உறைவிடலாற்றுப்படை
அறிவியலாற்றுப்படை 6
– முனைவர் என்.மாதவன்
” நாம் கொடுத்த அளப்பறைக்கு பயந்துபோய் ஆள் கடையை பூட்டிட்டு ஓடினான்னா அவன் நமக்கு அடிமை. பயப்படாம ஏதாவது ஆயுதத்தை எடுத்துக்கிட்டு நம்மை விரட்டிக்கிட்டு வந்தான்னா அவனுக்கு நாம அடிமை “ நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் நகைச்சுவை நமது மூதாதையர்களுக்கும் பொருந்தும்.
நமது முதாதையர்கள் அடுத்த விலங்கினங்களை மேற்கண்டவாறு கூட எடைபோட்டிருக்கலாம். காட்டில் என்ன நடந்தது என்று யாருக்குத் தெரியும்? மனிதனும் விலங்கினங்களும் அவரவர் பிழைத்திருப்பதற்கான போராட்டம் தானே மனித குல வரலாறு.
எது எப்படியோ, கடந்த வாரம் உணவைப் பற்றியும் அதனால் விளைந்த மூளையின் பரிணாம வளர்ச்சியையும் பார்த்தோம். அடுத்தபடியாக அடுத்த அடிப்படைத் தேவையான உடையைப் பற்றித்தான் நியாயமாக நாம் பார்க்கவேண்டும். ஆனால் உடைக்கு முன்னால் மேற்கண்ட பஞ்சாயத்துகளைத் தீர்க்க உறைவிடம் அவசியமாயிருந்தது. அது பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.
மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு அடிமையான பூனை, நாய், ஆடு, மாடு போன்ற விலங்கினங்களும் உண்டு. மனிதர்களை பயந்து நடுங்கவைத்த புலி, சிங்கம், கரடி போன்ற விலங்கினங்களும் உண்டு. யாருக்கு யார் பயப்படுவது என்ற ரீதியில் வாழ்க்கை நகர்ந்தது. இதனிடையே மனிதர்கள் தமது ஆறாம் அறிவை வளர்த்துக்கொண்டு மறைந்து ஓடி மரமேறித் தப்பித்தனர். அவ்வளவே.
அந்த காலத்தில் விலங்கினங்கள் பேசியிருந்தால் ஏம்பா நீயும் விலங்கு நானும் விலங்கு அப்புறம் உனக்கு மட்டும் என்ன அதிகமான அதிகாரம்? இப்படி கேட்டிருக்கலாம். உன்னோட என்ன பேச்சு என்று சிங்கம், புலி போன்றவைகள் கோதாவில் குதித்து மனிதர்களை துவம்சம் கூட செய்திருக்கலாம். டேய் பேசித் தீர்த்துக்கலாம்பா என்று சொல்வதற்குள் சிலரது கதையை முடித்திருக்கலாம். அப்புறம் யாரிடம் யார் பேசுவது. இதனைத் தூரத்திலிருந்த பார்த்த நமது மூதாதையர்கள் சரி இது கிட்ட நாம வைச்சுக்கவேணாம்னு இது பொல்லாதது என்று மறைந்திருந்து வேடிக்கை பார்த்திருக்கலாம். பிறகு உஷாராகியிருக்கலாம். எப்படியாவது கொடுரமான விலங்கினங்களிடமிருந்து தப்பவேண்டும் இரவில் வரும் தூக்கத்தை நிம்மதியாக அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமே உறைவிடத்திற்கான தேவையை நமது மூதாதையர்களுக்கு உணர்த்தியிருக்கவேண்டும்.
நமது மூதாதையர்களின் உணவுப்பழக்கத்திற்கேற்றவாறு மூளையும் பரிணாம வளர்ச்சி அடைந்தது. மூளையின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப பசி, தாகம், பயம், கோபம் போன்ற உணர்வுகளும் வளர்ந்தன. இந்த உணர்வுகளோடு வெப்பம், குளிர் போன்ற உணர்வுகளும் ஏற்பட்டிருக்கும். இவ்வாறான உணர்வுகள் தோன்றும்போதே இந்த உணர்வுகளைத் தணிக்கும் காரணிகளும் ஆராயப்பட்டிருக்கும்.
அவ்வாறான காரணிகளில் பயம் மனிதர்களின் பரிணாமம் முழுவதும் பெரும் பங்கு வகித்து வந்திருக்கும். குறிப்பாக வெளிச்சத்திற்கான தேவை அப்போதும் இருந்திருக்கும். பகல் நேரங்களில் சூரிய ஒளியில் எந்த தொந்தரவும் இருந்திருக்கப் போவதில்லை. இரவு நேரத்தில் வானெங்கும் நட்சத்திரங்களும் நிலவும் தென்பட்டிருக்கும். பகலில் வரும் ஆபத்துகளை எளிதில் கணித்து தப்பித்துவிடமுடியும். ஆனால் இரவு என்று ஒன்று வரும்போது எந்த இடத்தில் எந்த பாம்பு,பல்லி ஒளிஞ்சிருக்குமோன்னு பயமிருந்திருக்கும். இதனைத் தவிர்க்க கண்ணை மூடியதன் துவக்கமாகக் கூட தூக்கம் உருவாகியிருக்கலாம். பகல் முழுவதும் சாப்பாட்டைக் கண்டறிந்து சாப்பிடுவதே பெரும்போராட்டமாக இருந்து அதனால் ஏற்பட்ட களைப்பும் தூக்கத்தை தந்திருக்கலாம்.
மரங்களில் வாழ்ந்தவரை மழைபோன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு வடிகால் இல்லாமல்தான் தவித்திருப்பர். பிற்காலங்களில் எப்பபாரு இந்த சிங்கம்,புலி, தொந்தரவு வேண்டாம்னு உயரமான மலைப்பகுதிகளுக்குப் பயணித்திருக்கலாம். அங்கிருந்த கற்களின் இடைவெளிகளில் தங்க முயற்சித்திருக்கலாம். வெளியேயும் இருட்டு உள்ளேயும் இருட்டு. ஆனால் உள்ளே போனால் குளிரவில்லை. எனவே குகைகளுக்குள் போய் தங்கிவிடுவோம். இவ்வாறு முடிவு செய்தும் சென்றிருக்கலாம். கற்களை தனது வசதிக்குப் புரட்டி குகைக்குள் உட்கார ஆர்ம் சேர் போன்ற சேர்களை வடிவமைத்துக்கொண்டிருக்கலாம்.
இப்படி தலைமுறை தலைமுறையாக தங்கி மழமழவென ஆன குகைகளிலிருந்த பலகை போலாகியிருந்த கற்களுக்கு யார் பட்டா தந்திருக்கப் போகிறார்கள். யார் பட்டா வாங்கியிருக்கப்போயிருக்கிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர்தானே. பிற்காலங்களில் அந்த வழியாக அடுத்து வந்தோர் அங்கே தங்கியிருக்கலாம். இப்படியாக வசிப்பிடங்களுக்கான தேவைகளும் வாய்ப்புகளும் கிடைத்திருக்கும். இந்த காலகட்டங்களில் நமது மூதாதையர்களோடு ஊறுவிளைவிக்க பிற விலங்கினங்களும் பூச்சிகளும்ம் கூட தங்கியிருந்திருக்கலாம். அவைகளுக்கும் குளிர் எடுக்கும்தானே. இன்றைக்கும் கோடைக்காலங்களில் ஈரமான இடங்களில் ஏறும்புகள் செட்டில் ஆகின்றனரே. ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்வியல் தேவைகள் அவற்றை ஒன்றைவிட மேம்பட்ட இடத்திற்கு கொண்டுசெல்வது இயற்கையே. அவ்வகையில் நமது மூதாதையர்களும் செயல்பட்டிருக்கலாம்.
இவ்வாறு குகைகளில் தங்கிவிட்டு வெளியே சென்றபோது மழை வந்திருக்கலாம். தலையில் ஏதோ முக்கியமான சமாச்சாரம் இருப்பதுபோல் கைகளால் தலைகளை மறைத்திருக்கலாம். பின்னர் அங்கிருந்த தழைகள், ஓலைகளை தலைக்குமேல் பிடித்து உடல் நனையாமல் காத்திருக்கலாம். சரி இந்த ஓலைகள் தழைகளையே நாலு கொம்பு நட்டு மேலே போடலாம் என்று இன்றைய குடில்களுக்கான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மூதாதையர் யாரோ யாருக்குத் தெரியும். இப்படிப்பட்ட எல்லா வகை கண்டுபிடிப்புகளுமே வழிவழியாக வரும் அறிவுக்கொடைகள்தானே.
இப்படி நமது மூதாதையர்கள் வாழ்ந்த போது அவர்களின் ஆயுள் அவ்வளவு ஒன்றும் அதிகமாக இருந்திருக்காது. விலங்குகளிடமிருந்து உயிர் தப்பியிருந்தாலும் சாப்பிட்ட உணவு செரிமானமின்மையால் அல்லது நஞ்சான தாவரத்தை உணவை உண்டதானாலும் பலரும் இறந்திருக்கலாம். இப்படிப்பட்ட அனுபவங்கள் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டிருக்கலாம். இந்த கற்பனைக்கெல்லாம் ஆதாரமெல்லாம் இல்லை. நமது அனுபவங்களைக் கொண்டு யூகங்களின் அடிப்படையில் பகிரப்படும் கற்பனைகள்.
இப்படி வாழ்ந்த இவர்களை வேட்டைக்காரர்கள், சேகரிப்பவர்கள் என்போராக வரலாற்றாய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். மேலும் இவர்கள் தற்செயலாக உருவாக்கிய ஆயுதங்கள், பயன்படுத்திய உலோகங்கள் போன்றவற்றை வைத்து காலங்களாகப் பிரித்துள்ளனர். அவ்வாறு இவ்வாறு பயன்படுத்திய கருவிகளுக்கேற்பவே இவர்களின் வாழ்க்கை வசதிகளும் பெருகத் தொடங்கின.. எல்லாக் காலகட்டங்களில் அறிவியலே இவை அனைத்தையும் வழிநடத்திவருவதை நினைவில் கொள்வோம். தொடரின் பெயர் அறிவியலாற்றுப்படையாயிற்றே.
படை எடுப்போம்
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார். உறைவிடலாற்றுப்படை
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 5: மூளையின் பரிணாமம் – முனைவர் என்.மாதவன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.