *