ஷெர்லி ஜேக்ஸன் – லாட்டரி சிறுகதை (1948) | (The Lottery by Short Story Shirley Jackson (1948))
அது ஜுன் மாதத்தின் இருபத்தி ஏழாம் தேதி காலைப் பொழுது மணி பத்து இருக்கும் . அந்தக் கோடைகாலத்தில் வானம் தெளிவாகவும் போதுமான அளவு வெய்யில் நிரம்பியும் வெதுவெதுப்பாக இருந்தது. அந்த மைதானத்திற்குள்ளும் வெளியிலும் ஏராளமாகஅழகான மலர்கள் பூத்திருந்தன. புல்வெளியும் நல்ல பச்சைப் பசுமையாக செழித்து வளர்ந்திருந்தது. அந்தக் கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் அந்த ஊரில் அமைந்திருக்கும் அஞ்சல் அலுவலகத்திற்கும் . வங்கிக்கும் இடையில் இருந்த பெரிய சதுக்கத்திற்குள் வந்து கூடியிருந்தார்கள்.
சில நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் , லாட்டரி முடிவதற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம் என்பதால் வழக்கமாக ஜுன் இருபத்தி ஏழாம் தேதி அதிகாலையிலேயே லாட்டரியை இந்தப் பகுதியில் ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இது ஒரு சிறிய ஊர் தான் என்பதாலும் . இந்த கிராமத்தில் வசிப்பது மொத்தமே முன்னூற்று சொச்சம் பேர்கள் தான் என்பதாலும், இந்த ஊரில் மட்டும் வருடா வருடம் காலையில் பத்து மணிக்கு மேல் தான் லாட்டரியை ஆரம்பிப்பார்கள். தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் மொத்த லாட்டரியையும் நடத்தி முடித்து விட்டு , மதியச் சாப்பாட்டுக்கு மக்கள் வீட்டுக்குச் சென்று விடுவார்கள்.
இன்று அந்தச் சதுக்கத்தில் காலையில் முதலில் வந்து கூடியதென்னவோ குழந்தைகள் தான். பள்ளிக்கு இப்போது தான் கோடை விடுமுறை விட்டிருந்தார்கள். அதனால் அவர்களிடம் இயற்கையாகவே ஒரு சுதந்திர உணர்வு வந்து ஒட்டிக்கொண்டிருந்தது. ஒரு இடத்தில் அவர்களால் நிலையாக உட்காரக்கூட முடியவில்லை. எல்லோருமே பரபரப்பாக இருந்தார்கள். ஆளாளுக்கு கலைந்து போய் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுக்களை விளையாடுவதற்கு முன்பு கொஞ்ச நேரம் அனைவரும் கும்பலாக கூடி உட்கார்ந்திருந்தார்கள். இனி இவர்கள் விளையாட ஆரம்பித்து விட்டால் , அந்த இடமே ஹோ வென்று ஒரே இரைச்சல் மயமாகத்தான் இருக்கும். பெரும்பாலும் அவர்களுக்குப் பிடித்ததே வகுப்பறை விளையாட்டுத்தான். ,இவர்களே ஆசிரியர்களாக மாறி பாடம் ந டத்துவதும் , புத்தகத்தை புரட்டுவதும் , மாணவர்களைத் திட்டுவதும் என்று இந்த வகுப்பறை விளையாட்டுக்கள் இனி இவ்விடத்தில் களை கட்டிவிடும்.
பாபி மார்ட்டின் அவனது பை நிறைய ஏற்கனவே கற்களை எடுத்து நிரப்பி வைத்திருந்தான். அவனது வழியைப் பின்பற்றி மேலும் சில மாணவர்கள் நல்ல வழ வழப்பான , வட்டமான , எடையற்ற கற்களை சேகரித்து டிரவுசர் மற்றும் சட்டைப் பைக்குள் வைத்திருந்தனர். ஆனாலும் இதில் முந்திக்கொண்டது என்னவோ பாபி , ஹாரி , மற்றும் டிக்கி டெலகெராய்க்ஸ் என்ற மூன்று சிறுவர்கள் தான். (டிக்கி டெலகெராய்க்ஸ்ஸை ஊரில் எல்லோரும் டெலகிராப் என்று தான் அழைப்பார்கள்) இந்த மூவருக்கும் தான் இன்று நல்ல வேட்டை. சதுக்கத்தின் ஒரு மூலையில் அவர்களுக்கு வேண்டிய அளவு வேண்டிய மாதிரி கற்களை குவித்து வைத்து விட்டு மற்ற குழந்தைகள் யாரும் அதை வேட்டையாடிவிடாமல் வெகு கவனமாகப் பார்த்துக் கொண்யிருந்தார்கள் அவர்கள்.
இதில் பெண் குழந்தைகள் நடவடிக்கைகள் வேறு மாதிரி இருந்தன. அவர்கள் கொஞ்சம் ஒதுங்கி நின்று தங்களுக்குள் குசு குசுவென்று இரகசியமாகப் பேசிக்கொண்டேயிருந்தார்கள். அவ்வப்போது சேட்டை செய்யும் பையன்களைப் பார்த்து பக்கத்தில் நிற்பவளிடம் ஏதேதோ கேலியாகச் சொல்லி சிரித்தும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். இடுப்பில் டிரவுசர் நிற்காத வாண்டுப் பயல்கள் வேறு தங்களது பங்கிற்கு நன்றாகப் புழுதியில் புரண்டு புரண்டு, அழுக்கை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு வந்து, அவர்களது அண்ணன்மார்களுடைய கைகளையோ அல்லது அக்காமார்களுடைய கைகளையோ பிடித்துக் கொண்டு சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொணடிருந்தார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து அந்த ஊரின் ஆண்கள் ஒவ்வொருவராக அந்த சதுக்கத்திற்கு வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள். வந்ததும் முதலில், தங்களது குழந்தைகள் எங்கே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு முறை பார்த்து விட்டு, மழை தண்ணி விவசாயம், டிராக்டர் மற்றும் வரி கட்டுவது என்று அவர்களது பேச்சு நீண்டு கொண்டே சென்றது. சிறிது நேரத்தில் பேச்சின் சுவாரஸ்யத்தில் அவர்கள் மூழ்கிப்போனது போல் இருந்தது. பிறகு சட்டென்று ஏதோ ஞாபகத்திற்கு வந்தவர்கள் போல விழிப்புற்று தோன்றினார்கள். பிறகு பேச்சு மெல்ல மெல்ல குறைந்தது.
அவர்கள் மூலையில் குவிக்கப்பட்டிருந்த கற்களை தூரத்தில் நின்று பார்த்தபடியேதான் ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் அதிகபட்டசமாக புன்னகைக்க மட்டுமே செய்தார்கள். யாரும் வாய் விட்டு சிரிக்கவில்லை.
அடுத்ததாக , அவர்களது வீட்டுப் பெண்கள் அங்கே தலை காட்ட ஆரம்பித்தார்கள். வெளுத்துப் போன உடைகளையும், சிலர் வெம்மையுடைகளையும் அணிந்தபடியே வந்து கொண்டிருந்தார்கள். மற்ற பெண்களைப் பார்க்கும் போது ஒருவொருக்கொருவர் புன்னகைத்துக் கொண்டார்கள். சிலர் வரும் போதே காலை வணக்கம் சொன்னார்கள். சிலர் குசு குசுவென்று இரகசியம் பேசினார்கள். பேசி முடிந்ததும் தங்களது கணவர்மார்களின் அருகில் போய் நின்று கொண்டு , தங்கள் குழந்தைகளை அருகில் அழைத்தார்கள் . நான்கைந்து முறைகள் அரட்டி உருட்டி அழைத்த பிறகு தான் குழந்தைகள் தயங்கி தயங்கி அவர்கள் பக்கத்தில் வந்து நின்றன.
இதற்கிடையில் பாபி மார்ட்டின் சமத்தாக அவனது அம்மாவின் கைப்பிடியில் இருந்து நழுவிப் போய் , தான் குவித்து வைத்திருக்கும் கல் குவியலின் அருகே சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா இல்லை யாரும் எடுத்துச் சென்று விட்டார்களா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது தந்தை பெரிய மார்ட்டின் கோபமாக அவனுக்கு வசமாக அடிகள் விழப்போவதாக எச்சரித்த. உடனே, மறுபடியும் நல்ல பிள்ளையாக மாறி அம்மா அப்பாவிற்கு இடையில் வந்து நின்று கொண்டான். ஊரில் மற்ற நடன விருந்துகளைப் போல , கோடை திருவிழாக்களைப் போலத்தான் இந்த லாட்டரி திருவிழாவும் வருடா வருடம் அங்கே நடத்தப்படுகிறது.
இது போன்ற நிகழ்ச்சிகளை அர்ப்பணிப்புடனும் , சுறு சுறுப்புடனும் திட்டமிட்டும் நடத்துவதில் திருவாளர் சம்மரை விட்டால் , இந்த ஊரில் வேறு ஆட்களே கிடையாது என்று சொல்லலாம். திருவாளர் சம்மர் நல்ல களையான மனிதர். வட்டமான முகம் , வாட்ட சாட்டமான ஆள்.இனிமையாகப் பழகக்கூடியவரும் கூட . ஆனால் பாவம் அவருக்கு குழந்தைகள் தான் கிடையாது. அதனாலேயே அவரது மனைவி சுபாவத்தில் சிடுமூஞ்சியாக மாறி விட்டாள் என்பார்கள். எப்போது பார்த்தாலும் அவரை திட்டிக்கொண்டேயிருப்பது தான் அவளுக்கு பொழுது போக்கு. அவருக்கு நல்ல வருமானம் தரக்கூடிய நிலக்கரித் தொழில் கைவசம் உண்டு.
அவர் தனது கருப்பு மரப்பெட்டியுடன் சதுக்கத்திற்கு வந்து சேர்ந்த போது , மக்கள் பல விதமாக அவரைப் பற்றி முணு முணுத்துக் கொண்டிருந்தார்கள். சம்மர் அவர்கள் மக்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்து விட்டு ‘’ ‘’மன்னிக்க வேண்டும் உறவுகளே சிறிது தாமதமாகிவிட்டது. ‘’ என்று மன்னிப்பு கோரும் பாவனையில் பேசினார். ஒரு மர ஸ்டூலை (முக்காலி) சுமந்து கொண்டு அவருக்குப் பின்னால் வந்து சேர்ந்தார் அந்த ஊரின் போஸ்ட் மாஸ்டர் திருவாளர் கிரேவ்ஸ் அவர்கள் . அவர் அந்தச் சதுக்கத்திற்கு வந்ததும் , உடனே அந்த மர ஸ்டூலை தரையில் வைத்தார். திருவாளர் சம்மர் அதன் மீது அந்த கருப்பு பெட்டியை வைத்தார். அவர் வைத்த அந்த கருப்பு பெட்டியைப் பார்த்ததுமே மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பின் நகர்ந்து செல்ல ஆரம்பித்தார்கள். அந்த கருப்பு பெட்டிக்கும் மக்களுக்குமான காலி இடம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
நிலமையை ச் சரி செய்யும் பொருட்டு திருவாளர் சம்மர் முன்னால் வந்து மக்களைப் பார்த்து உற்சாகமாக ‘’ நம் மரபுப்படி என்னோடு வந்து யாராவது கைகுலுக்க வேண்டுமே ‘’ என்றார். ஆனால் யாரும் அவருடன் கை குலுக்க முன் வரவில்லை. முன்பை விட இடைவெளி இன்னும் கொஞ்சம் அதிகமானது தான் மிச்சம் .
ஒரு வழியாக பெரிய மார்ட்டின் முன்னால் சென்றான். உடனே அவனை விட்டு அவனது இளைய மகன் சின்ன மார்ட்டின் சிறிது தூரம் தள்ளிப் நின்று கொண்டான். மார்ட்டினின் பெரிய மகன் பாக்ஸ்டர் தன் தந்தைக்கு உதவும் பொருட்டு அவனுக்கும் முன்னால் சென்றான். சென்றவன் , மரப் பெட்டி அசையாதவாறு அந்த ஸ்டூலை இறுகப் பிடித்துக் கொண்டான். பிறகு அவனது தந்தை வந்து அவனுக்கு உதவினான் . இப்போது சம்மர் மரப்பெட்டிக்குள் கையை விட்டு அதை நன்றாக கிளற ஆரம்பித்தார்.அப்படியே ஏகப்பட்ட சுற்றுக்கள் சுற்றித்தான் நிறுத்தினார்.
உண்மையிலேயே லாட்டரிக்கான அசல் மரப் பெட்டி எப்போதோ தொலைந்து போய் விட்டது என்று சொன்னார்கள்
இப்போது இருக்கும் இந்த கருப்பு பெட்டி . அசல் பெட்டி அல்ல . ஆனால் இதற்கும் நிறைய வயது ஆகி விட்டது என்று பெரியவர்கள் சொன்னார்கள். . அதாவது இந்த ஊரிலேயே வயதானவரான முதியவர் வார்னர் பிறப்பதற்கும் முன்பே இந்தக் கருப்பு பெட்டி பயன்பாட்டிற்கு வந்து விட்டதாக சொல்வார்கள்.
திருவாளர் சம்மர் அவர்களும் இந்த கருப்பு பெட்டிக்குப் பதிலாக புதிதாக வேறு ஒரு பெட்டியை மாற்ற வேண்டுமென்று ஊரில் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டார். ஆனால் யாருக்குமே வழி வழியாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இந்த கருப்புப் பெட்டியை மாற்ற வேண்டுமென்ற எண்ணமே சிறிதும் வரவில்லை. இதைத்தவிர இன்னொரு நம்பிக்கையும் மக்களிடம் உண்டு. அதாவது இப்போது இருக்கும் இந்தக் கருப்பு பெட்டிக்குள் , இதற்கும் முன்னால் இருந்த லாட்டரிப் பெட்டியின் சில சக்கைகள் செருகப்பட்டிருக்கின்றன என்பது தான் அது. அது மட்டுமில்லை இந்த இடத்தை ஒரு ஊராக்கி மக்கள் வசிக்க ஆரம்பித்த நாளிலிருந்தே அந்தப் பழைய பெட்டி அவர்களது வாழ்க்கையோடு இருந்து வந்துள்ளதாகவும் இன்னொரு நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு வருடமும் லாட்டரி முடிந்தவுடன் சம்மர் அவர்கள் புதிய பெட்டி மாற்றுவதைப் பற்றி வெகு உற்சாகமாக மக்களிடம் வேண்டுகோள் வைப்பார். ஆனால் அவரது குரல் கேட்பாரற்று அப்படியே காற்றில் தேய்ந்து போய் விடும். புதிதாக எதுவுமே நடக்காது.
இப்போது இந்தக் கருப்பு மரப்பெட்டியை பார்த்தீர்களானால் பெயருக்குத்தான் அது கருப்பு பெட்டி என்று சொல்லப்படுகிறதே தவிர , காலத்தின் கோலத்தில் அது தேய்ந்து தேய்ந்து வெளுத்துப் போய் பார்ப்பதற்கே மிகவும் அசிங்கமாகத்தான் இருந்தது. சில இடங்களில் , அதவாவது மூலை முடுக்குகளிலெல்லாம் சிராய்த்து சிராய்த்து , அதன் கருப்பு வண்ணம் போய் அசல் மரத்தின் நிறமே பல்லை இளித்துக் கொண்டு நின்றது . இது தவிரை ஒவ்வொரு பக்கமும் கீறல்கள் விழுந்ததில் , சில சிராய்ப்புகள் கூராய் நீட்டிக் கொண்டு தெரியும். இப்படி அதரப் பழசாய் போனாலும் இதை மாற்றுவதற்கு ஒரு விடிவு காலம் இன்னும் வரவில்லை என்பது தான் உண்மை .
பழைய காலத்திலெல்லாம் இது போல காகிதங்களை உள்ளே போடுவது கிடையாது. எல்லாம் மரச்சக்கைகள் தான். காலப்போக்கில் தான் இந்த வெள்ளைக்காகிங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இப்படித்தான் மரபும் வளமையும் ஒவ்வென்றாக மாறிக் கொண்டு வருகின்றன. அல்லது இழக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. முதலில் வெள்ளை காகிதங்களுக்கு எதிர்ப்பு தான் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சம்மர் தான் அதை வெற்றி கரமாக சமாளித்து முறியடித்தார். ‘’ ‘ ஒரு காலத்தில் ஊர் சிறியதாக இருந்தது. அப்போது மரச்சக்கைகள் பயன்படுத்தப் பட்ன சரி. ஆனால் இப்போது அப்படியா ? இப்போதே மக்கள் தொகை முன்னூற்றை தாண்டி விட்டது. இன்னும் வளர்ச்சியடையும் போல தெரிகிறது. முன்னூறு மரச்சக்கைகளை இந்த கருப்பு மரப் பெட்டிக்குள் தான் போட முடியுமா சொல்லுங்கள் ? ‘’ என்று பலவிதமாக எடுத்துச் சொல்லி தான் சம்மர் மக்களை சம்மதிக்க வைத்தார். இது அவரின் வெற்றி என்றே சொல்லலாம்.
இது தான் திருவாளர் சம்மர் . நேற்றைய இரவே அவரும் . கிரேவ்ஸும் சேர்ந்து ,அவரின் நிலக்கரி வியாபார அலுவலகத்தில் வைத்து , கருப்பு பெட்டிக்குள் ஊரில் உள்ள அத்தனை பேரின் பெயர்களையும் ஏழுதிப் போட்டு நிறைத்து நிறைத்து வைத்து விட்டனர். இப்படி. முதற் கட்ட ஏற்பாடுகள் அத்தனையைம் கச்சிதமாக முடித்து விட்டுத்தான் , காலையில் சம்மர் இந்தக் கருப்பு பெட்டியை எடுத்துக் கொண்டு இந்த சதுக்கத்திற்கு வந்திருக்கிறார்.
இந்த லாட்டரி போட்டி முடிந்து விட்டால் நாளையிலிருந்து இந்தப் பெட்டியை யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை.
அடுத்த வருடம் வரை இது எங்காவது ஏதாவது ஒரு மூலையில் தேமேவென்று சும்மா கிடக்கப் போகிறது. ஒரு வருடம் இது திருவாளர் கிரேவ்ஸின் விருந்தாளியாக அஞ்சலகத்தில் எங்காவது காலடியில் விழுந்து கிடக்கும். இன்னொரு வருடத்தில் மார்ட்டின் மளிகைக்கடையில் எங்காவது ஒரு செல்பில் மளிகைப் பொருட்களோடு அனாதையாக கிடக்கும். ஒவ்வொரு முறையும் லாட்டரி ஆரம்பிப்பதற்கும் முன்பு கூட்டத்தில் எப்படியோ மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு விடும். யாரும் விடுபட்டு விடக் கூடாது என்பதில் திருவாளர் சம்மர் அவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பார். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவர்களையும் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் பெயரை வாசித்து வாசித்து சரி பார்ப்பார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு எடுப்பது போல் இருக்கும் அந்தக் காட்சி .
அது மட்டுமில்லை ஒவ்வொரு வருடமும் போட்டி துவங்குவதற்கு முன்பு போஸ்ட் மாஸ்டர் திருவாளர் சம்மர் இந்தப் போட்டியின் அதிகாரியாக பதவி ஏற்றுக் கொள்வது ஒரு மரவு. போஸ்ட்மாஸ்டர் தான் அவருக்கு முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். முற்காலத்தில் போட்டியை நடத்தும் அதிகாரிகள் நிறைய அர்த்தமற்ற மந்திரங்களை , அவர்களது இனிமையற்ற குரலில் செபிக்க வேண்டியதிருந்தது- அவற்றில் இசைத்தன்மையோ , ஒலித் தன்மையோ பொருட் தன்மையோ சிறிதும் இருக்காது. ஆனாலும் தொடர்ந்து அந்தச் சடங்குகளை நிறைவேற்ற வேண்டியதிருந்தது. ஆனால் காலப்போக்கில் அதை எப்படியோ திறமையாக கழட்டி விட்டு விட்டனர். அது மட்டுமில்லை பெட்டியில் உள்ள துண்டுக் காகிதத்தை எடுக்க வரும் ஒவ்வொருவருக்கும் போட்டி நடத்தும் அதிகாரி சல்யூட் அடித்து அவரிடம் சிறிது நேரம் உரையாற்ற வேண்டுமென்பதும் சம்பிரதாயம் . இந்த மாதிரி சடங்குகள் போட்டியை நாள் கணக்காக இழுத்தடித்ததால் , இதையும் காலப் போக்கில் நீக்கி விட்டனர் . ஆனால் ஒவ்வொரு குடும்பத் தலைவரிடமும் போட்டியின் அதிகாரி சிறிது நேரம் அவர் குடும்பத்தைப் பற்றியும் வாரிசு பற்றியும் , இன்ன பிற விசயங்கள் பற்றியும் கேட்டு த் தெரிந்து கொள்வார் . அதற்கு மட்டும் மாற்றே கிடையாது. வருட வருடம் அதே கேள்விகள் தான் அதே பதில்கள் தான். எது எப்படியிருந்தாலும் போட்டி ஆரம்பித்து விட்டால் அதன் பாரம்பரியத் தன்மை சிறிதும் பிசகாமல் அதை அப்படியே நடத்திச் செல்வதில் உண்மையிலே சம்மர் கில்லாடிதான்.
போட்டிக்கான நேரம் நெருங்குவதை சம்மருக்க உள்ளுணர்வு சொல்லியது. அவர் இந்தப் போட்டிக்காக நீல நிற ஜீன்ஸ் பேண்டும் சுத்தமான வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தார். ஒரு கையை கருப்பு பெட்டியில் வைத்தபடியே தான் கிரேவ்ஸிடமும் , மார்ட்டினிடமும் மற்றும் ஏனையோரிடமும் பேசிக்கொண்டிருந்தார். கடைசியாக இந்த மாதிரிப் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மொத்தமாக சனங்களைப் பார்த்து பேச வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை அவரது உள் உணர்வு அவருக்கு சொல்லியது. பேசவும் வாயெடுத்தார் ஆனால் அப்போது தான் திருமதி ஹட்சிஸ்டன் சதுக்கத்திற்கு வரும் பாதையில் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். ஸ்வெட்டரை அணியாமல் அப்படியே தோளில் போட்டபடியே விரைந்து வந்து கொண்டிருந்தாள். வேகமாக வந்தவள் திருமதி டெலாகிராய்க்ஸ் பக்கமாக வந்து நின்றபடியே ‘’ அய்யோ இன்னைக்கு என்ன நாளுன்னே எனக்கு மறந்து போச்சுப்பா ‘’’ என்றாள். இருவருமே சற்று நேரம் யோசித்துப் பிறகு சிரித்தார்கள்.
‘’உண்மையிலேயே என் கிழவன் வீட்டிற்கு வெளியே விறகு அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறான் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் குழந்தைகளெல்லாம் திடீரென்று ஓடிவருவதை சன்னல் வழியாகப் பார்த்த பின்பு தான் , இன்று இருபத்தி ஏழாம் தேதி என்பது ஞாபகத்திற்கே வந்தது. அவ்வளவு தான் போட்டது போட்டபடி கிடக்க அப்படியே இங்கே ஓடி வந்து விட்டேன் ‘’ என்றாள். பிறகு தனது ஈரம் படிந்த கைகளை மேல் உடையில் துடைத்துக் கொண்டாள்.
