சக்தி பகதூர் எழுதி சந்தியா பதிப்பகம் வெளியிட்ட சாந்தி என்கிற நஜமுன்னிஷா (Shanthi Engira Najmunnisa Tamil Novel) நாவல் - தேனி சீருடையான்

சாந்தி என்கிற நஜமுன்னிஷா நாவல் அறிமுகம்

நூல் அறிமுகம்: சாந்தி என்கிற நஜமுன்னிஷா நாவல்

அடக்க முயலும் சட்டங்களும், அடங்க மறுக்கும் மனங்களும்..!

– தேனி சீருடையான்

ஏன் இத்துணை காலம் தாமதமானது என்று தெரியவில்லை. பிரசுரமான காலத்திலேயே (2019) வாங்கி வைத்திருந்தும் புத்தக அட்டலையில் பதுங்கிக் கொண்டதை இப்போதுதான் கையிலெடுத்து வாசித்தேன். வாசிப்பு தாமதமானாலும் மத அதிகாரமும் மார்க்க அடாவடித்தனமும் உள்ளவரை, அழுக்கேறிப் போன சகதிக்காட்டின் ஈரநாம்பல் உயிர்ப்புடன் இருக்கத்தான் போகின்றன. அதுவரை இந்த நாவலும் ஜீவித்திருக்கும் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.

வாசித்த பின்னும் மன அரங்கை விட்டு அகலாமல் என்னை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஆயிஷா. கடை நாவலில் வரும் “அம்மா” பாத்திரம்போல நம்பிக்கைச் சிறகுகளைத் தனது வாழ்வியல் கவசமாக அணிந்து நிமிர்ந்து நின்று உலகைப் பார்த்துப் பரிகாசம் செய்கிறாள். “போங்கடா நீங்களும் ஒங்க மத அதிகாரங்களும்” என்று கம்பீரக் குரல் கொடுத்து, வாழ்வியல் வரலாற்றின் சிறப்புமிக்க அத்தியாயமாய் ஒளி வீசுகிறாள்.

வாழ்க்கையும், சடங்கு ஆச்சாரங்களும், மதக்கட்டுமானத்துக்குள் அடங்கிக் கிடக்கிறது. எந்த மதமாக இருந்தாலும் எல்லை தாண்டி வாழ்வை அமைத்துக் கொள்ள முடியாது. மத சட்டகத்துக்குள்தான் நின்று நீந்தவோ அமுங்கிச் சாகவோ முடியும் என்ற நிலை இன்றளவும் நீடித்திருக்கிறது. வறுமை தாண்டவமாடிய காலத்தில் மதம் தாண்டி திருமண வைபோகம் நடப்பது சாத்தியமானதாய் இருந்தது. அதற்குக் காரணம் ஏழைகளை செல்வந்தர்களை உள்ளடக்கிய மத நிறுவனங்கள் கண்டுகொள்வதில்லை என்பதுதான். ”ஏழைதானே; எக்கேடுகம் கெட்டுப் போகட்டும்” என நினைக்கும் குணமுடையது மத நிறுவனம்.

எனக்குத் தெரிந்து ஒரு பெண், பாத்திமா சந்திரன் என்பவனைக் காதலித்தபோது அவள் குடும்பம் ஏற்றுக் கொண்டது. ஆனால் ஜமாத்தார் மறுத்தனர். சந்திரன் அந்த்ப் பெண்தான் வேண்டும் என்று அடம்பிடித்தபோது அவனுக்கு சுன்னத் செய்து, சுல்தான் என்று பெயர் வைத்து இருவரும் இணைய ஆமோதித்தனர். அவள் பாத்திமாவாக இருக்க அனுமதிக்கப் பட்ட போது அவன் சந்திரனாக இருந்துகொள்ள முடியவில்லை. இன்றும் அவர்கள் மகிழ்ச்சியோடுதான் வாழ்கின்றனர். ஆனால் சந்திரன் குடும்பத்தார் சந்திரனோடு உறவாட முடியவில்லை. ஒருவேளை அது அவர்களின் மனச்சுழிப்பாகவும் இருக்க வாய்ப்புண்டு. அல்லது பாத்திமா தன் காதலனின் உறவினர்களாகிய காபிர்களோடு உறவாட விரும்பவில்லை என்ற மனக்கிலேசம் காரணமாகவும் இருக்கலாம். சந்திரன் தன் பெற்றோரைச் சென்று காண்பது அரிதான செயலாக இருக்கிறது. சந்திரனின் அம்மா அவன் வேலைத்தளத்துக்குச் செல்லும் பாதையில் நின்று கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்து, தாய்மையைப் பொழிந்துவிட்டுச் செல்வார்.

