‘“மடமையைக் கொளுத்துவோம்” – திருமதி.சாந்தி சரவணன்“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்”
என்றான் முன்டாசு கவி பாரதி அன்று.
அவன் இன்று இருந்திருந்தால் இப்படி கவி படைத்து இருப்பானோ
நம் மீசை முறுக்குகாரன்!

“மடமையைக் கொளுத்துவோம்”

பட்டினி மரணத்தை விட
தீ நுண்ணி மரணம் கொடியது என
அஞ்சும் மடமையைக் கொளுத்துவோம்!

உடலில் நோயுள்ளதென்று
மனதில் எண்ணும்
எண்ண மடமையைக் கொளுத்துவோம்!

மருந்துகளே நோய்களை
குணப்படுத்தும் என்ற
மருந்து மடமையைக் கொளுத்துவோம்!,

பிஞ்சு விரல்கள்
பட்டாசு பட்டறையில் பொசுங்கும்
வறுமை மடமையைக் கொளுத்துவோம்!

வகுப்பறை மட்டுமே
கல்வியின் கருவுலம் என்ற
பழக்க மடமையைக் கொளுத்துவோம்!,

பண்பை பள்ளி
மட்டுமே பயிற்றுவிக்கும் என்று
எண்ணும் மடமையைக் கொளுத்துவோம் !

நீட் தேர்வு மட்டுமே
நல் மருத்துவருக்கு ஆதாரம் என்ற
நுழைவு தேர்வு மடமையைக் கொளுத்துவோம்!

பூச்சிக்கொல்லி
நஞ்சில்லா விளைச்சல் தரும் என்ற
வணிக மடமையைக் கொளுத்துவோம் !

அடுப்பு ஊதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு என்ற‌
ஆதிக்க மடமையைக் கொளுத்துவோம்‌ !

பெண்னை உடலாக பார்க்கும்
மாக்களின் எண்ண மடமையைக் கொளுத்துவோம்‌ !

ஆண்டவன் ஏழையென
உண்டியலை நிரப்பும்
அறிவிலி மடமையைக் கொளுத்துவோம் !

நீதிமன்றங்களில்
நீதி குருடாகிவுள்ள
நிதி மடமையைக் கொளுத்துவோம் !

வலியோர் சிலர்
எளியோர்தமை வதைக்கும்
தகுதி மடமையைக் கொளுத்துவோம் !

துர்எண்ணங்களின் மடமையைக் கொளுத்தி,
நல்எண்ணங்களை விதைத்து
வளமாக வாழ்வோம்,
வளமுடன் வாழ்வோம்.

நன்றி
திருமதி. சாந்தி சரவணன்.
email: [email protected]