மருதனின் எழுத்துக்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. ஏனென்று நீங்கள் கேட்டால் நான் அதற்கான பதிலை இப்படி சொல்லுவேன். சொல்ல வேண்டிய விசயத்தை எளிமையாக, எழுத்து மரபுகளில் சில மாற்றங்களை செய்து வாசகன் வாசிக்க துவங்கியதை கீழே வைக்காமல்,சலிப்பு ஏற்ப்டா வண்ணம் இருக்கும். அது தனிநபர்களின் வாழ்க்கை வரலாற்று நூலானாலும் சரி, ஏனைய எந்த விசயமானாலும் சரி அவரின் எழுத்து நடை நம்மை அறியாமல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும்.
அவரின் பல படைப்புக்கள் புது கண்ணோட்டங்களை நமக்கு தரும். தீவிர வாசகர்களுக்கு எழுதி கொண்டிருந்த ஒருவர் வளரும் தளிர்களுக்காகவும் எழுத துவங்கினார்.அதிலும் கதை சொல்லும் பாணி, பயன்படுத்தும் சொற்கள் என எல்லாமே குழந்தைகளுக்கு குதூகலத்தை உண்டாக்கும். அடுத்து சிறுவர் சிறுமியருக்கான எழுத்தில் இறங்கினார். அதிலும் ஒரு தனி முத்திரை.அந்த முத்திரையில் ஒன்றே “ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்” .
தமிழ் இந்து நாளிதழின் இணைப்பான “மாயா பஜார்” பகுதியில் 54 வாரங்கள் எழுதிய தொடர் கட்டுரையின் தொகுப்பே இந்த நூல் . இடம் பொருள், மனிதர், விலங்கு குறித்து இளம் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விசயங்களை அவர்களுக்கே உரிய மொழியில் படைத்திருக்கிறார்.
குழந்தைகளுக்கு எதையெல்லாம் சொல்லி தர வேண்டும், எதையெல்லாம் அவர்கள் தவிர்க்க, உள்வாங்க அகற்ற வேண்டும் என்பதை நயமுடன் இதில் சொல்லியுள்ளார். அதில் அவர் நயம்பட சொல்லியிருக்கும் விசயங்களை இளம் தளிர்கள் வாசித்தால் பசுமரத்தாணியில் பதிவது போல் இருக்கும் என்பதால் ஒரு புது யுத்தியை கையாண்டுள்ளார்…
அவைகளில் சில அறிமுகத்துக்கு……
1.இடங்கள் குறித்து பல புது தகவல்கள்..தரவுகள்…ஆப்பிரிக்கா என்றாலே குழந்தைகளுக்கு உள்ள கற்பிதம் என்ன?…நிறம், வறுமை, அழகின்மை அது தானே? பொது புத்தியிலும் ,புத்தகங்களின் பக்கங்களிலும் அது தான் கற்பிக்கப்பட்டுகிறது…அந்த பிம்பத்தை உடைத்து ஏன் அந்த நாடு அப்படியிருக்கிறது..அதன் காரணம்..இயற்கை வளங்களின் சுரண்டல் என்பதை இலகுவாக சொல்லுகிறார்.
ஜப்பான் இன்று உலகுக்கு பல விதங்களில் முன்னோடி. ஆனால் ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு..அதையொட்டி நடந்த மரணங்கள், மனிதர்களுக்கு ஏற்பட்ட பின் விளைவுகள், என்பதை யமாகுச்சி என்பவரின் கதையாக சொல்லி, இறுதியில் ஷிபாகுஷா எனும் ஜப்பானிய சொல்லுக்காக அர்த்தத்தை விளக்கி முடிக்கிறார். ஒரு குழந்தை எந்த காலத்திலும் அந்த சொல்லுக்கான விளக்கத்தை மறக்கவே மாட்டார்கள்.
”மண் “ நம் வாழ்வில் எப்படி ஒன்றர கலந்துள்ளது என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கும் பாங்கு, வேற்று கிரகங்கள், அங்கு மனிதர்கள் இருக்கிறார்களா, கற்பனை கதைகளெல்லாம் உண்மையா என்பது பற்றிய குழந்தைகளின் புரிதல் அது உண்மையிலேயே என்பதை மிக இலகுவாக அற்புதமாக விளக்கிய அந்த பகுதி அருமை.
2.இரண்டாவதாக நம் உலகின் மிக முக்கிய உயிரினங்கள் மிருகங்கள் தான். அந்த மிருகங்களின் தனித்தன்மை, குணாதிசயங்கள், அவைகளின் மேன்மையை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டுமே.. அதன் தேவையை உணர்ந்து சிலவற்றை கதையாக, தகவலாக, எழுதிய விதம் சிறப்பானது. உதாராணமாக, புறாவின் மேன்மை, திறன் பற்றிய பகுதி. ஒநாய் பற்றி குழந்தைகளுக்கு இருக்கும் அச்சம் ,ஆனால் உண்மை என்ன என்பதை சொல்லும் கட்டுரை….
விலங்குகளுக்கு படிக்க தெரிந்தால் என்னாகும் எனும் கட்டுரை என்பது புது கற்பனை. காட்டுக்குள் நடக்கும் ஒரு சம்பவம் போல புனைவில் வந்துள்ள ஒரு கட்டுரையில் எப்படி ஒரு முள்ளம் பன்றி ஒற்றுமையை உருவாக்குகிறது என்பதை நயமாக சொல்லி குழந்தைகளுக்கு ஓற்றுமையே வலிமை என்பதை புரிய வைக்கும் பாங்கு அழகு.
3. மனிதர்கள் பற்றி இதில் அவர் எடுத்து கொண்ட ஆளுமைகளின் ப்ட்டியலே சிறப்பு.. குழந்தைகளுக்கு யாரையெல்லாம் அறிமுகம் செய்தால் நல்லது என்பதை அவர் தேர்வே காட்டுகிறது.மாமன்னர் அசோகர் எப்படி “ அன்பு” தான் இவ்வுலகில் மேன்மையானது என்பதை எவ்வாறு கற்று கொள்கிறார் என்பது மிக சிறப்பு. சிறைவாசம் என்பது குழந்தைகளுக்கு என்ன தெரியும்…
தப்பு செய்தால் சிறை..குற்றம் செய்தால் சிறைக்கு போவார்கள் என்பதை தவிர்த்து நம் நாட்டின் சுதந்திர போராட்ட தலைவர்கள் நேரு, பகத் சிங், நேதாஜி எப்படி சிறைச்சாலையை பயன்படுத்தினார்கள் என சொல்லும் ஒரு கட்டுரை, புத்தகங்களிலோ , பாடத்திட்டத்திலோ சொல்லப்படாத, திட்டமிட்டு மறைக்கப்படுகின்ற மாமேதை காரல் மார்க்சை பற்றிய கட்டுரையோ புது பரிமாணம்.
ஹம்போல்ட்…ஒரு புது பெயர் ..இவர் செய்த சாதனைகள், அரிஸ்டாட்டில், கலீலியோ, பறவை காதலர் சலீம் அலி..என இந்த சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆளுமைகள்..அவர்களின் வாழ்வியல் அனுபவங்கள். குழந்தைகளுக்கு புது விடியலை, சிந்தனையை, எண்ண் ஓட்டத்தை உருவாக்கும் . அப்படி ஒரு சிறு மாற்றம் உருவானால் கூட இந்த ஆளுமைகளை போல் ஒருவர் நிச்சயம் உருவாக வாய்ப்புள்ளது.
பெஞ்சமின் பிராங்கிளின் பற்றிய புது தரவுகளும் மிகுந்த பயன் தரும்.
வையாபுரி பிள்ளை.. இவரை பற்றியெல்லாம் எந்த பாடப்புத்தகம் எழுதியது….இந்த நூலில் உள்ளது. டெரிந்து கொள்வோம்.
இப்போது சீனா பட்டாசு பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்..அந்த பட்டாசு இவ்வளவு பெருமையாக பேச்ப்படுகிறது? பின்னணி தெரிந்து கொள்ளலாம். அலெக்சாண்டிரியா நூலகம் எப்படி உருவானது , அதன் பின்னால் எத்துணை பெரிய பணி இருந்தது என்பது ஒரு கட்டுரை .
தேநீரின் கதை தெரிய வேண்டுமா? …. பேனா, எப்படி உருவானது, அதற்கு முன்னால் பறவை இறகு மூலம் எப்படி எழுதினார்கள்.. அதை இப்போதும் குழந்தைகள் முயற்சி செய்து பார்க்கலாமே…. அதற்கும் செய்முறையை சொல்லி தருகிறார்.. இது போன்ற ஏராளமான தகவல்கள்….
இந்த புத்தகத்தை என் மகளுக்காக தான் வாங்கினேன். அவரிடம் கொடுப்பதற்கு முன்னர் நான் படிக்க துவங்கினேன். ஒரு விசயமும் புரிந்தது..மருதன் குழந்தகளுக்காக மட்டும் எழுதவில்லை.. பெரியவர்களுக்காகவும் படைத்திருக்கிறார்.
உபுண்டு …சமீப காலமாக பிரபலமாகி வரும் சொல்… என்னிடத்தில் பல நண்பர்கள் இதனின் மேன்மை பற்றி பேசியிருக்கின்றனர். ஆனால் இந்த புத்தகத்தில் படித்த பிறகே முழுவதுமாக அந்த உயரிய கொளகையை உள்வாங்கினேன்.
மொத்தத்தில் இந்த புத்தகம் எல்லோருக்குமான படைப்பு…ஏனென்றால் 182 பக்கங்களில் ஒரு தகவல் களஞ்சியம் போல் ஏராளமான தகவல்கள் கொட்டி கிடக்கின்றன.
எந்த குழந்தையும் நல்ல குழந்தை மண்ணில் பிறக்கயிலே அது நல்லவராவதும் தீயவராவதும் ……. எனும் திரைப்பட பாடல் மிக பிரபலம்… இது போன்ற படைப்புக்களை மருதன் போன்றவர்கள் தொடர்ந்து எழுதி அதை பெருவாரியான குழந்தை செல்வங்களுக்கு கொண்டு சென்றால் நல்ல தலைமுறையை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும். அறிவியல்.சமூகம்.. விலங்குகள் .பற்றிய விசாலமான பார்வை கண்டிப்பாக உருவாகும்.
குழந்தைகளுக்கு பரிசாக கொடுப்பதற்கு சரியான புத்தகம்.
ஷெர்லாக் ஹோம்ஸால்
தீர்க்க முடியாத புதிர்..
மருதன்
கிழக்கு பதிப்பகம்.
விலை ரூ 200.