திருமதி டெலாகிராய்க்ஸ் அலட்டிக் கொள்ளாமல் ‘’ நீ சரியான நேரத்துக்குத்தான் வந்து சேர்ந்திருக்க ‘’ என்றாள் மேலும் ‘ ‘’ அவுங்க ஏதேதோ சம்பந்தம் இல்லாமத்தான் பேசிக்கிட்டிருக்காங்க ‘’ என்றாள். திருமதி ஹட்சிஸ்டன் அவளது தோள் வழியாக எதிர்புறம் உற்றுப் பார்த்தாள். தனது கணவனும் குழந்தைகளும் அங்கே நின்று கொண்டிருப்பது தெரிந்தது. உடனே ஆசுவாசமாக ஒரு மூச்சை இழுத்து விட்டாள். பிறகு அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவள் கூட்டத்திற்குள் நடந்து செல்லும் போது சிலர் வேண்டுமென்றே நன்றாக இடைவெளி ஏற்படுத்திக் கொடுத்தார்கள். சிலர் பய பக்தியோடு பவ்யமாக ஒதுங்கி நின்றபடி கூட்டத்திற்கெல்லாம் கேட்கும் படியாக ‘’ இதோ நமது திருமதி ஹட்சிஸ்டன் கடைசியாக வந்துவிட்டார்கள் . வழிவிடுங்கள் வழிவிடுங்கள் ,. என்றார்கள் . சிலர் ‘’ திரு பில் அவர்களே உங்கள் இணையர் ஒரு வழியாக வந்து சேர்ந்து விடடார் ‘’ என்று போலியாகப் பணிவுகாட்டி வழி விட்டார்கள். ‘’ கடைசியில் கூட்டத்தினரின் கிண்டல் கேலிகளுக்கிடையே ஹட்சிஸ்டன் ஒரு வழியாக தனது கணவனை சென்றடைந்தாள்.
இதற்காக காத்திருந்த திருவாளர் சம்மர் கேலியாக ’ ‘’ நல்லது திருமதி டெஸ்ஸி ‘ அவர்களே கடைசியாக நீங்கள் வந்துவிட்டார்கள் .நீங்கள் இல்லாமலேயே இந்தப் போட்டியை நடத்தவேண்டியதிருக்குமோ என்று கூட பயந்து விட்டோம் ‘’ என்றார்.
‘’ நான் என்ன செய்வது ? சமயலறையில் பாத்திரங்களை கழுவி முடிக்கும் முன்பே பில் என்னை விட்டு விட்டு இங்கே வந்து விட்டார் ‘’ என்றாள் டெஸ்ஸி . உடனே கூட்டத்தில் ஒரு சிரிப்பலை வேகமாகப் பரவியது. இப்போது எல்லோரும் தத்தமது குடும்பத்தினருடன் சமமாக நின்றார்கள்..
கடைசியாக சம்மர் ‘’ நல்லது இப்போதே தொடங்கி விடுவது நல்லதென்று படுகின்றது என்றார் ‘’ இதை முடித்து விட்டு அவரவர்கள் வேலையைப் பார்க்க நாம் கிளம்ப வேண்டுமே ‘’ என்று சேர்த்துக் கொண்டார். கூட்டத்தைப் பார்த்து ‘’ இன்னும் யாராவது வருகை தராமல் இருக்கிறார்களா ? ‘’ என்று கேட்டார் உடனே கூட்டத்தினர் . ‘’ டன் பார் டன்பார் ‘’ என்று கத்தினார்கள். சம்மர் தான் கையில் வைத்திருந்த பெயர் பட்டியலைப் பார்த்து விட்டு ‘’ ஆமாம் கிளைட்டன் பார் இன்னும் வரவில்லை. அவர் தான் தனது காலை ஒடித்துக் கொண்டாரே ! எப்படி வருவார் ? அது சரி அவருக்காக யார் விளையாடப் போவது இந்தக் கூட்டத்திலே ?’’ என்று கேட்டார்
‘’நான் விளையாடப் போகிறேன்‘’ என்று கூட்டத்திலிருந்து ஒரு பெண் குரல் வந்தது. திருவாளார் சம்மர் இப்போது நேரடியாக அந்தப் பெண்மணியை பார்த்து . ‘’ சரி தான் மனைவி கணவனுக்காக விளையாடுவதும் நல்லது தான். என்றார் . பிறகு ‘’ ஆனாலும் ஜெனி உங்கள் வீட்டில் பெரிய பையன்கள் என்று யாரும் இல்லையா ? அதாவது தந்தைக்காக விளையாடுவதற்கு ?’’ என்று கேட்டார். இதற்கான பதில் என்னவென்று அந்த ஊருக்கே நன்றாகத் தெரியும். சம்மருக்கும் கூட அது தெரியும் தான் ஆனாலும் இது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டியது லாட்டரி நடத்து ம் அதிகாரிகளின் கடமையாகும் .
இதற்கான பதிலைக் கேட்க கூட்டத்தினரும் சம்மரும் அமைதியாக காத்திருந்தனர். திருமதி டன் பார் அமைதியாக ஆனால் மிகுந்த வருத்தத்துடன் சொன்னாள். ‘’ எங்களது பையன் \ ஹொரேசுக்கு இன்னும் பதினாறு வயது பூர்த்தியாகவில்லை. ‘’’ ‘’ சரி சரி நானும் அப்படித்தான் நினைத்தேன். இந்த முதியவரை இப்படித்தான் நான் நிரப்ப வேண்டும். ‘’ என்றார் சம்மர் . பிறகு தன் கையில் வைத்திருந்த பட்டியலைச் சரிபார்த்து விட்டு ‘’ தம்பி வாஸ்டன் நீ இந்த முறை விளையாடுகிறாயா ?’’ என்று ஒரு சிறுவனைப் பார்த்து கேட்டார். கூட்டத்தை விலக்கி கொண்டு நல்ல வளர்த்தியான ஒரு பையன் முன்னால் வந்து நின்றான் கையை உயர்த்திக் கொண்டே ‘’ இந்த முறை நான் எனக்காகவும் எனது தாய்க்காகவும் விளையாடப் போகிறேன் ‘’ என்று சொன்னான் . அவன் அடிக்கடி வெய்யில் தாளாமல் தனது கண்களை சிமிட்டிக் கொண்டிருந்தான். அவ்வப்போது தலையை தொங்கப் போட்டுக் கொண்டே கேள்விகளுக்குப் பதில் சொன்னான் . கூட்டத்தினருக்கு அந்தப் பையன் மீது திடீரென்று ஒரு பச்சாதாப உணர்வு ஏற்பட்டது. ‘’ அருமையான பையனாக வளர்ந்து நிற்கிறான் பாரேன் , . உண்மையிலே தாய்க்கு ஏற்ற பிள்ளை தான் இவன் ‘’ என்று அவன் காது படவே கூறினார்கள். ’திருவாளர் சம்மர் ‘’ நினைத்தேன் ‘’ என்றார் ‘’ சரி தான் முதியவர் வார்னர் தயாரா ? ‘’ தயார் தான் ‘’ என்று குரல் வந்தது .’’ அப்படியென்றால் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. உடனே ஆரம்பித்து விடலாம் ‘ என்று கூட்டத்தைப் பார்த்து சொன்னார்.
அவ்வளவு தான் அங்கே சட்டென்று ஒரு பேரமைதி எழுந்தது . இப்போது திருவாளர் சம்மர் அவர்கள் தொண்டையை கணைத்துக் கொண்டு சப்தத்தை சற்று சரி செய்து கொண்டார். ‘’ என்ன எல்லோரும் தயார் தானே ? நான் இப்போது ஒவ்வொரு குடும்பத் தலைவரின் பெயரையும் வாசிக்கப் போகிறேன். உரிய நபர் உடனே இங்கே வந்து இந்தக் கருப்பு பெட்டிக்குள்ளிருந்து ஒரு துண்டுக்காகிதத்தை எடுத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும். விதி முறையை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் . காகிதத்தை யாரும் பிரித்து யாரும் பார்க்கவே கூடாது. அதை கையில் உறுதியாகப் பிடித்திருக் வைத்திருக்க வேண்டும் . வேண்டுமானால் கையை மடித்து வைத்துக் கொள்ளலாம் .எல்லோரும் அவரவர்களின் சீட்டுக்களை எடுத்து முடிக்கும் வரையிலும் இது அப்படியே தான் தொடர வேண்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது எல்லாம் விளங்கி விட்டது தானே ? ‘’ என்று கேட்டார்.. ‘’ கூட்டத்திலிருந்து யாரும் எந்தப் பதிலையும் தெரிவிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே இது போல் நிறைய முறை இந்த லாட்டரி விளையாட்டை விளையாடியிருப்பதால் இதன் நிபந்தனைகளெல்லாம் அவர்களுக்கு அத்துபடியாகியிருந்தது. எல்லோரும் தங்கள் உதடுகளை மட்டும் அடிக்கடி ஈரப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
இப்போது சம்மர் ஒரு கையை உயர்த்தி சப்தமாக பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார் ‘’ ஆடம்’’ இப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதன் சம்மருக்கு முன்னால் வந்து நின்றான் . அவனைப் பார்த்ததும் சம்மர் ‘’ஹாய் ஸ்டீவ் ‘’ என்றார் . உடனே அவன் ‘’ஹாய் ஜோவ் ‘’ என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் கொஞ்சம் பதட்டத்தோடு பார்த்துக் கொண்டார்கள். பிறகு புன்னகை புரிந்தார்கள். அடுத்ததாக ஆடம்ஸ் அந்தக் கருப்புப் பெட்டிக்கு அருகில் சென்றான். கையை அதற்குள் நுழைத்து அதிலிருந்து ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்தான். அதை பிரித்துப் பார்க்கவில்லை. ஆனால் அதை அப்படியே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு , மறுபடியும் தான் நின்ற இடத்திற்கே சென்று விட்டான். ஆனால் இந்த முறை குடும்ப உறுப்பினர்களை விட்டு சிறிது தள்ளியே நின்று கொண்டான். அவன் அந்தக் காகிதத்தை கடைசி வரையிலும் திரும்பிக் கூட பார்க்கவேயில்லை.
