உழவர்கள் தாகத்தோடிருக்கிறார்கள்
தயவு செய்து அவர்களின் வழியிலிருந்து விலகியிருங்கள்
பெரு நகர வீதிகளில் அவர்கள் ஒரு காட்டை இழுத்துப் போகிறார்கள்
ஒரு செங்கடலைச் சுருட்டித் தோள்களில் சுமந்து போகிறார்கள்
ஒரு உழவனின் தாகம் விதைத்ததை அறுவடை செய்யாமல் தீராது
பிடுங்கி எறிய வேண்டிய களை எது
விளைச்சலுக்கு வேண்டிய களை எது
அத்தனையும் அத்துப்படியானவனிடம்
உங்கள் பூசணிக்காய் பதுக்கல் எடுபடாது
கோதுமை வயல்களில் கோஃல்ப் விளையாடும் உங்கள் கனவு பலிக்காது
நெல் வயல்களில் வாகன நிறுத்துமிடங்கள்
ஐந்து நட்சத்திர விடுதிகள் எதுவும் நிலைக்காது
இறக்குமதி அரசி பருப்பு கோதுமை எதுவும் செல்லாது
கனிந்த நெற்கதிர்களைக் காய்களைக் கனிகளைப்
பைகளில் அடைத்துப் பழகியவர்களின் கைகள்
உங்கள் கரங்களில் இருக்கும் சிவப்பு ஒயின் குவளைகளை நடுங்கச் செய்யும் உன்னத தருணமிது
பழங்குடி தெய்வங்களோடு இரவு நடனம் புரியும் அவர்களின் பழுத்த கால்கள்
உங்கள் மயான நகரங்களுக்குள் நுழைவதால் அங்கே சில புற்கள் முளைக்கட்டும்!
நீதிமன்ற வாசல்களைத் திறந்து வையுங்கள்
ஒரே நாடு ஒரே சந்தைச் சட்டங்களை
புனித கலப்பையால் உழுதுவிட்டுப் போகட்டும்!


