நேற்று போல் இல்லை ~ ஷினோலாவழக்கத்தை விட
பாட்டியின் தும்மல் சத்தம்
அதிகமாகவே கேட்டது..

தாத்தா புரட்டும்
செய்தித்தாளில்
பெரியதாய் சலசலப்பு..

நடந்து தான்
சென்றார் அப்பா
என்றும் இல்லாத அதிர்வு..

அம்மா திட்டியது
அன்று தான்
என் காதை கூராய் கீறியது..

இதுவரை கவனித்ததில்லை
அக்காவின் கொலுசு மணியில்
தவழ்ந்த இன்னிசையை..

தம்பி உருட்டும்
சின்ன சின்ன பொருளும்
திரும்பி பார்க்க வைத்தது..

அடுப்பங்கரையில் கீழே
விழுந்த கரண்டி
வாசல் தாண்டி ஒலித்தது..

இது என்ன..
எதிர் வீட்டு
புது மாப்பிள்ளையின்
கொஞ்சலும் கெஞ்சலும் கூட கேட்கிறதே!!!
என்ன ஆயிற்று இன்று!

வியர்வை துடைத்து
மேலே பார்த்தேன்
ஓய்வெடுத்து கொண்டிருந்தது
மின்விசிறி..
குளிர்சாதன பெட்டியிலிருந்து
ஒழுகிக்கொண்டிருந்தது தண்ணீர்..

புரிந்து போயிற்று
இன்று மின்வெட்டு.

~ ஷினோலா