இந்த நாவலில் வரும் ஆயிஷா ஒரு புரட்சிப் பெண். நான்கு பிள்ளைகளுக்குத் தாய்; மூத்தவள் நஜமுன்னிஷா; அடுத்தவள் தாஜ்; மூன்றாவது மகன் காதர்; நான்காவது மகள் மஹ்மதா. தன் மூத்த மகளை தாத்ரேயர் என்ற நேப்பாளியனுக்கு வாழ்க்கைப் பட அனுமதிக்கிறாள். ஜமாத்தார் எதிர்ப்புத் தெரிவித்தபோது நஜமுன்னிஷா தன் பெயரை சாந்தி என்று மாற்றிக் கொள்கிறாள். ஏழையோடு ஏழை இயைந்துவாழும் வாழ்க்கை அபாரமானது. கள்ளம் கபடமற்ற அன்பின் வழியே அவர்கள் வாழ்க்கை இயங்குகிறது.

ஆயிஷாவின் கணவன் ரஷீத் குடிபோதையில் முங்கி அழிந்துபோன போது ஜமாத்தார் அவனை அமட்டி வைக்க மனமில்லாமல் அல்லது வாய்ப்பில்லாமல் விட்டுவிட்டனர். அவன் ஆண்மகன் என்பதால் அவன் செய்த குடும்ப விரோதக் குற்றங்கள் பொதுவெளிக்கு வரவில்லை. ஆயிஷா தன்னந்தனியாக நின்று, சிறுதொழில் செய்து தனது குழந்தைகளைக் காப்பாற்றுகிறாள். ஓர் ஏழையின் வீட்டில் மண ஒப்பந்தம் செய்ய ஜமாத்தார் மறுதலித்த வேளை, தன் மகள் ஓர் இந்துவைத் தேர்வு செய்ததை ஏற்று அவர்கள் சந்தோஷமாக வாழ அனுமதிக்கிறாள்.

சக்தி பகதூர் எழுதி சந்தியா பதிப்பகம் வெளியிட்ட சாந்தி என்கிற நஜமுன்னிஷா (Shanthi Engira Najmunnisa Tamil Novel) நாவல் - தேனி சீருடையான்

இங்கே இன்னொரு கேள்வி எழுகிறது. நஜமுன்னிஷா தன்னைத் தானே மதம் மாறுதல் செய்துகொண்டதை இந்துமதம் ஏற்றுக் கொள்கிறதா? ஏற்க முடியாது என்கின்றனர் இந்து தத்துவவாதிகள். வேத அப்பியாசத்தின் தத்துவ எழுத்தாளர் தேவ்தத் பட்னாய்க் எழுதுகிறார். “வேதங்கள் மாறலாம்; ஆனால் அதன் சிந்தனைக்ள் மாறுவதில்லை.” அதவது வேதங்களின் சிந்தனை என்பது சனாதன தர்மம் என்கிறார் அவர்.

இன்னும் வெளிப்படையாகச் சொல்வது என்றால் நான்கு வர்ணமுறைக்குள் மற்ற மத்தத்தைச் சேர்ந்தவர்கள் வரமுடியாது. காரணம் அவர்களின் பெற்றோர் எந்த ஜாதியிலும் அங்கம் வகிக்கவில்லை. (சனாதன தர்மம் ஒரு விசாரணை என்ற நூல்.) இந்து மதம் என்ற நிறுவனம் நஜமுன்னிஷாவை சாந்தியாக ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை. அவள் வீட்டு விசேஷங்களில் அவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் நஜமுன்னிஷாவை சாந்தியாக ஏற்று தாத்ரேயரோடு வாழ அனுமதிக்கின்றனர். சாமான்ய மக்களுக்கும் மத நிறுவங்னங்களுக்குமான வித்தியாசம் இதுதான். மக்கள் ஏற்பது ஜனநாயகம்; மத நிறுவங்கள் கட்டளையிடுவது சர்வாதிகாரம்.

ஜமாத்தாரின் சர்வாதிகாரப் போக்கை இந்த நாவல் மிகச் சிறப்பாக விவரிக்கிறது.

ரஷீத் குடிக்கு அடிமையாகி மரணித்த நாளில் அவனைக் காணவும் மனமின்றி அடக்கத்துக்குப் போகாமல் நிராகரிக்கிறாள். அவனோடு உறவுகொண்டு நான்கு குழந்தைகளை ஈன்றெடுத்தவள் அவன் மவுத்துச் சடங்கை நிராகரிக்கிறாள் என்றால் அவள் மனசின் வெறுமை எத்தகையது என்பதை வாசகன் எளிதாய் உணரமுடியும். வாழ்க்கை என்பது விசாலமானது; ஒரு சட்டகத்துக்குள் அடங்கிக் கிடப்பதல்ல என்று நிறுவுகிறது நாவல். வாழ்க்கைக்குத் தடைபோடும் சடங்குகளையும் சம்பர்தாயங்களையும் நிராகரித்து, நேர்வழியில் செல்லும் எல்லா மனங்களும் புரட்சி மனங்கள்தான்.

ஆனாலும் கலப்பு மணம் புரிந்தவர்களின் குழந்தைகளின் நிலை என்ன? அதிலும் குறிப்பாக ஏழைகள்; தாய், அல்லது தந்தைவழிப்பட்ட சடங்குமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாமலும் உதறிவிட்டு வெளியேற இயலாமலும் அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. குடும்பங்கள் சடங்குகளின் வலைப்பின்னலுக்குள் சிக்கிக் கிடக்கின்றன. அதை அறுத்தெறியும் வல்லமை எல்லாருக்கும் அமைந்துவிடுவதில்லை. சமூகத்தின் பிடிமானத்துக்குள் இருந்து விலகி நின்றாலொழிய சாத்தியமில்லை. ஓர் இந்துவைத் தன் மகள் வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்த பண்பை ஆயிஷா அங்கீகரிக்கிறாள் என்றாலும் துனியாவைப் படைத்த அல்லாவே தனது தெய்வமாய் இருக்கவேண்டும் என விரும்புகிறாள்.

இஸ்லாமிய வாழ்வில் நிக்காஹ் என்பது அனைவுருக்குமான பொதுச் சடங்கு. மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு வந்திருக்கும் அனைவரையும் மகிழ்விப்பது மணவீட்டார் கடமை. சந்தோஷப் படுத்தும் மிக முக்கிய விருந்துப் பண்டம் பிரியாணி. இதில் என்ன கொடுமை என்றால் முதலில் ஆண்களும் அதன் பிறகு மேல்தட்டுப் பெண்களும் இறுதியாக குழந்தைகளும் ஏழைகளும் சாப்பிட வேண்டும். (நாவலில் அப்படித்தான் சொல்லப் பட்டிருக்கிறது.)
ஆயிஷாவின் கமள்வழிப் பேரன் தாத்ரேயருக்கும் சாந்திக்கும் (நஜமுன்னிஷா) பிறந்த சதாசிவம் என்கிற சதா, பிரியாணிக்கு ஆசைப்பட்டு ஏங்கிக் கொண்டே இருக்கிறான்.

யாரும் ஆயிஷாவை சாப்பிட அழைக்கவில்லை.; இவளாகச் சென்று அமரலாம் என்றாலும் மேல்தட்டுக் கூட்டம் தடுக்கிறது. குழந்ந்தைக்கு உணவு தரவேண்டும் என்ற உணர்வு அங்கு யாருக்கும் வரவில்லை. ஆயிஷாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் அலாவுதீன் மாமு இவர்களைக் கண்டும் காணாமல் அகன்றுவிடுகிறான். நிறைவாக, பிரியாணி தீர்ந்துவிட்டது என்ற அறிவிப்பு வந்த போது சதாவின் உள்ளம் மட்டுமல்ல; வாசக் மனமும் அதிர்கிறது. சமூக ஏற்றத் தாழ்வு மதம் கடந்து சடங்கு சம்பர்தாயம் கடந்து ஏழைகளை ஆட்டிப் படைக்கிறது என்பதை “பிரியாணி|” என்ற அத்தியாயம் ஆழமாய்ப் பதியமிடுகிறது.

மத மாச்சர்யங்கள் நிறைந்து ததும்பும் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியப் படைப்பு “சாந்தி என்கிற நஜமுன்னிஷா.” இஸ்லாத்தின் அனைத்துக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் தடையேதும் இல்லாமல் விவரிக்கப் பட்டுள்ளன. ஓர் எழுத்தாளன் தான் எடுத்துக் கொண்ட பாடுபொருளின் அதிகப் படியான சங்கதிகளைத் தெரிந்திருக்க வேண்டும் என்ற கோட்பாட்டைப் படைப்பாளி நன்கு உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்.

எழுத்தாளர் சக்தி பகதூர் இன்னும் இதுபோன்|ற படைப்புகளைத் தமிழ் உலகத்துக்கு நிறையத் தரவேண்டும் என வாசக மனம் விரும்பும் அளவுக்கு சமூக உணர்வுகளும் வாழ்வியல் உணர்ச்சிகளும் நாவலெங்கும் பரந்து விரிந்து கிடக்கின்றன. வாசக விருப்பத்தை எழுத்தாளர் நிறைவேற்றுவார் என நம்பலாம்.

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………

புத்தகம் குறித்து

நூல்: சாந்தி என்கிற நஜமுன்னிஷா நாவல்.
ஆசிரியர்: தா.சக்தி பகதூர்
வெளியிடு: சந்தியா பதிப்பகம்
பக்கம்: 208.
விலை: ரூ.200/.

நூல் அறிமுகம் எழுதியவர் : 

தேனி சீருடையான்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *