அம்மா ஊட்டிய நிலவு
விளையாடி விளையாடி
இரவும் வந்தது
நிலவும் வந்தது..
ஆடி ஆடி
உணவும் வந்தது
ஊட்டிவிட தாயும் வந்தாள்..
அதோ பார் நாய் என்றாள்
வாய் பிளந்தேன்
இதோ பார் பல்லி என்றாள்
வாய் பிளந்தேன்
மேகத்தை போர்த்திக்கொள்ள
நினைத்த நிலவையும் விடாது
நிலா நிலா ஓடிவா என்றாள்
அதற்கு ஒரு வாய் ஊட்டினாள்
எனக்கு இரண்டு வாய்..
போதும் போதும்
என நான் அடம்பிடிக்க
பத்தாததற்கு பக்கத்தில் அமர்ந்திருந்த
அந்த அரைவட்ட
நிலவையும் முழுதாய்
உருண்டை பிடித்து
முழுநிலாச்சோறு ஆ என்றாள்
வாய் பிளந்தேன்..
தினமும் கடைசி வாயில்
தான் பலியாவது நிச்சயம்
என தெரிந்தும்
வந்து வந்து தான் பார்த்து போகிறது நிலவு
அம்மாவின் மெய்கலந்த பொய்க்காகவும்
ஒவ்வொரு முறையும்
ஏமாந்து வாய் பிளக்கும்
என் அப்பாவி தனத்திற்காகவும்.
~ ஷினோலா
மிகவும் அருமையான அழகான வரிகள் மா 😍👏👏🙌🏻🙌🏻