சம்மர் தொடர்ச்சியாக பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார். ‘’ ஆண்டர்சன் , பெண்த்தாம் …’’ ஒவ்வொருவரும் சம்மருக்கு முன்னால் சென்றார்கள் . சம்பிரதாயமான விசாரிப்புகள் , பிறகு பெட்டியில் சீட்டு எடுப்பது என்று அந்த நிகழச்சி தொடர்ச்சியாக நடந்து கொண்டிரந்தது.
பின் வரிசையில் நின்று கொண்டிருந்த திருமதி டெலாகிராய்க்ஸ் திருமதி கிரேவ்ஸிடம் இரகசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘’ இடை வெளியே இல்லாமல் தொடர்ச்சியாக லாட்டரி நடைபெற்றுக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது. சென்ற முறை லாட்டரி விளையாடி ஒரு வாரம் கூட இன்னும் முடியாதது போல் தான் தோன்றுகிறது. ஆனால் ஒரு வருடம் ஆகி விட்டதென்று சொல்கிறார்கள் நம்ப முடிகிறதா ? ’’ ‘’ ஆமாம் ஆமாம் காலம் என்ன வேகமாகப் போகிறது ‘’ என்றாள் திருமதி கிரேவ்ஸ். ‘’ கிளார்க் டெக்ளாரிஸ் ‘’ என்றழைத்தார் சம்மர். இதற்குள் திருமதி டெலாரிக்ஸ் ‘ இதோ என் கிழவன் வந்து கொண்டிருக்கிறார் ‘ என்று பலத்த குரல் கொடுத்தாள். அவளது கணவன் அங்கே முன்னால் சென்று கருப்பு பெட்டியில் ஒரு சீட்டை எடுத்து திரும்பும் வரையிலும் அவள் மூச்சை கையில் பிடித்துக் கொண்டு தான் நின்றிருந்தாள். ‘’ டன் பார் ‘’ என்று பெயரை வாசித்தார் சம்மர். உடனே திருமதி டன்பார் கருப்பு பெட்டிக்கு அருகே சென்றாள். கூட்டத்திலிருந்த சிலர் ‘’ ஜேன் நீ அங்கே போ ‘’ என்று அவளது மகனை அனுப்பினார்கள்.
‘’ இதற்கு அடுத்தது நாங்கள் தான்’’ என்றாள் திருமதி கிரேவ்ஸ் . அப்படித்தான் நடந்தது. கிரேவ்ஸ் பக்கவாட்டிலிருந்து சம்மருக்கு முன்னால் வந்து நின்று . அவருக்கு வணக்கம் சொன்னார். சம்மரும் அவருக்கு வழக்கம் போல வணக்கமும் வாழ்த்துக்களும் தெரிவித்தார். பிறகு கிரேவ்ஸ் அந்தப் பெட்டியிலிருந்து ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து , அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு சென்றார்.
இப்போது கூட்டத்தில் உள்ள எல்லா ஆண்களின் கைகளிலும் அனேகமாக அந்த துண்டுக் காகிதம் இருந்தது. சிலர் அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உள்ளங்கைகளுக்குள் வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்கள். அனேகமாக எல்லோருமே பதட்டமாகத்தான் நின்றிருந்தார்கள். திருமதி டன்பாரும் அவளது இரண்டு மகன்களும் அருகருகே நின்றிருந்தார்கள். திருமதி டன் பாரின் கையில் அந்தக் காகிதம் இருந்தது. அதை அவள் கெட்டியாகப் பிடித்திருந்தாள்.
‘’அடுத்து ஹார்பட் ஹட்சிஸ்டன் ‘’ என்று சம்மர் வாசித்தார். ‘திருமதி ஹட்சிஸ்டன் தன் கணவனைப் பார்த்து’ பில் உன் பெயரைத்தான் வாசிக்கிறார். எழுந்திரு , உடனே அங்கே போ ‘’ என்றாள். கூட்டத்தில் உடனே சிரிப்பலை பரவியது.
அங்கே நின்று கொண்டிருந்த ஆடம்ஸ் அந்த ஊரிலேயே முதியவரான வார்னரிடம் ‘’ ஜோன்ஸ் , இது உனக்குத் தெரியுமா ? வடக்கே உள்ள கிராமங்களிலெல்லாம் இந்த லாட்டரி விளையாட்டை நிறுத்துவதைப் பற்றியே ஒரே பேச்சாக இருக்கிறதாமே ‘’? என்று கேட்டார். உடனே முதியவர் வார்னர் முகத்தை சுளித்துக் கொண்டு ‘’ அந்தப் பைத்தியகார முட்டாள்களைப் பற்றி நீ இங்கே பேசாதே ‘’ என்றார். ‘ சற்று பொறுத்து மீண்டும் ‘’ இந்த இளைஞர்களின் வாயிலிருந்து முட்டாள் தனத்தை தவிர வேறொன்றும் வருவது இல்லை ‘’ என்றார். ஆனாலும் அவருக்கு கோபம் இன்னும் அடங்கவேயில்லையென்று தோன்றியது. . மறுபடியும் ‘’ அவர்களெல்லாம் மறுபடியும் போய் கற்குகைகளிலேயே வசிக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள் போல் இருக்கிறது. யாரும் எந்த வேலையும் செய்யத் தேவையில்லையே . சும்மா இருந்தால் போதும் என்று நினைப்பார்கள் போல, முட்டாள்கள் ஆனால் ஊரில் ஒரு பழமொழியே இருக்கிறது ஞாபகம் வைத்துக் கொள் .ஜுன்ல லாட்டரி உன் வீட்ல தானியமணி . இது போல மரபையெல்லாம் நாம் கடைபிடிக்கலேன்னா தானியங்களை நாம சாப்பிட முடியாது , வெறும் தட்டையைத்தான் சாப்பிடனும் , அதனால தான் இங்க எப்பவுமே லாட்டரி இருப்பது தான் நல்லது ‘’ என்று சொல்லி விட்டு கருப்பு பெட்டியைப் பார்த்தார். பிறகு சலிப்பாக ‘’ அங்க பாரு சம்மர் , சின்னப் பசங்ககிட்ட ஹாஸ்யம் சொல்லிகிட்டு விளையாடிகிட்டு இருக்கிறார் . அதுக்கு இதுவா நேரம் ‘’ ? என்றார்.
’ திருமதி ஆடம் வார்னரிடம் ‘’ ஏற்கனவே நிறைய இடங்கள்ல நம்ம பகுதிகள்லயே லாட்டரியை விட்டொழிச்சிட்டாங்க தெரியுமா ? ‘ என்று சொன்னாள். ’ ‘ உடனே முதியவர் வார்னருக்கு இன்னும் கோபம் அதிகரித்து விட்டது. ’ அவுங்க எல்லாம் முட்டாள்க அதான் அப்படி நடந்துக்கிறாங்க வேற என்ன சொல்ல ? லாட்டரிய விட்டதினால அவுங்களுக்கு துன்பம் தான் வரும் பாரு ‘’ என்றார்.
மார்ட்டினும் பாபி மார்ட்டினும் தங்களது தந்தை கருப்பு பெட்டியை நோக்கி நகர்வதை ஒரு வித விரக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் . ‘’ இன்னும் சற்று வேகம் பெர்சி ‘’ அவர்கள் ஏற்கனவே முடித்துக் கொண்டிருக்கிறார்கள் ‘’ என்று திருமதி டன்பார் தனது மூத்த மகனிடம் சொன்னாள். ‘’ முடியப் போகிறது ‘’ என்றான் அவளது மகன். ‘’ உடனே உங்கப்பாவிடம் சொல் ‘’ என்றாள். இதற்கிடையில் திருவாளர் சம்மர் தன் பெயரையும் உரத்து வாசித்து விட்டு , அந்தக் கருப்பு பெட்டிக்குள்ளிருந்து தானும் ஒரு சீட்டை எடுத்துக் கொண்டார்.
இப்போது ‘’ வார்னர் ‘’ என்றழைத்தார். ‘’ வார்னர் கூட்டத்திற்கிடையே பெட்டியை நோக்கி செல்லும் போது ‘’ எழுபத்தி ஏழாவது முறை இது . நான் இந்த லாட்டரியில் எழுபத்தி ஏழாவது முறையாக கலந்து கொள்கிறேன் ‘’ என்றார் பெருமிதத்தோடு . இப்போது ‘’ வாட்சன் ‘’ என்றது சம்மரின் குரல் . நல்ல நெடு நெடுவென்று வளர்ந்திருந்த ஜேக் அங்கே சென்றான் . அவனைப் பார்த்ததும் கொஞ்சம் அன்பாக ‘’ பதட்டம் வேண்டாம் ஜேக் , உனக்கான நேரத்தை நீ தாராளமா எடுத்துக்கோ பிறகு ஒரு சீட்டை எடு ‘’ என்றார் சம்மர். அவன் அப்படியே செய்தான். இப்போது ‘’ ஜேனின் ‘’. அவ்வளவு தான் ‘’ அதற்குப் பிறகு பெயர் வாசிக்கப்படவில்லை. ஒரு நிமிடம் கூட்டத்தில் ஒரு மயான அமைதி நிலவியது. யாரும் மூச்சு விட்டார்களா என்று கூட யாருக்கும் தெரியவில்லை.
திடீரன்று திருவாளர் சம்மர் காகிதத்தை இறுக்கிப் பிடித்திருந்த அவரது கையை காற்றில் உயர்த்தி உற்சாகமாக ‘’ சனங்களே இப்போது நீங்கள் காகிதத்தை திறந்து பார்க்கலாம் ‘’ என்றார். உடனே எலலோரும் அவரவர் கையிலிருந்த காகிதத்தை திறந்து பார்த்தனர். அடுத்த நொடியே எல்லா பெண்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். ‘’ யாருக்கு லாட்டரி விழுந்திருக்காம் ?’’ யாருக்கு லாட்டரி விழுந்திருக்கிறது ‘’? டன்பார்க்கா ? வாட்ஸனுக்கா ? சிறிது நேரம் மௌனம் நிலவியது. பிறகு எல்லோருடைய குரல்களும் ஒருமித்து ஒலித்தன. ‘’ இந்த முறை பில்லுக்கு ‘’ ‘’ அதாவது , பில் ஹட்சிங்ஸ்டன்னுக்குத்தான் லாட்டரி அடித்திருக்கிறது. திருமதி டன் பார் தன் மூத்த மகனிடம் ‘’ இந்த விசயத்தை சொல்லி ‘’ இதை உடனே உங்க அப்பாவிடம் போய் சொல்லு ‘’ என்று அனுப்பி விட்டாள். இதற்குள் கூட்டத்தில் இருந்த மக்கள் பில் ஹட்சிங்ஸ்டன் எங்கேயிருக்கிறார் என்று தேட ஆரம்பித்து விட்டார்கள்.
பில் ஹட்சிங்ஸ்டன் அமைதியாக தலைகுனிந்தபடி நின்று கொண்டு , தன் கையிலிருந்த காகிதத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று திருமதி டெஸ்ஸி ஹட்சிங்ஸ்டன் சம்மரைப்பார்த்து உரக்க கத்த ஆரம்பித்தாள். ‘’ நீ என் கணவனருக்கு போதுமான நேரம். கொடுக்கலை. அவர் விரும்பிய காகிதத்தை தேர்ந்தெடுக்க நீ அவருக்குப் போதுமான நேரம் கொடுக்கலை. ஆமா அதை நான் பார்த்தேன். ‘’ கூட்டத்தில் சல சலப்பு எழுந்தது. ‘’
அமைதியாக இரு டெஸ்ஸி ‘’ என்று திருமதி டெல்லா கிராய்க்ஸ் டெஸ்ஸியைப் பார்த்துச் சொன்னாள். திருவாளர் கிரேவ்ஸ் முன்னால் வந்து ‘’ ‘’ லாட்டரியில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சந்தர்ப்பம் தான் கொடுக்கப்பட்டது ‘என்றார். ‘’ ‘’ வாயை மூடு டெஸ்ஸி ‘’ என்றார் கிழவர் தன் மனைவியைப் பார்த்து ..
இப்போது திருவாளர் சம்மர் கூட்டத்தைப் பார்த்து பேசி ஆரம்பித்தார். ‘’ எல்லோரும் இங்க கவனிங்க , முதல் ஆட்டத்தை சீக்கிரமாவே முடிச்சிட்டீங்க. இப்ப அடுத்த ஆட்டத்தையும் அதை விட கொஞ்சம் விரைவாகவே முடிக்கனும் வாங்க சீக்கிரம் வாங்க ‘’ என்றார். அடுத்ததாக அவர் தன்னிடமிருந்த அடுத்த பட்டியலை எடுத்து சரி பார்க்க ஆரம்பித்தார் பிறகு . கிழவரைப் பார்த்து ‘’ பில் நீங்க ஹட்சிங்ஸ்டன் குடும்பத்துக்காக விளையாடப் போறீங்க அப்படித்தானே ? என்று கேட்டார். அடுத்ததாக . ஆமா . ஹட்சிங்ஸ்டன் குடும்ப வகையறாக்கள்ல வேற யாராவது இருக்குறாங்களா ? அதாவது பெயர் விடுபட்டவங்க ? சேர்க்க வேண்டியவங்க யாராவது ? என்று கேட்டார்.
திருமதி ஹட்சிங்ஸ்டன் உடனே ‘’ டானும் ,ஈவாவும் இருக்கிறாங்க. அவங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க ‘’ என்றாள். ‘’ உங்களுடைய மகள்கள் அவர்களுடைய கணவர்களின் குடும்பத்திற்குத்தான் ஆடுவார்கள் டெஸ்ஸி ‘’ என்றார் சம்மர் ‘’ இது இங்கயிருக்கிற எல்லோரையும் போல உங்களுக்கும் தெரியும் தானே ‘’ ? என்றார். இதைக் கேட்டதும் , ‘’ டெஸ்ஸி ‘’ இது நியாயமில்லை சம்மர் இது நியாயமேயில்லை ‘’ என்று கத்தினாள். கிழவர் பில் வருத்தத்துடன் சம்மரைப் பார்த்து ‘’ ஜோ என்னுடைய மகள்கள் அவர்களுடைய கணவர்களின் குடும்பத்திற்காக விளையாடுவார்கள் ‘’ அது தான் முறை என்றார். பிறகு ‘’ என்னுடைய குடும்பத்தில் மீதம் இருப்பவர்கள் என்னுடைய சிறிய குழந்தைகள் மூவர் தான். அவர்கள் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்று நீ தான் முடிவு செய்ய வேண்டும் ‘’ என்றார்.
திருவாளர் சம்மர் அவருக்கு விளக்கம் தரும் விதமாக ஆதரவாகப் பேசினார். ‘’ அவர்கள் உன் குடும்பத்திற்காக விளையாடுவதானால் அதற்கு நீ தான் சொல்ல வேண்டும் ‘’ என்றார். சற்று யோசித்து விட்டு ‘’ சரி சரி உனக்கு எத்தனை சின்ன குழந்தைகள் உள்ளார்கள் பில் ? ‘ ‘’ என்று கேட்டார். உடனே பில் ‘’ இளைய பில் , நான்ஸி மற்றும் லிட்டில் டேவ் என்று மூன்று குழந்தைகள் ‘’ என்றார். சம்மர் யோசித்த படியே கிரேவ்ஸைப் பார்த்து ‘’ சரி சரி அவர்களுடைய காகிதத்தையும் வாங்கிக்கோ ‘’ என்றார் . அவர் உடனே தலையாட்டி விட்டு அந்தக் குழந்தைகளின் காகிதங்களையும் கையில் வாங்கினார். ‘ அதை கருப்பு பெட்டிக்குள்ள மறுபடியும் போடு ‘’ என்றார் சம்மர் . அந்தக் காகிதங்கள் கருப்பு பெட்டிக்குள் மறுபடியும் போடப்பட்டது. ‘’ மறுபடியும் ஆரம்பமாகட்டும் ‘’ என்றார். ‘’ நானும் ஆரம்பித்திருக்க வேண்டுமென்று தான் நினைத்தேன் ‘’ என்றார். பில். திருமதி ஹட்சிங்ஸ்டன் நடுங்கியபடியே ‘’’ நான் சொல்றேன் . இது நியாயமில்லை ‘’ என்றாள். ‘’ நீ கிழவனுக்கு தேர்ந்தெடுக்க போதுமான நேரமே கொடுக்கலை ‘’ என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கிரேவ்ஸ் அந்தக் கருப்பு பெட்டிக்குள் போடப்பட்ட , அந்த குடும்பத்தினருக்கான ஐந்து காகிதத்துண்டுகளையும் சரி பார்த்து விட்டு , மீண்டும் அதை பெட்டிக்குள் போட்டு நன்றாக கையை விட்டு கிளறினார். மீதியிருந்த காகிதங்களைய்லலாம் இப்போது தரையில் விட்டெறிந்தார். அந்த நேரம் பார்த்து நல்ல காற்று வீசீயது. காகிதங்களெல்லாம் இப்போது காற்றில் பறந்து சென்றன. அதை எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ‘’ ஒரு நிமிசம் எல்லோரும் என்னை கவனிங்க ‘’ என்றாள் டெஸ்ஸி ஆனால் அதற்குள் சம்மர் ‘’ தயாரா பில் ? என்று கிழவரைப் பார்த்து கேட்டார். ஓரக்கண்ணால் டெஸ்ஸியையும் பார்த்தார். பிறகு குழந்தைகளைப் பார்த்தார்.
‘’ நல்லா ஞாபகம் இருக்கட்டும் . ஆளுக்கு ஒரு சீட்டை கருப்பு பெட்டியிலயிருந்து எடுக்கிறீங்க. எடுத்ததை விரிச்சுப் பார்க்காம அப்படியே மடிச்சு கையிலேயே வைச்சிருக்கிறீங்க . எல்லோரும் எடுத்து முடிச்சதுக்கப்புறம் , நாங்க கையைத் திறக்கச் சொல்வோம் அதுக்கப்புறம் தான் நீங்க கையைத் திறக்கனும் என்றார் பிறகு கிரேவ்ஸைப் பார்த்து.’’ ஆமா கிரேவ்ஸ் நீ குட்டி டேவுக்கு சீட்டு எடுக்குறதுக்கு உதவி பண்ணு ‘ ‘’ என்றார். கிரேவ்ஸ் சிறுவனின் கையைப் பிடித்து அவைனை அழைத்தக் கொண்டு கருப்பு பெட்டிக்கு அருகே சென்றார். அவன் அவருடன் கருப்பு பெட்டியை நோக்கி வெகு பிரியமாக சென்றான்.
** அந்தக் கருப்பு பெட்டியிலிருந்து ஒரு காகிதத்தை எடு டேவி ‘’ என்றார் சம்மர் குட்டிப்பையனைப் பார்த்து. குட்டி டேவி அந்தக் கருப்பு பெட்டிக்குள் கையை நுழைத்து விட்டு காகிதம் எதையும் எடுக்காமல் விளையாடிக் கொணடு நின்றான் . ‘’ ஒரு பேப்பரை மட்டும் எடு ‘’ என்றார் சம்மர். பிறகு ‘’’ கிரேவஸ் நீ அவனுக்காக அந்தக் காகிதத்தை கையில் வைத்திரு ‘’ என்றார். கிரேவ்ஸ் மெதுவாக கருப்பு பெட்டியிலிருந்து அந்தச் சிறுவனது கையை வெளியே எடுத்தார். அந்தச் சிறுவனின் கைக்குள் இப்போது ஒரு துண்டுக் காகிதம் இருந்தது. . கிரேவ்ஸ் மெதுவாக அவனது மூடியிருந்த கைகளைப் பிரித்து உள்ளேயிருந்த அந்த துண்டுக் காகிதத்தை பெற்றுக் கொண்டார் . குட்டி டேவ் அவர் அருகில் சென்று அவரை வியப்பாகப் பார்த்தபடியே நின்றிருந்தான். ‘’ இப்போது நான்சி ‘’ என்றார் சம்மர். நான்சிக்கு பன்னிரெண்டு வயது தான். தன்னை அழைத்ததும் அவள் தனது ஸ்கர்ட்டை சரி செய்து கொண்டு கருப்பு பெட்டியை நோக்கிச் சென்றாள். அவள் அதற்குள்லிருந்து ஒரு துண்டுச் சீட்டை எடுத்து வரும் வரை அவளது பள்ளித் தோழிகளெல்லாம் மூச்சு விடுவதற்கும் மறந்து போய் சிலையாக நின்று கொண்டிருந்தார்கள்.
இப்போது ‘’ ஜுனியர் பில் ‘’ என்றார் சம்மர். ஜுனியர் பில் கருப்பு பெட்டிக்கு மிக அருகே சென்று நின்று கொண்டான். அவன் கை , கால்களெல்லாம் நல்ல வளர்த்தியாதலால் கருப்பு பெட்டியை உரசிக் கொண்டிருந்தன. அவனும் அதிலிருந்து ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்தான் . ‘’ இப்போது டெஸ்ஸி ‘’ என்றார் சம்மர். டெஸ்ஸி வெளிறிப் போன முகத்தோடு சற்று நடுக்கத்துடன் சுற்றிலும் பார்த்தாள். சிறிது நேரம் தயங்கி நின்றாள். யாரும் எதுவும் பேசவில்லை. வறண்டு போயிருந்த தன் உதடுகளை நாவால் சற்று ஈரப் படுத்திக் கொண்டு , பின்பு கருப்பு பெட்டிக்கு அருகில் சென்றாள் அதற்குள் கையை விட்டு ஒரு துண்டுக் காகிதத்தை , பிடுங்கி எடுப்பது போல அதிலிருந்து வெளியே எடுத்தாள். உடனே தன் இடத்தில் போய் அமைதியாக நின்று கொண்டாள். இப்போது காகிதத்தை கெட்டியாகப் பிடித்திருந்த அவளது கரம் முதுகுக்குப் பின்பக்கம் இருந்தது. நடுங்கியபடியே இருந்தது. இனி முதிய பில் எடுக்கலாம் ‘’ என்றார் சம்மர். முதிய பில் கருப்பு பெட்டியின் அருகே சென்றார். அதன் வெம்மையை சற்று நேரம் தொட்டு உணர்ந்தார். பிறகு அதிலிருந்து ஒரு காகிதத்தை வெளியே எடுத்தார். கூட்டம் மயான அமைதியில் இருந்தது . இனி சம்மர் உத்தரவு கொடுக்க வேண்டும்.
