நூல் அறிமுகம்: சாந்தி என்கிற நஜமுன்னிஷா.. ஆயிஷாவின் விழுதுகள்.. -கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: சாந்தி என்கிற நஜமுன்னிஷா.. ஆயிஷாவின் விழுதுகள்.. -கருப்பு அன்பரசன்



சாந்தி என்கிற நஜமுன்னிஷா
ஆயிஷாவின் விழுதுகள்
தா சக்தி பகதூர்
சந்தியாபதிப்பகம்
மனித குல வரலாற்று பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் குழுக்களுக்கு தலைமை தாங்கிய தாய்வழிச் சமூகம் நிலத்தின் வளம் அறிந்த குழு ஒன்றினால் அங்கேயே தங்கி தன்னுடைய வாழ்வாதாரங்களை எதிர் நோக்கியே தருணமதில் அந்த நிலத்தின் எல்லைக்குள்ளேயே முடக்கப்படுகிறது. நிலத்தின் எல்லை என்பது குடிசையாக, குடியிருப்பாக மாறும்பொழுது குடிசைக்குள் இருக்கும் நெருப்பு கூட்டிற்குள் அடைக்கப்படுகிராள் தலைமை தாங்கிய பெண்..
நெருப்பு கூட்டுக்குள் அடைக்கப்பட்டவள் கட்டுகளை உடைத்து வெளியேராமலிருக்க, நிலம் உள்ளிட்ட வெளி உலகின்  இயற்கை அனைத்தும் அவளின் பெயரால் போற்றத்தக்க ஒன்றாக.. மதிப்புக்குறிய.. தொழுதலுக்குறிய ஒன்றாக உருவகப்படுத்தப்பட்டு, பரந்து விரிந்த அவளின் எண்ணங்களும்.. மனதிற்குள் பறந்த பட்டாம்பூச்சி பாதங்களின் நரம்புகளும் உருவி வெட்டி வீசப்பட்டது வெளியே இருந்த ஆண் என்ற பெரும் சமூகத்தால்.. நிலத்தின் வளமதை சீர்படுத்த.. உழைக்க.. பாதுகாக்க.. சண்டையிட வாரிசுகளை சுமந்து இழுத்துப்போட்டு கொண்டிருக்கும் ஒரு உயிர்க் கருவியாக வீட்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டாள் பெண்.
ஆண் என்கிற குறி அடையாளம்  கொண்ட எண்ணங்களாலும் கருத்துக்களாலும் படைக்கப்பட்ட வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இறை மார்க்கங்கள் என அனைத்திற்குள்ளும் பெண்ணாகப்பட்டவள் ஆண் என்கிற பெரும் சமூகத்தின் அழுக்குகளை உள்வாங்கி வெளியேற்றும் வடிகாலாகவும் அவர்களின் உடமையாகவும், சொத்தாகவும், பொருளாகவும் எழுதி வைக்கப்பட்டாள்.. மனிதகுல வரலாறு நெடுகிலும் அடைத்து வைத்திருந்த நெருப்பு கூட்டிலிருந்து  வெடித்தெழுந்த உயிர்ப் பறவைகளாக பெண்கள் பல காலங்களில் பலவாறு வெளியேறி உயர உயர தொடர்ந்து வந்தாலும் அவர்களை கற்பு, ஒழுக்கம், நெறி என்று ஏற்கனவே வடிவமைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆண் குறிகளின் அடையாளத்தால் பெண்களின் சுய கௌரவமும் அடையாளமும் சிதைக்கப்பட்டு விஞ்ஞானம் வளர்ந்தோங்கி வரக்கூடிய இந்த நவீன காலத்திலும் தொடர்வதென்பது  ஏராளம்.. ஏராளம். சுதந்திரம், விடுதலை குறித்து பேசுவதற்கும் கூட்டில் இருக்கும் ஆண்களிடம் அனுமதி பெற்றே பேசவேண்டிய நவீன சமூகத்தில் பெண்கள் இப்பொழுதும்.. ஆனாலும்கூட ஆங்காங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக விடுதலையின் குரல் உயர உயர எழுப்பிக் கொண்டே இருக்கிறது..
