சிறுகதை: ஜீல்லு – சாந்தி சரவணன் 

சிறுகதை: ஜீல்லு – சாந்தி சரவணன் 



ல்லூரி திறப்பு விழா ஏற்பாடுகள் ஒரு பக்கம் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தது.  ஆம் ஆம்பூர் அருகில் மாதனூரில்  தான் “செல்வி கலைக் கல்லூரி” முதலாம் ஆண்டு விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது.

விழாவிற்கு அமைச்சர், கலெக்டர்,  திருநங்கை, மில்டரி அதிகாரி என சிறப்பு விருந்தினராக  பலர் வர போகிறார்கள்.

முதல்வர் ஜீல்லு வழக்கம் போல் அமைதியாக எந்த ஒரு அவசரமும் அவரிடம் தெரியாது, இயல்பாக பேராசிரியர் அனைவரோடு கலந்துரையாடல் முடித்து அவர்களுக்கான பணிகள் பகிர்ந்து அளித்து திட்டம் வரையறுத்துக் கொண்டு இருந்தார்.

ஒரு மணி நேரம் ஆலோசனை கூட்டம் முடிந்தது. அனைவரும் கலைந்து  அவரவர் பொறுப்புகளை  அரங்கேற்றக் கிளம்பி விட்டார்கள்.  சரியாக ஐந்து மணிக்கு விழா தொடக்கம் என மறுபடியும் ஒருமுறை முதல்வர் சொன்னவுடன்.  சிறப்பான முறையில் விழா நடக்கும் தோழர் என சக பேராசிரியர்கள் விடை பெற்று சென்றனர்.

மாலை 5 மணி கடவுள் வாழ்த்துடன் விழா துவங்கியது.   சிறப்பு விருந்தினர்கள் மேடையை அலங்கரித்தனர்.

விழா கல்லூரி தலைவி திருநங்கை. ரோஸ் துவக்கி வைத்தார்.  அவரைத் தொடர்ந்து கல்லூரியின் துணைத் தலைவி கோதை நிகழ்ச்சி நிரல்கள் பற்றி அறிவித்தார். தொடர்ந்து செயலாளர் இனியன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க,  மேடையில் அமர்ந்திருந்த முதல்வர்  தன் நினைவுகளுக்குள்….

*********

ராமு மாதனூரில் விவசாயம் செய்து வந்தார்.  விவசாயம் என்றவுடன் ஏக்கர் கணக்கில் எண்ணங்கள் சென்றால்.. நிற்க ஒரு 5 செண்ட் நிலத்தில் காய்கறிகள் பயிரிடுதல் தான் அவரின் வேலை. அவருக்குத் துணையாக அவரின் மனைவி செல்வி காலையிலே விட்டு வேலை எல்லாம் முடித்து விட்டு, பிள்ளைகள் சுகுமாரன், சுகந்தி இருவருக்கும் சாப்பாடு எல்லாம் கட்டி வைத்து விட்டு அவர்களை எழுப்பி தயார் செய்து பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவனுக்கு ஒத்தாசையாக நிலத்தில் உடன் இருப்பாள்.



சுகுமாரன் பெரியவன் எட்டாவது படிக்கிறான். சுகந்தி ஏழாம்  வகுப்பு படிக்கிறாள்.  சிறு குடும்பம்.   மகிழ்ச்சியாக அவர்கள் வாழ்ந்தார்கள்.   

சுகுமாரனுக்கு தங்கை மேல் பாசம் அதிகம்.  ஆனால் இருவரும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள்.

“அண்ணா நேத்து என் ஃபிரெண்ட் கொடுத்த சாக்லேட் இங்கே வைத்தேன். நீ எடுத்தியா…..” என்றாள் சுகந்தி.

“நானா…. எனக்கு எதுக்கு உன் சாக்லேட். நான் இப்ப தான் கடைக்குப் போய் வாங்கி வந்தேன், உனக்கு வேண்டுமானால் இந்தா எடுத்துக்கோ” என்றான் சுகுமாரன்.

சுகந்தி அந்த சாக்லேட் பார்த்தவுடன் ஓடி வந்து அவனிடம் இருந்து அந்த சாக்லேட் வாங்கத் துரத்த சுகுமாரன் ஓட….. “அண்ணா, கொடுண்ணா, அது என் ஃபிரெண்ட் கொடுத்தது.. ப்ளீஸ்….ப்ளீஸ் என தங்கையின் துரத்தலில் ஒரு இனம் புரியாத இன்பம்.

தங்கையின் செயல்கள் ஒன்று ஒன்றாக ரசிப்பான். இருவரும் ஒன்றாக பள்ளி செல்வார்கள்.  தங்கையைக்  கைப் பிடித்து அழைத்து செல்வான்.  

இப்படியே இன்பமாக நாட்கள் சென்று கொண்டு இருந்தன.  அந்த நாளும் வந்தது.  ஆம், சுகந்தி பள்ளியில் வயிற்று வலியில் துடித்தாள்.   ஆசிரியை தனியாக அழைத்து சென்று ஊகித்தது சரி தான் என, சுகுமாரனை அழைத்து வர சொல்லி ஒரு மாணவனை அனுப்பினார்.

சுகுமாரன் பதட்டத்துடன் வந்தான்.  

ஆசிரியை தனியாக அவன் அழைத்து சென்று.  “சுகுமாரா, சுகந்தியை பத்திரமாக வீட்டுக்குக் கூட்டிட்டுப்  போ.   அம்மாவிடம் தங்கச்சி பெரியவள் ஆகிவிட்டாள் என சொல்” என்றார்.

“அப்படினா என்ன டீச்சர்?” என்ற சுகுமாரனைப் பார்த்து “ஒண்ணுமில்ல.. நீ அம்மாவிடம் போய் சொல். அம்மா பார்த்துக் கொள்வார்கள்” என்கிறார் ஆசிரியை.

சுகுமாரனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அழும் தங்கையை வழக்கம் போல் கைபிடித்து பள்ளி வாசல் வரை வந்து ஆசிரியர் கொடுத்த காசில் ஆட்டோ பேசி தங்கையை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வந்தான்.

அம்மாவுக்கு தகவல் சொன்னவுடன்.  மிகவும் மகிழ்ச்சியாக “அய்யோ இப்போ நான் என்ன‌ செய்வேன்” என்றாள்.

“சுகுமாரா அப்பா பக்கத்தில டீக் கடைக்கு போய் இருக்காரு.  சீக்கிரமா வீட்டுக்கு கூப்பிட்டு வா” என சொல்லி கொண்டே பக்கத்து வீட்டு அக்காவை அழைத்து வரச் சென்றாள். 

சற்று நேரத்தில் வீடே விழா கோலம் கொண்டது.  ஆடம்பரமாக செலவு செய்ய‌ வசதி இல்லை. ஆனால் அக்கம் பக்கம் வந்த‌ செல்வியின்  தோழிகள் சேர்ந்து தண்ணீர் ஊற்றி, செல்வியின் தம்பிக்கு தகவல்  சுகுமார் போய் சொல்லி அழைத்து வர ஓலை குடிசை‌ போட்டு மகளை அமர வைத்து அழகு பார்த்தாள் செல்வி. ராமு வழக்கம் போல் அமைதியாக நிகழ்வுகளை கவனித்த வண்ணம் ‌ அதே சமயம் பார்க்கும் போது வளர்ந்து விட்டாள் என் மகள் என்ற பெருமையோடு நின்று கொண்டு இருந்தான்.

சுகுமாரனுக்கு  என்னவென்று அறியாமல் ஒரு மகிழ்ச்சி.  தங்கை புடவையில் பெரிய பெண்ணாக இருக்கிறாளே….

சடங்கு எல்லாம் முடிந்து இயல்பாகப் பள்ளி செல்லத் துவங்கினாள் சுகந்தி. வழக்கம் போல் அண்ணன் துணையோடு.  சடங்கில் நிறைய மேக்கப் செட் வரிசை வைத்தார்கள். கண்ணாடி கலர்  வளையல், உதட்டு சாயம், கண்ணுக்கு காஜல். அதில் பெரும் மகிழ்ச்சி சுகந்திக்கு. ரோஸ் கலர் தாவணி மிகவும் பிடித்து இருந்தது. ஐந்து செட் பாவாடை தாவணி.    முக்கியமாக நெயில் பாலீஷ்.  பல வண்ணங்களில்.   பள்ளிக்கு சீருடை என்பதால், வார இறுதி நாட்களில் அவற்றை எல்லாம் எடுத்து அலங்கரித்து கொண்டு ஒரே கொண்டாட்டமாக இருந்தாள்.



சுகுமாரனுக்கு அரையாண்டு பரிட்சை துவங்கியது. இரவு எல்லாம் கண் முழித்து படித்துக் கொண்டு இருந்தான்.  மறு நாள் காலை சற்று முன்னரே செல்ல வேண்டும் என்பதற்காக, “சுகந்தி காலையில் எட்டரை மணிக்கே போகனும். ரெடியாகிவிடு. இல்லையென்றால் நான் உன்னை விட்டுவிட்டுப்  போய்விடுவேன்” என்றான்.

சொன்னது தான் தாமதம் ஓ என அழ ஆரம்பித்து விட்டாள் சுகந்தி.  “உன் கூடத் தானே நான் வருவேன்.  என்னை விட்டு விட்டு எப்படி நீ தனியா போவேன் என சொல்லலாம்.  நீ என் அண்ணன் தானே. நீ அப்படி சொல்லலாமா……”என அழ ஆரம்பித்தாள். நிறுத்தவே இல்லை. 

ராமுவும், செல்வியும் “அட அண்ணா சும்மா சொல்லுது. பரிட்சை இல்ல. அது தான்.  அவன் படிக்கட்டும்.   பேசமா போய் படு.  காலையில் சீக்கிரமா கிளம்பணும்” என சமாதானப்படுத்த, சுகுமாரனுகுத் தங்கை தன் மேல் எத்தனை பிரியமாக இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியோடு படிக்க சென்றான்.

செல்வி ராமுவிடம்,  “உன் பசங்க பாசமலர் சிவாஜி சாவித்திரி தான் போ…” என சொல்லி சிரித்து கொண்டே  படுக்கையை விரித்து மகள் சுகந்தியை படுக்க வைத்து தானும் படுத்துக் கொண்டாள். 

வழக்கமாக வாசல் திண்ணையில் ஒருபுறம் ராமுவும் மறுபுறம் சுகுமாரனும் படுத்துக் கொள்வார்கள். சுகுமாரன் கோயில் வாசலில் தான் வீதி விளக்கு நன்றாக தெரியும் என்பதால் அங்கு போய் இருப்பான். ராமுவும் உறங்கச் சென்றார்.

‘கடவுளே இந்த சந்தோஷத்தை கடைசி வரை கொடு’ என ஒரு வேண்டுதலை சமர்பித்து உறங்கச் சென்றாள்.

விடியற்காலை கோழி கூவல் கேட்டு கண் விழித்தாள் செல்வி.  தெரு விளக்கில் படித்து கொண்டு இருக்கும் சுகுமாரனுக்கு சூடாக கருப்பட்டி தயார் செய்து வெளியே வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி.   ‘அட இந்த புள்ள இன்னா தூங்குது. பரிட்சை யென்றால் தூங்கவே மாட்டானே’ என‌ யோசித்துக் கொண்டே கிட்டே சென்று தலையில் கை வைத்துப் பார்த்தாள். 

உடல் கொதிக்க  ‘அட என்னாச்சு என் புள்ளைக்கு’… 

“என்னங்க எழுத்திருங்க புள்ளைக்கு ஜூரம்  ஒடம்பெல்லாம் கொதிக்குது பாருங்க..சுகுமாரா சுகுமாரா…..”

பதில் இல்லை… வெறும் முனங்கல் சத்தம் சுகுமாரனிடம்.

“போய் வைத்தியர் இருக்காரா பாருங்க”.  

ஆயுர்வேத டாக்டரைத் தான் அவள் மொழியில் வைத்தியர் என்று சொல்ல..  ராமு தூக்கம் கலைந்து வேகமாகச் சென்று சைக்கிளில் வைத்தியரை‌ அழைத்து வந்தான்.   

வைத்தியர் நாடி பார்த்து சூரணம் கலந்து கொடுத்தார். 

“இந்தாமா மூணு வேளை  தினமும் இதைக்  கொடுங்கள் மூணு நாளுக்கு. சரியாயிரும். ஓய்வு எடுக்கட்டும். பள்ளிக்கூடம்  போக வேண்டாம்”. 

“பரிட்சை வைத்தியரே”.

“இருக்கட்டும்.  முடியாம போய் என்ன செய்யப் போறான்.  ஒரு மூணு நாளு போக வேண்டாம் அப்புறம் சரியாயிரும்” என்றார். 

“சரிங்க வைத்தியரே” என்று சொல்லி ராம் வைத்தியரை அழைத்து சென்று வைத்தியசாலையில் விட்டு விட்டு வந்தான்.

காலை ஏழு மணி.  சுகந்தி “அய்யோ அண்ணன் கத்த போறான். சீக்கிரம் ரெடியாகி விட வேண்டும்” என  யோசித்துக் கொண்டே எழுந்தவள், அண்ணன்வீட்டுக்குள் படுத்து இருப்பது கண்டு, 

“அம்மா அண்ணன் ஏன்‌ இன்னும் தூங்குறான் ? எழுப்புமா….பரிட்சை மா அண்ணுக்கு” என்றாள்.

“தெரியும் டீ. அவனுக்கு காய்ச்சல். மூணு நாளு  அவன் பள்ளிக் கூடத்திற்கு வர‌ மாட்டான்.  வாத்தியாரிடம் சொல்லிவிடு.  நீ அப்பாவோடு போ” என்றாள் செல்வி.

“அப்பாவா… எனக்கு அண்ணன் கூட போனா தான் பிடிக்கும்” ‌என்றவளை சமாதானம் செய்து கணவனோடு அனுப்பி வைத்தாள்.

மூன்று நாட்கள் ஜூரம் குறையவே இல்லை. ஆனால் வைத்தியர் கொடுத்த சூரணத்தைத் தினமும் கொடுத்தாள். ‌ அவனுக்கு பசி வரும் போது அரை கிளாஸ் கஞ்சி குடித்தான். மூன்று நாட்கள் நல்ல ஓய்வு.  நான்காம் நாள் காய்ச்சல் குறைந்தது.  இதற்கிடையில் சுகந்தி தினமும் அண்ணனிடம் ‘நீ இல்லாமல் எனக்கு ஸ்கூல் போக பிடிக்கலை..’ என ஒரே ஒப்பாரி.



ஒரு வாரம் கழித்து வழக்கம் போல் அண்ணனும் தங்கையும் ஒன்றாக பள்ளிக்கு சென்றார்கள்.

சுகந்திக்கு மகிழ்ச்சி.  ஆனால் சுகுமாரன் சோர்வாகவே இருந்தான்.

தன் உடலில் ஏதோ ஒரு மாற்றம் ‌உருவாகுவதை உணர முடிந்தது அவனால். தன்னையே ரசிக்க ஆரம்பித்தான். உதடுகளுக்கு சாயம் பூசிக் கொள்ள மனம் ஏங்கியது. கூந்தல் வளர்க்க வேண்டும் போல இருந்தது. அது மட்டுமல்ல,  குண்டு மல்லி வாங்கி தலையில் சூடிக் கொள்ள பிரியமாக இருந்தது. பெண்ணுக்குரிய குணங்கள் என இந்த சமூகம் எதையெல்லாம் பழக்கப்படுத்தி உள்ளதோ அதற்கெல்லாம் அவன் மனம் ஏங்கத் துவங்கியது. 

ஏன் இந்த மாற்றம்? ஒன்றும் புரியவில்லை சுகுமாரனுக்கு. யாரிடம் பகிரவேண்டும் என்று கூட தெரியவில்லை. அப்பாவை கண்டாலே பயம்.  நாட்கள் இப்படியே நகர்ந்தன.

சுகந்தியின் கூச்சல் கேட்டு அடுப்படியில் இருந்து வெளியே ஒடி வந்தாள், செல்வி.

அம்மா என் நெயில் பாலிஷ் காணோம் என்று கத்திய  மகள் தலையில் ஒரு அடி போட்டாள் செல்வி.

இதே வேலையாப் போச்சு. வளையல் காணோம். பொட்டு காணோமென…..  போடி போ.  போய் வேலைய பாரு” என்றாள்.

ஒரு நாள் சாமி படத்துக்கு வாங்கி வைத்த மல்லிகைப் பூவும் காணோம்.  யார் வந்து எடுத்து இருப்பார்கள் என சந்தேகம் அப்போது தான் ‌எழுந்தது.   மகள் சொல்வது உண்மை தானோ.   ரோஸ் தாவணி வேற இல்லை என அழுததும் நினைவில் ஓடின.

அதுவுமின்றி சுகுமாரன் செயல்களில் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தாள்.   வைத்தியரிடம் அவனை அழைத்து சென்று ‌காட்ட‌ கணவனிடம் வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.

ஆம் அவள் நினைத்தது சரிதான்.  சுகுமாரன் தன் இயல்பில் இல்லை. மன மாற்றங்களும் உடல் மாற்றங்களும் உணர்வு மாற்றங்களும் அவனை ஆட்டிப் படைக்கிறது என்பதை‌ உணர்ந்தாள்.  ராமுவுக்கு இதை ஏற்றுக் கொள்ள மனமில்லை. ஆனால் செல்வி தெளிவாக இருந்தாள். எக்காரணம் கொண்டும் தன் மகனை அனாதையாக வீதியில் விட மாட்டேன். அவனை சாதிக்க வைப்பேன் என மனதில் முடிவெடுத்தாள்.

 சுகந்திக்கும் அவனது மாற்றம் புரிய ஆரம்பித்தது.   சுகுமாரனுடன் பள்ளி செல்வதை நிறுத்திக் கொண்டாள்.  அவனிடம் பேசுவதையும்.  இது சுகுமாரானால் ஏற்றுக் கொள்ள முடியவே இல்லை. ஆனால் அம்மா அந்த ரணத்தை ஆற்றினார்.

தற்கொலை செய்து கொள்ளலாம் என‌ முயற்சித்தான். ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்தாள் செல்வி.  மகன் தூக்கு போட்டு கொள்ள முயற்சிப்பதை கண்டு துடித்து விட்டாள்.  அந்த கயிற்றை வீசி எறிந்து மகனை அணைத்துக் கொண்டு தைரியப் படுத்தினாள்.  

“நீ சாமிடா செல்லம். அர்த்தநாரி.   நீ என்ன தப்பா பண்ண,  அம்மா நான் இருக்கிறேன்.  நீ நினைச்ச மாதிரியே நல்லபடி நாம் வாழ்ந்து காமிக்கணும்” என மகனுக்கு ஆறுதல் கூறினாள்.

ராமுவினால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த வருத்தத்திலே உடல் நிலை சரியில்லாமல் போக,  திடீரென்று ஒரு நாள் மாரடைப்பால் இறந்தார்.  

சுகந்தி வளர வளர அண்ணனின் உணர்வுகள் புரிந்துக் கொண்டாள்.  அண்ணனை உதாசீனம் செய்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தினாள். ஊர் ஜனம் கேலியும் கிண்டலும் செய்யும் போது பக்க துணையாக நின்று இரு பெண்கள் சுகுமாரன் என்கிற ஜீல்லுவை பார்த்துக்கொண்டார்கள்.



சமூகம் பற்றி நாம் அறிந்ததே. பள்ளியில் ஜீல்லுவை நிறுத்தி விட்டார்கள்.  ஆனால், செல்வி ஜீல்லுவை அப்படியே விடவில்லை.   தொலைதூர கல்வி பயில வைத்தாள்.  எம் ஏ (தமிழ்), எம் ஃபில் முடித்து,  தன்னை சமூகத்தோடு பயணிக்க தன் தாயும் தங்கையும் எப்படி போராடினார்கள் என ஜீல்லுக்கு மட்டுமே தெரியும். பல முறை துவண்ட போதும் போது அம்மா செல்வி “நீ சாதிக்க பிறந்தவள் நீ உன் வாழ்க்கையை ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டு” என்று சொல்லி ஜீல்லுவை ஊக்கப் படுத்துவாள்.   

