சிறுகதை: பிறழ்வு – சாந்தி சரவணன்மனித குணங்களில் நண்மையும் தீமையும் கலந்து இருப்பது போலவே, ஊர்களில் சிறப்பும் சில சிறப்பற்ற அம்சங்களும் கலந்து இருப்பது இயல்பே.
ஆம்பூர் என்றவுடன் நம் நினைவுக்கு ‌வருவது ஆம்பூர் பிரியாணி. பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக ஆம்பூர் கடப்பவர்கள் ஆம்பூர் பிரியாணி சுவைக்காமல் செல்வது அரிது.

சிறப்பு என்று சொல்ல பல காரணங்கள். ஆம்பூர் முல்லை, ஆம்பூர் பிரியாணி. முக்கியமாக ஆம்பூர் கெங்கையம்மன் திருவிழா. இவை அனைத்திற்கும் பெயர் போன ஊர் ஆம்பூர். பச்சகுப்பம் நெருங்கும் போதே சக்கரை ஆலையில் இருந்து வரும் மணம் நம் சுவாசத்தில் கரைந்து போகும். சாலையைக் கடப்பவர்கள் சுவாசிக்காமல் செல்ல இயலாது.

அடுத்து நம் நினைவில் வருவது தோல் தொழிற்சாலை. கழிவுநீர் பாலாரைக் கழிவாறாக மாற்றிக் கொண்டு இருக்கும் அவல நிலை நம் கண் முன்னே காட்சிப் படிவமாக வரும் என்பதில் ஐயமில்லை. முதலாளிகளை காரில் ஏற்றி பாலாற்றின் கரையில் இருக்கும் குடிசை வாசிகளை பாடையில் ஏற்றும் தோல் கழிவுகள் ‌. முதலாளிகளுக்கு வருமானம் ஒருபுறம் குவிய மறுபுறம் வேலை செய்யும் பணியாளிகளுக்கோ அல்லல்படும் சூழல். விவசாய நிலத்தில் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் பேக்டரி செல்கிறேன் என‌ கிளிம்பிவிடும் நிலை‌. மண் வளமும் மலடாகும் சூழல். விவசாயம் செய்ய ஆட்கள் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள். உழைக்கும் மக்கள் நிறைந்த ஊர்.

அந்த ஆம்பூரில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக திரு.இராமலிங்கம் பதவி ஏற்று 10 வருடங்களாகி விட்டது. பள்ளியையும் திரு.இராமலிங்கம் அவர்களையும் பிரிக்க முடியாது.

ஆம்பூர் அரசு பள்ளியில் தான் திரு.இராமலிங்கம் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கணித பாடம் மேல்நிலை வகுப்பு பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பும் எடுப்பார். கணிதம் என்றால் பெரும்பாலும் மாணவர்களுக்கு ஒரு நடுக்கம். அந்த நடுக்கத்தைத் தவிடு பொடி செய்தவர் நம் தலைமை ஆசிரியர். அரசு பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்க்கை என்றால் நம் பள்ளி தான் என்பதில் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு எப்போதும் பெருமை. கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் கூட்டத்தில் இந்த முறையும் பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்வு எடுத்துக் காட்ட வேண்டும். அதற்காக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என சுற்றறிக்கை அளித்தும் இருந்தார். அதற்கான திட்டங்கள், சுற்று அறிக்கை என பரபரப்பான செயலில் ஈடுபட்டு இருந்தார்.மாணவ செல்வங்கள் மரத்தில் பூத்துக் குலுங்கும் மலர் போல பள்ளியில் குதித்து விளையாடிக் கொண்டும், ஒருவரோடு ஒருவர் குதூகலமாக பழகி விளையாடி கொண்டும் இருக்கும் காட்சியை ரசிக்காமல் இருக்க முடியாது.

அதே பள்ளியில் படித்த மாணவன் ஒருவன் பாலாற்று வெள்ளத்தில் தனது குடும்பத்தை இழந்த அதிர்ச்சியில் மனப் பிறழ்வு நோய்க்கு ஆளானான்‌‌. ஏனோ அவன் படித்த பள்ளியை மறக்கவில்லை. குடும்பத்தை இழந்த அவனை பள்ளியில் இருந்து வெளியேற்றவும் பள்ளி நிர்வாகத்திற்கு மனம் வரவில்லை ‌. காவலாளியோடு அங்கேயே தங்கி வந்தான்‌

பிள்ளைகள் அந்த மாணவனைப் பித்தன் என நித்தம் கேலி செய்வார்கள்.

அதே சமயம் உணவு நேரத்தில் அனைவரும் ஒரு வாய் உணவு பகிர்ந்து அந்த பித்தனுக்கும்‌ தருவார்கள்

பள்ளியில் இருக்கும் மரம், செடி போல் பித்தனும் பள்ளியில் வளர்ந்து வந்தான்.

மாணவர்கள் தோட்டக்கலையில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். அவர்களை ஊக்குவிக்க தலைமை ஆசிரியர் பள்ளிக்கூட சுற்றுச் சுவர் உள்புறம் நெடுக செடிகள் மரக் கன்றுகள் நட அனுமதி அளித்தார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பு பிள்ளைகள் நீர் ஊற்ற வேண்டும். பித்தன் அவர்களோடு தன்னை இணைந்து கொள்வான்.

ஒருநாள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சந்தியா தன் வீட்டிலிருந்து ஒரு ரோஜா செடி எடுத்து வந்து பள்ளியில் வைத்து இருந்தாள்.

தலைமை ஆசிரியர், “சந்தியா, ரோஜா செடியை நம் காவலரிடம் கொடுமா. அவர் பத்திரமாக பள்ளம் தோண்டி வைப்பார்” என்றார்.

சந்தியா, “இல்லைங்க அய்யா நானே வைக்கிறேன்” என்று சொன்னது மட்டுமே அல்லாமல், செடியை மகிழ்வோடு பதியம் போட்டு அவள் வகுப்பின் முன் செல்லும் பாதையில் வைத்தாள். பித்தன் ஓடிப் போய்த் தண்ணீர் கொண்டு வந்து உதவி செய்தான். சந்தியாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பரபரப்பான மார்ச் மாதம்‌ 2020. நம் பள்ளி அனைத்திலும் முதன்மையாக வர வேண்டும் என ஆசிரியர்கள் கலந்தாய்வு என பல நிகழ்வுகள்.

யாரும் எதிர்பாராத விதமாக உலகெங்கும் ஊரடங்கு கொரோனா என கதிகலங்க செயதுவிட்டது. அரசு ஆணை பள்ளிகள் முடக்கம்‌. கண் விழித்துத் திறப்பது போல ஒன்பது மாதங்கள் கடந்து விட்டன.உலகெங்கும் எத்தனை மரண செய்திகள். ஊடகங்களைப் பார்க்கவே அஞ்சிய மனித இனம். தனித்திரு, பிழைத்திரு என பிரித்து கிடந்த அவலம். மரண பயம் மக்கள் கண்களில். கொரோனாவில் இறந்தார்களோ இல்லையோ பயத்தால் மரணித்தவர்கள் பலர்.

இந்த கொரோனா காலத்திலும் ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளில் மும்முரமாக இருந்தனர் ‌. புதுவிதமான வகுப்புகள் எடுக்கும் முறை. மாணவர்கள் நிறைந்த வகுப்பறையில் பாடம் எடுத்துப் பழக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஒரு சவாலாகவே இருந்தது.

அரசு டிசம்பர் மாதம் பள்ளிகள் திறக்கலாம் என தகவல்களை வெளியிட்டு வந்தன. பெற்றோர்கள் கருத்து கேட்டு செயல் படவேண்டும் என ஒருபுறம் பணி நடந்து கொண்டு இருந்தது.

இன்று தலைமை ஆசிரியர் பள்ளி செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். ஏனோ அவர் சிந்தனையில் மழலையர்கள் ‌வைத்த மலர்ச் செடிகள் எப்படி இருக்கின்றனவோ, காவலாளியும் அவன் ஊருக்குச் சென்று விட்டான் . குழந்தைகள் பள்ளி வரும் ‌போது செடிகள் இந்த‌ இடைப்பட்ட காலத்தில் காய்ந்து கருகி இருக்குமே,‌ குழந்தைகள் முகம் வாடிவிடுமே என பல சிந்தனைகளை மனதில் சுமந்து கொண்டு பள்ளியை அடைந்தார்.

காண்பது கனவா நினைவா என தெரியாமல் அதிசயித்துப் பள்ளியைப் பார்த்தார் தலைமை ஆசிரியர். செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன. பித்தன் வாளியிலிருந்து எடுத்து செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தான்.

கொரோனா இவனை எதுவும் செய்யவில்லையா? இறப்பு நம் வீட்டில் ‌இருந்தால் நிகழாது வெளியில் வந்து சமூகத்தில் கலந்து விட்டால் நிகழ்ந்துவிடும் என்ற அச்சம் இந்த பித்தனுக்கு இல்லையே. அவனிடம் தெளிவு இருக்கிறது. அச்சமில்லை. யாருக்கு மனப்பிறழ்வு என தன்னை தானே கேட்டபடி பள்ளி உள்ளே சென்றார் தலைமை ஆசிரியர் திரு இராமலிங்கம்.

************