அதிலிருந்துதான் எழுத்தாளர் தா.சக்தி பகதூர் அவர்களின் முதல் நாவலான “சாந்தி என்கிற நஜமுன்னிஷா-ஆயிஷாவின் விழுதுகள்”  என்கிற புதினத்தை பார்க்கிறேன்.. சொற்களையும் வார்த்தைகளையும் தேடி அலையாமல், வலிந்து எழுதாமல் எளிய மக்கள் பேசக்கூடிய வார்த்தைகளை அப்படியே வாக்கியங்களாக மாற்றி வலிமிகுந்த ஒரு நாவலை நம் சமூகத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் சக்தி பகதூர் அவர்கள். திர்னாமலை மக்களின் அச்சுஅசலான பேச்சு மொழி நாவல் முழுக்க வனப்பைச் சேர்க்கின்றது.. நல்லதொரு முறையில் நாவலை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள் சந்தியா பதிப்பகத்தார்.. நாவலுக்குள் தடம் பதிக்கும் புதியவர்கள் பலர் எவருமே இதுவரை பேசியிராத தளங்களில் தங்களின் கதை மாந்தர்களை.. நிஜங்களை அடையாளம் கண்டு கதைகளாக்கி சமூகத்தில் ஒரு விவாதத்தையும் இருக்கக்கூடிய கட்டுமானத்தின் மேல் விசாரணையும்.. கலக்கத்தையும்  நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.. அந்த வழியில் தன்னுடைய முதல் தடத்தை பதிந்திருக்கிறார் எழுத்தாளர் சக்தி பகதூர். வாழ்த்துக்கள்.!
இறை மார்க்கத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவர் ஆயிஷா.. ஆனால் அதே இறை மார்க்கத்தை கடைபிடிக்கக் கூடிய ஜமாத் என்கிற அதிகார வர்க்கத்தால்தான்.. ஆண்களால்தான் இறை மார்க்கத்தின் பெயர் சொல்லி வஞ்சிக்கப்பட்டாலும், எதற்கும் அஞ்சாமல் நெஞ்சிலே துணிவோடு நழுவும் மீனாக இருந்து அதிகார வர்க்கத்தை நோக்கியும்.. இறை மார்க்கத்தையும் அல்லாவையும் கேள்விகளை எழுப்பிக்கொண்டே தன்னுடைய சுயஅடையாளத்திற்கும்..
சுயமரியாதைக்கும் சிறு அளவும் பாதிப்பு ஏற்படாமல் நிமிர்ந்து நின்று தன் நான்கு வாரிசுகளை வளர்த்தெடுத்து சமூகத்தில் ஒரு கௌரவமான நிலையில் ஏற்றிவிட்டு  முஸ்லீம் அடிப்படை வாதத்திற்குள்  கலகத்தை நிகழ்த்தக்கூடிய ஒரு பெண்ணின்.. பெண்களின் கதைதான் இந்த நாவல்.
வயிற்றுப் பசிக்காக தினமும் அல்லாடிக்கொண்டு வரக்கூடிய எளிய மனங்களுக்குள் காதல்..அன்பு.. நேசம் துளிர்விட்டு எழுந்திடும் பொழுதினில் அங்கு ஏற்கனவே கட்டி எழுப்பப்பட்டிருக்கும் அத்தனை சட்டதிட்டங்களும் விதிமுறைகளும் மார்க்கங்களும் அடித்து தூளாக்கப்படும்.. தூளாகி நிற்கும் அந்த துகள்களின் மேலெழுந்து பூத்துக் கிடக்கும் மலர்களுக்குள் இருக்கும் மகரந்தம் இடம் மாறி நிற்கும் பொழுதினில் துகள்களாகிக் கிடந்த சட்ட திட்டங்கள் மீண்டும் எப்படி வலுவானதொரு இரும்புத் திரையை கொண்டுவந்து போர்த்தி தன்னுடைய அடிப்படைவாதத்தை முன்னிறுத்துகிறது. ஆயிஷாவின் முதல் மகளான நஜமுன்னிஷா “சாந்தி” யாகி தாத்ரேயர் என்கிற கூர்க்கா சமூகத்தைச் சார்ந்த இந்துவை மணம் முடித்த பிறகு சதாவை  பெற்றெடுக்கிறார் மகனாக.. எதிர்பாராத விபத்தொன்றில் சாந்தி என்கிற நஜமுன்னிஷா செத்துப் போக..