அம்மா எத்தனை அழகான உறவு. பெண்ணின் திருமணத்திற்குக் கூட விற்காத நிலத்தை ஜீல்லு கல்லூரி கட்ட வேண்டும் என்று சொன்னவுடன் நிலத்தை விற்று கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பல NGO உதவி செய்ததின் பலன் இந்த கல்லூரி.

ஜீல்லுக்கு பல நேரங்களில் பல எண்ணங்கள் தோன்றும்.   நான் என்ன தவறு செய்தேன். ஏன் சமூகம் என்னை உதாசீனம் செய்கிறது.  காயப்படுத்துகிறது. இயற்கையின் படைப்பில் அனைத்தும் சாத்தியமே.   அதிகமான படைப்புகள் எதுவோ அதுவே சரியான படைப்பு என‌ யார் நிர்ணயம் செய்தது.  மாற்றங்கள் வர வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது.   தன் தாய் செல்வியின் ஆதரவு தங்கையின் அரவணைப்பு இன்று “செல்வி கலைக் கல்லூரி” முதல்வராக ஜீல்லுவை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இங்கு அனைத்து பாலினருக்கும் கல்வி பயில வாய்ப்பு ‌. பேராசிரியராக பணியாற்ற வாய்ப்பு, அதே போல் மாணவ மாணவி, திருநங்கை, திருநம்பியர் கல்லூரியில் இடம் உண்டு.   

அரங்கில் அனைத்து இயற்கை படைப்புகளும் கல்லூரி தலைவராக, துணைத் தலைவராக, செயலாளராக இன்று சரி சமமாக வாய்ப்பு கிடைக்க பெற்றது தான் ஜீல்லுவின் வெற்றி.   

*********

ரங்கின் கைத்தட்டல் முதல்வர் ஜீல்லு தன் நினைவுகளில் இருந்து விழித்தாள்.

முதல் வரிசையில் தங்கை சுகந்தி, அவளது கணவர் யுவன் மகள் யாழினி அமர்ந்து இருப்பதை கண்டு மகிழ்ந்தாள்.  அம்மா ‘உன் கனவு நனவாகிவிட்டது. நான் வாழ்க்கையில் ஜெயித்துவிட்டேன்’ என மானசீகமாக அம்மாவிடம் சொல்லி கொண்டு இருந்தாள் ஜீல்லு. 

***********



Show 6 Comments

6 Comments

  1. Jayasree

    கதை அருமை. திருநங்கையர் சாதித்து வருகிறார்கள். சமுக அந்தஸ்து உயர்ந்துள்ளது என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம். வாழ்த்துக்களும் அன்பும்.

    ஜெயஸ்ரீ

  2. Priya Jayakanth

    சிறப்பான கதைக்கரு. அனைத்து திருநங்கையர் வாழ்விலும் ஜில்லுக்கு கிடைத்த உறவு கிடைக்கப் பெற வேண்டும்.

  3. V.PAPPU RANI

    ஒரு திரைப்படத்தை ரசித்து பார்த்த அனுபவத்தை தந்தது தங்களின் கதை . சிறப்பு தோழர். வாழ்த்துகள்

  4. Rathika vijayababu

    அருமையான நேர்மறை கருத்துக்களை கொண்ட கதை வாழ்த்துகள் தோழர்

  5. கீதா பத்மநாபன்

    திருநங்கையருக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. மேலும் மக்களின் மனதில் மாற்றங்களை விதைக்க ஒரு சிறு முயற்சி. முயற்சி பலன் தரும்.

  6. Rashika

    அருமையான கதை படைத்த உங்களுக்கு நன்றி அம்மா🙏🏼
    திருநங்கையின் மீது சிறுவயதில் இருந்தே அதீத அன்பு உண்டு. இரயில் பயணத்திலும் சிலரை சந்தித் திருக்கிறேன். அவர்களின் கலங்கமில்லா சிரிப்பிற்க்கு பின்னால் ஏனோ ஆயிரம் வலிகள் மறைந்து இருக்குறது… சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் அவர்கள் இருக்க வேண்டும் என்பது என் ஆசை…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *