மதுரை தமுஎகச டாக்டர்.க.செல்வராஜ் கிளையில் 17.9.24 அன்று காலை 10.30 மணிக்கு ‘வாசிப்போம் – நேசிப்போம்-3’ நிகழ்வில் மீனவ சமுதாய மக்களின் வாழ்வும் வலியும் சிறுகதைகளாக இளம் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு எழுத்தாளர் ரா.பி.சகேஷ் சந்தியாவால் தொகுக்கப்பட்ட ‘கடலும் போராளிகளும்’ (Kadalum Poraligalaum) என்ற நூல் வாசிப்புப் பகிர்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தோழர். சீத்தாராம்யெச்சூரியின் மறைவுக்கு ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு, பெண்உரிமை சமத்துவம் பேசிய தந்தைப் பெரியாரின் பிறந்த நாளில் அவர் குறித்த பாடல் பாடப்பட்டது. கடல் வாழ் உயிரினங்களை அடையாளங் கண்டு ஒட்டும் சிறு விளையாட்டுக்குப்பின் நூல் வாசிப்பு அனுபவப் பகிர்வு தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார் ஆசிரியர் சித்ரா. எர்னெஸ்ட் ஹெமிங்வே யின் கடலும் கிழவனும் நூலை கண்முன் கொணர்ந்து ‘செக்கலுக்கு போவோம் வாங்க’, ‘கச்சான் காத்து’ சிறுகதைகளை ஒப்பிட்டு அனுபவத்தை பகிர்ந்தார்.
இந்த சிறுகதைகளின் மூலம் மீனவர் வாழ்வும் பெண்களின் பாடும் இடஒதுக்கீட்டின் தேவையை வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதியை தொடர வேண்டும் என உணர்த்துவதை பேராசிரியர் மகாலிங்கம் ரத்னவேல் பகிர்ந்து கொண்டார்.

தனது வாழ்வில் தனக்கு ஏற்பட்ட கல்வி வாய்ப்பு ‘அறிவுப் பயணம்’ சிறுகதையை ஒத்திருப்பதை ஆசிரியர் டேவிட் பகிர்ந்து கொண்டார். மரணத்தை கடலுக்கு போகும்போதெல்லாம் சந்திக்கும் மீனவர்கள் மீண்டும் மீண்டும் அதையே தேர்ந்தெடுக்கும் துணிவு, நம்பிக்கை- கச்சான்காத்து சிறுகதையை குறிப்பிட்டும் ‘கடலும் போராளிகளும்’ (Kadalum Poraligalaum) சிறுகதையில் காற்றையும் கடலையும் பாதுகாக்க பெண்கள் நடத்திய போராட்டங்கள். ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த அவர்களை நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிய அநீதி, அதனால் மரணமடைந்த சேவியரம்மா என்ற போராளி அவருடன் இருந்த தோழிகள் அவர்களின் பகிர்வு காவல்துறை அரசு இவற்றின் நடவடிக்கைகள், எப்பொழுதும் உழைப்பாளிக்கு எதிராக இருப்பதை பகிர்ந்து கொண்டார் கனகாம்புஜம்.
கல்வி நிச்சயமாக நம் வாழ்வை மாற்றும். இன்று வாய்ப்புகள் அதிகம் எனவே வலி நிறைந்த நம்பிக்கையற்ற நிலையை நிச்சயமாக மாற்றமுடியும் , பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என சிறுகதை மாந்தர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார் பேராசிரியர் கவிதா.
மீனவர் வாழ்க்கையை பாடலாகவும் கச்சான் காத்து கதையை நாடகமாகவும் நடித்து அனைவரையும் கலங்கடித்தனர் இந்திரா குழுவினர்.
சிறுகதைகள் வலியை மட்டும் பதிவு செய்யாமல் கொண்டாட்டங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உண்மை விபரங்களோடு புனைவுகளும் அவசியம் என சிறுகதை வடிவமைப்பை வலியுறுத்தி எழுத்தாளர் க. சரவணன் பேசினார். இலக்கணம் தெரிந்து தான் எழுத வேண்டும் என்றில்லாமல் வாழ்வியலையும் பண்பாட்டையும் பதிவு செய்ய எழுத வேண்டியது அவசியம் என எழுத்தாளர் கலகல வகுப்பறை சிவா பகிர்ந்து கொண்டார்.
10 சிறுகதைகளின் உள்ளடக்கத்தை பாடலாகவும் கவிதைகளாகவும் பகிர்ந்து கொண்டார் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் விஜயலெட்சுமி.
மாநில செயற்குழு உறுப்பினர். சாந்தாராம் வாழ்த்துரை வழங்கினார். வந்தவர்கள் பெற்றது அதிகம் வராதவர்கள் இழந்தது அதிகம் என்ற முத்தாய்ப்புடன் முடித்தார். மாவட்டத் தலைவர். இளங்கோவன் அனுபவப் பகிர்வு விவாத அரங்காகவும் இருந்ததை சுட்டிக்காட்டி வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வின் உச்சமாக சிறுகதைகளின் படைப்பாளிகள் தங்கள் வாழ்வே கதைகளாக எழுதப்பட்டிருப்பதை நெய்தல் நிலத்தின் மணம் மாறாமல் பகிர்ந்து கொண்டனர். கடலில் காணாமல் போவது , மரணமடைவது என்ற மீனவர் வாழ்வின் நிலையாமை அவர்களது பாடுகள், கல்வியின்றி பட்டறிவினால் 80000 கோடி அந்நியச்செலவாணியை ஈட்டித் தரும் இந்த சமூகத்தை அரசும் பிற சமூகங்களும் உரிய அங்கீகாரம் அளிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல் இவர்கள் குறித்து எவ்வித உணர்வும் அற்று இருப்பதை உணர்த்தியபோது அனைவரும் அதிர்ந்து போனோம்.
இழப்புகள் அதிகம் குடியும் கும்மாளமும் அதிகம் இதனால் அறுதலிகளும் அதிகம். அவர்களது வலியை எழுத்துகளாக்க இலக்கியமாக்க உறுதுணையாக இருந்து ஆசிரியராக வழிகாட்டிக்கொண்டிருக்கும் சகேஷ் பேச்சு அனைவரையும் உலுக்கி எடுத்தது. சுனாமி போன்ற பேரழிவுகள் தான் இச்சமூகத்தை குறைந்த நாட்களேனும் பேசுபொருளாக்குகின்றது. அதன்பின் அரசு, ஊடகங்கள் அனைத்தும் பாராமுகம் தான். எங்கள் மக்களின் வாழ்வியலை இலக்கியமாக எடுத்துச்சென்று பேசுபொருளாக்கவே நாங்கள் எழுதுகிறோம் என்றார் சகேஷ். நெய்தல் நிலமக்களின் குறிப்பாக பெண்களின் அங்கீகரிக்கப்படாத போராட்ட வாழ்வு காதுகளில் அலை அலையாக தீர்வைத்தேடி கேள்விகளாக எழுந்து கொண்டே இருக்கிறது. கடலும் ஓய்வதில்லை! போராளிகள் ஓயப்போவதும் இல்லை!
மதுரை தமுஎகச நடத்திய இந்த நிகழ்வுகள் அனைத்தும் இடைவேளை இல்லாமல் மாலை நான்கு மணியளவில் நிறைவுற்றது. ஐந்து மணி நேரம் தொடர் நிகழ்வாக இருந்தது. அனைவரும் இறுதிவரை பங்கெடுத்தனர்.
எழுதியவர்:
பேராசிரியர் சாந்தி செல்வராஜ்
செயலாளர்
தமுஎகச டாக்டர் செல்வராஜ் கிளை – மதுரை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


I read a beautiful short story by Raman Mullippallam captioned ” cradle on a tree branch”.In this era of money spinning and power mongering some humans do live to hold up human values regardless of position. Mahendran is one of them. A truly scintillating story that reflects rare personalities like Mahendran. Well crafted and impactful. My best wishes to Raman Mullippallam.