‘’ இது நான்சியா இருக்க கூடாது ‘’ என்று அவளது பள்ளித் தோழி ஒருத்தி பக்கத்தில் இருந்தவளிடம் முனு முனுத்தாள். ஆனால் அது கூட்டத்தில் நிறையப் பேர்களுக்கு கேட்டது. ‘’ முதலில் கடைபிடித்தது போல இப்போது யாரும் பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடிப்பதில்லை ‘’ என்று சலித்துக் கொண்டார் முதிதயவர் வார்னர். ‘’ சரி சரி இங்க கவனிங்க ‘’ என்று திருவாளர் சம்மர் அடுத்த உத்தரவை பிறப்பித்தார். ‘’ இப்போது நீங்கள் காகிதத்தை திறக்கலாம் ‘’’ என்றார். ‘’கிரேவ்ஸ் நீ முதலில் குட்டி டேவின் காகிதத்தை திறக்க உதவு ‘’ என்றார். கிரேவ்ஸ் அந்தக் காகிதத்தை திறந்து காட்டினார் . உடனே கூட்டத்தில் ஒரு நிம்மதிப் பெரு மூச்சு பரவியது. ஆமாம் அந்தக் காகிதம் வெறும் வெள்ளைக் காகிதமாக இருந்தது. ஜுனியர் பில்லும் ,நான்ஸியும் தங்களது காகிதங்களை திறந்து காட்டினார்கள். அவைளும் வெற்றுக் காகிதங்களாகத்தான் இருந்தன. அவர்கள் இருவரும் கூட்டத்தைப் பார்த்து இலேசாக சிரித்தார்கள். ‘’ ‘’ ‘’ ‘’இப்போது டெஸ்ஸி’’ என்றார் சம்மர் . டெஸ்ஸி தயங்கியபடியே காகிதத்தை பிரிக்காமல் நின்றிருந்தாள். அவள் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டேதானிருந்தன .
உடனே சம்மர் முதிய பில்லைப் பார்த்தார். அவர் தனது காகிதத்தை பிரித்துக் காட்டினார். அதுவும் வெற்றுத்தாளாக இருந்தது. ‘’ அப்படியென்றால் அது டெஸ்ஸி தான் ‘’ என்றார் சம்மர் ‘ ஆமாம் டெஸ்ஸிக்குத்தான் லாட்டரி விழுந்திருக்கிறது .’ என்றார் . பிறகு டெஸ்ஸியைப் பார்த்து ’ உங்கள் காகிதத்தை காட்டுங்கள் டெஸ்ஸி ‘’’ என்றார் அவள் ம்கூம் அசையவில்லை. இப்போது முதிய பில் அவள் அருகில் சென்று வலுக்கட்டாயமாக அவளது கையிலிருந்த காகிதத்தைப் பிடுங்கி அதை சம்மருக்குப் பிரித்துக் காட்டினார். அதில் அடர்த்தியான கருப்பு புள்ளிகள் நிறைந்திருந்தன. நேற்றைய இரவு தனது நிலக்கரி கம்பெனியில் , தனது அடர்த்தியான கருப்பு பென்சிலால் சம்மர் தான் அந்தக் காகிதத்தில் அந்தக் கருப்பு புள்ளிகளை உருவாக்கியிருந்தார் ‘’ அதைப் பார்த்ததும் அவருக்குள் ஒரு கர்வம் வந்தது. முதிய பில் இப்போது அந்தக் காகிதத்தை பிரித்து கூட்டத்தினருக்கும் காட்டினார் . உடனே கூட்டத்தில்
‘’ ஓ ‘’ உஸ் என்ற சப்தங்கள் எழுந்தன . அங்கே ஒரு பரபரப்பு உடனடியாகத் தொற்றிக்கொண்டது.
‘’ சரி சனங்களே ! இனி சீக்கிரம் முடிக்க வேண்டியது தான் பாக்கி ‘’ என்றார் திருவாளர் சம்மர். கூட்டத்தினர் லாட்டரியின் அசலான பழைய கருப்புப் பெட்டியையும் , அதன் தொடர்ச்சியாகப் பின்பற்ற வேண்டிய மரபுகளையும் முற்றாக மறந்து போய் விட்டிருந்தாலும் , கற்களைப் பபயன்படுத்துவதை மட்டும் நன்றாக நினைவில் வைத்திருந்தார்கள். சிறிய பையன்கள் ஏற்கனவே குவித்து வைத்திருந்த கற்குவியல்களிடம் சென்று தயாராக இருந்தார்கள். மைதானத்திலும் அங்கங்கே கற்கள் குவிந்து கிடந்தன. அது தவிர கிரேவ்ஸ் விட்டெறிந்த லாட்டரி காகிதங்கள் மைதானம் முழுவதும் பரவிக்கிடந்தன.
முதலில் திருமதி டெலகிராய்க்ஸ் அவளது இரு கைகளும் கொள்ளுமளவுக்கு பெரிய தொரு கல்லை மைதானத்தில் இருந்து தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள். பிறகு திருமதி டன் பாரிடம் திரும்பி ‘’ வா வா சீக்கிரம் ‘வா ’ என்று அவளையும் அழைத்தாள். திருமதி டன் பாரும் தனது இரு கைகளும் கொள்ளுமளவு கற்களை எடுத்து வைத்திருந்தாள். கற்களை எடுத்து வந்ததில் அவளுக்கு மூச்சு வாங்கியது. பிறகு திருமதி டெலகிராய்க்ஸ்ஸைப் பார்த்து ‘’ என்னால் உன்னைப் ஓட முடியாதும்மா . நீ முன்னால போ , நான் உன்னைப் பின் தொடர்ந்து வர்றேன் ‘’ என்றாள். குழந்தைகள் அனைவரும் தங்களது கரங்களில் ஏற்கனவே போதுமான அளவு கற்களை நிரப்பித்தான் வைத்திருந்தார்கள். குட்டி டேவி ஹட்சிஸ்டன் கைகளிலும் யாரோ சிறிய குட்டிக்கற்களை திணித்திருந்தார்கள்.
திருமதி டெஸ்ஸி ஹட்சிங்ஸ்டனை சுற்றிலும் இப்போது போதுமான இடைவெளி தானாகவே உருவாகியிருந்தது. கூட்டம் சிறிது சிறிதாக முன்னேறி , தன்னை நோக்கி வருவதை உணர்ந்ததும் , இயலாமையுடன் அவள் தனது கைகளை முன்னால் நீட்டி ‘’ இது நியாயமில்லை ,இது நியாயமில்லை ‘’ என்று கதறினாள். அவள் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போ கூட்டத்திலிருந்து பறந்து வந்த கல் ஒன்று , அவளது தலையின் பக்கவாட்டுப் பகுதியை நச்சென்று தாக்கியது. அந்த இடத்தில் தலை உடைந்து இரத்தம் கொட்டியது. முதியவர் வார்னர் கூட்டத்தினரைப் பார்த்து ‘’ வாங்க வாங்க எல்லோரும் சீக்கிரம் வாங்க ‘’ என்று கத்தினார். ஸ்டீவ் ஆடம்ஸ் கூட்டத்தின் முன் வரிசையில் கையில் பெரிய கல்லோடு நின்றிருந்தார். அவரது அருகில் திருமதி கிரேவ்ஸ்ஸும் பெரிய கல்லோடு நின்றிருந்தாள். ‘’ இது நியாயமல்ல , இது நியாயமேயில்லை ‘’ என்று திருமதி ஹட்சிங்ஸ்டன் கூட்டத்தைப் பார்த்து அலறிக் கொண்டேயிருந்தாள். ஆனால் அவர்கள் அனைவரும் கையில் கற்களோடு அவளை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.
மொழியாக்கம் : தங்கேஸ்
ஆசிரியர் குறிப்பு
ஷெர்லி ஹார்டி ஜேக்ஸன் (Shirley Hardie Jackson) (14 -12- 1916 – 08- 08-1965 ) என்ற அமெரிக்கப் பெண் எழுத்தாளர் இருநூறுக்கும் மேற்பட்டம் சிறுகதைகளும் , ஆறு நாவல்களும் மற்றும் இரண்டு நினைவுக்குறிப்புகளும் எழுதியுள்ளார். இவரது திகில் மற்றும் மர்மங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையாகும் . இந்த லாட்டரி சிறுகதை அமெரிக்க இலக்கிய வரலாற்றில் மிகவும் பிரபலமாக சிறுகதையாகும். இந்தக் கதை பின்னாளில் திரைப்படம் , வானொலி நாடகம் , மற்றும் கிராபிக் நாவல் என்று பலவாறாக எடுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் யூனியன் இந்தக் கதையை தடை செய்தது. ஆரம்பத்தில் இந்தக் கதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது பத்திரிகைச் சந்தாவை (நியு யார்க்கர்) வாபஸ் பெற்றனர். இந்தக் கதை வருடாந்திர பாரம்பரியத்தை கடை பிடிக்கும் கற்பனையான சிறிய அமெரிக்க சமூகத்தை விவரிக்கிறது. உலகின் தலை சிறந்த பத்து சிறுகதைகளுள் ஒன்றாக இது எப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.