அவளின் மகனான சதா என்கிற சதாசிவம் குடும்ப உறவுகளுக்காக சந்திக்கும் நிஜமான மன உளைச்சல்களை எதிர்நோக்கும் சவால்களை குடும்ப உறவுகளுக்காக ஏங்கி நிற்கும் அவலத்தை வலியோடு பதிவாக்கி இருப்பார் நாவலாசிரியர்.. எளிய முஸ்லிம் குடும்பத்தில் இருந்து மதமாற்றம் நிகழ்ந்திடும் பொழுது அடிப்படைவாதிகளால் எப்படியெல்லாம் அந்த குடும்பம் முஸ்லிம் சமூகத்திற்குள் தங்கள் அன்பிற்காக ஏங்குபவர்கள் ஒதுக்கி வைக்கிறது என்பதை நாவலுக்குள் அப்படியே கொண்டுவந்து சேர்த்திருப்பார்.. பொருளாதார தேவைகளுக்காக ஆயிஷாவின் வீட்டில் வந்து தங்கிச் செல்லும் ஒரு முஸ்லிம் தம் சமூகத்தின்பொது நிகழ்வின்போது  அடிப்படைவாததோடு எப்படி தன்னை பிணைத்து இறுக்கிக் கொள்கிறான் என்பதை திருமண நிகழ்வொன்றில் பாட்டி ஆயிஷாவோடு செல்லக்கூடிய சதாவின் பிரியாணி ஏக்கத்திலும் எதிர் கொள்வோரின் முகமதில் ஒழுகும் அடிப்படைவாதத்தின் சீழ் நாற்றத்தை நாவலை வாசிப்பவர் நாசி உணரும் வகையில் பதிவாக்கி இருக்கிறார் சக்தி பகதூர் அவர்கள்..
சாதிமத உணர்வுகள் இருந்தாலும் எளிய மக்கள்  ஒரு பெரும் துயரத்தின் போது எப்படி ஒருவருக்கொருவர் இணைந்து நின்று எதிர்கொள்வார்கள் என்பதும்;  சாதி மத துவேஷத்தை சுமந்து இருக்கக்கூடியவர்கள்  அந்த துயரத்திலும் தங்களுடைய அடையாளத்தை நிலை நிறுத்த என்னவெல்லாம் பேசுவார்கள்.. எப்படியெல்லாம் புகுவார்கள் என்பதையும் நாவலுக்குள் சாந்தியின் எதிர்பாராத மரணத்தின்போது பதிவாக்கி இருப்பார்..
சாந்தி என்கிற நஜமுன்னிஷா ஆயிஷாவின் விழுதுகள் - தா சக்தி பகதூர் - சந்தியா  பதிப்பகம் | panuval.com
மனிதாபிமானத்தின் உச்சமாக,  நாவலுக்குள் சலூன் சேகர் வழியாக.. வண்டிக்கார தாத்தா வழியாக.. சொத்தைக் கத்திரிக்கா கடைக்காரர் வழியாக.. ஐஸ்கார மாணிக்கத்தின் மனைவி லட்சுமி வழியாக.. இழவு வீட்டிற்கு வந்திருக்கும் சொந்தக்காரர்களுக்கெல்லாம் தேநீர் கொடுத்து உபசரிக்கும் பூக்கார பச்சை அம்மாவின் மற்றும் சாந்தியின் வழியாக.. பிணத்தை சுமந்து செல்லும் பல்லக்குக்கு பூமாலை கொடுத்து உதவும் பூக்கார ஆறுமுகத்தின் வழியாக எளிய மனிதர்களின் மனிதாபிமானத்தை வாசிக்கும் நம் மனதின் முன் நிறுத்தியிருப்பார் சக்தி பகதூர் அவர்கள்.
மதம் மாறி மனம் செய்த நஜமுன்நிஷா என்கிற சாந்தி பிணமாக கிடக்க.. வந்து பார்க்கும் அவளின் சகோதரன் வீட்டிற்குள் புகுந்து அவளுடைய இரும்பு பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற முற்படும்போது; அதேபோன்று ஆயிஷாவின் இன்னும் ஒரு மகள் தாஜ் மதம் மாறி மிலிட்டரி பாலுவை மணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு உடல்நலக்குறைவால் மிலிட்டரி பாலு செத்துப்போக அவரின் உடலுக்கு எரியூட்ட தன் மகனை பயன்படுத்தினால் பாலுவின் சொத்து முழுவதும் முஸ்லிம் பெண்ணிற்கு போய்விடுமோ என அஞ்சி பாலுவின் சொந்தக்காரர் ஒருவரின் மகனை எரியூட்ட அழைக்க வஞ்சகமாக திட்டமிடும் முதல் மனைவி ராஜத்தின் சகோதரனின் விஷம் தடவிய பேச்சின் போதும்; நிலத்தின் மீதும் பொருளின் மீதும் வளர்ந்து வரும் எல்லையில்லா பற்று என்பது அன்பையும் பாசத்தையும் சொந்தத்தை முழுவதுமாக விழுங்கியும், விலக்கிடும் வெளியே தள்ளி விடும் என்பதை வலி பொருந்திய வேதனையோடு பதிவாக்கி இருப்பார் சக்தி பகதூர் அவர்கள்..
அன்பின் பெயரால் வெவ்வேறு ஆபரணங்களை சூடியும் ஆடைகளை உடுத்தியும்  முகமூடிகளை இழுத்துக் கட்டியும் வஞ்சகம் தோய்ந்த சொற்களை வியாபாரமாக்கி வாழ்கின்ற மனித உலகம் ஆண் பெண் வித்தியாசமின்றி எல்லா இடங்களிலும் இன்றைக்கு பொருளாதாரத்தை மையப்படுத்தி வளர்ந்து ஓங்கி நிற்கிறது நவீன கலாச்சாரத்தின் வழியாக.. பண்பாட்டின் வழியாக. மரியாதைக்குரிய அன்பினை நேசத்துக்குரிய காதலை பிரித்துப் பார்ப்பதும்.. புரிந்து நடப்பதும்.. உணர்ந்து உள்வாங்கிக் கொள்வதும் சவால் ஆகிக் கிடக்கிறது இன்றைய காலகட்டத்தில்.. ஆனாலும்கூட சென்னை பெரு வெள்ளத்தின் போதும்; கஜா புயலின் போதும்; ஒக்கி புயலின் போதும் எளிய மனிதர்களின் நிஜமான காதலை, பெரு உள்ளம் கொண்ட அன்பானவர்களை, பொருளாதாரத்தை தனதாக்கிக்கொள்ள நினைக்காத அன்பு உள்ளங்களை நாம் அடையாளம் கண்டோம்..
தனக்கான எதுவும் இல்லாது இருப்பவர்களுக்கு அன்பு ஒன்று மட்டுமே பெரும் செல்வமாகும். அப்படிப்பட்ட ஒரு செல்வம்தனை தன்னுடைய நாவலுக்குள், பாலாற்றில் வெள்ளம் வரும்பொழுது தூங்கிக்கொண்டிருக்கும் தன்னுடைய குழந்தையை மறந்து, பூனைக்குட்டிகளின்பாலும் நாய்க்குட்டிகளின்பாலும் பேரன்பு கொண்டு கடைசி நேரத்தில் தன்னுடைய குழந்தையின் ஞாபகம் வர  குழந்தையையும் நாய் குட்டிகளோடும் பூனை குட்டிகளோடும் ஒரே கூடையில் தூக்கிச் சுமந்து வெள்ளம் வந்து கொண்டிருக்கும் பாலாற்றில் எதிர்நீச்சல் போட்டு நடந்த ஆயிஷாவின் பேரன்பே உலகத்தின் ஒட்டுமொத்த அன்பிற்கு..காதலுக்கு.. பிரியத்திற்கு.. நேசத்திற்கு அடையாளமாக சொல்லியிருப்பார் நாவலுக்குள் பேராசிரியர் சக்தி பகதூர் அவர்கள். எளியவர்களின் அன்பு, பேரன்பு மிகுந்தது எதிர்பார்ப்பு அற்றது என்பதின் அடையாளமே ஆயிஷா.. அப்படியான ஆயிஷாவின் தொடர்ச்சியாக அவளின் இரண்டாவது மகள் தாஜ் தொடர்வாள்.. தான் எல்லா நிலையிலிருந்தும் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை முழுவதுமாக உணர்ந்து தன்னுடைய கணவனின் மூத்த மனைவி ராஜத்திற்கு உதவி செய்திடும் பொழுது அதை நமக்கு சொல்லி இருப்பார் சக்தி பகதூர் அவர்கள்.
பொருளாதாரத்தில் நிலைநிறுத்திக்கொள்ள தனக்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுது அந்த வாய்ப்பினை தன்னுடை அக்கா சாந்தி என்கிற நஜமுன்நிஷா இறந்த பிறகு அவளின் கணவனும் தன்னுடைய மாமாவுமான தாத்தரையரை ஆயிஷாவின் கடைசி மகள் முஹமூதா மணமுடித்து; தான் தூக்கி வளர்த்த தன் அக்காள் மகன் சதா என்கிற சதாசிவத்தை, தாத்தரையர் சேர்த்து வைத்திருக்கக்கூடிய சொத்தில் பங்கு கேட்டு விடுவானோ என்கிற எண்ணம் மேலோங்க வஞ்சகமாய் சதாவை வெளியேற்றும் பொழுதும்.. அக்காவை இதுநாள்வரை தங்களுக்கான வழிகாட்டியாக ஆதர்சமாக நினைத்து அவளை படமாக வைத்து வழிபட்டு வந்தார்களோ, அந்தப் படத்தை எடுத்து வெளியே வீசும் பொழுதும்.. முஸ்லிம் சமூகத்தில் தான்.. தாம் தொடர்ந்து வாழ்ந்திட வேண்டும்.. தமக்கான தனி அடையாளம் வேண்டுமென்றால்  கடந்த காலங்களில் தமதின் அடையாளங்கள் அனைத்தையும் விடுத்து புதிய ஒரு பாதைக்காக தங்களை மாற்றிக்கொள்ளும் காதராக இருக்கட்டும்.. அடிப்படைவாதம் என்பதும், பொருளாதார தேவை என்பதும் எப்படி மனித மனங்களை மனித உறவுகளை சீர்குலைத்து விதைத்துச் செல்கிறது, வலுவானதொரு கட்டுமானத்தை எப்படி இங்கு கட்டியெழுப்பியிருக்கிறார்கள் சாதி மதத்தின் வழியாக  என்பதை நாவலாசிரியர் இந்த நாவலுக்குள் வேதனையோடு பதிவாக்கி இருப்பார்..



பசியின் வேதனை தாங்காமல்  மரம் அறுக்கும் பட்டறை ஒன்றில் கண்மூடி மயங்கி விடும் ஆடையூரானின் நிலையறிந்து அவனை தன் மடி மீது சுமந்து அவனுக்கு நீராதாரத்தை புகட்டி உயிர் கொடுத்த ஆயிஷாவும்..  தன்னைக் காப்பாற்றிய கடவுளாக நினைத்து தன் நிலத்தில் விளையும் அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்து அவள் கொடுக்கும் நீராதாரத்தை நன்றியோடு சுவைத்து சொல்லும் ஆடையூரான்.. நாவலை  வாசிக்கும் பொழுதில் திண்ணையில் அமர்ந்து கொண்டு நமக்கும் பனை நுங்கை வெட்டி கொடுப்பான் ஆடையூரான்.  அவன் கைபிடித்து வீசும் கத்தியின் ஒவ்வொரு வீச்சும் சாதி வெறி பிடித்து தீண்டாமை வெறி எடுத்து கிளம்பியிருக்கும் ஒவ்வொரு மனங்களின் அடி வேரை ஆழம் தேடி வெட்டிச் செல்லும்.
தலைமுறையொன்று சாதியை மீறி மதத்தை மீறி கட்டப்பட்டிருக்கும் கட்டுமானங்களை எல்லாம் உடைத்தெறிந்து வெளியே வந்தாலும் அடிப்படைவாதத்தின் அடிக் கட்டுமானம் எப்படி சமூகத்தின் முழு அளவையும் ஆக்கிரமித்துக் கொண்டு, மீறியவர்களின் சந்ததியினரை.. சதா என்கிற சதாசிவத்தை .. முஹாமூதா.. காதர்பாபுவை.. வை மீண்டும் தன் ஆக்டோபஸ் கரங்களால் இழுத்து தனதாக்கி வலுவாக நிற்கும் கொடூரத்தை.. எதார்த்தத்தை பதிவாக்கி இதற்கு எதிராக என்ன செய்யப்போகிறோம் நாம் என்கிற சவாலை சாந்தி என்கிற நஜமுன்னிஷா  நாவலுக்குள் கேள்வியை முன்னிறுத்துகிறது.
முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைவாதத்திற்குள்ளும்.. சாதி மாறிய மதம் மாறியவர்களின் வாரிசுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் நாவலுக்குள் பேசி வாசித்திடும் மனங்களை சமன்குலைக்கச்  செய்கிறார்.. கலகத்தை தொடங்கியிருக்கிறார் நாவலாசிரியர்..
அன்பும் வாழ்த்துக்களும் ஆசிரியருக்கு.!
கருப்பு அன்பரசன்
சாந்தி என்கிற நஜமுன்னிஷா
ஆயிஷாவின் விழுதுகள்
தா சக்தி பகதூர்
சந்தியாபதிப்பகம்


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *